Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 8

பார்த்திபனுக்குத் தெரியவில்லை தான் கூறும் வார்த்தைகள் எல்லாம் தன்யாவை எப்படி பாதிக்கும் என்று.. சில நேரங்களில் விளையாட்டு போல் அவன் பேசி சென்று விடுகிறான். ஆனால் அவள் தன்னைத் தானே சாமாதானம் செய்து ஒவ்வொரு முறையும் அவனிடம் எதுவும் காட்டாது ‘பார்த்தி…’ என்று பேசுகையில் அவளின் வலிகள் எல்லாம் தொண்டைகுழியில் அடைபட்டு அடைபட்டு அதுவே பெரும் வலி கொடுத்தது..

பார்த்திபனுக்கோ ‘எது எப்படின்னாலும் தன்யா எனக்கு தான்..’ என்ற எண்ணம்.. அதில் எவ்வித மாற்றமுமில்லை. ஆனால் அவளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது மாட்டும் யோசிக்க முடியாது போனது யாரின் நேரமோ தெரியவில்லை..

அனைத்தும் எனக்குத் தெரியும், நான் பார்த்துக்கொள்கிறேன் என்றவன் தான்.

ஆனால், இப்போதோ தெரிந்தோ தெரியாமலோ அவன் கூறும் வார்த்தைகளால் அவனின் இதய ராணியின் இதயம் ஒவ்வொரு முறையும் சுக்கு நூறாய் உடைவது அவனால் உணர்ந்துகொள்ள முடிவதில்லை.

அதன் காரணம் தன்யாவே..

தானாக தனக்குள்ளே குமைகிறாளே தவிர, அவனிடம் அத்தனை வெளிப்படையாய் இருந்துகொள்ளவில்லை. முரளியின் வேலைகளை சொல்லிவிடலாம்.. அதுவும் இல்லை.. பார்த்திபன் பேசுவதின் விளைவுகளை சொல்லிவிடலாம் அதுவும் இல்லை.  அவளுக்கான அத்தனை தயக்கங்களும் எதனால் என்று அவளுக்கே விளங்கவில்லை.. பார்த்திபனோடு எப்போதும் போல் பேசிடவேண்டும் என்று நினைக்கிறாள், ஆனால் அவன் பேசுகையில் ஏதாவது ஒரு சண்டை வந்துவிடுகிறது..

முரளியிடம் பதிலுக்கு திருப்பிக் கொடுக்கவேண்டும் என்றும் நினைக்கிறாள் அதுவோ முடியாமலே போகிறது.. அவள் வெளிப்படையாய் இருந்திருந்தால் கூட நடந்த, நடக்கும், இனி நடக்கப்போகும் அனைத்தையும் தவிர்த்திருக்க முடியுமோ என்னவோ..

இல்லை பார்த்திபனாவது அவளை புரிந்து, சூழல் உணர்ந்து நடந்திருப்பானோ என்னவோ..

லேகாவின் ஸ்பெஷல் டின்னர் என்று தன்யாவிடம் கூறிவிட்டு பார்த்திபன் இங்கே லேகாவின் வீடு வர, அவளோ அப்படி சமைத்ததற்கான எவ்வித அறிகுறியும் தெரியவில்லை. அவளே தான் அழைத்தாள் பார்த்திபனை.

“இன்னிக்கு டின்னர் அங்க வந்து சாப்பிடு பார்த்தி..” என்று..

அவனுக்கு அதில் பெரிதாய் விருப்பமில்லை என்றாலும், “இப்போ வேணாம் லேகா, ஒரு போன் பேசிட்டு வர்றேன்..” என்றவன் தன்யாவோடு வம்பளத்துவிட்டு அங்கே போக, லேகா வீட்டில் இருக்கும் அரவமே தெரியவில்லை..

“லேகா…” என்று பார்த்திபன் குரல் கொடுக்க,

“பார்த்தி.. பைவ் மினிட்ஸ்..” என்று அவளின் படுக்கையறையில் இருந்து குரல் வந்தது.

