Advertisement

அத்தியாயம் : 12

யாமினி எதையோ சிந்தனை செய்தவாறே தலையை வாரிக்கொண்டிருந்தாள். தமக்கையைப் பற்றிய சிந்தனை தான். யசோதராவின் நிலையைப் பற்றிய சிந்தனை!

அவளின் சிந்தனை தான் தமக்கையைப் பற்றி இருந்ததே தவிர, அடுத்து என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

அப்படி யோசிக்கவும் அவளுக்கு வரவில்லை!!

இதுநாள் வரை தமக்கை கூறியவற்றை மட்டுமே செய்து வந்தவளுக்கு தாமாக யோசித்து செயல்படுவோம் என்ற சிந்தனை அறவேயில்லை.

ஆனால், ஒன்றை மட்டும் யோசித்தாள். தன்னுடைய பிறந்தநாள் ட்ரீட்டை வேண்டாம் என்று தமக்கை மறுத்ததையும் மீறி சென்றதினால் தானே இத்தனை பிரச்சினை ஏற்பட்டது என்ற சிந்தனை அவளுள் ஓடிக்கொண்டிருந்தது.. அதற்கு தனக்கு தண்டனை கிடைக்காமல் யதுக்காவிற்கு கிடைத்திருக்கிறதே என்ற வருத்தமும் அவளிடம் மிகுந்திருந்தது.

“யாமினி கிளம்பிட்டியா?” என்று கேட்டவாறே ரோஜா அங்கு வந்தாள்.

யாமினி இப்போது இவர்களின் பாதுகாப்பில் தான் இருக்கிறாள்.

யசோதராவிற்கு அடிப்பட்டு இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றன. அதனால் அவள் இன்னும் மருத்துவமனை வாசம் தான்.

இரவெல்லாம் தமக்கையுடன் இருந்துவிட்டு, குளித்து, சாப்பிட்டு  கிளம்புவதற்காக காலையில் தான் யதீந்திரனுடன் இங்கு வந்திருந்தாள்.

யசோதரா, யாமினிக்கு உதவியாக யதீந்திரனும் இரவு அவர்களுடன் மருத்துவமனையில் தான் இருந்தான். காலையில் யாதவன் யசோதராவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

அன்று யசோதராவின் கால் விரல்கள் துண்டுப்பட்டு வலியில் அலறிக்கொண்டிருக்கும்போதே காவல்துறையினர் ஜீப்பில் வந்தனர். அரிவாள் வீசிய ரௌடி போலீஸைக் கண்டதும் தப்பி ஓடமுயன்றான். இரண்டு காவலர்கள் அவனின் முயற்சியை முறியடித்து அடித்து பிடித்தனர். யசோதரா மிதித்த அந்த ரௌடியையும் இணைத்து கைது செய்து ஜீப்பில் ஏற்றினர்.

அதற்குள் யதீந்திரன் ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லியிருந்தான்.

மருத்துமனையில் யசோதராவின் விரல்களை எடுத்துவைக்குமாறு கூறியிருந்ததால் அதனை எடுத்து வைக்க கவர் எதுவும் இல்லாததால், கையிலேயே வைத்திருந்தான்.

யாமினி தமக்கையின் கைகளைப் பிடித்து அழுதுக்கொண்டிருந்தாள்.

யசோதராவிற்கு வலியில் உயிர் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் தங்கையின் பாதுகாப்பிற்காக யோசித்து, யதீந்திரனை அருகே அழைத்தாள்.

“ய்யத்த்தீந்திரன், நான் ஹாஸ்பிடல்ல இருந்து வர வரைக்கும் யாமியை உங்க வீட்டுல வச்சு பார்த்துக்க முடியுமா? அவ தனியா இருக்கிறது அவளுக்கு பாதுகாப்பில்ல.! யாமி நடந்ததை உங்க கிட்ட சொல்லுவா! ப்ளீஸ் அவளை பார்த்துக்கங்க!!” என்றவள் அவனின் பதிலை எதிர்பாராமலே தங்கையிடம் திரும்பி,

“யாமி, இந்த சமயத்துல நீ தைரியமா இருக்கணும். இவரோட வீட்டுல போய் இருந்துக்கோ.! இதுக்கெல்லாம் பயந்து படிப்பை விட்டுடறேன்னு மட்டும் திரும்பவும் பேசிடாத!! எனக்கு சீக்கிரம் சரியாகிடும். அழாம தைரியம்மா இரு ய் யா யா மி.!!” என்றவாறே மயங்கினாள் யசோதரா.

