Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் –  22

“ஆறு மாசத்துல கல்யாணம்னா மட்டும் தான் நாங்க சம்மதிப்போம்.. இதுக்குமேல எங்கனாலயும் நாள் தள்ளி போட முடியாது தன்யா…” என்று சுகந்தி சொல்ல,   

“ம்மா என்னம்மா??!!!” என்றாள் இவளோ அதனை ஏற்றுக்கொள்ளாது.

தன்யாவின் கணக்குப்படி, எப்படியும் பார்த்திபன் அவனின் லோன் எல்லாம் கட்டி முடித்து, திரும்ப இந்தியா வரவேண்டும் என்றால் குறைந்தது ஒருவருடமேனும் ஆகும்..

‘இன்னும் ஒரு வருடம் தானே..’ என்று அவளே அவளை தேற்றிக்கொள்ள, பெற்றவர்களோ ஆறு மாதத்தில் திருமணம் என்றால் சம்மதிக்கிறோம் என, தன்யாவோ “அப்பா அவங்க நிலைமை தெரிஞ்சும் நம்ம போர்ஸ் பண்ண கூடாதுப்பா..” என,

காஞ்சனாவோ “கல்யாணம் நல்ல விஷயம் தன்யா.. எது எது எப்போ நடக்கணுமோ அப்போ நடந்திடணும்..” என்று பேச,

சுகந்தியும் “இதுதான் எங்கனால முடியும் தன்யா..” என்றார் தீர்மானமாய்..

“ப்பா… என்னப்பா..” என்று தன்யா கோபாலிடம் கேட்க,

அவரோ “லவ் பண்றேன்னு சொன்ன.. நாங்களும் பேசலாம்னு தான் வந்தோம். இங்க இவ்வளோ நடந்திருக்கு. ஆனா எங்களுக்கு ஒன்னுமே சொல்லலை நீ.. இப்போ ஆறு மாசம் டைம் கூட, உனக்காகத்தான். இல்லன்னா முதல்ல கல்யாணத்தை முடிச்சிட்டு நீங்க என்னவோ செய்ங்கன்னு சொல்லிருப்போம்..” என,

“ஏப்பா இப்படி சொல்றீங்க??” என்றாள் வருத்தமாய்..

அப்பாவும் அம்மாவும் தனக்காகத்தான் பேசுகிறார்கள் என்று புரிந்தாலும், அதிலும் அவர்கள் இத்தனை கண்டிப்பு காட்டுவது என்னவோ சங்கடமாய் இருந்தது.

“வேற எப்படி பேச சொல்ற தன்யா?? அங்க வந்து எங்க கூட இருன்னாலும் இருக்க மாட்ட.. இப்போ ஒன் இயர் வரைக்கும் வெய்ட் பண்ணனும்னு சொல்ற.. இதெல்லாம் யாருதான் அக்ஸப்ட் பண்ணுவா??” என்று சுகந்தியும் கேட்க,

“அண்ணி நான் பேசுறேன் அவக்கிட்ட…” என்று காஞ்சனா அனைவரையும் சமாதானம் செய்ய,

தன்யாவோ “அப்போ, இப்போ கூட, இங்க வந்து ஸ்டே பண்ண மாட்டீங்க அப்படித்தானே.. நான்தான் அங்க வரணும்..” என்று இத்தனை நாளாய் அப்பா அம்மா மீது இருந்த வருத்தத்தினை கோபமாய் வெளிப்படுத்தினாள்.

காஞ்சனவோ “தன்யா இப்போ ஏன் இந்த பேச்சு??” என,

“இல்ல அத்தை.. நீங்களும் பாக்குறீங்க தானே.. எனக்கு அங்க எதுவுமே செட்டாகலை. நீங்க மட்டும் இங்க இல்லைன்னா நான் யாருமே இல்லாதவ போல ஹாஸ்டல்ல தான் இருந்திருக்கணும்.. லாஸ்ட்ல கேட்டா எனக்காக சம்பாரிக்கிறோம் சொல்றாங்க.. யாரு கேட்டா அதெல்லாம்..” என்றவள் அழவே தொடங்கிவிட்டாள்.

