Advertisement

அத்தியாயம் : 13

யதீந்திரன் யாமினியை மிகவும் பொறுப்பாகவே தான் இந்த மூன்று நாட்களாக பார்த்துக்கொள்கிறான். அவனின் குடும்பமும் அதற்கு உறுதுணையாக இருந்தது யாமினிக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

இரவெல்லாம் மருத்துவமனையில் இருந்த யாமினியையும், யதீந்திரனையும் வீட்டிற்கு செல்ல பணித்து விட்டு யசோதராவிற்கு துணையாக யாதவன் இருந்தான்.

வீட்டிற்கு வந்த அடுத்த ஒருமணி நேரத்தில் மீண்டும் மருத்துமனைக்கு கிளம்பிக்கொண்டிருந்த யாமினியிடம் ரோஜா பேச்சுக்கொடுத்தாள்.

“யாமி, கிளம்பிட்டியா?”

“ம்ம்.!!”

“என்னாச்சும்மா? அதான் அக்கா உன்கூட பேசினா இல்ல! சீக்கிரமே வீட்டிற்கு வந்துடுவா கவலைப்படாத.!”

“….”

“யாமி!” என்று அவளின் தோளை தொட்டு திருப்பினாள் ரோஜா.

“ரோஜாக்கா சொல்லுங்க.!” என்றவளை அமைதியாகப் பார்த்தாள் ரோஜா.

“அக்காக்கு சீக்கிரம் சரியாயிடும். கவலைப்படாம சாப்பிட வா.!”

“சரி ரோஜாக்கா.” என்ற யாமினி தலைமுடிக்கு கிளிப்பை மாட்டினாள் யாமினி.

மூன்று நாட்களாக காலையில் இரண்டு மணி நேரம் இருக்கும் யாமினி, முடிந்தவரை ரோஜாவிற்கு சமையலறையில் உதவும் அவள், இன்று மருத்துவமனையிலிருந்து வந்ததிலிருந்தே ஏதோ யோசனையாக இருப்பதைக்கண்டு தான் ரோஜா அவளிடம் பேச வந்தாள்.

யாமினி என்ன தான் உதவிகள் செய்தாலும் பல சமயங்களில் அவளின் குழந்தைத் தனம் வெளிப்பட்டுவிடும்.

அந்த குழந்தைமையில் யாமினியின் அழகு பன்மடங்காக இருந்ததைப் பார்த்து யுவராணி அதிசயித்தாள். ‘தீராண்ணா இவளிடம் மயங்கியதில் தவறேயில்லை!’ என்று மனதினுள் சொல்லிக்கொண்டாள் யுவி.

தலையை லேசாக சாய்த்து, கண்களை சுருக்கி,  உதடுகளை குவித்து ரோஜாவிடம் செல்லமாக பேசி விளையாடும் யாமினியையதீந்திரன் பார்க்கும் போதெல்லாம் அவனின் மனதினுள் காதல் பொங்கி ததும்பியது. தன் மனதை யாமினியிடம் வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினான்.

யாமினியோ அவன் உள்ளம் படும் பாடு அறியாமல், அவனிடம் வாய் ஓயாமல் யசோதராவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்.

‘அக்கா தன்னை விட்டு செல்லப் போகிறாளே!’என்ற ஆதங்கமே அவளின் பேச்சில் வெளிப்படும்.

யாமினியின் பேச்சை கேட்கும்போதெல்லாம், ‘யசோதராவை எப்படியாவது வேற்றுக்கிரத்திற்கு செல்லாமல் தடுக்க வேண்டும்.’ என்ற உறுதியே யதீந்திரனின் மனதினுள் எழும். கூடவே, யசோதரா யாமினியை தனியே விட்டு செல்ல மாட்டாள். அது அவளால் முடியாது என்றஉறுதியான நம்பிக்கையையும் கொண்டிருந்தான்.

தன் மனதை யாமினியிடம் வெளிப்படுத்த தக்க நேரத்திற்காக காத்திருந்தான் யதீந்திரன்.

