Advertisement

அத்தியாயம் : 11

நீதிமன்றம் சென்று வந்து ஒருவாரம் கடந்திருந்தது. காவல் நிலையத்தில் கொடுத்த புகாருக்கான விசாரணை துரிதமாக நடந்துக்கொண்டிருந்தது. சுஜி இன்னமும் தன் தவறை ஒத்துக்கொள்ளாமல் அடம் பிடித்தாள்.

அவளைப் பெற்றவர்களோ என்ன ஏமாற்று வேலை செய்து தங்கள் பெண்ணை இதில் இருந்து வெளியில் கொண்டுவருவது என்ற சிந்தனையில் இருந்தனர். கூடவே சகோதரிகளுக்கு இடையூறு விளைவிக்கவும் பிரபல ரௌடியுடன் பேசியிருந்தனர்.. அந்த ரௌடியும் இன்னும் இருநாட்களில் சகோதரிகளை கடத்தப் போவதாக கூறியதும் தான் சற்று அமைதியாயினர்.

இதையெதையும் அறியாத யசோதரா தங்கைக்கு தைரியம் கொடுத்து அவளை வெளி இடங்களுக்கு அழைத்து சென்றாள்.

கல்லூரிக்கு இந்த வாரம் முழுவதும் விடுப்பு எடுத்துக்கொள்வதாகவும் அடுத்த வாரத்திலிருந்து கண்டிப்பாக செல்வதாக யாமினி உறுதி அளித்திருந்தாள். அதில் மனநிறைவு அடைந்த யசோதரா அவளை முதலில் பாட்டு வகுப்பை தொடர பணித்தாள்.

யாமினியின் சங்கீத குரு டிசம்பர் மாத கச்சேரிகளில் பாடுவதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார். அவருக்கு தம்புரா வாசித்து அவரின் பின்னே பாட யாமினியை தான் அவர் தேர்ந்தெடுத்திருந்தார். அதற்கான பயிற்சி வகுப்புக்கு யாமினியை வர பணித்திருந்தார். முதலில் மறுத்த தங்கையை அவளுக்கு கிடைக்க இருக்கும் நல்ல எதிர்காலத்தைக் கொண்டு, அவளை தைரியப்படுத்தி அங்கு கூட்டிச் சென்றாள் யசோதரா.

யசோதராவிற்கு சங்கீதத்தை ரசிக்க தெரியும். தங்கை பாடுவதை கேட்டுக்கொண்டே இருந்ததால் வந்த ரசனை!!

யாமினிக்கு பாடுவதில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக அந்த வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தாள். கூடவே தமக்கை தான் கொண்டு சென்று விட்டு அழைத்து வரவேண்டும்என்ற நிபந்தனையையும் வைத்தாள் யாமினி.

வெளி உலகை அவளாகவே அறிந்து நடந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசையில் தான் யாமினியை முதல் நாள் கல்லூரிக்கே தனியே சென்றுவர பணித்திருந்தாள். ஆனால் யாமினிக்கு ஏற்பட்ட அனுபவத்தால் மீண்டும் யசோதராவிற்கே பொறுப்பு கூடியது. கல்லூரிக்கும் யசோதராவே கொண்டுவிட்டால் தான் படிப்பை தொடருவேன் என்று பிடிவாதம் பிடித்த தங்கைக்காக அதற்கும் சம்மதித்திருந்தாள் யசோதரா.

தங்கை பாட்டு வகுப்பின் உள்ளே சென்றதும் தன்னுடைய பாடங்களை படிக்க தொடங்கினாள்.

அவள் காரில் இருந்தவாறு தான் படித்துக்கொண்டிருந்தாள். அவளின் கவனம் முழுவதும் படிப்பில் இருந்ததால் அவளை நோட்டம் விட்டவாறே இருந்தவர்களை கவனிக்க மறந்தாள்.

திடீரென்று அவளின் அலைபேசி அடித்தது.!

அதை எடுத்து, “ஹலோ!!” என்றாள்.

“மேடம் நாங்க போலீஸ் ஸ்டேஷன்லேர்ந்து பேசறோம். உங்களோட கம்பளைன்ட தான் இன்ஸ்பெக்டர் என்குயரி பண்ணிட்டு இருக்கார். உங்க தங்கையை யாரோ காப்பாத்தினதா சொல்லியிருந்தீங்க. அவரோட டீடெயில்ஸ் வேணும்.!”

“அவரோட பேரு யாதவன். போன் நம்பர் *********** இது தான், வீட்டு அட்ரஸ் நோட் பண்ணிக்கங்க சார்..!” என்று அனைத்தையும் சொன்னாள் யசோதரா.

“ஓகே தங்யூ மேடம்.!” என்று வைத்தார் அவர்.

யசோதரா சில நிமிடங்கள் யோசித்தப் பிறகு யாதவனுக்கு அழைத்தாள். காவல் நிலையத்திலிருந்து விசாரணை செய்ய வருவார்கள் என்ற தகவலை தரவேஅவள்யாதவனை அழைத்திருந்தாள். ஆனால் முழு ரிங் சென்றும் அவன் எடுக்கவில்லை. மேலும் இருமுறை முயன்றாள். யாதவன் எடுக்கவேயில்லை.

