Advertisement

“பாட்டி கிட்ட சண்டை போடுவியா? எதிர்த்து பேசுவியா? அவங்க எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா? வந்ததும் சாரி கேட்கற! என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று ஆரம்பித்து மீனாக்ஷியை ஒரு வழியாக்கி,

திரும்பி துளசியை பார்க்க “எனக்கு ஒன்னும் ஆகலை” என்று அவள் அவசரமாய் சொல்ல,

“எதாவது ஆகியிருந்தா என்னடி செஞ்சிருப்ப?” என்று அவன் கத்திய கத்தலுக்கு துளசியை விட மீனாக்ஷி பயந்து அம்மாவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

“பயம் வேண்டாம்” என்று துளசி மென்மையாய் மகளின் தோளை அணைவாய் பிடித்தாள்.

“இந்த கத்து கத்தறேன், கொஞ்சமாவது பயமிருக்கா?” என்று சொல்லியபடியே முறைக்க,

துளசி அவனை பார்த்து ஒரு மோகனப் புன்னகை சிந்தினாள்.

இதற்கெல்லாம் தான் அசரமாட்டேன் என்பது போல அப்போதும் முறைத்துப் பார்த்தவன், “ஏண்டி இப்படி பண்ற? எத்தனை தடவை ஜாக்கிரதை சொல்றோம்! விழுந்திருந்தா என்ன ஆகறது?” என்று கலங்கியபடி திரு பேச,

“ஒன்னுமாகாது நானும் இனிமே இப்படி பண்ண மாட்டேன்” என்று துளசி கெஞ்சல் குரலில் பேச, அப்போதும் திருவின் முகம் தெளியவில்லை. ஆனாலும் திரும்ப பேசவில்லை.

அதற்குள் கார் வந்து விட, பின் சித்தப்பாக்கள் வீட்டினரை அழைத்து காண்பித்தான்.

இப்படியாக எல்லாம் முடித்து, உணவும் முடிந்து துளசி உள்ளே வந்த போதும் திரு ரூமின் உள் வரவில்லை. 

ஹாலில் அவன் அமர்ந்திருப்பதை பார்த்து திரும்ப வந்தவள் “எனக்கு தூக்கம் வருது!” என்றாள்

“தூங்கு! நானா வேண்டாம் சொன்னேன்!” என்று திரு முறுக்கினான்.

ஒன்றும் பேசாமல் அவனின் அருகில் அமர்ந்து கொள்ள, “மனுஷனை படுத்தி எடுக்கிறடி” என்று சொல்லி எழுந்து சென்று படுக்கையில் அவளுக்கு முதுகு காண்பித்து படுத்துக் கொண்டான்.

அவனின் அருகில் படுத்தவள் “சாரி, காலை ஊனி வெச்சு தான் நடந்தேன். அதான் சமாளிச்சிட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே அவன் மேல் கையிட்டு அணைக்க முயல, அவளின் பெரிய வயிறு அதற்கு தடையாய் இருந்தது.

அவளின் வயிறு அவனின் முதுகில் உரச, அவனின் குழந்தையும் அப்பாவை உரசியது. ஆம்! குழந்தையின் அசைவை உணர்ந்தான்.

அவ்வளவு தான் திருவின் கோபம் எல்லாம் பஞ்சாய் பறந்து போக, வேகமாக திரும்பியவன், அவளின் வயிற்றில் கைவைத்து குழந்தையை உணர்ந்தான்.

“இன்னும் இந்த புடவையை விட மாட்டியா நீ” என்று அதட்டலிட்டு அவளை முறைத்தான்.

துளசியின் முகத்தினில் அப்போதும் வாடாப் புன்னகை,

“சிரிச்சே, என்னை கொல்றடி” என்று சொல்லிக் கொண்டே அவளின் புடவையை அவனே தளர்த்த, துளசி கண்களை மூடிக் கொண்டாள்.

மெதுவாக அவனின் கைகள் அவளின் வெற்று வயிற்றில் ஊர்ந்த நேரம் குழந்தையின் அசைவு இன்னும் அதிகமாய் இருக்க,

அந்த மணி வயற்றில் இதழ் பதித்தான்.

சத்தமல்லாத முத்தம்!

ஆம், திரு உதடுகளை விலக்கவில்லை! அப்படியே இருந்தான். அப்படியே இருந்திருந்தாலும் பரவாயில்லை, குழந்தையின் அசைவைக் கொண்டு வயிற்றில் உதடுகளால் கோல மிட்டான். குழந்தைக்கும் அப்பாவிற்கும் போட்டியோ? அம்மாவின் வயிற்றை யார் முட்டுவது என்று! உள்ளிருந்து குழந்தை என்ன செய்தது என்று தெரியாவிட்டாலும். திரு உதடுகளால் வலிக்காமல் முட்டி மோத,       

அம்மா! துளசிக்கு உடல் கூசி சிலிர்த்தது, என்னவோ ஆகியது அவளிற்கு. அப்போது அந்த நிலையை அவள் விரும்பவில்லை.   

துளசியிடம் இருந்து முதல் முறையாக ஒரு அதட்டல் கிளம்பியது, “என்ன பண்றீங்க? இப்படி எல்லாம் பண்ணக் கூடாது!” என்று.

அவளின் குரலில் வியந்து “ஏண்டி, ஏன்?” என்று முகம் நிமிர்த்தி கேட்க,

“அதெல்லாம் பண்ணக் கூடாது” என்ற துளசியின் குரலில் அவளை உற்றுப் பார்த்தவன், சிறு புன்னகையோடு “சரி பண்ணலை” என்று விலகி படுத்தான்.

