Advertisement

அத்தியாயம் ஐந்து :
முன்பு பார்த்த மாப்பிள்ளைக்கு வீட்டோடு மாப்பிள்ளை என்று பேசியிருக்க, இப்போது திடீரென்று நடந்த திருமணத்தால் அதைப் பற்றிய பேச்சில்லை.
இப்போது பெண்ணை எங்கே அனுப்புவது, மாப்பிள்ளையிடம் என்ன பேசுவது? திருமணம் மட்டுமே முதன்மையாய் இருந்திருக்க, இப்போது யோசித்தால் வல்லபன் வீட்டோடு வந்திருக்க சம்மதிப்பான் போலத் தோன்றவில்லை.
திருமணம் முடிந்து விட்டாலும் ஆளுக்கொரு மனநிலையில் இருந்தனர். திருமணம் முடிந்ததும் சிவசு தன் ஆட்களுடன் கிளம்பியிருந்தார். 
அவர்களுக்கு திருமணம் முடிந்து பெண் வீட்டிற்கு போகும் வழமை தான். மணப்பெண்ணின் வீட்டிற்கு தான் அழைத்து சென்றனர். வீடு என்ற கட்டுக்குள் வராது, பெரிய பங்களா. வெளியில் இருந்தே பணத்தின் செழுமை அதீதமாய் இருந்தது.
“ஓஹ், அதான் அந்த மோகனசுந்தரம் அந்த குதி குதிச்சான் போல” என்று வல்லபனின் மனதிற்குள் ஓடியது.
நாயகி “நீ மட்டும் போ, மாலை நாங்கள் வந்து உங்களை இங்கே அழைத்து வருகிறோம்” என்று சொல்லி அனுப்பினார்.
திருமணம் என்று நடந்து விட்ட பிறகு பிகு செய்து என்ன ஆகப் போகிறது என்று வல்லபன் அமைதியாய் அம்மாவின் சொல் பேச்சு கேட்டான். அதனால் மணப்பெண்ணின் வீட்டிற்கு கிளம்பிவிட்டான். ஆனால் பெண்ணின் புறம் திரும்பக் கூட இல்லை.
திடீர் திருமணம் செலவுகள் சமாளிக்க அம்மா திணறுவார் என்று புரிந்து, அக்காள்களிடம் “கட்டி வெச்சீங்க தானே ஒழுங்கா செலவெல்லாம் பாருங்க, எதுக்கும் கணக்கு வைங்க, பின்னால முடிஞ்சா திரும்ப குடுப்பேன்” என்றான் அசால்டாக.
இருவரும் நன்கு வசதியானவர்களே “நாங்க கணக்கும் வைக்கலை, ஒன்னும் வைக்கலை. நீ பொண்ணை கூட்டிட்டு வீடு வந்து சேர்” என்று அதட்டி சென்றனர்.
வசதியான வீட்டில் பெண் கட்டியதால் என்னவோ தன் தம்பியை செட்டில் செய்து விட்டதாக அவர்களின் எண்ணம்.
செல்வ செழிப்போடு அவர்கள் வளர்ந்தனர். திருமணமும் அப்படி பட்ட வீட்டினில் தான் நடந்தது. அவர்களுக்கு எந்த குறையுமில்லை, சிற்சில குடும்ப நடவுகள் தவிர, அது எல்லா வீட்டிலும் இருக்கும் விடயம் தானே.  
ஆனால் அவர்கள் வளர்ந்தத்ற்கு அப்படியே எதிர்பதம் வல்லபனின் வளர்ப்பு. செலவம் குறைந்து கொண்டே வர, பெரிய வீடு என்று தான் பெயர், ஆனால் தற்போது கஷ்ட ஜீவனம் தான்.
பாதி நாட்களில் பெண்கள் தான் வீட்டிற்கு தேவையான சாமான்களை வாங்கி போடுவர். செல்லும் போதெல்லாம் தம்பியின் பர்சில் அவனை கேட்காமல் பணத்தை வைத்து வருவர்.  
இப்போது வசதி வந்துவிட்டது அவனிற்கு என்ற எண்ணம் தோன்றியது இந்த திருமணத்தால். தங்களை எதிர்பார்க்கவேண்டிய நிலைமை அவனுக்கு இல்லை என்று நினைத்தனர்.  