வெகு நாட்களாய் மனதில் இருந்தது.. இன்று இப்போது வெடித்து வெளி வர, பெற்றவர்களும் கொஞ்சம் பேச்சிழந்து தான் போயினர். தன்யா சொல்வது உண்மைதான். அவளுக்கு என்னவோ அங்கே ஒத்துக்கொள்ளவில்லை. காஞ்சனா இருப்பதால் இங்கே இருக்க முடிந்தது.

இல்லையெனில்??

சரி அதெல்லாம் கூட வேண்டாம்.. ஆறு மாதம் கழித்து திருமணம் என்று இவர்கள் தான் சொல்கிறார்கள். இப்போதாவது அவளோடு இருக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல், அங்கே நீ வா என்று அழைப்பது எப்படி நியாயம்??

சுகந்தி என்னவோ சொல்ல வர “போதும்மா.. நீங்க சம்பாரிச்சுட்டே இருங்க.. பட் அதெல்லாம் எனக்கு வேணாம்.. உங்களோட ப்ரெஸன்ஸ் கொடுக்காத பீல் உங்க பணம் கொடுத்திடாது.. எனக்கு என்னோட சம்பாத்தியம் போதும்.. இப்போ என்ன சிக்ஸ் மன்த் தானே டைம்..” என்றவள்,

“அத்தை நீங்க பார்த்தி அப்பா அம்மாக்கிட்ட பேசுங்க..” என்று காஞ்சனாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

‘என்னங்க இப்படி சொல்லிட்டு போறா…’ என்று சுகந்தி பார்க்க,

“கொஞ்சம் ப்ரீயா விடு..” என்றார் கோபால்.

பார்த்திபன் வீட்டினர் தன்னை புரிந்துகொண்டு நடக்கும் அளவு கூட, அப்பாவும் அம்மாவும் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என்ற வருத்தம் தன்யாவிற்கு.            

காஞ்சனா அழைத்து ஈஸ்வரியிடம் விபரம் சொல்ல “பார்த்தி வரவும் பேசிட்டு சொல்றேன்..” என்றவர், சுந்தரத்திடம் சொல்ல,

“பொண்ண பெத்தவங்க அவங்க சொல்றதும் சரிதான்.. முரளி பண்ண வேலைக்கு அவங்க பொண்ணு தர்றேன்னு சொன்னதே பெரிசு..” என்றார் அவரும்.

அதற்குள் தன்யா பார்த்திபனிடம் அனைத்தையும் சொல்ல “எனக்கு சம்மதம்..” என்றான் உறுதியாக..

“பார்த்தி.. நீ என்ன..” என்று தன்யா பேச ஆரம்பிக்கையிலேயே,

“சொன்னா கேளு தன்யா.. அவங்க எதிர்பார்க்கிறதும் சரிதானே.. உங்க அப்பா அம்மாக்கு உன் லைப் பத்தி எவ்வளவோ ட்ரீம்ஸ் இருந்திருக்கலாம்.. ஆனா அதுக்கெல்லாம் நம்ம சான்சே கொடுக்கலை இல்லையா..” என்றான் அவளை சரி செய்யும் பொருட்டு.

அவ்ளோ முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அமைதியாகவே இருக்க,

“கோபமா உனக்கு?? இங்க பாரு, எமர்ஜென்சி சூழ்நிலைல மேரேஜ் பண்றவங்க எல்லாம் இல்லையா?? நம்ம ஒன்னும் அவ்வளோ மோசமான நிலைமைல எல்லாம் இல்லை தன்யா..” என,

“நானும் ஒன்னும் அப்படி சொல்லலை…” என்றாள் வேகமாய்..

“நீ எப்படியும் சொல்ல வேண்டாம்.. வீட்டுக்கு போயிட்டு உனக்கு பேசுறேன்..” என்றவன் வீடு செல்ல, அங்கே சுந்தரமும் ஈஸ்வரியும் பார்த்திபன் முடிவினை கேட்க,

“இப்போதான்ம்மா தன்யாவும் பேசினா.. அவங்க சொல்றது சரிதானே..” என்று சம்மதம் தெரிவித்தான்.     

தன்யா தவிர அனைவருக்கும் இதில் முழு சம்மதம் என்கையில், அன்றைய மாலையே ஒப்பு தாம்பூலம் மாற்றிக்கொள்ள, ஹேமா லேகா எல்லாருமே வந்திருந்தனர்.

