Advertisement

அத்தியாயம் : 7

யாமினி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு நட்புக்களுடன் கல்லூரிக்கு அருகில் இருக்கும் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றின்றிற்கு தான் சென்றாள். அவளின் நட்புக்கள் அனைத்துமே கல்லூரியில் அந்த வருடம் தான் சேர்ந்திருந்த மாணவமணிகள்.

பள்ளியில் இருக்கும் கட்டுப்பாடு கல்லூரியில் இல்லாதால் நண்பர்களின் பிறந்தநாளை ட்ரீட் என்ற பெயரில் உற்சாகமாக கொண்டாடும் மனநிலையில் இருக்கும் பருவ குழந்தைகள்.

17 வயதில் பெரிதான மனமுதிர்ச்சி ஏற்படாத குழந்தைகள்.

அநேகமாக அனைவருக்குமே இரண்டும்கெட்டான் மனநிலையாக தான் இருக்கும். பெரியவர்களின் சொல்லை மீறி நடப்பதை உற்சாகத்துடன் கொண்டாடினாலும், ஏதேனும் தவறு நடந்துவிடுமோ என்ற பயமும் கலந்து தான் இருக்கும். மதில் மேல் பூனையாக கூட அவர்களின் மனநிலை அவ்வபொழுது மாறும்.

குடும்பம், சுற்றம் மற்றும் நல்ல நட்புக்களின் வழிகாட்டுதல்களுடன், அவர்களின் மனக்கட்டுப்பாட்டின் ஒத்துழைப்பும் இருந்தால் இந்த உலகையே  வென்றுவிடுவார்கள் பதின் பருவத்தில் இருக்கும் சிறார்கள்.

யாமினிக்கு எப்பொழுதும் நல்ல குடும்ப சூழ்நிலையே அமைந்திருக்கிறது.

பெற்றவர்களின் துணை இல்லாமல் போனாலும், தாத்தா, பாட்டியின் துணையுடன், பெற்ற அன்னைக்கும் மேலாக இருக்கும் அக்காவின் அன்பு வழிகாட்டுதல்கள் அவளை என்றுமே தவறான பாதைக்கு இட்டு சென்றதில்லை.

இதுவரை யாமினியின் மனநிலையைக் கொண்டு யசோதராவும் அவளுக்கு  அனைத்து விஷயத்திலும் ஸ்பூன் பீடிங் தான் செய்துக் கொண்டிருக்கிறாள்.

அக்காவின் சொல்லை மட்டுமே கேட்டு நடக்கும் திறன் கொண்ட யாமினிக்கு தானாக எதையுமே யோசிக்க தெரியாதது தான் இங்கே அவளுக்கு பிரச்சினையாக முடிந்தது.

யசோதரா அவள் எடுத்திருக்கும் முடிவுக்கு,யாமினிக்கு  சீக்கிரமே மன முதிர்ச்சி அடைந்தால் தான் நல்லது என்று நினைத்து தான் சுஜியிடம் பழக சொல்லியிருந்தாள்.

இதில் யசோதராவை தவறு சொல்ல முடியாது தான். இதுவரை யாமினிக்கு காட்டிய வழிகாட்டுதல்கள் அவளை தவறான பாதைக்கு விடாது என்று நம்பி சுஜியிடம் பழக சொல்லியிருந்தாள்.

ஆனால் அவள் புரிந்துக்கொள்ளாதது, சில குழந்தைகளை நல்வழிப்படுத்தஎப்போதுமேஒருவர் வழிக்காட்டி கொண்டே இருக்கவேண்டும் என்பதை தான்  யசோதரா புரிந்துக்கொள்ளவில்லை.

சில குழந்தைகள் வயதால் அவர்கள் வளர்ந்திருந்தாலும் எப்போதுமே யாரேனும் எடுத்துச்சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் தான். இல்லையென்றால் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிக்கொண்டே இருப்பார்கள்.

நல்ல மனம் படைத்தவர்களின் கைப்பாவையாக மாறினால் அந்த குழந்தைகளுக்கு எந்த தீங்குமே ஏற்படாது. மாறாக தீய குணம் கொண்டவர்களின் சகவாசத்தால் அவர்களின் வாழ்வே சீர்குலையும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும்.

