Advertisement

இதனை எதிர்பார்க்காத அர்ச்சனா தடுமாறி கீழேயே விழுந்துவிட்டாள்.
“அர்ச்சனா” என்று அவளின் அம்மா கத்தி விட,  
“டேய் என்னடா பண்ற” என்று ராஜமாணிக்கம் கத்த,
அவ்வளவு தான் அங்கே அப்படியே ஒரு நிஷப்தம்.
வல்லபனுக்கு அர்ச்சனா கீழே விழுந்திருந்தது தான் தெரிந்தது தினேஷ் அடித்தது தெரியவில்லை. ஆனால் சிவசு அதை பார்த்திருந்தவர் “பொண்ணை அடிக்கிறியாடா நீ” என்று வேகமாக வந்து தினேஷை எட்டி உதைத்தார்.
“ஐயோ என் பையனை கொல்றாங்களே” என்ற பெரிய ஓலத்தை மாப்பிள்ளையின் அம்மா வைத்தார்.
அர்ச்சனாவின் அம்மா அவளை பதட்டமாக தூக்க நெருங்க “தூரப்போ, என்னை தொடாதே” என்ற அர்ச்சனாவின் ஆவேச குரல் தான் கேட்டது.
அதற்குள் வல்லபன் தினேஷை நெருங்கி இருந்தவன் சிவசுவை தடுத்து,
“அடிச்சியாடா நீ” என்றான்.
“என்னடா எல்லோரும் சேர்ந்து என்னை மிரட்டுறீங்களா? அப்படி தான் அடிப்பேன்! என்னை வேண்டாம்னு இப்போ சொன்னா நான் சும்மா விடுவேனா! அவளை கொன்னு போட்டுடுவேன்! உயிரோட விடமாட்டேன், வெட்டிடுவேன்! எனக்கில்லாத அவ யாருக்கும் இல்லை!” என்று தினேஷ் ஆவேசமாக சொன்னது தான் தெரியும்,
வல்லபன் விட்ட அறையில் தூர விழுந்தான், “ஐயோ நான் அடிக்க மாட்டேன், அவங்களை எதுவும் செய்ய மாட்டேன்” என்று தினேஷ் சொல்லும் வரையில் அடி பின்னி எடுத்தான்.
ஆம்! “அவ இவ” என்ற மரியாதையின்மை போய் “அவங்க” என்ற வார்த்தை தானாக வந்தது.
“வல்லபா விடு அவனை செத்துடப் போறான்” என்று செல்வநாதன் அவனை பிடித்து இழுக்க இழுக்க, மாப்பிள்ளை வீட்டினர் ஆளுக்கு ஒரு புறம் அவனை இழுத்து நிறுத்த யாராலும் முடியவில்லை.   
இதில் அர்ச்சனா அவளின் கையினில் கிடைத்ததை தினேஷ் மீது தூக்கி வீச அதுவும் அவனை பதம் பார்த்தது. அது ஒரு சொம்பு, அவன் மீது பட்டு கீழே உருண்டு அது ஒரு சத்தம் செய்ய,
அது அர்ச்சனாவின் வேலை என புரிந்த வல்லபன்,
நின்று கொண்டிருந்த அவளை நோக்கி “நீங்க கொஞ்சம் நேரம் பேசாம அந்த சேர்ல உட்காருறிங்களா” என்று அவளை நோக்கி கோபமாகப் பேசினான்.
“நீ சொன்னா நான் கேட்கணுமா?” என்ற பார்வையை அர்ச்சனா கொடுக்க,
வல்லபனுக்கு அவளின் பார்வை இன்னும் கோபத்தை அதிகப் படுத்தியது.
தினேஷை விட்டு அவளின் அருகில் வந்தவன் “உட்காருங்கன்னு சொன்னேன்” என்று அவன் கர்ஜித்ததில் அதிர்ந்து போய் வேகமாக அமர்ந்தாள்.
அங்கே மீண்டும் ஒரு நிஷப்தம், அங்கே ஒலித்தது தினேஷின் அம்மாவின் அழுகை மட்டுமே!
வல்லபன் அடிப்பதை பார்த்ததில் மோகனசுந்தரம் சத்தத்தை விட்டு என்ன செய்வது என்று யோசித்து இருக்க,        
தினேஷை எழுப்பி ஒரு சேரில் அமர வைத்து இருந்தனர். தலை குனிந்து அமர்ந்திருந்தான். வலி உயிர் போனது.