“யாமி சாப்பிடும்மா. இன்னிக்கு என்ன இவ்வளவு யோசனை?”

“ம்ம்!” என்ற பதில் மட்டுமே யாமினியிடம் இருந்து வந்தது.

“ஹோய் யாம்ஸ்!! என்னாச்சு?” என்ற யுவராணி, யாமினியின் தோளை இடித்தாள்.

“என்ன யுவி?” என்ற யாமினியின் கேள்விக்கு யுவராணி , “நீதான் சொல்லணும். அண்ணி என்ன யோசனைன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. நானும் அதை தான் கேட்டேன். நீ ஏன் இப்படி யோசிச்சுக்கிட்டே இருக்க?”

“அது வந்து யுவி, யதுக்காவோடஹெல்த், எக்ஸாம்ஸ், என்னோட காலேஜ் அப்புறம் அக்கா என்னை விட்டுட்டு போயிடுவாளோங்கிற பயம் இப்படி எல்லாமே தான் என் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு. அக்கா இல்லாம என்னால எதுவுமே செய்யமுடியலங்கிறதை விட எதுவுமே எனக்கு தெரியலங்கிறது தான் உண்மை!! பயமா இருக்கு!!

யதீந்திரன் சார், நீங்க எல்லாரும் இல்லையென்றால் இந்த நிலைமையை நான் எப்படி சமாளிச்சுருப்பேன்னு நினைச்சாலே பயமா இருக்கு!! அக்கா கூடவே எப்பவும் இருந்திடனும்ன்னு தோணுது!! இப்போக்கூட பாருங்க யுவி, யதுக்கா கண்ணு முழிச்சு ஹாஸ்பிடல்க்கு பில் எவ்வளவு கட்டின?ன்னு கேட்கிற வரைக்கும், பில் கட்டியாச்சா? எவ்வளவு?ன்னு நான் யதீந்திரன் சார் கிட்ட கேட்கவேயில்லை. அப்படி எனக்கு கேட்கவும் நிஜமா தெரியல! ரொம்ப கில்டியா பீல் செஞ்சேன். எற்கனவே என்னால உங்க எல்லாருக்கும் தொந்தரவு இதில இப்படி செலவு வேற வச்சிட்டேனேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு யுவி.!” என்ற யாமினி யதீந்திரனிடம் திரும்பி,

“சாரி சார் இன்னிக்கு உங்க பணத்தை திருப்பி கொடுத்திடறேன். பட் அதுக்கும் நீங்க தான் ஹெல்ப் செய்யணும். யதுக்கா பேங்க்லேர்ந்து வித்ட்ரா செய்ய சொல்லியிருக்கா. எனக்கு பேங்க் போக பயமா இருக்கு. நீங்க கூட்டிக்கிட்டு போறீங்களா ப்ளீஸ் சார்.!!”

“ஓ!! பேங்க்க்கு தனியா போவதற்கு தான் இப்படி யோசிச்சுட்டு இருந்தியா யாம்ஸ்? தீராண்ணா அதெல்லாம் கூட்டிக்கிட்டு போவாங்க! இந்த சின்ன மூளையை கசக்காம சாப்பிட்டு விட்டு ஹாஸ்பிடல் கிளம்பற வழிய பாரு. இந்த மூஞ்சி எல்லாம் உனக்கு செட் ஆகவேயில்லை. கொஞ்சம் சிரி  யாம்ஸ்.!!” என்றாள் யுவராணி.

யுவராணிக்கு எந்த பதிலையும் கொடுக்காமல் யதீந்திரனையே பார்த்திருந்தாள் யாமினி.

அவளையே பார்த்திருந்த ரோஜா, “யாமிம்மா, இதெல்லாம் தப்பே இல்ல, சீக்கிரமா கத்துக்கலாம்டா, உன் யதுக்கா கூட உன்னோட குழந்தை தனம் மாறாம கொஞ்சநாள் நிம்மதியா இருக்கட்டுமேன்னு தான் எல்லா பொறுப்பையும் பார்த்துக்கிட்டா!! எல்லாருமே எப்பவுமே எதுவுமே சரியா செய்ய மாட்டாங்க. நாம எல்லாம் சாதாரண மனுஷங்க தானே, நாம செய்யற தப்புலேர்ந்து தானே கத்துக்க முடியும். இப்போ நீயே சொல்லு, அந்த சுஜி மாதிரி உள்ளவங்க கிட்ட திரும்பவும் மாட்டிப்பியா? இல்லைல்ல!