சில நொடி விட்டவள் “முத்தம் தான் குடுக்க வேண்டாம்னு சொன்னேன்!” என்று மெல்லிய குரலில் சொல்ல,

“ஏன் குடுக்கக் கூடாது?” என்று சொல்லிக் கொண்டே விட்டேனா என்று திரு மீண்டும் முத்தமிட்டான். ஆனால் இப்போது வயிற்றில் அல்ல!

கைகள் மட்டும் குழந்தையின் அசைவை உணர்ந்து சிலிர்க்க, உதடுகள் வேறு வேலையில் இருக்க,

இப்போது துளசியால் அதட்ட முடியவில்லை, இதழ்கள் தான் அவள் வசமில்லையே!

இன்றோ நாளையோ என்று குழந்தை பிறப்பை கொண்டிருப்பவர்கள் செய்யும் வேலையா இது! ஹச்சோ! என்று சுற்றி நின்ற காற்று கூட வெட்கம் கொண்டு முகத்தை திருப்பியதோ!   

சில பல நொடிகள் கழித்து விட்டவன், “ம்ம், இப்போ சொல்லு நான் ஏன் கிஸ் பண்ண கூடாது?” என்று முகம் பார்த்து கேட்டான்.

“ம்ம்” முறைக்க முயன்றாலும் அது வருவேனா என்று துளசியிடம் அடம் பிடித்தது! பார்வை விடாமல் திருவின் முகத்தினை பார்த்தது!

“திரும்பவும் சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டியா?” என்று சலிப்பது போல திருவின் குரல் பேசினாலும், கண்கள் விடாமல் துளசியை பார்வையால் கபளீகரம் செய்தது.

அவனின் பார்வை வீச்சினை தாங்க முடியாமல், நிறைய நேரம் நேராகவும் படுக்க முடியாமல் சிரமப்பட்டு ஒருகளித்து படுத்தாள்.  

இப்போது இருவருக்கும் இடையில் அவளின் நிறைமாத வயிறு இருக்க,

அதனை வருடுவதை திருவின் கைகள் நிறுத்தவே இல்லை. கணவனின் சுகமான வருடலை அனுபவித்தபடி, அவனின் முகம் பார்த்து கொண்டே இருந்தாள் விடாமல்.

“ஷப்பா, மீசை வெச்சதும் வெச்சேன். ஒருத்தி என்னை விடாம பார்க்கும் போதேல்லாம் சைட் அடிக்கறா!” என்று திரு பேசினான்.

அவனின் மீசையை மெதுவாக ஆனால் வலிக்கும் படி பிடித்து துளசி இழுக்க,

“ஷ் விடுடி” என்று மெல்லிய குரலில் திரு அலறினான்.

“நான் ஒருத்தன் ஜோக்கர் மாதிரி பேசியே சலிக்கறேன். ஒரு வார்த்தை பேசறியா நீ?” என்று திரு அதட்டியபடியே அவளின் கையை அவனுடைய மீசையில் இருந்து எடுத்து விட்டான்.

துளசி அவனின் முகம் பார்த்து, அவன் மயங்கும் புன்னகையை மீண்டும் சிந்த, திருவின் முகத்திலும் புன்னகை!

ஆம்! போன மாதம் தான் திரு மீசை வைத்தான். பெரிய மீசை தான் வேண்டும் என்று துளசி சொல்லிவிட, அதனால் சில மாதங்கள் தாடி வளர்த்து பின் மீசை வைத்தான்.

எல்லோருமே அவனுக்கு நன்றாக இருப்பதா சொன்னாலும், அன்றிலிருந்து துளசி அவனை பார்க்கும் பார்வையே மாறிவிட்டது.

அவனை ரசித்து ரசித்து பார்க்க, பல சமயம் “என்னை அப்படி பார்க்காதடி, என்னால வேலை செய்ய முடியலை, இயல்பா இருக்க முடியலை, ஒரு மீசை வெச்சதுக்கு இந்த கலாட்டா பண்ற நீ!” என்று திரு பல முறை சொல்லிவிட்ட போதும் அதற்கு ஒரு பிரதிபலிப்பும் இருக்காது.

இப்போதும் அந்த பார்வை தான் பார்த்திருந்தாள்.

“இரு, உன்னை என்ன பண்ணறேன் பார்!” என்று திரு மீண்டும் வயிற்றில் உதட்டை மட்டும் பதிக்க,

“அச்சோ, ப்ளீஸ் வேண்டாம்!” என்று துளசி கெஞ்சினாள்.

“அப்போ நீ என்னை அப்படி பார்க்காதே!” என்று திரு ப்ளாக் மெயில் செய்ய, ஒரு ரகசிய நாடகம் அங்கே அரங்கேறியது.

திரு விடாமல் உதடுகளால் அவளை சீண்ட,

“இதெல்லாம் வேலைக்காகாது” என்று புரிந்தவள், அவளின் வயிற்றில் இருந்த அவனின் முடியை பற்றி இழுத்து, அவனின் முகத்தினை மேலேற்றியவள், அவன் என்ன என்று உணரும்முன்னே முகத்தினை அருகில் இழுத்து வலிக்க ஒரு முத்தமிட்டாள்.

அவள் விட்ட போது “என்னடி பண்ற ராட்சசி?” என்று முறைத்தான்.

“என்ன பண்ணினேன்?” என்று ஒன்றொன்றாய் இரு புருவங்களையும் உயர்த்தி அவள் கேட்ட பாவனையில், “அம்மாடி, இதெல்லாம் வேலைக்காகாது!” என்று அவள் மனதினில் நினைத்ததை உணர்ந்து திரு விலகிப் படுத்தான்.

Advertisement