Advertisement

அத்தியாயம் 4:

யாதவனின் அதிர்ச்சியை அங்கிருந்தவர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் கவனிக்கவேயில்லை. அவனின் அதிர்ச்சி அந்த ஒருவருக்கு முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது.

அது யுவராணி!!

அவள் யாதவனை நொடியில் புரிந்துக்கொண்டாள். கணேசன் குடும்பத்தினர் வரும் வரை அவன் முகத்தில் தெரிந்த வருத்தம் இப்பொழு இல்லை என்று யூகித்துக்கொண்டாள்.

யாதவனின் அதிர்ச்சி நிறைந்த முகம் அவனுக்கு ரோஜாவின் மீது இருந்த நேசத்தை  சொன்னது போலிருந்தது யுவராணிக்கு.

“அங்கிள் எங்க அண்ணாக்கு ரோஜாக்காவை” என்று ஆரம்பித்தவள், “ச்ச ம்ஹ்ம்! இனிமே ரோஜா அண்ணின்னு சொல்லணும் இல்லை! எங்க அண்ணாக்கு ரோஜா அண்ணியை கல்யாணம் செய்வதற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அங்கிள்.!” என்றாள் யுவராணி.

அவளின் பேச்சில் அவளை திரும்பிப் பார்த்து முறைத்தான் யதீந்திரன். அவனுக்கு கண்களாலேயே யாதவனை சுட்டிக் காட்டினாள் யுவராணி.

யாதவனைப் பார்த்ததும் நொடியில் புரிந்துக்கொண்டான் யதீந்திரன். அதனால்,

“நீங்க சொல்லும்போது கல்யாணத்தை வச்சிக்கலாம் சார்! எங்களுக்கு இதில் பரிபூரண சம்மதம். ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்.!!” என்ற யதீந்திரனை அடிபட்ட பார்வைப் பார்த்தன் யாதவன்.

“அதே முகூர்த்தத்துல வச்சுக்கிட்டா தான் தம்பி, சொந்தக்காரவுங்க மத்தில பேரு கெடாம இருக்கும்.  அன்னிக்கே கல்யாணத்தை வச்சிக்கலாம். எல்லா வேலையும் முன்னமே ஆரம்பிச்சுட்டதால ரொம்ப பெரிய வேலை இல்ல..

மாப்பிள்ளைக்கு மட்டும் வேற ட்ரெஸ் எடுக்க சொல்லிட்டா என் பொண்ணு. நாத்தனார் முடிச்சு போடப்போற நம்ம யுவிக்கும் எல்லாமே வாங்கணும்ன்னு கறாரா சொல்லிட்டா!” என்ற கணேசன் தன் பெண் ரோஜாவின் தலையை தடவிக்கொடுத்தார்.

தன் சக்கரநாற்காலியை ரோஜாவின் அருகில் கொண்டு சென்று நிறுத்தி, ரோஜாவின் அன்பிற்கு நன்றி சொல்லும் விதமாக அவளின் கையைப் பற்றிக்கொண்டாள் யுவராணி.

ரோஜாவும்குனிந்துயுவராணியைஅணைத்துக்கொண்டாள்.

இதைப் பார்த்த யாதவனுக்கு ரோஜாவை இழக்கப் போகிறோம் என்ற வருத்தமிருந்தாலும், யதீந்திரன் – ரோஜா கல்யாணம் நடந்தால் யுவராணிக்கு ஒரு நல்ல அன்னை அண்ணி மூலம் கிடைப்பாள் என்ற நினைவே மேலோங்கியிருந்தது.

அதனால் எதுவுமே பேசாமல் அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்த்தான் யாதவன்.

மறந்தும் ரோஜாவின் புறம் திரும்பி பார்க்கவில்லை யாதவன்.

ரோஜா யாதவனை திரும்பிப் பார்த்தாள். அவன் இவளை மட்டும் பார்க்காமல் அங்கிருந்த அனைவரையும் கடமையே என்று பார்த்திருந்தான்.