அது மாதிரி தான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் கத்துக்கலாம். உனக்கு வயசு இருக்கு டா. அனுபவங்கள் தான் நமக்கான மெச்சூரிட்டியை கொடுக்கும். உன்னை சுத்தி நடக்கறதை கொஞ்சம் கவனிச்சாலே உன்னால எல்லாத்தையும் ஈஸியா கத்துக்க முடியும். உன் யதுக்கா கூடவே நீ இருக்க முடியுமா? யோசிச்சு பாரு. மார்ஸ் போறாங்க, இல்லை போகல அது வேற விஷயம்! ஆனா, யசோதராக்கு கல்யாணம் நடக்கும், அடுத்து உனக்கும் கல்யாணம் நடக்கும்.

அப்போ உங்க ரெண்டு பெரு வாழ்க்கையுமே தனி தனியாகத் தானே இருக்கும். மார்ஸ் போனா உன் யதுக்காவை பார்க்க முடியாது. பட் கல்யாணம் ஆனா கண்டிப்பா பார்த்து பேசிக்கலாம். நல்லது கெட்டதுல கலந்துக்கலாம். இப்படி எவ்வளவோ ‘லாம்’ கள் இருக்கு. அதுக்கு எல்லாம் டைம் இருக்கு யாமி. காலம் உனக்கு நல்ல பாடங்களை கத்து தரும் டா. இப்போ எதையும் யோசிச்சு குழப்பிக்காம ஹாஸ்பிடல் கிளம்பு. ஈவினிங் மாமாவோட(யாதவன்) நானும், யுவியும் வந்து உன் யதுக்காவை பார்க்கிறோம்.!!” என்று நீளமாக பேசினாள்.

“ரோஜாக்கா நீங்க அப்படியே என் யதுக்கா மாதிரியே பேசறீங்க!! உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு!!” என்றவாறே ரோஜாவை கட்டிக்கொண்டு அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தாள் யாமினி.

அதைப்பார்த்த யுவராணி, “யாம்ஸ், நீ செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. அவன் அவன் தனக்கு கிடைக்குமான்னு ஏங்கிட்டு இருக்கும்போது, என்னோட அண்ணிக்கு முத்தம் தரியா நீ?” என்றவளை புரியாமல் பார்த்தாள் யாமினி. பின் ஏதோ புரிந்தவளாக யுவராணியை கட்டிக்கொண்டு அவளின் கன்னத்தில் தன்னுடைய இதழ்களைப் பதித்தாள்.

“யுவி உங்களுக்கும் முத்தம் வேணும்ன்னா கேளுங்க கொடுக்கிறேன். எனக்கு உங்களையும் பிடிச்சு தான் இருக்கு. ஆனா, என்னோட ரோஜாக்காக்கு கொடுக்கும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க.!”

“தோடா, அப்படியே டிஸ்டர்ப் பண்ணிட்டாலும்!” என்று நொடித்த யுவராணி, கேலியாக யதீந்திரனைப் பார்த்தபடி, “அப்போ யார் கேட்டாலும் முத்தம் தருவேன்னு சொல்றியா யாம்ஸ்?” என்றாள்.

தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த யதீந்திரனுக்கு புரையேறியதால், இருமியபடியே தங்கையை செல்லமாக முறைத்தான்.

ரோஜாவும் புன்னகைத்தபடியே யுவராணியின் தோளில் செல்லமாக அடித்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள்.

“ஹா.ன்!! அதெல்லாம் நான் யார் கேட்டாலும் கொடுக்க மாட்டேன். என் அக்கா எனக்கு குட் டச், பேட் டச் சொல்லி கொடுத்திருக்காங்க யுவி!!” என்றவளைப் பார்த்து சற்று அதிர்ந்து பின் சிரித்தாள் யுவராணி.

