Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 6

“அதான் சாரின்னு சொல்லிட்டேனே லேகா. இன்னமும்  ஏன் இப்படி பார்த்து வைக்குற.. எனக்கு கில்டியா இருக்கு…” என்றான் பார்வையை வேறு எங்கோ பதித்து பார்த்திபன்.

“ஓ… தென்??!!!” என்று லேகா அலட்சியமாய் கேட்க,

“தென் வாட்..?? இன்னும் என்னை என்ன பண்ண சொல்ற நீ…” என்றான் இவனும் பதிலுக்கு..

‘தெனாவட்டு தான் டா உனக்கு..’ என்று பார்த்தவள் “உன்ன நல்லவன்னு நினைச்சேன் பார்த்தி.. ஆனா இப்படி கேடுகெட்ட நல்லவனா இருப்பன்னு நினைக்கல..” எனும்போதே பார்த்திபனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ஹேய்…!!!!”

“ஓகே ஓகே.. பார்ட்டி அப்போ நான் கொஞ்சம் இமோசனலா இருந்தேன்.. தட்ஸ் வொய்….”

“அதுக்கு… அப்படி  ட்ரின்க் பண்ணுவியா?? உன்ன இங்க கூட்டிட்டு வர்றக்குள்ள எவ்வளோ கஷ்டம் தெரியுமா???” என்றாள் லேகா இன்னமும் அந்த கோபம் அடங்காது..

“ம்ம்ம்மம்மம்ம்ம்ம்…” என்று ராகம் இழுத்தவன், முகத்தினை பாவமாய் வைக்க,

“கேவலமா இருக்கு..” என்றாள் இவளும்..

“அப்போ எந்திரிச்சு போ.. ரெண்டு நாளா திட்டுற நீ.. திஸ் இஸ் டூ மச் லேகா…” என்ற பார்த்திபனை மேலும் முறைத்தாள்.

“ஏய் என்ன??!!!” என்று பார்த்திபன் எகிற,

“பண்றது பண்ணிட்டு சவுண்டு வேற விடுறியா நீ.. மொடா குடிகாரன் போல ஒன் மோர் ஒன் மோர்னு சொல்லி குடிச்சிருக்க.. நல்ல வேளை அக்கியோ உன்னை கவனிக்கலை..” என்றாள் இவளும் எரிச்சலில்.

“கவனிச்சிருந்தா என்ன?? ஏன் அவன் ட்ரின்க்கே பண்ணமாட்டானா??”

“ஷ்..!! அது நமக்கு தேவையில்லாத ஒண்ணு.. நம்ம எப்படி இருக்கிறோம் அதான் முக்கியம்..”

“அப்போ இனிமே என்னை பார்ட்டி அது இதுன்னு கூப்பிடாத..”

“தப்புதான்.. என் தப்புதான்..” என்றவள், “ஆமா அதென்ன ஸ்டேட்ஸ் புல்லா பார்ட்டி போட்டோஸ் போட்டிருக்க… என்ன விஷயம் பார்த்தி…” என்று லேகா புருவம் உயர்த்த,

“ஹலோ ம்மா… என் அக்கவுன்ட் என் வால்…. நான் என்ன ஸ்டேடஸ் போடணும்னு நான் தான் டிசைட் செய்யணும்.. மனுசனுக்கு இதுக்கு கூட உரிமையில்லையா என்ன..” என்று கடிந்தவன், மனதில் தன்யாவின் நியாபகம்.

இந்த இரண்டு நாட்களாய் என்ன செய்திருப்பாள் என்று??

தான் திரும்ப அழைப்பேன் என்று காத்திருப்பாளோ…??

இல்லை கோபமாய் இருப்பாளோ..??

“இருக்கட்டும் இருக்கட்டும்.. கோவமாவே இருக்கட்டும்.. நான் சொன்னதை ஒருதடவை கேட்டாளா…” என்று பார்த்திபனின் எண்ணங்கள் எல்லாம் தன்யாவிடம் சென்றுவிட,

“உன் வால்.. உன் அக்கவுன்ட்.. நீ எது வேணா ஷேர் பண்ணு.. பட்.. நான் இருக்க போட்டோஸ் ஷேர் பண்றதுக்கு முன்ன என்னை ஒருவார்த்தை கேட்கணும்.. புரிஞ்சதா???!!!” என்ற லேகாவின் குரல் அவளை நிமிர்ந்து பார்க்க வைக்க,

“என்ன பார்க்குற.. எனக்கு இதெல்லாம் பிடிக்காது பார்த்தி.. நான் ஜோவியல் டைப்தான் பட் சிலது எனக்கு பிடிக்காது..” என்றாள் கண்டிக்கும் குரலில்.

