Advertisement

அன்று நாள் முழுவதுமே வலி விட்டு விட்டு எடுக்க, காலையில் பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப் பட்டவள் மாலை வரை அங்கேயே தான் இருந்தாள். மீரா ரத்னா மதியம் போல வந்து விட்டனர்.

அகிலாண்டேஸ்வரிக்கு துளசியை அவளின் அம்மாவிடம் ஒப்படைத்த பிறகு தான் சற்று ஆசுவாசமாகியது.

“நான் அம்மாவை பார்க்கணும்” என்று மீனாக்ஷி வேறு படுத்தி எடுக்க,

அவளை பார்ப்பதற்கே திருவிற்கு நேரம் போனது. துளசியை வேறு குழந்தை பிறந்த தான் பார்க்க முடியும் என்று சொல்லி விட்டனர்.

வசுமதி, மேகலா, சாரதா, சித்ரா, ராதா, அகிலாண்டேஸ்வரி, ரத்னா, மீரா, ஷோபனா, வெங்கடேஷ், பிரசன்னா என்று பெரிய கும்பல் அங்கே இருந்தனர்.

உறவினரின் ஹாஸ்பிடல் என்பதால் யாரும் ஒன்றும் சொல்லவும் முடியவில்லை.

“ஒரு ரெண்டு நாள் இவங்கள பொறுத்துக்கங்க” என்று டாக்டரே அவரின் ஸ்ஃடாப்களிடம் சொல்லியிருந்தார்.

ஜே ஜே என்று அத்தனை பெண்கள்.

அவர்களை உணவிற்கு அழைத்து போவது அவர்களின் தேவையை பார்ப்பது என்று வெங்கடேஷும் ஷோபனாவும் அவ்வளவு பிசியாக இருந்தனர்.

மீரா முழுவதுமாக துளசியுடன் ப்ரசவ அறையின் உள்ளேயே இருக்க, திரு  தன்னை சமாளித்துக் கொண்டான். யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை. இன்னும் ஒரு பெண்ணும் வலி எடுத்து அங்கே உள்ளே இருந்ததால்.  

மீரா கூட இருந்தாலும் திருவின் மனதினில் ஒரு பயம் ஒரு கவலை அதிகமாகிக் கொண்டே இருக்க, துளசியை பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் வெகுவாக தாக்கியது.  

ஒரு வழியாக மாலை ஆறு மணிக்கு தான் பிறந்தான் அவனின் மகன்.

முன்பே ஒரு பெண் என்பதால், இப்போது ஆண் மகனை எதிர்பார்த்து இருந்ததால், அதுவே வந்து விட, திருவின் முகத்தினில் அவ்வளவு மகிழ்ச்சி. ஸ்கேனில் கேட்டால் சொல்லியிருப்பர், உறவினர் தானே, ஆனாலும் திருவும் கேட்கவில்லை, துளசியும் கேட்கவில்லை.

ஒரு நர்ஸ் வந்து சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள். பின்னும் இருபது நிமிடங்கள் கழித்து குழந்தையை எடுத்து கொண்டு டாக்டரே வந்து “யார் குழந்தையை வாங்கறீங்க” என்று அகிலாண்டேஸ்வரியிடம் கேட்க,

எட்டு பத்து பெண்கள் இருக்க,

திரு “என்னிடம்” என்று சொல்ல முடியாமல், “துளசி எப்படி இருக்கா அத்தை” என்று கேட்டுக் கொண்டே முன்னே வந்து கொடுங்கள் என்பது போல கை நீட்டினான்.

“நீ நல்லா பிடிச்சிக்குவியா திரு” என்று கேட்டுக் கொண்டே டாக்டர் அவரின் கையினில் இருந்த குழந்தையை கொடுக்க, வாகாக வாங்கிக் கொண்டான்.

“துளசி நல்லா இருக்கா! நீ என்னவோ பிரசவிச்ச மாதிரி எதுக்குடா இப்படி முகத்தை வெச்சிருக்க!” என்று அவனை அதட்டிக் கொண்டே டாக்டர் உள்ளே சென்றார்.

குழந்தையை பார்த்தான் பஞ்சுப் பொதிகை, ரோஸ் நிறத்தில் இருந்தது. அந்த பிஞ்சு கைகளையும் கால்களையும் பார்த்ததும் அப்படி பரவசம். கண்கள் மூடி இருக்க, குழந்தையின் முகத்தை தான் பார்த்திருந்தான். என்னவோ உள்ளுக்குள் பிரவாகமாய் ஒரு உணர்வு!      

“அப்பா நானு” என்று அடுத்த நொடி மீனாக்ஷி வந்து நின்றாள். “உனக்கு தூக்க தெரியாது” என்று ரத்னா சொல்ல,

“தாய் மாமா, நான் தான் மாமா, என் கைல தான் கொடுக்கணும்” என்று பிரசன்னா வந்தான்.

“அப்போ நானு அத்தை” என்றபடி ராதா வந்து நின்றாள்.

“முதல்ல பாட்டி தான்” என்று அகிலாண்டேஸ்வரி வந்தார். 

