Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 9

நம்மின் வாழ்வில் சூழ்நிலைகள் மாறுதல் அடையும்போது, நம்மின் நடவடிக்கைகளும் மாறும். மாற்றங்கள் எப்படியாகினும் ஏற்படலாம். நல்லவை நடக்கவேண்டும் என்று ஒரு கெடு செயல் நடக்கலாம் இல்லையோ ஒரு நல்லது போலவே நடந்து இறுதியில் அது கெடுதலாய் முடியலாம்.

எது எப்படியாக இருந்தாலும், சூழல் எப்படியானதொரு மாற்றம் கொடுத்தாலும், நாமும் நாளொன்று சிந்தித்து, நல்லது தீயது ஆராய்ந்து எதை பேசுவது, எதை செய்வது என்று இருந்தால் நல்லதே நடக்கும்.. ஆனால் பார்த்திபனுக்கும் சரி, தன்யாவிற்கும் சரி தங்களை சுற்றி நடக்கும் விசயங்களும், இவர்கள் இருவருக்குள் நடக்கும் சங்கதிகளும் முற்றிலும் புதிதாய் இருக்க, எப்படி இதனை கையாள்வது என்று இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை.

பார்த்திபனுக்கோ தான் காண்பதும், கேட்பது ஒன்றுமே விளங்கவில்லை.

லேகா என்னவோ ‘எமர்ஜென்சி கால்… பிரன்ட்..’ அப்படியென்று சொல்லிவிட்டு போனாள்.

அலுவலகத்தில் ஒருத்தி வந்து ‘சீக்ரெட் ப்ராஜெக்ட்..’ என்றாள்.

இந்த குழப்பத்தில் பார்த்திபன் வேலை முடித்து வீடு வர, சிறிது நேரத்திலேயே அவனுக்கு ஒரு அழைப்பும் கூடவே அவர்கள் அப்பார்மென்ட் வாசலில் ஒரு காரும் வந்து நின்றது.

அழைத்தது அக்கியோவின் காரோட்டி..

வந்த செய்தியோ ‘லேகா இஸ் நாட் வெல்.. சோ ஹர்ரி அப்…’ என்று..

தலையும் இல்லாது வாழும் இல்லாது, இப்படியொரு அழைப்பும், காரும் வந்து நின்றால் அவனுக்கு என்ன நினைக்கத் தோன்றும். அவனுக்கு இந்த ஊரில் தெரிந்தது லேகா மட்டுமே.. இப்போது அவளுக்கு என்னவோ சரியில்லை என்றதும் அடித்துப் பிடித்து மருத்துவமனைக்கு வர,

முதலில் லேகாவைப் பார்க்கவே பார்த்திபனை அனுமதிக்கவில்லை.. அக்கியோ மட்டுமே உள்ளே இருப்பது புரிந்தது. மருத்துவர்கள் பேசுவது ஒன்றுமே இவனுக்குப் புரியவில்லை.

அந்த அக்கியோவோ இவனை பார்த்தவன் எதுவுமே வந்து விபரமும் சொல்லவில்லை. ஏன் அழைத்து வரப்பட்டான் என்பது கூட விளங்காது பார்த்திபன் அனைத்தையும் ஒரு வேடிக்கையாக மட்டுமே பார்க்கும் நிலை.

அதுவே அவனுக்கு அப்படியொரு கடுப்பினை கொடுத்தது.

‘டேய் எவனாவது வந்து சொல்லித் தொலைங்கடா…’ என்றது அவனின் பார்வையே.

அரைமணி நேரம் கழித்து அக்கியோ இவனை நோக்கி வர, “வாட் ஹேப்பன்..??” என்று கேட்டதற்கும் அக்கியோ எப்பதிலும் சொல்லவில்லை.

“ஷி வில் பி ஆல்ரைட் சூன்..” என்றுமட்டும் சொன்னவன், அடுத்து இவனை கண்டுகொள்ளவேயில்லை..