யசோதரா ஆம்புலன்ஸில்  ஏற்றப்பட்டவுடன்  மருத்துமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆம்புலன்சில் இருந்தவர்கள் அவளின் விரல்களை பதப்படுத்தியே எடுத்து வந்ததால், அவளின் காலோடு ஓட்ட வைப்பதற்கான சிகிச்சைகளே மருத்துவமனையில் வழங்கப்பட்டது.

அங்கு சிகிச்சை அளிக்கப்படும்போதே காவலர்கள் கேட்ட கேள்விகளுக்கு பயந்து அழுத யாமினியை தைரியப்படுத்தி பதில் அளிக்க ஊக்குவித்தான் யதீந்திரன்.

ஆசிரியராக இருந்தபோது அவன் காட்டிய கண்டிப்பில் பயந்திருந்த யாமினி, அவளின் யதுக்கா போலவே தைரியம் கொடுக்கும் இந்த யதீந்திரனிடம் நெகிழ்ந்தாள். அக்காவின் அருகாமையை யதீந்திரனின் வார்த்தைகளில் உணர்ந்தாள். அதனாலேயே காவலர்களிடம் அதுவரை நடந்தவற்றை அவளால் சற்று தெளிவாகவே கூற முடிந்தது.

யதீந்திரனிடம் ஒரு சொந்தத்தை உணர்வதற்கு அது மட்டும் காரணம் இல்லை. யசோதரா யாமினியின் பாதுகாப்பை, யதீந்தினின் பொறுப்பில் விட்டது தான், முதல் காரணம்.

தமக்கைதனக்கு நல்லது மட்டும் தான் செய்வாள் என்ற நினைப்பு யாமினிக்கு எப்போதுமே உண்டு. அதனாலேயே யதீந்திரனிடத்தில் ஒரு சொந்தத்தை உணர்ந்தாள்.

காவலர்களிடம் தங்கள் பெற்றவர்கள் முதல் சுஜியின் விவகாரம் வரை அனைத்தையும் அழுதபடியே கூறி முடித்தாள் யாமினி. அதில் யசோதரா வேற்றுக் கிரகத்திற்கு செல்வதும் அடக்கம்.

யதீந்திரன் சகோதரிகளின் நிலையை கண்டு சற்று அதிர்ந்து தான் போனான். பத்து வயதிலிருந்தே பெற்ற அன்னையைப் போன்று தங்கையைப்  பார்த்துக்கொண்ட யசோதரா, ஒரு போதும் தங்கையை தனியே விட்டு செல்ல மாட்டாள் என்ற எண்ணம் அவனிடம் தோன்றியது.

காவலர்களிடம் கொஞ்சம் தயங்கியபடியே பேசிக்கொண்டிருந்த யாமினியை பார்த்தான். அவளின் முகத்தில் தாண்டவமாடிய குழந்தை தனம் அவனின் மனதை ஏதோ செய்தது.

‘இந்த முகத்தைப் பார்த்தாலே போதுமே பசி தூக்கம் கூட மறந்துவிடுமே!! எப்படி தான் இவர்களை விட்டு செல்ல மனம் வந்ததோ?’ என்று மனதினுள் பேசினான் யதீந்திரன்.

பத்து வயதில் இருக்கும் குழந்தையையும், ஐந்து வயதே நிரம்பிய குழந்தையையும் விட்டு துறவறம் சென்ற இவர்களின் பெற்றவர்களை நினைத்து பெரும் கோபமும் அவனுள் பெருகியது.

அநாதைகள் என்ற ஜாதியையே இவர்களைப்போன்ற பொறுப்பற்றவர்கள் தான் உருவாக்குகிறார்கள்என்று நினைத்ததுமே அவனின் வாழ்வு மற்றும் தங்கை யுவராணியின் நிலை அனைத்தும் அவன் கண் முன்னே வந்து சென்றது.

அவர்களைப் பற்றி எண்ணியதுமே அவனின் முகம் இறுகியது. கைகளை மடக்கி, கண்களை மூடி தன்னுடைய உணர்ச்சிகளை மறைக்க முயன்றான். ஆனால் அதற்குள்ளாக யாமினி அவனை பார்த்திருந்தாள்.

இப்பொழுது அந்த குழந்தை முகத்தில் பயம் கலந்த குழப்பம்!!