இரண்டும்கெட்டான் மனநிலையில் இருக்கும் யாமினி என்ற குழந்தையை அதே வயதில் இருக்கும் தீய குணம் கொண்ட சுஜியின் தவறான வழிகாட்டுதல் தான் யாமினியின் இன்றைய நிலைமை.

எது எப்படியோ யசோதராவிற்கு தங்கையின் மனவளர்ச்சியை புரிந்துக்கொள்வதற்கு கிடைத்த இந்த அநுபவம் நல்ல பாடமாகவே இருக்கும். இனிமேல் தன்னைப் போன்றே தங்கையின் மனவளர்ச்சி இருக்கும் என்று நினைக்கவே மாட்டாள்.

நண்பர்களுடன் சென்ற யாமினியை தனியே அழைத்து செல்ல தக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள் சுஜி.

மற்ற நட்புக்கள் அனைத்தும் தங்களின் பிறந்தநாள் பரிசுகளை அளித்துவிட்டு நன்றாக உண்ட மனநிலையுடன் கிளம்பினார்கள்.

சுஜியும் கிளம்புவதைப் போல் பாசாங்கு செய்தாள்.

யாமினி தனியே வீட்டிற்கு செல்லும் வழியில் காத்திருந்தாள் சுஜி.

அங்கே வந்த யாமினியிடம் சர்ப்ரைஸாக ஒரு இடத்திற்கு அழைத்துச்சொல்ல போவதாக கூறியவள் யாமினியின் கண்களை கட்டினாள்.

இந்த விளையாட்டு யாமினிக்கு பிடித்ததால் சுஜிக்கு ஒத்துழைத்தாள்.

சுஜியோ சில நிமிடங்கள் கழித்து யாமினியை ஒரு காரில் ஏற்றியவள், தானே வீட்டிற்கு கூட்டி செல்வதாகவும் வாக்குறுதி அளித்தாள்.

சுஜி சொல்வதை ஒத்துக்கொண்ட யாமினி, வீட்டிற்கு வர சற்று தாமதமாகும் என்று அக்காவிடம் சொல்வதற்காக அலைபேசியை எடுத்தாள்.

“நோ யாம்ஸ்!! இப்போ போன் நாட் அல்லோவ்ட்!!” என்று சிரித்தபடியே அவளிடமிருந்து போனைப் பறித்தாள் சுஜி.

“நீ தண்ணீ அடிச்சுருக்கியா?” என்ற சுஜிக்கு “தண்ணீ குடிக்காம யாராலயும் இருக்க முடியாதே சுஜி!!” என்ற பதில் அளித்தாள் யாமினி.

அவளின் பதிலில் தலையில் அடித்துக்கொண்ட சுஜி, “ஹே லூசு! நான் சொன்ன தண்ணீ சரக்குடி!!” என்று கடுப்பாக கூறினாள்.

“அய்யோ!! இல்லை!!” என்று பயந்து அலறிய யாமினியின் வாயைப் கைகளால் மூடியவள், “யாம்ஸ், இந்தா இதை ஒரு கல்ப் அடிச்சுப் பாரு, பர்த்டே ன்னா இதெல்லாம் இருக்கணும்!!”

“அச்சோ எனக்கு வேண்டாம்ப்பா! அக்காக்கு தெரிஞ்சா திட்டுவா!” என்று மறுத்தாள் யாமினி. அவளின் மறுப்பை காதில் வாங்காது, யாமினியின் வாயில் புகட்ட முயன்றாள் சுஜி.

யாமினியின் எதிர்ப்பையும் மீறி, அவளின் வாயில் மதுபானத்தை ஊற்றிவிட்டாள் சுஜி.

தொண்டையில் மது இறங்கியதுமே இரும தொடங்கிய யாமினியை, “வீட்டுக்கு தெரியாம இதெல்லாம் செஞ்சா தனி கிக் தான் யாம்ஸ்.!” என்ற சுஜிக்கு மறுப்பாக தலை அசைத்த யாமினிக்கு மேல மேல மதுவை வலுக்காட்டாயமாக புகட்டினாள்.

