Advertisement

                  கணபதியே அருள்வாய்
                     சர்வம் ஷக்தி மயம்                      
அத்தியாயம் ஒன்று :
“அய்யா வல்லபா எந்திரியா அப்பா எழுப்ப சொல்றாரு” என்று அம்மா நாயகி எழுப்ப,
அம்மாவின் ஒரு குரலுக்கே விழித்து விட்டான் வல்லபன், ஆனாலும் அப்பா எழுப்பச் சொன்னாரு என்ற வார்த்தையில் மீண்டும் தேங்கி விட்டான். கண்களைத் திறக்கவேயில்லை!
அவனிற்கும் அப்பாவிற்கும் ஏழாம் பொருத்தம்!
நாயகிக்கும் தெரியும் அவன் விழித்திருப்பான் என்று. இரவு பன்னிரண்டு மணி அப்போது.
“வல்லபா” என்ற அம்மாவின் கலங்கிய குரல் நெகிழ்த்த,
“என்னமா?” என்று தூக்க கலக்கத்தில் சோர்வாக எழுந்து உட்கார்ந்தான்.
“அப்பா பேசணுமாம்” என்று கை பேசியை கொடுக்க,
“இப்போ என்னம்மா இழுத்து வெச்சிருக்கார், அவர் பேசணும் சொன்னாலே என்னமோன்னு பதைக்குது ஊர்ல இருக்குற அத்தனை வம்பையும் இழுத்து விட்டுக்கறார். கல்யாணத்துக்கு தானே போனார் அவர். இன்னும் வீட்டுக்கு வரலைன்ன உடனே நினைச்சேன், போனமா வந்தமான்னு இல்லாம..” என்று ஆரம்பிக்க,  
“தெரியலைய்யா, நீ பேசு” என்றார் கெஞ்சலாக.
கைபேசியை வாங்கி “அப்பா” என அவன் அழைக்கும் முன்னரே,
“வல்லபா இங்கே ஒரே பிரச்சனை, பொண்ணை காணோம்டா, நீ வா!” என்றார் அவசரமாக.  
“பொண்ணை காணோம்னா, நாம என்ன பண்ண முடியும்! ஏதாவது காதல் விவகாரமா இருக்கும். நீங்க ஊர் வந்து சேர்ற வழியை பாருங்க!”
“இல்லைடா பொண்ணை சொல்லி வெச்சு தூக்கி இருக்காங்க, நீ வா!” என்றார் பிடிவாதமாக.  
“பொண்ணை சொல்லி வெச்சு தூக்கினாங்கன்னா கூட இருக்குறவனுங்க எவ்வளவு உஷாரான ஆளுங்களா இருப்பாங்க, நாம கூட்டி வந்து விட்டாலும் திரும்பத் தூக்குவான், எதுக்கு அவனுக்கு வேலை வெச்சிட்டு, அப்படியே விடுங்க!” என்று எரிச்சல் குரலில் பேசினான்.
“நீ வருவியா? மாட்டியா? பொண்ணை நான் கூட்டி வந்து விடறேன்னு சொல்லியிருக்கேன், நீ வா!” என்றார் இன்னும் பிடிவாதமாக.
“என்னப்பா நீங்க இந்த அழிச்சாட்டியம் பண்றீங்க?”
“என்னடா நீ? பொண்ணு எங்க இருக்குன்னு கூடத் தெரியும், சொல்லிட்டு தூக்கிட்டு போறான். இங்க எவனும் போக மாட்டேங்கறாங்க. என் தங்கச்சி அழுதுட்டு நிக்குது. என்னை வேடிக்கை பார்க்க சொல்றியா, நீ வரலைன்னா போ, நான் போறேன்!” என்று அவர் பேசினார்.
பின்னே அவர் போகிறேன் என்று சொன்னால் மட்டுமே வல்லபன் கிளம்புவான். இருவருக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும் மகனை பற்றி அணு அணுவும் அறிந்தவர்.
