Advertisement

அத்தியாயம் எட்டு :
கையில் இருந்த கைப்பேசியை எடுத்து அவள் யாரையோ அழைப்பது தெரிய, மனதில் சுள்ளென்று கோபம் மூண்ட போதும் பார்த்தது பார்த்த படி நின்றிருந்தான்.
அவளின் உதட்டின் அசைவில் “வா நீ” என்று அவள் தமிழில் யாரிடமோ உரையாடுவது புரிந்தது.
எவ்வளவு நேரம் நிற்பது என்று கடுப்பாக, அந்த புட் கோர்ட்டின் பெண்ணிடம் “நான் இங்க உட்கார்ந்துக்கறேன். எதுவும் டேமேஜ் பண்ண மாட்டேன்” என்று சொல்லி ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டான்.
அந்த பெண் திரும்பவும் எதுவும் கலாட்டா செய்வானா என்று தெரியாமல் பார்த்து நிற்க,
“ஒன்றும் செய்ய மாட்டேன், நீ உன் வேலையை பார்” என்று சைகையில் காண்பித்தான்.
அப்படியே போவாளா? இல்லை அருகில் வருவாளா? என்று அர்ச்சனாவை பார்வையால் துளைத்தபடி அமர்ந்தான்.
அவளின் தோழி ஒருத்தி அவளை விடாமல் பார்ப்பது புரிந்து “ஹி இஸ் ஸ்டேரிங் அட் யு” என்று சொல்லவும் செய்தாள்.
அதற்கு அர்ச்சனா பதில் பேசவில்லை.
அதற்குள் அவள் அழைத்த ஒருவன் உள்ளே நுழைந்தான். அர்ச்சனாவின் அருகில் வந்து நின்று “எங்கே?” என்று கேட்க,
அப்போதுதான் அர்ச்சனாவின் அருகில் நின்றவனை கவனித்தான். தோற்றம், நடை, உடை, பாவனை என்று அத்தனையும் வசீகரமாய் இருந்தது. நிச்சயம் ஆணழகன். மாடலிங் செய்பவன் போல இருந்தான்.
தோழி தோழர்களிடம் எதோ சொல்லி அவள் விலகி வெளியே போக, இதனை வல்லபன் எதிர்பார்க்கவில்லை. கதவை திறக்கும் போது அர்ச்சனாவின் பார்வை அவளையும் மீறி வல்லபனை பார்த்தது. அதில் தெரிந்தது பயம் மட்டுமே     
அர்ச்சனாவின் அருகில் வந்தவன் வல்லபனை நோக்கி வந்தான்.
அவள் சென்றதை பார்த்ததும் ஆத்திரம், கோபம், இயலாமை, எல்லாம் ஒரு சேர பெருகியது. பார்த்து விட்டும் பேசாமல் போகிறாளா, எவ்வளவு திமிர், அப்படியே இழுத்து வைத்து ஒரு அறை விடும் ஆவேசம் பொங்கியது.
அதற்குள் அருகில் வந்தவன் “ஐ அம் ரிஷப்” என்று அவனிடம் கையினை நீட்டினான்.
அதை பற்றாமல் வல்லபன் பார்த்தபடி இருக்க, தோள்களை அலட்சியமாய் குலுக்கியபடி எதிரே இருந்த இருக்கையை நகர்த்தி அமர்ந்தான் அவன்.
எதிரே அமர்ந்துவிட்டவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ரிஷப் முகத்தினில் ஒரு தயக்கம் அமர்ந்து விட்டதை பார்த்தான். “அர்ச்சனா பத்தி பேசணும்னா அவ மட்டும் தான் பேசணும். வேற யார் பேசறதையும் நான் அனுமதிக்க மாட்டேன்” என்றான் சற்றும் பிசிறாத குரலில்.
“அது அர்ச்சனா” என்று ரிஷப் ஆரம்பிக்க,
“நீ கிளம்பு” என்பதை போல வல்லபன் சைகை செய்ய,
அதுவரை ஒரு தயக்கத்தை முகத்தினில் சுமந்திருந்த ரிஷப், அதனை விட்டு… “அவ பேசமாட்டா, நான் தான் பேசுவேன்” என்றான் அலட்சியமாக.