‘இந்த பொண்ணுங்களையே புரிஞ்சுக்க முடியலையே..’ என்று அந்த நொடி அவன் மனது நினைக்க,

“ஓகே.. அதுக்கும் சாரி.. வேனா அந்த போட்டோஸ் டெலிட் பண்ணிடறேன்..” என்று போனை எடுத்தான் பார்த்திபன்..

“இனிமே இப்படி பண்ணாதன்னு தான் சொன்னேன்…” என்றவள்

“நீ என்ன நினைச்சு இதெல்லாம் பண்ற தெரியலை பார்த்தி.. பட்.. எந்த ஒரு சூழ்நிலைலயும் தன்யாவ ஹர்ட் பண்ற மாதிரி இருக்காத..” என்றாள் ஒருவித யோசனை குரலில்..

போனில் பார்வையை பதித்திருந்தவன், தன்யா என்ற பெயரை கேட்டதும் வேகமாய் நிமிர்ந்து “தன்யா பத்தி பேசாதுன்னு அன்னிக்கே சொன்னேன் லேகா…” என்றான் ஒருமாதிரி குரலில்..

அவனுக்கு என்னவோ யாரும், யாருமே தன்யா பற்றி பேசுவது பிடிக்கவில்லை.. அவன் பேசலாம்.. அவன் நினைக்கலாம்… ஆனால் வேறாருக்கும் அந்த உரிமை இல்லை.. ஏனெனில் முரளி பேசியதிலேயே அவன் மனது கடுப்பாகி போயிருந்தது..

ஜப்பான் செல்லமாட்டேன் என்று பார்த்திபன் பிடிவாதம் செய்கையில் “ஏன்டா என்ன கருமாந்திரம் காதல்டா இது.. சும்மா… இங்க பாரு பார்த்தி லைப்ல எது முக்கியமோ அது தான்  செய்யணும்… லவ்வாம் லவ்வு.. என்ன பெரிய லவ்வு.. இந்த தன்யாவ லவ் பண்றதுல அப்படி என்னடா உனக்கு பெனிபிட்..” என்று முரளி கேட்க,

பார்த்திபனோ ஏகத்துக்கும் முறைத்து நின்றான்..

“டேய்… என்ன முறைப்பு.. இல்ல தெரியாம தான் கேட்கிறேன்.. அதெப்புடி தான் பார்த்து பழகினா உடனே லவ்வுன்னு ஆகிடுமா.. நீ வேணா பாரு.. அவங்கப்பா அவளுக்கு பாரின் மாப்பிள்ளை பார்ப்பார்.. இவளும் என்னை மன்னிச்சிடு பார்த்தின்னு சொல்லிட்டு டாட்டா காட்ட போறா ..” என,

“ஸ்டாப் இட்… இதுக்கு மேல நீ தன்யா பத்தியோ, இல்ல என்னோட லவ் பத்தியோ பேசினா நல்லாருக்காது முரளி..” என்று குரலை உயர்த்தினான் பார்த்திபன்.

“ஓ…!!!! அப்புறம்… அடேங்கப்பா தெய்வீக காதல்…” என்றவன் சத்தமாய் சிரிக்க,

“முரளி..!!!!” என்று பல்லைக் கடித்தான் பார்த்திபன்..

“நீ உறுப்பட மாட்டன்னு எனக்கு எப்பவோ தெரியும்டா.. இதுல உனக்கு கூட்டு அவ வேற.. ரெண்டும் சேர்ந்து ஒண்ணுமில்லாம தான்  போக போறீங்க..” என்றவன் “வாய்ப்பு கிடைக்கிறப்போ யூஸ் பண்ணிக்கணும்.. இமொசனலி வீக்கா இருக்கக் கூடாது..” என,

“டேய் போதும்.. உன்னைபோல என்னால பணம் பணம்னு அலைய முடியாது.. என் வாழ்க்கைக்கு என்ன செய்யனும்னு நீ சொல்லவேண்டியது இல்லை..” என்றான் பதிலுக்கு..

“அப்போ.. இந்த வீட்ட விட்டு போயிடு…” என்றான் முரளி தயையே இல்லாது..

இது ஒருவிசயம் முரளிக்கு சாதகமான ஒன்று. அந்த வீடு முரளிக்கு சொந்தமாய் இருந்தது. காரணம் அதன் மீதிருந்த கடனை முரளிதான் அடைத்தான். இவர்களின் அப்பா சுந்தரம் ஒரு விபத்தில் சிக்க, அவர் சேர்த்து வைத்திருந்தது, ஈஸ்வரியின் நகை என்று எல்லாமே அவரின் வைத்தியத்திற்கு தான் செலவானது..

அதுவும் கூட போதவில்லை என்ற நிலைதான். கிட்டத்தட்ட கடைசி நிலைக்கு சென்றுவந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

பார்த்திபன் அப்போது கல்லூரி இறுதியாண்டில் இருந்தான். வீட்டின் மொத்த பொறுப்பும் முரளி மீது அப்போது விழ, ஈஸ்வரியோ “டேய் முரளி ஏதாவது செஞ்சு அப்பாவ காப்பாதிடனும்..” என,

“ம்மா வீடு தான் இப்போ இருக்கு.. அதை உடனே விக்கவும் முடியாது.. அடமானம் தான் வைக்கணும்..” என்றான் அவனும்..

