Advertisement

அத்தியாயம் மூன்று :
“என்ன பண்ணலாம்” என்ற மாமனாரின் கேள்விக்கு ஷக்தி ப்ரியாவிற்குமே என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“பணம் குடுத்து செட்டில் பண்ணிடலாம் மாமா” என்றார் சற்று தயங்கி மெல்லிய குரலில்.
ஆனாலும் அங்கிருந்த அனைவருக்கும் கேட்டது.
“பணத்திமிரு” என்று தினேஷ் சப்தமிட்டான்.
“எவ்வளவு பணம் வேணும் சொல்லுங்க, வாங்கிட்டு கிளம்பிடுங்க. வேற பேச்சு வேண்டாம்!” என்று ராஜமாணிக்கம் கறாராக பேசியவர், “இங்க நடந்ததுக்கு நானும் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றார்.
பேசி முடித்த அம்மாவும் தாத்தாவும், அர்ச்சனாவை பார்க்க, நடந்ததற்கு சிறு வருத்தமும் இன்றி பார்த்திருந்தாள் இருவரையும்.
இருவருக்கும் அவளை அடித்து துவைக்கும் ஆவேசம் வந்தது. ஏன் இப்படி செய்தால் என்று தெரியவேயில்லை. அதை பற்றி பேசும் நேரமும் இதுவல்ல.  
இது தான் சாக்கென்று, “அதான் சொல்றாங்கள்ள பணத்தை வாங்கிட்டு கிளம்புங்க” என்று மோகனசுந்தரம் வந்து நாட்டாமை செய்தார்.
“உன்னை யாரும் இங்க கூப்பிடலை நீ முதல்ல கிளம்பு” என்றார் ராஜமாணிக்கம் ஆவேசமாக.  
“அதெப்படி மாமா, உங்க பேத்தி கழுத்துல பாலா காலைல தாலி கட்டின பிறகு கிளம்பிடறோம்” என்று அசால்டாகப் பேசினார்.
“இவர் என்னடா இவர் தூக்கின பொண்ணை நாங்க திரும்ப தூக்கியிருக்கோம், திரும்பவும் இந்த பேச்சு பேசறார். கிறுக்கனா இவர்” என்று தான் வல்லபனிற்கு தோன்றியது.
ஆம்! மோகனசுந்தரம் கிறுக்கன் தான். ஆனால் காரியக் கிறுக்கன்!
இத்தனை வருடமாக ராஜமாணிக்கத்துடன் அவரின் தொழிலை தான் பார்த்திருந்தார்.
காரணம் அவர்களின் சொத்து, தங்கை கணவனை இழந்தவுடனே இரு பெண்கள் தான், மகனை திருமணம் செய்து விட்டால் அவர் தானே அதிபதி எனக் கணக்கிட்டு, கிட்ட தட்ட பதினாறு வருடங்களாக அவர்களோடு இருந்தார்.
அவருக்கும் தொழில் உண்டு, ஆனால் அவரது ஒரு குட்டை, இது பெரிய ஏரி. ஏன் ஆறோ கடலோ உவமையில் கூட வரவில்லை என்றால், அது ஓடிக் கொண்டிருக்கும். இவர்களது அங்கேயே தான் இருந்தன. ஆம்! இருக்கும் தொழிலை பார்த்தனர் . பெருக்கும் வேலை எல்லாம் இல்லை.
ஆனாலும் மோகனசுந்தரதிற்கு குட்டையும் ஏரியையும் சேர்த்து கடலாக்கும் எண்ணம்.   
ராஜமாணிக்கமோ ஷக்தி ப்ரியாவோ அர்ச்சனாவை கொடுப்பது பற்றியெல்லாம் பேசியதில்லை.
ஓரிருமுறை இப்படி பேசிய போது “சின்ன பொண்ணு அண்ணா, இப்படி பேசாதீங்க, மனசுல இந்த மாதிரி எல்லாம் விதைக்காதீங்க” என்று சொல்லி விட்டார் ஷக்தி ப்ரியா.
