பார்த்துவிடு கொஞ்சம் – 7
தன்யாவிற்கு மனதில் இருந்த வருத்தங்கள், வேதனைகள், அழுகை எல்லாம் பார்த்திபனோடு அடிக்கடி பேசத் தொடங்கியதுமே கொஞ்சம் மட்டுப்பட்டு, பின் மறைந்துப் போகத் தொடங்க அதன பெரிதாக அவள் வெளிக்காட்டவில்லை என்றாலும், அவளின் மாற்றம் பார்த்திபனுக்கு புரியாது போகுமா என்ன??
“என்ன தனியா.. இப்போ கொஞ்சம் காரம் கம்மியா இருக்கே..” என்று வம்பிழுத்தான்.
“ம்ம்ச் இதுக்கு தான் கால் பண்ணுவியா??” என்று சிடு சிடுத்தாலும், இப்போதெல்லாம் பெரிதாக ஒன்றும் அவனிடம் தேவையில்லாதது எதுவும் பேசுவதில்லை.
ஆனால் பார்த்திபனோ ஒன்றை பிடித்தால் விடமாட்டேன் என்பவனாய் “என்ன பார்த்து எப்படி டி அப்படி சொல்ல முடிஞ்சது உன்னால??” என்றான் அவனின் வலி எல்லாம் குரலில் தேக்கி.
எத்தனை முறை சொன்னாலும் கூட, என்னவோ தன்யாவிற்கு இந்த கேள்விக்கான பதில் மட்டும் சொல்ல முடிவதில்லை. அவளுக்கும் அது கஷ்டமாய் தானே இருந்தது. வலி எல்லாம் அவளுக்கும் தானே இருந்தது. பார்த்திபனின் முன்னேற்றம் மட்டுமே மனதில் வைத்து தானே அவனை ஜப்பான் போ என்றாள்.
அதுகூட முதலில் சாதாரணமாய் தான் சொன்னாள்.
“நீ ஜப்பான் போறதுல என்ன பார்த்தி கஷ்டம்..?? போயிட்டுத்தான் வாயேன்..” என்றாள்.
ஆனால் அவனோ “எங்க அண்ணன் ஆஃபர் பண்ற எதுவுமே எனக்கு வேணாம் தன்யா.. ஏன் நீயும் இப்படி பேசற?? எனக்கு வேற வேலை கிடைக்காதா என்ன??” என,
“அ.. அதில்ல பார்த்தி.. சான்ஸ் வர்றபோ நம்ம அதை யூஸ் பண்ணிக்கலாம் தானே.. வீட்ல எல்லாரும் சொல்றாங்க இல்லையா..” என்றாள் அவனை சமாதானம் செய்யும் பொருட்டு..
இதெல்லாம் முரளி அவளிடம் சொன்னது தான்.. ‘நீ பேசினா அவன் கேட்பான்..’ என்றுதான் முதலில் ஆரம்பித்தான்.
“முரளிண்ணா…!!!” என்று தன்யா திகைக்க,
“எனக்குத் தெரியும் தன்யா.. எல்லாமே.. அது உங்க பெர்சனல்.. பட் அவனுக்கு ஒரு நல்ல சான்ஸ் வர்றபோ தூக்கி போடுறான்.. நீ பேசினா கேட்பான்..” என்று தான் முதலில் தன்யாவை பேச வைத்தான்.
ஆனால் யார் சொன்னாலும் நான் என் முடிவில் மாறமாட்டேன் என்று பார்த்திபன் திடமாய் இருக்க, அவனின் மனதினை புரிந்த தன்யாவோ அடுத்து முரளி அவளிடம் வந்து ‘பேசினாயா??!!’ என்று கேட்கையில்,
“அவனுக்கு விருப்பமில்லைன்னா ஏன் கம்பல் பண்ணனும்.. இங்கயே வேற ஜாப் அவனுக்கு கண்டிப்பா கிடைக்கும்..” என்றாள் பார்த்திபன் மேலிருந்த நம்பிக்கையில்..
ஆனால் தன்யாவின் இப்பதிலில் முரளியின் முகம் அப்படியே மாறிப்போனது.
