Advertisement

துளசிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, ஆனால் ஏதாவது செய்ய வேண்டும்!

யோசித்தே ஒரு நிமிடத்தை ஓட்டினாள். திருவின் பொறுமை பறந்தது.  

துளசி அடிக்கவாவது செய் இந்த இடத்தை விட்டு நகர்றேன். “அவனை பார்க்கணும்” என்று மகனை காண்பித்தான்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க தான் எங்களை கூட்டிப் போகலை சொன்னீங்க தானே!” என்று முறுக்கி நின்றாள்.

திருவும் பார்த்து நிற்க, துளசியும் பார்த்து நிற்க, திரும்பவும் திருவிற்கு சிரிப்பு பொங்கியது அவளின் இந்த கோபத்தில்.

சொல்லியும் அவன் செவி சாய்க்கவில்லை என்று நினைத்து துளசி அப்படி மனதை உளப்பிக் கொண்டிருந்தாள். அதன் வெளிப்பாடு தான் இது.

“உங்களை” என்றபடி கோபமாக துளசி அருகில் வரவும், என்ன நடந்தது என்றே ஒரு நொடி துளசிக்கு புரியவில்லை.  

“இதுக்கு தான் துளசி நான் கூட்டிட்டு போக பயந்தேன்” என்று சொல்லிய திருவின் கைகளுக்குள் துளசி இருந்தாள்.

ஆம்! அணைத்துப் பிடித்திருந்தான்.

“பயப்படறவங்க கூட்டிட்டு போக வேண்டாம்!” என்று முகத்தை சுருக்கினாள்.

“ஆமாம், எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த பேய் பிசாசை பார்த்து பயம்!” என்று திரு சொல்ல,

“அச்சோ” என்றவள் “விடுங்க, விடுங்க” என்று திருவின் மார்பினில் அடித்து விலக  முற்பட்டாள்.

“நீ என்னடி அடிக்கறேன் பேர்வழின்னு மசாஜ் பண்ற!” என்று திரு அதற்கும் போட்டு தாக்கினான்.

“போடா டேய்!” என்று துளசி சொல்லியே விட்டாள்.

“ஹா, ஹா, எங்கே போக?” என்று திரு அதற்கும் சிரித்துக் கொண்டே வாய் கொடுத்தான்.

“உங்களை” என்றவளுக்கு வேறு வழியே இருக்கவில்லை அவனின் வாயடைக்க,

சற்று அவனின் உயரத்திற்கு எம்பி ஒரு முற்றுகை போராட்டம்! நிச்சயம் போராட்டமே! அவ்வளவு வன்மை துளசியிடம், “பேசுவியா நீ” என்பது போல,

ஹா! ஹா! அவளுக்கு தெரியவில்லை! இப்படி ஒரு தண்டனை கிடைத்தால் திரு என்ன பேசாமலா இருப்பான்!

சத்தமின்றி ஒரு முத்தம்! வெளியே அத்தனை பேர் இருக்க, அந்த வெளி உலக அரவமில்லாத ஒரு முத்தம்!

விலகிய போது “இன்னொன்னு” என்று திரு சிறு பிள்ளை போல கேட்கவே செய்தான். கொடுக்க தோன்றவில்லை! வாங்கத்தான் தோன்றியது!  

“தோடா, கூட்டிட்டு போகாதவங்களுக்கு எல்லாம் குடுக்க மாட்டோம்!” என்றாள்.

“அட, இங்க நீ மட்டும் தானே இருக்க. அந்த மாட்டோம்ல இருக்குறவங்க வேற யாரு?” என்று திரு மீண்டும் சீண்டினான்.

“அந்த ஆசை வேறையா?” என்று துளசி மீண்டும் பொங்க,

“நீதானே சொன்ன, அப்போ அந்த இன்னொருத்தங்களுக்கும் சேர்த்து நீயே குடு!” என்று திரு பிடிவாதமாய் சொல்ல,  

“ஷப்பா” என்றவள், குடுக்கும் வரை விடமாட்டான், ஆனாலும் வெளியே என்ன நினைப்பார்கள் என்று புரிந்து, ஒரு அவசர முத்தம் பதித்தாள். பதட்டத்தோடு கொடுத்த அந்த முத்தம் திருவை மயக்கியது.

