Advertisement

அத்தியாயம் ஆறு :
ரயிலின் சத்தம் மட்டும் தட தட வென்று கேட்டுக் கொண்டிருக்க, வல்லபனின் மனம் வெறுமையாய் இருட்டை வெறித்து கொண்டிருந்தது.
மும்பையை நோக்கி அவனின் பயணம். தமிழ் தெரியும் ஆங்கிலம் தெரியும். வேறு மொழிகள் தெரியாது. எதை தேடிப் போகிறான், எதை நோக்கி போகிறான், அவனுக்கே புரியவில்லை! தெரியவில்லை!
ஆனால் தோல்வியை ஒத்துக்கொள்ள மனமில்லை. ஊரில் இருப்பவர்களிடம் நிச்சயம் அழைத்து வருகிறேன் என்று சொல்லி மும்பையை நோக்கி சென்று கொண்டிருக்கிறான்.
ஆம்! அர்ச்சனாவை தேடிச் செல்கிறான். அவளின் வேலை மும்பையில். திருமணம் முடிந்த இரண்டே நாளில் “நான் வேலையை நேரில் சென்று தான் ரிசைன் செய்து வர வேண்டும்” என்று சொல்லியவள், ஒரு வாரத்தில் கிளம்பினாள்.
வல்லபனின் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் இருந்தாள். வல்லபனிடம் எந்த பேச்சுக்களும் இல்லை. அவனாய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் மட்டும். அப்படி அவனாலும் அதிகம் கேட்க முடியவில்லை. ஏன் இப்படி செய்தாய் என்று திருமணத்தை பற்றி தான் கேட்க நினைத்தான்.
ஆனால் ஏதோ தடுத்தது. அப்படி ஒன்றும் எதையும் அறியாமையில் செய்யும் பெண்ணாய் அவனுக்கு தோன்றவில்லை. ஆனால் நிச்சயம் வேறு ஒருவனை மனதில் நினைத்து இந்த வேலையை செய்திருப்பாள் என்று தோன்றவேயில்லை.     
அர்ச்சனா சண்டை சச்சரவு எதுவும் யாரிடமும் போடவில்லை. ஒரு ஒதுக்கம், எல்லோரிடமும். எல்லோரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னவள், ஷக்தி ப்ரியாவிடம் பேச செய்யவேயில்லை.
அவள் பேசியது எல்லாம், “சடங்கு அது இதுன்னு எதுவும் ஏற்பாடு செய்ய வேண்டாம். கொஞ்சம் நாள் போகட்டும். இதையாவது எனக்கு செஞ்சு கொடு” என்பது தான்.
அதன்படி அவர் நாயகியிடம் பேச, இரு அம்மாக்களுமாக, சரி இருவரும் ஒருவருக்கொருவர் பேசி பழகட்டும் என்று நினைத்து சிறிது நாள் போகட்டும் என்றே நினைத்தனர்.       
விருந்து என்று யார் அழைத்ததற்கும் “இங்க நான் வந்த பிறகு போயிக்கலாம்” என்ற பொதுவான பதில் அது அவளின் அம்மாவை பார்த்து சொன்னாளா இல்லை மாமியாரை பார்த்து சொன்னாளா தெரியாது.
அந்த ஒரு வாரமும் அவளின் முகத்தை முகத்தை தான் ஆராய்வான் வல்லபன். ஏதாவது தெரிகிறதா அவளின் முகத்தினில் என்று. அவனால் எதையும் கண்டறிய முடியவில்லை.
அத்தனை முறை பார்த்தும் அந்த முகம் மனதினில் பதிந்ததா? சந்தேகமே!
மனைவி என்பது உரிமையோடு வந்து விட்டது! ஆனால் உயிரோடும் உணர்வோடும் வந்து விட்டதா? அதுவும் சந்தேகமே!     
திருமணம் அவனின் வாழ்வில் கொண்டு வந்திருந்த மாற்றம், அவன் ராஜமாணிக்கத்தோடு தொழிலில் இணைந்து கொண்டது தான். ஆம்! மோகனசுந்தரம் திருமணம் முடிந்த நாளாய் தொழில்களில் இடையூறு செய்ய ஆரம்பித்து இருந்தார்.                       
