Advertisement

 அத்தியாயம் நான்கு :
முடிந்து விட்டது, எல்லாம் முடிந்து விட்டது. அர்ச்சனாவிற்கு எதுவும் ஓடவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. மனம் அறிவு என்று அத்தனையும் மழுங்கிக் கிடக்க கீழே குனிந்து தன்னையே பார்த்துக் கொண்டாள்.
அவளின் கழுத்தினில் இருந்த தாலி அவளை பார்த்து சிரித்தது. அது அவளை பார்த்து சிரிக்க சிரிக்க ஒரு கோபம் பெருகத் துவங்கியது. அதனை கழட்டி வீசும் கோபம்.
ஆனால் முடியாதே, ஷக்தி ப்ரியா விடமாட்டாரே! நினைக்கவேயில்லை, அம்மாவிடம் இத்தனை திடம் இருக்கும் என்று. நினைத்ததை நடத்தி முடிப்பார் என்று.
தாத்தா சொல்வது தான் வீட்டினில். அவரின் ராஜ்ஜியம் தான். அம்மா எதற்கும் மறுத்து பேசியதில்லை. தாத்தா என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார். என்னவோ தாத்தா அம்மாவை அடக்கி அதட்டி உருட்டி வைத்திருப்பது போலத் தான் அரச்சனாவிற்கு தோன்றும்.
ஆனால் இல்லை என்னை யாரும் கட்டுக்குள் வைக்க முடியாது என்று ஷக்தி ப்ரியா நிரூபித்து இருந்தார்.
செல்வனாதனிடம் அவர் கேட்டதே “என் பொண்ணை உங்க வீட்டு மருமகளா கொண்டு போவீங்களா? நான் அண்ணி கிட்ட பேசட்டுமா?” என்பது தான்.
“maa you can’t do this to me” என்று அர்ச்சனா அதிர்ந்து பேச,
பதிலுக்கு ஷக்தி ப்ரியா அவளை பார்த்த பார்வையில் வாய் தானாகப் பூட்டு போட்டுக்கொண்டது.
ஷக்தி ப்ரியா செல்வனாதனிடம் பேசி நாயகியிடம் தொலைபேசியில் பேச ஆரம்பிக்க, பாலா அர்ச்சனாவைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தான். இப்போது என்ன செய்வாய் என்பது போல. அர்ச்சனாவைப் பற்றி இப்போதைக்கு தெரிந்த ஒரே ஜீவன் அவன் தான்.
நல்ல நண்பனே! ஆனால் மோகனசுந்தரத்தின் போதனையில் தடம் மாறி இருந்தான். அர்ச்சனாவின் அழகு அவனை எப்போதுமே ஈர்க்கும். தப்பான பார்வைகள் இருக்காது. யாருக்கும் சட்டென்று புரியாத அர்ச்சனாவின் குணமும் அவனை ஈர்க்கும். தடம் மாறினாலும் க்ஷணமும் அர்ச்சனாவிற்கு கெடுதல் எல்லாம் நினைக்கவில்லை. அப்பா சொல்படி நாமே திருமணம் செய்து கொள்ளலாம் என்பது மட்டுமே! அதுவும் அர்ச்சனாவைப் பற்றி தெரிந்த ஒருவன் எல்லாம் அவளை திருமணம் செய்ய முன் வருவது கடினமான விடயம் என்றும் அறிந்தவன்.    
ஒரு வகையில் பாலாவை நம்பியிருந்தால் அர்ச்சனா.  மோகனசுந்தரம் இதில் வேறு மாதிரி புகுந்து விளையாடுவார், அவளின் திருமணம் பாலாவோடு நடப்பதில் இத்தனை ஸ்திரமாய் இருப்பார் என்று அவள் நினைத்ததில்லை. அவளுக்கு உறவுகள் அதிகமாய் தெரியாது. மனிதர்கள் எப்படி என்று அறிந்து கொள்ளும் பக்குவம் இன்னும் வரவில்லை.   
அவளின் அப்போதைய நினைப்பே இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் பேசாமல் மாப்பிள்ளையோடே கூட்டணி வைத்து திருமணத்தை நிறுத்தி இருக்கலாம் என்பது தான்.
‘உன் கதை முடியும் நேரமிது’ என்று விதி அவளை பார்த்து சிரித்தது.