விலகவும், திரு மீண்டும் பேச்சை ஆரம்பிக்க, “மூச்” என்று மிரட்டியவள், “இனிமே பேசக் கூடாது, அப்புறம் நான்” என்று நிறுத்தியவள்,

“அழுதுடுவேன்” என்று பாவமாய் சொன்னாள்.

“ஹ ஹ” என்று பெரும் குரலில் சிரித்தவன், “சரி ஒன்னும் பண்ண மாட்டேன்!” என்று சொல்லி அவன் மகனின் புறம் செல்ல, வெளியே சென்ற இவள் “வா ஷோபனா, வாங்க தம்பி!” என்று வெங்கடேஷை அழைத்து குழந்தை இருக்கும் அறைக்கு அழைத்து சென்றாள்.

ஷோபனா அவளிடம் “உங்களுக்கு நாங்க வந்தது பிடிக்கலையா? சாரி, கேட்டுட்டு வந்திருக்கணும்!” என்று சொல்ல,

“அம்மாடி! என்ன இது?” என்று பயந்து விட்டவள், “அப்படி எதுவும் இல்லையே!” என்று அவசரமாய் துளசி மறுத்து திருவை பாவமாய் பார்த்தாள்.

திரு ஷோபனாவின் புறம் திரும்பியவன் “ஷோபனா அவ என்னை முறைச்சிட்டு நின்னா, உங்களை கவனிக்கலை, கவனிச்ச பிறகும் கருத்துல பதியலை.   துளசியை கொஞ்சம் ரொம்ப டென்ஷன் பண்ணிட்டேன். சோ, என்னை பார்த்ததும் அவளுக்கு வேற எதுவும் ஓடலை. நீ எதுவும் தப்பா நினைக்க கூடாது!” என்று பொறுமையாக சொன்னான்.

அதன் பிறகே இருவர் முகமும் தெளிந்தது.

“எஸ், கொஞ்சம் ரொம்ப பண்ணிட்டாங்க!” என்று இன்னும் பாவமாய் துளசி சொன்னாள்.

“என்ன பண்ணினான் அண்ணி, அவனை பிச்சிடலாம்” என்று வெங்கடேஷ் சொல்ல வேறு செய்தான்.

முகம் அத்தனை நிச்சலனமாய் இருந்த போதும் “அதுதான் இவ ஏற்கனவே என் உதடை பிச்சிட்டாலே” என்று திருவிற்கு தோன்ற அதனை துளசிக்கு மட்டும் புரியுமாறு கண்ணில் காட்டினான்.

துளசி என்ன சொல்வது என்று புரியாமல், இதற்கு மேல் தங்காது என்பது போல ரூமை விட்டு வெளியில் சென்று விட்டாள்.

ஷோபனா சிரித்தபடி “மாமா எதோ வம்பு பண்றார். நீங்க அதுக்கு பஞ்சாயத்து பண்றீங்களா?” என்று வெங்கடேஷை கிண்டல் செய்தாள்.

வெங்கடேஷ் திருவை பார்க்க அவனின் முகத்தில் இருந்து ஒன்றும் கண்டறிய முடியவில்லை. “அநியாயத்துக்கு முறைச்சிக்கிட்டே ரொமான்ஸ் பண்றடா நீ!” என்று வெங்கடேஷ் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

சமையல் அறையில் என்ன செய்வது ரத்னாவும் மீராவும் பார்த்துக் கொண்டிருந்தனர்! துளசியும் போய் நிற்க, விரைந்து சமையல் ஆகியது.  

அதற்கு பிறகு திரு எந்த வம்பும் செய்யவில்லை பின்பே துளசி இயல்பானால். அவன் வேலவனுடனும்,  பிரசன்னாவுடனும் பேசிக் கொண்டிருந்தான். ஷோபனாவும் வெங்கடேஷும் ரூமை விட்டு வெளியில் வரவில்லை. குழந்தை எப்போதும் விழிப்பான் என்று ஆர்வமாய் பார்த்து இருந்தனர்.

