Advertisement

அத்தியாயம் இருபது :

அடுத்த நாளும் மீனாட்சியை திரு தான் பள்ளிக்கு கொண்டு போய் விட்டான்.

துளசியின் முகம் பார்த்தே அவளை எதுவும் பேசவில்லை, எதுவும் தொந்தரவு செய்யவில்லை. ஆம், இரவு சரியாக உறக்கம் இல்லாமல் முகம் ஒரு மாதிரி இருக்க கண்கள் சற்று வீங்கி இருக்க, பார்த்தவுடனேயே “உடம்பு சரியில்லையா துளசி” என்றான்.

“இல்லை” என்பது போல ஒரு தலையசைப்பை கொடுத்து வேலையைப் பார்க்க,

“உடம்பு சரியில்லன்னா சொல்லிடணும், டாக்டர் கிட்ட போயிடணும், இது என்ன பண்ணுதுன்னு விடக்கூடாது” என்றான் பொறுமையாக.

அதற்கும் சரி என்பது போல தலையசைத்து மகளுக்கு சமையல் வேலை பார்க்க, அதில் திருவிற்கு அப்படி ஒரு கோபம் வந்தாலும், அவளின் முகம் பார்த்த பிறகு அவளை அரட்டமுடியவில்லை, கோபமும் காண்பிக்க முடியவில்லை. அமைதியாக சென்று அமர்ந்து கொண்டான்.

தன்னை அதட்டி, உருட்டி, மிரட்டும், உரிமை பாராட்டும், சண்டையிடும் துளசி வேண்டும் என்ற எண்ணம் திருவினுள் ஓங்கி இருக்க, அதன் வெளிப்பாடே இந்த குறை சொல்வதும், சண்டையிடுவதும். ம்கூம்! என்ன சண்டையிட்டாலும் அதன் வெளிப்பாடுகள் துளசியிடம் இல்லை.

ஆனால் திரு இப்போது சண்டையிடவில்லை, அமைதியாகி விட்டான். எல்லாம் உடனே சரியாகிவிடாது என்று புரிந்தாலும், தான் சரியாக பேசாத போதும் கூட தன் முகம் பார்த்தே தன் எண்ணம் புரிந்து நடப்பவள் இப்போது சொல்லியும் எதுவும் செய்வதில்லை என்ற திருவின் ஆதங்கம், கோபமாக மாறி அவளை தாக்கியது.

அவனுக்கு புரியவில்லை வீட்டை விட்டு கோபித்து பிறந்த வீடு செல்வது துளசியின் இயல்பு கிடையாது. சென்றாலும் மகளை கணவனை மூன்று மாதங்கள் பிரிந்து இருப்பது எல்லாம் அவளின் இயல்பே அல்ல. அப்படி அவளையும் மீறி அவளுள் மாற்றங்கள் இருக்க, திருவின் எதிர்பார்ப்பு முட்டாள் தனமானது. அது அவனுக்கு அவ்வளவாக புரியவில்லை என்றாலும் அவளை திரும்ப காய்ச்சி எடுக்கவில்லை.        

பின் வந்த நாட்களிலும் துளசி அப்படியே தான் இருந்தால் ஒரு சோர்வு, ஒரு பிடித்தமின்மை, எப்போதும் அவளுள் யோசனைகள், மகளிடம் கூட உற்சாகமின்றியே பேசினாள்.   

மகளுக்கும் தனக்கும் ஒரு இணக்கம் வரட்டுமென்று இப்போது மீனாக்ஷியை பள்ளிக்கு அழைத்து செல்வதும் அவனே கூட்டிக் கொண்டு வருவதும் அவனே. கூடவே மகளின் படிப்பையும் கவனிக்க வேண்டும், படிப்பில் மிகவும் பின் தங்கி இருந்தாள். சற்று தூரம் தான் பள்ளி, அவனுக்கு நேர விரயமும் கூட, ஆனாலும் செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தவனாக அதை செய்தான்.