ஈஸ்வரி ஹேமாவிடம் “இந்த செயின் தன்யாக்கு போட்டு விடு…” என்று ஒரு சங்கிலியை கொடுக்க,

‘ம்மா என்ன இது எனக்குத் தெரியாம??!!’ என்று பார்த்தான் பார்த்திபன்.

“என்னடா பாக்குற.. ஒப்பு தாம்பூலம் மாத்துறோம்னா வெறும் பூ மட்டுமா வைக்க முடியும்…” என்று மகனை அடக்க,

“ம்ம் முன்னாடியே சொல்லிருந்தா நான் இதை வாங்கிருக்க மாட்டேன் தானே..” என்றபடி தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு வெள்ளைக் கல் மட்டும் பதித்த ஒரு மோதிரம் எடுத்து பார்த்திபன் காட்ட,

“ஓஹோ..!!! பார்த்தி… நீ பீல் பண்ணி சொல்ற மாதிரியே தெரியலையே…” என்று லேகா அவனைப் போட்டு வாரினாள்.

தன்யாவிற்கு பார்த்திபனோடு பேச நிறைய இருந்தது. ஆனால் தனிமை கிடைக்கவில்லை. ஆறே மாதத்தில் திருமணம் என்றால் அவனால் முடியுமா?? விடுமுறைகள் எப்படி?? இங்கே வந்து திரும்ப தன்யாவை அழைத்துக்கொண்டு செல்வது என்றால் அங்கே ஏற்பாடுகள் எல்லாம் என்னமாதிரி என்று இவைதான் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

இதற்கு அடிப்படை காரணம், இத்தனை நாள் முரளியினால் பார்த்திபன் அனுபவித்த டென்சன் தான்.. இதற்குமேலாவது அனைத்தும் நல்லவிதமாய் நடந்து பார்த்திபன் கொஞ்சம் நிம்மதியாய் இருந்திட வேண்டும் என்றுதான் அவள் இந்த ஒருவருட அவகாசம் எதிர்பார்த்தது.

அதுவோ கிடைக்கமாட்டேன் என்றிட, ஹேமா தான் சொன்னாள் “இது நீ சந்தோசமா இருக்க வேண்டிய நேரம் தன்யா.. எது எப்போ நடக்கணுமோ அப்போதானே நடக்கும்.. அதைவிட்டு ஆறுமாசம் கழிச்சு என்ன நடக்கும்னு இப்போ இருந்தே யோசிக்காத..” என,

லேகாவும் “நீ இவ்வளோ வொர்ரி பண்ற அளவுக்கு எல்லாம் எதுவுமில்லை தன்யா.. பார்த்தி ஹேண்டில் பண்ணிடுவான்… ப்ரீயா விடு பார்த்துக்கலாம்..” என்று சொல்ல, அப்படி இப்படியென்று சமாதானம் ஆகினாள்.

பார்த்திபன் கையில் இருந்த மோதிரம் கண்டவளோ,  ‘என்கிட்டே சொல்லவே இல்லை..’ என்பதுபோல் பார்க்க,

அவனோ ‘எப்புடி….’ என்று பார்த்து வைத்தான்..

சின்னதாய்.. அழகாய்.. வீட்டினர் மட்டுமே இருக்க, பார்த்திபன் – தன்யா இருவரின் திருமண ஒப்பு தாம்பூலம் மாற்றி, திருமண தேதியும் குறிக்கப்பட்டது.

பார்த்திபன் மோதிரம் அணிவிக்கையில் தன்யாவின் கரத்தினை பிடித்தவன் தான் அடுத்து விடவேயில்லை. மனது அவனுக்கு நிறைவாய் இருந்தது. இப்படியொரு நாள் வந்திடுமா என்ற சந்தேகம் கூட அவனுக்கு முன்னே இருந்தது தானே.

தன்யா ‘நீ வேணாம் போ..’ என்கையில் சுக்கு நூறாய் தான் உடைந்தான் பார்த்திபன்.

ஆனாலும் மனதில் ஒரு திடமான எண்ணம்.. இதனை இத்தோடு விட்டுவிடுவதா என்று?? இதற்கா காதலிதான் என்று?? முரளி சூழ்ச்சி செய்தான் என்றால் தான் தனக்கு பிடித்த வாழ்வை வாழக் கூடாதா என்ன??