சில மணி துளிகளிலேயே யாமினி உளற ஆரம்பித்தாள். “சூசி, அழ்க்கா தேழுவா! வீத்துக்கு போழாம்!” என்று உளறியவளின் அலைபேசியை எடுத்து வைத்துக்கொண்டு அந்த காரில் இருந்து அவள் மட்டும் இறங்கி வெளியே சென்றாள்.

சுஜி இறங்கியதுமே கார் வேகம் எடுக்க ஆரம்பித்தது.

அரைகுறை மயக்கத்திலேயே இருந்த யாமினி மேற்கொண்டு உடம்பை முறுக்கி புலம்பிக்கொண்டே வர வர, அவளின் வேகத்தால் கார் குலுங்க ஆரம்பித்ததால், காரை நிறுத்தி அவளை வெளியே தூக்கி சென்றுக்கொண்டிருக்கும் போது தான் யாதவன் அவர்களை நோக்கி வண்டியில் வந்தது.

அதன் பின் யதீந்திரனின் தகவல் மூலம் அவர்களின் வீட்டிற்கு வந்ததிருந்த யசோதாராவின் அலைபேசியில் தொடர்புக்கொண்டாள் சுஜி.

 ஒருமணி நேரம் முன்பு வரை யாமினியின் அலைபேசியை நிமிடத்துக்கொருமுறை தொடர்க்கொண்டிருந்த யசோதராவிடமிருந்து அழைப்பு வரவில்லையே என்ற நல்ல(!) எண்ணத்தில் தான் சுஜி யசோதராவை அழைத்திருந்தாள்.

யாமினியின் உடையை மாற்றிய யசோதரா சுஜியின் அழைப்புக்கு பதில் அளிக்க ஆரம்பித்தாள்.

“சுஜி யாமிக்கு உடம்பு சரியில்லை தூங்கிட்டு இருக்கா! போன் எங்கோ மிஸ் ஆகிடுச்சுன்னு சொன்னா. இப்போ தான் கம்ப்ளைன்ட் ரெய்ஸ் செஞ்சுருக்கேன். நீ நாளைக்கு கால் பண்ணு!” என்றவளுக்கு “சரிக்கா!” என்று பயந்தபடியே கூறினாள் சுஜி.

யசோதரா எல்லோரிடமும் நடந்ததை கூற பிரியப்படவில்லை. அதனால் தான் பாதி உண்மையும், பொய்யுமாக சுஜியிடம் பேசிவிட்டு வைத்தாள். சுஜியின் ‘சரிக்கா!’ என்ற குரலில் சற்று நடுக்கம் இருந்ததோ  என்று சிந்தித்தவாறே யாமினியிடம் சென்றாள்.

‘நடந்தது ஏதாவது சுஜிக்கு தெரிந்திருக்குமோ? யாமி முழித்தால் தான் நடந்ததை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க முடியும்!’ என்று மனதினுள்ளேயே பேசிக்கொண்டாள் யசோதரா.

‘கம்ப்ளைன்ட் செஞ்சு இருக்கேன்’ என்றதுமே சுஜி மிகவும் பயந்து போனாள். ‘போலீஸ் என்கொய்ரி வந்தா என்ன செய்வது?’ என்ற சிந்தனைக்கு சென்றாள் சுஜி.

யாமினி வாந்தி எடுத்திருந்த அவர்களின் உடை மற்றும் அந்த இடத்தை சுத்தம் செய்த யசோதரவிற்கு ரோஜாவும் உதவி புரிந்தாள். பெரும்பாலும் யசோதராவே செய்து முடித்திருந்தாள்.

“தேங்க்ஸ்!” என்று நிறுத்தி ரோஜாவின் பெயரை தெரிந்துக்கொள்வதற்காக அவளைப் பார்த்தாள் யசோதரா.

“ரோஜா!” என்று அறிமுகப்படுத்திக்கொண்டவளிடம் “தேங்க்ஸ் ரோஜா!” என்றாள் யசோதரா.

உள்ளே வந்த யாதவனிடமும், யதீந்திரனிடமும் நன்றி உரைத்த யசோதரா, யுவியிடமும் கண்களால் நன்றி உரைத்தாள்.

“சிஸ்டர், நான் இருந்த பதட்டத்துல கார் நம்பர் எல்லாம் பார்க்கவேயில்லை. ஆளுங்களைக்கூட என்னால கரெக்ட்டா அடையாளம் காட்ட முடியுமான்னு தெரில! யாமினியை அந்த கோலத்தில் பார்த்ததுமே அதில என் தங்கை முகம் தான் தெரிந்தது.