“நினைச்சேன்.. நினைச்சேன்… என்னடா இந்த பொண்ணு நம்ம சொல்றதை கேட்டாளேன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன். ஆனா இப்போ நல்லா புரியுது.. நீயும் உறுப்பட மாட்ட.. அவனையும் உறுப்பட விடமாட்ட..” என்று முரளி முறைக்க,.
“முரளிண்ணா…” என்று திகைத்தாள்.
“என்ன பெரிய முரளிண்ணா???!! ஹா.. என்னை அண்ணன்னு சொல்ற.. அப்போ பார்த்தியும் அண்ணன் சொல்ல வேண்டியது தானே.. லவ்வாம் லவ்வு பொடலங்கா லவ்வு.. சல்லி காசு பெறுமா?? ” என்று முரளி கத்த,
“அ.. அண்ணா..!!!” என்றாள் இன்னமும் திகைத்து..
“அட ச்சே.. ஸ்டாப் இட்.. இப்படி ஒன்னும் தெரியாதது போல ரியாக்ட் பண்றதை நிறுத்து. இங்க பார் என்ன செய்வியோ எனக்கு தெரியாது பார்த்திபன் ஜப்பான் போகணும்.. அவனுக்கு அங்க எல்லாமே ரெடியா இருக்கு… இங்க இருந்துட்டு ரெண்டு பேரும் வெட்டியா ஊர் சுத்திட்டு இருந்தீங்க, அப்புறம் நான் உங்க அப்பா அம்மாக்கிட்ட தான் பேசவேண்டி வரும்..” என,
முரளியின் இவ்விதமான பேச்சினில் தன்யா ஆடித்தான் போனாள்.
சுகந்தியிடமும், கோபாலிடமும் சொன்னால், அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியாது. ஆனலும் கூட தன்யா அதை சமாளிப்பாள் தான்.. பார்த்திபனை பற்றி அவர்களுக்குத் தெரியாதா என்ன??
ஆனால் இந்த முரளி அதை எப்படி சொல்வான் என்று தெரியாதே..
மனது வேகமாய் யோசிக்க, “என்ன தன்யா பாக்குற.. அவன் லைப்ல ஒரு நல்லது நடக்கனும்னு உனக்கு எண்ணம் இருக்கா இல்லையா?? அவன் சொன்னானாம் நீயும் கேட்டியாம்.. நல்லாருக்கா கதை..” என்றவன்,
“என்ன சொல்லு.. உங்க வீட்ல சொல்லட்டுமா??!!” என,
மனதினை ஒருமுகப் படுத்தி, திடப் படுத்தியவள் “சொல்றதுன்னா சொல்லிக்கோங்க முரளிண்ணா.. எங்க அப்பா அம்மாக்கிட்ட எப்படி பேசணும்னு எனக்கும் தெரியும்..” என்றாள்.
முரளிக்கோ தன்யா மறுத்து பேச பேச, ஆங்காரம் தான் கூடியது.
“ஓ..!! அந்தளவுக்கு வந்தாச்சா?? ஆமா என்னனு சொல்லி பார்த்தியை சொல்லுவா.. வீடில்ல.. வேலையில்ல.. இத்துனூண்டு காசு சேர்த்து வைக்கலை.. இதுநாள் வரைக்கும் சம்பாரிச்சது எல்லாம் பைக் கார்னு வாங்கிட்டான்.. இப்போ அதுக்கு பெட்ரோல் போட கூட காசில்லை.. வீட்டை விட்டு நான் போ ன்னு சொன்னா, சார் நடுத்தெருவுல தான் நிக்கணும்..” என்று கேவலமாய் ஒரு சிரிப்பு சிரித்தான் முரளி..