தன்யா சிறிது நிதானம் இழந்து அப்படியொரு முடிவு எடுத்தாள் என்றால், அதற்கு உடனே சம்மதித்து, ‘நான் உனக்கு வேண்டாம் என்றால் நீயும் எனக்கு வேண்டாம்…’ என்று சொல்லிட முடியுமா என்ன?

அவள் அப்படி சொன்னது கூட பார்த்திபனின் நன்மைக்குத் தான் என்கையில் அவன் எப்படி அப்படியே விடுவான்??

அவனின் பிடியே சொன்னது அவனின் எண்ணத்தை.. தன்யாவிற்கும் அதை நன்கு உணர முடிய, இப்படியான ஒருவனையா முரளியின் பேச்சினில் குழம்பி கலங்கடித்தோம் என்ற வருத்தம் இப்போதும் இருந்தாலும், அந்த நொடி மிக மிக பெருமையாக இருந்தது பார்த்திபனை எண்ணி.

அது அவளின் கண்களிலும் தெரிய, தன்யாவின் விழிகளோ பார்த்திபனை தொட்டு தொட்டு மீள,

“மேடம் தனியா தூள்.. என்ன ஹெவியா சைட் அடிக்கிறீங்க..??” என்றான் மெதுவாய்.

“சரி அப்போ லைட்டா அடிக்கிறேன்…” என்றவள் சுருக்கென்று அவளின் கை நகத்தால் அவனின் கை விரல் ஒன்றை அழுத்திட

‘ஷ்.. என்ன டி இது…’ என்று பார்த்துவிட்டு வேகமாய் கையை விட்டான்..

‘ம்ம் அது..’ என்று தன்யாவும் பார்க்க, வீட்டினர் அனைவரும் இவர்களை வித்தியாசமாய் தான் பார்த்தனர்.

இத்தனை சங்கடங்களை கடந்து இப்போது ஒரு திருமணத் தேதி குறித்தது குறித்து அப்படியொன்றும் பெரும் மகிழ்ச்சியோ சந்தோசமோ இருப்பதுபோல் ஒன்றும் தெரியவில்லை. அதைவிட்டு அமைதியாய் இந்த தருணத்தை அனுபவிப்பது போல இருவருமே ஒருவித நிதானத்தில், இயல்பாகவே இருக்க,

‘என்ன இவங்க இப்படி இருக்காங்க??!!’ என்றுதான் எண்ணத் தோன்றியது அனைவர்க்கும்.

அவர்களோ ‘நாங்க இப்படித்தான்..’ என்று இருந்தனர்..

காதலிக்கிறார்கள் என்றால், காணும் போதெல்லாம் கட்டிக்கொள்ளவா முடியும்?? அன்பின் வெளிப்பாடுகள் எல்லாம் ஒரு சிறு பார்வை காட்டிவிடும் தானே.. அப்படித்தான் இருந்தது பார்த்திபன் தன்யாவின் காதலும்.

இங்கே இவர்கள் அனைவரும் இப்படியிருக்க, பக்கத்து வீட்டில் முரளி மட்டுமே.. ஆனால் அனைத்தையும் கவனித்தபடி இருந்தான். இப்போது அவன் பல் பிடுங்கிய பாம்பு.. இருந்தாலும் அதன் பிறவி குணம் போகுமா என்ன? அனைவரும் இங்கே வந்திருப்பதும், பார்த்திபன் தன்யாவின் திருமண நாள் குறிக்கின்றனர் என்பதும் அவனுக்குத் தெரிந்து தான் இருந்தது.

‘ஹ்ம்ம் உருப்படாதது ரெண்டும் ஒண்ணு சேர்ந்து..’ என்று அப்போதும் அப்படித்தான் எண்ணினான்..

கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை, தன்னைப் பெற்றவர்கள் என்று அனைவருமே அவனிடம் இருந்து விலகிப் போனாலும் கூட, இன்னமும் அவனுக்கு அந்த பணத்தின் மீதான மோகம் குறையவில்லை.

“வருவீங்கடா ஒருநாள் வருவீங்க.. அப்போ இருக்கு..” என்று மேலும் மனதில் வஞ்சம் தான் வளர்த்தான்.. வேறு என்ன செய்ய முடியும்??

