Advertisement

“வெச்சிடாதடி” என்று கத்தியவன் கைகளில்  இருந்தது கேலண்டர்.  நாளை நல்ல நாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்

“வைக்காம என்ன பண்றதாம்” என்று திருவைப் போல முறைப்பாய் பேசினாள்.

“என்ன பண்ணவா? நான் பேசறதை கேளு!”

“கேட்கற மாதிரியா பேசறீங்க” என சலிக்க,

“ஏன்? ஏன் கேட்க முடியாது?” என்று எகிறினான்.

“ரகசியம் எல்லாம் இப்படி பப்ளிக்கா பேசுவாங்களா?”

“நீயும் நானும் பேசினா அது பப்ளிக்கா!” என்று ஃபோனிலேயே அவனின் கோபம் புரிந்தது.

“எதுக்கு உங்களுக்கு இப்படி சட்டுன்னு கோபம் வருது?”

“வராம! நானே கஷ்டப்பட்டு டைலாக் அடிக்கறேன்! அதை ரசிக்காம என்னை கடுப்படிக்கற!”

“என்ன கடுப்படிச்சாங்கலாம், அந்த டைலாக் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கறீங்கன்னு எனக்கு தெரியாதா?” என்று கிளுக்கி சிரித்தாள்.

“கண்டு பிடிச்சிட்டியா?” என்று அசடு வழிவது துளசியின் கண் முன்னாள் தெரிய,

இன்னும் அதிகமாய் கலகலவென அவள் சிரிக்க, “மனுஷன் பேசுவானா உன் கூட!” என்று சலிப்பாய் சொல்வது போல பாவனை செய்தான்.

“அப்புறம் நீங்க யாராம்?”

“ராட்சசண்டி!” என்றான் முறைப்பாக.

“அழகான, பெரிய மீசை வெச்ச, ராட்சசனா?” என்றாள் அப்போதும் புன்னகை முகமாக.

“அழகா இருக்கேன்னு என்னை சொல்றியா, இல்லை மீசையை சொல்றியா?”

“ம்ம், கண்டுபிடிங்க!”

“ரொம்ப பேசற நீ!”

“பிடிக்கலையா?” என்று சற்று சுருதி குறைந்தது அவளின் குரலில்.

“பிடிக்கலையாவா? அடி வாங்க போற நீ! ரொம்ப பிடிச்சிருக்கு துளசி” என்றான் அதையும் கூட முறைப்பாக.

“பிடிச்சிருக்குன்றதை இவ்வளவு ரொமாண்டிக்கா யாரும் சொல்ல மாட்டாங்க!” என்று முணுமுணுப்பாய் சொல்ல,

“என்னடி முணுமுணுக்கற?”

“ம்ம், நானும் டைலாக் அடிச்சேன்!”

“என்ன டைலாக்?”

“ம்ம், ரொமான்ஸ் எல்லாம் சாப்பாடு கிடையாது! சாப்பாடுல இருக்குற உப்பு! உப்பு இல்லைன்னா சாப்பாடு ருசிக்காது! ஆனா உப்பை சாப்பாடா சாப்பிட முடியாது!” என்று கடகடவென்று சொல்ல,

“பின்ற பின்ற துளசி, நீ செமையா பேசற” என்றான் உற்சாகமாக.

“யாரு நானு? திருவோட பொண்டாட்டியாக்கும்!” என்று துளசியும் பதிலுக்கு உற்சாகமாய் பேசினாள்.

அவளின் குரலில் இருந்த உற்சாகம் அவனின் அணு அணுவிலும் தொற்றியது என்றால் மிகையல்ல!

அதை அனுபவிக்க அப்படியே அமைதியாகிவிட்டான்.

“என்ன? என்ன பேச்சை காணோம்?” என துளசி சத்தமாகக் கேட்டாள்.

“ஏண்டி கத்துற ஃபோன் இல்லாமையே கேட்குது!” என்று இலகுவாக திரு பதில் சொல்ல,

“அது தான்! ஃபோன் இல்லாம என் பேச்சை கேட்க தான் என்னை கூப்பிட்டுக்கங்க சொல்றேன்!”

