தங்கம்மை – 12

பிடித்தம் என்பது வேறு.. புரிதல் என்பது வேறு.. ஒருவரைப் பிடித்துப் போவதற்கு ஒருசில வினாடிகள் கூட அதிகம் தான். ஆனால் ஒருவரைப் புரிந்துகொள்வதற்கு எத்தனை நாள் ஆகும் என்று யாருக்குமே தெரியாது. அப்படியானதொரு நிலை தான் இங்கே தீனாவிற்கும், தங்கம்மைக்கும்..

அவளுக்கு ஏற்கனவே அவனைப் பிடிக்கும்.. அவனுக்கோ இவள் தன்னைவிட்டு போகமாட்டாள், எது எப்படியாகினும் அவளோடு தான் இந்த வாழ்வு என்ற எண்ணம் வரவுமே பிடிக்கத் தொடங்கிவிட்டது. அதன்பொருட்டு அவளோடு இணைந்திடவும் செய்தான்..

ஆசைகள் இருந்தது.. ஆவல்கள் இருந்தது.. ஆனால் அன்யோன்யம் என்பது??!! அது இனிமேல் தான் என்றிருந்தது. அதற்கான நேரமும் இனிதான் என்றிருக்க, இவர்களின் சண்டைகள் கூட அதற்கான பிள்ளையார் சுழியாய் தான் இருந்தது.

ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள நிச்சயம் சில நேரம் வாக்குவாதங்கள் கை கொடுக்கும்..

ஆனால் அது இருவரும் பேசினால் தானே..

பேசாமல் இருந்தால்?!!!

தீனா ‘உனக்கு பிடிக்காதது எதுவும் இனி நடக்காது..’ என,

அவளோ ‘அப்போ நான் எங்கயும் வரல.. வீட்டுக்கு என்ன தேவையோ சொல்றேன்.. நீங்களே வாங்கிட்டு வந்திடுங்க..’ என,

தீனாவிற்கோ ‘என்னை நல்ல புரிஞ்சுக்கிட்டான்னு நினைச்சா இப்படி சொல்றா??!!’ என்று மனம் காந்தியது.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் இப்படிதான்.. காலையில் எழுந்தால் அவனுக்கு என்ன தேவையோ அதனை செய்து வைத்துவிடுவாள். மதியத்திற்கும் சாப்பாடு கட்டி வைத்துவிட, அவனோ எழுந்து வந்தால் அவளை முறைத்துக்கொண்டே தான் கிளம்பிப் போவான்..

வீடும் பெரியது வேறா.. ஆளுக்கு ஒரு அறையில் வேறு இருந்துகொள்ள கேட்கவும் வேண்டுமா??!!

‘நான் சாரி கேட்டு கூட இவங்க இப்படி பண்றாங்க.. ஏன் இவங்க கோவத்துல எதுவும் பேசினது இல்லையாமா..’ என்று தங்கம்மை வருந்த,

‘என்னை அப்படி சொல்ல எப்படி இவளுக்கு மனசு வந்துச்சு??!! நான் என்ன கடமைக்கா இவளோட இருக்கேன்..’ என்று தீனாவின் மனதும் வருந்த,

இருவரும் கோபம் என்ற நிலையில் இருந்து வருத்தம் என்ற நிலைக்கு வந்திட, யாராவது ஒருவர் பேசினால் கூட அடுத்து அது அப்படியே சரியாகிடும்.. ஆனால் பேசவேண்டுமே. யார் முதலில் பேசுவது என்ற வீம்பு..

அன்றும் அப்படிதான் தீனா பேங்க் கிளம்பிக்கொண்டு இருக்க, தங்கம்மை காலை டிபன் செய்தவள், அப்படியே அவனோடு அமர்ந்து, தானும் உண்டுகொண்டு இருக்க, அன்றைய தினம் பார்த்து அவள் செய்த சட்னி என்பது அவனுக்குப் பிடிக்காது..

தட்டில் வைத்ததுமே அவன் முகம் மாறிட, அதனைக் கவனித்தவளோ ‘வாய் திறந்து சொல்றாங்களா பாப்போம்..??!!’ என்று எண்ணிக்கொண்டே அவளும் அமர்ந்திட,

அவனோ ஒன்றுமே சொல்லாது உண்ணவும் பிடிக்காது மிகவும் சிரமப்பட்டே தண்ணீர் விழுங்கி விழுங்கி உண்ண, ஒருநிலையில் தங்கம்மைக்கே மனது பொறுக்கவில்லை

“பிடிக்கலைன்னா சொல்றதுக்கு என்ன??!!” என்று தானாக முணுமுணுப்பது போல் சொல்லியபடி எழுந்து சென்றவள், இட்லி பொடி எடுத்து வர,

“ஆமா ஊர்ல மட்டும் நான் வந்ததும் என்ன செய்யன்னு கேட்டு கேட்டு சமைக்கிறது.. இங்கயும் கேட்டா என்னவாம்..” என்றான் அவனும் தானாக பேசுவது போல்.

