Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு :

அன்று கட்டடம் ஆரம்பிப்பதற்கான பூமி பூஜை, மேகநாதனின் குடும்பத்தில் எல்லோரும் ஆஜர்! துளசியின் வீட்டிலும் எல்லோரும் ஆஜர்.

ஒரு மாதத்திற்கு முன்பு துளசி பேரில் நிலம் பதிவாகியிருக்க, லோன் சேங்க்ஷன் ஆகியிருக்க, இதோ வேலை ஆரம்பிப்பதற்கான பூமி பூஜை.

துளசிக்கு இப்போது ஏழாம் மாதம், வயிறு நன்றாகவே தெரிய ஆரம்பித்து இருந்தது.

வேலவன், ரத்னா, பிரசன்னா, மீரா என்று எல்லோரும் வந்திருக்க, பூமி பூஜை அதனோடு துளசியின் வளைகாப்பும் கூட. அவர்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்து நிருபமாவும் வந்திருந்தாள். சத்தியநாதனிடம் அவள் பேசியிருந்தாலும் இன்னும் அவர் யோசனையிலேயே இருந்தார். மனைவியிடம் கூட இதனை பற்றி பேசவில்லை.

நிருபமாவும் அம்மாவிடம் கூட பேசவில்லை. அம்மா திட்டுவார் என்ற பயம் இருக்க, அப்பாவிடம் மட்டும் பேசியிருந்தாள். அவர் இன்னம் ஒன்றுமே சொல்லவில்லை, அவளாக கேட்கவும் இல்லை.  

பிரசன்னாவை அவள் பார்த்தது அவளின் கல்லூரிக்கு அவன் ஒரு செமினார் எடுக்க வந்த போது. எங்கேயோ இவனை பார்த்திருக்கிறோமே என்ற யோசனை தான். செமினார் முடிந்து அவளின் வகுப்பு தோழர்கள் சென்று அவனிடம் பேச்சு கொடுக்க, அவளும் பக்கத்தில் நின்றிருந்தாள்.

பிரசன்னாவின் வசீகரமான தோற்றம் அவளை கவர்ந்து இருந்தது. இப்போது பக்கத்தில் இருந்து பார்க்கும் போது அவனின் பேச்சு நடை உடை பாவனை எல்லாம் அவ்வளவு மரியாதையாய் இருக்க, மாணவர்களுக்கு சொல்லவா வேண்டும், அவனை கேள்வியால் துளைக்க, அத்தனை பேருக்கும் அசராமல் இன் முகத்தோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் எடுக்க வந்திருந்தது துறை சார்ந்த செமினார் அல்ல, பிரசன்னாவின் துறை பவர் எலக்ட்ரானிக்ஸ், அவன் எடுக்க வந்தது எப்படி மின்சாரத்தை சேமிப்பது என்ற விழிப்புணர்வு! பலரும் பலகாலமாய் சொல்லும் விஷயம், ஆனால் அவன் சொன்ன விதம் அப்படி ஈர்த்தது எல்லோரையுமே!

நிருபமா எதுவும் பேசாமல் அமைதியாய் நின்று தான் பார்த்திருந்தாள். அப்போது ஒரு மாணவன் “நீங்க எந்த ஊர் சார்?” என, “சென்னை” என்றவனிடம், “அது தான் உங்க நேடிவ்வா?” என்று பேச்சை வளர்த்தான். அதில் தான் தர்மபுரி என்று தெரிய, பின் “இப்போ நாங்க அங்கே இல்லை, அக்கா மட்டுமே” என்று சொல்லி அவளின் குடும்ப பெயர் சொல்ல,

அப்படித் தான் பிரசன்னாவை நிருபமாவிற்கு தெரியும்!

அவளுக்கு அவனிடம் பேசவேண்டும் என்ற ஆர்வம் கொள்ளை கொள்ளையாய் இருந்தது.

அன்றைக்கு தான் மீனாக்ஷி அடிபட்டது அம்மா சொல்லியிருக்க, அவன் கிளம்பும் நேரம் அவனை தனியாய் பிடித்தவள், “ஹாய் நான் நிருபமா” என்று சொல்லி, “எனக்கு துளசி அண்ணியாகனும்” என்று சொல்லி மீனாக்ஷி அடிப்பட்டதை சொன்னாள்.