“கிட்சன்ல சமையல் செய்யாம இவ என்ன பெட் ரூம்ல சமைக்கிறா..” என்று தன் போக்கில் யோசனையாய் இருக்க, லேகாவோ வெளியே கிளம்பும் வகையில் உடை மாற்றிக்கொண்டு வந்தாள்..

“ஹேய்.. என்ன வெளிய போறியா நீ?” என்று பார்த்திபன் கண்களை விரிக்க,

“எஸ் பார்த்தி.. ஒரு அர்ஜன்ட் கால்.. அதான் கிளம்பிட்டேன்..” என்றவள்

“இதோ பாக்ஸ்… ஜஸ்ட் நம்ம சவுத் இந்தியன் ஸ்டைல் தேங்கா பால் சாதம் பண்ணேன். டோன்ட் மிஸ்டேக்கன் மீ பார்த்தி..” என்று அவன் கைகளில் டிபன் பாக்ஸை திணித்தவள், அவளின் ஷூ மாட்டப் போக,

“லேகா..!!!” என்றான் பார்த்திபன் ஒன்றும் விளங்காது..

“சொல்லு பார்த்தி..” என்றவளோ இவனின் முகம் கூட பார்க்கவில்லை..

“டைம் இப்போ நைட் பத்து மணிக்கு மேல.. இப்போ எங்க போற நீ.. அதுவும் தனியா??” என,

அவனின் கேள்வியில் சட்டென்று நிமிர்ந்தவள் “சொன்னேனே ஒரு அர்ஜன்ட் கால்..” என்றாள்.

அவளின் குரலில் அப்பட்டமாய் ஒரு வித்தியாசம் உணர முடிந்தது பார்த்திபனால்.

“ஆபிஸ்ல இருந்தா??”

“இல்ல பார்த்தி..”

“பின்ன??”

“இது வேற.. ஒரு பிரன்ட்.. எமர்ஜென்சினு கால்..”  என,

“ஓ… என்னாச்சு?? நானும் கூட வர்றேன்.. ஜஸ்ட் பை மினிட்ஸ்..” என்று பார்த்திபன் சொல்ல,

“ஸ்டாப் இட் பார்த்தி..” என்றாள் வேகமாய் லேகா..

சம்பந்தமேயில்லாது அந்த நேரத்தில் அவளின் கோபம் அவனை திகைக்க வைக்க, “நீ இங்க வந்து எத்தனை நாளாச்சு?? ஹா… ஐ க்னோ வாட் ஐம் டூயிங்.. அப்படி உன்னை கூட்டிட்டு போகணும்னா நானே சொல்லிருப்பேன்…” என்றவள், வேகமாய் தன்னை, தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முயல,

பார்த்திபனோ திகைத்துவிட்டான்..

“சா.. சாரி பார்த்தி.. உன்கிட்ட சொல்ற விசயம்னா கண்டிப்பா சொல்லிருப்பேன்..” என,    

அவனோ அவளையும், தன் கையில் இருந்த டிபன் பாக்சையும் ஒரு பார்வை பார்த்தவன், பாக்சை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு “டேக் கேர்..” என்றுமட்டும் சொல்லி அவனின் வீடு வந்துவிட்டான்..

“ஓ…!!!! காட்…” என்று லேகா தலையில் தட்டிக்கொண்டவள்,

“பார்த்தி…” என்று பின்னோடே போய் அவனை சமாதானம் செய்ய,

“நான் தப்பா எதுவும் நினைக்கல லேகா.. யூ கோ…” என்றான் பொறுமையாய்..

அவனுக்கு அதற்குமேல் எப்படி பேசுவது என்று தெரியவில்லை. இவள் ஒன்றும் தன்யா அல்லவே.. எப்படிவேண்டுமானாலும் பேசிக்கொள்ள. ஒவ்வொரு முறையும் உன் எல்லை இதுதான் என்று லேகா காட்டிவிடுகிறாளே. ஆனாலும் பார்த்திபனும் கூட அப்படியொன்றும் அவனின் எல்லையை மீறி எதுவும் கேட்டிடவில்லையே..