ராஜ மாணிக்கத்திடம் பேசும் தைரியமெல்லாம் மோகனசுந்தரதிற்கு இல்லை. காரியம் கெட்டு விட்டால் என்று பொறுமை காத்தார்.
அதுவமன்றி பாலாவும் அர்ச்சனாவும் நெருங்கிய சிநேகிதம், வயது வித்தியாசம் இருந்த போதும். நான்கு வயது வித்தியாசம். வயது ஏற ஏற காதலாக மாறக் கூடும் என்று நினைத்திருக்க அதுவுமில்லை.
அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் பாலா ஓரிருமுறை அர்ச்சனாவிடம் பிடித்தம் பற்றி, திருமணம் பற்றி பேச,
அவள் பிடிகொடுக்கவில்லை. இப்படி பேசினால் சிநேகிதமும் வேண்டாம் என்று விட்டாள்.
உள்ளதும் கெட்டு விட்டால் என்ன செய்வது என்று அவனிடம் “விடு நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லியிருந்தார்.
இப்போது அர்ச்சனாவின் திருமணதிற்கு பேசவும், மோகனசுந்தரம் நேரடியாக ராஜமாணிக்கத்திடம் பேச, அவர் “முடியாது” என்று விட்டார்.
காரணம் அவர் ராஜமாணிக்கத்தின் தொழிலை பார்க்கும் போது நடத்திய கையாடல்கள். ஆம்! நம்பி விட்டிருக்கும் போது, அவர் இப்படி செய்திருக்க, அதனால் அவரின் வீட்டினில் பெண் கொடுக்க ராஜமாணிக்கத்திற்கு இஷ்டமில்லை.
இதை வெளியிலும் சொல்லவில்லை. தன்னிடம் ஒருவன் கையாடல் செய்திருக்கிறான் என்பது தான் ஏமாந்து போனதை குறிக்கும், தன்னுடைய திறமையின்மையை குறிக்கும் என்பதால் அவர் அதனை வெளியிலும் சொல்ல வில்லை.
அதற்காக தான் வீட்டாடு மாப்பிள்ளை பார்த்து தான் இருக்கும் போதே அவனுக்கு தொழிலில் கற்றுக் கொடுத்து, மோகனசுந்தரத்தை முற்றிலுமாய் விலக்க நினைத்தார். இப்போது என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது.         
“இந்த கல்யாணம் ஒரு போதும் நடக்காது” என ராஜமாணிக்கம் பேச,
“நடக்கும் நடத்திக் காட்டுறேன்” என்று மோகன சுந்தரம் ஆவேசமாக பேச,
“உங்க அண்ணனை பேசாம போகச் சொல்லு” என்று ராஜமாணிக்கம் அவரின் மருமகளைப் பார்த்து பேசினார்.
“அண்ணா நீங்க வீணா பிரச்சனை பண்ணாதீங்க. இந்த கல்யாணம் நடக்காது” என்று ஷக்தி அண்ணனை பார்த்து சொல்ல,
“புரியாம பேசாத ஷக்தி, என் மகனை கட்டினா, நீ காலம் பூராவும் உன் பொண்ணோட இருக்கலாம். தனியா இருக்க வேண்டி இருக்காது. வேற யாரை கட்டினாலும் நீ தனியா நின்னுடுவ. பின்ன உன் இன்னொரு பொண்ணு கல்யாணம் எப்படி நடக்கும். உன் மாமனார் பேச்சை கேட்டு அண்ணனை வேண்டாம்னு சொல்லாத. உன்னை நினைச்சு பாரு”  
“என்னை எனக்கு பார்த்துக்க தெரியும். என் பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம்”  
“அதான் அவளுக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கலையே, பேசாம பாலாவை கல்யாணம் பண்ணி வைங்க”  
மாமனார் ஷக்தி ப்ரியாவைப் பார்த்த பார்வையில் தீப்பொறி பறந்தது.