எல்லோரும் பேசிக் கொண்டிருக்க வல்லபனால் இந்த அதிர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை, மலங்க விழித்து நின்றான்.
அதற்குள் அவனின் அருகில் வந்த அர்ச்சனா “என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது சொல்லிடு” என்றாள்.
“சொல்லிடு” என்று அர்ச்சனா ஒருமையில் பேசியது வல்லபனிற்கு கடுப்பை கிளப்ப “என்ன? சொல்லிடா… மரியாதையா பேசலை, வாய் வெத்தலை பாக்கு போட்டுட்டும்!” என்று அடிக்குரலில் சீறினான்.
அதற்கு அர்த்தம் புரியாமல் அர்ச்சனா முழிக்க,
“ஆமா, உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுவேன்னு வேற உனக்கு எண்ணமா?” என்று வல்லபன் பார்த்த பார்வையில், ஒரு அலட்சியம், ஒரு இனம் புரியாத கீழான பாவனை, சொல்லப் போனால் எந்த பெண்ணையும் அந்த பார்வை கொண்டு பார்த்திருப்பானா? தெரியவில்லை! 
அந்த பார்வையில் தெரிந்த உதாசீனம், இளக்காரம் அர்ச்சனாவால் மேலே பேச இயலவில்லை.
ஆனால் வல்லபனாலும் தடுக்க இயலவில்லை, அர்ச்சனாவாலும்.
செல்வநாதன் தன் இரு பெண்களிடம் அழைத்து கூற, ஷக்தி ப்ரியா நாயகியிடம் பேசி முடித்த போது வல்லபனின் அக்காள்கள் நாயகியை சிறிது நேரத்தில் மண்டபத்திற்கு அழைத்து வந்து விட்டனர். எல்லோருக்கும் சேலம் சுற்றியே இருப்பிடம்.   
அம்மாவின் வரவை வல்லபன் எதிர்பார்க்கவில்லை. இவர்கள் கேட்டால் நான் திருமணம் செய்ய வேண்டுமா என்ற எண்ணத்தில் தான் இருந்தான்.
ஆனால் உண்மையில் அவனிடமும் யாரும் கேட்கவில்லை.
ஏன்? எப்படி? எதனால்? என்று வரையறுக்கும் முன் எல்லாம் முடிந்து விட்டது.
நாயகி அவனை எதுவும் பேச விடவில்லை. நான் வாக்கு குடுத்துட்டுடேன் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்.
ஷக்தி ப்ரியா அழுத விழிகளோடு மகளுக்கு திருமணம் பேசவும், ஓஹ், ஆண்கள் நினைத்தால் திருமணத்தை நடக்க விட மாட்டார்களா? கணவன் இல்லாத பெண்ணை கஷ்டப்படுத்துவார்களா? பார்த்து விடலாம் என்ற எண்ணம் அவருக்கு வர, வாக்கு கொடுத்து விட்டார். ஆணாய் இருந்தால் மோகனசுந்தரத்தை அடித்திருப்பாரோ என்னவோ.    
வல்லபனின் ரௌத்திரம், குணங்கள் நிச்சயம் அப்பாவைக் கொண்டல்ல நாயகியை கொண்டே!   
அவனுக்குமே அவனின் அம்மாவின் வெளியுலக பரிமாணம் புதிது, முடியாது என்று ஸ்திரமாய் அவனால் மறுத்திருக்க முடியும். ஆனால் அம்மாவும் அப்பாவும் சொல்லிய பின் நடு சபையில் அவர்களை அவனால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.    
யார் சொன்னர் ஆண்கள் தான் முடிவெடுப்பர் என்று. இங்கே முடிவெடுத்தது ஷக்தி ப்ரியாவும் நாயகியும், வல்லபனின் அக்காள்களின் சம்மதத்தோடு. அவர்கள் சூர்யமதி சந்திரமதி. 
ராஜமாணிக்கம் எதுவும் சொல்லவில்லை. அவருக்கு இப்படி எல்லாம் ஆகுமென்று தெரியாததினால் ஒன்றும் ஓடவில்லை. அதுவும் தன் பேத்திகளும் அவர்களின் அம்மாவைப் போல வாழ்வை இழந்து நிற்பர் என்ற சொல் தாள முடியவில்லை.
அமைதியாய் இரு பேத்திகளின் வாழ்க்கை குறித்து யோசித்து அமர்ந்து விட்டார்.    