வந்தபோது இருந்த லேகாவிற்கும், இப்போது இதோ பார்த்திபன் கண் முன்னே நிற்கும் லேகாவிற்கும் நிறைய நிறைய வித்தியாசங்கள் அவனுக்கு தெரிந்தன. ஆனாலும் ஒன்றும் சொல்லாது அமைதியாய் இருக்க,

“இல்ல பார்த்தி.. அது.. அது வந்து..” என்று லேகா எதுவோ சொல்ல வருவதற்குள், அவளின் அலைபேசி சிணுங்க,

எடுத்தவள் “யா ஜஸ்ட் டூ மினிட்ஸ்..” என்றாள்.

அனைத்தையும் பார்த்திபன் பார்த்துகொண்டு தானே இருந்தான். லேகா கொஞ்சம் தவிப்பாய் பார்த்திபன் முகம் பார்க்க,

அவனோ “நீ போ.. அர்ஜன்ட் கால் இல்லையா.. அன் டைம் அதான் சொன்னேன்.. பட் யூ க்னோ எவ்ரிதிங்..” என்று சொல்ல,

“பார்த்தி.. ப்ளீஸ்..” என்றாள் லேகாவும்.

அதற்குள் மீண்டும் அவளுக்கு அழைப்பு வந்திட, “கம்மிங்…” என்றவள், பார்த்திபனிடம்,

“நான் போயிட்டு வந்து எல்லாம் சொல்றேன்..” என்றவள் கிளம்பிவிட்டாள்.

லேகா சென்று முழுதாய் பத்து நிமிடங்கள் வரைக்கும் கூட, அவனுக்கு எதுவும் விளங்கவில்லை.. அப்படியே தான் அமர்ந்திருந்தான்.. அவளது நடவடிக்கைகள் அவ்வப்போது மாறுபட்டு தெரிவது பார்த்திபன் உணர்ந்ததே.. அவளாக எல்லாம் பேசுவாள்.

தன்யா பற்றி, முரளி பற்றி, இவனின் வீடு குடும்பம் என்று எல்லாம் பேசுவாள். ஆனால் பார்த்திபன் பேச்சு வாக்கில் எதுவும் சொன்னால் கூட ‘இதெல்லாம் எனக்கு பிடிக்காது பார்த்தி..’ என்று  முகத்திற்கு நேராய் சொல்லிடுவாள்..

பார்த்தியும் அப்படித்தான் தன்யா பற்றி பேசுகிறாள் என்றாள் தடுத்திடுவான். ஆனால் இன்று??

வழக்கத்திற்கு மாறாய் அதுவும் இந்த இரவு நேரத்தில் கிளம்பி வெளியே போகிறாள் என்றாள்?? மனது என்னவோ முரணாய் சிந்தித்து.. லேகாவின் நடை உடை பேச்சு பழக்க வழக்கம் குணம் எதிலும் எதிலுமே ஒரு குறையும் சொல்லிட முடியாது..

ஆனால் இப்போது அவளின் முகத்தினில் இருந்த அவசரம் , பதற்றம் அனைத்துமே அவள் எதையோ மறைக்கிறாள் என்பதையே தெள்ளத் தெளிவாய் சொல்லியது. இதற்கு முன் எப்படியோ ஆனால் பார்த்திபன் இங்கே வந்த பிறகு, லேகாவிற்கு ஏதாவது ஒன்றென்றால் அதன் பொறுப்பு பார்த்திபனிடமும் கேள்வி வருமே..

பார்த்திபன் மனதில் இதே சிந்தனை ஓட, ‘எதுவா இருந்தாலும் லேகா பாதுகாப்பா திரும்பி வரணும்..’ என்றுமட்டும் நினைத்துக்கொண்டான்.

அதன் பின்னே தான் அவனுக்கு பசி என்பதே உணர முடிய, “அடடா.. இனி நானா செஞ்சு சாப்பிடனுமா???” என்று நொந்தவன், அவசரத்திற்கு நூடில்ஸ் கிண்டி உண்டுவிட்டு படுத்தான்.