“ம்ம்” என்று அப்போதும் யோசிப்பது போன்ற பாவனையை காண்பித்தான். உண்மையில் நாளை அழைத்துக் கொள்ளலாம் என்று முடிவே செய்து விட்டான்.

“இப்ப என்ன? உங்களை பார்க்காம இருக்க முடியலை சொல்லணுமா!” என்று கோபமாய் துளசி பேச,

“ஏன் சொன்னா தான் என்னவாம்?” என்றான் திரு ஒரு இலகுவான குரலில்.

“சொல்றேன், ஆனா நேர்ல தான் சொல்லுவேன்!” என்று கோபமாக சொல்லியபடி ஃபோனை டக்கென்று வைத்து விட்டாள்.

“பா, என்னமா கோபம் வருது!” என்ற திருவின் முகத்தினில் அப்படி ஒரு மலர்ச்சி  புன்னகை.

“இதற்கு தானே ஆசைப்பட்டாய் திருநீர்வண்ணா!” என்று கண் முன் தெரிந்த அவனின் பிம்பத்திடம் அவனே கேட்டுக் கொண்டான்.

ஆம்! அவன் கண்ணாடி முன்னாடி நின்றிருந்தான். முகத்தில் அத்தனை மலர்ச்சி!

இப்படியா பேசி உறங்கும் போதே வெகு நேரம் ஆகிவிட்டது.

காலையில் ஆறு மணிக்கு எழுந்து தான் அன்று போய் துளசியை அழைத்து வருவதாக சொன்னான் அம்மாவிடம்!

அங்கே அப்போது மேகநாதனும் இருந்தார், வெங்கடேஷும் இருந்தான்.

அவனின் முகத்தை பார்த்த வெங்கடேஷ் “நீயா டிரைவ் பண்ற, ரொம்ப டையர்டா தெரியற தூங்குனியா இல்லையா?” என்றான்.

என் பொண்டாட்டி கூட பேசிட்டு இருந்தேன் என்றா சொல்ல முடியும்! “சரியா தூக்கம் வரலை” என்று மழுப்பினான்.

“அப்போ நான் டிரைவ் பண்றேன் எப்போ போகலாம்”

திரு அகிலாண்டேஸ்வரியை பார்க்க, “மீனாக்ஷியை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே போங்க, போய், எழுப்பு அவளை, லீவ் போடப் போறா, அவ வேண்டாம். சும்மா ஸ்கூல்க்கு லீவ் போட்டா பழகிடும் அதுவே, நைட் எப்படியும் நீங்க வந்துவீங்க தானே!” என்று சொல்ல,

மகளை எழுப்பி அவளிடம் சொல்லி, அவளை மிகவும் சமாதானம் செய்து பள்ளிக்கு கிளப்பினான்.

வெங்கடேஷ் தயாரானது பார்த்து ஷோபனா என்னவென்று கேட்க, அவன் சொல்லியதும்,

“நானும் வர்றேன்!” என்று அவளும் நின்றாள்.

“அதெல்லாம் வேண்டாம், நாங்க போறோம்!” என்று சொல்லிவிட்டான்.

நேராக திருவிடம் போய் நின்றாள், “நானும் வர்றேன் மாமா!” என்று.

“சரி வா” என்று திரு சொல்லிவிட,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், வீட்டுக்கு வந்தவங்களை மரியாதையில்லாம பேசிட்டு, இப்போ அவங்க வீட்டுக்கே வருவாளா?” என்று வெங்கடேஷ் சத்தமிட்டான்.

“டேய், என்ன சௌண்டு? ஒன்னு தலைமேல தூக்கி வெச்சு ஆடு, இல்லை இப்படி ஒதுக்கு!” என்று திட்டியவன், “பிரச்சனையை முடிச்சிவிடு, இழுக்காத, பேசினது தப்புதான்! அதுக்காக அப்படியே போகாம வராம இருக்க முடியுமா? அவ வந்தா வரட்டும்!” என்று சொல்ல,

அப்போதும் வெங்கடேஷ் முறைத்தான்.