அதற்குள் வேகமாக வந்த நர்ஸ் “குழந்தையை டாக்டர் கேட்கறாங்க” என்றாள், பின்னே அத்தனை பேர் கை மாறினால் குழந்தை என்னாவது என்று டாக்டரே வாங்கி வரச் சொல்லி விட்டிருந்தார்.

இப்படியாக அந்த சின்ன கண்ணன் பிறக்கும் போதே அத்தனை பேரின் கவனிப்போடு பிறக்க,

மீனாக்ஷி பிறந்த போது, அகிலாண்டேஸ்வரியும் ரத்னாவும் மட்டுமே, திரு வரக் கூட இல்லை. ஏன் ஆண்கள் என்று யாருமே இல்லை. வேறு உறவுகளும் இல்லை. குழந்தையை கையினில் வாங்கியது கூட அகிலாண்டேஸ்வரி தான்.

இப்போது திருவின் மனதினில் தான் மீனாக்ஷி பிறந்த போது இங்கே வராதது நினைவு வர, மகளை எப்போதும் நன்றாய் தான் பார்த்துக் கொள்வான். ஆனாலும் கவனிப்பு அன்பு இது போல எதனையும் இப்போது போல, அப்போது காட்டியதில்லை. மகள் இழந்த அனைத்தையும் அப்போதே கொடுக்க வேண்டும் என்ற ஒரு வேகம்.

அந்த சிந்தனையோடே மீனாக்ஷியை பார்த்திருக்க, “என்னப்பா?” என்றாள்.   

ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்தவன், மீனாட்சியிடம் “உட்காரு” என்று சொல்லி கூட அமர்ந்து கொண்டான்.

மனதில் அந்த சஞ்சலம் கூடக் கூட அவனால் ஒன்றும் முடியவில்லை, அவனையே மன்னிக்க முடியவில்லை.  

“டேய் அண்ணா, அதான் நல்ல படியா குழந்தை பிறந்துடுச்சில்ல, பின்ன ஏன் இப்படி இருக்க?” என்று ராதா வந்து அமர்ந்தாள்.

“அதானே ஏன்டா இப்படி இருக்க?” என்று வெங்கடேஷும் கேட்டான்.

அகிலாண்டேஸ்வரி அந்த பக்கம் வந்த டாக்டரிடம் “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும், துளசியை பார்க்க காலையில இருந்து விடலை” என்று கேட்க,

எல்லோரும் துளசிக்காக என்று நினைக்க, துளசிக்காகவும் தான், ஆனால் திரு மட்டுமே அவரின் நினைவில் அப்போது!

காலையில் இருந்து ஹாஸ்பிடலிலேயே இருந்ததினால் மீனாக்ஷிக்கு சற்று தூக்கம் வருவது போல இருக்க,

அப்பாவின் கை பிடித்து, அவனின் தோளில் மீனாக்ஷி தலை வைக்க, அப்போது தான் சற்று உணர்வுக்கே வந்தான்.

மகளின் தலையை லேசாக தட்டிக் கொடுக்க, உறங்கிவிட்டாள். அவளை எழுப்ப யாரையும் விடவில்லை.

அதன் பின் ஒரு மணிநரம் கழித்து துளசியை ரூமிற்கு மாற்றி விட்டு சொல்ல, எல்லோரும் அங்கே சென்றனர்.

திரு மகளின் உறக்கம் கலையக் கூடாது என்று அப்படியே இருந்தான்.

“நான் பார்த்துக்கறேன் நீ போ” என்று ராதா சொல்ல, மீனாட்சியை விட்டு நகர்ந்தான். உடனே அவள் விழித்துக் கொண்டாள்.

“அம்மா பார்க்க போகலாமா” என்று திரு மகளை அழைத்து சென்றான்.

அத்தனை நேரமாக கணவனை கண்கள் தேடியிருக்க,

திருவை மீனாக்ஷியோடு பார்த்தும் துளசியின் முகத்தினில் ஒரு சோர்ந்த புன்னகை.

“மா” என்று மீனாக்ஷி விரைந்து சென்று கை பிடித்துக் கொண்டாள்.

“எப்படி இருக்கான் தம்பி பாப்பா” என்று கேள்வி மகளிடம் கேட்டாலும் பார்வை திருவிடம் இருந்தது.

“இரு பார்த்துட்டு வர்றேன்” என்று மீனாக்ஷி குழந்தையிடம் விரைய, குழந்தை தொட்டிலில் தான் இருந்தான்.

“குழந்தையை அப்படியே பார்த்துட்டு போங்க, யாரும் தூக்க வேண்டாம். ஒரு ஒருவாரம் பத்து நாள் ஆகட்டும்ன்னு சொல்லுங்க அத்தை” என்று அகிலாண்டேஸ்வரியிடம் மீரா சொல்லியிருக்க, அதனால் தொட்டிலிலிட்டு அவர் அரணாய் நின்று கொண்டிருந்தார்.