இத்தனை நாட்கள் எப்படியோ? இனி எல்லாம் சரியாக நடக்க வேண்டும் இருக்க வேண்டும் என்ற எண்ணம். கூடவே மகள் இப்போது பதின் வயதின் ஆரம்பத்தில் இருக்க அவளை தனியாக விட விருப்பமில்லை. வீட்டை விட்டு போக வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் வர விடவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டவனாக மகளிடம் சற்று அதீத அக்கறை எடுத்துக் கொண்டான். அவளிடம் சற்று பேச்சு கொடுத்தான். அவன் கொஞ்சமாக கொடுத்தால் மகள் அதனையும் விட அதிகம் பேசினால் அவனிடம்.  

மாலையில் பள்ளியில் இருந்து அழைத்து வருபவன் அப்படியே வீடும் வர ஆரம்பித்தான். துளசியின் முகம் பார்ப்பதற்காகவே. அவளிடம் தெளிவே இல்லை. அதனால் அவளிடம் சண்டையிடவேயில்லை. அவள் திரும்ப பழையபடி ஆனால் போதும் என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாய் இருந்தது.

துளசி தன்னை கொஞ்சவில்லை என்ற எண்ணம் பின்னுக்கு போய்விட, அம்மா மூலமாக பணப் பிரச்சனைகள் தீர்ந்து, இப்போது கவனம் முழுவதும் துளசியிடம் மட்டுமே.

அப்போதும் திருவிற்கு தான் போய் துளசியை கொஞ்ச வேண்டும் என்று தோன்றவில்லை. இந்த வாரமாக சண்டையிடாமல் குறை சொல்லாமல் அமைதி காத்தாலும், அவனின் பார்வையே மாறி அதில் துளசியை பார்க்கும் போது ஒரு அனுசரணை தெரிந்தாலும், கணவனின் அருகாமை இப்போது முக்கியம் என்று அவனுக்கு புரியவில்லை.   

இப்படி கவனித்தாலும் அவனாக அருகில் செல்ல வில்லை. இவன் இருக்கும் இடத்தில் அவளாக எப்போதுமே வந்து அமர மாட்டாள். அவள் இருக்கும் இடத்திற்கு இவன் போவதும் கிடையாது. பார்வையால் தொடருவான், கவனிப்பான் அவ்வளவே. பேச்சுக்களும், அவளாகினும் சரி அவனாகினும் சரி தேவையான பேச்சுக்கள் மட்டுமே!

அதற்கு மேல் இருவருவருக்குமே வருவதில்லை. அதுவும் திரு ஒரு வார்த்தை கூட அதிகம் பேசவில்லை. திரும்ப எதுவும் சண்டையிடுவது போலவோ அல்லது குற்றம் சொல்லுவது போலவே பேசிவிடுவோம் என்று அளவாகவே பேசினான்.     

அன்றும் “நீ ரொம்ப டல்லா இருக்க துளசி ஹாஸ்பிடல் போயிட்டு வர்றியா அம்மா கூட” என்றான்.

“இல்லை, அடுத்த வாரம் தான் வர சொல்லியிருக்காங்க தேவையில்லை” என்று விட்டாள். மீனாட்சியை பள்ளிக்கு அழைத்து செல்வதும் வருவதுமாய் இருக்க, மற்ற நேரங்களில் தொழிலைக் கொண்டு பிசியாக இருந்தான். அதனால் தான் அப்படி கேட்டான். அவள் வேண்டாம் என்ற போதும் “அம்மா, அவளை கூட்டிட்டு போம்மா, ரொம்ப சோர்வா தெரியறா” என்று விட,

அகிலாண்டேஸ்வரிக்கு வேறு என்ன வேலை? “போயிட்டு வரலாம் துளசி” என்று ஒரு அதட்டலிட்டார்.

அதற்கு எப்படி துளசி மறுப்பாள் “சரி” என்று உடனே கிளம்பிவிட்டாள்.