சென்றுவிட்டான்.. சிறிது நேரத்தில் அக்கியோவின் காரோட்டி மீண்டும் பார்த்திபனிடம் வந்தவன் “சார் வர லேட் ஆகும். சோ அதுவரைக்கும் மேமோட இருங்க…” என்று ஆங்கிலத்தில் மொழிந்துவிட்டு, அப்போது தான் லேகாவின் அறைக்குள் போக சொன்னான்.

‘என்னதான் டா நடக்குது இங்க…???’ என்று பார்த்திபன் அந்த காரோட்டியைப் பார்க்க,

அவனுக்கு இவனின் பார்வை புரிந்ததுவோ என்னவோ, “டோன்ட் வொர்ரி சார்..” என்றுவிட்டு போனான்..

“டேய்…!!!!!” என்று பார்த்திபன் பல்லைக் கடித்தவன், லேகாவின் புறம் பார்வையை திருப்பினான். லேகாவின் அருகே ஒரு நர்ஸ் அமர்ந்திருக்க,

அவளிடம் “வாட் ஹேப்பேன்?? ” என்று பார்த்திபன் கேட்க,

“அக்கியோ வந்து சொல்வான்…” என்று புன்னகைத்தாள் அவள்..

அவளின் புன்னகையைப் பார்த்த அக்கியோவிற்கோ ஓங்கி அவளின் முகத்தினில் ஒரு குத்து குத்த வேண்டும் போலிருந்தது. ஆனாலும் பாவம் இவளென்ன செய்வாள்??

எல்லாம் அந்த அக்கியோ தான் காரணம்..

வரட்டும் அவன் வந்து பதில் சொல்லட்டும்.. என்று கோபம் கொந்தளித்தது.

ஒருபக்கம் பார்த்திபனுக்கு கோபம் வந்தாலும், அங்கே மருத்துவ உபகரணங்களுக்கு இடையில் சுவாசம் மட்டுமே தான் உயிரோடு இருப்பதற்கு சாட்சி என்று காட்டி படுத்திருப்பவள் லேகா.. கோபம் அவள்மீதே என்றாலும் கூட, அவனால் இப்போது அங்கேயிருந்து நகர்ந்துவிட முடியாது இல்லையா??

ஆனால் பார்த்திபனின் மனதோ ‘என்னாச்சு??? என்னதான் ஆச்சு??’ என்று குமுறிக்கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்துதான் தன்யா முதலில் மெசேஜ் அனுப்பியது. அதற்காகவே இவனும் ‘பிசி..’ என்று மட்டும் பதில் அனுப்பிவிட்டு அமர்ந்திருக்க,   இவனின் இங்கே பிரச்சனைகள் எதுவும் அவளுக்குத் தெரியாதே தன்யாவிற்கு..

அவளுக்கு அங்கிருக்கும் அவளின் சூழல்கள் மட்டும் தானே புரியும்..

காஞ்சனா சுகந்தியிடம் தன்யாவின் திருமணம் பற்றி பேச, அதிர்ந்து தான் போனாள் தன்யா.. அவள் இதனைப் பற்றி யாரிடம் பேசிட முடியும், பார்த்திபன் தவிர??

பொறுக்க முடியாது அழைத்தே விட, அவனும் பொரிந்துவிட்டு வைத்துவிட்டான்.

பார்த்திபன் திட்டிப் பேசியதும், அதுவும் தான் எப்படியானதொரு முக்கியமான விசயமாய் அழைத்தும் கூட அதை உதாசீனப் படுத்தியதும், எல்லாம் சேர்த்து தன்யாவிற்கு இம்முறை அழுகை கொடுக்கவில்லை. மாறாக மனதில் ஒருவித வெறுப்பினை வளர்த்தது..

அதுவும் பார்த்திபன் மீது..

அவனின் செயல்கள் மீது..

அவனின் பேச்சின் மீது..