பின்னே ஊருக்குள் பிரச்சனை என்றால் எப்படி முன்னே போய் நிற்கிறார், அவரால் தீர்க்க முடியும் என்றா? மகன் இருக்கும் தைரியம் மட்டுமே காரணம்.    
“எங்க போவீங்க? எங்கயும் போக வேண்டாம்! நான் வர்றேன்!” என்று அந்த நேரத்தில் உடை கூட மாற்றாமல், அப்படியே ஒரு சட்டையை அணிந்து கொண்டு, வீட்டில் கைலி போல எப்போது வேஷ்டியை தான் அணிவான், அதனோடே கிளம்பினான்.
“என்னவோ தங்கச்சியாம், தொங்கச்சியாம், இத்தனை நாளா எங்க போயிருந்தாங்க இவங்க எல்லாம், உன் வீட்டுக்காரர் உருகு உருகுன்னு உருகறார்!”
“வீட்டுக்கு வரட்டும், அவரை வீட்டை விட்டு இனி வெளியே விட்டா என்னன்னு கேளு!” என்று கிளம்ப,
எதோ பெண் விவகாரம் என்று புரிந்தவராக, “பார்த்துக்கோ வல்லபா, பொண்ணு விஷயம், நம்மளால ஆன உதவியை கண்டிப்பா செய்யணும்!” என்றார் நாயகி.
“அம்மா ஊருக்குள்ள ஆயிரம் நடக்கும், எல்லாம் நம்ம தலை கொடுக்க முடியாது” என்றான் கறாராக.
“உதவி பண்றேன் உதவி பண்றேன்னு இருக்குற சொத்தை எல்லாம் அழிச்சு வெச்துமில்லாம அத்தனை பிரச்சனையை வேற இழுத்து விடறார். இதை பார்க்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு” என்று சலித்தபடியே கதவை திறந்து வெளியே வந்தான்.
எங்கும் கும்மிருட்டு, ஆம்! அவர்களின் வீடு அவர்களின் தோட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தது. முதலில் அவ்வளவு பெரிய தோட்டமாக இருந்தது. இப்போது ஒன்றுமில்லாமல் இரண்டு ஏக்கர் பூமி மட்டுமே இருந்தது. நேரத்திற்கு தக்கவாறு அதில் பயிரிட்டனர். அதில் சொல்லப் போனால் ஒரு வருவாயும் இல்லை.        
அந்த காரிருள் யாருக்கும் பயம் கொடுக்கும். ஆனால் வல்லபனுக்கு பயம் என்பதே கிடையாது.
அவன் பைக்கை உதைத்து கிளம்பிய வேகத்திற்கு “மெதுவா போ கண்ணு” என்ற அம்மாவின் குரல் செவியை தீண்டும் முன்னே பறந்திருந்தான்.
சேலம் மாநகரின் முக்கிய இடத்தில் இருக்கும் பெரிய மண்டபம், இவர்கள் இருப்பதோ பூலாவரி கிராமம், சேலத்தில் இருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் செழுமையான ஊர்.   
ஆளரவமற்ற சாலைகள், அதுவும் தேசிய நெடுஞ்சாலை அடைந்தவன், பத்தே நிமிடத்தில் மண்டப வாயிலில் இருந்தான். பைக்கை நிறுத்தி உள்ளே செல்ல அங்கே ஒரு இருபது இருபத்தி ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்.
அனேகமாக அன்று மாலை திருமணதிற்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்திருக்க கூடும். அதன் பின்னர் தான் இது நடந்ததோ என்ற யோசனைகள் ஓட, வாயிலில் இருந்து அவன் மண்டபத்தின் உள் நடந்தான்.