அவனின் செய்கையில் ரோஜாவின் பார்வையில் யோசனை வந்தது. ரோஜா ஒற்றை புருவத்தை ஏற்றி அவனையே ‘ஏன்?’ என்பது போல் பார்த்திருந்தாள்.

ரோஜாவை நிமிர்ந்துப் பார்த்த யுவராணி, “அண்ணி! உள்ள வாங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று ரோஜாவின் கையைப் பிடித்து கூப்பிட்டாள்.

ரோஜாவும், யுவராணியும் அங்கிருந்த அறைக்குள் சென்றனர்.

“சொல்லு யுவி! என்ன பேசணும்?”

“நீங்க யாதவன் அண்ணாவை தானே விரும்பறீங்க?” என்று நேரடியாகவே கேட்டாள் யுவி.

“ஆமாம்!! ஏன்?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் ரோஜா.

திடீரென்று “ஹா..ஹா!!” என்று பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள் யுவி.

“ஐயோ! யுவி! எதுக்கு இப்படி சிரிக்கற?”

“அண்ணி, யாதவன் அண்ணா நீங்க தீராண்ணாவை விரும்பறதா நினைக்கறாங்க போல. இப்போ கல்யாணம் பேசியது கூட உங்க ரெண்டு பேருக்கும் தான் நினைச்சுட்டு இருக்கார்.”என்றபடியே சிரித்தாள் யுவி.

“என்ன இது அபத்தம் யுவி?”என்று கோபப்பட்டாள் ரோஜா.

ரோஜாவின் கோபம் பார்த்து சிரிப்பதை நிறுத்தினாள் யுவி.

“அண்ணி தப்பு உங்க மேல தான் இருக்கு! உங்க காதலை அவர் கிட்ட சொன்னீங்களா, இல்லை அங்கிள் தான் கல்யாணத்தைப் பத்தி யாதவன் அண்ணா கிட்ட பேசினாரா?இல்லையே அண்ணி!! அங்கிளும் சரி நீங்களும் சரி யாதவண்ணா கிட்ட சொல்லவேயில்லையே.

தீராண்ணா கிட்ட அங்கிள் கேட்டதும், நீங்க தீராண்ணாவை விரும்பறீங்க. உங்க மூலம் எங்களுக்கும் சொந்தம் கிடைக்கும்ன்னு யாதவண்ணா நினைக்கிறது அது கண்ணுலயே தெரியுது.

உங்க கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டு விட்டது என்று தெரிந்த நாளிலிருந்தே எதையோ இழந்த மாதிரி தான் யாதவண்ணா சுத்திட்டு இருந்து இருக்கு. எங்களுக்கு அது புரியல. வேறு வீடு பார்க்கிறதுக்கு கஷ்டப்படுதுன்னு தான் நினைச்சோம்.ஆனா, இன்னிக்கு நீங்க எல்லாம் வந்தபிறகு அதிலயும் உங்க கல்யாணம் நின்னுப்போச்சுன்னு தெரிஞ்ச பிறகு தான் அது முகத்துல மலர்ச்சியே வந்தது. அங்கிள் தீராண்ணா கிட்ட கல்யாணம் பேசவும் அதுவும் போச்சு! இப்போ புரியுதா அண்ணி உங்க தப்பு.!” என்றாள் யுவராணி.

“ஐயோ யுவி! இப்படி அவர் நினைப்பார்ன்னு நாங்க நினைக்கவேயில்லை. எங்க காதல நாங்க ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கிட்டதில்லை தான். ஆனா அவர் கண்களில் சில சமயம் என்னை பார்த்ததும் தோன்றும் ஒளி தான் அப்பா கிட்டயே என்னை பேச வச்சது. கல்யாணம் வேற ஒருத்தரோட நிச்சயம் ஆனதும் தான் என்னையே நான் புரிஞ்சுக்கிட்டேன்.