மொத்தமாய் அவனின் மீது ஒரு கசப்பை இந்நிகழ்வு விதைத்திட “ச்சே…” என்று அலைபேசியை கட்டில் மீது தூக்கி வீசியவள், அப்படியே அமர்ந்தும் போனாள்..

எதையுமே யோசிக்கும் நிலையில் அங்கு பார்த்திபனும் இல்லை இங்கு தன்யாவும் இல்லை. அடுத்து இருவரும் பேசிக்கொள்ளவும் இல்லை.. பார்த்திபனுக்கு அடுத்து வந்த நாட்கள் எல்லாம் லேகாவோடு கழிந்தது. அக்கியோ அன்று கிளம்பி சென்றவன் மறுநாள் தான் வந்தான்.

வந்தவனோ “நீ போய் பிரெஷ் ஆகிட்டு வா..” என்று கொஞ்சம் கட்டளையாய் சொல்ல, பார்த்திபனின் பொறுமை எல்லாம் பறந்து விட்டது..

“ஹலோ.. ஹவ் டேர் ஆர் யூ..??” என்று ஆரம்பித்தவன் இத்தனை நேரம் மனதினில் குமைந்ததை எல்லாம் சொல்ல, அக்கியோவோ ‘நீ கேள்வி கேட்டு நான் பதில் சொல்வேனா ??’ என்பது போல் பார்க்க,

“லேகா பத்தின புல் டீடைல்ஸ் எனக்கு சொல்லலன்னா, நான் அவளோட சிஸ்டர இங்க வர சொல்லிடுவேன்..” என்று பார்த்திபன் சொல்லவும் சட்டென்று அக்கியோவின் முகம் மாறிப்போனது..

“நோ நோ…” என்று வேகமாய் மறுத்தவன்,

“லே… லேகா ஸ்டெப்ஸ்ல இருந்து விழுந்துட்டா..” என்று அக்கியோ சொல்ல, அது அப்பட்டமான பொய் என்பது அவனின் முகத்தினைப் பார்த்தாலே தெரிந்தது பார்த்திபனுக்கு..

“ஹேய்.. ஸ்டாப் இட்.. நான் முட்டாள் இல்லை.. நீ சொல்றது எல்லாம் நம்புறதுக்கு..” என்று பார்த்திபன் எகிற, அக்கியோவிற்கு இப்படியெல்லாம் யாரும் அவனிடம் பேசி பழக்கமில்லை போலும், ஆனால் பார்த்திபன் கேட்கும் கேள்விக்கெல்லாம் அவன் பதில் சொல்லவேண்டியதும் இருந்தது..

‘லேகாவிற்காக…’ என்று மனதினில் எண்ணிக்கொண்டான்..

ஆனால் இதனை சொன்னால் இந்த பார்த்திபன் எப்படி எடுத்துக்கொள்வான் என்பது தெரியாது இல்லையா?? அதுவும் லேகா எந்த அளவிற்கு அவனிடம் விஷயங்கள் சொல்லியிருக்கிறாள் என்றும் அக்கியோவிற்கு தெரியாது.

பார்த்திபனின் வேலை விசயமாய் பேசியதோடு சரி, லேகா அதன் பின் எதுவும் பார்த்திபன் பற்றி பேசியதில்லை. ஆனால் இருவருக்கும் இடையில் நல்லதொரு நட்பு இருப்பது மட்டும் தெரியும் அக்கியோவிற்கு. ஆனால் அதற்குமேல் அவனால் லேகாவிடம் பழகுவதுபோல் பார்த்திபனிடம் பழகிட முடியவில்லை.

இப்போதும் கூட, தகவல் சொல்லும் விதமாய் மட்டுமே இருந்தது இருவரின் பேச்சும்.

“அது….” என்று அக்கியோ இழுக்க, ‘நீ சொல்லித்தான் ஆகவேண்டும்..’ என்றது பார்த்திபனின் பார்வை.