எண்ணம் திண்ணமாகுமா யார் அறிவர்?  
ஆரத்தி எடுக்க மணமக்கள் நிறுத்தி வைக்கப் பட,
வயது முதிர்ந்த ஒரு சுமங்கலியை பார்த்து “நீங்க எடுங்க பெரியம்மா” என்று ஒரு ஓரத்தில் இருந்து சொல்லிய ஷக்தி ப்ரியா மணமக்களின் கண்ணில் படமால் ஒதுங்கி நின்றார்.
ஆம்! மகள் நன்றாக வாழ வேண்டும் மோகனசுந்தரம் பேசிய படி எதுவும் ஆகிவிடக் கூடாது என்று அவர் ஒதுங்கி நின்றார்.
அம்மாவின் ஆசீர்வாதம் விட பெண்களுக்கு என்ன வேண்டும்.
அதனை கவனித்த அர்ச்சனாவிற்கு ஆத்திரம் பெருகியது. “நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்த திருமணத்தை நடத்தியே இருக்கக் கூடாது. இவர்கள் சொல்கிறபடி நான் நன்றாக இருக்க வேண்டுமா என்ன?”
“தேவையில்லை, நான் இதற்கு மூளியாகவே இருந்து விட்டு போகிறேன்” என்று அவளின் மனம் அப்பட்டமாய் நினைத்தது.
கூடவே இன்னொரு மனம் “இதற்காக யாரோ ஒருவன் சாக வேண்டுமா என்ன?” என்று கேட்க
“நான் வேண்டாம் என்று சொன்னேன் தானே! கேட்டானா, சாவது தான் அவனின் விதிஎன்றால் சாகட்டும். எனக்கு சொல்ல என்ன இருக்கிறது? நானா சாபம் கொடுதேன்!” என்ற தோற்றம் தான்.
இப்படியாக ஆரத்தி எடுக்கும் நேரம் வல்லபனின் சாவை பற்றி நினைக்க, “தீர்க்க சுமங்கலியா இருக்கணும்” என்ற அந்த பாட்டியின் குரல் காதில் ஒலிக்க அவளின் நெற்றியில் ஆரத்தி குங்குமம் தீற்றப் பட்டது.
“சாபம் பலிக்காது போல, உன்னால ஒருத்தன் சாகமாட்டான் விடு” என்றும் மனது சொன்னது.
“ஆனா என்னால் இவனோட வாழ முடியாதே”
“நீ வாழ முடியாதுன்றதுக்காக அவன் சாகணுமா என்ன? எப்படி பிரியலாம்னு யோசி” என்று மனது நடுநிலையாய் உரைக்க சற்று ஆசுவாசமானாள்.  
“தட்டுல காசு போடணும் மாப்பிள்ளை” என்று யாரோ குரல் கொடுக்க,
கர்ம சிரத்தையாய் அவனின் ஜேபியில் கைவிட்டு இரண்டு ஐந்து ரூபாய் காசுகளும், ஒரு ரூபாய் காசுமாய், பதினோரு ரூபாய் எடுத்தவன் அதனை தட்டினில் போட்டான்.
“என்ன பதினொரு ரூபாயா? செல்லாது! செல்லாது! எங்க பக்கத்துல ஆரத்தி எடுத்தா குறைஞ்சது பத்தாயிரம் ரூபாய் போடணும்னு வெச்சிருக்கோம்!”
“இவ என்ன நிலமா, பதிவு பண்ண இவ்வளவு ஸ்டாம்ப் வாங்கணும்ற மாதிரி” என்று தோன்ற மனதிற்குள் ஒரு இலகுத்தன்மை வந்தது. அது அவனை பேசவும் வைத்தது,    
“என்னது? பதினொரு ரூபாய்னா இளக்காரமா உங்களுக்கு! அதை கொண்டு போய் மஞ்சதுணில கட்டி சாமி முன்னாடி வைங்க, உங்க வீட்ல கோடி ரூபாய் பெருகும்!” என்றான் அசால்டாக.
