Advertisement

அதற்கு வல்லபன் நிமிர்ந்து பார்க்க, எதிரில் அர்ச்சனாவும் ரிஷபும்.
“இவங்க எதுக்குடா இங்க வந்திருக்காங்க” என்று தான் அந்த நொடி தோன்றியது.
பார்த்தவனிடம் “பேசணும் சொன்னீங்களாம்” என்றாள் தயங்கி தயங்கி அர்ச்சனா.
“ம்ம்” என்று தலையாட்டியவன், ரிஷபின் மேல் பார்வையை ஓட்டினான், இவனை வைத்து பேச முடியாது என்பது போல.
ரிஷப் அசையாமல் நிற்க…
அர்ச்சனா அவன் வேண்டுமென்று தான் நிற்கிறான் என்று புரிந்தாள். அவளுக்கும் ரிஷப் இருக்கும் போது பேசினால் தேவலை என்று தான் இருந்தது. இல்லையென்றால் முருங்கை மரம் ஏறி விடுவான். அப்படி ஒரு சூழலில் தான் அவளின் திருமணம் அவளால் தவிர்க்க முடியாது போனது.
பாதி சிக்கல் அர்ச்சனா என்றால், மீதி சிக்கல் ரிஷப் செய்தது!
“இங்கேயே இப்படியே பேசலாமே” என்ற அர்ச்சனா சொல்ல,
அப்படி ஒரு கோபம் பொத்துக் கொண்டு வர விருட்டென்று எழுந்து நின்றான். அவன் எழுந்த வேகத்திற்கு இருவருமே பயந்து விலகி நின்றனர்.
“ஏன் ரோட்ல நின்னு, இன்னும் நாலு பேரை சேர்த்து பேசலாமே” என்றான் காட்டமாக.
அர்ச்சனா அவனின் கோபத்தில் ஸ்தம்பித்து நிற்க…
“பாரு, இவன் உனக்கு யாரு? என்ன? எனக்கு தெரியாது. தெரிஞ்சிக்கவும் விருப்பமில்லை. உன்னோட விஷயம் அவனுக்கு தெரிஞ்சா உனக்கு பிரச்சனையில்லாம இருக்கலாம். ஆனா என்னோட விஷயம் யாருக்கும் தெரியறதுல எனக்கு விருப்பமில்லை. கீழே வெயிட் பண்றேன். வர்றதானா வா, இல்லை என்னவோ நான் பார்த்துக்கறேன்!” என்று சோர்வையும் மீறி வேகமாய் படிகளில் இறங்கி விட்டான்.
உடனே ரிஷப் “நான் இல்லாம அவனோட பேசுவியா நீ” என்று எகிற,
“பேசி தானே ஆகணும். இதை முடிச்சு தானே ஆகணும். புரிஞ்சிக்கோ ரிஷப். வளர்க்க வேண்டாம், முடிச்சிக்குவோம்!” என்றாள். 
ரிஷப் அவளை முறைத்துக் கொண்டே மேலே ஏறினான்.
வேகமாய் அவனுடன் ஏறியவள், ஆஃபிஸ் உள் நுழைந்து தன்னுடைய டீம் லீட்டிடம் ஒரு எமர்ஜென்சி அவசரமாய் கிளம்ப வேண்டும் என்று சொல்லி, தன்னுடைய பொருட்களை சேகரித்து, லிஃப்டில் இறங்கி வாயிலை அடையும் போது, அவள் வர மாட்டாள் போல என்று வல்லபன் நடக்க துவங்கியிருந்தான்.
தோளில் ஷோல்டர் பேக் இருக்க தளர்ந்த நடையோடு அவன் சென்று கொண்டிருக்க, வேகமாய் அவனுடன் சென்று இணைந்து கொண்டாள்.
அவள் இணைந்தது புரிந்ததும் திரும்பி பார்த்தான், ரிஷப் வருகிறானா என்பது போல.