பார்த்திபனின் எண்ணங்கள் எல்லாம் இப்போது லேகாவின் செயல்களில் மட்டுமே இருந்தது. தன்யாவிடம் தான் பேசியது எல்லாம் மறந்துபோய், லேகா எங்கே போயிருக்கிறாள், எப்போது வருவாள் என்பதிலேயே உழன்று கொண்டு இருந்தது.

நேரம் கடந்துகொண்டே இருக்க, பார்த்திபன் எப்போது உறங்கினான் என்பது அவனுக்கே தெரியவில்லை. ஆனால் மறுநாள் விடிந்தும் கூட லேகா வரவில்லை. கண் விழித்துப் பார்த்தவன், முதல் வேலையாக லேகாவிற்கு அழைக்க, ‘கால் நாட் ரீச்சபிள்..’ என்று ஜப்பானிய மொழியில் சொல்ல,

“வீட்டுக்கு வந்திருப்பாளோ..” என்று அவளின் வீடு சென்று பார்க்க, அதுவோ பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.

‘இன்னும் வரலையா??!!!’ என்று பார்த்திபனின் உள்ளம் திடுக்கிட, மீண்டும் அவளுக்கு அழைத்துப் பார்த்தான்.

இம்முறையும் ‘நாட் ரீச்சபிள்..’ என்றே வர, பார்த்திபனுக்கு சங்கடமாய் போய்விட்டது..

‘எமர்ஜென்சின்னு போனா.. ஆனா இன்னும் வரலை.. எங்க போனா தெரியலை.. போனும் லைன் கிடைக்கலை..’ என்று அவனது எண்ணங்கள் எல்லாம் இதிலேயே சுழல,

‘ஒருவேளை.. நேரா ஆபிஸ் வந்திருப்பாளோ..’ என்று தோன்றவும், வேகமாய் தயாராகி அலுவலகம் சென்றான்.

அங்கோ அவனது தளத்தில், லேகா தவிர அனைவரும் இருந்தனர். எப்போதும் பார்த்திபனும் லேகாவும் தான் ஒன்றாய் வருவர், கிளம்புவதற்கு இருவருக்கும் கொஞ்சம் முன்னே பின்னே ஆனால் கூட, ஒருவருக்காக மற்றவர் காத்திருந்தே பின் ஒன்றாய் கிளம்புவதும் வழக்கம்.

ஆனால் இன்றோ பார்த்திபன் மட்டும் வர “வேர் இஸ் லேக்கா..” என்றாள் இவனின் டீம் மேட் ஒருத்தி..

“ஐ டோனோ..” என்றா சொல்ல முடியும்??

“ஷி வில் கம்..” என்றவனுக்கு வேலையே ஓடவில்லை..

ஆனால் வேலையில் கோட்டை விட்டால் ஆகுமா என்ன??

நேரம் செல்ல செல்ல, லேகா வருகிறாளா என்று பார்த்துக்கொண்டே இருக்க, ஒருப்பக்கம் அவனின் வேலையும் சென்றுகொண்டே இருக்க, லேகாவின் கீழ் வேலையும் செய்யும் ஒருத்தி வந்தாள்,

“ஹேய் பார்த்தி…” என்றபடி..

“ஹாய்…” என்றவன் ‘இவ என்ன கேட்க போறாளோ…’ என்று பார்க்க,

“லேகா இஸ் டீலிங் வித் சம் சீக்ரட் ப்ராஜெட்ஸ்..  சோ ஷி வில் ரிடர்ன் வித்தின் டூ ஆர் த்ரீ டேஸ்.. ஷி ஆஸ்க் மீ டு கன்வே திஸ் டூ யூ..”  என்று சொல்ல,

‘இதை என்கிட்டவே சொல்லிருக்கலாமே..’ என்றெண்ணியவன் “தேங்க்ஸ்…” என்றுமட்டும் சொல்லி பேச்சை முடித்துவிட்டான்..