இருவர் மட்டுமே இருக்கும் இடத்தினில் எத்தனை நாளைக்கு முகத்தை தூக்கிக்கொண்டு இருக்க முடியும்??!!

தீனா இப்படி சொல்லவும் தங்கம்மை அவனைப் பார்த்தவள் “ஆமாமா… அப்படியே நம்ம கதை கதையா பேசிட்டோம்.. உங்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு பார்த்து பார்த்து செய்ய.. எல்லாம் போக போகத்தான் பழகும்..” என,

“பழகுமா??!! என்ன பழகும்.. ஒருவேளை எனக்கு இதெல்லாம் பழகிடும்னு சொல்றியா..” என்று அவனும் நேருக்கு நேராகாவே கேட்க,

“பழகினாலும் தப்பில்ல..” என்றவள் அடுத்து உண்ண, அப்போதும் வேண்டா வெறுப்பாய் தான் தீனா உண்டுவிட்டு கிளம்பினான்.

ஆனால் அவன் அப்படி கிளம்பிச் சென்றதே தங்கம்மைக்கு மனது மிகவும் சங்கடமாய் இருந்தது. என்ன இருந்தாலும் ஒருவரின் உணவு விசயத்தில் விளையாடுவது என்பது கூடாது தானே. ஆனாலும் அவளும் ஒன்றும் தெரிந்து செய்யவில்லை.

அவளும் ஆசையாய் தான் இருந்தாள், இங்கே வந்து தீனாவிற்கு எது எது பிடிக்குமோ எல்லாமே பார்த்து பார்த்து செய்து கொடுக்கவேண்டும் என்று. இப்படி எல்லாம் ஆகும் என்று அவள் கனவா கண்டாள்..

‘வர வர உனக்கும் பேச்சு ஜாஸ்தி தான் தங்கம்..’ என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ள,

அவளுக்கும் அப்படியே நேரம் சென்றது. தீனா ஓரளவு எல்லாம் பொருட்களை அடுக்கி இருந்தான் தான். ஆனால் அதெல்லாம் கொஞ்சம் சரி செய்து வைத்தவள், பின் மிச்சம் இருந்த வேலைகளை முடித்து, அம்மாவோடு அத்தையோடு பின் ரோஜா ப்ரித்வி என்று அனைவரோடும் பேசிவிட்டு அமர, நேரம் பார்த்தவள் மதிய உணவு நேரம் வந்துவிட, அவளின் மனம் தீனதயாளனைத் தான் நினைத்தது.

‘போன் பண்ணி கேட்போமா??!!!’ என்று மனது யோசிக்க,

‘ஒன்னும் வேணாம்…’ என்றும் அவளே சொல்லிக்கொண்டாள்.

இப்படியே அவளின் மனது அலைபாய, உருப்படியாய் அவளாலும் உண்ண முடியவில்லை.. தட்டில் கை அலைந்துகொண்டே இருக்க, பொறுத்து பொறுத்துப் பார்த்தவள், பின் முடிவாய் அவனுக்கு அழைத்தும் விட்டாள்.

தீனா, வேலையாய் இருக்க, தங்கம்மையிடம் இருந்து அழைப்பு வரவும் ‘என்னவோ..’ என்றுதான் எண்ணி

“ஹலோ என்னாச்சு??!!” என்று வேகமாய் கேட்க,

“என்னாச்சு??!!” என்றாள் வெகு நிதானமாய்.

அவளின் குரலின் தெரிந்த நிதானம் புரியவும் தான் தீனா இயல்பானவன் “தெரியாம எதுவும் கால் பண்ணிட்டியா??!!” என,

பல்லைக் கடித்தவள் “சாப்பிட்டீங்களான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்..” என்று சொல்ல, “ரொம்ப அக்கறை..” என்றான் சத்தமாகவே..

தங்கம்மை அமைதியாய் இருக்க “எனக்கு லஞ்ச் டைம் ரெண்டு மணிக்குத்தான் ..” என,

“மணி ரெண்டரை ஆச்சு..” என்று இவளும் சொல்ல,

“எல்லாம் எனக்குத் தெரியும் போ டி..” என்று வைத்துவிட்டான்.   ஆனால் அவளின் இந்த ஒரு அழைப்பே தீனாவிற்கு அத்தனை ஆசுவாசமாய் இருந்தது.

‘மனசுல இருக்கு ஆனா வேணும்னே பண்றா..’ என்று எண்ணிக்கொண்டான்.

தங்கம்மைக்கோ அவன் முதலில் கேட்ட ‘ஹலோ என்னாச்சு’ தான் மனதில் ஓடியது..

‘அப்படி என்ன ஆகிடுச்சுன்னு இவ்வளோ பதற்றம்.. மனசுக்குள்ள இருக்கு எல்லாமே.. ஆனா வீராப்பு மட்டும் குறையாது..’ என்று அவளும் எண்ணிக்கொள்ள,

கோபம் தாண்டி.. வருத்தம் தாண்டி.. இப்போது ஊடலில் நின்றது இருவரின் உள்ளமும்..