டாக்டர் அவளை பரிசோதித்து விட்டு “நல்லா தான் இருக்கா” என்று சொல்ல,

“ஆனா திரு சொல்றான் அக்கா, இவ ரொம்ப சோர்வா இருக்கான்னு” என்று அகிலாண்டேஸ்வரி சொன்னார்.

“என்ன துளசி? அப்படியா இருக்க! ஏன்? சொல்லு! எங்களுக்கு எப்பவாவது பார்க்கறதுனால தெரிய வாய்ப்புகள் குறைவு. உனக்கு தான் தெரியணும்! அப்படி இருக்கா!” என்றார்.

“எனக்கு தெரியலை, நான் எப்பவும் போல தான் இருக்கேன்!” என்றாள்.

“துளசி மனசை உற்சாகமா வெச்சிக்கோ, இப்ப நீ எப்படி இருந்தாலும் அது உன் குழந்தைகிட்ட பரிமளிக்கும். நல்லா சாப்பிடு, நல்லா தூங்கு, மனசை சந்தோஷமா, உற்சாகமா வெச்சிக்கோ, இப்படி இருந்தா இந்த உலகத்துக்கு உன் குழந்தை வரும் போது அதுவும் உற்சாகமில்லாம இருக்கும்”

“ஏதாவது உனக்கு மன வருத்தம் இருக்கா, குழந்தை நல்லா தான் இருக்கு. ஆனா போன தடவை நீ வந்ததுக்கும் இப்போதைக்கும் கொஞ்சம் கூட உடல் எடை ஏறலை. அதையும் விட ரெண்டு கிலோ குறைஞ்சிருக்க, இது நல்லதுக்கில்லை” என பேசிக் கொண்டே செல்ல,  

அவ்வளவு தான் அகிலாண்டேஸ்வரி வீட்டிற்கு வந்ததும் திருவிடம் எல்லாம் ஒப்பித்து, “நீ இடம் வாங்குவியோ, எதையாவது கட்டுவியோ, எனக்கு தெரியாது, ஆனா துளசி நல்ல படியா பெத்து குழந்தையை குடுக்கணும்” என்று அவனை மிரட்டினார்.

திரு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க, “நீ ரொம்ப அவகிட்ட கோபப் படறியோ?”

“இல்லையேம்மா, இந்த கொஞ்சம் நாளா நான் சண்டையே போடலை”  

“அப்போ அதுக்கு முன்ன போட்டியா? அடேய் குழந்தை நல்ல படியா இந்த பூமிக்கு வரணும். அதுவரைக்கும் நீ அவ கிட்ட சண்டை போட்ட பிச்சுபுடுவேன்”

“நானே எதுவும் சொல்றதில்லை இப்போல்லாம் அவளை. இப்போ அவ உடல் ஆரோக்கியம் மட்டுமில்லை மன ஆரோக்யமும் முக்கியம், எனக்கு குறிப்பா சொல்ல தெரியலை. ஆனா அவ முன்ன மாதிரி இல்லை, எதுலயும் கவனமில்லை, இப்போ ஷோபனா கொஞ்சம் வீட்டை கவனிக்கறதால வேலை ஆகுது” என்று திருவை வருத்தெடுத்தார். இதெல்லாம் துளசிக்கு தெரியாமல் தான் பேசினார்.

துளசிக்கும் இப்போது திரு நிறைய மாறி இருக்கிறான் என்று புரிந்தது. தானும் அதற்கு தக்கார் போல பேசவேண்டும் பழகவேண்டும் என்று நினைத்தாலும் அதை செயல் படுத்த முடியவில்லை. இப்போது இருக்கும் அவளின் கர்ப்ப கால மாற்றமா? இல்லை முன்பிருந்து இத்தனை வருடங்களாக இருந்த வாழ்க்கையினால் வந்த தயக்கமா? அவளுக்கே தெரியவில்லை.