“இல்லை, வரலை” என்று அவனை புரிந்தவளாக சொல்ல,
நடக்க ஆரம்பித்தான், அவளும் எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது தூரம் சென்றதுமே “எங்கே போறோம்?” என்று அர்ச்சனா கேட்க,
“எனக்கு இந்த ஊர்ல உன்னை தவிர வேற யாரையும் தெரியாது” என்றான் சோர்வாக.
அவளையும் மீறி “சாப்பிட்டீங்களா?” என்றாள்.
அப்படியே நின்று விட்டான். திரும்பி அவளை பார்க்க… அவனின் பார்வையில் என்ன இருந்தது என்று புரியாத போதும், “சாப்பிட்டீங்களா?” என்றாள் மறுபடியும்.
“இல்லை” என்று அவன் தலையசைக்க,
“இங்க சவுத் இந்தியன் ரெஸ்டாரென்ட் எதுவும் கிடையாது”  
“இப்போ எனக்கிருக்கிற பசிக்கு கல்லை மண்ணை கூட சாப்பிடுவேன்” என்று வல்லபன் சொல்ல,
“இங்க எப்படி இருக்கும்னு தெரியாது, நான் சாப்பிட்டது இல்லை, போவோமா? வேண்டாமா?” என்று பக்கத்தில் இருந்த ஒரு உணவகத்தை காண்பிக்க,
“என் வாழ்க்கையே ரொம்ப மோசமா இருக்கு, இதுல சாப்பாடு எப்படி இருந்தா என்ன?” என்று வல்லபன் சொல்ல,
அர்ச்சனாவின் முகம் கூம்பி விட, எதுவும் பேசாமல் அந்த உணவகத்தை நோக்கி நடக்க… பின் தொடர்ந்தான்.
சற்று காஸ்ட்லி ரெஸ்டாரென்ட் என்பதால் அதிகமான ஆட்கள் இல்லை ஆனாலும் அந்த நேரத்திற்கு பிசியாக தான் இருந்தது. ஒரு டேபிள் பார்த்து அமர்ந்தனர்.
வரும்போதே வாயில் காவலாளி அவனை ஒரு மாதிரி பார்ப்பதை உணர்ந்தான். உடையும் அலுங்கிய தோற்றமும் என்று புரிந்தும் இருந்தான்.  “ஏதாவது சொல்லு” என்று சொல்லி விட்டு, அவனின் பையை எடுத்துக் கொண்டு, ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி வேறு உடை மாற்றி வந்தான்.
வாயில் காவலாளியின் பார்வை, அதனையும் விட ரிஷப் போல ஒருவனிடம் பேசும் போது தான் பக்கி போல இருக்க முடியாது அல்லவா?
அதற்காக தோற்ற ஒப்பீடு என்பது கிடையாது, இரண்டு நாட்களாய் குளிக்காமல் உடை மாற்றாமல் அழுக்காய் இருந்தான் அல்லவா அதனால் உடை மாற்றி பளிச்சென்று வந்தான்.    
ப்ளேக் ஜீன், லைட் ப்ளூ டீ ஷர்ட், அவனின் திராவிட நிறத்திற்கு நன்கு பொருந்த, முறுக்கி விடப் பட்ட மீசை, ஒட்ட வெட்டிய தலைமுடி, அவனின் உயரம், உரமேறிய உடல் கட்டு, இப்போது ஒரு கம்பீரத்தை எடுத்துக் கொடுத்தது. உடை ஒரு மனிதனை நிமிடத்தில் மாற்ற வல்லது.   
அவன் வந்து அமரவும் அர்ச்சனா சிநேகமாய் புன்னகைக்க, வல்லபன் முகத்தினில் மருந்துக்கும் சிரிப்பில்லை.
அதனை ஒதுக்கியவள் “பஃபே தான் வாங்க” என்று அழைத்து போய் விட, எக்கச்சக்க உணவு வகைகள், பறப்பன, மிதப்பன, ஊர்வன, நடப்பன என்று அத்தனையும் இருந்தது.