“அது நடக்காது” என்று ப்ரியா ஸ்திரமாய் மாமனாரின் பார்வையை கொண்டு பேசினார்.
அவரின் பேச்சு பார்வை மோகனசுந்தரதிற்கு அப்படி ஒரு கோபத்தை கொடுக்க, நினைத்தது நடக்காமல் போய் விடுமோ என்ற எண்ணம் அவரை பதைக்க செய்ய, தாறுமாறாய் பேச ஆரம்பித்தார்.
“இது நடக்கலை, உன் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காது எழுதி வெச்சிக்கோ. உன் பொண்ணு நல்லாவே இருக்க மாட்டா. இப்படி கடைசி நிமிஷத்துல ஓடற பொண்ணை யார் கல்யாணம் பண்ணுவா. நல்ல பொண்ணுங்களுக்கே வரன் அமையறது இல்லை, உன் பொண்ணுக்கு எப்படி அமையும். அப்புறம் உன் சின்னவ… அவளை என்ன பண்ணுவ? மொத்தமா ரெண்டு பேர் வாழ்க்கையும் நாசமா போகும்”
“நீயாவது கல்யாணம் கட்டி ரெண்டு குழந்தை பெத்து மூளியா நிக்கற. ஆனா உன் பொண்ணுங்க கல்யாணம்ன்ற பேச்சே இல்லாமயே மூளியா நிக்க போறாங்க” என பேசப் பேச,
உறவுகளே ஸ்தம்பித்து நின்றனர்.
ராஜ மாணிக்கம் “முதல்ல வெளில்ல போடா இங்க இருந்து” என்று கர்ஜிக்க,
“என்ன மாமா? பணம் இருந்தா என்னை எதிர்த்துடலாம்னு நினைக்காதீங்க. உங்களால என்னை ஒன்னும் பண்ண முடியாது. இப்ப உன்கூட இருக்குறவன், உன் பொண்ணை கூட்டிட்டு வந்தவன், எவ்வளவு நாள் உன்னோட இருப்பான். ஒரு நாள்? ரெண்டு நாள்? அட ஒரு வருஷம்! எப்போ சின்ன சந்து கிடைச்சாலும் உன் பொண்ணை தூக்குவோம்” என்று மோகனசுந்தரம் அவரை பார்த்து பேச,
ஷக்தி ப்ரியா அப்படியே கல்லாய் சமைந்து விட்டார்.
“இவனா என் உடன் பிறந்தவன், இவனோடா இத்தனை வருடங்கள் உறவாடி இருந்தோம்” என்பதை போல,
யாரையும் அவர் பார்க்கவில்லை, அர்ச்சனாவை தான் பார்த்தார். “பார்! உன்னால் எனக்கு என்ன பெயர்? நமக்கு எவ்வளவு அவப் பெயர்?” என்பது போல.
அதுவரை எந்த கலக்கமும் இல்லாமல் வெகுவாய் அலட்சியமாய் இருந்தவளின் முகத்தினில் அம்மாவை கொண்டு முதல் முறையாய் கலக்கம்.
வல்லபனிற்கு “என்னடா இவர் இப்படி பேசுகிறார்? இவரெல்லாம் ஒரு மனிதரா” என்று பார்த்திருந்தான்.
அவன் வீட்டு பெண்ணை பேசியிருந்தால் நடப்பதே வேறு. இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பெண்பிள்ளை விவகாரம் ஓரளவிற்கு மேல் அவன் பேசவும் முடியாது. நீ யாரு உனக்கு தொடர்பா என்று கேட்டுவிட்டால் அது இன்னும் பெண்ணிற்கு அவமானம். பேச்சுக்கள் நொடியில் அப்படி தான் வரும் என்று புரிந்தவன்,
தேவையிருந்தால் உள்ளே நுழையலாம். பங்காளியாய் இருந்தால் என்ன? ஒரு அடியாவது வாங்காமல் இவன் இந்த மண்டபத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பது போல மோகனசுந்தரத்தை தீப்பார்வை பார்த்திருந்தான்.
