Advertisement

அத்தியாயம் ஏழு :
புது ஊர், புது இடம், வளர்ந்த ஆண்மகன் தான் என்றாலும் தமிழ் நாட்டை விட்டு என்றால் பக்கம் கேரளா சென்றிருக்கிறான், கோவில்களுக்கு. அதை விடுத்து ஆந்திரா சென்றிருக்கிறான் திருப்பதிக்கு. இன்னம் கர்நாடகா கூட சென்றதில்லை.
சுற்றுலா செல்லும் பழக்கம் எல்லாம் அவர்களின் வீட்டினில் இல்லை ஆதலால் எங்கும் சென்றதில்லை. அதுவுமன்றி தனியாக எங்கும் செல்லும் அவசியமில்லை. அவனை சுற்றி எப்போதும் ஒரு இரண்டு மூன்று பேராவது இருப்பார்கள். பணம் காசு சம்பாதித்ததில்லை மனிதர்களை நிறைய சம்பாதித்து வைத்திருந்தான்.   
மும்பை வந்து இறங்கும் போதே மனம் தடுமாறியது சஞ்சலம் கொண்டது. வேறு விஷயம் என்றால் யாரையாவது துணைக்கு அழைத்திருக்கலாம். மனைவி விஷயம், யாருக்கும் தெரிவதில் அவனுக்கு விருப்பமில்லை. மும்பையில் யாரையும் தெரியாது.
“என்னடா நீ? அவனவன் அமெரிக்கா ஆப்ரிக்கான்னு பறக்கறான், சின்ன பசங்க எல்லாம் தனியா போறானுங்க. இருபத்து ஏழு வயசாச்சு நீ என்ன இந்த பய பயப்படற?” என்று மனசாட்சி கேள்வி கேட்க,  
“பயமா? எனக்கா?” என்று சொல்லிக் கொண்ட போதும் பயம் என்பதை விட என்னவோ ஒரு கலக்கம்.
இரவு ஒன்பது மணிக்கு சேலத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்து, அதே ரயில் பின்பு அடுத்த நாள் காலை மும்பை தாதர் வந்திருக்கிறது. அவன் இறங்கிய போது காலை ஆறு மணி. கிட்ட தட்ட முப்பத்தி இரண்டு மணி நேர பயணம் அவனுக்கு பழக்கமில்லை.
உடல் அலுத்து விட்டது!
“கொஞ்சம் பணமிருந்தா நாம பிளைட்ல வந்திருக்கலாம் தானே!” என்று மனம் நினைப்பதை தடுக்க முடியவில்லை.
இதுவரை அப்பா சொத்துக்களை முடித்து விட்டார் என்ற ஆதங்கம் இருந்த போதும் பணத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதனை சமாபதிக்க வேண்டும் என்றும் நினைத்ததில்லை. அதன் பின்னும் ஓடியதில்லை.
இதோ இந்த மூன்று மாதமாக ராஜ மாணிக்கத்தின் தொழில்களை பார்க்கின்றான் தான். ஆனால் அவனுக்கு என்ன? ஒரு லாபமுமில்லை!
அர்ச்சனா வரட்டும் பேசிக் கொள்ளலாம், வல்லபனுக்கு என்ன செய்ய என்று. சம்பளம் போல கொடுத்தால் நன்றாக இருக்காது. வேறு எப்படி இந்த சொத்துக்களை நிர்வகிக்க பணம் கொடுக்கலாம் என்று ராஜ மாணிக்கம் நினைத்திருக்க, அர்ச்சனா வரவில்லை. பின்பு டைவர்ஸ் நோட்டிஸ் வர அவருக்கு மிகுந்த மனஉளைச்சல். இதில் அவனுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது மறந்து விட்டது.   
வல்லபன் உரிமையாக அக்காள்களிடம் பணம் கேட்பான் அவ்வளவே. பின்பு யாரிடமும் கேட்டது இல்லை.
அதனால் அவனாலும் ராஜமாணிக்கத்திடம் பண விஷயம் பேச முடியவில்லை.
அவனுமே அர்ச்சனா வரட்டும் நிர்வகிப்பதற்கு, சம்பளம் போல ஏதாவது பேசிக் கொள்வோம். இந்த வேலைகள் இருந்தாலும் கோர்ட்டிற்கும் செல்ல வேண்டும் என நினைத்தான்.  
எதுவும் நடக்கவில்லை. எல்லாம் மாறிவிட்டது. 
இப்படியாக இப்போது ஊருக்கு வருவதற்கு அவன் ஜூனியராக இருக்கும் மாமாவை திருமணம் செய்த அக்கா சூரியமதியிடம் தான் பணம் வாங்கி வந்திருந்தான், இருபதாயிரம் ரூபாய்.