சிறுது நேரத்தில் வெளியே வந்த வெங்கடேஷ், “அண்ணி குழந்தை அசையறான், வாங்க, வாங்க!” என்று பரபரப்பாக அழைத்தான்.

அதன் பின்னே எல்லோரையும் குட்டி திரு வசியப் படுத்த, அவர்கள் கிளம்பும் போது மாலையாகிட்டது.

வீடு வந்த போது இரவு பத்து மணி. உறங்காமல் வாசலிலியே மீனாக்ஷி அமர்ந்திருந்தாள். கூட அவளின் தாத்தாவும் பாட்டியும்.

கார் பார்த்ததும் அப்படியே ஓடி வந்து கேட்டை திறந்து விட்டதே அவள் தான்.

துளசி இறங்கும் போதே “மா” என்று ஓடி வந்து அம்மாவை அணைத்துக் கொண்டாள். இதற்கு துளசி கையில் குழந்தை வேறு வைத்திருந்தாள், குட்டி திரு நல்ல உறக்கத்தில் இருந்தான்.

இவள் வேகமாக அணைக்கவும் சிறு அசைவு அவனிடம்!

திரு “பார்த்து மீனா, பாப்பா இருக்கான் கைல” என்று ஆரம்பிக்கும் போதே, மீனாக்ஷி கவனியாமல் ஆனாலும் எல்லோரும் பார்க்கவே , அவனை நோக்கி அவசரமாக கையை நீட்டியவள், “பேசாதே” என்று வாய் மீது விரல் வைத்து காட்டினாள்.

கண்களிலும் ஒரு கண்டனம்!

“சரி, பேசவில்லை!” என்பது போல திருவும் உடனே கை தூக்கி காண்பித்தான்.

அம்மாவை வேகமாக அணைத்து முடித்தவள், “தம்பியை என் கிட்ட குடு!” என்று கை நீட்டினாள்.

துளசி யோசிக்காமல் “இப்படி பிடிக்கனும்” என்று சொல்லியபடி கொடுத்தாள்.

பின்பு ஆராத்தி எடுக்க வேண்டும் என்று அகிலாண்டேஸ்வரி சொல்ல, “அப்படியே எடுங்க அத்தை!” என்று மகளோடும் மகனோடும் துளசி நின்றாள்.

அகிலாண்டேஸ்வரி “நீயும் வாடா” என்று திருவையும் அழைத்து ஆலம் சுற்றினார்.

பின்பு மீனாக்ஷி குழந்தையை தூக்கி உள்ளே செல்ல,

“சும்மா மீனா வரும்போது குழந்தை இருக்கான், அதை செய்யாதே இதை செய்யாதேன்னு சொல்லக் கூடாது. நீங்க மட்டுமில்லை யாரும் சொல்லக் கூடாது. அப்புறம் இவன்னால தான்னு அவளுக்கு குழந்தையை பிடிக்காம போய்டும், புரிஞ்சதா!” என்று மெல்லிய குரலில் என்றாலும் துளசி திருவை அதட்டுவது வெங்கடேஷ் ஷோபனா மேகநாதன் என்று எல்லோருக்கும் கேட்டது.  

இதற்குள் பக்கத்துக்கு வீட்டில் இருந்து சித்தப்பாக்களும் தங்கள் மனைவியோடு பார்க்க வந்த விட்டனர் அந்த நேரத்திலும்.

இப்படியாக நேரம் கழிந்தது.

எல்லோரும் சென்ற பிறகு இவர்கள் உணவு உண்டு உறங்க பன்னிரண்டு ஆனது. அதுவரை மீனாக்ஷி தான் குழந்தையை வைத்திருந்தாள்.

யார் எடுத்தாலும் சிறிது நேரத்தில் குழந்தையை வாங்கிக் கொள்வாள்.

துளசி பால் கொடுக்க ரூமின் உள் எடுத்து சென்ற போதும், அம்மாவை உள்ளே விட்டு கதவை மூடி “மா, அப்புறம் கூப்பிடுங்க” என்றாள்.  