சிவசு அவனின் கண்ணசைவிற்காக காத்திருந்தார்.  
பெண்ணும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க,
ராஜமாணிக்கம் “போடா” என்று மோகனசுந்தரத்தை வெளியே தள்ள கை கொண்டு போக,
“இத்தனை நாள் எங்க உழைப்பை வாங்கிட்டு இப்போ பொண்ணு குடுக்க மாட்டேன்னு சொல்றீங்களா?” என்று மோகனசுந்தரம் பதிலுக்கு அவரை தள்ளி விடப் போக,
நொடியில் இருவருக்கும் இடையில் வல்லபன் வந்து நின்றான்.
மோகனசுந்தரத்தின் கையும் வல்லபன் மேல், ராஜமாணிக்கத்தின் கையும் வல்லபன் மேல். ஆனால் இருவராலும் அவனை அசைக்கக் கூட முடியவில்லை. அவனின் மேல் பட்டு அவர்களின் கை வலியெடுக்க அவசரமாய் கை எடுத்தனர்.
செல்வனாதனிற்கு அப்போதுதான் தான் ஸ்மரணை வந்தது. ‘பொண்ணுங்களை அழ வெச்சா நம்ம மொத்த குடும்பங்கள் எல்லாம் விளங்காமப் போயிரும். வார்த்தையை பார்த்து பேசு மோகன், எங்க போய் தீர்த்தாலும், இந்த பாவம் தீராது” என்று பேசினார்.
“நீயாருடா இதுல.. நீ என்ன…” என்று மோகனசுந்தரம் செல்வனாதனை பார்த்து கேவலமான வார்த்தையைப் பேச,
அதற்கு மேல் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை வல்லபன், அவரை அடித்து விட்டான்.
அடித்த அடியில் அவர் தூரப் போய் விழுந்தார்.
பாலா வேகமாய் வல்லபனை தடுக்க வர,  
“நில்லுடா அங்கேயே” என்று கர்ஜித்த வல்லபன்,
“உங்கப்பன் கை காலோட வேணும்னா அவரை கூட்டிட்டு போய்டு. என்னடா மூணு பொண்ணுங்க ஒரு வயசானவர்ன்னு இந்த பேச்சு பேசறீங்க , பார்ப்போம்டா உங்க அப்பா என்ன பண்றார்ன்னு” என்று தெனாவெட்டாய் பேசினான்.
வேகமாய் எழுந்த மோகனசுந்தரம் “என்னை அடிச்சிட்டீங்கள்ள, உங்களை சும்மா விடமாட்டேன். நான் யார்னு உங்களுக்கு தெரியலை. அப்பனும் பையனும் அடையாளம் தெரியாம போகப் போறீங்க!” என்றார் ஆவேசமாய்.
அதற்க்கு மேல் க்ஷணமும் பொறுக்கயியலாமல் சிவசு வல்லபனிடம் “எந்த கை எந்த கால்” என்று கேட்க,
“ஷ்” என்பது போல ஒற்றை விரல் வைத்து அவரிடம் காண்பித்தவன்,
கையை கட்டி தோரணையாய் நின்று “ம்ம், அப்புறம்” என்று அவரிடம் அலட்சியமாய் பேச,  
“எத்தனை நாள் டா நீ இவங்களை பார்த்துக்குவ” என்று அவனிடம் சொல்ல,  
“காலம் முழுசும் கூட என்னால பார்க்க முடியும். முதல்ல நீ முழுசா மண்டபத்தை விட்டு வெளில போ. ஒரு வார்த்தை சொன்ன, நீ இந்த இடத்தை விட்டு நகர முடியாது” என சொல்லிக் கொண்டிருந்தான்.
பேசிக்கொண்டிருந்த அவனை தான் இப்போது ஷக்தி ப்ரியாவும் ராஜ மாணிக்கமும் பார்த்தனர்.