அக்கியோ வார்த்தைகளை தேடினானோ இல்லை எப்படி சொல்வது என்று யோசித்தானோ, ஆனால் நேரம் பிடிக்க “ஓகே.. லேகா அக்காக்கு கால் பண்றேன்.. யூ டாக் வித் ஹெர்…” என்று பார்த்திபன் சொல்ல,

“ஹேய்… நோ நோ…” என்றான் அக்கியோ இன்னும் வேகமாய்..

“தென் டெல் மீ…” என்று பார்த்திபன் உறுத்து விழிக்க,

“அ.. அது.. லேகா… லேகா எடுத்த ட்ரக்ஸ் அவளுக்கு ஒத்துக்கலை….” என்றான் ஒவ்வொரு வார்த்தையாய் திக்கி திணறி அக்கியோ.

“ட்ரக்ஸா…..!!!!!!”

பார்த்திபனுக்கு மிக மிக அதிர்ச்சியாய் இருந்தது.. அதுவும் லேகாவா??!! ‘நோ பார்த்தி  நம்பாத.. இந்த அக்கியோ பொய் சொல்றான்.. லேகா கண்டிப்பா இதை செஞ்சிருக்க மாட்டா…’ என்று அவனின் மனது அடித்து சொல்ல,

“ஹேய் இப்போ நீ உண்மை சொல்வியா மாட்டியா???” என்றான் இன்னமும் குரலினை உயர்த்தி.

அக்கியோவோ “இதான் உண்மை…” என,

“நோ…” என்றான் பார்த்திபனும் உறுதியாய்..

அவனின் இந்த திடமான மறுப்பில் அக்கியோவின் முகத்தில் மெல்லியதாய் ஒரு ஆச்சரய்ம் வந்துபோனது போலிருந்தது. ஆனால் ‘இவனோட ரியாக்சன் எல்லாம் யாருக்கு வேணும்..’ எனும்விதமாய் பார்த்திபன் பார்க்க,

“நா… நான் தான் கம்பல் பண்ணேன்…” என்றான் பார்வையை தளர்த்தி.

அவ்வளவுதான் பார்த்திபனுக்கு தான் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்றெல்லாம் கொஞ்சமும் நினைவில் இல்லை “வாட்??!!!!” என்றபடி கொத்தாய் அந்த அக்கியோவின் கோட்டினை பதரிவிட்டான்..

ஒரு பெண்ணுக்கு வற்புறுத்தி போதை மருந்து கொடுத்து, அது அவளை மருத்துவமனை வரைக்கும் வந்து படுக்க வைத்திருக்கிறது என்றால்??

“இதுக்கு உன்மேல கம்ப்ளைன்ட் செய்யணும்…” என்றான் பார்த்திபன் பல்லைக் கடித்து.

அவனால் இதை துளியும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.. லேகா எப்படியான ஒரு பெண்.. அவளைப் போய்… ச்சே… என்று இன்னும் அவனின் பிடியை பார்த்திபன் விடவேயில்லை. அக்கியோவோ பார்த்திபனின் இச்செயலை சிறிதும் எதிர்பார்க்கவில்லை போலும்,

“ஹேய்.. வாட் ஆர் யூ டூயிங்… லீவ் மீ…” என,

“லீவ் மீ யா… உன்னலாம் உள்ள வச்சு கொல்லனும்…” என்றான் இவனும் ஆத்திரம் அடங்காது..

