Advertisement

அத்தியாயம் ஒன்பது :
“தப்பு செஞ்சிட்டு இப்போ அழுது என்ன பிரயோஜனம்?” என்றான்.
“தப்பா? என்ன தப்பு செஞ்சேன்?” என்று அழுத விழிகளோடு நிமிர்ந்தாள்.
இப்போது பார்வையில் ஒரு முறைப்பு வந்திருந்தது…
இவ்வளவு நேரம் நீ இருந்தது என்ன? இப்போது இருப்பது என்ன? என்பது போல… அதை பார்வையிலும் காண்பித்தான்.
அதனை புரிந்தவள்… “நான் உங்களை என்னை கல்யாணம் பண்ண வேண்டாம் சொன்னேன் தானே! உங்களை யாரு பண்ண சொன்னா? நான் இப்போ தப்பு பண்றதுக்கு காரணம் நீங்க தான்!”
“ஆனாலும் நான் உங்களை குறை சொல்லலை, என்ன செய்யறேன்னு தெரியாமையும் செய்யலை!” என்றாள் நிமிர்வாகவே.
“ம்ம், அப்புறம் எதுக்கு அழுத?”  
“அது அம்மா ஞாபகம் அழுதேன்!”
இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.. “பார்க்கவேண்டியது தானே உங்கம்மாவை… உன்னை யாரு இங்க வந்து ஒளிஞ்சிக்க சொன்னா!”
“அம்மா என்னை பார்க்க மாட்டாங்க, நான் எப்படி பார்க்க!”
“ஏன் பார்க்க மாட்டாங்க?”
“நான் தான் உங்களுக்கு டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பினேனே”
“ஆனா அது உங்கம்மாக்கு தெரியாதே”
“என்ன?” என்று அப்படியே எழுந்து நின்று விட்டாள்.
“எதுக்கு இவ்வளவு ஷாக்?”
“ஏன் சொல்லலை? எங்கம்மா கிட்ட ஏன் சொல்லலை? இன்னும் அம்மாக்கு தெரியாதுன்னா எப்போ தெரிஞ்சிக்குவாங்க? சொல்லணும் தானே!” என பட படவென்று பேசினாள்.
“ஷ்” என்று வாயில் விரல் வைத்து அடக்கியவன்.. “முதல்ல உட்கார்!” என்றான் அதட்டலாக.
அவள் அமரவும்…
“உன்னை கூட்டிட்டு போகணும்ன்னு தான் வந்தேன். இந்த விஷயம் உன் தாத்தாவையும் என்னையும் தவிர வேற யாருக்கும் தெரியாது. இப்போ தானே நீ வேண்டாம் முடிவு பண்ணினேன். இனிமே ஊருக்கு போன பிறகு தான் உங்கம்மா கிட்ட சொல்லணும்” என்றான்.
மீண்டும் கரகரவென்று அவளின் கண்களில் கண்ணீர்.
“பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ எதுக்கு சும்மா சும்மா அழற?” என்றான் எரிச்சலாக.
“எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு” என்று அழுதுகொண்டே ரோஷத்தோடு சொன்னாள்.
அந்த நிமிடம் அவளின் பாவனை சிறுகுழந்தையின் பாவனையோடு ஒத்திருக்க… “பேசு, என்னைக்கு இருந்தாலும் எதிர்கொண்டு தானே ஆகணும், பேசு” என்றான் தணிவாகவே.
“ம்ம், முடியாது, என்னால முடியாது” என்று சொன்னவள் கைகளில் முகத்தை புகுத்தி மீண்டும் தேம்பி தேம்பி அழ…
“என்னடா இது. பண்றது எல்லாம் இவ. எல்லோரையும் அழ வெச்சிட்டு இவ எதுக்கு அழறா?” என்று எரிச்சல் கட்டுகடங்கமால் பொங்கியது.  
“சும்மா அழுது சீன போடாத, அவ்வளவு நல்லவளா நீ? நான் உன் புருஷன்னு வேண்டாம் மனுஷனா கூட என்னை மதிக்கலை பார்த்த உடனே போற” என்று அப்போதைய கோபத்தை காண்பித்தான்.