அகிலாண்டேஸ்வரியை ஷோபனா “சொல்லுங்கள்” என்பது போல பார்க்க,

“டேய், கூட்டிட்டு போடா! முன்னையாவது அவங்க அம்மா வீட்டுக்கு போவா, வருவா. இப்ப அதையும் நீ குறைச்சிட்ட. அவங்களும் இங்க வர்றது குறைஞ்சு போச்சு. கூட்டிட்டு போ, எங்க போறா வர்றா? சும்மா பொண்ணுங்கன்னா வீட்டுக்காரன் முகத்தையே பார்த்துட்டு சுத்தனுமா. நாலு பேரை பார்க்க வேண்டாம்!” என்று ஆரம்பிக்க,

“ஐயோ, கிழவி நீ இருக்கியே” என்று அம்மாவை திட்டிய வெங்கடேஷ், “போ, போய் ரெடியாகு” என்று சொன்னான்.

இப்படியாக குடும்பமாக அவர்கள் துளசியை அழைத்து வர கிளம்பினர். ஆனால் அவளிடம் சொல்லாமல்..

துளசி மிகுந்த கோபத்தில் இருந்தாள். அவ்வளவு சொல்லியும் அழைக்க வரவில்லை. சமாதானம் செய்யக் கூட மீண்டும் அழைக்கவில்லை.

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருந்தாள்.

வீட்டில் கூட அவளின் அம்மா, மீரா, பிரசன்னா என்று எல்லோரும் “என்ன? என்ன?” என்று கேட்டனர்.

“ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டாலும் முகம் கோபத்தை, சோர்வை, என்று பலவித பாவங்களை காட்டியபடி தான் இருந்தது.

இவளை அழைக்க வருவது யாருக்கும் தெரியாது. அன்று மீராவிற்கு ஆஃப் அதனால் அவள் வீட்டினில் இருக்க, பிரசன்னாவும் விடுப்பு எடுத்து கொண்டான்.

இப்படியாக அவர்கள் வீட்டில் விசிராந்தையாய் இருக்க, திரு வீட்டினர் அங்கே வந்த போது ஒன்றரை மணி, உணவு உண்ணாமல் தான் வந்தனர்.

திரு சொல்லிவிட்டான், “உணவு வேண்டாம், வீட்டிற்கு போய்விடலாம். உணவு கூட உண்ணாமல் அழைத்தால் மனம் சுணங்குவர்” என்று விட்டான்.

இப்படியாக அவர்கள் வர, கதவின் பெல் ஒலித்ததும் “யாரோ?” என்று வந்து திறந்தது மீரா.

இவர்களை பார்த்ததும் அதிர்ச்சியாகி, பின்பு சந்தோஷமாகி, “அக்கா” என்று துளசியை அழைக்க,

“எதுக்குடி இப்படி கத்தற, என் மகன் எழுந்துக்குவான், இப்போ தான் கஷ்டப் பட்டு தூங்க வெச்சேன்” என்று சொல்லியபடி துளசி ரூமில் இருந்து வெளியே வந்தாள்.

இவர்களை பார்த்ததும் அப்படி ஒரு அதிர்ச்சி, பின்பு அப்படியே மகிழ்ச்சி பொங்கினாலும், நேற்றிலிருந்து என்னை அலைக்கழித்து விட்டான் என்ற எரிச்சல் பொங்கியது.

அதனை முகத்தினில் காண்பிக்காத போதும்,  “வாங்க” என்று கூடச் சொல்லாமல் திருவை பார்த்து ஒரு முறைப்பை வெளியிட்டாள்.

“வெங்கடேஷும் ஷோபனாவும் வந்திருக்காங்க!” என்று திரு எடுத்துக் கொடுத்தான்.

பின்பு தான் உணர்வுக்கு வந்தவள் “வாங்க தம்பி” என வெங்கடேஷை பார்த்து சொல்லி, “வா ஷோபனா” என்று வரவேற்றாள்.

அவர்கள் இருவரும் தாங்கள் வந்தது பிடிக்கவில்லையோ என்ற நினைக்க ஆரம்பித்தனர். துளசியின் முகம் தான் இறுக்கமாய் இருந்ததே!