 அப்போ எனக்கு அவளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்துச்சு.அதனால காரையோ அவர்களையோ நான் சரியாக பார்க்கல. பட் என்னால முடிஞ்ச வரை கண்டிப்பா ஹெல்ப் செய்வேன்னு உங்க பரென்ட்ஸ் கிட்ட சொல்லிடுங்க. சாரி!! என்ற யாதவன் குரலில் வருத்தமே மேலோங்கியிருந்தது.

ஒரு பெண்ணுக்கு ஆபத்து விளைவிக்க எண்ணிய கயவர்களை சரிவர அடையாளம் காணாமல் போய் விட்டோமே என்ற வருத்தம் அவனை தாக்கியிருந்தது.

“பரென்ட்ஸ்!!” என்று சொல்லி சிந்தித்தவள், “கண்டிப்பா அவங்ககிட்ட சொல்றேன்! என்னை பொறுத்தவரை உங்க கண்ணுல யாமினி பட்டதே நல்லது தானேண்ணா. யாமியை காப்பாத்தினதே ரொம்ப பெரிய விஷயம். ப்ளீஸ் ரொம்ப வருத்தப்பட்டுக்காதீங்க.!!

யாமி முழிச்சா அவங்களை அடையாளம் காட்டிடுவான்னு நம்பறேன். கண்டிப்பா அவங்களுக்கு நாங்க தண்டனை வாங்கி தந்துடுவோம்.வருத்தப்படாதீங்க!! நீங்க செஞ்ச எல்லா உதவிக்கும் நன்றி. யாமியை கூட்டிக்கிட்டு கிளம்பறேன்.” என்ற யசோதரா, அடுத்து வந்த யதீந்திரனின் கேள்வியால் என்ன பதில் அளிப்பது என்று முழித்தாள்.

“கார்டியன்ன்னு உங்க பேரு தான் இருந்தது! யாமினி பரென்ட்ஸ் எங்க இருக்காங்க?” என்று கேட்டான் யதீந்திரன்.

யதீந்திரனிடம் தங்களின் குடும்பக் கதையை சொல்ல விரும்பாத யசோதரா, “என்னோட சிஸ்டர் தான் யாமி! எங்க பரென்ட்ஸ் வெளியூர்ல இருக்காங்க!!” என்று சின்னதாக முடித்துக்கொண்டாள்.

“யசோதரா சாப்பிட்டு போகலாமே!” என்று ரோஜாவும், யுவராணியும் அழைத்தனர்.

யாமினி இந்த நிலையில் இருக்கும்போது அவளால் எப்படி சாப்பிட முடியும்? அது மட்டுமில்லாது அவளுக்கு தனிமையில் சிந்திக்க நிறைய விஷயங்கள் இருந்தது. அதனால்,

“நீங்க சாப்பிட கூப்பிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்! ஆனா இப்போ என்னால சாப்பிட முடியாது. கண்டிப்பா நாம நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது சாப்பிடுறேன். இப்போ நாங்க கிளம்பறோம்!” என்று விடைபெற்று கிளம்பினாள் யசோதரா.

யாமினியை தூக்கி சென்று காரினுள் அமரவைத்தான் யதீந்திரன். “ப்ளீஸ் யசோதரா, நானும் உங்க கூட வரேன்! யாமினியை தனியா உங்களால தூக்க முடியாது.!” என்றான்.

“சரி பட் நீங்க எப்படி திரும்பி வருவீங்க?”

“நான் உங்க பின்னாடியே வண்டில வரேன் தீரா!!” என்று வண்டி சாவியை கையில் எடுத்தான் யாதவன்.

சொந்த பந்தங்களே அற்ற அந்த மூவருக்கும் கிடைத்த முதல் சொந்தம் ரோஜா. யதீந்திரனின் காதல் மூலம் யாமினி அவர்களின் அடுத்த சொந்தமாகலாம்.

அந்த பந்தத்தை உறுதி செய்வது போல அந்த சகோதரர்கள் இருவரும் யசோதராவுடன் யாமினியின் வீட்டிற்கு சென்றார்கள்.

 

Advertisement