முரளி பற்றி ஏற்கனவே தன்யா அறிந்திருந்தாலும் இப்போது தான் அவனின் உண்மையான கோர முகம் அவளால் நேரில் காண முடிந்தது. என்னதான் ஜென்மமோ என்றுதான் எண்ணத் தோன்றியது. அது அவளின் முகத்திலும் தெரிந்ததுவோ என்னவோ,
“நீ என்னை எவ்வளோ கேவலமா நினைச்சாலும் சரி.. ஐ டோன்ட் கேர்.. பட் பார்த்திபன் உங்க அப்பா அம்மா முன்னாடி கேவலப் படாம இருக்கிறது உன் கைல தான் இருக்கு..” என,
“அண்ணா… பார்த்தி தான் போகலை சொல்றான்ல பின்ன ஏன் அவனை இவ்வளோ கம்பல் பண்ணி அனுப்பனும்.. இல்லை இங்க அவனுக்கு வேலையே கிடைக்காதா என்ன??!” என்றாள் கொஞ்சம் குரலை உயர்த்தி.
“ஓஹோ…!!!!” என்று ஏளனமாய் ஒரு பார்வை பார்த்த முரளியோ,
“சோ எல்லாத்துக்கும் காரணம் நீ தான் இல்லையா??!! உன்னால தான் பார்த்தி இங்க இருந்து போகமாட்டேங்கிறான் இல்லையா??” என்று பார்த்தவன்,
“அப்போ.. நீ அவன் லைப்ல இல்லைன்னா போயிடுவான்..” என்றான் உறுதியாய்..
தன்யாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது.. என்ன வார்த்தைகள் இது என்று. அதுவும் தான் அந்நியமோ அசலோ இல்லை.. உறவினள். எத்தனை ஆண்டுகளாய் பார்க்கிறான் இந்த முரளி.. அவனால் இதெல்லாம் எப்படி யோசிக்க முடிகிறது.. கொடூரங்களில் இவன் ஒரு தினுசு என்று நினைத்தாள்.
“ஓகே தன்யா.. நான் முடிவு பண்ணிட்டேன்.. நீ என்ன சொல்ற.. பார்த்திக்கிட்ட, இந்த லவ்வு அதெல்லாம் வேணாம்.. நீ ஒழுங்கா உங்க வீட்ல சொல்றதை கேட்டு நட அப்படின்னு தெள்ளத் தெளிவா சொல்ற..”
“இல்லன்னா என்னண்ணா செய்வீங்க??” என்று கேட்கையில் கூட தன்யாவின் நிமிர்வு குறையவில்லை.
ஆனால் முரளியோ தன்யாவின் முகத்தினை கூர்மையாய் பார்த்தவன் “என்ன செய்யலாம்…??!!!! ம்ம்.. வேலையில்லாம கைல நயா பைசா இல்லாம பணத்துக்கு வேற வழியில்லாம என் பர்ஸ்ல இருந்ததை திருடிட்டான்னு நானே கம்ப்ளைன்ட் கொடுப்பேன்..
திருட்டு பயலை வீட்ல வச்சுக்க முடியாதுன்னு, வெளிய அனுப்பலாம்.. அடுத்து உங்க அப்பா அம்மாக்கு சொல்லலாம்.. இப்படி இத்தனை இருக்கே..” என்று அவன் பட்டியலிட, ஆடித்தான் போனாள் தன்யா..
பார்த்திபன் என்ன யாரோ என்னவோ வா… உடன் பிறந்த தம்பி.. அவன் மீது இத்தனை காழ்ப்புணர்வா? இவனெல்லாம் என்ன மனிதன் என்று தன்யா நினைத்தாலும், அதை அவளால் சொல்லிட முடியுமா என்ன??
அப்படியே சொன்னாலும் தான் இந்த முரளிக்கு அவனின் முடிவு மாறுமா என்ன??
அவனை வெறித்து ஒரு பார்வை பார்த்தாள்.. ஆனால் முரளியின் பார்வையோ ‘நான் சொன்னதை செய்யாதுவிட்டால் அவனை நடு வீதியல் தான் நிறுத்துவேன்..’ என்று சொல்லாமல் சொல்லியது..
தன்யாவின் மனதோ, அலறித் துடித்தது. இதெல்லாம் பார்த்திபனிடம் அவள் சொல்ல ஒரு நொடி போதாது தான். ஆனால் அதன் பின். பார்த்திபன் வீட்டினில் பெரிய பிரச்சனை வெடிக்கும்.