காலம் முழுசும் கூடப் பார்ப்பேன் என்றது வல்லபன் சாதாரணமாய் சொன்ன வார்த்தை.
ஆனால் அது ஷக்தி ப்ரியாவை அசைத்தது, ராஜமாணிக்கத்தை யோசிக்க வைத்தது.
இப்படி எல்லோரும் இருக்கும் போதே இந்த மோகனசுந்தரம் இப்படி நடந்து கொள்கிறானே, இனி நாங்கள் மட்டும் இருக்கும் போது என்ன செய்வான்? யார் வருவர் துணைக்கு? என்று தோன்ற மருமகளை பார்த்தார்.
ஒரு வேளை தான் நினைப்பதை அவரும் நினைக்கிறாரோ என்று ஷக்தி ப்ரியா பார்க்க,
அவரை அருகில் வருமாறு தலை அசைத்தவர், “இவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? இவங்க யாரு? வசதி வாய்ப்பு என்ன?” என்று கேட்க,
“தெரியாது ரொம்ப பழக்கம் இல்லை. அதுவும் மோகனண்ணன் அவரை தவிர யாரையும் அண்ட விட்டது இல்லை. ஒன்னும் விவரம் தெரியாது”  
அதற்குள் ராஜமாணிக்கத்தின் உறவில் இருந்தவர் அவர்களின் குடும்ப பெயரை சொல்லவும், ராஜமாணிக்கத்திற்கு தெரிந்தது.
“முன்ன நல்லா இருந்தாங்க, பேர் சொல்ற குடும்பம் தான்.  இப்போ பெருசா எதுவும் கிடையாது உதவி பண்றேன்னு பேர்வழின்னு இப்படி தான் செல்வநாதன் மொத்தமும் தொலைச்சிட்டு நிக்கறார். இன்னம் பையனுக்கு கல்யாணம் இல்லை. ரெண்டு அக்காங்க. கட்டிக் குடுத்த இடமெல்லாம் பெரிய இடம் தான். நம்ம அளவுக்கு இல்லைனாலும் அவன் அக்காங்களை குடுத்த இடமெல்லாம் பேர் சொல்ற மாதிரி தான்!”
“பையன் என்ன பண்றான்?”
“அது தெரியலை, அவங்கப்பாவை கேட்டா தான் தெரியும்” என்றார் அவர்.
இப்படியாக மெல்லிய குரலில் பேச்சுக்கள்.
இதை பார்த்த மோகனசுந்தரம் “இவன் பொடிப்பய, இவனை நம்பி என்னை பகைச்சிக்கிட்டீங்க” என்று கத்திக் கொண்டிருக்க,
“சிவசுண்ணா எங்க இருந்து இவங்களை கூட்டிட்டு வந்தீங்களோ, அங்கயே விட்டுட்டு வாங்க” என்று வல்லபன் சிவசு விடம் சொன்னான்.
“இருங்க தம்பி” என்றார் ஷக்தி ப்ரியா.
“என்ன?” என்று புரியாமல் பார்த்தவனிடம், “காலைல வரை இருக்கட்டும், இருந்து என் பொண்ணு கல்யாணத்தை பார்த்துட்டு போகட்டும்!”  
“அட யாருடா, அந்த இன்ஸ்டன்ட் இளிச்சவாயன்?” என்று வல்லபனின் மனதிற்கு தோன்றியது.
சத்தியமாய் அது அவனாய் இருப்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை.
அதையும் விட அர்ச்சனா போன்ற ஒரு பெண் அவனின் வாழ்க்கையில் அதுவும் அவனின் மனைவியாய் எந்நாளும் அவனால் ஜீரணிக்க முடியாது.
எது நமக்கு பிடித்தமில்லையோ வாழ்க்கை பல சமயம் அதனை நம்மிடம் வலுக்கட்டாயமாய் திணித்து விடும்! 
    
   

Advertisement