Advertisement

“தம்பி உங்களால முடியும்னா அவளை மீட்டு கொண்டு வர முடியுமா?” என்று மணப்பெண்ணின் அம்மா வந்து கேட்கும் போதே அவரின் கண்களில் நீர் வழிந்தது.
“எல்லாம் உன்னால தான்” என்று அவரின் மாமனார் சாட,
“சும்மா இருங்க பெரியப்பா, அண்ணி என்ன செய்வாங்க” என்று அவரின் பக்கத்துக்கு ஆட்கள் பேச, சிறு சலசலப்பு!
“யாரும் ஒன்னும் கவலைப் பட வேண்டாம். என் பையன் கூட்டிட்டு வருவான்” என்று கணீர் குரலில் வல்லபனின் அப்பா செல்வநாதன் பேச,
இவர் அடங்க மாட்டார் போலவே என நினைத்துக் கொண்டே “அப்பா” என்று அவரை அதட்டினான் வல்லபன்.
“நீ கூட்டிட்டு வர்ற, உன்னால் முடியாதா?”  
“முடியும்! முடியாது! வேற, நான் ஏன் பிரச்சனை இழுக்கணும், பொண்ணோட தாத்தா பாருங்க அசையாம உட்கார்ந்து இருக்கார். அவர் பார்த்துக்குவார்”  என்றான் நக்கலாக.
“என்னடா நீ, என் தங்கச்சி வகையறாஅத்தனை பேரையும் பேசறார். எவனோ அப்படி இருந்தா எங்க ஆளுங்க எல்லாம் அப்படியா என்ன? கூட்டிட்டு வர்ற நீ” என்றார் அவர் கெத்தாக.
“உங்களோட பெரிய தொல்லை, எங்க இருக்காங்க சொல்லுங்க” என வல்லபன் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே,
மாப்பிள்ளையும், அவனின் அப்பாவும், உடன் சென்றவர்களும் வந்தனர்.
“என்ன ஆச்சு?” என்றபடி வேகமாக மணப்பெண்ணின் தாத்தா எழுந்தவர், நடை வைக்க, அவரின் நடை தடுமாற, நொடியில் வல்லபன் அவரை தாங்கி நிறுத்தினான்.
அவன் நிறுத்திய விதத்திலேயே அவனின் பலம் தெரிந்தது. அவன் பிடித்த இடத்தை கைகளால் தடவி விட்டுக் கொண்டே அவனை பார்த்தவர், பின்பு மாப்பிள்ளையின் அப்பாவை நோக்கி பார்வையை செலுத்த,
“என்ன மாமா இப்படி பண்ணிட்டீங்க, பொண்ணுக்கு இஷ்டம். தாத்தா தான் விடலை, பொண்ணு இஷ்டப்பட்டு தான் வந்திருக்கு, வேணும்னா கேட்டுக்கங்கன்னு சொல்றாங்க!”
“பொண்ணும் ஆமாம்னு தலையாட்டுது. உங்க பிரச்சனைக்கு நாங்க பிணையா. எவ்வளவு அசிங்கம் இது எங்களுக்கு” என்றவர் தோய்ந்து அமர்ந்தார்.
“பொண்ணுக்கு இஷ்டமான்னு அத்தனை தடவை கேட்டோம்ல. என் முகத்துக்கு நேரா இஷ்டமில்லைன்னு சொல்றா” என்று மாப்பிள்ளை பையன் என்னவோ எகிறிக் கொண்டு அந்த தாத்தாவை நோக்கி வந்தான்.
“அட இருங்க” என்று ஒற்றை கையால் வல்லபன் அவனை விலக்கி நிறுத்தினான்.
“டேய் நீ யார்ரா?” என்று அவன் வல்லபனிடம் எகிறினான்.
“என்னது டா வா? வாய்ல ஒத்த பல்லு இருக்காது. சொல்லிப்புட்டேன்!” என்று ராஜமாணிக்கத்திற்கு முன் நின்றான் வல்லபன்.
