Advertisement

அத்தியாயம் இருபத்தி நான்கு:

“பின்னே நான் விழுந்திருந்தா உங்களுக்கு மட்டும் தான் டென்ஷனா? எனக்கு இல்லையா? எதனால இப்படி ஆச்சு? உங்களால!  எத்தனை தடவை வீட்டுக்கு வாசலுக்கும் நடந்தேன் தெரியுமா? இனிமே இப்படி பண்ணுனீங்க..!” என்று சொல்லிவிட்டு அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

“அம்மாடி, என்னோட பல வருஷ கனவு நனவாச்சு! துளசி என்கூட சண்டை போடறா! முறைக்கிறா! என்னை கேள்வி கேட்கறா! அதையும் விட வலிக்க வலிக்க கொஞ்சறா!” என்று திரு பேச,  

“நீ என்னவோ பேசிக் கொள்” என்று அவனின் மீசையை மீண்டும் இழுத்தாள்.

“என்னடி இப்படி என்னை கொடுமை பண்ற, கொஞ்சம் நேரமாவது தூங்கு! இல்லை இன்னும் கொஞ்சம் நேரத்துல தூக்கம் முழுச்சு, எனக்கு தூக்கம் வரலைன்னு என்னை படுத்துவ!” என்று அதட்டல் குரலில் சொன்னான்.

பிரசவ நாள் நெருங்கியிருக்க, இந்த ஒரு வாரமாக சரியான உறக்கமில்லை துளசிக்கு. பாதி ராத்திரியில் எழுந்து கொள்வாள், பின்னே விடியும் போது தான் மீண்டும் உறக்கம்!

அவள் எழும் நேரம் துளசி எழுப்பாவிட்டாலும், திரு எழுந்து கொள்வான்.

திருவோடு தன்னுடைய வாழ்க்கை இப்படி மாறக் கூடும் என்று கிஞ்சித்தும் துளசி நினைத்திருக்கவில்லை! முகம் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசினால் போதும் என்ற எதிர்பார்ப்பே அதிகமாக இருந்தது.

அதட்டல், உருட்டல், மிரட்டல் என்று எதுவும் மாறாத போதும், திகட்ட திகட்ட காதல் செய்தான், செய்ய வைத்தான். எல்லோருக்கும் சற்று சலிப்பு தட்டிவிடும் ஒரு கால கட்டத்தில எனக்கு எல்லாம் புதிதாய், இளமை பருவத்திற்கு சற்று குறையாத பருவமாய்! பதிமூன்று வருட தவம் இதற்கு தானோ! இந்த வாழ்க்கைக்கு தானோ!” என்ற எண்ணம் தான் துளசியிடம்!

“ம்ம், சரி தூங்க வைங்க!” என்று துளசி வார்த்தையை உதிர்த்து கண்களை மூடினாள்.

“இது வேறையா, நான் தூங்க வைக்கிற நேரம் கூட நீ தூங்கறதில்லை! என்ன நம்ம குழந்தையை தூங்க வைக்க இப்போ இருந்தே ப்ராக்டிஸ்! ஆனா அது கூட இவ்வளவு படுத்தாதுடி!” என்று குறை படுவது பேசினாலும்,

அவன் நேராகப் படுத்து இதமாய் அவளை தன் மேல சாய்வாய் படுக்க வைத்து, அவளை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.

இருவரும் கண்ணயரும் நேரம் மீனாக்ஷி இருந்த ரூம் கதவு தட்டப்பட்டது.

சிறு சத்தத்திற்கு இருவரும் விழித்து விட்டனர். இருவர் மட்டும் தானே என்று துளசி உடை தளர்த்தி படுத்திருக்க, வேகமாய் அவளுக்கு போர்த்தி விட்டவன், மகளுக்கு “மீனாக்ஷி வர்றேன்” என்று குரல் கொடுத்துக் கொண்டே சென்று கதவை திறக்க,

மீனாக்ஷி அங்கே நின்றிருந்தாள்.

“என்ன மீனாக்ஷி?” என்றான் சற்று பதட்டமாக.

“தூக்கம் வரலைப்பா” என்றாள் பரிதாபமாக.

நிறைய திட்டி விட்டான், அவனுக்கே புரிந்தது. உணவு உண்ணும் போதும் முகம் கொடுத்து பேசவில்லை, துளசி அப்போதும் மீனாக்ஷியை வெகுவாக சமாதானம் செய்தால் தான், ஆனாலும் மீனாக்ஷிக்கு அதன் தாக்கம் இருப்பது புரிய,

“நீ போ, போய் படு, அம்மாவை அனுப்பறேன்!” என்றான்.

“ம்ம்” என்றபடி மீனாக்ஷி உள்ளே சென்றாள்.

துளசியிடம் வந்தவன் “கொஞ்சம் ரொம்ப மிரட்டிடேன் போல தூக்கம் வரலையாம்” என்றான் அசடு வழிந்து.