வல்லபன் அவனை விட்டு அர்ச்சனாவிடம் வந்தவன், “உங்களை அடிச்சதுக்காக அவனை அடிச்சிட்டேன். கூடவே உங்க மேல கையை வைக்க கூடாதுன்ற பயத்தையும் கொடுத்துட்டேன். ஆனா உண்மையா நீங்க பையனா இருந்து இருந்தீங்க, இவனை விட நீங்க அடி வாங்கி இருப்பீங்க”
“இந்த மாதிரி கடைசி நிமிஷத்துல ஒரு பையனை வேண்டாம் சொல்வீங்களா, இத்தனை பேர் முன்ன ஒருத்தரை அசிங்கப் படுத்துற ரைட்ஸ் யார் குடுத்தா உங்களுக்கு?” என்று அப்படி ஒரு ஆவேசத்தோடு பேசினான்.  
அர்ச்சனா அதற்கு பதிலே பேசவில்லை, அமைதியாக அதே நேரம் தலை குனிந்து தான் அமர்ந்திருந்தாள். தினேஷ் அப்போது தான் சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.
பெண்ணின் அம்மா தான் தினேஷின் புறம் சென்றவர், “இங்க நடந்த எல்லாத்துக்கும் உங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அதே சமயம் நீங்க என் பொண்ணை கொன்னுடுவேன்னு சொன்னது எல்லாம் தப்பு. அப்பா இல்லாத பொண்ணு தானே தாத்தாக்கு வயசாயிடுச்சு என்ன பண்ணிடுவாங்க இவங்கன்னு நினைச்சு பேச வேண்டாம்”
“என் பொண்ணு சம்மதமில்லாம அவளை இப்போ இந்த நேரத்துல அதுவும் பாலா வீட்ல கொண்டு போக முடியாதுன்னு தான் அமைதியா இருந்தேன். அதுவும் என் அண்ணா இப்படி செய்வார்ன்னு நான் எதிர்பார்க்கலை. அந்த அதிர்ச்சியிலையும் கொஞ்சம் என் மூளை மழுங்கிடுச்சு” என்று அவர் நிமிர்வாக பேசப் பேச,    
தினேஷ் அவரை நேர் பார்வை பார்த்தவன் “மன்னிப்புன்ற வார்த்தை எல்லாத்தையும் சரி பண்ணிடுமா என்ன?” என்றான். அப்போது கண்மண் தெரியாத ஆத்திரத்தில் ஆவேசத்தில் பேசியவன் இப்போது நிதானத்தில் கூடவே அவமானத்தில் பேசினான்.  
“வேற என்ன பண்ணனும்? நீங்க சொல்லுங்க பண்ணலாம்!” என்றார் மாமனாரை பார்த்தவாரே,  
ராஜமாணிக்கத்தின் முன் அவர் பேசியதே கிடையாது என்பது தான் உண்மை. அதனால் தன்னுடைய மருமகளின் இந்த பரிமாணம் அவருக்கு மிகவும் புதியது. இந்த பிரச்சனைகளில் அவர் ஓய்ந்து போயிருந்தார். அதனால் அவரின் இயல்பையும் மீறி நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தார்.
“எனக்கு என் கல்யாணம் நடக்கணும், இந்த பொண்ணு இல்லைன்னா வேற பொண்ணு ஏற்பாடு பண்ணுங்க” என்று தினேஷ் பேச,
“அது முடியாது” என்றார் அடுத்த நொடி, “நீங்க கல்யாணத்துக்கு ஏதாவது செலவு செஞ்சிருந்தா குடுக்கறோம், இல்லை இந்த மண்டபத்தை அப்படியே விட்டு போறோம், நீங்க வேற பொண்ணு பார்த்து கல்யாணத்தை நடத்திக்கங்க, செலவு நாங்க பார்த்துக்கறோம்” என்றபடி மாமனாரை சம்மதிதற்காய் பார்க்க,
அவரும் சரி என்பதாய் தலையசைத்தார்.
அவரின் உடனுக்குடன் முடிவெடுக்கும் திறன், மன்னிப்போடு ஆரம்பித்த பாங்கு, இதனை ஆச்சர்யமாக பார்த்த வல்லபன் இப்போது அந்த பெண்மணியை உற்று கவனித்தான்.