அவள் ஏங்கி இருந்த வாழ்க்கை அவளின் கையருகில் ஆனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

நிறைய இது குறித்து யோசிக்கும் போது, என்ன செய்வது என்று தெரியாத நிலை வரும் போது, ஒரு சோர்வு வந்து விடுகிறது அவளுக்குள். அதுவும் இன்று டாக்டர் “நீ இப்படி இருந்தால் அது உன் குழந்தைக்கும் அப்படி தான் சோர்வை கொடுக்கும்” என்று சொல்லிவிட, ஒரு பயம் மனதில் சேர்ந்து கொண்டது.

மனது என்னவோ முழு நேரமும் பிசைந்தது. சகஜ பேச்சுக்கள் எல்லாம் எப்போதும் இருந்ததில்லை என்பதால் திருவிடம் இதை பகிர வரவில்லை. அவளின் பயம் அவளோடே.        

திருவிற்கும் அவளை உற்சாகமாக வைக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனின் ஒற்றை அணைப்பு எல்லாம் மீட்டெடுக்கும் என்று தெரியவில்லை.

துளசி எடை குறைந்து விட்டாள் என்று அவளின் உணவிலும் அகிலாண்டேஸ்வரியும் திருவும் அக்கறை எடுக்க ஆரம்பித்தனர்.

அம்மா திட்டிய யோசனையோடே திரு படுத்திருந்தான். உறக்கம் வரவில்லை. “நான் தான் இப்போ அவளோட சண்டையே போடலையே, அப்புறம் ஏன் இப்படி இருக்கா?” என்ற யோசனை மட்டுமே.   

நீண்ட நேரம் உறக்கம் வராது போக, வெறுமனே படுத்திருந்தான். பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் அந்த இரவின் மடியில் நன்கு கேட்க, துளசியாக தான் இருக்கும் என்று அனுமானித்தவன், எழுந்து மகளும் மனைவியும் படுக்கும் உள் ரூம் சென்றான்.

ஆம்! மீனாக்ஷி மட்டும் இருக்க, திடீரென்று கதவை திறந்து வெளியே வரும் துளசி பயந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்து, “துளசி, உள்ளயா இருக்க” என்று லேசாக கதவை தட்டி கேட்டான்.

“ஆமாம், இருக்கேன்” என்று துளசியின் குரல் கேட்ட பிறகு சென்று படுக்கையில் அமர்ந்து கொண்டான்.  

வெகுநேரம் கழித்தே துளசி வர, அவளை பார்த்ததும் எதோ சரியில்லை என்று தோன்ற, “ஏன் இவ்வளவு நேரம் துளசி, என்ன பண்ணுது?” என்றான் கவலையாக.

உடல் உபாதைகளை பற்றி மிகவும் சகஜமான பேச்சுக்கள் இதுவரை இருந்ததில்லை. துளசி தயங்க,  

“லூஸ் மோஷன் ஆகுதா?” என்றான்.

“இல்லையில்லை” என்றவள் வேறு சொல்லாமல் ஒரு புறம் அமர்ந்து கொண்டாள்.

சட்டென்று கோபம் எட்டிப் பார்த்தது. முயன்று “கோபப்படாதே” என்று சொல்லிக் கொண்டவன், “என்ன பண்ணுது துளசி? ஏற்கனவே வெயிட் எல்லாம் குறைஞ்சிருக்க போல, சொல்லு, சொன்னாதானே தெரியும். இல்லை, அம்மாவை கூப்பிடவா?” என்று எழுந்தான்.

“வேண்டாம், வேண்டாம்” என்று சொன்னவள்,

“சூடு பிடிச்சிடுச்சு, அது தான் ஒரு மாதிரி இருக்கு” என்று தயங்கித் தயங்கி சொல்லவும்,

“என்ன பண்ணினா சரியாகும்?” என்றான் அவளிடமே.

“மோர் இல்லை, ஜூஸ் மாதிரி எதுவும் வேண்டாம், கொஞ்சம் பால் குடிச்சு பார்க்கிறேன்” என்று சமையல் அறை செல்ல, அவளுடனே சென்றான்.

Advertisement