ஆனாலும் மனது அவனுக்கு சமாதானம் ஆகவில்லை.

‘அப்படியென்ன சீக்ரெட் ப்ராஜெக்ட்ஸ்..???’ என்று யோசிக்க, எதுவுமே அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..

இவர்களது கம்பனியின் அவ்வப்போது அரசாங்கம் சார்ந்த ரகசிய ப்ராஜெக்ட்கள் எடுப்பதும், அதற்கென்று தனி டீம் அமைப்பதும், இரவு பகலாய் நேரம் பாராது வேலை முடித்து, அனைத்து டீலிங்களும் இவர்களுக்கு சாதகமாய் முடிந்தால், அதனை ஒரு பார்ட்டி வைத்து கொண்டாடுவது வழக்கமே.  

ஆனால் இதை லேகா ஒருவார்த்தை பார்த்திபனிடம் சொல்லிவிட்டு சென்றிருந்தால் என்ன வந்தது??

அவள் சொல்லிச் சென்ற காரணத்திற்கும், இப்போது வந்து இதோ இவள் சொல்லிச் செல்லும் காரணத்திற்கும் எத்தனை வித்தியாசங்கள் என்பது அவனுக்குப் புரியாதா என்ன???

இது இந்தியாவும் அல்லவே, மேற்கொண்டு இதைப்பற்றி யாரிடமும் விசாரிக்கலாம் என்பது..   

எது எப்படியாக இருந்தாலும் சரி, லேகா பாதுகாப்பாய் வீடு வந்து சேர்ந்தால் போதும் என்று தான் தோன்றியது அவனுக்கு.  ‘நாட் ரீச்சபிள்..’ என்று வந்தது இப்போது ‘சுவிட்ச் ஆப்..’ என்று வர, மறுநாள் ஹேமா அழைத்து பார்த்திபனிடம் என்னவென்று கேட்டாள்.

“ஆபிஸ் விசயமா மீட்டிங் அண்ணி..” என்று இவன் சொல்ல,

“என்ன மீட்டிங்கா இருந்தாலும் போன் எடுக்கவேனாமா பார்த்தி..” என்றாள் அவள்.

அதுசரி அது அவளின் கவலை.. ஹேமாவிற்கு இப்போது பிறந்த வீட்டு சொந்தம் என்று இருப்பது லேகா மட்டுமே.. வெளிநாட்டில் தனியாய் இருந்தாலும் தினமும் ஒருமுறையாவது இருவரும் பேசிடுவர். அப்படியிருக்கையில், லேகா இந்த இரண்டு நாட்களாய் பேசாதது ஹேமாவிற்கு சங்கடமாய் போனது.   

பார்த்திபனும் அவனுக்குத் தெரிந்த மட்டும் சமாளிக்க, அந்த இரண்டு நாட்களும் அவன் தன்யாவிற்கு அழைக்கவும் கூட இல்லை.. என்ன ஏதென்று ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் இல்லை..

தன்யா தான் தவித்துப் போனாள்.. எப்போதும் அவனாய் அழைத்து ‘பேசமாட்டியா..’ என்று கேட்டு இம்சிப்பவன், இந்த இரண்டு நாட்களும் எதுவுமே இல்லாது அமைதியாய் இருக்க,

‘என்னாச்சோ…’ என்று அவளுக்கு பதறியது.

முரளி வந்து திரும்ப பேசியப்பிறகு இனி அவர்களின் வீட்டிற்கு போகக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டாள். யார் வந்து அழைத்தாலும் சரி, பக்கத்துக்கு வீடேயானாலும் சரி, இனி அங்கே போகவும் வேண்டாம் அந்த முரளி கண்ணில் பட்டுத் தொலைவும் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்க,

இப்போதோ ‘அங்க போனாலாவது எதுவும் தெரியுமோ..’ என்று தோன்றியது..

‘நோ நோ… போகக்கூடாது..’ என்று எண்ணிக்கொண்டவள் பார்த்திபனுக்கே “என்னாச்சுப் பார்த்தி..” என்று ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் தட்டினாள்.