 ரயில் நிலையம் விட்டு வரவுமே டேக்சிக்கு ஆட்கள் முற்றுகை இட, நாசுக்காக மறுத்து விட்டான். எங்கே டிக்கட் உணவு என்று அதற்கே இதுவரை இரண்டாயிரம் போயிற்று. அவசரமின்றி நிதானமாக வெளியே வந்தான். பார்ப்பவர்களுக்கு அவன் அந்த ஊருக்கு புதிது என்று தோன்றாத வகையில். பின்பு அங்கிருந்த டீக்கடை ஒன்றில் டீ குடித்து நோட்டம் விட்டான்.
எல்லாம் வெளியே தான், உள்ளே இன்னும் ரயிலின் தடதடப்பு ஓடியது.
அங்கிருந்த டீ கடைக்காரரிடம் அர்ச்சனாவின் வீட்டின் அட்ரஸ் கொடுத்து எப்படி போக வேண்டும் என்று ஆங்கிலத்தில் கேட்க அவருக்கு புரியவில்லை.
பின்பு சைகை பாஷை, எப்படிப் போக? பஸ்ஸா? ரயிலா? இல்லை டேக்சியா? பணம் எவ்வளவு ஆகும். எல்லாம் சைகையில். அவரும் நல்ல மனிதர் போல, பொறுமையாக ஒரு பேப்பரில் பணம் ஆவதை எழுதிக் காண்பித்தார். பின்னே அவர் அதை மராட்டியில் சொன்னால் அவனுக்கு புரியவில்லை.
ஹிந்தியே தெரியாது இதில் மராட்டி எங்கே தெரியும்?
ஒரு விஷயம் மண்டையில் நன்கு உரைத்தது, தமிழ் நாட்டை விட்டு வெளியே வந்தால் ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ ஹிந்தி தெரியவேண்டும் என்று.
ரயிலில் வரும் போதே உணர்ந்திருந்தான்.
டேக்சியில் ஆயிரத்து ஐநூறு என்று சொல்லி பின் அவரே ஒரு ஆளை காண்பித்து கொடுத்தார்.
பணம் போனால் போகிறதென்று ஏறி அவள் இருந்த அபார்ட்மெண்டை அடையும் போது காலை எட்டரை மணி.
வீட்டின் அட்ரஸ் பாலாவின் உபயம். எட்டு மாடிக் கட்டடம். ஆனால் இவளின் இருப்பிடம் முதலாம் மாடியில் தான். மூன்று பெண்கள் சேர்ந்து தங்கியிருந்தனர். இந்த தகவலும் பாலாவின் உபாயமே.
ராஜமாணிக்கதிற்கோ ஷக்தி ப்ரியாவிற்கோ தெரியாது என்பது போல கிடையாது. பாலா உடன் இருந்ததினால் எல்லாம் அவன் பார்த்துக் கொண்டான்.    
ஏறி அவளின் வீட்டின் என் முன் நின்று அழைப்பு மணியை அடித்துக் கொண்டே நின்றான்.
இவன் விடாமல் அடித்த சத்தத்தில் பக்கத்துக்கு வீடு திறந்து, “வொஹ் சலேகயே ஹோங்கே” என்று நேரம் பார்த்து சொல்ல,
இவன் ஆங்கிலத்தில் “பார்க்க வேண்டும்” என்று கூறினான்.
அவர்களும் ஆங்கிலத்தில் “தே கான் பார் ஜாப்” என்றனர்.
முகம் சலிப்பை காண்பித்தபடி நேரத்தை பார்த்தான்
“தே வில் லீவ் பை செவென் தர்ட்டி இட்செல்ப்” என்றான் அந்த ஆண்.
இவனை விட்டால் ஆங்கிலம் பேசும் ஆள் கிடைக்காதோ என்னவோ என நினைத்து,
“எப்படி அர்ச்சனாவின் அலுவலகம் செல்ல வேண்டும்?” என்று கேட்க,
“நீ யார்?” என்றான் அவன்.
அவனிடம் “கணவன்” என்று சொல்ல வரவில்லை சட்டென்று “ஃபிரண்ட்” என்றான்.
“அப்போ உனக்கு ஆஃபிஸ் தெரியாதா?”  
“நான் மும்பைக்கு புதிது, ஆஃபிஸ் தெரியும், ஆனால் எப்படி செல்ல வேண்டும் என்று தானே கேட்டேன்”  
அவனோ “அப்போ ஃபோன்ல பேசுங்க” என்றான்.
“ஷப்பா, இவனிடம் கேட்பதற்கு டேக்சிகாரரிடமே பேசிவிடலாம்” என நினைத்து டேக்சி இருக்கிறதா போய்விட்டதா என்று பார்க்க வேகமாக ஓடினான்.