என் காதலை முதல்ல அவர்ட்ட சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா, அனாதை, உங்க குடும்பம் உடைஞ்சுடும் அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி என்னை மறுத்துடுவாரோன்னு பயம் வந்துடுச்சு. அதான் அப்பா கிட்ட பேசி இங்க வரவெச்சேன்.

தீரன் கிட்ட பேசினது கூட நேரடியா மாப்பிள்ளை கிட்ட எப்படி பேசுவது குடும்பத்துல இருக்கிறவங்க கிட்ட தானே பேசணும்னு நினைச்சு தான். நீயும் தீரனும் தானே அவரோட குடும்பம். அது மட்டும் தான் காரணம்.! இப்போவே போய் நான் அவர் கிட்ட பேசறேன்.!!” என்று அறையை விட்டு வெளியேற முயன்றாள் ரோஜா. அதற்குள் அவளின் கையைப் பிடித்து தடுத்திருந்தாள் யுவி.

“அண்ணி நடக்கிறதை மட்டும் வேடிக்கைப் பாருங்க!! இந்த யாதவண்ணாக்கு மனசுல பெரிய தியாக செம்மல்ன்னு நினைப்பு! அதை ஒரு தட்டி வச்சா தான், அது மனசுல இருக்கிறதெல்லாம் இனிமே நம்ம கிட்ட பகிர்ந்துக்கும். நீங்க எதையும் யோசிக்காம சிரிச்ச முகத்தோட வாங்க, மத்தத நானும் தீராண்ணாவும் பார்த்துகிறோம்.” என்றாள் யுவராணி.

“இல்லை யுவி அவர் பாவம்!!”

“அண்ணி அவர் ஒண்ணும் பாவமில்லை!! அது வாயாலேயே உங்களை காதலிக்கறதை ஒத்துக்க வைக்கணுமா, வேண்டாமா?”

“ஹா.ன்!! ஒத்துக்கணும்!”

“அது!! அப்போ எதுவுமே பேசாம வாங்க!!” என்று ரோஜாவை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் சக்கர நாற்காலியை தள்ளி சென்றாள் யுவராணி.

அங்கு சென்று பார்த்தால் யாதவன் மட்டும் தனியே விட்டத்தை பார்த்து அமர்ந்திருந்தான்.

“எங்கண்ணா அவங்க எல்லாம்?” என்று கேட்ட யுவராணிக்கு, வாசல் நோக்கி கை நீட்டி காண்பித்தான் யாதவன்.

இனியும் இங்கேயே அமர்ந்திருந்தால் ரோஜாவை திரும்பிப் பார்த்துவிடுவோம் என்று எண்ணியபடி, எழுந்து உள்ளே சென்றான் யாதவன்.

“பாவம் யுவி!!” என்று பரிதாபப்பட்டாள் ரோஜா.

“அண்ணி விடுங்க, நீங்க வீட்டுக்கு போகறதுக்குள்ள அது கிட்ட தனியே பேச வைக்கிறேன். அதன் பிறகு உங்க காதலை நீங்க சொன்னாலும் சரி, அதை சொல்ல வச்சாலும் சரி! அது உங்க பாடு!! இப்போ என்னை வெளியே கூட்டி போறீங்களா?” என்று கேட்டாள் யுவராணி.

வாசலில் ஐந்து படிக்கட்டுகள் இருந்ததால், எப்போதுமே படிக்கட்டுக்கு அருகே வந்ததும் சக்கர நாற்காலியிலிருந்து இறங்கி விடுவாள். யாதவனோ, யதீந்திரனோ தான் நாற்காலியை இறக்கி வைப்பார்கள்  பின் அவளின் கைகளை பிடித்து நாற்காலியில் அமரவும் வைப்பார்கள்.

இன்று தீரனும் வெளியிலிருக்க, யாதவனும் மனதொடிந்து அறையினுள் இருக்க, யுவிக்கு, தான் எப்படி வெளியே செல்வது? என்ற எண்ணமே, ரோஜாவிடம் தயக்கமின்றி உதவி கேட்க வைத்தது.