முதலில் ஆரம்பித்தது அவரின் பெட்ரோல் பங்கில் கலப்படம் செய்கிறார் என்று. அதற்காக அங்கிருந்த ஒரு ஊழியனை விலைக்கு வாங்கி அதற்கான வேலைகள் வேறு செய்திருந்தார்.
இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது என்று தெரிந்தவுடனே, எல்லோரும் சொல்வது, “இல்லை… அப்படி எதுவும் நடக்க வில்லை…” என்று தான். ராஜமாணிக்கமும் அதையே சொன்னார்.
வல்லபன் செய்தது நேரத்தை வீணடிக்காமல் அப்படி நடந்திருக்கிறதா என்ற ஆராய்ச்சி தான். அவனிடம் சிவசு இருக்க, கூட அவனின் மூளையும் இருக்க, செய்த ஆளை பிடித்து விட்டான். பிடித்ததும் அந்த ஆள் சொன்ன பதில், “ராஜமாணிக்கம் சொல்லி தான் செய்கிறேன். பல வருடங்களாக நடக்கிறது” என்பது போல.
மோகன சுந்தரம் பிடிபட்டால் அப்படி தான் பேச வேண்டும் சொல்லியிருக்க அவனும் திரும்ப திரும்ப அதையே பேசினான்.
சிவசு அந்த ஆளின் பின்புலம் ஆராய்ந்து அவனின் குடும்பத்தை தூக்க, அந்த ஆளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. “நான் தான் செய்தேன்” என்று விட்டான். ராஜமாணிக்கம் அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்து விட்டார். ஆனாலும் அவன் மோகனசுந்தரத்தை காட்டிக் கொடுக்கவில்லை.
“ஒரு வேளை நீ பிடிபட்டு விட்டால், என்னை காட்டிக் கொடுக்க கூடாது” என்று அவர் அதற்கும் ரேட் பேசியிருக்க, தப்பித்து விட்டார்.
இப்படி வேலைகளும் வல்லபனை இழுத்துக் கொள்ள, என்ன தான் செய்வான் அவன். அர்ச்சனாவை அவனால் பெரிதாக நெருங்கி விட முடியவில்லை.
இதற்குள் அவள் மும்பை கிளம்பிவிட்டாள்.
“நானும் வரட்டுமா?” என்று கேட்கவில்லை வல்லபன், “வருகிறேன்!” என்றே அவளிடம் சொன்னான்.
“இல்லை, வேண்டாம். எனக்கு எத்தனை நாள் ஆகும்னு தெரியலை. ரிசைன் பண்றேன் சொன்னா மூணு மாசம் நோட்டிஸ் கேட்பாங்க, குடுக்காத பட்சத்துல காம்பன்சேஷன் கேட்பாங்க. அதுக்கு தாத்தா தான் பணம் கொடுக்கணும். அப்புறம் என்னோட ப்ராஜக்ட் ஒன்னு முடியற ஸ்டேஜ்ல இருக்கு, விட முடியாது. அதை ஒரு பத்து நாள்ல முடிச்சிடுவேன். முடிச்சிட்டு வந்துடறேன்” என்று நீளமாய் பேசி சென்றாள்.
சென்றவள், மும்பை சென்ற பிறகு ஓரிரண்டு முறை பேசினாள் ஆராதனாவோடு. அதன் பிறகு இதோ யாரோடும் தொடர்பில்லை, எந்த அழைப்புக்களுக்கும் பதில் இல்லை. அவர்களுக்கு யாரை தொடர்ப்பு கொள்வது என்றும் தெரியவில்லை.
வல்லபன் பிடிபிடியென்று ராஜமாணிக்கத்தையும் ஷக்தி ப்ரியாவையும் பிடித்தான்.
“ஒரு பொண்ணு எங்க வேலை பார்க்கிறா, யாரோட தங்கி இருக்கா, எதுவும் உங்களுக்கு தெரியலை. என்ன பண்றீங்க நீங்க?” என்று எகிறினான்.
எல்லாம் தெரியும் தான் இப்போது வல்லபன் வளைத்து வளைத்து கேட்கும் போது தெரியாதது போல தோன்றியது.