எது எப்படியாகினும், முரளி தான் சொன்னதை இறுதியில் செய்தே விடுவான்.. பார்த்திபன் மீது தவறே இல்லாது போனாலும் கூட, அவன் தண்டனை அனுபவிக்க வேண்டுமா என்ன??
தன்னை காதலித்தால், பார்த்திபனுக்கு இதெல்லாம் நடந்திட வேண்டுமா என்று தோன்றியது?? பார்த்திபனை அந்த நிலையில் அவளால் நினைத்தும் கூட பார்க்க முடியவில்லை..
“நீ மட்டும் கொஞ்சம் கண்டிப்பா பேசினா பார்த்தியும் நிச்சயமா நாங்க சொல்றதை கேட்பான் தன்யா.. உன்னோட காதல் அவனுக்கு இல்லைன்னு ஆகுரப்போ கண்டிப்பா அவனுக்கு மனசுல ஒரு வெறுமை வரும்.. அந்த வெறுமை அவனை ஜப்பான் போக வைக்கும்.. அவனோட எதிர்காலம் அதுக்கு அப்புறம் மாறிடும்.. ஆனா இதெல்லாம் உன்னோட கைல தான் இருக்கு..” என்றான் முரளி அவளின் யோசனையை கண்டு.
தன்யவோ எவ்வித முடிவிற்கும் வரமுடியாது தவித்தாள். எப்படி அவளால் அவனிடம் சென்று நீ எனக்கு வேண்டாம் என்று சொல்ல முடியும்?? சொல்லிவிட்டு அவனின் முகத்தினை ஏறிட்டு பார்க்க முடியுமா?? இப்படி ஒரு வாக்கியத்தில் சொல்லி முடித்துவிடும் உறவா இருவருக்கும்??
நெஞ்சம் கனத்து அழுகை வருவது போலிருந்தது. ஆனால் இந்த முரளி முன்னே அழுதுவிட கூடாது என்று வெகுவாய் தன்னை கடினப்படுத்திக் கொண்டாள்.
“இனி உன்னோட இஷ்டம்..” என்ற முரளி நகர்ந்துவிட்டான்..
தன்யாவின் மனதோ பட்டிமன்றம் நடத்தாத குறைதான். பார்த்திபனின் எதிர்காலமா?? அவனின் கௌரவமா?? இல்லை அவளின் காதலா??!!!
அடித்து சொன்னது பார்த்திபனின் நன்மையே முதன்மை என்று..
ஆனாலும் அவனை வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும்…
இப்போதும் கூட இவையனைத்தையும் அவளால் பார்த்தியிடம் சொல்ல முடியும். ஆனால் சொல்லவில்லை.. காரணம் அவளின் இந்த சொற்களால், அவன் குடும்பத்தில் கண்டிப்பாய் பிரச்னைகள் வெடிக்கும்.. அது அவளுக்கு அத்தனை பிடித்தமில்லை.. என்ன இருந்தாலும் அது தான் வாழப் போகும் குடும்பம் என்ற எண்ணம் அவள் மனதினில் இருந்தது..
ஆனால் பார்த்திபனோ “சொல்லு டி.. எப்படி உன்னால அப்படி சொல்ல முடிஞ்சது..?? என்னைப் பார்த்து வேணாம்னு எப்படி டி சொல்ல முடிஞ்சது.. உசுரோட கொன்னுட்ட அப்போ..” என,
“பார்த்தி ப்ளீஸ்..” என்றாள் குரலை இறுக்கி..
“ஓ..!!! அப்போ மேடம் இந்த கேள்விக்கு பதிலே சொல்ல மாட்டீங்க.. அப்படியா” என,
“இதை தான் கேட்கனும்னா நீ பேசவே பேசாத..” என்றாள் கறாராய்..
“ம்ம்ம்ம்.. அதெப்படி.. எனக்கு லவ் பண்ணி பழகிடுச்சு.. பேசி பழகிடுச்சு.. இல்லையோ நான் இப்படியெல்லாம் உரிமையா பேச ஒரு ஆள் செட் பண்ணி விடு.. உன்னை தொல்லையே பண்ணமாட்டேன்..” என்றான் வழக்கம் போல்..
“ச்சேய்…..”