“நீங்க பாட்டுக்கு கத்தி கலாட்டா பண்ணி வைச்சீங்கன்னா. ஏற்கனவே கண்ணாடி ஜாடியை கீழ போட்டு உடைச்சிட்டு இருக்கீங்க. ஓஹ் வாவ்ன்னு கை தட்டி உங்க கிட்ட வந்து பேசுவேனா? யார் சீன போடறா? எனக்கு ஒரு அவசியமும் கிடையாது!” என்றாள் அழுத விழிகளோடு ரோஷமாக.
“இவ்வளவு பேசறவ கல்யாணம் பண்ணியிருக்க கூடாது” என்றான் அவனும் காட்டமாகவே.
“நான் நிறுத்த தானே பார்த்தேன் உங்களை யாரு வர சொன்னா, இல்லை பாலாவை வெச்சு எஸ்கேப் ஆகியிருப்பேன். கல்யாணமாகி இப்போ நான் செய்யற செயலுக்கு எல்லாம் காரணம் நீங்க தான். இந்த கல்யாணம் நடக்காம இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை கிடையாது. நான் வேண்டாம்னு சொல்றேன் உங்ககிட்ட நேரடியா.. உங்களை யாரு பண்ண சொன்னா? எனக்கு அம்மா கார்னர் பண்றாங்க? உங்களுக்கு என்ன?”  
அவள் சொல்வது உண்மை தானே! ஆனாலும் பேசினான், “உனக்கு உங்க அம்மா முக்கியம் கிடையாது, ஆனா எனக்கு எங்கம்மா முக்கியம். அவங்க பேச்சை என்னால தட்ட முடியாது!”
“அப்போ அனுபவிங்க”
“என்னத்தை அனுபவிக்கணும். எனக்கு வர்ற கோபத்துக்கு உன் மூஞ்சி முகரை எல்லாம் பேத்துடணும் போல இருக்கு” என்று கோபம் காட்டியவன்… “ஏன் உங்கம்மா கிட்ட முன்னமே பேசியிருந்தா என்ன?”
“சொல்ல முடிஞ்சா சொல்லியிருக்க மாட்டேனா? அப்போவும் சொல்லிட்டேன் உங்களை கல்யாணம் பண்ண சொன்னப்போ. கல்யாணம் பண்ண சொன்னா நான் செத்துப் போவேன்மா சொன்னேன். செத்துப் போ சொல்லிடாங்க!” என்று சொல்லும் போது மறுபடியும் அடக்க முடியாமல் அழுகை பெருகியது.
“ப்ச்” என்று சலித்தவன் “இப்போ என்கிட்டே பேசற மாதிரி உங்கம்மா கிட்ட உங்க தாத்தா கிட்ட எல்லாம் பேசியிருக்கனும். ஏன் பேசலை?” என்று கேட்டான்.
“ப்ச்” என்று அவனை போலவே சலித்தவள், “விடுங்க யாருமில்லை, நான் தான் தப்பு. ஆனா உங்களோட நடந்த கல்யாணம் எனக்கு பிடிக்கலை. டைவர்ஸ் வேண்டும், அதுக்கு என்ன பண்ணலாம்? அதை சொல்லுங்க?” என்றாள்.
அவன் அதற்கு பதில் சொல்லாமல் “பசங்களுக்கு மட்டும் தான் அப்பா அம்மாவோட பொறுப்பா? பொண்ணுங்களுக்கு இல்லையா? ரெண்டு பொண்ணுங்க தானே உங்கம்மா பெத்து வச்சிருக்காங்க. உங்கப்பாவும் இல்லை. ஆராதனா சின்ன பொண்ணு, நீ பாட்டுக்கு இப்படி அவங்களை பத்தி கவலைப் படமா விட்டுட்டு வந்துட்டியே, அவங்களை கொஞ்சமும் நினைக்கலையா?” என்றான்.
“அவங்களை பார்த்துக்க எனக்கு தெரியும் நான் பார்த்துக்குவேன்” என்றாள் ரோஷமாக.