எப்படியாவது யாதவனுக்கு தகவல் கொடுக்க எண்ணி யதீந்திரனை அழைத்தாள்.

அவன் போனை கையிலேயே வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் போலும். முதல் ரிங்கிலேயே எடுத்தான்.

“சொல்லுங்க யசோதரா!”

“யதீந்திரன், போலீஸ் என்குயரிக்காகமிஸ்டர்.யாதவனோட டீடெயில்ஸ் கேட்டாங்க. நான் அவரோட டீடெயில்ஸ் எல்லாம் கொடுத்துட்டேன். எப்போ வேணும்னாலும் அவங்க வரலாம். அதை சொல்ல தான் மிஸ்டர்.யாதவனுக்கு கால் செஞ்சேன். அவர் எடுக்கல. அதான் உங்களுக்கு சொல்லலாம் ன்னு கால் பண்ணிட்டேன்.!”

“யாதவன் அவனோட கண்காட்சிக்காக கொஞ்சம் பிஸியா இருக்கான். நான் சொல்லிவிடுகிறேன்.” என்று சொன்ன யதீந்திரன் சிறிது தயங்கியபடியே, “யா யா மினி எப்படி இருக்காங்க?” என்று கேட்டான்.

“தேங்க்ஸ் யதீந்திரன்! இப்போ நல்லா இருக்கா.!!” என்றவளின் குரலில் அலைபேசியை வைத்துவிடும் எண்ணத்தை உணர்ந்தான் யதீந்திரன்.

அவள் வைக்குமுன்னே, “நான் யாமினியை தப்பான எண்ணத்துல தொடல.! அவளை பார்த்த அன்னிலேர்ந்தே ஏதோ ஒரு ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு காதலாச்சு.!! யாமினி பர்த்டே அன்னிக்கு ப்ரபோஸ் பண்ணலாம்ன்னு நினைச்சேன். ஆனா என்னென்னமோ நடந்துடுச்சு. அவ கண்ணுல இருந்த பயத்தைப்  பார்த்து எனக்கு உசிரே போச்சு. அவளுக்கு ஆறுதல் சொல்லக்கூட நான் நினைக்கல. அவ கவனத்தை என் கிட்ட கொண்டு வருவதற்காக மட்டும் தான் யாமினியோட கையைப் பிடிச்சேன். இப்போ கூட அவளை பார்த்து பேச முடியாத வருத்தமும் கோபமும் நிறைய இருக்கு. ஆனா உங்க கிட்ட நான் தப்பானவன் இல்லங்கிறதை புரியவைக்க அந்த கோபத்தை விட்டுட்டேன்.!!” என்று அவசர அவசரமாக சொல்லி முடித்தான்.

யாமினியை வெளியே பார்க்கவே முடியவில்லை. அப்படியே பார்த்தாலும் யசோதராவை விட்டு தனியே வந்து அவனுடன் பேசுவாளா? என்பதும் சந்தேகமே! அதனால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டான் யதீந்திரன்.

“உங்க கிட்ட கோபமா பேசினத்துக்கு சாரி யதீந்திரன்.! இப்போதைக்கு என்னால அதை மட்டும் தான் கேட்க முடியும்.! உங்க பர்சனல் லைப் எல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயம்.!” என்று கத்தரிக்க நினைத்தாள்.

“என்னோட பர்சனல்ல உங்க தங்கை தான் இருக்கா.!!” என்றான் சிறிது கோபத்துடன்.

“ஓ! அப்படியா அவக்கிட்ட எப்போ சொன்னீங்க?”

“சீக்கிரமே சொல்வேன்.!”

“வாழ்த்துக்கள்.! பை யதீந்திரன்.!!” என்று சொல்லும்போதே யாமினி காரில் ஏறினாள். தங்கையை கவனித்த யசோதரா அலைபேசியை அணைக்காமல் இருந்தாள்.

“யதுக்கா.! இன்னிக்கு புதுசா ஒரு கீர்த்தனை கத்துக்கிட்டேன் பாடவா.!” என்ற யாமினியின் குரல் யதீந்திரனின் காதுகளில் தேனாக பாய்ந்தது.

“பாடு யாமிம்மா.!”

யாமினி அவளின் நோட்டு புத்தகத்தை திறந்து வைத்து பாட ஆரம்பித்தாள்.

யாமினி பாட ஆரம்பித்ததுமே மெய் மறந்து தான் போனான் யதீந்திரன். கண்களை மூடி அவள் குரலின் இனிமையை ரசித்தான்.

சில நிமிடங்கள் தொடர்ந்தது அந்த கீர்த்தனை. தீடீரென்று அபஸ்வரம் போல் ஏதோ தட்டும் சத்தம் யதீந்திரனின் ரசனையை தடை செய்ய,  கண்களை திறந்துப் பார்த்தான்.