“பிரச்சனை வேணாம் தம்பி” என்றார் தணிவாக, என்ன இதெல்லாம் என்று அவரின் மனதிற்கு ஏனோ பயமாக இருக்க, நிற்க முடியாமல் அருகில் இருந்த சேரில் அமர்ந்து விட்டார்.
“என்ன பண்ணுது மாமா?” என்று மணப்பெண்ணின் அம்மாவும் இன்னும் சிலரும் வர,
“ஒன்றுமில்லை” என்று தலையசைத்தவர், என்ன செய்யலாம் என்ற யோசனைக்கு சென்று கொண்டே மருமகளைப் பார்த்தார்.
“இல்ல, அவளுக்கு பாலா மேல இஷ்டமெல்லாம் இல்லை. அவங்க ஃபிரண்ட்ஸ் அவ்வளவு தான்” என்றார் அவசரமாக அவர்.
“என் முன்னாடி தான் அவ சொல்றா, எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லைன்னு. அப்புறம் ஏன் இப்போ கொஞ்சம் நேரம் முன்ன வரவேற்புக்கு நின்னா? எங்களை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? பிடிக்கலைன்னா முன்னமே சொல்ல வேண்டியது தானே! நீங்களா தானே வலிய வந்து சம்மந்தம் பேசுனீங்க!”
“நான் அப்பவும் எங்கப்பா கிட்ட சொல்றேன், இவ்வளவு பெரிய ஆளுங்க நம்ம கிட்ட ஏன் சம்மந்தம் பேசறாங்கன்னு, அவர் தான் ஜாதகம் பொருந்தி வருது வீட்டோட மாப்பிள்ளை தான் அவங்க ஒரே கண்டிஷன்னு அப்பா சொன்னதால , சரின்னு சொன்னேன்” என்று அவன் சொல்லும் போதே,
“அப்போ பணத்துக்காக வந்திருக்கான்” என்று மனதிற்குள் ஓட்டியபடியே வல்லபன் அவனை பார்த்தான்.
“எனக்கு ஒரு பதில் தெரிஞ்சே ஆகணும். எங்களை இப்படி நீங்க செய்ய முடியாது” என்று மாப்பிள்ளை ஏகத்திற்கும் எகிறினான்.
ராஜ மாணிக்கம் அமைதியாக இருக்க, “கேட்கறேன்ல பதில் சொல்லுங்க” என்று அவன் கத்த, அவன் பக்க ஆட்கள், இவன் பக்க ஆட்கள் என்று களேபாரம் ஆகியது.
திருமண மண்டபம் இரவு ஒரு மணிக்கு அல்லோலகல்லோலப் பட்டது.
“அவளை பார்க்கவே நீங்க விடலை. இப்போ பிடிக்லைன்னு சொல்றா!” என்று மணமகன் கத்து கத்தென்று கத்தினான்.
அவனுக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. அழகான பெண், வளமான வாழ்வு, இது போவது கூட பெரிதில்லை. இது நேரம் வரை வரவேற்பில் உடன் நின்ற பெண், யாரோ தூக்கி சென்று விட்டார்கள் என்று பதைத்து ஓடிச் சென்றால், “உன்னை எனக்கு பிடிக்கவில்லை” என்று சொன்னால் எப்படி இருக்கும்?
வல்லபனுக்கு அவ இவ என்று மரியாதையில்லாமல் பெண்ணை பேசுவது உறுத்த, திரும்பி பெண்ணின் பெயர் என்ன என்று பார்த்தான்.
அர்ச்சனா வெட்ஸ் தினேஷ் குமார் என்று மணமேடையில் எழுதியிருந்தது.
“அர்ச்சனா” என்று மெதுவாக சொல்லிப் பார்த்தாலும், அந்த முகம் தெரியாத பெண்ணின் மேல் அப்படி ஒரு கோபம் வந்தது. பிடிக்காவிட்டால் ஏன் மணமேடை வரை வரவேண்டும்?