எல்லோர் பார்வையும் இவன் மேல், மாநிறதிற்கும் கருப்பிற்கும் இடைப்பட்ட நிறம், ஆறடி உயரம், உயரத்திற்கேற்ற உடலமைப்பு என இருந்தவனின் உடை மிக எளிமையாய் இருக்க, அவனின் நடையின் கம்பீரம் அந்த எளிமையையும் மீறி வெளிப்பட்டது.
அங்கிருந்த எல்லோரும் சேலத்தை சேர்ந்தவர்கள். வல்லபனின் அப்பா வகையறா ஆட்கள் கிடையாது. எல்லோரும் வல்லபனின் அப்பாவின் தங்கை புகுந்த வீட்டின் ஆட்கள். எல்லோருக்கும் வல்லபனின் அப்பாவை மட்டுமே தெரியும். இவனை தெரியாது. நெருங்கிய உறவல்ல சற்று தூரமே.    
அப்பாவின் அருகில் வந்தவன் “என்ன” என்றான்.
“பொண்ணை தூக்கிட்டாங்கடா அதுவும் சொல்லி வெச்சு”  
“சொல்லி வெச்சு தூக்குனா எல்லோரும் என்ன பண்ணினாங்கா?” என்று அவரிடம் மெதுவாக கேட்டுக் கொண்டே பார்வையை சுழற்ற, அந்த இடத்தின் நிஷப்தம் அவனின் மெதுவான பேச்சினையும் சப்தமாக கொடுத்தது.
“ப்ச்” என்று சலித்த அவனின் அப்பா, “இப்போ என்ன பண்ணலாம் சொல்லு!” என்றார்.
எல்லோரும் வேடிக்கை தான் பார்த்தனர்.
“இப்போ என்ன பண்ணனும் சொல்லுங்க” என்றவனுக்கு என்னவோ அவனின் அப்பா தேவையில்லாம அந்த இடத்தில் பேசிக் கொண்டு நிற்பதாக தோன்ற,  
“நீங்க சொல்லாதீங்க” என்றவன், “பொண்ணோட அப்பா அம்மா சொல்லட்டும்” என திரும்பி யாரென்று தேடினான்.
ஆம்! தேடினான் தான்.   
அவனுக்கு அவ்வளவாக அவர்களை பற்றி விவரம் தெரியவில்லை. சொந்த பந்தங்கள் அதிகம், நெருங்கிய சொந்தம் என்றால் தெரிந்திருக்கும். இவர்கள் சற்று தூரத்து சொந்தம், அதனால் முன்பு எப்போதோ பார்த்தது.
“ஷ், அப்பா இல்லைடா, என் தங்கச்சி மட்டும் தான். அவளோட மாமனார் இருக்கார்”  
பார்வையை ஓட்டினான், சற்று வயதானவர் ஆனால் திடமாய் தான் இருந்தது தோற்றம். சற்று தள்ளி அப்பாவால் சொல்லப் பட்ட தங்கையானவர் அங்கே கவலையாக அமர்ந்திருந்தார்.
“ஆமாம் பொண்ணை தூக்கிட்டாங்கன்னு சொல்றீங்க, எல்லோரும் இப்படி வெறிச்சு உட்கார்ந்தா வந்துடுமா” என்று அப்பாவின் காதை மெதுவாக கடிக்க,
“மாப்பிள்ளை எங்கே?” என்றான்.
“மாப்பிள்ளையும், அவங்கப்பாவும், இன்னும் கொஞ்சம் சொந்தக்காரங்களும் போலிஸ் ஆஃபிசர் யாரையோ தெரியும் போல, பார்க்க போயிருக்காங்க”
“சொல்லுங்க தாத்தா, யாரு தூக்குனா? எதுக்கு தூக்குனா? பொண்ணு ஒரு வேலை லவ் எதுவும் பண்ணுதோ?” என்று அவளின் தாத்தாவிடம் பேச,
மனிதர் வாய் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
திரும்பி மணப் பெண்ணின் அம்மாவை ஒரு பார்வை பார்க்க, அவருக்கு சொல்வதா வேண்டாமா என்ற தயக்கம் இருப்பது புரிய,
“நல்லா தூங்கிட்டு இருந்தேன். என்னை எழுப்பி இங்க வர வெச்சு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க நீங்க, கிளம்புங்க முதல்ல” என்று அப்பாவை நேரடியாக திட்டினான்.