எதுவும் நடக்காதது போல அவள் பேச, வல்லபனின் கோபம் எல்லை மீறியது.
“நீ பார்த்து கிழிச்ச, உன்னை மாதிரி ஒரு பொண்ணையெல்லாம் அவங்க பெத்துக்காமையே இருந்திருக்கலாம்” என்றான் காட்டமாக.
“அந்த மோகனசுந்தரம் உங்க தாத்தாக்கு எவ்வளவு டார்ச்சர் குடுக்கறான் தெரியுமா? நான் யாரு? யாருமே கிடையாது! நான் அவ்வளவு அவருக்காக பார்க்கறேன், செய்யறேன், நீ என்ன பண்ணின? உங்க வீட்டை விட்டு ஏமாத்தி ஓடி வந்துட்ட!”
“இப்ப சும்மா டைவர்ஸ் குடு குடுன்னா, கண்டிப்பா உன்னை மாதிரி ஒரு பொண்ணோட எல்லாம் நான் வாழவே மாட்டேன். ஆனா டைவர்ஸ் எனக்கு எப்போ தோணுதோ அப்போ தான் குடுப்பேன், இல்லை குடுக்காமையே கூட போய்டுவேன். என்னோட வாழ்க்கை அழிக்க உனக்கு எந்த அதிகாரமும் இல்லை!” என்றான் அதிகாரமாக.
சற்று பேச்சுக்கள் நன்றாக சென்றதால் வல்லபன் கொடுத்து விடுவான் என்று நினைக்க… அப்படியே இப்படி திருப்பி விழுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
அப்படியே அமர்ந்து விட்டாள் ஓய்ந்து போன தோற்றம்..
அவளை பார்க்க வல்லபனிற்கு பாவமாக தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய எவ்வளவு அலட்சியம் இந்த பெண்ணிற்கு! எதற்கு இவ்வளவு சிக்கல் ஆக்க வேண்டும் என்று அவனிற்கு புரியவேயில்லை.
“நீங்க என்னை ரொம்ப இன்சல்ட் பண்றீங்க.. உன்னை மாதிரி பொண்ணு உன்னை மாதிரி பொண்ணுன்னு.. என்ன என்னை மாதிரி பொண்ணு.. நான் என்ன அவ்வளவு கெட்ட பொண்ணு? என்னோட வாழ்க்கைக்கு நான் பார்க்கறேன்! நான் வேண்டான்னு சொல்ல சொல்ல நீங்க தான் கல்யாணம் செஞ்சு என்னோட வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணிட்டீங்க… அதனால எனக்கு எவ்வளவு மெண்டல் டென்ஷன் தெரியுமா..?”
“எதுவுமே யார் கிட்டயும் காமிக்க முடியாம.. அங்க இருந்து இங்க வந்து எங்க வீட்ல நான் யாரோடையும் பேசமா.. எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா.. உங்களை கல்யாணம் பண்ணின நாள்ல இருந்து ஒரு ராத்திரி கூட நான் நிம்மதியா தூங்கலை..?”
“அதுக்கு முன்ன எவனோடயோ எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆனப்போ கூட எனக்கு இப்படி இல்லை.. எப்படியும் இதை நடக்க விடமாட்டேன்னு கான்ஃபிடண்டா இருந்தேன்.. அந்த பையனும் என்கிட்டே பேசலை.. எனக்கும் பேச விருப்பமில்லை.. பணத்துக்காக தானே கல்யாணம் பண்றான். அப்போ நிறுத்தினா என்னென்ற மைன்ட் செட் தான் எனக்கு இருந்தது..”
“இதுல எங்க மாமா வேற, வேற கேம் விளையாண்டுட்டார். ஆனா அவர் தலை கீழ நின்னிருந்தாலும் பாலா என் கழுத்துல தாலி கட்ட முடிஞ்சிருக்காது நான் விட்டிருக்க மாட்டேன்.. இதுல இதுல நீங்க தான் வந்து எல்லாமே கெடுத்தீங்க..”      