ஹேமா கிளம்பிப்போனது பெரும் அடி அவனுக்கு.. பேசாமல் இருந்தாலும் ஒரே வீட்டினில் தான் இருப்பாள் என்றெண்ண, அவளோ பிள்ளையையும் தூக்கிக்கொண்டு சென்றது பலவிதமான எதிர்மறை எண்ணங்களை கொடுத்தது.

அந்த எண்ணங்களே அவனை ஒருநாள் வீழ்த்தும் என்பது இப்போது முரளிக்கு உணராது இருக்கலாம். ஆனால் காலம் ஒருநாள் நிச்சயம் அதனை அவனை உணரச் செய்யும். அதுவரை அவனுக்கு இத்தனிமை மட்டுமே சொந்தம்.

ஒரு வரம் கழித்து…

“ஹே..!!! தனியா தூள்.. இப்படி மூஞ்சித் தூக்கி வச்சிருந்தா எப்படி??? இங்க பாரு..” என்று பார்த்திபன் அவளின் முகத்தினை நிமிர்த்த, அவளோ நிமிரவே மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

தன்யாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. என்னவோ இத்தனை நாள் தெரியவில்லை. ஆனால் இன்று பார்த்திபன் கிளம்புகிறான் என்றதும் அவளுக்கு எப்படியோத்தான் ஆகிப்போனது.

காலையில் இருந்தே யாரோடும் பேசவில்லை. ஒருவித அமைதியில் இருந்தாள். யாரின் மீதும் கோபமுமில்லை. ஆனால் எதுவும் பேசிட தோன்றவில்லை. இத்தனைக்கும் பார்த்திபனோடு கூட பேசிடவில்லை.. அவன் வந்தபோது கூட, அவனின் கைகளை பிடித்தபடி அமைதியாகவே வெகு நேரம் அமர்ந்திருந்தாள்.

“என்ன தன்யா?? என்ன தன்யா???” என்று கேட்டு கேட்டு பின் அவனும் அமைதியாகிப் போனான்.

ஆனாலும் கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க பார்த்திபனுக்கு மனது அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.. நிறைய நிறைய தன்யாவோடு பேசவேண்டும் என்று வந்தான். ஆனால் அவளோ மௌனம் காத்திட,

“பேசு தன்யா..” என்றவனின் குரலும் மாறியிருந்தது..

அவனின் குரல் மாற்றம் கண்டே, தன்யா அவனைப் பார்த்தவள் “இன்னும் ஆறு மாசம்…” என்றாள் இழுவை இழுத்து..

என்னவோ இப்போதே கிளம்பி பார்த்திபனோடு செல்லவேண்டும் போல் அவளின் மனது உந்த, அவளையும் அறியாது தான் இவ்வார்த்தைகள் வந்தன, ஆனால் இதனைக் கெட்டவனோ

“ஓய்.. தனியா தூளு.. என்ன??? கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறேன் சொன்னவனையும் அதை இதை சொல்லி உக்கார வச்சிட்டு இப்போ என்ன ஆறு மாசம்னு இழுக்குற..??” என,

“ம்ம்ம்.. இருந்தாலும் ஒரு பீல் ஆகுதுல..” என்றாள், எங்கே இவன் வருந்திடுவானோ என்று தன்னை தானே சாமாதானம் செய்து.

“என்ன பீலு.. ஆனாலும்.. நீ இருக்க பாரேன்.. போ ன்னு சொல்லுவ.. அப்புறம் அழுவ.. உன்னைப் பார்க்கணும் போல இருக்கு சொல்லுவ… சரின்னு வந்து கல்யாணம் பண்ணிக்கலாம் சொன்னா, ஒன் இயர்னு சொல்லுவ, இப்போ கிளம்புறப்போ முகத்தை தூக்குவ.. என்னை என்னதான் டி பண்ண சொல்ற??” என்று கேட்டவனுக்கு தன்யாவை எண்ணி சந்தோசமாகவே இருந்தது.

அவளின் அனைத்து உணர்வுகளும் அவனுக்காகத் தானே.. கோபம்.. ஆசை.. அழுகை.. காதல் எல்லாமே… தன்யா மட்டும் அவனுக்காக காதிருக்காவிடில், அவனுக்காக அவன் அண்ணன் செய்ததை சகித்திருக்காவிடில், பார்த்திபனுக்காக என்று அவள் யோசித்திருக்காவிடில், இன்று பார்த்திபனின் உணர்வுகள் அனைத்தும் மடிந்திருக்கும்.