“எங்க இருந்து தான் கிளம்பி வர்றாங்களோ? யார் இவன்?” என்ற சந்தேகத்தோடு பேசியவன் கதவை அடைத்தான்.
அங்கிருந்து திரும்ப, டேக்சி பயணம், ஒரு ஆயிரம் ரூபாய், பக்கமா தூரமா எதுவும் தெரியவில்லை. தெரியாத ஊரில் அவளை பார்த்து விட்டால் நிம்மதி என்பது போல தோன்ற சரி என்று ஏறிக் கொண்டான்
ஆனால் உண்மையில் வல்லபனை பார்த்த அந்த டேக்சிவாலா குறைவாக தான் கேட்டிருந்தான். அவனின் முகத்தினில் தெரிந்த சஞ்சலம் கவலை அவனை குறைவாக கேட்க வைத்தது.  
அவர்கள் அந்த இடம் அடைவதற்கு திரும்பவும் ஒன்றரை மணிநேரம் ஆனது.
பசி வயிற்றை கிள்ளியது, நேற்று மதியம் சாப்பிட்டது.
அது பத்து மாடிக் கட்டிடம், அவளின் அலுவலகம் எந்த மாடி தெரியவில்லை, அவனிடம் இருந்த அட்ரஸில் அந்த பில்டிங் பேர் மட்டுமே இருக்க, கீழ் தளத்தில் இருந்த போர்டில் அலுவலக பெயர் தேடி எந்த தளம் என்று பார்த்தால், எட்டாவது தளம், இப்படியாக எல்லாம் கடந்து அவன் அந்த தளம் அடைந்த போது காலை பதினொன்றரை மணி.
பசியா? அலைச்சலா? புதிய இடத்தின் ஒவ்வாமையா? தலை சுற்றுவது போல இருக்க, எதிரே இருந்த புட் கோர்டில் நுழைந்தான். எதாவது உண்டு அவளின் அலுவலகம் செல்லலாம் என்று நினைத்து.
டீ அங்கே இல்லவே இல்லை, ஒரு காஃபி கேட்க, பில் பே செய்து வர சொல்லி அங்கிருந்த பெண் பில் கொடுக்க, காஃபி எண்பது ரூபாய், யம்மா எனக்கு கட்டுபடியாகதே என்று தோன்றிய போதும், அதனை வாங்கி ஒரு டேபிளின் முன் அமர்ந்து அதனை குடித்து நிமிர்ந்த போது புட் கோர்ட்டின் கதவு திறக்க, சலசலவென்று பேச்சு சத்தம், கூடவே கலகலவென்ற சிரிப்பு.
நிமிர்ந்து பார்த்தால் தலை சுற்றியது. அதிகமான சிரிப்பு சத்தம் வந்த இடத்தில் கண்கள் நிலைக்க, அது அர்ச்சனா வா என்று வெறித்து பார்த்தான்.
அவள் போல தான் இருந்தது, அவள் தானா தெரியவில்லை. அவளின் உடை, ஒரு டைட் டி ஷர்ட் அதன் மேலே கோட் போல ஒன்று , ஒரு ஸ்கர்ட் முட்டியின் மேலே தான் தொட்டது. தலை விரித்து இருக்க, நெற்றியில் பொட்டு இல்லை, இந்த தோற்றத்தில் இருப்பதினால் அவள்தானா தெரியவில்லை.
ஒரு வாரம் விடாது பார்த்த முகம்! அவள் தான் என்று சொல்ல, அவளாய் இருக்கக் கூடாது என்று மனது நினைத்தது.
கண்டிப்பாய் புடவையில் அவள் இருப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒரு சுரிதார் போல நினைத்தான். பேன்ட் ஷர்டே அவனின் நினைப்புக்குள் வரவில்லை. இதில் முட்டியை தொடாத உடை. மினிக்கும் சேரவில்லை மிடிக்கும் சேரவில்லை.  
கையில் இருந்த மொபைல் எடுத்து தங்களின் திருமண புகைப்படம் பார்த்தான்.
அப்போது இருந்த தோற்றம், இப்போது இருக்கும் தோற்றம் எங்கேயும் பக்கம் கூட இல்லை, ஆனால் முகம் அதே தான்!
இப்போது இன்னுமே தலை சுற்றியது! நான் எப்படி இவளோடு வாழ்வேன் என்று தோன்றியது. அப்போதும் கூட இவள் எப்படி என்னோடு வாழ்வாள் என்று தோன்றவில்லை.    
எதிரே தண்ணீர் மக்கில் இருந்த சில்லென்ற தண்ணீரை எடுத்து முகத்தினில் அப்படியே சரித்தான். அது ஊசியாய் முகத்தினில் குத்த மனதின் வலியை விட குறைவாக தான் வலித்தது.  
