Advertisement

அத்தியாயம் : 9 ன் தொடர்சி:

என்ன தான் மனமுதிர்ச்சியுடன் இருந்தாலும், தங்களின் தனிமை வாழ்வை மிக கேவலமாக விமர்சிக்கும்போது சற்றே கலங்கிய யசோதாராவிற்கு தங்களின் பெற்றவர்களை நினைத்து கோபம் தான் பெருகியது.

தவறு செய்த தங்கள் பெண்ணை இப்படி தாங்கும் பெற்றவர்களை நினைத்து சற்று பொறாமைக் கூட வந்தது.

‘பாட்டி, தாத்தா இருந்திருந்தால், இப்படி இவர்களை பேச விட்டு வேடிக்கைப் பார்ப்பார்களா?’ என்று தோன்றியதால், முற்றிலும் தளர்ந்தாள் யசோதரா.

அவளின் உறவுகளில் ஓரிருவர் வழக்கறிஞர்களாக தான் இருந்தனர். ஆனால் அவர்களிடம் செல்ல மனம் தான் வரவில்லை.

தங்களின் வாழ்க்கை முறையை இதுவரை யாருமே எதிர்மறையாக விமர்சிக்கும்படி நடந்துக் கொண்டதேயில்லை இந்த சகோதரிகள். சில உறவுகள் அதை சற்று பெருமையாகக் கூட சொல்லக் கேட்டிருக்கிறாள் யசோதரா.

அந்த உறவுகளின் மத்தியில் தங்களின் தரம் தாழ்வதை விரும்பாத யசோதரா, அடுத்து செய்யவேண்டியதை யோசித்தபடியே தங்கையின் அருகில் அமர்ந்திருந்தாள்.

 

அத்தியாயம் : 10

யதீந்திரன் கணினி வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தான். அனைவருக்கும் புரியும்படியாக எளிமையாக எடுத்தாலும் அவனின் முகத்தில் சற்றும் இளக்கம் இல்லை.

யாமினி கணினி வகுப்பிற்கு வராதது அவனை வருத்தம் அடைய செய்திருந்தது. வகுப்பிற்கு வரும்போது யாமினியிடம் பேசிவிட வேண்டுமென்ற அவனின் எதிர்பார்ப்பு பொய்த்ததால், அவனின் வருத்தம் கோபமாக மாறியிருந்தது.

அவனுக்கு என்ன தெரியும் அந்த சகோதரிகளின் நிலை!!

சுஜியின் பெற்றவர்கள் பேசும் பேச்சிற்கு முற்றிலும் உடைந்திருந்த யாமினியை தேற்றவே யசோதாராவிற்கு நேரம் சரியாக இருந்தது.

பாவம் அவளின் துக்கத்தையும், தளர்ச்சியையும்தேற்ற தான் யாருமே இல்லை!

அதைப் பற்றி சிந்திக்க கூட அவளுக்கு நேரம் இல்லை என்று தான் சொல்லவேண்டுமா!

யசோதரா அவளின் முதுகலை இறுதியில் இருந்தாள். கடைசி பருவ தேர்வு(semester) இன்னும் இருவாரங்களில் தொடங்க இருக்கிறது. தேர்வு முடிந்ததுமே ப்ராஜெக்ட் செய்வதற்கு ஏற்ற நல்ல நிறுவனத்தையும் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. (ஏற்கனவே சில நிறுவனங்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்தாலும் பேராசியர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க காத்திருந்தாள்.)

அதுமட்டுமில்லாமல் வேற்றுகிரஹத்திற்கு செல்வதற்கான பயிற்சி வகுப்புகளுக்கும் அவள் தயார் ஆக வேண்டியிருந்தது.

படிப்பதற்கு நிறைய இருந்தாலும் தங்கையை தனியே விட்டு செல்ல மனம் இல்லை. தங்கை தூங்கும் நேரத்தில் அவளின் பாடங்களை மட்டும் தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்தாள் யசோதரா.

யாமினியோ படிப்பை முற்றிலும் நிறுத்திவிடும் எண்ணத்தில் இருந்தாள். கணினி வகுப்புக்கு கூட செல்ல மறுத்தாள். படிப்பு விஷயத்தில் யாமினி எடுத்திருக்கும் முடிவு தவறானது என்று புரிந்தாலும் அவளை கல்லூரிக்கு கிளப்ப தான் யசோதராவினால் முடியவேயில்லை. கல்லூரி என்ற பேச்சை எடுத்தாலே அழுது கரைந்த இளைய சகோதரியை நினைத்து  அவளுக்கு பெரும் கவலை தான்!!