இப்படியாக மீனாக்ஷி யாரும் கற்றுக் கொடுக்காமலேயே பொறுப்புகள் வந்து விட்டது. குழந்தையை மட்டுமல்ல, அம்மாவையும் பார்த்துக் கொள்ளும் பாங்கு! வீட்டினர் எல்லோர் முகத்திலும் புன்னகை.  

பின்பு மீனாக்ஷியும் உறங்க செல்ல, குழந்தையை சிறிது நேரம் தொட்டிலில் போட்டு ஆட்டி விட்டாள்.

அதன் பிறகே கணவன் மனைவி இருவருக்கு தனிமை கிடைத்தது.

“அநியாயத்துக்கு எல்லோர் முன்னாடியும், நீ அதட்டுடறடி, திருவோட கெத்து என்னாகறது!” என்று வருத்தப்படுவது போல திரு வேண்டுமென்றே பேசினான்.

“என்னாவாம் திருவோட கெத்துக்கு?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி துளசியும் கெத்தாக கேட்டாள்.

“அதுதானே என்னவாம், ம்?”  என்று திரு வெகு அருகில் நெருங்கி நின்று கேட்டான். ஆனால் உடல்கள் உரசவில்லை.

கணவனை பார்வையால் ஆசையாய் தழுவியவள், “என்னவாம், ம்?” என அவன் போலவே பேசினாள்.

“இப்படி எல்லாம் பார்த்தா மட்டும், நான் பக்கத்துல வந்துடுவனா, திரு ரொம்ப ஸ்டெடி!” என்று பேசினான்.

“இப்போதான் யாரோ கெத்து என்னாகறது சொன்னாங்க. இதுக்கு பேர் என்னவாம்!” என்று அவன் அருகில் நின்றதை கொஞ்சலாக துளசி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

மீனாக்ஷி “அம்மா” என்று பாதி உறங்கியும் உறங்காமலும் இருந்த நிலையில் சத்தமாக குரல் கொடுத்தாள்.

அந்த சத்தத்தில் குட்டி திரு அசைய,

பிள்ளைகளின் குரல்கள் கேட்ட நொடி, அருகில் தெரிந்த திருவின் முகத்தில் இருந்த மீசையை இழுத்தாள்.

“அம்மா விடுடி” என்று வலியில் அவன் சிணுங்கும் போதே, அவனின் உதடுகளிலும் ஒரு அவசர முத்தம் பதித்தவள், “தோ வர்றேன்” என்று மீனாக்ஷிக்கு குரல் கொடுத்து,

“குழந்தையை பாருங்க” என்று திருவிடம் சொல்லி ரூமின் உள் சென்றாள்.

திருவிற்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை!

குழந்தையின் சிணுங்களில் அனிச்சையாய் தொட்டில் புறம் நகர்ந்தவன், அதனை ஆட்டி விட்டான். கூடவே ஒரு யோசனை! “என்னடா செஞ்சா இவ நம்மளை?” – நினைக்கும் போதே முகத்தினில் புன்னகை!

இதுவும் சத்தமின்றி ஒரு முத்தம்! வேலைகளுக்கு நடுவிலும் வேலையாய் கொடுக்கப்படும் சத்தமில்லாத ஒரு ரகசிய முத்தம்!

ஆகச் சிறந்தது – இதுவே இல்லறம்!

இது நல்லறமாய் ஆகுவது ஆகாததும் அவரவர் வாழ்க்கையை அவரவர் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் உள்ளது. நீயா நானா போட்டி கூடவே கூடாது!     

நீ வாழ்க்கையை வெல்ல உன் வாழ்க்கை துணையிடம் கட்டாயம் தோற்றுப் போக வேண்டும்! அது ஆணாகினும் சரி! பெண்ணாகினும் சரி!    

இது வாழ்க்கையின் எழுதப் படாத விதி!

                      ஷ்ஷ்ஷ்!

              சத்தமின்றி முத்தமிடு!

                    (நிறைவுற்றது) 

 

Advertisement