“நீ என்ன கேவலமா திட்டினாலும் பரவாயில்ல..” என்றவன் “ஒண்ணு பதில் சொல்லு, இல்லை எனக்கு ஒருத்திய செட் பண்ணிவிடு..” என,
“டேய் எருமை…” என்று பல்லைக் கடித்தாள்..
“கடுப்பாகுதா… காண்டாகுதா.. ஆகும் டி ஆகும்.. ஆகணும்.. எனக்கு ஒவ்வொரு நிமிஷம் எப்படி இருந்துச்சு தெரியுமா?? நீ என்கிட்டே திரும்ப பேசுற வரைக்கும்..” என்று நெஞ்சோடு சேர்த்து தன் சட்டையை கசக்கியவனுக்கு அவள் என்ன பதில் சொல்வாள்,
இங்கே ஒவ்வொரு நொடியும் தானும் கூட அவள் இப்படியான அவஸ்தையை தான் அனுப்பவிக்கிறாள் என்று.
“ம்ம்ச் என்னை எரிச்சல் பண்ணாத பார்த்தி..” என,
“ஹ்ம்ம் அப்போ கூல் பண்ணவ??!!” என்றான் காதல் தெறிக்க,
“ஷோ!!!!!”
“ஹா ஹா ஹா.. அப்போ என்கிட்டே எப்பவும் போல நார்மலா பேசணும்.. சரியா… பழையமாதிரி லவ்ஸா பேசணும்.. எனக்கு மட்டும் உன்ன விட்டா யாரு டி இருக்கா..?? என்று அவன் கேட்கையில், தன்யாவின் உள்ளம் உருகித்தான் போனது.
ஆனாலும் “அந்த வீக்கென்ட் ஆபர் ஜப்பான் காரி எங்க போனா??” என்றாள் வேண்டுமென்றே,
“அய்யே..!!! அதெல்லாம் ஜஸ்ட் வீக்கென்ட்க்கு மட்டும்.. நீ லைப் லாங்..” என,
“அடப்பாவி..” என்றவள் லேகா பற்றி கேட்போமா என்று தோன்றியதை அப்படியே விழுங்கினாள்.
என்னவோ அந்த லேகா பற்றி பார்த்திபனிடம் இலகுவாய் எதுவும் கேட்க முடிவதில்லை. ஆனால் பார்த்திபனே இரண்டொரு முறை சொல்லிருக்கிறான் லேகா பற்றி, அதை தாண்டி எதுவும் இவளாக கேட்டுக்கொள்வதில்லை. கேட்க என்னவோ மனதில் தயக்கமாய் இருந்தது.
ஒரு இனம் புரியாத தவிப்பு..
அதனையும் விழுங்கினாள் தன்யா..
பார்த்திபன் அவ்வப்போது இப்படிதான் அழைத்து அவளோடு வம்பளது, எதையாவது பேசி, கிண்டி கிளறி சண்டையிட்டு, பின் காதலாகி என்று நாட்கள் நகர, தன்யாவிற்கு பார்த்திபன் அடுத்து ஊரில் இருந்து வரும் நேரம் அப்பா அம்மாவிடம் சொல்லிட வேண்டும் என்று மனதில் உறுதிகொண்டாள்.
ஆனால் இவர்களின் முடிவெல்லாம் முரளி என்று ஒருவன் இருக்கும் வரைக்கும் செல்லுபடியாகுமா என்ன??
ஒருவாரம் வரை மேலும் கடந்திருக்க, முரளி மீண்டும் தன்யாவை பார்க்க வந்தான்.
இம்முறை என்னவோ என்று தன்யா காண, “இந்த சைட் ஒரு வேலை இருந்தது தன்யா.. அப்படியே உன்கிட்ட ஒரு விஷயம் கிளியர் செய்யணும் நினைச்சேன்..” என,
“சொல்லுங்கண்ணா..” என்றாள் நேருக்கு நேராய் அவனைப் பார்த்து.
இனி இவன் என்ன சொன்னாலும் சரி, அதற்கு நாம் பணிந்துவிட கூடாது என்ற உறுதி அவளுள் உறுதியாய் இருக்க, அது அவளின் பார்வையிலும் தெரிய, முரளியோ, “பா.. பார்த்தி அடுத்து உன்கிட்ட பேசினானா??!!!” என்றான் யோசனையாய்.