இன்னும் அதிகமாக எல்லாம் பாலாவிற்கு தான் தெரியும். அவர்களின் வீட்டினில் ஒருவன் போல இருந்தவன். திடீரென்று எல்லாம் மாறிப் போகும் என்று யார் கண்டார்?
அர்ச்சனா வேலை பார்க்கும் கன்சர்னின் பெயர் மற்றும் ஊர் தெரியும், வேறு எதுவும் தெரியாதே. அவளின் தோழிகளிடம் பேசுவார் தான். ஆனால் அதுவும் அவளின் கைபேசியில் இருந்து தானே. பதட்டத்தில் சமீப காலமாக யாரிடமும் பேசியது போல ஞாபகம் கூட இல்லை.
“அவ வேணும்னே நம்மை அவாய்ட் பண்றாளா? இல்லை ஏதாவது பிரச்சனையா? நமக்கு எப்படி தெரியும்!” என்று கடந்து பத்து நாட்களாய் அவள் தொடர்பில் வராமல் இருக்க தவித்து போனான்.
“மனைவி” என்ற ஒரு சொல்லுக்காக அவனே அப்படி என்றால், அம்மா, தங்கை, தாத்தா அவர்களின் நிலை சொல்லவா வேண்டும்.
இங்கே மோகனசுந்தரம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் தொந்தரவு கொடுக்க, எல்லாவற்றையும் அசால்டாய் முறியடித்தான் வல்லபன்.
அவனின் சீனியர் ஆஃபிஸ் போகும் நிலையில் சூழல்கள் இல்லை. ராஜமாணிக்கத்தின் தொழில்கள் எல்லாம் அவனையும் மீறி அவனின் வசமானது. அதாகப் பட்டது அவனால் பார்த்துக் கொள்ளப் பட்டது.
மோகனசுந்தரம் அவரை அறியாமல் சொத்துக்கள் அனைத்தையும் அவன் வசம் தள்ளிக் கொண்டிருந்தார். முன்பு அவர் பார்த்த வேலைகள் எல்லாம் அவன் வசம் வர, அவனுக்கு வேலைகள் நெட்டி முறித்தது.   
அர்ச்சனாவின் கவலை அரிக்க, ஷக்தி ப்ரியா வேறு சொல்லிக் கொண்டே இருக்க, அவன் மும்பை சென்று பார்க்கலாம் என்று அவதானித்த நேரம்,
அர்ச்சனாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டிஸ் வந்தது. அவள் சென்று ஒரே மாதத்தில் வக்கீல் நோட்டிஸ். அதுவும் அவளுக்கு அவனை பற்றி எதுவும் தெரியாது, சக்தி வல்லபன் என்ற அவனின் பெயரைத் தவிர.
ஆதலால் அவனின் பெயர் போட்டு, கேர் ஆஃப் என்று அவளின் தாத்தாவின் பெயர் போட்டு தான் அனுப்பியிருந்தாள்.
பார்த்ததும் ராஜமாணிக்கம் பதற, வல்லபன் ஆசுவாசப்பட்டான் என்பது தான் உண்மை.
“பத்திரமா இருக்கா! நம்மோட தொடர்புள மட்டும் தானே இல்லை. பார்த்துக்கலாம் விடுங்க!” என்று வல்லபன் பேச, அதன் பிறகே பெரியவர் சற்று தெளிந்தார்.
அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும் ஷக்தி ப்ரியாவிற்கோ ஆராதனவிற்கோ தெரியாது. அவர்களுக்கே தெரியாது எனும் போது வல்லபன் வீட்டினருக்கு எப்படி தெரியும்?
யாருக்கு தெரியாமல் மறைத்து விட்டான்.
அதன் பிறகு காத்திருக்க ஆரம்பித்தான். அவளின் அடுத்த செயல் என்னவாக இருக்கும் என்று யோசித்து.
ஏனென்றால் ஒரு வருடத்திற்குள் விவாகரத்து என்பது எளிது கிடையாது, ஏன் சாதியம்மல்ல ஒரு வகையில்!
அவளாய் வரட்டும் என்று நினைத்தான்.
நாட்கள் ஓட, அடுத்த மாதம் மீண்டும் ஒரு நோட்டிஸ் வந்தது.