இப்படி இருவரும் மாறி மாறி மேலும் ஒரு ஐந்து நிமிடம் சண்டையிட, பின் மருத்துவமனை பணியாளர்கள் வந்து தான் பிரித்து விடும் நிலை. ஆனால் அந்த ஆட்களோ என்னவோ பார்த்திபன் தான் பிரச்சனை செய்திருப்பான் என்றெண்ணி அவனை இறுகப் பற்றிக்கொண்டு அக்கியோவிடம் என்னவோ ஏதோவென்று விசாரிக்க,

பார்த்திபனுக்கு அப்போது தான் ஒன்று புரிந்தது ‘இது அவர்கள் நாடு.. என்ன நடந்தாலும் எளிதாய் அவர்கள் தப்புவது நடந்தேரிவிடும்.. ஆனால் லேகா இந்நிலையில் படுத்திருக்கும் போது தான் எதுவும் ஏடாகூடமாய் செய்யப்போய், இவன் என்னை எதுவும் செய்யக் கூடும்.. பின் லேகாவை யார் பார்ப்பது..’ என்று.

இது தோன்றவும் அக்கியோவை உன்னிப்பாய் ஒரு பார்வை பார்த்தான்.

அக்கியோவும் பார்த்திபனைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.. அவன் நினைத்தால் அந்த நேரத்தில் பார்த்திபனை எதுவும் செய்திருக்க முடியும்.. பார்த்திபன் சொன்னதுபோல் இவனையே உள்ளே தள்ளியிருக்க முடியும். ஆனால் என்ன நினைத்தானோ

“நத்திங்.. லீவ் ஹிம்…” என,

“ஹா!!! அந்த பயம் இருக்கனும்டா…” என்று பார்த்தது பார்த்திபனே..

அப்போதும் கூட அந்த மருத்துவமனை உதவியாளர்கள் அக்கியோவிடம் எதுவோ சொல்ல, அப்போது தான் பார்த்திபனுக்கு ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது இது அக்கியோவின் அம்மாவின் மருத்துவமனை என்று.

லேகா ‘அவன் எவ்வளோ பெரிய ஆள் தெரியுமா??’ என்று சொல்லியது நினைவில் வந்து தொலைத்தது.

‘இவன் எவ்வளோ பெரியாளா வேணா இருந்துட்டு போகட்டும்.. பட்??!!!!’ என்றெண்ணியவனுக்கு உடலே இரும்பாய் இறுகியது.

அதன் பின் அவன், அவனோடு பேசிக்கொள்ளவில்லை, இந்த களேபரத்தில் தன்யா என்ற ஒருத்தி அழைத்தாள் என்பதையே பார்த்திபன் மறந்துபோனான் அப்படியிருக்கையில் எப்படி அவளுக்கு அழைத்துப் பேசிட தோன்றும். மருத்துவமனையில் தான் பிடிவாதமாய் இருந்துகொண்டான் பார்த்திபன்.

அக்கியோவின் டிரைவர் வந்து ஓரிருமுறை அழைத்துப்பார்த்தான். பார்த்திபன் அசையவேயில்லை மாறாக அக்கியோவிடம் முறைக்க, அன்று மாலையே பார்த்திபனுக்கான விடுமுறையும் அவன் அலைபேசி வாயிலாக இவனிடமே அறிவிக்கப்பட, அவனுக்கான உடைகளும் கொண்டு வந்து கொடுக்கப் பட்டது..

இரண்டு நாட்களாக லேகாவிடம் எந்த மாற்றமும் இல்லை.. அப்படியே படுத்தபடியே தான் இருந்தாள். ஒருமுறை அக்கியோவின் அம்மா வந்து பார்த்தார். அவரோடு இன்னும் சிலர்.. அனைவரும் அவர்களுக்குள் ஜப்பானிய மொழியில் பேச பார்த்திபனுக்கு எதுவும் விளங்கவில்லை..

வந்தமைக்கு ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அத்துபடி..

அக்கியோவின் அம்மா பார்த்திபனைக் காட்டி அக்கியோவிடம் எதுவோ கேட்க, அதற்கு பதிலுக்கு அவன் என்ன சொன்னானோ, அந்த பெண்மணி இவனைப் பார்த்து சின்னதாய் ஒரு புன்னகை சிந்திவிட்டு போனார்..