“ஏ… ஏன் கேட்கிறீங்க???!!!”
“தோணிச்சு.. ஏன்னா பார்த்திபன் லைப்க்கு நான் வேற ஒரு முடிவு எடுத்து வச்சிருக்கேன்.. அது தேவையில்லாம கன்பியூஸ் ஆக கூடாது இல்லையா..” என்றவன்,
“சொல்லு தன்யா.. திரும்ப பேசிக்கிறீங்களா???” என்றான் தீர்க்கமாய்.
‘ஆமான்னு சொன்னா என்னடா செய்வ???’ என்று யோசித்தவள் “இல்ல..” என்றாள் பார்வையை வேறுபுறம் திருப்பி.
“நம்புற மாதிரி இல்லையே…” என்றான் முரளி சந்தேகமாய்..
“நம்ப முடியலைன்னா நீங்க உங்க தம்பிக்கிட்டயே கேட்டு க்ளாரிபை பண்ணிக்கோங்க… சும்மா சும்மா இப்படி என்னை டார்ச்சர் பண்ணாதீங்க சரியா..” என்றாள் கோபமாய்..
“ஹே.. ஓகே ஓகே.. கூல்.. ஜஸ்ட் கேட்டேன்..” என்று கைகளை உயர்த்தியவன், “அவனே அடுத்து கால் பண்ணா கூட நீ பேச கூடாது..” என்றான் விரல் நீட்டி கண்டிப்புடன்..
“ஏன்??!!!” சுல்லென்று வந்தது அவளிடம் கேள்வி..
“ஏன்னா………” என்று இழுத்தவன் “லேகா தான் இனி அவனுக்கு எல்லாமா இருக்கனும்..” என,
“என்னது??!!!!” என்றாள் கண்களை விரித்து..
முரளி முன் சொன்னது எல்லாம் விட இவ்வார்த்தைகள் அவளை கொன்று போட்டது..
‘லேகா…!!!’
ஆக அனைத்தும் முடிவெடுத்தே தான் இந்த முரளி பார்த்திபனை அங்கே அனுப்பியிருக்கிறான்.. கடவுளே…!!! என்று நெஞ்சம் வேகமாய் துடித்தது தன்யாவிற்கு..
“எஸ்… உங்க லவ் இதோட முடிஞ்சிருந்தா நல்லது.. இல்லைன்னா இதோட முடிச்சிக்கிறது ரொம்பவும் நல்லது…” என்றவன்,
“நீ புத்திசாலி பொண்ணு.. கண்டிப்பா உனக்கு புரியும்..” என்றுவிட்டு போனான்.
முரளி இப்படி சொல்லிப் போனதுமே தன்யாவினுள் பதற்றம் கூடிவிட, உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது.. ‘லேகா…’ இந்த பெயரிலேயே அனைத்தும் நின்றுவிட, அவளையும் அறியாது கண்களில் இருந்து நீர்..
காஞ்சனா எங்கோ வெளியில் சென்றிருந்தவர், வீடு வர, தன்யா ஹாலில் இப்படி என்னவோ ஏதோவென்று அமர்ந்திருப்பது கண்டு அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை..
“தன்யா…!!!” என்று அவளின் கன்னம் தொட,
“அ…” என்று திகைத்தவள், காஞ்சனாவை கண்டு “அத்தை…” என்று அவரை இறுக கட்டிக்கொண்டாள்..
“என்னாச்சு தன்யா?? என்னாச்சு?? இப்போதான் வந்தியா நீ?? ஏன் எப்படியோ இருக்க… நான் வர லேட்டாச்சுன்னா என்ன செய்றதுன்னு தான் கீ ஹேமாக்கிட்ட கொடுத்துட்டு போனேன்..” என்று அவளின் தலையை வருடியவர்,
“உனக்கு என்னாச்சு??!!” என்று அவளை நிமிர்த்தி கேட்க,
“அ.. அத்தை…” என்பதை தவிர அவளால் வேறொன்றும் சொல்ல முடியவில்லை..