வாசல் நோக்கி நின்றபடியே பேசிக்கொண்டிருந்த யதீந்திரன் யுவராணி வாசலுக்கு வருவதைப் பார்த்து, “இருடா யுவி, உள்ளேயேபோய் பேசலாம்!” என்று யுவியிடம் சொன்னவன், கணேசனிடம் திரும்பி, “சார் உள்ள போகலாமா?” என்று கேட்டான்.

கணேசன் மற்றும் அவரின் மனைவி லலிதாவுடன் யதீந்திரன் வீட்டினுள் நுழைந்தான்.

“சார் ஒரு நிமிஷம், யாதவன் கிட்ட பேசிட்டு வந்துவிடுகிறேன்.!” என்று கணேசனிடம் சொல்லிவிட்டு யாதவன் இருந்த அறைக்குள் நுழைந்தான் யதீந்திரன்.

யாதவன் அருகில் அமர்ந்து , “டேய் யாதவா! கணேசன் சார், அவரோட மாப்பிள்ளைக்கு துணிமணி வாங்கணும்ன்னு சொல்றார். அவர் கூட நாளைக்கு கடைவரை போயிட்டு வரியா? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று கேட்டான் யதீந்திரன்.

“இல்லை தீரா! நீயே போ! நாளைக்கு ஓவிய கண்காட்சி வைப்பது சம்பந்தமா ஒருத்தரை பார்க்க போகணும்! என்றவன் சிறிது நிறுத்தி தொண்டையை செருமிக்கொண்டு, “ம்க்கும்!! வாழ்த்துக்கள் டா தீரா, உங்க கல்யாண வாழ்க்கை நல்லாயிருக்க கடவுள் கிட்ட வேண்டிக்கறேன்.” என்று சொன்னவன் குரலில் பிசிறு தட்டியது.

“ஓ!! வாழ்த்து!! இவ்வளவு நல்லவனாடா நீ!!” என்று நக்கல் செய்தான் யதீந்திரன்.

“அவரோட மாப்பிள்ளையும் பொண்ணும் தான் இந்த வீட்டுலேயே இருக்க போறாங்களாம்! என்ன செய்வதுடா?” என்று மேலும் யாதவனிடம் போட்டு வாங்கினான் யதீந்திரன்.

“கவலைவேண்டாம் தீரா, நானும் யுவியும் வேற வீடு பார்த்துக்கிட்டு போறோம்! எங்களுக்காக உனக்கு வர சொந்தத்தை மறுக்காதே! சீக்கிரம் வேறு வீடு பார்த்துடுவேன்.!” என்ற யாதவனின் முதுகில் ஓங்கி ஒன்று போட்டான் யதீந்திரன்.

“எப்படி எப்படி, எங்களுக்காக உனக்கு வர சொந்தத்தை மறுக்காதேன்னு சொல்லுவியா? அந்த டைலாக் நான் தான் சொல்லனும்டா குட்டா!!” என்று யாதவனின் முதுகில் மீண்டும் ஒன்று வைத்தான் செல்லமாக.

“நீ என்ன தீரா சொல்லணும்?”

“ம்ம்ஹ்ம் இந்த வீட்டுல கணேசன் சார் பொண்ணும், மாப்பிள்ளையும் இருக்க போறாங்களாம். அதனால நானும் யுவியும் வேற வீடு பார்த்துக்கிட்டு போறோம். எங்களுக்காக உனக்கு வர சொந்தத்தை மறுக்காதேடா யாதவா!!” என்று சொல்லிவிட்டு யாதவனைப் பார்த்து கண் சிமிட்டினான் யதீந்திரன்.

“டேய் தீரா! என்னடா சொல்ற?”

“ஆமா சொல்றாங்க, இவ்வ்வளவு நல்ல்ல்லவனுக்கு தான் இங்க கல்யாணமாம்!” என்று இழுத்து சொன்னான் யதீந்திரன்.

யாதவனுக்கு அதுவரை இருந்த சோகம், வருத்தம்,கவலை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

“டேய் நிஜமாடா?” என்று திரும்ப கேட்டான் யாதவன்.