‘குமரியாக வளர்ந்திருக்கும் குழந்தை இவள்.! இது வரை தாயாக யசோதரா இருந்தாள். இனிமேல் தீராண்ணா இவளுக்கு தாய் ஆகவும், தந்தையாகவும் இருப்பார்.!’ என்று மனதினுள் பேசிய யுவராணி,

“குட்யாம்ஸ்.!! குட் டச் பேட் டச் எல்லாம் தெரிஞ்சு இருக்கே. அப்போ எங்க யாம்ஸ் வளர்ந்துட்டாங்க.சீக்கிரமே ரொம்ப பொறுப்பா மாறிடுவாங்க!!” என்று யாமினியின் கன்னத்தை பிடித்து நெட்டி முறித்தாள் யுவராணி.

அதில் சற்று வெட்கிய யாமினி, “போங்க யுவி, எப்பவும் என்னை கிண்டல் செஞ்சுக்கிட்டே இருக்கீங்க!!” என்றபடியே ரோஜாவிடம் சென்றாள்.

சமையல் அறையில் இருந்த ரோஜா தன் கணவன் யாதவனுடன் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து திரும்பவும் யோசிக்க ஆரம்பித்தாள் யாமினி.

ரோஜா யாமினியை திரும்பிப் பார்த்து, ‘என்ன யோசனை?’ என்று சைகையாலே கேட்டாள். ரோஜாவிற்கு ‘ஒன்றுமில்லை.!’ என்பதாக தலையாட்டிவிட்டு யுவராணியிடம் வந்தாள்.

“அச்சோ திரும்பவும் என்ன யாம்ஸ்?”

“யுவி, யதுக்காக்கு கல்யாணம் செஞ்சு வச்சா இங்கயே இருப்பாங்க இல்ல?”

“ஆமாம் யாம்ஸ். இந்த ஊருலே மாப்பிள்ளை அமைஞ்சா இங்கயே இருப்பாங்க. அப்படியே வெளி ஊரோ இல்லை வெளி நாடாக இருந்தாக் கூட பார்த்து பேசிக்கமுடியும்.”

“அப்போ கல்யாணம் செஞ்சா அக்கா இங்கயே இருப்பா?” என்று திரும்ப திரும்ப அதையே கேட்டாள் யாமினி.

“என்ன யாம்ஸ் திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கிட்டு! இப்போ என்னமோ உங்க அக்காவுக்கு மாப்பிள்ளை ரெடியா இருக்கிற மாதிரி!! போ யாம்ஸ் கிளம்பு மணி ஆச்சு இல்ல.!!” என்றாள் யுவராணி.

“மாப்பிள்ளை?” என்ற யாமினி அங்கிருந்த யதீந்திரனை கேள்வியாகப் பார்த்தாள்.

அதில் அரண்ட யதீந்திரன், ‘இவள் ஏதாவது ஏடாகூடமாக கேட்கும் முன்னே நம்ம காதலை சொல்லிவிட வேண்டும். அதுவரை இவளிடம் கொஞ்சம் பேச்சை குறைத்துக்கொள்ள வேண்டும்.!’ என்ற முடிவுடன் எழுந்தான் யதீந்திரன்.

“என்ன யாம்ஸ் ‘மாப்பிள்ளை!’ ன்னு எதுக்கு தீராண்ணாவைப் பார்க்கிற?” என்ற யுவராணியை கோபமாகப் பார்த்தான்.

‘என் அக்காவை கல்யாணம் செய்துக்கொள்கிறாயா?’ யாமினி கேட்டுவிடுவாளோஎன்று எற்கனவே அவன் பயந்துக்கொண்டிருக்கிறான். இதில் தங்கை வேறு அவளுக்கு எடுத்துக் கொடுக்கவும் யுவியின் மீது கோபம் தான் வந்தது.