எதுவும் அர்ச்சனாவின் உடன் பிறந்த ஆராதனாவிற்கு தெரியாது. தாத்தா மற்றும் அம்மாவின் செல்லம் அவளே. அதீத புத்திசாலி, ஆளுமை, மனிதர்களை கணிக்கும் திறமை, மனிதர்களோடு பழகும் தன்மை எல்லாம் அறிந்தவள் அந்த சிறு வயதிலேயே.
“மா, இது சரி வரும்னு தோணலை” என்று அக்காவின் திருமணம் குறித்து அம்மாவிடம் சொல்லி “அபசகுனமாய் பேசாதே” என்று அடியும் வாங்கியிருந்தாள்.     
அவளுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். அதனால் வரவேற்பு முடிந்ததுமே அவளை வீட்டிற்கு அனுப்பியிருந்தார் ஒரு உறவு பெண்மணியோடு.
அதன் பின் தான் இவ்வளவு கலாட்டா. அதனால் அவளுக்கு ஒன்றும் தெரியாது.
காலையில் ஆராதனா வந்த போது மாப்பிள்ளையும் மாறி இருக்க முகூர்த்த நேரமும் மாறி இருந்தது.
ஆம் முன்பு வைத்த முகூர்த்தம் விடியற் காலையில் இருக்க, இது பத்து மணிக்கு என்று இருந்தது.
வல்லபனை பார்த்த உடனயே கணித்தாள் அர்ச்சனா இவனோடு மிகுந்த சிரமப் படுவாள். அவனோடு ஒத்துப் போவது கடினம் என்பது போல.   
அமைதியாய் பார்த்திருந்தாள். வேறு என்ன செய்ய முடியும். அர்ச்சனா போன்ற ஒருத்தியை கட்டுக்குள் வைப்பதும் சிரமம். இப்படி யாராவது இருந்தால் தான் அவளை சமாளிக்க முடியும் என்று தோன்றியது.   
சிவசு செல்வநாதனை அழைத்துக் கொண்டு ஒரு பக்கம் அவர் சொன்ன இடத்திற்கெல்லாம் போய் அழைக்க , சந்திரமதியும் சூர்யாமதியும் தத்தம் கணவரோடு அழைப்புக்கு செல்ல,
நாயகி வல்லபனோடு முழு நேரமும் இருந்தார். எந்த நேரம் என்ன செய்வான் என்று அனுமானிக்க முடியாது. நடு சபையில் விட்டுக் கொடுக்க மாட்டான் என்று அறிந்திருந்தாலும் ஒரு சிறு நிகழ்வாக மகண்டுவிட்டால், அடைக்காத்தார் அவனை இருபத்தி ஏழு வயதில்.
என்னவோ கண்ணீரோடு ஷக்தி ப்ரியா அவரிடம் பேசவும் உடனே சரி என்று விட்டார். இப்போது மகனைக் குறித்து பயமாக இருந்தது.
செல்வநாதனும் அப்படித்தான் நாயகியும் அப்படி தான். நல்ல மக்கள்! ஆனால் அப்படிப்பட்ட மக்களுக்கு கிடைப்பது இளிச்சவாய் பட்டம் தான். ஆம்! அத்தனை சொத்துக்கள்! இப்போது எதுவுமில்லை!
வல்லபனின் அக்காள்களுக்கு தெரிந்தது எல்லாம் அர்ச்சனாவின் வசதி மற்றும் அவளின் அழகு, இப்படி ஒரு பெண் கிடைக்குமா என்று அவர்கள் உடனே சரி என்றனர், அவசரம் காண்பித்தனர்.
பிரச்சனை என்று தெரியும், பாலா வீட்டினரால் பிரச்சனை, இப்படி தான் நினைத்தனர். அர்ச்சனாவிடம் பிரச்சனை என்று அவர்கள் அனுமானிக்கவில்லை. அர்ச்சனாவிற்கு வல்லபன் வாழ்க்கை கொடுப்பது போல தான் நினைப்பு.
திருமணம் முடிந்த பிறகு அர்ச்சனா வீட்டினர் யாரோ வல்லபனிடம் “என்ன படிச்சிருக்கீங்க மாப்பிள்ளை” என்று கேட்க,
“எழுத படிக்க தெரியும்” என்றான் வல்லபன் கறாரான குரலில்.