யசோதராவிற்கும் தங்கள் மேல் பழி சொன்னவர்களை நினைத்து வருத்தமும், கோபமும் எழுந்தது தான். ஆனால் அதில் இருந்து எப்படி வெளியே வருவது என்று யோசித்தாளே தவிர, பிரச்சினையை கண்டு பயந்து உள்ளுக்குள்ளேயே இருக்க நினைக்கவில்லை.

அவர்களை எதிர்த்து போராடவேண்டும் என்று புரிந்து அதற்கு தக்க நடவடிக்கையும் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறாள். இதற்காக சில நல்ல நட்புக்களின் வாயிலாக கிடைத்த சிறந்த வழக்கறிஞரையும் நியமித்து தான் இருந்தாள்.

சுஜி யாரின் காரில் ஏற்றி யாமினியை அனுப்பினாள்? அவர்கள் எத்தனை பேர்? அவர்களால் திரும்பவும் யாமினிக்கு ஆபத்து ஏற்படுமோ? என்ற நிறைய கவலைகள் அவளை சூழ்ந்தாலும், படிப்பை நிறுத்தும் முடிவையோ, வேற்று க்ரஹத்திற்கு செல்லும் முடிவையோ மாற்றிக்கொள்ள அவள்சற்றும் சிந்தித்து பார்த்தாள் இல்லை..

யாமினிக்கு பாதுகாப்பாக  வீட்டிலேயே தான் இருந்தாள். படிப்பதற்காக கல்லூரியில் விடுமுறை கொடுத்திருந்ததால் தங்கையைநன்றாககவனித்துக்கொள்ள அவளால் முடிந்தது.

ஆனால் இன்னும் இருவாரங்களுக்கு பிறகு யாமினி கல்லூரிக்கு சென்றால் மட்டுமே யசோதராவால் அவளின் தேர்வையே எழுத முடியும் என்ற நிலை!

எத்தனை பிரச்சினைகள் அவளை சூழ்ந்தாலும் அதற்காக கல்வியை விடுவது என்பது அவளால் முடியாத காரியம்.

அன்று சுஜியின் பெற்றவர்கள் அவர்கள் மீது தொடுத்திருந்த மான  நஷ்ட வழக்கிற்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக சொல்லியிருந்ததால் தங்கையுடன் கிளம்பிக்கொண்டிருந்தாள் யசோதரா.

தங்கையிடம் அவளின் படிப்பை குறித்து மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

“யாமி, இன்னும் எத்தனை நாள் காலேஜ் போகாம இருக்க போற? உனக்கும் செமஸ்டர் எக்ஸாம்ஸ் வருது தானே!” என்று ஆரம்பித்ததுமே யாமினியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“ய் ய் ய யதுக்கா, அந்த காலேஜ் போகவே எனக்கு பயமா இருக்கு! சுஜியோட பிரண்ட்ஸ் அங்க தான் இருப்பங்களோன்னு ரொம்ப பயமாயிருக்கு! அவங்க என்னை திரும்பவும் தொந்தரவு செய்வாங்களோன்னுநினைச்சாலே ரொ..ம்ப ரொம்ப.. பயமா இருக்கே! என்னால அந்த சூழ்நிலைல படிக்க முடியும்மாக்கா?”

“அதுக்காக உன் படிப்பை நிறுத்த முடியுமா யாமிம்மா?”

“தெரியலக்கா! ஆனா அங்க போக எனக்கு பயமா இருக்கு! இந்த வீட்டை விட்டு, உன்னை விட்டு தள்ளி போனாலே ரொம்ப ரொம்ப பயமா இருக்கு!” என்று கூறி தமக்கையை கட்டிக்கொண்டாள் யாமினி.

யசோதராவிற்கு மிகவும் கவலையாக இருந்தது. ‘தங்கைக்கு மனநிலை மருத்துவ கவுன்சிலிங் கொடுக்க வேண்டுமோ?’ என்று நினைத்துக்கொண்டாள்.