“இரு நான் வெளியே போய் ரோஜாவை அனுப்பறேன். அவங்க சொல்லுவாங்க இது நிஜமா, இல்லையான்னு!!” என்றபடியே வெளியே சென்றான் யதீந்திரன்.

“சார், யாதவனுக்கு ரோஜா கூட பேசணுமாம்.ரோஜாவை உள்ளே அனுப்பட்டுமாம்மா? என்று ரோஜாவை பெற்றவர்கள் இருவரிடம் கேட்டான் யதீந்திரன்.

“எனக்கு என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும் தம்பி அவ்வளவுதான். இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு காரணமே, உங்க மூணு பேர் கிட்ட இருக்கிற ஒத்துமை தான். இப்போ கூட பார்த்தோமே, மனசார விரும்பின பொண்ண கூட விட்டு கொடுக்க நினைக்கிற அண்ணன்,

அண்ணன் நினைச்சதை அவனுக்கே தெரியாமல் நடத்திக்கொடுக்க நினைக்கும் உடன்பிறப்புக்கள். இங்க வாழ்ந்தாதான் என் பொண்ணும் அவளோட சந்ததிகளும் நல்லா இருப்பாங்க! மனசு ரொம்ப நிறைஞ்சு இருக்குப்பா!” என்று யதீந்திரனிடம் கூறிய லலிதா, “ரோஜா போய் அவர் கூட பேசிட்டுவா.!” என்று தன் பெண்ணிடமும் கூறினார்.

அதற்குள் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட யாதவன் வெளியே வந்து, ரோஜாவின் பெற்றோர்களின் கால்களில் விழுந்து வணங்கினான்.

“நல்லாயிருங்க தம்பி!” என்று இருவரும் ஆசீர்வாதம் செய்தனர்.

“நான் ரோஜாவை விரும்பறேன்ங்கிறதை நீங்க பத்திரிகை வச்சப் பிறகு தான் புரிஞ்சுக்கிட்டேன். முன்னமே சொல்லாததற்கு என்னை மன்னிச்சுருங்க!” என்று பொதுவாக மன்னிப்பு கேட்டான் யாதவன்.

“அட என்ன தம்பி நீங்க, வந்தவுடனேயே உங்க கிட்ட விஷயத்தை சொல்லமா, தீரன் தம்பி கிட்ட கல்யாணம் பேசினது என் தப்பு தான். நேரடியா எப்படி கல்யாண மாப்பிள்ளைக்கிட்டேயே கேட்பதுன்னு தான் அவர் கிட்ட பேசினேன். தப்புக்கு நான் தான் தம்பி மன்னி!” என்ற அவரை, ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையை சொல்லவிடாமல் செய்தனர் தீரனும், யாதவனும்.

“ஐயோ சார்! இதுல உங்க தப்பு எதுவுமே இல்லை. வயசுல பெரியவங்க நீங்க போய் எங்க கிட்ட மன்னிப்பு கேட்கலாமா?” என்று நியாயம் கேட்டான் யதீந்திரன்.

அவனுடன் சேர்ந்துக் கொண்டான் யாதவன். “ஆமா சார், இதுல உங்க தப்பு எதுவுமில்லை!”

“இன்னும் என்ன சார்ன்னு சொல்றீங்க யாதவாண்ணா? அங்கிளை அழகா ‘மாமா’ ன்னு சொல்லுங்க!” என்றாள் யுவராணி.

“ஆமாம் தம்பி, நீங்க பேசிட்டு ரோஜாவை வீட்டுல கொண்டு வந்து விட்டுடுங்க! நாங்க கிளம்பறோம்” என்றார் கணேசன்.

“சார், கல்யாணம் முடிஞ்சதும் நானும் யுவியும் வேற வீட்டுக்கு போகக் கூடாதுன்னு சொல்லீட்டீங்க!! ஆனா, கீழ் போர்சன்ல நாங்க இருந்துக்கிறோம். மேல இவங்க இருந்துக்கட்டும். அதே மாதிரி வாடகை கண்டிப்பா நீங்க வாங்கிக்கணும்!” என்றான் யதீந்திரன்.