“நீ பேசறதை எல்லாம் என்னால கேட்க முடியாது”
“கேட்டு தான் ஆகணும். நான் தான் பேசுவேன்” என்றான் ஸ்திரமாக.
“யார் நீ அவளுக்கு?” என்று மறந்தும் வல்லபன் கேட்கவில்லை. அதற்கு ஏதாவது ஏடாகூடமாய் அவன் பதில் சொல்லிவிட்டால், தாள முடியும் என்று தோன்றவில்லை.
திடமாய் நிம்ர்ந்தவன்,
“அப்போ பேசறதுக்கு வாய் இருக்காது, ட்ரை பண்ணி பார்க்கணும்னா பாரு” என்ற வல்லபனின் பார்வை சொன்னதை செய்வேன் என்று சொல்லியது.
ரிஷப் “உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான் அவனுமே.
“தோ பாரு, குற்றவாளிகள் சில சமயம் தானா உருவாகறதில்லை. உருவாக்கப் படறாங்க. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை வர விடமாட்ட நீன்னு நினைக்கிறேன். ஒன்னு அப்படியும் பண்ணலாம்”
“இல்லை, நான் ஒரு லாயர், உனக்கு தெரியுமோ என்னவோ தெரியாது. என் மனைவியை கடத்தி வெச்சிட்டு இருக்கான்னு உன் மேல ஒரு கம்ப்ளையின்ட் குடுத்தா போதும், எப்படியும் நீ அவளை என் கண் முன்ன அப்படி இல்லைன்னு சொல்லவாவது கொண்டு வந்து தான் ஆகணும்”
“அதுக்கப்புறம் நீ அசிங்கப் படறியோ இல்லையோ, அவ ரொம்ப அசிங்கப் படுவா. யோசிச்சிக்கோ”
“அவ அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை, நீ ஆனதை பார்த்துக்கோன்னு சொன்னேன்னா, நான் சொன்னது தான். என்னை ஒரு குற்றவாளி ஆக்கப் போற நீ” என்றான்.
இவன் என்ன சொல்ல வருகிறான் என்று ரிஷப் விழித்தான். தொடர்ந்து பேசினான் வல்லபன்,
“என்ன முட்டாள் தனம் பண்ணிட்டு இருக்கன்னு உனக்கு புரியலை”
“ப்ச், உன்னை நான் தப்பு சொல்ல மாட்டேன். ஏன்னா அவ சரியில்லை. அவ என்னை பார்த்ததும் போறா, அதனால் தான் உன்கிட்ட இந்த அளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன்”
“போ, போய் அவளை அனுப்பு!”      
“இங்க வேண்டாம், அவ தினமும் வர்ற ஆஃபிஸ் இது”  
“இது எங்க உங்க ஆஃபிஸ்? இது ஆஃபிஸ்க்கு வெளில தானே இருக்கு, உங்களது மாதிரி மூணு ஆஃபிஸ் இந்த ப்ளோர்லயே இருக்கு, இது பொதுவா இருக்குற இடம் தானே”
“இல்லை, வேண்டாம். வெளில பார்ப்போம்”
“பார்ப்போம் இல்லை, அவ மட்டும் தான் வரணும். உனக்கும் இதுக்கும் சம்மந்தமே கிடையாது”
“அவ பயப்படறா உன்னை பார்த்து, பிடிக்காத பொண்ணு கூட எப்படி வாழப் போற. பேசாம டைவர்ஸ் குடுத்துடு”
“என்னது நான் அவளோட வாழப் போறானா, வாய் விட்டு சிரித்தான். வாழனும்ன்னு தான் மும்பை வந்தேன். ஆனா எப்போ என்னை பார்த்துட்டு கூட ஒரு வார்த்தை கூட பேசாம போயிட்டாளோ, அதையும் விட வேற ஒருத்தன் பின்ன ஒளிஞ்சு…”
“ச்சே இந்த மாதிரி பொண்ணு எல்லாம் எனக்கு வேண்டாவே வேண்டாம்” என்றான் ஒரு அலட்சிய சிரிப்போடு.
“அதான் வேண்டாம் சொல்றியே பார்த்து என்ன பண்ண போற?” என்றான் ரிஷபும் விடாது.  