இவனை அவமானப் படுத்த இந்த பெண்ணிற்கு என்ன உரிமை இருக்கிறது என்று யோசித்து கொண்டே தினேஷை தான் பார்த்தான்.
“எனக்கு தெரியாது, இப்போ பொண்ணு வரணும்! எங்க கல்யாணம் நடக்கணும்!” என்று அந்த தினேஷ் சட்டமாய் அமர்ந்தான்.
“ஒரு வேளை அவளை பயப்படுத்தறாங்களோ என்னவோ? பொண்ணு நம்ம இடத்துக்கு வந்தா தான் தெரியும்?” என்று யாரோ குரல் கொடுக்க,
ராஜமாணிக்கம் தொய்ந்து அமர்ந்தார்.
என்ன செய்வது என்று தெரியவில்லை! அர்ச்சனா இப்படி செய்வாள் என்று நினைக்கவும் இல்லை!
சட்டென்று நிமிர்ந்தவர், வல்லபனை பார்த்து “உன்னால அவளை இங்க கொண்டு வர முடியுமா?” என்றார்.
“என் பையன் அதெல்லாம் கொண்டு வருவான்” என்று செல்வநாதன் பதில் கொடுக்க,
“அப்பா பேசாம இருங்க” என்று கடிந்தவன்,
அவனின் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
“சிவசுண்ணா” என்று மரியாதையாய் அழைத்தான்.
“என்னடா தம்பி இந்த நேரத்துல?” என்று அவரின் குரல் கேட்கவும்,
“பொண்ணு பிரச்சனை ஒன்னு” என்று விவரம் சொன்னவன்,
“பொண்ணு இங்க வரணும்! ஒரு மணி நேரம் போதுமா!” என்றான்.
“இதுக்கு ஏன்டா நான்? நீயே பார்த்துக்கோ! பசங்களை அனுப்பறேன்!”
“அதெல்லாம் வேண்டாம், பங்காளி பசங்க! நாள பின்ன முகத்தை பார்க்கணும். நான் மண்டபத்துல வெயிட் பண்றேன். பொண்ணு வரணும். ஆனா எவனுக்கும் காயம் ஆகக் கூடாது. ஏதோ பய கல்யாணம் பண்ணனுன்னு ஆசை பட்டுதான் தூக்கிட்டு போயிருக்கான். விடுங்க நம்ம பய, அதனால பக்குவமா கூட்டிட்டு வந்துடுங்க!”
“டேய்! அடிதடி இல்லாம… இதென்னடா உன்னோட.. எப்படிடா முடியும்?”
“முடியும்! முடியணும்! முதல்ல அவன் வீட்ல கரண்ட் கட் பண்ணுங்க!” என்று ஐடியா கொடுப்பது போல ஆரம்பிக்க,
அவனை பேச்சை முடிக்க விடாமல், “ஜெனரேட்டர்   இருக்கும் இல்லை யு பீ எஸ் இருக்கும்” என்று அவர் குறுக்கில் பேச,  
“ண்ணா, சொல்றதை கேளுங்க!” என்று அதட்டினான்.
“சரி சொல்லு” என்றார் நக்கல் சிரிப்போடு. பின்னே முதலில் வல்லபனின் கை தான் பேசும். இதில் அடிக்காமல் பெண்ணை கொண்டு வா என்றால்.    
“நீங்க டிஸ்டர்ப் பண்ணினதால என் யோசனை போச்சு. பொண்ணை தூக்கி வாங்கண்ணா! சும்மா நை நை ன்னுட்டு”
“உனக்கு பொண்ணு என்ன வேணும்?”