அவளின் வக்கீலுக்கு அழைத்தான். அவர் ஒரு பெண்.
“மேம், அவங்களை என் கிட்ட பேசச் சொல்லுங்க” என்று.
“நோ, ஷி இஸ் நாட் இன்ட்ரெஸ்டட்” என்றார் கறாராக.
“அவளுக்கு என்னை பிடிக்கவில்லை” என்று அவன் நினைத்திருக்க, எங்கே போய் விடப் போகிறாள்? எப்படி விவாகரத்து கொடுப்பேன்? வரட்டும்! என்றே நினைத்திருந்தான்.
இதோ மீண்டும் நாட்கள் ஓட , பாலாவை ஒரு முறை யதேச்சையாய் பார்க்க நேர , “பட்சி பறந்துடுச்சு போல வல்லபண்ணா” என்றான் நக்கலாக பாலா.
வல்லபன் பதில் எதுவும் பேசாமல் முறைத்து பார்க்க,
“ஹ, ஹ, அண்ணா. எத்தனை வருஷமா எங்களோட இருக்காங்க. திடீர்ன்னு நீ வந்தா எல்லாம் சரி பண்ணிடுவியா?”
“உன்னால எல்லாம் பண்ண முடியும். ஆனா அர்ச்சனாவை ஒன்னும் பண்ண முடியாது. அப்புறம் எப்படி நீ அவங்களோட இருப்ப? அவ உன்னை எல்லாம் ஏத்துக்க மாட்டா! அவ பைத்தியம் மாதிரி ஒருத்தன் பின்னாடி சுத்திட்டு இருக்கா, ஹ, ஹ” என்று சிரித்தான்.  
கேட்டவுடன் மனதில் எரிமலை குமுற ஆரம்பித்த போதும், அமைதியாய் பார்த்திருந்தான் வல்லபன்.
வல்லபன் வக்கீல் என்பதை மறந்து போனான் பாலா!  
வல்லபனின் அமைதி பாலாவைத் பேச தூண்டியது.
“அவள்ளாம் உனக்கு செட்டே ஆகமாட்டா வல்லபண்ணா” என்று நக்கல் குரலில் கூறினான்.
அதற்கும் பதில் பேசவில்லை வல்லபன், ஆனால் அமைதியை விட்டு அப்படியா என்பது போல ஒரு கிண்டல் பார்வை பார்த்தான்.
அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்த பாலா அவன் பேசும்னு கிளம்பிவிட எண்ணி, “நான் சொல்றதை சொல்லிட்டேன்” என்று நகர எண்ணினான்.
“அட, வா, வா, பாலா, ஒரு டீ குடிக்கலாம்!” என்று அவனின் தோளிள் அவன் எதிர்பாராத போது கை போட்டுக் கொண்டான்.
பாலா விலக நினைக்கும் போது வல்லபனின் பிடி இறுக, திமிறி விலகினால் அடிதடி தான் எனப் புரிந்து அமைதியாய் அவன் இழுத்த இழுப்பிற்கு நகர்ந்தான்.  
வல்லபன் தன் பைக் சாவியை பாலாவிடம் கொடுத்து “ஏறு” என்றவன், அவன் ஏறியதும் பின்புறம் அமர்ந்து “பெட்ரோல் பங்க் போ” என்றான்.
வல்லபனிடம் வாய் கொடுத்த தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டே அவன் சொன்னபடி செய்தான்.
ராஜமாணிக்கத்தின் பெட்ரோல் பங்க். அதில் தான் கலப்படம் என்பது போல தான் மோகனசுந்தரம் பிரச்னை செய்த இடம்.
சேலம் மாநகரத்தின் பிரதான இடத்தில அமைந்திருந்தது. அதன் உள் இருந்த ரூமில் போய் அமர்ந்தவன் எதிரே பாலாவையும் அமரச் சொல்ல,
நேரமாக ஆக பாலாவின் தைரியம் குறைந்து கொண்டே வந்தது.