சிறிது நேரம் அர்ச்சனா என்ற பெண்ணை மண்டைக்குள் இருந்து ஒதுக்கியவனாக உண்ண ஆரம்பித்தான். நன்றாக உண்ட பின்னே தான் நிமிர்ந்தான். அப்போது தான் பார்த்தான் அர்ச்சனா எதுவும் உண்ணாமல் இருப்பதை.
“நீ சாப்பிடலை”
“இல்லை பசிக்கலை, ஜூஸ் சொல்லியிருக்கேன்” என்று சொல்ல…
வல்லபன் “நீ சாப்பிடு” என்றெல்லாம் சொல்லவில்லை. இப்போது பசி அடங்கி விட்டதல்லவா, என்ன என்ன இருக்கிறது என்று பார்த்து, சுவைத்து உண்டு, பின்பு டெசர்ட்டில் திருப்தியாய் முடித்தான்.
அப்போது தான் அவளின் ஜூஸ் வர, அதனை அருந்த ஆரம்பித்தாள். வல்லபனின் வயிறு நிறைந்ததும், இப்போது கண்களில் தெரிந்தது அர்ச்சனா மட்டுமே.
ஊரில் இருந்த தோற்றத்திற்கும் இதற்கும் சற்றும் சம்மந்தமில்லை. பொட்டில்லாத நெற்றி, ஆனாலும் முகம் பளிச்சென்று அவ்வளவு பொலிவோடு இருந்தது.
இந்த உடையில் அழகாய் அம்சமாய் இருந்தாள். இப்படி ஒரு பெண்ணோடு உணவு, அதுவும் என் மனைவி, ஆனாலும் இல்லை. அவளின் முட்டி தொடும் உடை, அவளின் கால்களின் வனப்பு… ம்ம் பார்க்கக் கூடாது தான் எந்த பெண்ணையும் பார்த்ததும் இல்லை தான்… அர்ச்சனாவை எடை போடுகிறேன் பேர்வழி என்று பார்வை மேய்ந்தது. அவள் ஜூஸ் அருந்தும் விதம் கூட மிகவும் நாசூக்காய் இருந்தது. பார்வை வல்லபனை சந்திக்க தயங்கி தவிர்த்து வேறு புறம் பார்க்க…
வல்லபனுக்கு வசதியாய் போனது.
இந்த உடையில் என் மனைவி ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை ஆனால் அவளுக்கு உன்னோடு வாழ விருப்பமில்லை. நீயும் இனி வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாய். இனி அவளின் உடையை விமர்சிப்பது தவறு என்று அவனுக்கு அவனே எடுத்துக் கூறினான்.
காதலிப்பது அவனை பொறுத்தவரை தவறு தான். ஆனால் அடுத்தவர் செய்யும் போது நமக்கென்ன ஒரு போய்விடுவான். ஆனால் திருமணம் முடிந்த பிறகும் காதலன் என்று ஒருவனை தேடி வந்திருக்கிறாள். தெரிந்த பிறகும் அவனும் தேடி வந்திருக்கிறான். ஆனால் பார்த்த பிறகு ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இன்னொருவனை காதலித்து தேடி வந்த பெண் எல்லாம் வேண்டவே வேண்டாம். அவள் வேண்டாம் என்று என்ன சொல்வது நான் வேண்டாம் என்று சொல்கிறேன் என்று சொல்லிக் கொண்டான்.
ஆனால் பூவும் பொட்டுமாய், புடவையில் பாந்தமாய், இப்படி ஒரு அழகான மனைவி, யாரையும் காதலிக்காமல் அவனோடு இணைந்து வாழ்ந்திருந்தால்… வாழ்க்கை சொர்க்கம் தான் என்று தோன்றியது.   
அதுவமன்றி திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை தான் என்ற கொள்கையும் அவனுள் ஸ்திரமாய் இருக்கும் ஒன்று. இனி என்ன செய்ய போகிறான்?       
இப்படியாக பல சிந்தனைகள்… அவளின் தோற்றத்தை அணு அணுவாய் ஆராய்வது… எதிரில் இருப்பவளுக்கு தெரியவேயில்லை.     
அர்ச்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அந்த முகம் பிடிக்கவில்லை.