உயிரோடு இருந்திருப்பான். ஆனால் உணர்வுகள் அற்றவனாய்..

முரளியின் வஞ்சம் ஜெயித்திருக்கும்.. பார்த்திபன் தோற்றிருப்பான்.

ஆனால் இதெல்லாம் நடக்காதபடி பார்த்துக்கொண்டவள் தன்யா மட்டுமே..

நினைக்க நினைக்க பார்த்திபனுக்கு மனது அவள்பால் இன்னமும் உருக “என் தன்யா தூளு..” என்று அவளை தோளோடு சேர்த்து இறுக அணைத்துக்கொள்ள,

“ம்ம்ம்… இப்போதான் பழைய பார்த்தியே வெளிய வர்றான்…” என்றாள் மெதுவாய்..

“ஹா ஹா.. அப்போ இத்தனை நாள் என்ன வாடகைக்கா முகம் வாங்கி வச்சிருந்தேன்..”

“அப்படியில்ல, நீ வந்ததுல இருந்து ஒரு டென்சன் இல்லையா பார்த்தி.. பட் அதெல்லாம் தாண்டி நீ என்கிட்டே பேசுறப்போ, கூட உன்னோட ஐஸ்ல ஒரு திங்கிங் தெரிஞ்சுக்கிட்டே இருக்கும் பார்த்தி.. பட் இப்போ அப்படி இல்லை..” என்றவள் மெதுவாய் அவனின் கன்னத்தில் இதழ் பதிக்க,

“ம்ம்ம்.. இப்போதான் பழைய தன்யாவும் வெளிய வர்றா….” என்றான் இவனும் பதிலுக்கு..

“அது உண்மை தான்.. மனசு இப்போதான் ரிலாக்ஸா இருக்கு..” என்றவள், அவன் தோள்களில் சாய்ந்துகொள்ள, என்ன நினைத்தாளோ பட்டென்று நிமிர்ந்தவள்,

“அன்னிக்கு என்ன சொன்ன, உனக்கு ஆள் செட் பண்ணி விடுன்னு சொன்ன தானே…??” என்று முறைக்க,

‘என்னிக்கு சொன்னேன்…’ என்று முழித்த பார்த்திபனுக்கு தான் ஜப்பான் சென்று சிறிது நாட்கள் வரை தன்யாவை படுத்தியது எல்லாம் நினைவு வர, ஒருவிதமாய் அசடு வழிந்தான்..

“என்ன தைரியம் உனக்கு பார்த்தி…” என்றவள், அவனை சாராமாரியாய் அடிக்க,

“ஹேய் ஹேய்.. போதும் டி.. அன்னிக்கு சொன்னதுக்கு இப்போ அடிக்கிற.. டேட் பார் ஆகிடுச்சு.. விடேன்..” என,

“எனக்கு நியாபகம் வர்றப்போ எல்லாம் அடிப்பேன் டா.. தடிமாடு.. எப்படி எப்படி பேசினா.. லேகா இஸ் பியூட்டிஃபுல்னு வேற சொன்னல்ல நீ…” என்று அன்று அவன் சொன்னதை எல்லாம் ஒன்றுவிடாது இப்போது தன்யா சொல்ல,

“அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன்..” என்று தலையில் கை வைத்துக்கொண்டான் பார்த்திபன்.

“இப்படியெல்லாம் நீ ரியாக்சன் காட்டினா.. உன்னை பாவம்னு சொல்லிடுவேனா??” என்றவள் அவனைப் பிடித்து அழுத்தமாய் கிள்ள,

“ஏய் லூசு.. நீ இப்படி பிராண்டி கிள்ளி எல்லாம் வச்சா பாக்குறவன் என்னைத்தான் தப்பா நினைப்பான்..” என,

அவளோ புரியாமல் பார்த்து, பின் அவன் பார்வையின் விஷமம் புரிந்து “ச்சி போ லூசு…”  என்று செல்லமாக ஓர் அடி அடித்து வெக்கம் சூடிக் கொண்டாள்..