பிரசன்னா அப்படியா என்றவன் பின்பு அவனின் கவனம் எல்லாம் மீனாட்சியிடம் சென்று விட்டது.

ஒரு தலையசைப்போடு நிருபமாவிடம் விடை பெற்று விட்டான். பின்பு அவன் மீனாக்ஷிக்கு குடிசை கட்ட வந்த போது தான் நிருபமா பார்த்தது. முதல் முறை பார்த்த போதிருந்தே அவனின் ஞாபகங்கள், இப்போது மீண்டும் பார்க்கவும் அவனின் ஞாபகங்கள அதிகமாகவும், திரும்ப அவனை மீனாக்ஷியின் விஷேஷதில் பார்க்கவும் அப்பாவிடம் சொல்லிவிட்டிருந்தாள். அவ்வளவே!

மீண்டும் இருமுறை பார்த்த போதும் பிரசன்னாவிடம் “உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா” என்று கூட பேச முற்படவில்லை.

அவளுக்கு பிடித்தது அப்பாவிடம் சொல்லி விட்டால் அவ்வளவே! எல்லாம் அப்பா பார்த்துக்கொள்வார் என்ற நினைப்பு அவளிடம் அதிகமாய் இருந்தது.  

உண்மையில் பிரசன்னாவிற்கு அவளை ஞாபகம் இல்லவே இல்லை. அக்கா வீட்டிற்கு இருமுறை வந்த போதும் நிருபமாவை எல்லாம் கவனிக்கவில்லை. அவனுண்டு அவன் வேலை உண்டு என்று தான் இருந்தான். 

சத்தியநாதநிற்கு ஒரே யோசனை, படித்திருக்கிறான், நல்ல வேளையில் இருக்கிறான் என்பதற்காக வீடு கூட இல்லாதவனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியுமா? அப்படியே வீடு வாங்கினாலும் அதன் டியுவை அத்தனை வருடம் கட்டுவர். அதையும் விட தங்களிடம் வேலை பார்ப்பவர் அவனின் அப்பா! பெண்ணை எடுப்பது வேறு கொடுப்பது வேறு.

எப்படி அவரை சம்மந்தியாக சமமமாக நடத்த! துளசியின் பொருட்டு சம்மந்தியாகி விட்டாலும் அப்படி பெரிதாக இவர்கள் அவர்களின் வீட்டினருக்கு மரியாதை கொடுத்தது கிடையாதே.

அதிலும் பிரசன்னவிற்கும் நிருபமாவிற்கும் பழக்கமா இல்லையா எதுவும் தெரியாது.   

இப்போது மகள் இந்த நாளில் குதிக்கவும், அவருக்கு சற்று எரிச்சலாக வந்தது. “இப்போ எதுக்கு வந்த? உனக்கு லீவ் கூட இல்லையே” என கோபப்படவும்,

எப்போதும் கோபப்படாத அப்பா கோபத்தை காண்பிக்கவும், நிருபமாவின் முகம் சுருங்கி போய்விட்டது.

ஆனாலும் சத்தியநாதனுக்கு என்னவோ ஒரு கோபம், தன்னை இந்த குழப்ப நிலையில் வைத்து விட்டாளே என்று. மகளை மிக அதிகமாக கோபப்பட்டு பேசி விட்டார்.

அப்பாவிடம் இப்படி ஒன்றை எதிர்பார்த்திராத நிருபமா அடுத்த அரைமணியில் சென்னை திரும்ப கல்லூரிக்கே கிளம்பிவிட்டாள்.

அதே போல தான் மீராவை பார்த்ததும் மேகலா திருமண பேச்சை கமலநாதனிடம் ஆரம்பிக்க,

“அழகும் படிப்பும் மட்டும் போதாது! வசதில்லை, நாளைக்கு மாமனார் வீடு நம்ம பையனுக்கு நிறைய செய்ய வேண்டாமா? அதெல்லாம் பேசாதே” என்று விட்டார் முடிவாக.

பின் அதுவும் பேச்சில்லை!

எது எப்படி இருந்தாலும் இன்னும் வசதி வாய்ப்புகள் முக்கியமாக திருமண சந்தையில் பார்க்கப்படுகின்றன!