மறுநாளும் இப்படியே கழிய, அக்கியோ அவ்வப்போது வருவான், ஆனால் மாலை நேரத்தில் இருந்து மறுநாள் விடியல் வரைக்கும் பார்த்திபனோடு அதே அறையில் தான் இருப்பான்.

பார்த்திபன் ரெஸ்ட் ரூம் சென்றிருக்க, திரும்ப வரும்போது அவன் பார்த்தது மனதிற்கு கொஞ்சம் திக்கென்று இருந்தது.. ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க, அசைவேயில்லாது படுத்திருந்த லேகாவின் மறு கரத்தினை பிடித்து அமர்ந்திருந்தான் அக்கியோ..

அவனின் பார்வையோ லேகாவின் முகத்தினில் இருக்க, “ஐம் சாரி லேகா…” என்று அவனின் உதடுகள் ஓயாது உச்சரித்துக்கொண்டு இருந்தது..

அக்கியோவின் கண்களோ பளபளவென்று இருக்க, ‘இவன் என்ன அழறானா??!!!’ என்று அதிர்ந்துபோய் தான் பார்த்தான்.

என்னவோ பார்த்திபனுக்குப் புரிவது போல் இருந்தது. திரும்ப அன்றைய பார்ட்டியில் நடந்தவைகள் எல்லாம் ஒருமுறை மனதில் ஓட்டிப்பார்க்க, என்னவோ அக்கியோவிற்கும் லேகாவிற்கும் இடையில் என்று தோன்றியது??

ஆனால் அப்போதும் கூட லேகாவினை நொடிப்பொழுதும் தவறாய் நினைக்க அவனால் முடியவில்லை.. முடியவும் முடியாது..

‘இவன் தான் என்னவோ ப்ளே பண்றான்…’ என்று முறைத்தபடி வந்து அமர, இவன் வருவது கண்டு அக்கியோ வேகமாய் தன் கைகளை விலக்கிக்கொண்டான்.

‘நடி டா.. நடி…’ என்று பார்த்திபன் எண்ணிக்கொள்ள, சரியாய் அதே நேரம் ஹேமா அழைத்துவிட்டாள்..

தன்யாவிடம் கத்திவிட்டு போனை அமர்த்தி வைத்திருந்தவன் திரும்ப ஆன் செய்து சைலென்ட் மோடில் மட்டும் போட்டு வைத்திருந்தான் போல, வைப்ரேசனில் கிர் கிர் என, பார்த்திபனோ அழைப்பை ஏற்காது அக்கியோவை பார்த்தான்.

ஹேமா கேட்டால் பார்த்திபன் என்னவென்று பதில் சொல்வான்..??

அக்கியோ புரியாது பார்க்க ‘லேகாவோட சிஸ்டர்…’ என, சட்டென்று அக்கியோ முகத்தினில் ஒரு கலவரம்.. இந்த பார்த்திபன் எதையும் சொல்லிவிடுவானோ என்று..

‘மவனே பயந்துட்டே இரு டா..’ என்றெண்ணியவன்

“ஹலோ அண்ணி..” என,

“என்ன பார்த்தி… எங்க போனா இந்த லேகா??? பேசி மூணு நாள் ஆச்சு.. நீயும் ஒரு கால் பண்ணலை.. என்னதான் பண்றீங்க??” என்று ஹேமா அழும் குரலில் பேச,

“அ.. அது அண்ணி.. ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்…” என்றான் அக்கியோவிடமே பார்வையை பதித்து..

அக்கியோவோ எதுவும் சொல்லிவிடாதே என்று சைகை செய்ய, “ஹாஸ்பிட்டலா??? ஐயோ என்னாச்சு??” என்று ஹேமா பதற, பார்த்திபன் ஒருநொடி பதிலே சொல்லவில்லை..

“பார்த்தி என்னாச்சு?? யாருக்கு என்ன??” என்று திரும்ப ஹேமா கேட்க,

“ஆ.. அது அண்ணி.. லேகா…” என்றான் இழுத்து..