யுவிக்கோ ஏதாவது கலகம் செய்தாவது தன் தீராண்ணாவின் காதலை யாமினிக்கு புரியவைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அதனால் அண்ணனின் கோபத்தை கணக்கில் கொள்ளாது,

“என்ன யாம்ஸ், மாப்பிள்ளை ரெடியா?” என்றாள் யுவராணி.

“யுவி!!!” என்று பல்லைக் கடித்தான் யதீந்திரன்.

யதீந்திரனின் சத்தத்தில் வெளியே வந்த ரோஜா ‘என்ன?’ என்பதாக யுவராணியைப் பார்த்தாள்.

“அண்ணி, யசோதராக்கு ‘மாப்பிள்ளை’ என்று நம்ம யாம்ஸ் சொன்னா!! அதான் யாருன்னு கேட்டுக்கிட்டு இருக்கேன். அண்ணாக்கு ஏதோ டென்ஷன் போல, அதான் கொஞ்சம் சவுண்ட் ஜாஸ்தி ஆயிடுச்சு.”

“யுவி!!” என்று அழுத்தமாக சொன்ன ரோஜா திரும்பி யாமினியைப் பார்த்தாள்.

“என்ன யாமி?” என்று கேட்ட ரோஜாவிற்கு

“அது ரோஜாக்கா, சித் சித்தார்த், சித்தார்த்தன்.!” என்றாள் யாமினி சம்பந்தமேயில்லாமல்..

 

அத்தியாயம் : 14

யசோதரா யாதவனிடம் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தாள். குடும்பத்தில் மூத்த அண்ணனுடன் கலந்துரையாடுவது போன்று இருந்தது. யாதவனிடம் பேசுவது அவளின் மனதிற்கு இதமாகவும் இருந்தது.

யதீந்திரனைப் பற்றியும், அவனின் காதலையும் யசோதராவிடம் கூறிவிடுமாறு ரோஜா யாதவனிடம் ஏற்கனவே கூறியிருந்ததால், யாதவனும் யசோதராவிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான்.

யதீந்திரனும், தானும் ஆசிரமத்தில் வளர்ந்த கதையை கூறியவன், யதீந்திரனின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களையும் பகிர்ந்து, அதனால் அவனுக்கு இருக்கும் கோபத்தையும் சுருக்கமாக சொல்லி முடித்தான் யாதவன்.

சில நிமிடங்கள் இடைவெளிவிட்டு யதீந்திரனுக்கு யாமினி மீது இருக்கும் நேசத்தையும் சொன்னான். 

குறுக்கீடு இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்த யசோதராவிற்கு யதீந்திரனிடம் குறை காண முடியவில்லை தான். ஆனாலும் தங்கையின் நல்வாழ்விற்காக யோசிக்க அவளுக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

“யாதவன், நான் கொஞ்சம் யோசிச்சு தான் முடிவு சொல்ல முடியும். இப்போ என் மைன்ட் புல்லா என்னோட எக்ஸாம்ஸ் தான் இருக்கு. நாலு நாள் கழிச்சு என்னோட எக்ஸாம்ஸ் ஸ்டார்ட் ஆகுது. யாமியையும் காலேஜ் போக சொல்லணும். அவளுக்கும் மியூசிக் கான்செர்ட் இருக்கு. அதுக்கு நடுவுல சுஜி கேஸ் வேற.! பிசிக்கலி அன்ட் மென்டலி ஐ’ம் வெரி டையர்ட்!! ஐ நீட் சம் மோர் டைம்.!! நாம பேசினதைப் பத்தி யதீந்திரனுக்கு தெரிய வேண்டாம்.” என்றவளுக்கு காலில் வலி தெரிந்ததால் பேச்சை நிறுத்திவிட்டு கண்ணை மூடி வலியை தாங்கிக்கொண்டாள்.

“ரொம்ப வலிக்குதா யசோதரா? சிஸ்டர்ஸ் கூப்பிடவா?”

‘வேண்டாம்!’ என்பதாக தலையை ஆட்டினாள் யசோதரா.