வார்த்தைகள் வரவில்லை.. நா தந்தியடித்து… கண்கள் அலைபாய, இந்த முரளி இன்னும் என்னென்னா செய்ய காத்திருக்கிறான் என்ற நினைப்பே அவளை ஆடிப் போக வைத்தது.
“டேய்.. தன்யா.. கண்ணா… என்னாச்சு உனக்கு..” என்று காஞ்சனா கேட்க,
“எ.. எனக்கு பயமா இருக்கு..” என்றாள் அவரின் கையை இறுகப் பற்றி..
“பயமா?? எதுக்கு?? ஏன்.. யாரும் இங்க வந்தாங்களா?? என்னாச்சு..” என்று காஞ்சனா பதற,
“சொல்லிடேன் தன்யா…” என்றது அவளுள்ளம்..
ஆனால்???!!!!
“தன்யா என்னாச்சு…?!!!!” என்றார் காஞ்சனா..
‘என்னாச்சு…?!!! என்னாச்சு… நோ தன்யா நீ நீ வீக்காக கூடாது.. பார்த்தி விரும்புறது உன்னை.. உங்களை மீறி எதுவும் நடந்திடாது..’ என்று அவளின் காதல் மனதே அவளுக்கு வெகுவாய் தைரியம் சொல்ல,
“அ.. அது அத்தை.. வர்றபோ ஒரு ஆக்சிடன்ட் பார்த்தேன்…” என்றாள் திக்கி திணறி..
“அப்பாடி…!!!” என்று நிம்மதி மூச்சு விட்ட காஞ்சனா “அதுதான் ஒருநாளைக்கு ஓராயிரம் ஆக்சிடன்ட் நடக்குதே.. இதுக்கு பயந்தா ஆச்சா…” என்றார் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு..
“இல்லத்தை.. அது..”
“ஷ்…!! போதும்.. அதை விடு.. போய் குளிச்சிட்டு வந்து சாமி கும்பிடு.. எல்லாம் சரியாகும்..” என,
‘எஸ்… எல்லாம் சரியாகும்… சரியாகணும்..’ என்று தன்யாவும் கூறிக்கொண்டவள், குளித்து முடித்து வந்து காஞ்சனா சொன்னதுபோல் சிறிது நேரம் சாமிக் கும்பிட, மனது சற்றே அமைதியானது போலிருந்தது.
ஆனால் அதெல்லாம் பார்த்திபன் அழைக்கும் வரைக்கும் தான்.. இப்போது தான் தினமும் அழைத்துவிடுகிறானே..
அவனின் அழைப்பு என்றதுமே ஆழ மூச்சுக்களை எடுத்துவிட்டவள் “ம்ம் சொல்லு பார்த்தி…” என,
“என்ன ஒன் வாய்ஸ் எப்படியோ இருக்கு??” என்றான் எடுத்ததுமே..
“இல்லையே.. அ.. அதெல்லாம் இல்லை.. சொல்லு எதுக்கு கால் பண்ண..” என்று தன்யா பேச்சை மாற்ற,
“ஹலோ.. என்ன.. எதோ வேண்டா வெறுப்பா பேசுற மாதிரி இருக்கு..” என்று இவனும் குரலை மாற்றினான்..
“ம்ம்ச் அதெல்லாம் இல்லை..”
“இல்லையே.. என்னவோ சரியில்லையே…” என்று பார்த்தி இழுக்க, முரளி மீதிருக்கும் கோபமெல்லாம் சேர்த்து இப்போது பார்த்திபன் மீது திரும்பியது..
“இப்போ என்னடா செய்ய சொல்ற??!!!”
“ஓஹோ..!!! அந்த அளவுக்கு போயாச்சா…” என்றவன்
“பேசாட்டி போ டி.. லேகா என்னவோ ஸ்பெசலா டின்னர் ரெடி பண்றேன் சொன்னா.. நான் வேணாம் சொல்லிட்டு உன்கூட பேச வந்தா.. நீ ரொம்ப பண்ற…” என்றவன்,
“பை..” என்று போனை வைத்துவிட, தன்யாவின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பது அவள் மட்டுமே அந்த நொடி உணர முடிந்த ஒன்று.