“சரி காலேஜ் போக பயமா இருக்குன்னா, கம்ப்யூட்டர் கிளாஸ் போகலாமே!”

“அங்க தானே சுஜி தப்பு தப்பா பேசினா, கண்டிப்பா அங்கேயும் அவளோட பிரண்ட்ஸ் இருப்பாங்க! அதான் அந்த கிளாஸ்க்கு போகவும் எனக்கு பயமா இருக்கு.”

ஏற்கனவே பயந்த சுபாவமான தங்கையை அந்த சுஜியிடம் பழக சொன்ன குற்றத்திற்காக தன்னையே திட்டிக்கொண்டாள் யசோதரா. இதுவரை கணக்கில்லாமல் தன்னை தானே திட்டிக்கொண்டு தான் இருக்கிறாள். அதனால் ஒரு பயனும் இல்லை என்று தெரிந்தே தான் இப்படி திட்டிக்கொள்கிறாள்.

“யாமி, எந்த பிரச்சினை வந்தாலும் இப்படி பயந்து ஒதுங்க கூடாதும்மா. அதை தைரியமா பேஸ் பண்ணனும். நீ இப்படி பயந்து ஒளிஞ்சா உன்னை மேலும் மேலும் பயப்படுத்த தான் நினைப்பாங்க. கொஞ்சம் எதிர்த்து நின்னு பாரு அப்போ புரியும் அவங்க எல்லாரும் எப்படி பயப்படறாங்கன்னு!

அந்த சுஜிக்கிட்ட எவ்வளவு தவறு இருக்கு, அவளே நம்மை வந்து தைரியமா பார்த்து திமிரா பேசல? தப்பு செஞ்சவங்களே தைரியமா நடமாடும் போது, நீ எதுக்கு யாமி பயந்து சாகற? அக்கா உன் கூட தான் இருப்பேன். தைரியமா இரு டா!” என்றாள் யசோதரா.

“புரியுதுக்கா, ஆனா நான் இருந்த நிலையை நினைச்சுப்பார்த்தா உடம்பு எல்லாம் நடுங்குதுக்கா! என்னை ஏதாவது அவங்க பண்ணியிருந்தாங்கன்னா கண்டிப்பா நான் செத்திருப்பேன்! நல்ல வேளை எதுவும் ஆகவிடாம யாதவன் சார் காப்பாத்திட்டார்!”

“அப்படியே ஏதாவது நடந்தாலும் நீ ஏன் சாகணும்? உன்னை நாசமாக்கியவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதை விட்டு விட்டு, செத்துவிடுவாளாம்! உன்னை அப்படியே போட்டேன்னா தெரியும்! இதெல்லாம் லைப் லெசன்! அதுல இருந்து கத்துக்கணுமே தவிர பயந்து சாக கூடாது. இன்னும் உன் லைப்ல நீ கத்துக்கற மாதிரி நிறைய விஷயங்கள் நடக்கத்தான் செய்யும் அதை கண்டு பயப்படாம, ஒதுங்காம, தைரியமா அடுத்து என்ன செய்வது என்று தான் யோசிக்கணுமே தவிர சாகிற எண்ணம் வரவே கூடாது.

இன்னும் ஒரு டூ டேஸ் லீவ் எடுத்துக்கோ! ஆனா இரண்டு நாளுக்கு பிறகு நீ கண்டிப்பா காலேஜ் போற! திரும்பவும் சொல்றேன், எதைக் கண்டும் பயப்படாதே. தைரியமா இரு! கண்டிப்பா நாம அந்த சுஜிக்கும் அவ பிரண்ட்ஸ்க்கும் தண்டனை வாங்கிக்கொடுக்கலாம். அது முடியாம போனாலும், பயந்து சாகாம அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசி.! உன்னோட பயம் உன் அறிவை மழுங்கடிச்சுடும்!” என்று தங்கைக்கு நீண்ட அறிவுரை வழங்கினாள் யசோதாரா.

யாமினிக்கு புரிந்ததோ, இல்லையோ!! தன் அக்காவிற்காக நன்றாக தலையை ஆட்டினாள்.

அவள் மனமுதிர்ச்சியற்ற பருவப்பெண்  குழந்தை!! முதல் முதலாக வந்த பெரிய பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தடுமாறும் குழந்தை.