பாலா இயல்பில் நல்லவனே! மோகனசுந்தரதிற்கு தனியாக சில தொழில்கள் இருக்க அதனை நிர்வகித்துக் கொண்டிருந்தான். ராஜமாணிக்கத்தின் பெரும் பணம் மோகனசுந்தரத்தை தடம் பிரள வைத்திருந்தது. அங்கிருந்த பணத்தை எடுத்து இவர்களின் தொழிலை ஸ்திரமாக்கி இருந்தார்.
பாலா நின்று கொண்டே இருக்க,
“உட்காருடா, பெட்ரோல்ல கலப்படம்னு உங்க அப்பா கோல்மால் பண்ணினார். கம்ப்ளையின்ட் கொடுத்தார்”
“நான் என்ன பண்ண போறேன், கலப்படம் இல்லவே இல்லைன்னு உங்கப்பனுக்கு காமிக்க அதை உன் மேல ஊத்தி பத்த வைக்க போறேன், சரியா!” என்றான் சன்ன சிரிப்போடு.   
பாலா வெலவெலத்து விட்டான்.
அவனை தீர்க்கமாய் பார்த்துக் கொண்டே “சரி, அதை அப்புறம் பார்க்கலாம். என்னவோ என் பொண்டாட்டியை பத்தி சொன்னியே இப்போ விளக்கமா சொல்லு பார்க்கலாம்” என்று கேட்டுக் கொண்டே கால் மேல் கால் போட்டு கதை கேட்கும் பாவனையில் வசதியாய் அமர்ந்து கொள்ள..
பாலாவிற்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.
“இல்லை, எனக்கு ஒன்னும் தெரியாது. நான் ஒன்னும் சொல்லலை, அப்பா கிட்ட பிரச்சனை பண்ண வேண்டாம்னு சொல்றேன்” என்று சொல்லியபடி பாலா கிளம்ப எத்தனிக்க,
“உட்காருடா” என்ற வல்லபனின் குரல் அழுத்தமாய் ஒலித்தது.
இனி அவனாக விட்டால் தான் உண்டு என்று புரிந்தவனாக முகம் கன்றிப் போய் பாலா அமர்ந்தான்.
“ம்ம், இப்போ சொல்லு, யார் மேல பைத்தியமா இருந்தா?”
“நல்லா கேட்டுக்கோ… யார் மேல பைத்தியமா இருக்கா இல்லை, இருந்தா?” என்றான் திரும்பவும்.
“அவ கூட வேலை பார்க்கறவன்”
“சோ, படிக்கும் போது இல்லை அப்படிதானே”  
“இல்லை” என்பது போல பாலா தலையசைத்தான்.
அங்கே ஒரு விசாரணை நடந்து கொண்டிருந்தது.
“ம்ம்ம், அப்புறம் இந்த விஷயம் இங்க யார் யாருக்கு தெரியும்?”
“வேற யாருக்கும் தெரியாது” என பாலா சொல்ல,
“இனிமேலும் யாருக்கும் தெரியக் கூடாது. அப்படி தெரிஞ்சது வாழ்கை முழுசும் நீ முடமா தான் கிடப்ப, எனக்கு பதிலா உள்ள போக ஆளுங்க இருக்காங்க, இல்லை நானே போனாலும், ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ வெளில வந்துடுவேன். ஆனா நீ வாழ்க்கை முழுசும் எதுக்கும் லாயகில்லாம போயிடுவ”
“இனிமே நீ பேசுற ஒரு ஒரு வார்த்தையும் வல்லபனோட மனைவியை பத்தினதுன்னு உன் மூளைக்குள்ள பதியணும், நான் அண்ணான்னா அவ உனக்கு அண்ணி. அண்ணின்ற வார்த்தை தவிர வேற வரக் கூடாது. மறந்து போய் கூட பழக்க தோஷத்துல அவ பேர் உன் வாய்ல வரவே கூடாது புரிஞ்சதா. உன் அத்தை பொண்ணு எல்லாம் போச்சு. அவ நடந்து போனாளோ பறந்து போனாளோ அது உன் பிரச்சனை கிடையாது. இப்ப வல்லபனோட மனைவி அவ” என்று பற்களை கடித்து வார்த்தைகளை துப்பினான் வல்லபன்.