அவனருகில் யாரும் இல்லை! என்ன சத்தம் இது என்று யோசிக்கும் போது, “என்ன சார்? எதுக்கு சார் இப்படி தட்டினீங்க?” என்ற யசோதராவின் குரல் யதீந்திரனின் காதில் விழுந்தது.

அங்கு யசோதராவிற்கோ வந்தவர்களின் முகத்தை கொண்டு ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக தோன்றியது. காரை வேகமாக கிளப்ப முயன்றாள்.

அவளின் முயற்சி புரிந்ததும், கத்தியை காட்டி மிரட்டி காரின் டயர்களை பஞ்சர் செய்தனர்.

அந்த இடத்திலேயே இருப்பது மிகவும் ஆபத்து என்பதைப் புரிந்துக்கொண்ட யசோதரா தங்கையிடம் “யாமி நம்மள நாமே தான் காப்பாத்திக்கணும். பயந்துட்டு இருக்காம ஆளுங்க நடமாட்டம் இருக்கிற இடத்திற்கு சீக்கிரமா ஓடலாம்.!!” என்றவள் காரின் கதவை வேகமாக திறந்தாள். கார் கதவு இடித்ததால் கீழே விழுந்தனர் அந்த ரௌடிகள்.

அவர்கள் எழுவதற்கு முன் தங்கைப்பக்கம் சென்று அவளையும் இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தாள் யசோதரா.

ஓடிக்கொண்டே அலைபேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டு, “யதீந்திரன் இரண்டு பேர் எங்களை துரத்துறாங்க.! பெசன்ட்நகர்ல இருக்கோம். பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேஷன்க்கு போறோம். ப்ளீஸ் அங்க நீங்க வர முடியுமா?” என்றாள்.

“பெஸண்ட்நகர்ல எந்த ஸ்ட்ரீட்? நான் பெசன்ட்நகர் பீச்ல தான் இருக்கேன்.!”

“24th cross street.!”

“நீங்க ஓடிட்டே இருங்க!! நான் 5 மினிட்ஸ்ல அங்க வரேன். போனை கட் செஞ்சுடாதீங்க!” என்றவன் ஹெட்போனை காதுகளில் வைத்துக்கொண்டே வண்டி இருக்கும் இடம் நோக்கி ஓடினான்.

யசோதராவும் தங்கையை பிடித்துக்கொண்டே ஓடினாள். ரௌடிகள் இருவரும் அவர்களை துரத்தி வருவது பின்னால் இருந்து வந்த சத்தத்தால் தெரிந்தது.

ஐந்து நிமிடங்கள் கடந்த நிலையில், “யசோதரா, நான் உங்க கிட்டக்க வந்துட்டேன். பீச் கிட்ட இருந்த போலீஸ் கிட்ட தகவல் சொல்லிவிட்டேன்.பீச் பக்கமா நேரா ஓடி வாங்க!!”

“சரி.!” என்றவாறே ஓட்டத்தை தொடர்ந்தனர்.

“யதுக்கா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு! என்னால ஓடவும் முடியல!”

“யாமி ப்ளீஸ்!! எதுவும் பேசாத!!” என்றவளுக்கு யதீந்திரன் வண்டியில் வருவது தெரிந்தது.

அதற்குள் அந்த ரௌடிகள் சகோதரிகளை நெருங்கியிருந்தனர்.

யசோதராவின் பின்னலை பிடித்து இழுத்ததால், அவளுடன் சேர்ந்து யாமினியும் கீழே விழுந்தாள். யதீந்திரன் இதையெல்லாம் பார்த்தவாறே வேகமாக அவர்களின் அருகில் வந்தான்.

கீழே விழுந்ததும் கையில் கிடைத்த மண் மற்றும் குப்பைகளை அள்ளிய யசோதரா பக்கத்தில் இருந்தவனின் கண்களுக்குள் எறிந்தாள். அதில் அவனின் பிடியை தளர்த்தினான்.

தங்கையை எழுந்து ஓடுமாறு சைகை செய்தவள், கண்களை கசக்கிக் கொண்டிருந்த ரௌடியின் மர்ம பிரதேசத்தில் செருப்பு காலால் மிதித்தாள். அவனின் அலறலில் கோபம் அடைந்த மற்றொரு ரௌடி பின்னால் வைத்திருந்த அரிவாளை எடுத்தான்.

யாமினியோ ஓடாமல் தமக்கைக்காக நின்றுக்கொண்டிருத்தாள்.

அரிவாளை எடுத்து யாமினியை நோக்கி வீசினான். அதற்குள் அங்கு வந்த யதீந்திரன் யாமினியை பிடித்து இழுத்து தன்னருகில் வைத்துக்கொண்டான்.

யசோதராவும் யதீந்திரனுக்கு அருகில் செல்ல முயன்றாள்.

ஆனால் தீடீரென்று “ஆ.!! அம்மா!!” என்று கத்தியபடியே கீழே விழுந்தாள்.

அந்த ரௌடி யசோதராவின் கால்களை குறிவைத்து தூக்கி வீசிய அரிவாள் அவளை தாக்கியதில் அவளின் காலில் இருவிரல்கள் துண்டுப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

Advertisement