மனமுதிற்சியற்ற தங்கைக்கும் சேர்த்து யசோதராவே யோசித்து செயல் படவேண்டியிருந்தது!!

யசோதராவிற்கு, தங்கைக்குநேர்ந்த நிகழ்வு மற்றும் அதனால்  தங்கள் பெயர்  இழிவு படுத்தப் பட்டதை  நினைத்து, துக்கம், கவலை மற்றும் வருத்தம் அனைத்தும் இருந்தது  தான். ஆனால்,

 பத்து வயதிலேயே பெற்றவர்கள் எடுத்த முடிவிற்கு ‘சரி!’ என்று சொல்ல வைத்த அவளின் மனமுதிர்ச்சி, தங்கள் மேல் சுயபச்சாதாபம் கொள்ளாமல் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்கவும் வைத்தது. அதற்கு அவள் மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது என்னவோ உண்மை தான்!

தங்கைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை சீக்கிரம் கொடுத்தாகவேண்டிய கட்டாயமும் கூட அவளை விரைந்து நடவடிக்கை எடுக்க  தூண்டியது.!!

நீதிமன்றத்தில் விசாரணைகள் நடந்ததில் சுஜியின் பெற்றவர்களுக்கு சற்று பின்னடைவு தான்..!

அன்றைய விசரணையின் முடிவில் சுஜி மீது இருந்த தவறு கிட்ட தட்ட நிரூபிக்கப்பட்டன. அதற்கும் யசோதரா கொடுத்த தகவலே காரணம்.

சுஜியின் பெற்றவர்கள் இவர்கள் மீது போட்டதென்னவோ மான- நஷ்ட வழக்கு தான் ஆனால், யசோதரா இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக்கொண்டாள் யசோதரா.

சகோதரிகளின் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்காமல் , சுஜியின் பெற்றவர்களால்  தங்கள் பெண் மீது இருந்த புகாரை மிக எளிதாக சகோதரிகளை வைத்தே வாபஸ் வாங்க செய்திருக்க முடியும். அந்தளவிற்கு செய்ய நிறைய நல்லுள்ளங்கள்(!)அவர்களுக்கு பக்கபலமாக இருந்தனர்.அவர்கள் முதலில் அப்படி தான் செய்யத்தான் நினைத்திருந்தனர்.

அவர்களின் கெட்ட நேரமோ இல்லை தங்கள் பெண்ணின் மீது இருந்த அதீத நம்பிக்கையோ(!), என்னவோ? அவர்களை மான நஷ்ட வழக்கு தொடுக்க சொன்னது.சுஜியிடம் மேம்போக்காக நடந்த விஷயத்தை அறிந்தவர்கள், தங்களின் வழக்காடும் திறமைக்கு முன் இதெல்லாம் எம்மாத்திரம்!! என்று தங்களை உயர்வாக நினைத்து, மேற்கொண்டு சுஜியிடம் விசாரிக்காமல் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

யாமினி ஐபோன் 10 என்ற புத்தம் புதிய அலைபேசியை வைத்திருந்தாள். அதன் மீது ஆசைக்கொண்ட சுஜிக்கு, “find my phone” என்ற ஆப்ஷன் இருக்கும் என்றே தெரியாமல், ஐபோனை கைப்பற்றியிருந்தாள்.

காவல் நிலையத்தில் தங்கையின் அலைபேசியை சுஜி வைத்திருக்கிறாள் என்று யசோதரா அளித்திருந்த புகாருக்கு பதிலாக, ‘நான் எடுக்கவேயில்லை!’ என்று காவல் நிலையத்தில் அனைவரின் முன்பும் உறுதியாக கூறியிருந்த சுஜியை நம்பி தான், இந்த சகோதரிகளின்  மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தனர் சுஜியை பெற்ற நியாயவான்கள்.

சுஜியை குறுக்குவிசாரணை செய்யும்போது கேட்ட ‘யாமினியின் அலைபேசி எங்கே?’ என்ற கேள்விக்கும், ‘நான் எடுக்கவில்லை! எனக்கு தெரியாது!’ என்ற பதிலாக கொடுத்த சுஜியைப் பார்த்த வழக்கறிஞர், நீதிபதியின் அனுமதியோடு யசோதராவின் அலைபேசியில் இருந்து ‘find my phone’ என்ற பட்டனை அழுத்தி அதில் யாமினியின் மொபைலை தேடும் ஆப்ஷனை தொட்டதும் காட்டிய ‘play sound’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தார்.