இருவருக்குமான பொழுது இப்படியே நீள, பார்த்திபனும் லேகாவும் பிளைட் ஏறும் நேரமும் வர, அனைவருமே விமான நிலையம் வந்திருந்தனர். தன்யா இப்போது உம்மென்று இல்லை.. மாறாக சந்தோசமாக இருந்தாள். இதழிலும், கண்களிலும் எப்போதுமே ஒரு புன்னகை ஓட்டிக்கொண்டே இருந்தது.

பார்வை அவ்வப்போது பார்த்திபன் மீது சென்று வந்தாலும், அனைவரோடும் பேசிக்கொண்டு தான் இருந்தாள். என்னவோ சுகந்திக்கும் கோபாலுக்கும் மகள் தங்களை விட, பார்த்திபன் குடும்பத்தினரோடு நெருக்கமாய் இருப்பது போலிருந்தது.

அதிலும் பார்த்திபன் சற்று நேரத்திற்கு முன்பு சொன்னது “எதுக்கும் கவலைப் படாதே.. நான் இருக்கேன்.. அண்ட் நம்ம கல்யாணம் முடிஞ்சதும் உனக்கு எங்க இருக்க விருப்பமோ அங்க இருக்கலாம்….”  என,

தன்யாவோ “இங்கதான் இருக்கணும்.. எல்லாரும் ஒண்ணா..” என்று சுந்தரம் ஈஸ்வரி, காஞ்சனாவைப்  பார்த்து சொல்ல, தன்யாவின் பெற்றோர்களுக்கு மனதில் சுருக்கென்று ஆனது.

மகளுக்காக சம்பாரிக்கலாம்தான். ஆனால் அவள் யாசிப்பது வேறல்லவா??

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, இதனைக் கண்ட பார்த்திபன் “அங்கிள்.. ஒன்ஸ் நீங்களும் ஆன்ட்டியும் ஜப்பான் வாங்களேன்..” என்று அங்கிருந்த சூழலை மாற்ற முயற்சிக்க,

“ம்ம் வரலாம் தான்..” என்றார் கோபாலும்..

“ட்ரை பண்ணுங்க அங்கிள்.. எப்படியும் மேரேஜ் அப்புறம் அட்லீஸ்ட் கொஞ்ச நாளாவது அங்க இருக்கவேண்டி வரும்.. அந்த டைம்ல நீங்க ஆன்ட்டி எல்லாம் வந்தா தன்யா வில் பி ஹேப்பி..” என, இப்போது புரிந்தது அனைவருக்கும் தன்யா மற்றும் பார்த்திபனின் புரிதல் எவ்வகை என்று..

ஹேமாவும், அவளின் பிள்ளையும் கூட லேகா, பார்த்திபனோடு கிளம்பியிருக்க, ஈஸ்வரி தான் “கவனமா எல்லாம் செய்யணும்..” என்று அறிவுரை வழங்கிக்கொண்டு இருந்தார்.

தன்யா புன்னகைத்தபடியே தான் அனைத்தையும் பார்த்துகொண்டு இருந்தாள். பார்த்திபன் லேசாய் அணைத்து, கை அசைத்து விடைபெற்று திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டு செல்கையில் கூட, அவளின் புன்னகை மாறவேயில்லை. அவனுக்கும் அப்படியே.. அவன் முகத்தினில் இருந்த ஒருவித நிமிர்வும், இதழ்களில் இருந்த மெல்லிய சிரிப்பும் தன்யாவை இன்னமும் காதலுறச் செய்ய, மகிழ்வுடனே அவளும் கை அசைத்தாள்.

பார்த்திபன் முதல் முறை ஜப்பான் சென்ற அன்று இருவருக்கும் இருந்த மனநிலை வேறு.. இப்போது அவன் கிளம்புகையில் இருக்கும் மனநிலையும் குடும்பச் சூழலுமே வேறு. வாழ்க்கை நமக்கு அடுத்த நொடி என்ன வைத்திருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.

சில திட்டமிடல்கள் அவசியம் தான்..

ஆனால் நம் திட்டமிடல்களை தாண்டி சில நிகழ்வுகள் நடக்குமாயின் அது வாழ்வு நமக்களிக்கும் சுவாரஸ்யம் என்றெண்ணி வாழ்ந்து தான் பார்த்துவிடனும் கொஞ்சம்…               

             

     

                  

  

     

Advertisement