“இதென்ன கதை மாப்பிள்ளை, யாரு கிட்ட? எங்க கிட்டயா?” என்ற அங்கிருந்த பெண்கள் கிளம்ப,
“ஆமாங்க! நிஜம்! இதை தான் எங்க வீட்ல கட்டி வெச்சிருந்தேன், பாருங்க இப்போ உங்க வீட்டு பொண்ணை கட்டி கோடீஸ்வரன் ஆகிட்டேன்! உங்களுக்கும் வரும்!” என்று தெனாவெட்டாய் சொன்னான்.
அவனின் பதிலில் சிரிப்பு வர, எல்லோரும் கொல்லென்று சிரிக்க,  வல்லபன் முகத்தில் சிரிப்பில்லை. ஒரு அலட்சியப் புன்னகை அவ்வளவே.
“சூப்பர் மாமா” என்றாள் ஆராதனா.
“யார் இது?” என்பது போல அப்போது தான் கவனித்தான்.
“நான் ஆராதனா, அர்ச்சனா தங்கை” என்று அவளாக சொல்லிக் கொள்ள,
சிறு பெண் தான், அழகான பொம்மை! திருமண தோற்றம் எல்லாம் இல்லை! இந்த பெண்ணையா திருமணம் செய்யக் கேட்டான், பைத்தியக்காரன்!” என்று தோன்றியது.
கண்களில் கனிவுடன் அவளை பார்த்தான். பின்னே அவனின் பாதுக்காப்பு வளையத்திற்குள் சேர்ந்து விட்ட மற்றொரு பெண் அல்லவா.  
“தம்பி, இந்த பேச்சு பேசறீங்க, உங்களுக்கு என்ன வேலை?” என்று கேட்டுக் கொண்டே பெண்கள் வழி விட.
“ம்ம், வக்கீலுங்க” என்றான் வல்லபன்.
கேட்ட ராஜமாணிக்கதிற்கும், சக்தி ப்ரியாவிற்கும் பையன் படித்திருக்கிறான் என்ற ஆசுவாசம் வந்தது.
“வக்கீலா? அப்போ டைவர்ஸ்க்கு அலைய வேண்டாம், இவனே குடுத்துடுவான்” என்று அர்ச்சனா நினைத்தாள்.
இன்னும் தனியாய் வல்லபன் கேஸ்கள் பார்ப்பதில்லை, சீனியர் சொல்லும் வேலைகள் தான், இதில் அவனின் சீனியருக்கு டைவர்ஸ் கேஸ் வந்தாலே உளட்டி விடுவான்.
அவரின் பார்வைக்கே வராமல் பார்த்துக் கொள்வான். அவனே பஞ்சாயத்தை முடிப்பான். ஆனால் நிஜமாய் ஆணோ பெண்ணோ ஒருவர் மோசம், மற்றவர் அவரோடு வாழ முடியாது என்ற நிலை அவனுக்கு புரிந்தால், அவனின் யோசனை இப்படியாகத் தான் இருக்கும்.
“விவாகரத்து கேசுக்கு பதிலா கொலை கேசு நடத்தலாம். உங்களுக்கு நான் விடுதலை வாங்கி தர்றேன். நீங்க உங்க லைஃப் பார்ட்னரை முடிச்சிடுங்க, நான் ஐடியா தர்றேன் இவனெல்லாம் ஏன் உயிரோட இருக்கணும்” என்று பேசுவான்.
அதற்கு மேல் நிற்பரா என்ன?
இதெல்லாம் அவனின் சீனியருக்கு தெரியாமலேயே நடக்கும்.
தெரிந்தால் மட்டும் ஆகப் போவது என்ன?
அவனை கட்டுக்குள் வைப்பது இயலாது.
அதுவுமன்றி அவனின் சீனியர் யார்? அவளின் பெரிய அக்காள் கணவர் குணசேகரன். 
அதற்கெல்லாம் பழி எடுப்பது போல அவனின் சீனியர் காசை கண்ணில் காண்பிக்கவே மாட்டார். “வர்ற கேஸ் எல்லாம் கேஸ் போடறதுக்கு முன்ன பஞ்சாயத்து பண்ணி செட்டில் பண்ணிடற. அப்பறம் நான் எப்படிடா சம்பாரிக்கறது” என்று அவர் சொன்னாலும், அவருக்கு கேஸ்கள் அதிகம் தான்.