“உங்களை.. சும்மா அவளை பயப்படுத்திடீங்க” என்று திருவை முறைத்துக் கொண்டே எழுந்தவள், நைட்டி மாற்றி உள்ளே சென்று மீனாக்ஷியை பார்க்க,

“மா தூக்கம் வரலை” என்றாள் மகள்.

“ஏன் தூக்கம் வரலை” என்று கேட்டுக் கொண்டே அருகில் அமர்ந்தாள்.

“அப்பா, உங்கம்மாவை திட்டுனா எங்கம்மாவை அழ வைப்பியா கேட்டாங்க” என்று கண்கள் கலங்க சொன்னாள்.

துளசி பார்த்த பார்வையில், “துளசி சண்டை போடலைன்னா வருத்தப் பட்ட மகனே, நீ இப்போ அடியே வாங்கப் போற போலடா!” என்று திரு மனதிற்குள் நினைத்தாலும் கெத்து மாறாமல் அம்மாவையும் மகளையும் பார்த்திருந்தான்.

“சமாதானம் செய்!” என்ற கட்டளை மனைவியின் கண்ணில் இருக்க,

“பாட்டி லேசுல அழ மாட்டாங்க, அவங்களை நீ வருத்தப் படுத்தலாமா?”

“முன்னே எல்லாம் உன்னோட அம்மாவை எப்படி திட்டுவாங்க. இப்போ உன்னோட ஃபிரண்ட் ஆன பிறகு உங்கம்மாவை திட்டுறாங்களா? இல்லையே! அப்போ நீயும் அவங்க கூட சண்டை போடக் கூடாது இல்லையா? தப்பு தானே!”

“பாட்டி சொன்னா ஏன் சொல்றாங்க? அதுல ஒரு மீனிங் இருக்கும்னு யோசிக்க வேண்டாமா!” என்று மெதுவாய் ஆரம்பித்து பலமாய் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று பேசினான்.

சிறிது நேரத்தில் “ஷ்” என்ற மனைவியின் சப்தம் கேட்க,

“என்ன?” என்று பார்த்தவனிடம்,

“தூங்கிட்டா!” என்று சைகை செய்தான்.

அவனும் அப்படியே கீழேயே ஒரு தலையணை போட்டு படுத்துக் கொண்டான்.

அவன் கீழே படுக்க மேலே இருந்து துளசி அவனையே பார்த்து படுத்திருந்தாள். மீனாக்ஷி அவளை பின் புறம் இருந்து அணைத்து படுத்திருந்தாள்.

கண்களை மூடியபடியே, “துளசி என்னை தூங்க விடு!” என்ற திருவின் குரல் கேட்க,

“எனக்கு தூக்கம் வரலை”

அவனின் செல் எடுத்து இளையராஜாவின் அவனுக்கு மிகவும் பிடித்தமான பாடலை ஒலிக்க விட்டான் “கண்ணை மூடு தூக்கம் வரும்” என்று சொல்லியபடி

பாடல் வரிகள் கூட வரவில்லை முன் இசை ஒலிக்கவுமே அவளின் கண்கள் மூடியது,

“பூவிலே மேடை நான் போடவா

பூவிழி மூட நான் பாடவா

தோளிரண்டில் இரு பூங்கொடி

என் சொந்தமெல்லாம் இதுதானடி”

 உறக்கமும் சுகமாய் தழுவியது.  

காலையில் எழுந்த உடனேயே மீனாக்ஷி அகிலாண்டேஸ்வரியிடம் “சாரி பாட்டி” என்று போய் நின்றாள்.

“எதுக்கு சாரி” என்ற அகிலாண்டேஸ்வரிக்கு சுத்தமாய் நேற்றை நினைவுகள் இல்லை.

“ம்ம்ம், சும்மா கேட்டேன்” என்றபடி மீனாக்ஷி ஓடி விட,

“டேய் திரு, எதுக்குடா அவ சாரி கேட்கறா” என்று அகிலாண்டேஸ்வரியின் குரலுக்கு, திரு அவரை முறைத்து பார்த்தான்.

அப்போது தான் துளசி ரூமின் உள் இருந்து வந்தாள். வந்தவளின் முகம் ஒரு மாதிரி இருக்க, திருவின் கவனமும் அகிலாண்டேஸ்வரியின் கவனமும் அவளிடம் தான்.

“என்ன பண்ணுது துளசி” என அகிலாண்டேஸ்வரி கேட்க,

“கொஞ்சமா வலிக்கற மாதிரி இருக்கு அத்தை” என்று பதில் அவரிடம் கொடுத்தாலும் பார்வை முழுக்க திருவிடம்.