இவள் அனுப்பிய நேரம் அவன் கவனிக்கவில்லை. வெகு நேரம் கழித்தே பதில் அனுப்பினான். ஆனால் அந்த வெகு நேரம் என்பது தன்யாவிற்கு வெகுவாய் ஒரு பாதிப்பை கொடுக்கும் நேரமாய் இருந்தது.

‘கடவுளே பார்த்திக்கு எதுவும் ஆகிட கூடாது..’ என்று மனது உறுப்போட்டுக்கொண்டே இருக்க,

பார்த்திபனோ “பிசி..” என்றுமட்டும் பதில் அனுப்ப, தன்யாவிற்கு பெரும் ஏமாற்றமாய் போனது.

“ஓகே…” என்று மட்டும் தன்யா அனுப்பிவிட்டு, காஞ்சனா அழைக்கிறார் என்று ஹாலுக்கு வர, அவரோ “அப்பா அம்மா ஆபிஸ்ல இருந்து வந்திருப்பாங்களா தன்யா??” என்றார்..

“ம்ம்..” என்று நேரம் பார்த்தவள் “வந்திருப்பாங்க அத்தை.. ஏன் கால் போடணுமா??” என,

“ஆமா.. என் போன்ல சார்ஜ் இல்லை.. உன்னுதுல இருந்து வீடியோ கால் போடு..” என,

அவளின் அலைபேசியை பார்த்தவளுக்கு பார்த்திபன் எதுவும் பதில் அனுப்பியிருப்பானோ என்று பார்க்க, அவனிடம் இருந்து எப்பதிலும் இல்லை. ஆனால் இவள் அனுப்பிய ‘ஓகே..’ அவன் பார்த்திருக்கிறான் என்பது மட்டும் புரிய,

‘வேணும்னே அவாய்ட் பண்றான்…’ என்று பொறுமியவள், அவளின் அம்மாவிற்கு அழைத்தாள்..

காஞ்சனா எதுவோ யோசனையாய் இருக்க, சுகந்தியிடம் இரண்டொரு வார்த்தை பேசிய தன்யா “ம்மா அத்தை பேசணுமாம்..” என்று இவரிடம் கொடுக்க,

வழக்கமான முகமன்கள் எல்லாம் முடிந்து “அண்ணி.. அண்ணன் எங்க??” என்றார் காஞ்சனா..

“அவர் ஜஸ்ட் ஒரு வாக் போயிட்டு வர்றேன்னு போயிருக்கார் காஞ்சனா ஏன்??” என்று சுகந்தி கேட்க,

“இல்ல.. நம்ம தன்யாவுக்கு மேற்கொண்டு என்ன முடிவு பண்ணிருக்கீங்க?? வரன் பாக்கணுமா இல்லை எப்படி?? அவளுக்கும் வயசாகிட்டு போகுது இல்லையா..” என,

காஞ்சனா இப்போது இந்த பேச்சை எடுப்பார் என்றறியாத தன்யாவோ திகைத்துப் போய் அவரைப் பார்க்க, சுகந்தியோ,

“ஆமா காஞ்சனா நாங்களே இது விசயமா பேசணும்னு இருந்தோம்.. அடுத்த மாசம் இருபது நாள் லீவ் வருது.. நானும் அவரும் அங்க வர்றோம்.. ஏற்கனவே ஆரம்பிச்சு இருக்கணும்.. இனியும் லேட் பண்ணவேணாம்..” என,

தன்யாவிற்கோ ‘கடவுளே இப்போ பார்த்து பார்த்தி இங்க இல்லையே..’ என்று தோன்றியது..

‘போ போன்னு அனுப்பிட்டு இப்போ என்ன…’ என்று அவளின் மனது குட்ட,

“ம்மா இப்போ என்ன அவசரம்…” என்றாள் அவசரமாய்..

காஞ்சனா இவளைப் பார்க்க, சுகந்தியும் “அவசரமா… இதுவே லேட் தன்யா..” என,

“இல்லம்மா.. அது.. இன்னும் ஒன் இயர் போகட்டுமே..” என்றாள் தவிப்பாய்..