“பெண்பிள்ளை விவகாரம் டா”  
“என்னன்னு கேட்டா என்னன்னு சொல்லாம உட்கார்ந்து இருக்காங்க. உங்களுக்கு இருக்கிற பதைப்பு கூட அவங்களுக்கு இல்லை” என பெண்ணின் தாத்தாவை பார்த்தான்.
“சொன்னா நீ கூட்டிட்டு வந்துடிவியா” என்றார் அவர் கடுப்பாக. யாரிடம் கோபத்தை காட்டுவது என்று தெரியாமல் வல்லபனிடம் காண்பித்தார்.
அந்த வார்த்தை வல்லபனின் கோபத்தை சட்டென்று கிளப்பியது. அவர் பேசியது மரியாதை இல்லாத தோற்றத்தை கொடுத்தது.
வல்லபனுக்கு மரியாதை என்பது மிகவும் முக்கியம். பெரியவர் ஆயினும் “நீ” என்ற அலட்சிய சொல் திரும்ப பேச தூண்டியது.
“சொல்லாமையே…. சொன்னா நீ கூட்டிட்டு வந்துடுவியான்னா நான் என்ன சொல்ல… சொல்லி பார்த்தா தானே தெரியும்” என்று அவரிடம் கோபமாக பேசியவன்,  
“நீங்க கிளம்புங்க முதல்ல” என்று அப்பாவை பார்த்து சொன்னான்.
அவன் கோபமாக பேசியது தாத்தா ராஜமாணிக்கதிற்கு கோபத்தை கிளப்பியது.  
அவரும் திரும்ப பேசினார் “இவ சொந்தங்க யாரையும் நான் நம்பறது இல்லை. தோ இவ அண்ணன் வீட்ல தான் அவளை தூக்கிட்டு போய் இருக்காங்க, இதுல நீங்களும் அவங்க சொந்தம் தானே, எப்படி நம்ப? மாப்பிள்ளை அப்பா போலிஸ் ஸ்டேஷன் போயிருக்கார். எப்படியும் கூட்டிட்டு வந்துடுவாங்க” என்றார் திமிராக.   
“யாருப்பா அது?” என்றான் அவனின் அப்பாவை பார்த்து.
“நம்ம பங்காளி வீடு மோகன சுந்தரம்”  
“அவரா எதுக்கு தூக்குனார்?”
“அவர் பையனுக்கு பொண்ணை குடுக்கலைன்னு”
“அதுக்கு கல்யாண நாள் ராத்திரி வரைக்கும் என்ன பண்ணினாங்க?” என்றான் எரிச்சலாக.  
“பொண்ணை குடுக்கலைன்னு எல்லோர் முன்னையும் இவரை அசிங்கப்படுத்த இப்படி பண்ணிட்டாங்க”
“பாலா நல்லவன் தானே குடுத்துட்டுப் போக வேண்டியது தானே” என்றான், பாலா இவனின் பங்காளி முறை தானே, நன்கு தெரிந்தவன். இவனின் பார்வையில் நல்லவனும் கூட!   
மணப்பெண்ணின் தாத்தா இவனை திரும்பி பார்த்து முறைத்தார்.
“பார்றா இந்த கிழவனை, பொண்ணை தூக்குற வரை விட்டுட்டு என்னை பார்த்து முறைக்கிறான்” என மனதிற்குள் ஓடினாலும் அதை வெளியில் சொல்லாமல் அலட்சியமாய் நின்றான். அவனுக்கு மரியாதை கொடுக்காத யாருக்கும் அவன் கொடுப்பது இல்லை.  

Advertisement