அவனின் நினைவடுக்குகளிலும் சரி, கனவிலும் சரி, கற்பனையிலும் சரி, நனவிலும் சரி, எந்த இடத்திலும் இது போன்ற உடையணிந்த பெண் அவனின் மனைவியாய் இருந்ததில்லை.
தப்பு சரி என்பதனை விட அவனின் எதிர்பார்ப்பு இது இல்லை.
எங்கேயோ மனதின் ஒரு ஓரத்தில் இது சரிவராது உனக்கு என்று தோன்றியது.
அதை ஒதுக்கி வைத்தான்!
இவன் தண்ணீர் பாட்டிலை முகத்தில் சரித்ததினால் தண்ணீர் கீழே சிந்தியிருக்க, அப்போது தான் செர்வ் செய்யும் பெண் பார்த்தவள் “என்ன இது?” என்றாள்.
“சாரி” என்றான் அனிச்சையாக.
அன்று வேலை செய்யும் ஆள் வரவில்லை என்று அந்த புட் கோர்ட்டின் உரிமையாளரான அவளே செய்து கொண்டிருக்க,
இந்த தண்ணீரை யார் சுத்தம் செய்வது என்ற எரிச்சல், கூடவே வல்லபனின் தென்னிந்திய உருவம், இரண்டு நாட்கள் பயணத்தில்  அலுங்கிய உடை, அந்த ஐ டி கம்பனி வளாகத்தில் சற்றும் பொருத்தமில்லாத அவனின் தோற்றம், அந்த பெண்ணை சற்று ரியாக்ட் செய்ய வைத்தது.
“என்ன சாரி? கிளீன் திஸ்!” என்றாள் அலட்சியமாய். 
அவள் சொல்லிய பாவனையில் “என்ன?” என்று அதிர்ந்து எழுந்தான் வல்லபன்.
“கிளீன் திஸ்!” என அவள் திரும்பவும் சொல்ல,
ஏற்கனவே அர்ச்சனாவை பார்த்த அதிர்ச்சியில் இருந்த வல்லபன், அந்த கண்ணாடி குடுவையை எடுத்து தரையில் வேகமாய் போட, அது சிலீர் என்ற சத்தத்துடன் உடைந்தது.
அங்கிருந்த அனைவரும் திரும்ப, இரண்டு ஆண் மூன்று பெண்களுமாய் ஒரு மேஜையில் அமர்ந்திருந்த அர்ச்சனாவும் திரும்பினாள்.
அப்போது தான் வல்லபனை பார்த்தாள்.
அப்படியே அதிர்ந்து விட்டாள்!
“என்ன கலாட்டா பண்ற? நான் போலிஸ் கூப்பிடுவேன்!” என்று அந்த பெண் ஹிந்தியில் கத்த,
மராட்டி புரியாத போதும் போலிஸ் என்ற வார்த்தை புரிய “கால் தெம்” என்று அவளையும் விட அலட்சியமாய் பதில் சொன்னவன், அவள் கத்த கத்த பக்கத்துக்கு மேஜையில் இருந்த கண்ணாடி குடுவையை கையில் எடுத்தான். அதையும் கீழே போடப் போகிறான் என்று புரிந்தவள்,
“ஹேய், டோன்ட் டோன்ட்” என்று பதறினான்.
அந்த பதறலை பார்த்தவன், அதனை மெதுவாக கீழே விட்டான். அதுவும் உடைய உதட்டை பிதுக்கி அலட்சியமாக அவளை பார்த்து “போச்சா” என்பது போல பாவனை செய்தவன்,
வேறு என்ன உடைக்கலாம் என்று கண்களை ஓட்டிக் கொண்டே “டூ யு ஸ்டில் வான்ட் மீ டு கிளீன் திஸ்” என்றான்.  
“நோ, நோ, யு கோ ஐ வில் கிளீன்!” என்று அந்த பெண் பதற,
உடைந்ததை காண்பித்து “சாரி” என்றவன் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து மேஜை மேல் வைத்து விட்டு பார்வையை அர்ச்சனாவின் புறம் திருப்பினான்.
அதுவரையிலுமே அவளின் கண்களில் அதிர்ச்சி மட்டுமே.
அர்ச்சனாவை போல வல்லபனின் தோற்றம் ஒன்றும் மாறி விடவில்லையே, அடையாளம் தெரியாமல் போக.
அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்தவனுக்கு அது அர்ச்சனா தான் என்று உறுதியாகிவிட அவளை பார்த்த படி நின்றான்.
அந்த பார்வையில் ஏன் இப்படி செய்தாய் என்ற கேள்வி நிற்க, அர்ச்சனாவின் பார்வையில் அதிர்ச்சி விலகி பயம் வந்து அமர்ந்தது.   
      
           
     
               
      

Advertisement