காஞ்சனவோ இவளின் முகம் போகும் போக்கைப் பார்த்து சிரித்தவர் “இப்போ ஆரம்பிச்சா தான் ஆச்சு தன்யா.. மாப்பிள்ளை என்ன பக்கத்து வீட்லையா இருப்பான்.. போய் உடனே பேசி முடிக்க, நம்ம வேலை நம்ம ஆரம்பிச்சா எப்போ நடக்கணுமோ அப்போ தன்னப்போல நடக்கும்..” என,

சுகந்தியும் “இந்த டென்சன் எல்லாம் எல்லாருக்கும் வர்றது தான் தன்யா..” என,

தன்யாவிற்கோ திடுக் திடுக்கென்றது..

‘மாப்பிள்ளை என்ன பக்கத்து வீட்லையா இருப்பான்…’ என்று காஞ்சனா சொன்னதும் ‘ஆமா…’ என்று அவளின் உள்ளம் துள்ள,

‘ஆண்டவா நீதான் எனக்கு ஒரு வழி காட்டனும்…’ என்று வேண்டியவள், எப்போதடா காஞ்சனாவும் சுகந்தியும் பேசி முடிப்பார்கள் என்று காத்திருந்து பின் அலைபேசியை வாங்கியவள், வேகமாய் பார்த்திபனுக்கு அழைத்தே விட்டாள்..

“சாப்பிட வா தன்யா..” என்று காஞ்சனா அழைத்தமைக்கு கூட,

“ஒரு இம்பார்டன்ட் கால் அத்தை..” என்றவள், அறையினுள் சென்று கதவடைத்துக்கொண்டு பார்த்திபனுக்கு அழைக்க, அவனோ எடுக்கவே இல்லை..

திருமணம் பற்றி முரளி கிள்ளிப் போட்டதுமே தன்யா சுதாரித்து இருக்கவேண்டும். அப்போதே பார்த்திபனிடம் சொல்லியும் இருக்கவேண்டும். ஆனால் சொல்லாமல் விட்டு அதையே இப்போது காஞ்சனா சுகந்தியிடமும் பேசி இதோ அடுத்த மாதம் அப்பா அம்மா வந்து வரன் அது இதென்று பார்த்தால்??

இவள் என்ன செய்வாள்?

அப்படியே பார்த்திபனை விரும்புகிறேன் என்று சொன்னாலும் இங்கே முரளி என்றொருவன் இருக்கும் வரைக்கும் நிச்சயம் அதை நடக்கவிடமாட்டன்..

எது எப்படியோ அனைத்தையும் பார்த்திபனிடம் இப்போதே சொல்லிடவேண்டும் என்று தோன்ற, அவனுக்கு அழைத்து அழைத்துப் பார்க்க, அவனோ மூன்று முறை அழைப்பை எடுக்கவேயில்லை..

நான்காவது முறை எடுத்தவன் “ஏய் லூசு அறிவில்ல.. நான் தான் பிசின்னு மெசேஜ் பண்ணேன்ல.. இப்போ இப்படி இத்தனை டைம் கால் பண்ற..” என்று எரிந்து விழ,

“பார்த்தி.. பார்த்தி நான் சொல்றத ஒன் செக்கன்ட் கேளேன்..” என்றாள் தவிப்பாய்..

அவன் கோபமாய் பேசியது எல்லாம் அவளுக்கு உறைக்கவேயில்லை.. அதை அப்போது உணரவும் தோன்றவில்லை..

“ம்ம்ச்.. தன்யா… நான் இப்போ பேசுற நிலைல இல்லை.. ட்ரை டூ அன்டர்ஸ்டாண்ட்… நானா கால் பண்ற வரைக்கும் நீ பண்ணாத..” என்றவன் தன்யாவின் பதில் வரும் முன்னே அழைப்பை துண்டித்து, அலைபேசியையும் அமர்த்திவிட்டான்.

          

                 

      

     

               

 

                           

      

Advertisement