“பயப்படாதே” என்று கண்களால் துளசிக்கு தைரியம் சொன்னவன்,

“மா, ஹாஸ்பிடல் போயிடலாம்” என்று சொல்லும் போதே, “போயிடலாம்” என்று சொல்லிக் கொண்டே கைபேசியை எடுத்து அகிலாண்டேஸ்வரி டாக்டருக்கு அழைத்து விட்டார்.

துளசி திருவின் கைபேசியை வாங்கி மீராவிற்கும் அழைத்து கேட்டாள்.

“ஹாஸ்பிடல் போயிடுக்கா, நாங்க இங்கே இருந்து வர்றோம்” என்று சொல்லி அங்கே வீட்டில் இருந்து பிரசன்னாவும் ரத்னாவும் மீராவும் கிளம்பிவிட்டனர் ஒரு காரில்.

இங்கே எல்லோரையும் அகிலாண்டேஸ்வரி எழுப்பி விட, வீடே பரபரப்பானது.  

பின்பு ஷோபனாவிடம் ஹாஸ்பிடலுக்கு இதெல்லாம் எடுத்து வா என்று ஒரு லிஸ்ட் கொடுத்து , வாக்கிங் சென்றிருந்த மேகனாதனுக்கும் அவரின் தம்பிகளுக்கும் சொல்லி இங்கே தம்பி வீடுகளுக்கும் சொல்ல, வசுமதியும் மேகலாவும் உடனே வந்து விட்டனர்.

அப்போது தான் மீனாக்ஷி குளித்து வந்திருந்தாள். வீட்டில் இத்தனை பேரையும் பரபரப்பையும் பார்த்து அவளின் முகம் குழப்பத்தை தத்தெடுக்க,

“ஸ்கூல் போக வேண்டாம், அம்மாவோட ஹாஸ்பிடல் போகலாம், ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வா” என்று திரு மீனாக்ஷியிடம் சொன்னான்.

உடனே துளசி நைட்டியில் இருந்து சேலை மாற்ற செல்ல,

“அதை அவளுக்கு சொன்னேன் உனக்கில்லை” என்று திரு அதட்டல் இட்டான்.

பின்னே தான் நின்றாள். பின்பு அகிலாண்டேஸ்வரி பூஜை அறையில் விளக்கேற்றி கற்பூரம் பொருத்தியவர், துளசியை அழைத்து வணங்க வைத்து திருநீர் பூசி விட,

அங்கே அப்படி ஒரு அமைதி!

மீனாக்ஷியின் முகத்தில் தான் அப்படி ஒரு கலவரம். அம்மாவிடம் ஒட்டி நிற்க போனவளை திரு அழைத்து அருகில் நிறுத்திக் கொண்டான்.

பின்னே திரு வண்டி ஓட்ட துளசியும் அகிலாண்டேஸ்வரியும் பின்னே ஏறிக் கொள்ள , மீனாக்ஷி முன்னே ஏறிக் கொண்டாள்.

ஷோபனா அத்தை சொன்ன பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வெங்கடேஷுடன் வருவதாக சொல்லியிருந்தாள்.

ஹாஸ்பிடல் சென்று இறங்க வீல் சேருடன் பணியாளர் நின்றனர் டாக்டர் அழைத்து சொல்லியிருந்ததால்.

“இல்லை, நடந்து வர்றேன்!” என்று சொல்லி துளசி நடந்து செல்ல,

“நீ வா” என்று அகிலாண்டேஸ்வரி மீனாக்ஷியை கூட வைத்து கொண்டார்.

திரு தான் துளசியுடன் நடந்தவன், “ஒன்னும் பயமில்லை” என்று சொல்லிக் கொண்டே நடக்க,

“ஒன்னும் பயமில்லை, பயமில்லைன்னு சொல்லி என்னை பயப்படுத்தக் கூடாது!” என்று சொன்ன துளசியின் குரலில் அவளின் பதட்டத்தை உணர முடிந்தது.

சுற்றிலும் பார்வையை ஓட்ட அதிக ஆட்கள் இல்லை, ஒன்றும் பேசாமல் அவளின் கையை மட்டும் பிடித்துக் கொண்டான்.

அவர்கள் மெதுவாக நடக்க “சர் பேஷன்ட் நேம் அண்ட் டீடையில்ஸ், இவங்களோட அட்டை” என்று அங்கிருந்த சிஸ்டர் கேட்க,

“அதெல்லாம் சொல்லுவோம் முதல்ல இவங்களை பாருங்க” என்று திரு அதட்டினான்.

திருவை முறைத்த துளசி “சாரி சிஸ்டர், எழுதிக் கொடுப்பாங்க, அட்டை எங்க அத்தை கிட்ட இருக்கு குடுப்பாங்க” என்று சொல்லும் போதே டாக்டர் வந்து விட்டார்.

துளசியின் கை பிடித்திருந்த திருவை பார்த்து,

“திரு அவ கையை விடு” என்று சொல்லி டாக்டரே அவளை பிரசவ அறையின் உள் அழைத்து சென்றார்.

Advertisement