“ஒரு வேளை நான் வரலைன்னா பாலா தாலி கட்டியிருப்பான்”
“மாட்டான்” என்றாள் ஸ்திரமாக… “அவனுக்கு என்னை பிடிச்சே இருந்தாலும் செஞ்சிருக்க மாட்டான், செஞ்சிருந்தான் அவன் தலையில் கல்லை போட்டு மண்டையை பொலந்திருவேன்னு தெரியும் அவனுக்கு!”
அவளின் பேச்சினில் வல்லபன் அவளை கிண்டலாய் பார்க்க… அவனின் பார்வை உணர்ந்தவள்… 
“இப்படி தான் எப்பவும் என்னை கீழ பார்க்கறீங்க. நான் கெட்ட பொண்ணு மாதிரி பார்க்கறீங்க… நான் வாழவே தகுதியில்லாத பார்வை பார்க்கறீங்க.. ஃபீல் குடுக்கறீங்க.. இட் ஹர்ட்ஸ் மீ எ லாட்” என்று அவள் கண்ணீரோடு கேட்கும் போது…
வல்லபனின் நெஞ்சை பிசைந்தது.. ஆனாலும் பேசினான்.. 
“உன்னோட தப்பே உனக்கு தெரியலையா.. காதலிக்கும் போது இருக்குற தைரியம் அதை சொல்லும் போதும் இருக்கணும்… ஒருத்தனை காதலிச்சு… வேற ஒருத்தனோட மணமேடையில் நின்னு… வேற ஒருத்தன் தூக்கிட்டு போய்… இன்னொருத்தன் தாலி கட்டி… இப்ப அவன் கிட்ட டைவர்ஸ் கேட்கற..”
“இதுல காதலன் கிட்ட பேசிட்டு இருக்க… என்னை பார்க்க அவனை அனுப்பிவிடற… எவ்வளவு தைரியம் உனக்கு.. அவன் யார் என்னை பார்க்க.. உனக்கு அவன் முக்கியம்னா நான் அவனோட பேசணுமா?”     
“கல்யாணம் ஆன பிறகு உன்கிட்ட இருக்கிற இந்த காதலுக்கு பேர் என்ன தெரியுமா? கள்ளக் காதல்!” என்றான் நிர்தாட்சன்யமின்றி.. ரிஷப் அவனை பார்க்க வந்த கோபம் அவனை அப்படி பேசத் தூண்டியது.
அந்த வார்த்தையின் கணம் தாளாமல் முகத்தை மூடிக் கொண்டு இன்னுமே தேம்பி தேம்பி அழுதுவிட்டாள்.  
“இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையா?” என.. இதுவரை தோன்றாத ஒன்று தோன்றியது.. செத்து விடலாம் போல..    
வல்லபனும் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
பேரர் வந்து “கியா ப்ராப்ளம் ஹய்” என..
“நத்திங் ஹஸ்பன்ட் அண்ட் வைஃப் ப்ராப்ளம்” என்றான் தளர்வாக.
அதற்குள் தேறி கண்களை துடைத்துக் கொண்டவள் எழுந்து கொண்டாள்.
வல்லபன் அப்படியே அமர்ந்திருக்க… “போகலாம் வாங்க” என்றாள் சோர்வு இருந்த போதும் நேராகவே அவனின் கண்களை பார்த்து…  
அதில் அந்த நிமிஷம் “நீ என்ன பேசினாலும் நான் செய்வது எனக்கு தெரியும்!” என்ற செய்தி இருந்ததோ?
கூடவே இன்னொன்றை உணர்ந்தான்.. இவ்வளவு பேசினாலும் அவளின் காதலை பற்றியோ ரிஷப் பற்றியோ அவனிடம் பேசவில்லை.   
“எங்க போகலாம்?”  
“உங்களுக்கு மும்பைல யாரையும் தெரியாது அண்ட் புருஷன்னு நினைக்கலை… மனுஷன்னு நினைக்கிறேன்… நீங்க திரும்ப ஊர் போகற வரைநீங்க  என்னோட பொறுப்பு!” என்றாள் ஸ்திரமாக.