அக்கியோவோ எழுந்தேவிட, ஹேமாவோ “லே… லேகாவா.. அவளுக்கு என்ன?? என்னாச்சு பார்த்தி..” என்று இன்னும் படபடத்தாள்..

ஹேமாவின் இந்த தவிப்பு பார்த்திபனுக்கு சங்கடமாய் இருக்க “நத்திங் அண்ணி.. புட் பாய்சன். லேகாக்கு ஸீ புட் சேராது போல.. பட் இவ சாப்பிட்டு இருக்கா…” என,

‘புட் பாய்சன்…’ என்ற சொல்லில் தான் அக்கியோவின் முகம் சிறிது நிம்மதி பூசியது.

‘அப்பாடி…’ என்ற உணர்வோடு அக்கியோ திரும்ப அமர்ந்திட, பார்த்திபன் மேலும் சில நேரம் பேசி ஹேமாவை சமாதானம் செய்துவிட்டு வைத்தான்..

அவன் வைத்த அடுத்த நொடி அக்கியோ “தேங்க்ஸ்…” என்று சொல்ல,

‘போடா டேய் போடா…’ என்றுதான் பார்த்தான் இவன்.

இந்த விஷயம் ஹேமா அப்படியே அங்கே வீட்டினர் அனைவரிடமும் சொல்ல, அது அப்படியே ஈஸ்வரி மூலமாய் காஞ்சனாவிற்கு தெரியவர, காஞ்சனா அதை அப்படியே தன்யாவிடம் சொல்ல,

“ஓ..!!! அப்படியா அத்தை…” என்றுமட்டும் கேட்டுக்கொண்டாள் தன்யா..

அவளின் மனது ஒரு கணக்குப் போட்டுக்கொண்டு இருந்தது.

“பாவமில்ல இந்த லேகா பொண்ணு… பார்த்தி மட்டும் அங்கயில்லைன்னா எவ்வளோ கஷ்டம்.. மூணு நாளா அவன்தான் கூட இருக்கான் போல..” என்று காஞ்சனா சொல்ல,

“ம்ம்ம் அத்தை…” என்றாள் இவளும்..

“பரவாயில்ல தன்யா பார்த்தி இப்போ அங்க போய் ரொம்ப பொறுப்பா இருக்கான்ல.. முன்னாடியெல்லாம் இப்படி இல்லை..”

“ம்ம்ம்…”

“ஹ்ம்ம் எல்லாம் நல்லதா நடந்து சீக்கிரம் அந்த பொண்ணு குணமாகி வரட்டும்.. பேசாம இவங்க கொஞ்சம் பொறுமையா இருந்து லேகாவையே பார்த்திபனுக்கு முடிச்சிருக்கலாம்.. ரெண்டு பேருக்கும் ஒரே வயசு இருக்குமா??” என்று காஞ்சனா பேச்சுவாக்கில் கேட்டுவிட, தன்யாவிற்கு உடம்பு தூக்கிப் போட்டது..

‘ஆண்டவா…!!!! என்னதிது…’ என்று அதிர்ந்து போய் தன்யா பார்க்க, காஞ்சனா நல்லவேளை இவளை கவனிக்கவில்லை..

இந்த மூன்று நாட்களாய் முயன்று தன்னை சமாதானம் செய்து வைத்திருக்க, லேகாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றதும் ‘சரி இவன்தானே அங்கிருகிறான் அந்த டென்சன் போல..’ என்று இப்போது தான் நினைத்து முடித்தாள்,

ஆனால் அதற்குள் காஞ்சனா இப்படியொன்றை சொல்ல,

‘அவளுக்கு சேவை செய்றது எல்லாம் இருக்கட்டும்.. ஆனா அதுக்கு என்னை மறந்திடனுமா???’ என்று தன்யாவின் மனம் சண்டித்தனம் செய்தது..

உண்மையும் அதுதானே…

                                   

      

      

        

 

   

  

Advertisement