“பாட்டி குழந்தை யார் மாதிரி?” என்ற மீனாக்ஷியின் கேள்விக்கு,

“அப்படியே உங்கப்பா மாதிரி, அவன் குழந்தைல எப்படி இருந்தானோ அப்படி!” என்று அகிலாண்டேஸ்வரி சொல்ல,

“அதான் விடாம என்னை சைட் அடிச்சாளே, அப்புறம் எப்படி என்னை மாதிரி இல்லாமப் போகும்” என்று மனதிற்குள் திரு நினைத்தபடி துளசியை பார்த்தான்.

அதற்குள் “குழந்தைங்க டாக்டர் பார்க்கணும் எல்லோரும் வெளில போங்க” என்றபடி நர்ஸ் வர,

எல்லோரும் போக, அங்கே மீராவும் திருவும் மட்டுமே!

அவர் குழந்தை ஆரோக்யமாய் இருப்பதை உறுதி செய்து பின்னர் வெளியேறினார்.

திருவின் முகத்தினை பார்த்தே எதோ சரியில்லை என்று புரிய “என்னவோ” என்று துளசிக்கு கவலையாகி போய்விட்டது.     

மீராவின் முன் “என்ன?” என்று கேட்க முடியாமல், “மீரா ஒரு ரெண்டு நிமிஷம் யாரும் வராம பார்த்துக்கிறியா?” என்று துளசி கேட்க,

மீரா “சரி” என்று தலையை ஆட்டி குழந்தையை தூக்கி வெளியே சென்றாள்.

“என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கீங்க?” என்றாள் மீரா வெளியே சென்ற நொடி.

“ஒன்றுமில்லை” என்பது போல திரு தலையசைத்தான்.

பக்கத்தில் அவனை அழைக்க, வந்ததும், “என்ன” என்றாள் ஒரு நேர் பார்வை பார்த்து.

அந்த பார்வைக்கு தானாய் பதில் வந்தது, “கொஞ்சம் கஷ்டமா ஃபீல் பண்ணினேன், உன்னை கூட்டிட்டி போய் கிட்ட தட்ட பத்து மணிநேரம் ஆச்சு!”

“அப்புறம்”

“அப்புறம் என்ன?”

“சொல்லணும்” என்றாள் பிடிவாதக் குரலில்.

“மீனாக்ஷிக்கு இத்தனை பேர் இல்லை, ஏன் நானும் இல்லை, இப்படி நான் அவளை கைல வாங்கவும் இல்லை, குழந்தையை வாங்கினதும் என்னால அந்த சந்தோஷத்தை கூட அனுபவிக்க முடியலை. மீனாக்ஷியை நான் இப்படி வாங்கலையே தோணிச்சு!” என்று சொல்லும் போது திருவின் குரலில் ஏகத்திற்கும் குற்ற உணர்வும் கலக்கமும்.

அவனின் கையை பிடித்துக் கொண்டவள் “இப்படி நீங்க கலங்கக் கூடாது, போனதை பத்தி நினைச்சிட்டு இருந்தா வர்ற காலத்தை நாம எப்படி சந்தோஷமா வெச்சிக்குவோம்!” என்று சொல்ல,

என்னவோ துளசி கையை பிடித்ததும் அப்படி ஒரு பலம், சஞ்சலங்களும் குறைய, வெளியே நிறைய பேர் இருப்பதால் அவளுக்கு ஒரு புன்னகையை கொடுத்து “நினைக்க மாட்டேன்” என்றபடி கை விலக்க, துளசி பிடியை விட்டால் தானே!  

“எதையும் நினைக்க மாட்டேன்” என்ற படி அவளின் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான்.

பின்னே தான் கை விட்டாள்.

“மீரா” என்று குரல் கொடுக்க, உடனே மீரா வர கூடவே அத்தனை பேரும் வர, கண்கள் மகளை தான் தேடியது.

மீனாக்ஷி உள்ளே வந்தவளும் அப்பாவின் அருகில் அனிச்சையாய் வர, “நீ குட்டி பாப்பா பார்த்தியா, எப்படி இருக்கான்?” என்று மகளிடம் திரு பேச ஆரம்பிக்க,

“அதுப்பா..” என்று மகள் பதில் பேச ஆரம்பிக்க,

“இத்தனை பேர் உள்ள இருக்க கூடாது!” என்று சொல்லியபடி நர்ஸ் வந்தார்.

“நாங்க ரெண்டு பேரும் வெளில இருக்கோம்” என்று சைகை காட்டியபடி திரு செல்ல, துளசியின் முகத்தினில் நிறைவான புன்னகை.    

கதவை நெருங்கிய நேரம் திருவும் திரும்பி துளசியை பார்த்து ஒரு புன்னகை புரிய, அந்த நொடி இருவருக்குள்ளும் அப்படி ஒரு நிம்மதி, திருப்தி.

வாழ்க்கையை இன்னும் சந்தோஷமாய் வாழ்ந்து பார்க்கும் ஆசையும் கூட!

சொல்லப் படுவது காதல் இல்லை! உணரப் படுவது காதல்! இது உன்னுள் மட்டுமல்ல! இதற்கு வயது வரம்பும் கிடையாது! வாழ்க்கை வரம்பும் கிடையாது!

                                                  

Advertisement