வல்லபனும் பதில் எதுவும் பேசவில்லை.. எழுந்து கொண்டான்…
மீண்டும் டாக்ஸி தான் எடுத்தாள்…
அதற்கு பிறகு எந்த பேச்சும் இருவரிடத்திலும் இல்லை … வார்த்தைகளற்ற அமைதியான பயணம்.. 
காலையில் அவன் வந்ததில் இருந்து ஷக்தி பிரியா வேறு இருமுறை அழைத்து விட்டார்.
இப்போதும் மீண்டும் அவரின் அழைப்பு… வேறு விஷயங்கள் சொல்லவில்லை என்றாலும் இங்கே அவளை பார்த்து வருகிறேன் என்று சொல்லி வந்திருந்தான்… ஆராதனாவிற்கு பரீட்சை நேரம் என்பதால் அவரால் விட்டு வர முடியவில்லை… இல்லையென்றால் அவரும் உடன் வந்திருப்பார்.
அவருக்குமே மகளை பார்க்க வேண்டும் என்று இருந்தது…
இப்போது மீண்டும் அவரின் அழைப்பு…
அவரை தவிக்க விட மனமில்லாமல் எடுத்தான் “சொல்லுங்க அத்தை”
எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவள் அந்த வார்த்தைக்கு அவனின் புறம் திரும்ப அவளை பார்த்தவாறே பேசினான்.
“பார்த்துட்டீங்களா தம்பி, எப்படி இருக்கா?” என அவர் கேட்ட போது அலைபேசியை ஸ்பீக்கர் மோடிற்கு மாற்றயிருந்தான்.
“இல்லை அத்தை, ட்ரைன் லேட்.. அவ வீட்டுக் போன போது ஆஃபிஸ் கிளம்பிட்டா… எனக்கு திரும்ப அவ ஆஃபிஸ் போக சலிப்பா இருந்தது. சரி வீட்டுக்கு வரட்டும்னு வெயிட் பண்றேன்” என்றான்.
“எங்க தம்பி இருக்கீங்க?”
“அவ அப்பாட்ர்மென்ட்ல விசிட்டர் ரூம் இருக்கு, அங்க..” என்று சரளமாய் புளுகினான்…
“சரி தம்பி, பார்த்ததும் பேச சொல்றீங்களா? மனசே சரியில்லை! என்னவோ மாதிரி இருக்கு?” என்று பேசும்போதே அவரின் குரல் கலங்கியது.
கேட்ட அர்ச்சனாவிற்கு மீண்டும் கண்கள் கலங்க சத்தமாய் அழுது விடுவாளோ என்று பயந்தவன்…
கண்களில் ஒரு கண்டனத்தோடு வேகமாய் ஒரு கையால் அவளின் வாய் மூடினான்.
அவளையும் மீறி ஒரு அழுகை சத்தம் வெளிப்பட.. அவனின் கைகளை அவளின் வாயோடு அவளே அழுத்தி பிடித்துக் கொண்டாள்.
அவளின் செய்கையை எதிர்ப்பாரவில்லை.. கையை எடுக்க நினைத்தாலும் முடியவில்லை…
இந்த செய்கையால் அவனின் கவனம் வேறு ஷக்தி ப்ரியாவின் பேச்சினில் இருந்து தடுமாறியது.
முயன்று “ஒன்னும் பயப்படாதீங்க அத்தை. உங்க பொண்ணை உங்க கிட்ட பேச வைக்கிறேன். அவளை நான் பார்த்துக்கறேன் பயப்படாதீங்க!” என்றான் தானாகவே…
“மாமா, அக்காவை இன்னும் பார்க்கலையா?” என்றாள் ஆராதானா வேறு.
“இல்லை ஆராதனா பார்த்ததும் பேசச் சொல்றேன்!”  
“என்னோட எக்ஸாம்க்கு அவ பெஸ்ட் ஆஃப் லக் சொல்லலை. நாளைக்கு தான் முதல் எக்ஸாம், அதுக்கு முன்ன அக்காவை என்னோட பேச வெச்சிடுங்க!”  
“கண்டிப்பா, கண்டிப்பா” என்றான்.