அவர் என்ன பேசினாலும் துடைத்து விட்டு அவருடன் தான் இருக்கிறான். பின்னே அவர் பேசினால் அவனுக்கொன்றுமில்லை, அக்காள் கணவர் என்று விட்டு விடலாம்.
வேறு யாரிடமாவது போய் சீனியர் என்ற முறையில் இப்படி பணிவோடு பேசுவது எல்லாம் அவனால் இயலாது.   
இப்படிப்படவனாய் அவன் இருக்க, இதில் அவனா டைவர்ஸ் கொடுப்பான், சரியில்லை என்று நினைத்தால் எல்லோருக்கும் சொல்வது போல அர்ச்சனாவை கொல்ல நினைப்பானோ?
உள்ளே சென்றதும் “பூஜையறைக்கு போ அர்ச்சனா” என்ற அம்மாவின் குரல் கேட்க, திரும்பி அம்மாவை முறைத்து பார்த்தாள்.
“போ, போ அர்ச்சு” என்று சொல்லியபடி கண்களால் கெஞ்சினார்.
“உன்னால் தான் எல்லாம், ஆனால் உன்னால் நடந்த எல்லாம் என்னாலா?” என்று யோசித்தபடி அர்ச்சனா பூஜையறையில் நுழைய,
யாரும் சொல்லும் அவசியமன்றி வல்லபன் அவளுடன் நுழைந்தான். அர்ச்சனா சாமியை கும்பிடுவாள் தான், ஆனால் பெரிய அளவில் கடவுள் பக்தி கிடையாது.
ஆனால் வல்லபன் அப்படி கிடையாது. தினமும் காலையில் குளித்து பக்கத்தில் உள்ள அரசமரத்தடி பிள்ளையாரை கும்பிடாமல் எந்த வேலையும் ஆரம்பிக்க மாட்டான்.
மாலை வேலைகளிலும் கோவிலுக்கு அட்டவணை போட்டு செல்வான். அதாகப்பட்டது திங்கள் சிவன் கோவில், செவ்வாய் முருகன், இப்படியாக ஞாயிறு தவிர பாக்கி எல்லா நாட்களிலும் கோவில் சென்று விடுவான்.
ஞாயிறு மட்டன் சிக்கன் என்று ஒரு பிடிபிடிப்பான் அதனால் அன்று கோவில் போக மனம் வராது.
அர்ச்சனா வீட்டு பூஜையறை அற்புதமாய் இருந்தது. சற்று பெரியதே, பத்து பேர் உள்ளே நிற்கலாம். சாமி மேடை அளவாக இருந்தது. அங்கிருந்த சாமி படங்களும் சரி, சின்ன சின்ன வெள்ளியால் செய்த சாமிகளும் சரி, அத்துணை வேலைப்பாடோடு இருந்தது.
உள்ளே நுழைந்தாலே ஒரு சுகந்தம். உள்ளே நுழைந்தததுமே மனதிற்கு ஒரு அமைதி கிட்ட, ஓம் என்று விடாமல் ஒலித்துக் கொண்டிருந்த ஒலி மனதை ஒருநிலைப் படுத்தியது.
ஆனால் மறுக்கப் பட முடியாது ஒரு உண்மை, பணத்தின் செழுமையோடு கூடிய ஒரு பூஜை அறை. அது ராஜமாணிக்கத்தின் கோட்டை.
கண்மூடி வணங்கி நின்று விட்டான்.
“என்னை ஏமாற்றி விட்டாய் கடவுளே” என்ற பார்வையோடு அர்ச்சனா நிற்க,
ஏற்கனவே அங்கு விளக்கு எரிந்து கொண்டிருக்க, ஆராதனா வேகமா உள்ளே வந்து கற்ப்பூர தீபாராதனை காண்பித்தாள். மணியின் ஒலியில் கண்திறந்தவனுக்கு தீப ஒளியில் தெரிந்த சாமி படங்களுக்கு சிலைகளும் அப்படி ஒரு பரவசத்தை கொடுத்தன.
அதுவரை அர்ச்சனாவின் புறம் பார்வையை கூட திருப்பாதவன், திரும்பி பார்க்க அவள் கை எடுத்துக் கூட வணங்காமல் அப்படியே சாமியை வெறித்து பார்த்து நிற்பது புரிந்தது.