“தீரா லைப்ல நடந்ததை இதுவரைக்கும் யார் கிட்டயும் நாங்க(யாதவன் மற்றும் யதீந்திரன்) ஷேர் பண்ணிக்கிட்டது இல்ல. ரோஜாவிற்கே இப்போ தான் தெரியும். இன்னும் எங்க தங்கை யுவிக்கு கூட தெரியாது. அவளுக்கு அவ பிறப்பை குறித்த இரகசியம் தெரிய கூடாதுன்னு தீரா முடிவு செஞ்சுட்டான். எனக்கும் அது தான் சரின்னு பட்டது.  இப்ப வரைக்கும் அவளுக்கு தெரியாது இனிமேலும் தெரிய விடமாட்டோம்.” என்ற யாதவனை யோசனையாக பார்த்தாள் யசோதரா.

“என்ன யசோதரா? எதையோ சொல்ல நினைக்கறீங்க போல?”

“கேட்கணும் தான், ஆனா.” என்றவளை குறுக்கீட்டான் யாதவன்.

“நீங்க ரெஸ்ட் எடுங்க யசோதரா!! நாம பிறகு பேசலாம். உங்க முகத்திலேயே உங்களோட வலி தெரியுது. இந்த டைம்ல நான் பேச்சை ஆரம்பிச்சுருக்கவே கூடாது. சாரி யசோதரா.!! பட் தீரனின் காதலை நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு தான் நான் பேச ஆரம்பிச்சேன். யாமினி எங்க பாதுக்காப்புல இருக்கும்போது, தீரனின் காதலை நீங்க தெரிஞ்சுக்கறது தான் நியாயம். ரோஜாவும் நானும் உங்க கிட்ட பேசறதுக்காக ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு இருந்தோம். உறவுகளின் அருமை இல்லாதவர்களுக்கு தானே தெரியும்.!” என்றான்.

“சாரியெல்லாம் பெரிய வார்த்தை யாதவன். நீங்க செய்யற உதவிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. யாமினி குறித்து கொஞ்சம் கவலை மற்றும் பயம் இருந்தது யாதவன். பட் உங்க பாதுக்காப்புல அவ இருக்கிறது எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு. நீங்க சொல்லுவது கரெக்ட் தான், உறவுகளின் அருமை இல்லாதவர்களுக்கு தான் தெரியும்.!!

அந்த உறவுகளின் புறக்கணிப்புகளையும் நாம அவசியம் தெரிந்துக்கொள்ளவேண்டும் யாதவன். அவர்களின் புறக்கணிப்பு நமக்கு சில சமயங்கள் பலவீனத்தை கொடுத்தாலும்,  பல நேரங்கள்ல அதுவே நமக்கு பலமாகவே இருக்கும். மனசுல ஒரு வைராக்கியத்தை கொடுத்து அவங்க முன்ன நாம நிமிர்ந்து நிக்கணும்ன்னு தோணும்.!! என் அனுபவத்துல சொல்றேன் நீங்க யுவராணிக்கு எல்லா விஷயத்தையும் சொல்லிடறது அவளுக்கு நல்லது. அவங்களுக்கு நிறையவே ஸெல்ப்கான்பிடென்ட்ஸ் இருக்கு. கண்டிப்பா அவங்க இந்த விஷயத்தை நல்ல விதமாகப் புரிந்து, வாழ்க்கைல மேல மேல போய்ட்டே இருப்பாங்க. சீக்கிரம் சொல்லிடுங்க யாதவன்.” என்ற யசோதராவின் குரலில் வலியின் அசதி தெரிந்தது.

“ரோஜாவும் இதேயே தான் சொன்னா யசோதரா. யுவி கல்யாணத்துக்குள்ளயாவது அவ கிட்ட சொல்லிடுங்கன்னு ரோஜா சொன்னா. வார்த்தைகள் தான் வேற வேறயே தவிர சொன்னது அதே தான்.!” என்று புன்னகைத்தான் யாதவன்.

யாதவனின் அலைபேசி அடிக்க, “ரோஜா தான் கால் செய்யறா!!” என்றவாறே அலைபேசியை எடுத்து காதுகளுக்கு கொடுத்து வெளியே சென்றான் யாதவன்.