“எனக்கு யாருமில்லை சொந்தக்காரங்க பொண்ணு”
“அடேய், அப்போ ஃப்ரீ சர்விஸ் எல்லாம் பண்ண முடியாது, பொண்ணை கூட்டிட்டு வந்தா எவ்வளவு கொடுப்பாங்க”
“ண்ணா இதை நீ எனக்காக செய்யற, எங்கப்பா சொல்லிடாரு, இதுல காசு எல்லாம் வரக் கூடாது”
 பெண்ணை இவன் அழைத்து வருவானா என்று எல்லோரும் இவனையே பார்க்க,
இவன் சற்றும் அசராமல் சேரை இழுத்து போட்டு அமர்ந்து அரட்டை அடிப்பது போல பேசிக் கொண்டே இருந்தான்.
“இவன் பேசறதுக்கே இவ்வளவு நேரம் பண்ணினா பொண்ணு எப்போ வரும்” என்று  பார்த்து இருந்தனர்.
“டேய் உங்கப்பா பஞ்சாயத்தா? ஏன் டா இப்படி? நீ பையனா பொறந்து அனுபவிக்கற! எங்களை ஏன்டா கொடுமை படுத்துற!” என்று அவர் பேச,
இவன் அதற்கு சிரித்துக் கொண்டே “அவர் பெத்த அப்பான்னா நீங்க கூடப் பொறக்காத அண்ணன்” என்று டைலாக் சிரித்து கொண்டே அடித்தான்.
“தம்பி பேசியே ஆளை கவுத்துடுவடா நீ. எதோ பொண்ணு உன்னுதுன்னா கூட செய்யலாம்”
“ண்ணா சொல்றதை செய்! என்னை பேச வைக்காதே! பொண்ணுகளை நான் தப்பா பேசறது இல்லை” என்பதனையும் சிறு சிரிப்போடு தான் சொன்னான்.
ஆம்! அர்ச்சனாவின் மேல் அப்படி கோபத்தில் இருந்தான். என்ன இது மேடை வரை வந்து ஒருவனை வேண்டாம் என்பதா? அதை முன்பே செய்வதற்கு என்ன? காதல் கருமம் என்று ஏதாவது இருக்கும்! – சிரித்துக் கொண்டே பேசினாலும் பற்கள் அவனின் வாயினில் அரை பட்டது
ஆம்! காதல்! அவனுக்கு தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியிலும் பிடிக்காத ஒரே வார்த்தை!
கூலிக்கு ஆட்கள் நிறுத்தி இருந்த போதும் ராஜமாணிக்கத்தால் அர்ச்சனாவை தூக்கியதை தடுக்க முடியவில்லை. போலிஸ் போனதற்கும் தோல்வியோடு வந்து விட்டார்கள். அதுவும் இவ்வளவு பேசுகிறான், வெறும் வாய் சவடாலோ! வேறு என்ன செய்யலாம்? நானே அவனின் வீட்டிற்கு போக வேண்டுமா என்று யோசித்து ராஜா மாணிக்கம் எழுந்து நிற்க,
“வந்த போது இருந்த டெர்ரர் லுக் என்ன?  இப்போது இப்படி பேசுகின்றான். இவன் ஹீரோவா இல்லை காமெடி பீசா என்று சுற்றி இருந்தவர் பார்த்து நின்றனர்.
ஹீரோவை போல ஓடி, ஸ்டன்ட் அடித்து பெண்ணை அழைத்து வரவில்லை, கமெடியனை போல வேடிக்கை பார்க்கவில்லை, ஆனால் வில்லனைப் போல இருந்த இடத்தினில் இருந்து பெண்ணை கொண்டு வரச் செய்து விட்டான்.
அது தான் வல்லபன்! ஷக்தி வல்லபன்!
ஆம்! அவன் கைபேசியை வைத்ததே சிவசு பெண்ணை அவருடன் அழைத்து வரும் போது தான்.
எவனாய் இருந்தால் என்ன?
எமனாய் இருந்தால் என்ன?
சிவானாய் இருந்தாலும்  
உனக்கு சமமாய் அமைவேன் நான்.     

Advertisement