தங்கம்மை தன்னை புரிந்துகொண்டாள் என்று அவனும், இனியொரு பிரச்சனை எதுவுமில்லை என்று அவளும் எண்ணியிருக்க அன்று நடந்த அந்த பேச்சுக்கள் எல்லாம் அவர்களையும் மீறி நடந்த ஒன்றாகவே இருக்க, ஏன் இப்படி ஆகியது என்று இருவருமே இப்போது யோசிக்க, என்னவோ தவறு என்பது தங்கள் மீது தான் என்று இருவருமே ஒரு முடிவிற்கும் வர,

‘ஆனாலும் ரொம்பத்தான்..’ என்ற பிகு இரண்டு பேருக்குமே இருந்தது.

“எப்பவும் இவதானே சமாதானம் செய்வா..” என்று தீனாவும்,

“எப்பவும் நானே தான் பேசணுமா.. ஏன் இவங்களுக்கு என்னவாம்..” என்று தங்கம்மையும் நினைக்க, இந்த கண்ணா மூச்சி ஆட்டம் எப்போது முடிவிற்கு வரும் என்பது இருவருமே அறியவில்லை..

தங்கம்மையோ தீனா கொஞ்சம் பேசினால் கூட போதும் என்ற நிலைக்கு வந்து அவனை எதிர்பார்க்க, அவனோ எப்போதும் வரும் நேரம் தாண்டியும் அன்றைய நாள் வீடு வரவில்லை.

நேரம் செல்ல செல்ல, இவளுக்குக் கொஞ்சம் பதற்றம் கூட, அவனுக்கு அழைத்துப் பார்த்தாள்.

அழைப்பும் எடுக்கப் படாமல் போக, தங்கம்மைக்கு மனது அடித்துக்கொண்டது.. ‘ஒருவேளை ரொம்ப கோபமா இருக்காங்களோ..’ என்று எண்ண,

அங்கே ஊரில் என்றால், யாரையும் அனுப்பிக் கூட பார்த்துவிட்டு வர சொல்லலாம், இங்கே இவள் யாரை அனுப்ப முடியும்??!! எப்போதடா வருவான் என்று பார்த்து பார்த்து அமர்ந்திருக்க, நேரம் தான் கடந்துகொண்டே போனது.

அழைத்தும் பார்த்துவிட்டாள், மெசேஜ் அனுப்பியும் பார்த்துவிட்டாள் எதற்குமே பதில் வராது போக, தங்கம்மைக்கு ஒருவித பயம் வந்து ஒட்டிக்கொண்டது.

இங்கே யாரையும் தெரியாது என்பது ஒருபுறம் இருக்க, அவளால் அந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே அவளுக்கு பெரும் கவலை கொடுக்க, கடிக்காரம் பார்ப்பதும், வாசல் பார்ப்பதுமா இருக்க, ஒருவழியாய் வந்து சேர்ந்தான் தீனதயாளன்.

அவன் முகத்தினில் எப்போதும் வீட்டுக்கு வரும் பாவனை அவ்வளவே..

தங்கம்மைக்கோ அவனைக் கண்டதுமே கண்ணில் நீர் கரகரவென வழிந்திட, ‘இவ ஏன் இப்படி நிக்கிறா??!!’ என்று பார்த்தபடி தான் உள்ளே வந்தான்..

அவளோ அப்படியே நிற்க, தீனா அவளைப் பார்த்தபடி வந்தவன், அவள் கண்களில் நீர் பார்த்து “இப்போ என்னாச்சுன்னு அழுதுட்டு நிக்கிற??!!” என்று சாதாரணமாய்த் தான் கேட்டான்.

அவளுக்கோ அடுத்த நொடி அப்படியொரு அழுகை, முகத்தை மூடிக்கொண்டு அங்கேயே அமர்ந்து அழத் தொடங்கிவிட்டாள். தீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

பையை வைத்தவன், “தங்கம்மை… ஏன் அழற..” என்று அவளிடம் அருகே அமர, அவளோ நிமிரவே இல்லை..

“தங்கம்மை..” என்று அவன் திரும்ப அவள் தோள் தொட்டு அழைக்க, அவளோ பட்டென்று கைகளை தட்டிவிட்டு அழ,

அவனுக்கோ வந்த களைப்பு ஒருப்பக்கம், இவள் இப்படி செய்வது ஒருப்பக்கம் எல்லாம் கொஞ்சம் எரிச்சல் கொடுக்க “ஏய் இப்போ என்ன டி உனக்கு??!” என்று சத்தமிட,

அவனின் சத்தத்தில் நிமிர்ந்தவள் “உனக்கெல்லாம் சொன்னா மட்டும் புரிஞ்சிடுமா..” என்றவள், வேகமாய் எழுந்து விடு விடுவென நடந்து அவள் புழங்கும் அறைக்குள் சென்றுவிட்டாள்.

ஆனால் உண்மை என்னவென்றால் தீனாவிற்கு நிஜமாகவே எதுவும் புரியவில்லை.