பின்பு அலைபேசியை வைத்தவன்…
“இவங்கல்லாம் யாருமே கிடையாது எனக்கு, ஆனா உன்னோட அம்மா, உன்னோட தங்கை, நீ பண்றது சரியான்னு யோசி!” என்று சொல்லி அவளின் வாயினில் இருந்து அவன் கையை உருவிக் கொண்ட போது..
அந்த கைகளில் அவளின் கண்ணீர்.. வாயை மூடி இருந்ததால் உமிழ்நீர் கூட…
மெதுவாய் அதனை தன் நெஞ்சுப் பகுதி இருந்த இடத்தில் உடையின் மேல் துடைத்தவன்… அந்த நிமிடம் முடிவெடுத்தான்…
இனி அவளை வார்த்தையால் வதைக்காதே.. அவளின் வாழ்க்கையை சரி செய்து கொடுத்து விடு.. இப்படி அவளை வருத்தாதே… எங்கிருந்தாலும் அவள் நன்றாய் இருக்கட்டும் என்று…
நீ அவளை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் கள்ளக் காதல் என்ற வார்த்தையெல்லாம் அவள் கேட்க நேர்ந்திராது அல்லவா? உண்மையை அவனுக்கு அவனே உணர்த்த முற்ப்பட்டான்..
ஆம்! அவள் சொல்வது போல இது அவளின் வாழ்க்கை.. பெண் என்னும் பிம்பம் உன்னுடைய பார்வையில் இப்படி தான் இருக்க வேண்டும் என்று இருக்கலாம். ஆனால் அவள் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது… இது அவளின் வாழ்க்கை…   
உடல் ரீதியாய் துன்புறுத்துவது தான் துன்புறுத்தல் என்பது கிடையாது… மனரீதியாய் துன்புறுத்துவது கூட பெரிய கொடுமை தான்! 
அதை நீ செய்யதே! இதுவா நீ! அவள் எப்படியோ இருக்கட்டும்! அவள் வேண்டுவது விடுதலை என்றால் கொடுத்து விடு!   
அந்த ரிஷப் எப்படி என்று யோசனைகள் ஓட ஆரம்பிக்க.. அவனை பார்த்த சில நிமிடங்களை கண்முன் கொண்டு வந்து அசை போட ஆரம்பித்தான். 
கண்களை மூடி இருந்தவள் திடீரென்று திறந்து… “உங்களை கல்யாணம் பண்ணின பிறகு காதலிக்கலை, நான் முன்னமே காதலிச்சேன். அப்போ அது எப்படி கள்ளக் காதல் ஆக முடியும்..” என்று கேட்க…
“அப்போ என்னை கள்ளப் புருஷன் சொல்றியா?” என்று வல்லபன் கேட்க..
அவனின் கண்களிலும் “சொல்லித்தான் பாரேன்” என்ற சவால் இருந்தது.
அவனை பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் கண்களில் மீண்டும் நீர் நிறைந்தது. 
தன் வார்த்தைகள் அவளை மனதளவில் வதைத்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்தது.
“இப்போதானேடா அந்த பொண்ணை டார்ச்சர் பண்ண கூடாதுன்னு நினைச்ச” என்று மனசாட்சி கேள்வி கேட்க… “அப்போ அவளை பேசாம் இருக்க சொல்லு” என்றும் அதே மனசாட்சி சொல்ல… அதனை வார்த்தைகளால் வடித்தான்.
“ஒரு வார்த்தை கூட நீ பேச வேண்டாம்.. என்னையும் பேச வைக்க வேண்டாம்.. நான் நல்லவனாகறதும் கெட்டவனாகறதும் உன்கைல தான் இருக்கு… அமைதியா இரு.. முதல்ல உங்க அம்மாகிட்டயும் ஆராதனா கிட்டயும் கொஞ்சம் சரியாகிட்டு பேசு.. இப்போ வீடு வர்றவரை பேசாம தூங்கு” என்றான் ஆழ்ந்த குரலில்..
அவனின் சொல்லோ இல்லை சோர்வோ கண்கள் தானாகே அவளுக்கு மூடிக் கொண்டது…
இதயதிலே தீ பிடிக்க…. 
கனவெல்லாம் கருகியதே…..
         
        
         

Advertisement