“அப்போ படிக்கலையா?” என்று அவர் கேட்க,
“ஓஹ், கண்டுபிடிச்சிட்டீங்களா?” என்றான் என்ன வென்று புரியாத பாவனையில்.
“அண்ணா, அவன் திடீர்ன்னு கல்யாணம் நடந்த அதிர்ச்சியில் இருக்கான்” என்று நாயகி சமாளித்தார்.
அர்ச்சனா அப்படியே பதுமையாய் அமர்ந்திருந்தாள்.
“அம்மா எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை, நான் பண்ணிக்க மாட்டேன்” என்று தனிமையில் ஷக்தி ப்ரியாவிடம் அர்ச்சனா அவ்வளவு சொல்லியும் அவர் மசியவில்லை.
“மா, நான் லவ் பண்றேன்” என்று கடைசியாய் சொல்லவிட,  
“யாரு? நீ… புதுசா கதை விடாத”
“இல்லைம்மா நிஜம்”
“அப்படியே இருந்தாலும், இவ்வளவு நாள் சொல்லாம இப்போ எதுக்கு சொல்ற. அப்படியிருந்தும் ஒருத்தனோட போய் நீ மேடையில நின்னிருக்க, சீ! என்ன பொண்ணுடி நீ!” என்று ஆத்திரமாய் கத்தினார்.
“மா, இப்படி எல்லாம் பேசினா… இந்த கல்யாணம் நடந்தா… நான் செத்துப் போவேன்” என்று கடைசி ஆயுதமாய் மிரட்ட,
“இப்படி ஒரு பொண்ணு எனக்கு தேவையில்லை! செத்துப் போடி!” என்று விட்டார்.  
“என்னை செத்துப் போ சொல்லிட்டல்ல, இன்னும் நான் என்ன ஆனா உனக்கென்ன, நான் போக போறேன்” என்று மண்டபத்தை விட்டு கிளம்பப் போக,
“நீ மட்டும் போய் பாரு, அப்புறம் நீ செத்துப் போக மாட்ட, நான் தான் அதை செய்யப் போறேன்” என்று மீற முடியாத குரலில் கூறினார்.
சக்தி ப்ரியா செய்த மிகப் பெரிய தவறு இது! காதலித்த விஷயத்தை மறைத்து ஏற்கனவே ஒருவனுடன் மேடை வரை வந்து வேண்டாம் என்று தப்பிக்க நினைத்து விட்டாள்.
திருமணம் நடந்து விட்டால் மட்டும் இருந்து விடுவாளா என்ன?
அப்போதைக்கு அம்மாவை மீறி எதுவும் செய்யா விட்டாலும் “நீ கல்யாணம் செய்து வைத்தால், நான் ஒத்துக் கொள்ள வேண்டுமா? இது செல்லாது!” என்ற எண்ணம் தான்.
கல்யாணம் வேண்டாம் என்ற உண்மையை முன்பே சொல்ல முடியவில்லை. பெரிய உண்மை எல்லாம் இல்லை, வேறு ஒருவனைக் காதலிக்கிறாள்.      
ஏன் சொல்ல முடியவில்லை?
ஒரு அதீத குற்ற உணர்வு!
என்ன செய்யலாம் இதற்கு? எப்படி கையாளலாம்  என்று யோசிப்பதற்குள்ளேயே திருமணம் நெருங்கி இருந்தது. பாலாவோடு கூட்டணி வைத்து திருமணத்தை நிறுத்த நினைக்க, என்னென்னவோ நடந்து விட்டது.
அர்ச்சனா ஒரு டோன்ட் கேர் பெர்சனாலிட்டி! யாரை பற்றியும் எதை பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்பவளில்லை. தன் மனதிற்கு சரி என்று பட்டதை செய்யும் ரகம்.
மற்றவர்களை பற்றில்லாம் யோசிப்பவளில்லை.
அதிலும் பெண்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற கட்டுக்குள் எல்லாம் வர விரும்ப மாட்டாள். ஏன்? ஏன் பெண்கள் செய்யக் கூடாது? ஆண் செய்யலாம்? பெண் செய்யக் கூடாதா? என்ற எண்ணம் தான்.
இப்படிப்பட்ட எண்ணங்கள் இருந்தாலும், சில விஷயங்களில் முரண்படுவாள். இந்த கொள்கைகளுக்கும் செய்கைக்கும் சில விஷயங்களில் சம்மந்தம் இருக்காது.