நீதிமன்றத்தில் திடீர் என்று அலைபேசியின் அலறல் கேட்டது. சுஜியின் கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து நீதிபதியிடம் கொடுத்தவர், யாமினி போன் தான் அது என்பதையும் நிருபித்தார் யசோதராவின் வழக்கறிஞர்.

யாமினி தன்னுடைய ஆப்பிள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை சுஜி உள்ளிட்ட சில நட்புக்களுக்கு அளித்திருந்தாள் அதில் இருக்கும் ஆபத்து புரியாமல்!! அதனை கொண்டு தான் போனை எளிதாக உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்தாள் சுஜி.

ஆப்பிள் போனுக்கு ஆசைப்பட்ட சுஜிக்கு அதை உபயோகப்படுத்தும் டெக்னலாஜியில் இருந்த ஞானக் குறைவே, அன்று அவளுக்கு பாதகமாக முடிந்தது.

அடிப்படையே ஆட்டம் கண்டதால் அதன் பிறகு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் மாற்றி மாற்றி பதில் அளிக்க ஆரம்பித்தாள் சுஜி. தடுமாற்றத்துடன் அவள் அளித்த பதில்களே அவளிடம் தவறு இருக்கிறது என்று நிரூபணம் செய்தது.

யாமினியின் சிம் கார்டையும் சுஜியிடமிருந்து எடுத்தனர்.

யாமினியின் அலைபேசி மற்றும் சிம்கார்டை, தங்கள் பெண்ணின் கைப்பையிலிருந்து எடுத்த பிறகு வழக்கை எப்படி திசை திருப்புவது என்று புரியாமல் இருந்தனர் சுஜியைப் பெற்றவர்கள்.

இவர்களுக்கு சுஜியின் திருட்டு தனம் முன்பே தெரிந்திருந்தால், ஆதாரங்களை அழித்து, தங்களின் வாத திறமையை காட்டி, தங்கள் பெண் மீது சுமத்தியிருந்த குற்றத்தையும் போக்கியிருப்பர்.

ஆனால் இவர்களின் முதல் தோல்வி யசோதராவின் மூலம் கிடைக்கவேண்டும் என்ற விதி இருக்கிறதே!! அதனால் அவர்களின் வாத திறமை அன்று எடுபடவேயில்லை.

அன்றைய விசாரணையில் சகோதரிகளின் மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, மேலும், சுஜி மீது கொடுத்த புகார்களை விசாரித்து இரு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தகவல் அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்.

சுஜியும் பதின்பருவ பெண் தானே! வளர்ப்பு மற்றும் சேர்க்கை சரியில்லாத காரணத்தால் தான் அவள் வழித்தடம் மாறி சென்றதே.. சுஜியைப் போன்று இருக்கும் நட்புக்களை நல்வழி படுத்துவது தானே நல்ல நட்புக்கு அடையாளம். அதை தான் யசோதரா தங்கை யாமினியை செய்ய சொன்னாள். ஆனால் நல்லது என்று நினைத்து சொன்ன செயலாலே இப்படி ஒரு மோசமான அனுபவங்கள் கிடைக்கப் பெறும்  என்று தான் யசோதரா நினைக்கவேயில்லை.

‘அனுபவங்கள் எப்போதுமே நல்லப் பாடத்தை தான் கற்றுத் தருகிறது. துஷ்டனை திருத்தி நல்வழி படுத்த நினைக்காமல் தூர விலகி செல்வது தான் சரியோ!’ என்று யசோதராவை யோசிக்கவும் வைத்திருந்தது இந்த அனுபவங்கள்.

இதையெல்லாம் யோசித்தப் படியே நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த யசோதரா மற்றும் மனதில் இருக்கும் பயம் குறையாமல் தமக்கையின் கையைப் பிடித்தபடியே நடந்து வந்துக் கொண்டிருந்த யாமினியையும் குரோதத்துடன் பார்த்திருந்தனர் சுஜியைப் பெற்றவர்கள்.

தங்களின் தோல்விக்கு காரணமான இந்த சகோதரிகளை வெட்டிப் போடும் வன்மத்துடன் இருந்தது அந்தப் பார்வை.!!

 

 

Advertisement