காவலர்கள் அவளிடம் விசாரணையை முடித்து வெளியே சென்றனர். அதன் பிறகு அவளின் மனம் ஆறுதல் வார்த்தைகளை தேட யதீந்திரனை திரும்பி பார்த்தாள். பார்த்ததுமே பயம் கொண்டாள். அக்காவின் அருகாமையை மனம் தேடியது! பயத்துடன் சற்று தள்ளி சென்று தீவிர சிகிச்சை பகுதியில் இருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.

அவளின் பயத்தை அறியாத யதீந்திரன் கண்களை திறந்துப் பார்த்தான். அருகில் யாமினியின் அரவம் இல்லாததால் பார்வையால் தேடினான். சற்று தள்ளி அமர்ந்திருந்தவளைப் பார்த்து, அருகில் சென்று அவளை ஆறுதல் படுத்த முனைந்தான்.

“யாமினி யசோதரா சீக்கிரம் குணம் ஆகிடுவாங்க! கவலைப்படாதே!” என்றான்.

அவனின் குரலில் பயந்த யாமினியை கேள்வியாகப் பார்த்தான்.

“என்னாச்சு யாமினி? எதுக்கு இவ்வளவு பயம்?”

“….”

“யாமினி?”

ம்ஹும்.! அவளின் பதில் அவனுக்கு கிடைக்கவேயில்லை. அமைதியாக அவனைப் பார்த்தாள். அவளின் முகத்தில் எதைக் கண்டானோ, மேலும் அவளை துன்புறுத்தாமல் வெளியே சென்று அமர்ந்து ரோஜாவிற்கு அழைத்தான்.

அவளிடம் சுருக்கமாக நடந்ததை கூறியதும், ரோஜாவேதான் அங்கே சீக்கிரம் வருவதாக கூறி அலைபேசியை அணைத்தாள்.

ரோஜாவோடு யுவராணியும் மருத்துவமனைக்கு வந்தாள்.

மருத்துவமனையின் வாசலிலேயே நின்றிருந்த யதீந்திரன் அவர்களிடம் நடந்ததை சுருக்கமாக சொன்னவன் தொடர்ந்து சகோதரிகளின் சொந்த வாழ்வையும் மிக சுருக்கமாக கூறி முடித்த பின், “வாங்க உள்ள போலாம். யாமினி ரொம்ப நேரமா தனியா இருக்கா.!!” என்று சொல்லி தங்கையின் சக்கர நாற்காலியை தள்ளியபடியே அவர்களை உள்ளே அழைத்து சென்றான்.

யாமினியிடம் அவர்களை அறிமுகப்படுத்தும்போதே, மருத்துவர் வெளியே வந்து, விரல்களை ஒட்ட வைப்பதற்கான சிகிச்சை செய்யப் பட்டுவிட்டது. இள வயது என்பதால் சீக்கிரம் குணம் ஆகும் வாய்ப்பு அதிகம் என்றவர், தொடர்ந்து ஒரு மூன்று நாட்கள் மட்டும் அப்சர்வேசனில்இருக்கட்டும் பின் நார்மல் வார்டுக்கு மாற்றுவதைப் பற்றி சிந்திக்கலாம் என்று முடித்து கிளம்பினார்.

அக்காவை பார்க்க யாமினி விரும்பியதால் மருத்துவரிடம் அனுமதி பெற்று அவளை உள்ளே அழைத்து சென்றான் யதீந்திரன்.

மருந்தின் உதவியால் மயக்கத்தில் இருந்த யசோதராவை பார்த்ததுமே அழ ஆரம்பித்தாள் யாமினி. அங்கிருந்த செவிலியர் அவளை வெளியே அழைத்து செல்ல சொல்லி யதீந்திரனிடம் பணித்தார்.

வெளிய வந்த யாமினியை தோளோடு அணைத்து, “யாமினி அக்கா சீக்கிரம் குணமாயிடுவாங்க. தைரியமா இரும்மா!!” என்று ஆறுதல் அளித்தாள் ரோஜா.

“அக்காவே சொல்லியிருக்கா! நான் அழமாட்டேன்.! சீக்கிரம் வந்துருவா!” என்று கண்களை துடைத்து தேம்பியபடியே இருந்தாள்.

யுவராணியும், “சீக்கிரம் வந்துருவாங்க கவலைப் படாத!!” என்றாள்.

யுவராணியைப் பார்த்து லேசாக புன்னகைப் புரிந்தாள் யாமினி.

“யாமினி ஏதாவது சாப்பிட்டியா?” என்று கேட்டாள் ரோஜா.

“இல்லக்கா! நானும் சாப்பிடல. எங்க சாரும் சாப்பிடல!” என்ற குரலில் இருந்த குழந்தை தனம் யுவராணியை அசைத்தது.