அதனால் இரு பேச்சுக்களும் ஒற்றிபோய் விட்டன.

அவரவற்குள் இது நடக்க மற்றவர்களுக்கு இது தெரியாமலேயே போனது. ஆம்! இந்த திருமணங்கள் நடக்குமா? நடக்காதா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.  

பூமி பூஜையில் துளசி பின்னால் தான் நின்றிருந்தாள், முன் எல்லாம் போகவில்லை. அங்கே பூஜைக்கு யார் என்ன கேட்டாலும் அகிலாண்டேஸ்வரியிடம் “போங்க அத்தை” என்றாள் மீனாக்ஷியை கூட விடவில்லை.

இன்னும் வீட்டினர் தவிர அந்த இடம் துளசியின் பேரில் வாங்கப் பட்டிருக்கிறது என்று மற்றவர்களுக்கு தெரியவில்லை.

பூஜை ஆரம்பிக்கும் நேரம் தான் சித்தப்பாக்களிடம் சொன்னான். அப்போது தான் துளசி வீட்டினருக்கே தெரியும். ஆங் என ஆச்சர்யப் பட்டு போயினர் அனைவரும். கூட எப்படி இப்படி என்றும்!  

“நம்ம பேர்ல எல்லாம் வாங்கலையே” என்று திருவின் சித்திகள் கூட நினைத்தனர்.

“இது முழுக்க துளசியோடது சித்தப்பா” என்று சொல்லிவிட்டான். அப்படி ஒரு சலசலப்பு! எப்படி இவ்வளவு பெரிய சொத்தை அவனின் மனைவி பேரில் வாங்க முடியும், அதுவும் சொத்துக்கள் பிரிக்கப்படாத நிலையில். அப்போது ஷோபனா பேரில் என்று சித்தப்பாவே கேள்வி எழுப்பினார்.

சாரதாவும் சித்ராவும் அவருடன் சேர்ந்து பேசினர்.

துளசி முகத்தினை தான் விரைந்து திரும்பி பார்த்தான் திரு.

அவளின் முகத்தினில் ஒரு சலனமும் இல்லை, ஆசுவாசத்தோடு மூச்சு விட்டான். துளசிக்கு இவன் எதுவும் பேசிவிடுவானோ என்ற கவலை.  

துளசி “கண்டு கொள்ளாதீர்கள்” என்று கண்களில் தைரியம் சொல்ல, திரு பேச வரவும், “பேச வேண்டாம்” என்ற துளசியின் சிறு தலையசைவில் அமைதியாகி விட்டவன் அம்மாவை பார்த்தான். 

அப்போதும் விடாமல் ஒரு வார்த்தை பேசியே விட்டான். “நீங்கல்லாம் சித்திங்க பேர்ல வாங்கலைன்னா நானும் துளசி பேர்ல வாங்க கூடாதா?” என்று. துளசி என்ன பேச்சு இது எனக்கு பிடிக்கவில்லை என்ற பாவனையை முகத்தினில் காண்பிக்க அப்படியே வேறு பேசாமல் அமைதியாகிவிட்டான்.

துளசி ஓரிருமுறை அவனிடம் சொல்லியிருந்தால், “சண்டை போடலாம்! எப்போ? முழுசா அவங்க கிட்ட உறவை முறிச்சிக்கறோம்ன்றப்போ! அதை நாம எப்போவுமே பண்ண போறதில்லை! உங்க அத்தைங்க வீடுன்றதை விட, ஒன்னு ஷோபனா வீடு, இன்னொன்னு ராதா அண்ணி வீடு! அதனால் சண்டை போடக் கூடாது! சும்மா சண்டை போட்டுட்டு அப்புறம் அவங்க வரும் போது ஒன்னுமே நடக்காத மாதிரி பேசுவோமா! இது வேண்டாம்!” என்று ஸ்திரமாய் சொல்லியிருந்தாள்.

திருவும் இப்போது அப்படி எதுவும் செய்வதில்லை, ஆனாலும் இன்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டான்.

“சின்ன பையன் நம்மளை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டான்!” என்று சித்தப்பாக்கள் மனம் சுணங்கிய போதும், ஆம்! நாம் செய்யவில்லை! இப்போது செய்யும் அவனை குறை சொல்ல என்ன இருக்கின்றது என்றும் யோசித்தனர்.       

மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் தான் பேசினர். “சொத்து பிரிக்கலைன்னாலும் யாருக்கு என்னன்னு சொல்லிட்டோம், அவங்க அவங்களதை அவங்க அவங்க எடுத்துக்கறாங்க! அதுவுமில்லாம இதுல போட்ட பணம் குடும்ப தொழில்ல வந்ததே இல்லை! திருவுக்கு வேற சில தொழிலும் இருக்கு!”

“நான் இப்போவே எழுதிக் கொடுக்கறேன்னு தான் சொன்னேன். ஆனா பசங்க தான் நீங்க இருக்குற வரை உங்க பேர்ல இருக்கட்டும், அதுக்கு அப்புறம் எங்களுக்கு வந்தா போதும்னு சொல்லிட்டாங்க!” என்றார் மேகநாதன்.

“அப்போ ஷோபனா பேர்ல இடம்” என்று சாரதா சீறி எழ,

“அதை அவ புருஷன் கிட்ட கேளுங்க அண்ணி” என்றார் அகிலாண்டேஸ்வரி.

“அப்போ என் மருமகளுக்கு?” என சித்ரா பேச , ராதா அமைதியாக பார்த்து தான் இருந்தாள். அகிலாண்டேஸ்வரியும் மேகநாதனும் அவளிடம் முன்பே பேசியிருந்தனர்.

முன்பானால் வீட்டில் நடப்பதை தன் தம்பிகள் இருவரிடமும் சொல்லி விடுவார். ஆனால் இந்த முறை மேகநாதன் சொல்லவில்லை. இது திருவின் முடிவு, வேண்டுமானால் அவன் சொல்லிக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டார்.

நடப்பதனைத்தையும் வெங்கடேஷ் ஷோபனாவோடு வேடிக்கை தான்  பார்த்திருந்தான். ஷோபனாவின் இயல்பு குணமான எடுத்தெறிந்து பேசுவது அவ்வப்போது எட்டி பார்த்தாலும் மிகவும் குறைந்து இருந்தது . இவளோடு தான் வாழ்க்கை என்றான பிறகு மனது சுணங்குவதில் பயனில்லை என்று புரிந்து வெங்கடேஷ் அவளை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டிருந்தான். 

சென்ற முறை துளசியின் அப்பாவும் அம்மாவும் துளசியை பார்க்க வந்த போது தயங்கி தயங்கி தான் என்றாலும் எப்படியோ ஒரு மன்னிப்பை கேட்டு விட்டாள்.

அது போதுமே துளசிக்கு எப்போதுமே ஷோபனாவிடம் ஒதுங்கி போகும் துளசி இப்போது ஓரிருவார்த்தை பேச ஆரம்பித்து இருந்தாள்.

“தொழில் எப்பவும் பசங்களுக்கு தான், அதுல பொண்ணுங்களுக்கு பங்கு கிடையாது. என் பொண்ணுக்கு நிறைய செஞ்சிட்டேன், இன்னம் செய்வேன்!” என்றார் மேகநாதன்.

அகிலாண்டேஸ்வரி ஒரு படி மேலே போய், “என்னோட நகை பணம் எல்லாம் என் பொண்ணுக்கு தான். என் மருமகளுங்களுக்கோ பேரப் பிள்ளைகளுக்கோ கிடையாது. ஆனா வரும்போது அது என் மகளுக்கு மட்டும் தான். உன் பையன் அதை வாங்கி வட்டிக்கு விடறதுக்கு கிடையாது. அதுவும் எனக்கு அப்புறம் தான்!” என்றார் தெளிவாய்.

எல்லாம் பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே பேசி முடிக்கப் பட்டு விட்டது. மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் பேசிய பிறகு அங்கே வேறு பேச்சுக்கள் இல்லை.

“ஐயோ! சண்டை வந்து விடுமோ!” என்று துளசியின் அம்மா வீட்டினர் பார்த்திருக்க, அங்கே அப்படி எதுவும் இல்லை. திரு பேசியிருந்தால் வார்த்தைகள் முற்றி இருக்குமோ என்னவோ துளசி தான் திருவை பேசவே விடவில்லை.

Advertisement