தனிமையில் இருந்த யசோதரா தங்கையை குறித்து சிந்திக்க தொடங்கினாள்.

“சித்தார்த்தா?” யாரு யாமிம்மா அது?” என்று கேட்டாள் ரோஜா.

யாமினியோ ரோஜாவை விட்டு யதீந்திரனையே பார்த்திருந்தாள்.

‘இவ எதுக்கு இப்படி வெறிச்சு வெறிச்சு தீராண்ணாவப் பாக்குறா?’ அண்ணா மூஞ்சியை பார்த்தாலே சிரிப்பா இருக்கு. இந்த கொழந்தைப் புள்ள ஏதாவது எக்குத்தப்பா கேட்டுடுமோன்னு பயந்து சாகுறது அது கண்ணுலேயே தெரியுதே!! இதெல்லாம் இந்த யாம்ஸ்க்கு புரியனுமே!’ என்று மனதினில் பேசிக்கொண்டிருந்தாள் யுவராணி.

யாமினியின் மனநிலையை ரோஜாவால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒருவேளை யசோதராவிடம் மனம் விட்டு பேசுவாளோ என்று நினைத்தவள், “யாமிம்மா, சித்தார்த்தை பத்தி அப்புறமா பேசலாம். இப்போ யதுக்கா உனக்காக வெயிட் செஞ்சுக்கிட்டு இருப்பா!” என்று யாமினியிடம் பேசிய ரோஜா திரும்பி, “தீரன் நீங்க அவளை கூட்டிக்கிட்டு ஹாஸ்பிடல் கிளம்புங்க. நிதானமா எல்லாத்தையும் பேசிக்கலாம்.!” என்று அந்த ‘நிதானத்திற்கு’ ஒரு அழுத்தத்தை கொடுத்தாள் ரோஜா.

“சரிக்கா நாங்க கிளம்பறோம்!!” என்று முதல் ஆளாக வெளியே வந்தாள் யாமினி.

“தீராண்ணா நம்ம யாம்ஸ், உன்னை அவ அக்காவை கல்யாணம் செய்ய எல்லாம் சொல்ல மாட்டா தான், இருந்தாலும்” என்று சில நொடி இடைவெளி விட்ட யுவராணி தொடர்ந்து, “எதுக்கும் உன்னோட இஷ்ட தெய்வமான முருகனுக்கு மொட்டை போடறதா வேண்டிக்கோ.!!  யாம்ஸ் எதுவும் கேட்ககூடாதுன்னு!” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தபடியே கூறிய தங்கையை முறைத்தான் யதீந்திரன்.

“என்ன முறைப்பு? முடி முக்கியமா, இல்லஉன்னோட யமி முக்கியமா?” என்று சிரித்தாள் யுவி.

யுவியின் தலையை லேசாக கலைத்துவிட்டு வண்டியை எடுக்க வெளியே சென்றான் யதீந்திரன்.

சமயோசிதமாக காதுகளில் ஹெட்போனை அணிந்த யதீந்திரனைப் பார்த்து பெரிதாக சிரித்தாள் யுவராணி. ரோஜாவின் முகத்திலும் பெரிதான புன்னகை தோன்றியது.

ரோஜாவிடமும், யுவியிடமும் கண்களால் விடைபெற்று வண்டியில் அமர்ந்தாள் யாமினி.

அவளுக்கு யதீந்திரனிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. எதையோ பேச நினைப்பது அவளின் கண்களிலேயே கண்டு கொண்டான்யதீந்திரன்.

மருத்துவமனை வரும் வரை யாமினியால் அவனிடம் பேச முடியாமல் போனது.

காதுகளில் ஹெட்போன் இல்லாததால், “சார், எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் செய்யனுமே!” என்று நேரடியாக கேட்டாள் யாமினி.

“ஹெல்ப்பா!!”

“ம்ம் ஆமா, என் அக்கா இங்கயே என் கூடவே இருக்கனும்ன்னு ஆசை. அதுக்கு உங்க ஹெல்ப் கண்டிப்பா எனக்கு வேணும்.”