சில விஷயங்களில் சுயநலவாதி ஆனதன் காரணமே அம்மாவிடம் காதலை சொல்ல முடியவில்லை.
மொத்தத்தில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், தீர்க்கமாய் எந்த முடிவும் எடுக்க தெரியாத குழப்பவாதி. ஆனால் என் முடிவுகள் நான் தான் எடுக்க வேண்டும் என்று நினைப்பவள்.
இருபத்து மூன்று வயது பெண். ஆறு வயதில் தந்தையை இழந்து விட்டாள். அப்படி ஒரு அப்பா செல்லம். அதனால் விவரம் புரியாத வயது என்றாலும் தந்தையின் இழப்பு அவளை அவ்வளவு பாதித்தது.
அதிலிருந்து அவளை மீட்டு வருவதே ஷக்தி ப்ரியாவிற்கு பெரும் பாடாய் இருந்தது. அதையும் விட அவருக்குமே இழப்பு தானே, அதுவும் கர்ப்பமாய் இருந்தவர், கணவன் துணையன்றி இன்னொரு பெண் பிள்ளையை பிரசவித்து… அந்த குழந்தையையும் கவனிக்க வேண்டும்.
திண்டாடிப் போனார்.
வாழ்க்கையின் கடினமான சில வருடங்கள், அந்த சில வருடங்களில் அவரின் முடிவுகள் யாவையும் அர்ச்சனாவை கொண்டே, இப்போதும் ஆராதனாவைப் பற்றி எந்த கவலையும் இல்லை அர்ச்சனாவின் கவலையே அதிகம்.  
எங்கேயாவது திருமணம் செய்து கொடுத்து விட்டால் அவளால் இருக்க முடியுமா என்ற சந்தேகத்தில் தான் வீட்டோடு மாப்பிள்ளை என்று மாமனார் பார்க்கவும் உடனே சரி என்றார்.
அதுவுமன்றி கல்லூரி வாழ்க்கை விடுதியில், இப்போதும் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் படித்து முடித்தவுடன் இந்த ஒரு வருடமாக மும்பையில் வேலை.
தோற்றம், நடை, உடை, பாவனை என்று அத்தனையும் மாறி விட்டது.  
அவளை இழுத்து பிடித்தாக வேண்டிய கட்டாயம்.   
“உனக்கு பிடிச்சிருக்கா” என்ற கேள்வி கேட்டாலும் பதில் வரும் வரை ஷக்தி ப்ரியாவிற்கு பொறுமையில்லை.
“தாத்தா உனக்கு நல்லா தான் பார்த்திருப்பாங்க, குறை எதுவும் இருக்காது. நீ வேலைக்கு போனது போதும், இங்க இருந்து நம்ம தொழிலை பார்த்துக்கோ” என்று சொல்ல ஆரம்பித்து இருந்தார்.
தினேஷும் பார்வைக்கு நன்றாக இருந்தான். பழகுவதற்கும் இனிமையாக இருந்தான். ஆம்! நல்லவனே, ஆனால் அர்ச்சனாவின் இந்த செயல்கள், அவனுக்கு நேர்ந்த அவமானம், எல்லாம் அவனை மாற்றி விட்டது.
இன்னமும் அர்ச்சனாவிற்கு அவளின் செய்கையின் தீவிரம் புரியவில்லை. இப்போது நடந்த திருமணம் மட்டுமே கருத்தில் இருக்க,
இதிலிருந்து எப்படி விடுபடலாம் என்ற எண்ணம் தான். தன்னால் மற்றவர் பாதிக்கப்படுவர் என்ற ஒரு எண்ணம், மனதின், அறிவின், எந்த ஓரத்திலும் இல்லை.
அதற்காக மற்றவர் என்ன ஆனால் எனக்கென்ன என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அதற்கான முக்கியத்துவம் இல்லை.
சரியான வழிகாட்டுதல் இல்லாத பெண்.
சக்தி வல்லபன் என்ற ஒருவனுடன் வாழ்க்கையை விதி பிணைத்து விட்ட பிறகு நடந்த விவாகத்தை ரத்து செய்வதென்பதோ, அவனிடமிருந்து விடுதலை என்பதோ சாத்தியமல்ல என்பதனை காலம் தான் அர்ச்சனாவிற்கு புரிய வைக்க வேண்டும்.    
             

Advertisement