பாலாவின் முகம் கன்றளோடு அவமானத்தையும் சேர்த்து காண்பிக்க,
“எனக்கு தெரிஞ்ச பாலா இப்படி கிடையாதே” என்று இலகுவாக ஆரம்பித்தான் வல்லபன், இதற்கு முன்பு பேசியது அவன் தானா என்ற சந்தேகம் கிளம்பும்படியாக.  
ஆம்! மிரட்டல் ஆகிவிட்டது! பயம் கொடுத்தாகி விட்டது!
இனி அவனின் நல்லதனத்தை தொட வேண்டும்! எந்த சூழலிலும் ஒரு வார்த்தை கூட தவறாக அர்ச்சனாவை பற்றி வரக் கூடாது எனப் பேச ஆரம்பித்தான்.
“ம்ம், ஏன் அவ யார் கிட்டயும் இதை பத்தி முன்னமே சொல்லலை”
“தெரியலை, நான் அத்தை கிட்ட சொல்லலாம் சொன்னேன், முடியாது சொல்லிட்டா!”
“பயந்த சுபாவமோ?”
“பயமா? அவளுக்கா? கிடையவே கிடையாது!” என்றான் பாலா ஸ்திரமாக.
“அப்புறம் ஏன் இப்படி பண்ணினா”
“தெரியாது!”    
“இப்போ உன் கிட்ட பேசறாளா?”
“இல்லை”
இப்படியாக சிறிது நேரம் பேச்சு கொடுத்து, இனி அர்ச்சனாவை பற்றி பேசவே கூடாது என்ற எண்ணத்தை கொடுத்து, “உங்க அப்பாகிட்ட தெளிவா சொல்லிடு, இனி இவங்க சொந்தமோ, சொத்தோ, எதுவும் கிடையாது. சும்மா அதையும் இதையும் செஞ்சு தொல்லை கொடுத்தா, இங்க இருந்து கையாடல் பண்ணிட்டீங்கன்னு சொல்லி உள்ள தள்ளிடுவேன், உள்ள போறீங்களோ இல்லையோ அப்புறம் ஆயுசுக்கும் கோர்ட்டு கேசுன்னு அலையணும்”  
“நல்லவன் தான் நான், ஆனா ரொம்ப நல்லவன் கிடையாது. யாருன்னே தெரியாத பொண்ணுக்கு பிரச்சனைன்னாலே நிப்பேன். இதுல என் வீட்டு பொண்ணு பேரு எங்கேயாவது வந்தது, எதுவும் சொல்லிட்டு இருக்க மாட்டேன், செஞ்சிடுவேன்! பார்த்துக்கோ! கிளம்பு!” என்று பெரிய அரட்டலோடு முடித்தான்.  
இதோ பாலாவிடம் பேசி ஒரு வாரம், மும்பையை நோக்கி இவன் கிளம்பிவிட்டான்.
அவள் வேலை செய்யும் இடத்தின் முகவரியோடு.
“மனம் என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?” என்று கேட்ட போதும் அதற்கு பதில் சொல்லாமல் பயணித்து கொண்டிருந்தான்.
தனக்கு மனைவியாய் வரும் ஒருத்திக்கு வல்லபனிற்கு முன் அவளின் வாழ்க்கையில் ஒருவன் இருந்திருக்கிறான் என்பதே அவனால் ஜீரணிக்க முடியாத விஷயம். இதில் அதற்கு பிறகும் என்றால் “ம்கூம்” அனுமதிக்கவே முடியாது.
இன்னும் அவள் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியது ராஜமாணிக்கதிற்கும் அவனிற்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
திருமணமாகி மூன்று மாதங்கள் கழித்து தனியனாய் ஒரு பயணம்!   
விவாகரத்தா எப்படி வாங்கி விடுகிறாள் பார்க்கிறேன்? எதுவாகினும் திருமணம் முன் எடுத்திருந்தாள் அது அவளின் முடிவு!
இனி எல்லாம் என்னதே!
அது சேர்வதாகினும் சரி! பிரிவதாகினும் சரி!
ரயிலை விட வேகமாய் அவனின் மனம் சென்று கொண்டிருந்தது மும்பையை நோக்கி!
மும்பையை நோக்கியா? அர்ச்சனாவை நோக்கியா?         
     
   
      
               

Advertisement