அன்று யாமினியை அவளுக்கு பிடிக்கவேயில்லை. இன்று இவளை பார்க்கும் போதும், இவளின் குரலை கேட்கும் போதும் பிடிக்காமல் போவதற்கான காரணங்கள் எதுவுமே பிடிபடவில்லை.

“உங்க சார் ஒரு வேளை சாப்பிடலைன்னா குறைஞ்சு போய்ட மாட்டார்.!! வா.! நாம சாப்பிட போலாம்.!” என்றாள் யுவராணி.

“அச்சோ அக்கா பாவம் எங்க சார்.!! எனக்கு எவ்வளவு ஹெல்ப் செஞ்சிருக்கார் தெரியுமா? நீங்க அவருக்கு வாங்கி கொடுங்க எனக்கு வேண்டாம்.!” என்றாள் யாமினி.

“உனக்கு எங்க அண்ணியும் அக்கா நானும் அக்காவா? வேண்டாம்மா தாயே நீ என்னை மட்டும் அக்கான்னு கூப்பிட்டா இங்க இருக்கவங்களுக்கு மனசுல பூகம்பமே வெடிக்கும்.  மத்தவங்களுக்காக எப்பவும் விட்டு கொடுத்தே பழகிட்டேன். அதனால என்னை யுவி இல்லைன்னா யுவா ன்னே கூப்பிடு.!” என்றாள் யுவராணி.

“மத்தவங்களா? யாருக்கா? இல்ல இல்ல யாருங்க  யுவி? உங்களை அக்கான்னு சொல்ல மாட்டேன். கூப்பிட்டா  தான் பூகம்பம் வரும்ன்னு சொல்றீங்களே.! ஐயோ பூகம்பமெல்லாம் வேண்டாம்.”

“யுவி இப்போ இந்த பேச்சு ரொம்ப முக்கியமா? என்று யுவராணியை அதட்டிய  ரோஜா, “தீரா, யாதவனும் இப்போ இங்க வரேன்னு சொல்லியிருக்கார். நாங்க இங்கயே இருக்கோம். யாமினியை கூட்டிக்கிட்டு போய் சாப்பிட்டு வாங்க.!” என்றாள்.

“எனக்கு வேண்டாம்க்கா நீங்க சாப்பிடுங்க. நான் அக்கா பக்கத்துலயே இருக்கேன். சிஸ்டர் எதுக்காவது கூப்பிடுவாங்க.!!”

“யாமிம்மா!! நீ போ.! நாங்க இங்க பார்த்த்துக்கறோம்.!” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள் ரோஜா.

சாப்பிட அழைத்தது சென்ற யதீந்திரன், அவளுக்கு தேவையானவற்றை எடுக்க வீட்டிற்கு செல்லலாமா என்று கேட்டதும் தான் யாமினிக்கு வீட்டின் சாவி அந்த காரிலேயே விட்டு வந்தது நியாபகத்திற்கு வந்தது.

அதில் பதட்டமடைந்த யாமினியை சமாதானப்படுத்தி, அங்கே சென்று எடுத்துவரலாம் என்று சொன்னான்.

வேகமாக உணவை முடித்து ரோஜாவிடம் சொல்லிவிட்டு யாமினியை கார் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றான்.

பதினைந்து நிமிட பயணங்களில் அங்கே சென்ற அவர்கள், காரில் இருந்த சாவி கைப்பை உட்பட இருந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு, காரைப்பூட்டி சாவியையும் எடுத்துக்கொண்டனர்.

அவர்களின் நல்ல நேரம் தான் திறந்த காரினுள் இருந்த எதுவுமே திருடு போகாமல் இருந்தது.

அங்கிருந்து யாமினியின் வீட்டிற்கு சென்று அவளுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கே புறப்பட்டனர்.

யதீந்திரனுக்கு தேவையானற்றை ரோஜா வரும்போதே எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்.

யதீந்திரனின் வண்டியில் அவனின் பின்னே தான் அமர்ந்திருந்தாள் யாமினி. அவளுடன் அவன் வேண்டிய தனிமை பயணம் தான். ஆனால் அவனால் தான் தன் மனதை யாமினியிடம் வெளிப்படுத்த முடியாமல் போனது.

இந்த சூழ்நிலையில் அவனின் மனதை வெளிப்படுத்தியிருக்கவும் மாட்டான். அதனால் அவளின் அருகாமையை கூட உணராமல் வண்டியை மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றான்.

 

Advertisement