“யாமினி..!! நான் உனக்கு உதவ ரெடி தான் பட்!!” என்றவனை இடையிட்டாள் யாமினி.

“நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யறேன் சார்.” என்று கூறியவளை கூர்ந்துப்பார்த்தான் யதீந்திரன்.

“கண்டிப்பா நான் என்ன சொன்னாலும் செய்வியா?”

“கண்டிப்பா சார்!!”

“சரி அப்போ என்னை கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொல்லு யாமி!!”

“ஹா..ன் !! என்னது?” என்று விழிகளை விரித்தாள் யாமினி.

“எஸ் யாமி! ஐ லவ் யூ!! என் காதல இப்படி சொல்லுவேன்னு எதிர்பார்க்கவேயில்லை. நீ எங்க உன் அக்காவை என்னை கல்யாணம் செஞ்சுக்க சொல்வியோன்னு எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. அதான் இப்பவே சொல்லிட்டேன்.” என்று தன்னவளிடம் மனம் திறந்தான் யதீந்திரன்.

யாமினி பேச்சு வராமல் முழித்து பார்த்தாள். அவளுக்கு இதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டுமென்றே தெரியவில்லை. அதனால் சற்றே பயத்துடன் யதீந்திரனைப் பார்த்தாள்.

“யாமி எதுக்கு இப்படி பயந்து என்னை பார்க்கற? மனசு வலிக்குது யாமி!! ப்ளீஸ் இப்படி பார்க்காத!! உங்க அக்கா கூட இருந்தா எப்படி நீ பாதுகாப்பா உணர்வியோ அதே மாதிரி  என்னால உன்னை உணர வைக்கமுடியும். என் காதலை புரிஞ்சிக்கோ யாமி!”

“….”

“யாமி ப்ளீஸ் ஏதாவது பதில் சொல்லு!!” என்ற யதீந்திரனின் குரலில் நடுக்கம் இருந்தது.

“சார் எனக்கு..” என்று ஏதோ சொல்ல வந்த யாமினியை யாதவனின் குரல் தடுத்தது.

“யாமிம்மா அக்கா உனக்காக வெயிட் செய்யறாங்க. இங்க என்ன செய்யறீங்க ரெண்டுபேரும்?” என்றான் யாதவன்.

யாமினி யதீந்திரனுக்கு பதிலேதும் தராமல் யசோதராவை பார்க்க சென்றாள்.

யதீந்திரனின் சோர்ந்த முகத்தைப் பார்த்த யாதவன், “என்னாச்சுடா தீரா?”  என்றான்.

‘ஒன்றுமில்லை’ என்பதாக யாதவனிடம் தலையாட்டிய யதீந்திரன், “யாதவா நான் யசோதரா கிட்ட பேசணும். டென் மினிட்ஸ் தான் டா. அதுவரை யாமினியை வெளியே கூட்டிக்கிட்டு போ.”

“இப்போ என்ன அவசரம் தீரா?”

“நான் யாமி கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டேன் யாதவா!! யாமி பதிலே சொல்லல! யாமி யசோதரா கிட்ட சொல்றதுக்கு முன்னாடி நானே அவங்க கிட்ட பேசலாம்ன்னு நினைக்கிறேன்.!!”

“ஏண்டா அவசரக்குடுக்கை, இப்போ இது தான் ரொம்ப முக்கியமா? அறிவுகெட்டவனே!! உள்ள வா!! போய் யசோதரா கிட்ட உன்னை புரிய வை. யாமினியை நான் பார்த்துக்கிறேன்.”

பொது இடத்தில் தன் காதலை யாமினியிடம் வெளிப்படுத்தியிருக்கிறோம் என்றே உணராமல், இதனால் ஏற்படப் போகும் ஆபத்தும் புரியாமல் யசோதராவை சந்திக்க யாதவனுடன் சென்றான் யதீந்திரன்.

இவர்களையே குரோதமாக பார்த்துக்கொண்டிருந்தனர் சுஜியும்  அவளைப் பெற்றவர்களும்.

Advertisement