“தீரா நீங்க இல்லாம நான் எப்படி?” என்று ஏதோ ஆரம்பித்த யாதவனை, “அதை அப்புறம் பேசிக்கலாம் யாதவா, இப்போ ரோஜா கூட போய் பேசு.!” என்று பேசவிடாமல் தடுத்தான் யதீந்திரன்.

“இல்ல தீரா!” என்று ஆரம்பித்தவனை கைப்பிடித்து நிறுத்தினான் யதீந்திரன்.

“யாதவா இப்போ நான் ஆரம்பிச்சது தப்பு தான். நாம கலந்து பேசி முடிவுக்கு வரலாம்.” என்று கூறியவன், கணேசனிடம் திரும்பி, “சார் ப்ளீஸ் கொஞ்சம் டைம் கொடுங்க. நெக்ஸ்ட் வீக் பேசலாம்.” என்றான்.

“சரி தம்பி, இன்னும் சார் தானா?”

“அப்படியே பழகிட்டேன், மாத்திக்க ட்ரை பண்றேன் சார்!” என்ற யதீந்திரனுக்கு ஒரு தலை அசைப்பை கொடுத்துவிட்டு அனைவரிடமும் விடைப் பெற்று தன் மனைவியுடன் கிளம்பினார் கணேசன்.

“ரோஜா நீங்க உள்ளே போங்க. இவனை அனுப்பி வைக்கிறோம்!” என்று ரோஜாவைப் பார்த்து சொன்னான் யதீந்திரன்.

ரோஜா உள்ளே சென்றதும் மூவரிடமும் சில நொடிகள் மௌனம் குடிக்கொண்டிருந்தது. மூவரின் முகமும் மலர்ச்சியை குத்தகைக்கு எடுத்திருந்தது.

அங்கிருந்த மௌனத்தை கலைக்க நினைத்த யுவராணி, “ரோஜாவை தாலாட்டும் தென்றல்!” என்ற பாடலை சிரித்துக்கொண்டே பாடினாள்.

யதீந்திரனோ, “ரோசு ரோசு உனக்கேத்த ரோசு தான்!” என்று யாதவனை கைகாட்டியபடியே பாடினான்.

யுவி தொடர்ந்து, “ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா!” என்று பாடினாள்.

“எ ரோஸ் ஈஸ் எ ரோஸ் ஈஸ் எ ரோஸ் ரோஸ்” என்று யதீந்திரன் பாடி நிறுத்தியதும்,

“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்!” என்று கையில் கட்டியிருந்த கடிகாரத்தையும், பின் ரோஜா இருந்த அறையையும் மாற்றி மாற்றி ஒரு கையால் காட்டி, மறுகையால் யாதவனை அறைக்கு ‘போ!’ என்று ஜாடை காட்டினாள்.

யதீந்திரன் மற்றும் யுவராணியின் குறும்பில் அறைக்குள் இருந்த ரோஜாவும் வெளியே வந்து அவர்களைப் பார்த்தாள்.

ரோஜாவை பார்த்து சிரித்த யுவி, திரைப்பட நடிகர் வடிவேலு ஒரு படத்தில் நகைச்சுவையாக பாடியிருக்கும் பாடலை பாடினாள்.

“ரோஜா ரோஜா சவுண்டு ச ரோஜா!!” என்றவள் யாதவனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

யதீந்திரனும், யுவியும் தொடர்ந்து ரோஜா, மலர் என்ற வார்த்தைகள் தொடங்கும் பாடல்களாக பாடிக்கொண்டே, ரோஜா மற்றும் யாதவனின் கைகளை ஆளுக்கொன்றாக பற்றி அறையினுள் விட்டு வந்தனர்.

அறையினுள் நுழைந்த ரோஜாவும், யாதவனும் ஒருவருக்கொருவர் பார்த்து லேசாக புன்னகைத்துக்கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

Advertisement