“டேய் ரொம்ப நேரம் எல்லாம் என்னால பொறுமையா இருக்க முடியாது. எங்க ஊருன்னா இந்த நேரம் நீ ஹாஸ்பிடல்ல இருந்திருப்ப. என் பொறுமையை சோதிக்காம மூடிட்டு போடா” என்றான் ரௌத்திரமாக. 
வேறு எதுவும் பேசாமல் ரிஷப் எழுந்து போய்விட்டான்.
எங்கே போவது? என்ன செய்வது என்று புரியவில்லை. அவளை பார்க்க தான் வந்தான். ஆனால் அர்ச்சனா பார்த்துவிட்டும் பார்க்காமல் செல்ல ஓடிப் போய் அவளின் கைபிடித்து இழுத்து நிறுத்தியா பேச முடியும்.
பார்த்தவுடனே வந்து பேசுவாள் என்று தான் நினைத்தான். சட்டென்று அவள் வெளியே செல்லவும் ஒன்றும் முடியவில்லை.          
தலையை பிடித்து அமர்ந்து கொண்டான்.
தெரியாத ஊரில் என்ன கலாட்டா இது? பேசாமல் ஊருக்கு போய்விடுவோமா என்று தோன்றியது. உண்டு தெம்பாக இருந்திருந்தால் என்ன செய்வது என்ற யோசனைகள் தோன்றியிருக்கும். பசி மயக்கம் வேறு அவனை எதுவும் சிந்திக்க விடவில்லை.
என்னை ஏன் இப்படி ஒரு நிலையில் நிறுத்தினாய் என்று கடவுளிடம் சண்டையிட்டான் மனதிற்குள். இனி நான் உன்னை நினைக்க மாட்டேன் போ, இனி உன்னை கும்பிட மாட்டேன் போ என்றும் அவரிடம் சொல்லிக் கொண்டான்.
அவனுக்கு தெரியவில்லை, நீயே கதி! நீயே துணை! காப்பாற்றி விடு! என்று அன்று இரவே அவரிடம் சரணடையப் போவது தெரியவில்லை.
தண்ணீர் ஜாடியை எல்லாம் வேறு உடைத்து வைத்திருந்தான். அங்கேயே திரும்ப என்ன இருக்கிறது என்று பார்த்து உண்ண மனம் ஒப்பவில்லை.
எழுந்து வெளியே வந்தவனிடம் அப்படி ஒரு சோர்வு. அப்போது தான் பார்த்தான், அந்த காரிடரின் இன்னொரு கோடியில் ரிஷபும் அர்ச்சனாவும் பேசிக் கொண்டு நிற்பதை.
பேசுவது போல தெரியவில்லை. வாக்கு வாதம் போல தான் தெரிந்தது. அவன் எதுவோ அர்ச்சனாவை திட்டுவது போல, இவள் கேட்டுக் கொண்டு நிற்பது போல தான் தெரிந்தது.
அதனை பார்த்து நின்று விட்டான். என்னவோ தான் கையாலாகாதவன் போல ஆகிவிட்டோம் என்று தோன்றியது.
இவன் நிற்பதை பார்த்தும் இருவரின் கவனமும் இவன் புறம் திரும்பியது. அவர்கள் பார்ப்பது புரிந்ததும் நிற்க விரும்பாதவனாக படியில் இறங்க துவங்கினான். எட்டு மாடி, லிப்டில் இறங்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை.
மூன்று மாடி இறங்கியதுமே அப்படி ஒரு சோர்வு ஆட்கொள்ள அந்த படியில் அமர்ந்து கொண்டான்.
படியில் யாரும் ஏறவில்லை, இறங்கவில்லை எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தான் என்று தெரியாது.
ஆனால் அவன் அமர்ந்திருந்தது அரை மணி நேரம். தலையை கைகளால் முட்டுக் கொடுத்து அப்படியே அமர்ந்திருந்தான்.
ஆள் எதிரில் வந்து நின்றது கூட தெரியவில்லை. எதிரில் வந்து நின்றது அர்ச்சனாவும் ரிஷபும்.
ஆம்! இவன் இறங்கி போவதை பார்த்ததும் பின்னேயே லிப்டில் இறங்கி வந்திருந்தார்கள். ஆனால் அவன் இறங்கி வரவில்லை. சென்றிருப்பானோ வெளியே என்று நினைத்து ரிஷப் வேகமாக வெளியே சென்று தேட,
இவள் படியில் காத்திருக்க… வரும் வழியாக காணோம்.