அர்ச்சனா அவரின் சாயலை கொண்டே இருந்தாள். “மணப்பெண்ணின் அம்மா” என்ற பார்வை பார்த்ததினால் மட்டுமே அம்மாவாக தெரிந்தவர், அதனை விடுத்து பார்க்கும் போது திருமணதிற்கு நிற்கும் அம்மாவின் பெண் போலவே இல்லை. எந்த அலங்காரமும் இல்லை, நகையும் இல்லை, கழுத்தில் ஒரு சங்கிலி கையில் ஒரு வளையல், நெற்றியில் பொட்டில்லை. ஆனாலும் தோற்றத்தில் ஒரு தேஜஸ்.
சற்று முன் அழுது நின்ற பெண்மணியா இவர் எனத் தோன்றியது.
“ஏன் உங்க இன்னொரு பொண்ணு இருக்கா தானே? அவளை கல்யாணம் பண்ணி குடுங்க!” என்று கேட்டது தான் தாமதம் பொங்கி விட்டார்.
“என் மாமனார் பார்த்த மாப்பிள்ளைன்றதால மட்டும் தான் உனக்கு மரியாதை” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அர்ச்சனா அவரின் முன் “நீ தள்ளும்மா எவ்வளவு தைரியம் இவனுக்கு” என்று வந்து நின்றாள்.
பார்த்திருந்த வல்லபனுக்கு கோபம் எழ,
அவளுக்கு முன் வந்து நின்றவன், “அவங்க பேசறாங்கல்ல விடு, நீ பேசாமா உட்கார்” என்று நின்றான். என்னவோ இவளால் தான் இவ்வளவு பிரச்சனை என்று வல்லபனின் மனதினில் அழுத்தமாய் பதிந்து போனது.  
“என் தங்கச்சியை கேட்கறான், சின்ன பொண்ணு தெரியுமா? ஸ்கூல் போறா? எவ்வளவு தைரியம் இவனுக்கு?” என்று அர்ச்சனா நிற்க,
“ஸ்கூல் போற பொண்ணை கேட்கறானா?” என்ற கோபம் வல்லபனிடம் எழுந்த போதும்,
“ஷ்!!” என்று வாயினில் விரல் வைத்து மிரட்டியவன்,
“அம்மா இருக்காங்க! தாத்தா இருக்காங்க! பேசுவாங்க! நீ பேசாம உட்கார்!” என்றான் அதிகாரமாக.
அர்ச்சனா மீண்டும் பேச வர “உட்காருன்னு சொன்னேன்” என்று அப்படி ஒரு அதட்டல் போட, அவனின் சத்தத்தில் அர்ச்சனாவின் உடலே தூக்கி போட்டது.
அனிச்சையாய் இருந்து இடத்தில இருந்து ஒரு அடி பின் தள்ளி நின்றாள்.
இப்போது அர்ச்சனாவின் அம்மாவின் பின் நின்றான், அவர் பேசட்டும் என்பது போல.
“என் சின்னவ எனக்குள்ள இருக்கும் போதே என் கணவர் இறந்துட்டார். அப்போ என் வயசென்ன தெரியுமா? இருபத்து மூணு! அந்த வயசுல இருந்து என் பொண்ணுங்களை என் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்திருக்கேன், வளர்த்திருக்கேன், என் பொண்ணுங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா யாராயிருந்தாலும் தொலைச்சிடுவேன். இந்த தம்பி உன்னை ஏற்கனவே அடிச்சிட்டதால என் பொண்ணை அடிச்சதுக்கு நான் உன்னை எதுவும் செய்யாம விடறேன்” 
“என் மாமனார் முடிவு தப்பா போக வாய்ப்பில்லை, என்னவோ உன் விஷயத்துல சறுக்கிட்டார். தப்பு என் பொண்ணு மேலயும்ன்றதால உன்னை பேசமா விடறேன்” என்று அவர் அழுத்தமாக நிதானமாக மெல்லிய குரலில் உறுதியாக பேச,
இதையெல்லாம் பார்த்திருந்த ராஜா மாணிக்கம் “பேச்சு எதுவும் வேண்டாம், என்ன ஷக்தி பண்ணலாம்” என்று அருகில் வந்தார்.
“என்னை எதுக்குடா இவர் கேட்கறார்?” என்பது போல வல்லபன் பார்க்க,
அவர் கேட்டது அவரின் மருமகளை, அர்ச்சனாவின் அம்மாவை, அதாகப்பட்டது ஷக்தி ப்ரியாவை. ஆம்! அர்ச்சனாவின் அம்மா பெயர் ஷக்தி பிரியா!”
போராட்டம் புதிது! போராளி புதிது! களம் புதிது!  
ஆனால் இதற்கு பெண்கள் புதியவர்கள் அல்ல!   
          

Advertisement