அதற்குள் ரத்னாவும் பிரசன்னாவும் வந்துவிட,

“வாங்க, வாங்க மாமா!” என்ற முகமன்கள் எல்லாம் கேட்க,

“அக்கா ஏன் மாமா இப்படி இருக்கா? காலையில இருந்து முகத்தை தூக்கி வெச்சிருக்கா!” என்றான் பிரசன்னா.

“அண்ணா, நாம கூட இருக்கோம். மாமா இப்போ தான் வர்றாங்க. அவங்களுக்கு என்ன தெரியும்?” என்று மீரா எடுத்துக் கொடுத்தாள்.

“அதெப்படி எனக்கு தெரியாம போகும் மீரா. அதொண்ணுமில்லை, நான் கூப்பிட வர்றேன்னு சொன்னேன். அதுக்குள்ள என்ன அவசரம்ன்னு கோபம்!” என்று துளசியை பார்த்தவாறே சொன்னான். கண்களில் மட்டுமே புன்னகை முகம் அமைதியாய் இருந்தது திருவிற்கு.

அப்படியே மாற்றி சொல்லவும் துளசிக்கு கடுப்பை கிளப்பியது!

“என்ன கூப்பிட வந்திருக்கீங்களா? சொல்லவேயில்லை!” என்று மீரா கேட்க,   

“அதுக்கா கோபம்? எப்போ இருந்தாலும் போக தானே செய்யனும்!” என்று ரத்னா சீரியசாய் பேசினார்.

“அடேய் கிராதகா” என்பது போல துளசியின் முகத்தினில் தெரிந்த பாவனையில், திருவிற்கு அப்படி ஒரு சிரிப்பு பொங்கியது. முயன்று அடக்கி ஒன்றையும் காண்பிக்காமல் நின்று கொண்டிருந்தான்.

துளசி நேரடியாக அவனை முறைத்தாள்!

துளசி முறைக்கவும் அவனையும் மீறி சிரித்து விட்டான். திரு அப்படி சிரித்து துளசியின் வீட்டினர் பார்த்தே இராததால், ஆங் என்று பார்த்தனர். அப்போது பார்த்து வேலவனும் மதிய உணவிற்கு வர அவரும் அதிசயமாய் பார்த்து நின்றார்.

திரு சிரித்துக் கொண்டே இருக்க, அதற்கு மேல் துளசியால் பொறுக்க முடியவில்லை, “ஒரு நிமிஷம்” என்பது போல வெங்கடேஷிடமும், ஷோபனாவிடமும் சொல்லி, “மீரா பார்த்துக்கோ” என்று சொல்லி, மகன் உறங்கிக் கொண்டிருந்த ரூமின் உள் திருவின் கை பிடித்து இழுத்து சென்றாள்.

ஆம்! கை பிடித்து தான் இழுத்து போனால் அத்தனை பேர் முன்னும்!

எல்லோரும் வரவில்லை என்று சொல்ல அழைத்து போகிறாள் என்று தான் நினைத்தனர்.

திரு உள்ளே போனதும், துளசியின் டென்ஷன் பார்த்து, சிறிது சிரிப்பை அடக்கி புன்னகை முகமாக நின்றான்.

“சிரிக்கிறீங்க நீங்க, உங்களை…” என்று சொல்லி அவனை என்ன செய்வது என்பது போல பார்த்தாள்.

பின்னே அடிக்கவா முடியும்? அடித்தெல்லாம் பழக்கமில்லையே?

“என்ன பண்ணப் போற? என்னை அடிக்கப் போறியா?” என்று கையை கட்டி நின்று கேட்ட தோரணையில், துளசிக்கு சத்தியமாய் அடிக்க தோன்றவில்லை!

துளசி பார்த்தபடி நிற்க, திருவின் பார்வை தொட்டிலில் உறங்கும் மகனிடம் தாவியது.

குழந்தையை நோக்கி நகரப் போனான்.

“நகரக் கூடாது!” என்றாள் துளசி கோபத்தை இறுக்கி பிடித்தபடி

“அம்மாடி, செம பனிஷ்மென்ட்!” என்று திரு அங்கேயே கையை கட்டி அசையாமல் நின்று கொண்டான்.

Advertisement