பின்னே ரிஷப் வர, அங்கேயும் இருவருக்கும் வாக்கு வாதம். பின்னே தான் படியில் ஏறி தேட அங்கே அமர்ந்திருந்தான்.
அவன் அமர்ந்திருந்த தோற்றம் அர்ச்சனாவை அவ்வளவு அசைத்தது. ஆனால் எப்படி அவனை அழைப்பது என்று தெரியவில்லை.
வல்லபனை பார்த்து பயந்து சென்றது, அவள் மேலும் மேலும் தப்பு செய்கிறாள் என்று அவளிற்கே புரிந்ததினால் தான்.
தன்னை பார்த்ததும் வல்லபன் வந்து திட்டுவான், கத்துவான், எல்லோர் முன்னிலையிலும் கீழிறக்கமாய் போய்விடும் என்று தான் ரிஷபை பேச அனுப்பி விட்டு சென்றாள்.
அவளுக்கு தெரிந்த வல்லபனின் தோற்றம் முரடன் தானே. திருமணத்தன்று, பின்னே அங்கிருந்த ஒரு வாரமும் மோகனசுந்தரம் கொடுத்த தொல்லைகளுக்கு பதிலடி கொடுத்த விதம்…
இப்போதும் பார்க்க பார்க்க தண்ணீர் ஜாடியை உடைத்தது, அதுதான் அவளை “நீ போய்டு” என்று மனதில் தோன்ற சென்றாள்.
இப்போது அவன் பார்த்துவிட்டும் கடந்து சென்றது அசைத்தது. நீ செய்வது தவறு. அவன் எல்லோர் முன்னும் உன்னை பேசினால் வாங்கிக் கொள்ள வேண்டியது தான். அடிப்பானோ என்று தோன்றிய போதும் அவள் இறங்க அவளின் பின்னே ரிஷப்.
அவளிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தான் “உன்னால நான் கண்டவன் கிட்ட பேச வேண்டியிருக்கு. அசிங்கம்மா பேசறான். வக்கீல்னா பெரிய இவனா? வெட்டுவேன், குத்துவேன்னு முறைக்கிறான். அவனெல்லாம் ஒரு ஆளுன்னு உனக்காக பேசப் போனேன் பாரு…”
“என்னவோ என்னை ஹாஸ்பிடல் அனுப்பிடுவானாம். மும்பையை விட்டு உயிரோட போக மாட்டான். என்ன நினைச்சிட்டு இருக்கான் என்னை. உன்னால! எல்லாம் உன்னால! உன்னை யாரு கல்யாணம் பண்ண சொன்னா? ஒரு சூழ்நிலையை உன்னால சமாளிக்க முடியாதா?”
“இவன் கிட்ட டைவர்ஸ் வாங்கி, நாம கல்யாணம் பண்ணனும். எங்கப்பா அம்மா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. மாமாவை வெச்சு தான் நான் பேசணும். அதையும் விட உனக்கு செகண்ட் மேரேஜ். வெளில சொல்லவே அசிங்கமா இருக்கு. யாருக்கும் தெரியாம இவன் கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கு” என்று அடிக் குரலில் யாரும் கேட்காமல் கத்திக் கொண்டிருந்தான். 
அர்ச்சனாவிற்கு அழுகை முட்டியது ஆனால் அழும் நேரமல்ல என்று பொறுமை காத்து நின்று கொண்டு, “இல்லை நான் பேசறேன்” என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருக்க,
“அதற்கும் நீ பேச வேண்டாம்” என்று கத்திக் கொண்டிருந்தான்.
அப்போது தான் வல்லபன் பார்த்து படிகளில் கீழிறங்கியது.
அர்ச்சனா எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், இப்போது வல்லபனை பார்ப்பது முக்கியம் போல தோன்ற.. தேட.. இதோ இங்கே..
எப்படி அவனை அழைக்க என்று தெரியவில்லை, பெயர் சொல்லி அழைத்தால் அப்படி ஒரு கோபம் வரும்.  நம்ம ஊர் வழக்கமாக அவளுக்கு ஏங்க என்னங்க என்று அழைக்க விருப்பமில்லை “சர்” என்றழைத்தாள்.

Advertisement