வேகமாய் தன்னுடைய பர்ஸ் எடுத்தான், அதில் கோவில் விபூதி குங்குமம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க… அதில் இருந்தது.
அதனை எடுத்து அவளின் முன் நீட்டினான்.
அவள் அதிர்ந்து விழிக்க…
“நாம சேர்ந்து வாழ எனக்கினிமே விருப்பமில்லை. இங்க வரும் போது கூட உன்னை பார்த்து கூட்டிட்டு போயிடணும்னு தான் வந்தேன். ஆனா எனக்கு இந்த நிமிஷம் அந்த மாதிரி எதுவுமில்லை”
“ஆனா பொட்டில்லாம உன் நெத்தி நல்லாவே இல்லை. இந்த குங்குமம் வெச்சிக்கோ, பொண்ணுங்க இப்படி இருந்தா பையனுக்கு ஆகாதுன்னு அதுக்காக சொல்லலை, நான் உன் புருஷன்ற நினைப்பை ஒதுக்கிட்டேன். என்னவோ உன் முகம் நல்லாவே இல்லை, வெச்சிக்கோ” என்றான்.
அர்ச்சனாவின் முகம் இன்னுமே சுருங்கி விட, பதில் பேசாமல் அந்த குங்குமத்தை எடுத்து ரெஸ்டாரென்ட் பக்கவாட்டு முழுவதும் கண்ணாடி இருக்க, அதனை பார்த்து வைத்து கொண்டாள்.
வைக்கும் போது விரல்கள் நடுங்கியது, கண்களில் நீர் வருவேனா என்று நிற்க ஆரம்பித்தது.
அவள் வைத்த பிறகு “ம்ம், இப்போ ஓகே!” என்றவன்.
அந்த பார்வையின் தீட்சண்யம் அர்ச்சனாவால் தாள இயலவில்லை.  
“ஆமாம், பொட்டு வைக்கறதில்லை, தாலி? தாலி என்ன பண்ணின? இருக்கா? இல்லையா?” என்றான்.
கோட் போல அவள் டி ஷர்ட் மேல் போட்டிருந்ததால் தெரியவில்லை.
அவன் என்னவோ அமைதியாய் தான் கேட்டான், ஆனால் அர்ச்சனாவின் கண்களில் கரகரவென்று நீர் இறங்கியது.
அதுவே சொல்லாமல் சொன்னது தாலி இல்லை என்று.
“இருக்கா? இல்லையா?” என்றான் திரும்ப.
அதற்க்கு அர்ச்சனா சொன்ன பதில்… அவள் சொன்ன காரணம் சிரிப்பு வரும் போல தோன்றியது.
“அது ரொம்ப வெயிட்டா இருந்தது, அதனால கழட்டி வெச்சிருக்கேன்” என்று கண்களில் நீரோடு, பயத்தோடும் சொன்னாள். 
“உன் கழுத்தல அது நிக்காதுன்னு உங்க மாமா சாபம் விட்டதுக்கு தான் உங்கம்மா என்னை அவசரமா கல்யாணம் பண்ணி வெச்சாங்க. ஆனா நீ என்ன பண்ணியிருக்க இப்போ?” என்று அமைதியாகவே கேட்டான்.
கண்களில் இன்னும் வேகமாய் நீர் இறங்கியது.
கூடவே “அம்மா எப்படி இருக்காங்க? ஆரா, தாத்தா எல்லாம்…” என்று அவள் கேட்கும் போது அவளையும் மீறி ஒரு கேவல் வெடிக்க கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டாள் அவன் காணாதவாறு…
அப்படி என்ன இந்த காதல், கருமம் பிடித்த காதல் என்று தான் வல்லபனிற்கு தோன்றியது. யோசியாமல் அதை அர்ச்சனாவிடம் கேட்க கூடியவன் தான். ஆனால் அவளின் அழுகை மனதை என்னவோ செய்ய அமைதியாய் தான் இருந்தான், அவளின் முகத்தை மறைத்திருந்த கைவிரல்களை பார்த்தவாறு.          

Advertisement