“சாமி கும்பிடு” என்று மெல்லிய குரலில் அதட்டல் இட்டான். மெல்லிய குரல் என்றாலும் அந்த நிமிடம் அர்ச்சனாவிற்கு கேட்க தோன்ற, கை கூப்பி வணங்கினாள். ஆனால் இவனை பார்க்கவெல்லாம் இல்லை.
ஆராதனா தீபாரத்தி தட்டை வல்லபனை நோக்கி நீட்ட, அதனை கண்களில் ஒத்துக் கொண்டான். பின்பு அதனை அர்ச்சனாவை நோக்கி நீட்ட, அவள் அதனை எடுக்காமல் கடவுளை வெறித்துக் கொண்டிருக்க, ஆராதனவே அவளுக்கு நெற்றியில் விபூதி வைத்து குங்குமமும் வைத்தாள்.     
செய்கைகளால் பார்ப்பதற்கு எதோ அர்ச்சனா சிறியவள் போலவும், ஆராதனா பெரியவள் போலவும் தோற்றம் கொடுத்தது.
பின்பு அர்ச்சனாவின் முகத்தை தான் ஆராய்ந்தான். ஏன் இந்த பெண் இப்படி செய்தால். எதுவும் தெரியவில்லை. பின்பு அவன் ஆராய்ந்தது அவனுக்கே குற்றவுணர்ச்சியைக் கொடுத்தது.
ஆம்! அந்த முகத்தினில் ஏதேனும் கயமை கள்ளத்தனம் தெரிகிறதா என்று ஆராய்ந்தான்
அப்படி ஒன்றும் தெரியவில்லை!
“எப்படிபட்ட பெண் இவள்?” என்று பார்த்தான்.
“கேள்வியே தப்பு! இவள் உன் மனைவி, தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தவறு செய்திருந்தாலும் அதை விட்டு விடு, அவளோடு சுமுகமாய் பேசிப் பழகு. இனி நடந்ததற்கு யாரையும் குற்றம் சொல்லியோ, நீதான் பொறுப்பு என்று சொல்வதிலோ பிரயோஜனமில்லை!” என்று நினைத்துக் கொண்டான்.
ஆம்! வல்லபன் புத்திசாலி! “இதுதான் உன் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்றிருந்தால் இதை ஏற்றுக் கொள், இதை செப்பனிட்டுக் கொள்” என்ற எண்ணம் ஓட அர்ச்சனாவைப் பார்த்தான்.
அர்ச்சனா அவனை பார்க்கவேயில்லை. கடவுளை வெறித்து பார்த்துக் கொண்டு நிற்க,
இவள் கடவுளிடம் சண்டையிடுகிறாள் போல என்று சரியாக கணித்தான். அர்ச்சனாவை அவளின் அம்மா, தங்கை, தாத்தா என்று யாராலும் கணிக்க முடியாது.
கணிக்க முடிந்திருந்தால் இந்த திருமணத்தில் இவ்வளவு குழப்பம் வந்திருக்காதோ என்னவோ? என்ன சொல்ல?
பெண்களை க்ஷணமும் தவறாகப் பார்த்திராதவன் தான், அவர்களை மதிப்பவன் தான், அவர்களை பாதுகாப்பவன் தான், ஆனால் முகமறியா மனைவியை பற்றி நிறைய கனவுகள் உடையவன்.
நிறைய! நிறைய!
அர்ச்சனா அதற்குள் வரவே மாட்டாள்.
அவனால் இந்த ஏமாற்றத்தை தாள முடியுமா?
ஏமாற்றம் என்றாலும் விழுங்கிக் கொண்டாவது வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது தான் வல்லபனின் எண்ணமாய் இருக்கக் கூடும்.
ஆனால் அர்ச்சனா? எனக்கிருப்பது ஒரு வாழ்க்கை. அதை என் இஷ்டப்படி தானே வாழ வேண்டும். விதித்துவிட்டது என்று நான் வாழ வேண்டுமா? என்னால் முடியாது என்பது தான் அவள்.
வாழ்க்கை வைத்திருப்பது என்ன?  
        
       
          
                   
   
  

Advertisement