“செய்யேன்டா.. வித்தாலும் சரி.. அடமானம் வச்சாலும் சரி.. எதுவா இருந்தாலும் செய்யேன்டா…” என்று ஈஸ்வரி சம்மதம் சொல்லிட,

பார்த்திபனோ “அப்பா ட்ரீட்மென்ட்க்கு இன்னமும்  அஞ்சோ இல்லை ஆறு லட்சமோ இருந்தா போதும்.. வீட்டை வித்துடலாம்.. அடமானம் வச்சு அடுத்து நம்ம திருப்ப முடியலைன்னா?? வித்துட்டு ஒரு சின்ன ப்ளாட் கூட வாங்கிடலாம்.. கடனும் இருக்காது.. அப்பாவுக்கும் சரியாகிடும்.. அடுத்து நானும் வேலைக்கு போயிட்டா இதே போல இன்னொரு வீடு வாங்குவோம்..” என்றான் தன் பங்கிற்கு.

ஆனால் முரளியின் முரண்பாடான மூளை இதை சம்மதிக்குமா என்ன??

“டேய்.. நீ எல்லாம் சொல்லி நான் கேட்கனும்னு இல்லை.. ஒழுங்கா வந்து கையெழுத்து போட சொன்னா போட்டு போ.. என்னவோ இவன் படிச்சதும் வேலைக்கு போய் உடனே கார் பங்களான்னு வாங்குற மாதிரி.. இப்போ முக்கியம் அப்பா ட்ரீட்மென்ட்..” என்றான் ஈஸ்வரியின் முன்பு..

அவருக்கோ கணவர் எப்படியாவது சரியாகி வந்தால் போதும் என்ற நிலை..

“பார்த்தி.. அண்ணன் சொல்றதை கேளேன்டா..” என, அந்த சூழலில் அவனால் அதற்குமேல் எதுவும் சொல்ல முடியவில்லை..

முரளி யாரிடம் என்ன சொல்லி வீடு பத்திரம் எல்லாம் அடமானம் வைத்தானோ, பார்த்திபனிடமும் கையெழுத்து வாங்கினான் தான்.. கிட்டதட்ட எட்டு லட்சம் வரைக்கும் கைக்கு வர, அதில் முக்கால்வாசிக்கும் மேலே மருத்துவமனை செலவு ஆனது..

சுந்தரம் அதன் பின்னே தான் தேற, கையில் இருந்த மீத பணம் அவரின் மருந்து மாத்திரைகள் என்று செலவாகி, ஒருவழியாய் ஓரளவேனும் அவரால் பழைய படி நடமாட முடிந்தது. முன்னளவு இல்லையென்றாலும் இப்போது ஆரோக்கியமாய் தான் இருந்தார்.

ஈஸ்வரிக்கு அதன்பின்னே தான் மூச்சு விடவே முடிந்தது. பார்த்திபனுக்கு நினைத்தது போல் படித்ததும் வேலை கிடைக்கவில்லை. வீட்டின் அடமானத்திற்கோ மாதமாதம் வட்டி முரளி கட்ட, சுந்தரம் தான்

“ஏன் முரளி உன் ஆபிஸ்ல லோன் போடமுடியாதா??” என்றார்..

“போடலாம் ப்பா.. பட்.. ஏற்கனவே இப்போ மாசமாசம் வட்டி கட்றேன்.. லோன் வாங்கினா இந்த கடன் சரியாகிடும்தான்.. அப்போவும் கூட என் சாலரில இருந்து பாதி வரைக்கும் எடுத்துப்பான்.. அதான் யோசிக்கிறேன்..” என்றவன்,

“இப்போ பார்த்தி வேலைல இருந்தா கூட எனக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும்..” என்று தம்பியை நோக்கினான்..

பார்த்திபனுக்கு கோபமாய் வந்தது அப்போது.. வீட்டை அடமானம் வைத்திருக்கவே வேண்டியதில்லை.. அப்போதே முரளி அவனின் ஆபீஸில் லோன் போட்டிருக்கலாம்.. அதை இவன் சொல்லமுடியாது ஆகையால் தான் வீட்டை விற்றுவிடலாம் என்றான். அதையும் கேட்கவில்லை.. இப்போது தன்னையே இழுக்கிறான் என்று கோபம் வர,

“நானா அடமானம் வைன்னு சொன்னேன்..” என்றான் இவன்..

“பார்த்தீங்களாப்பா… என்ன சொல்றான்னு…. என்ன ஆனாலும் இந்த வீடு நம்ம கை விட்டு போயிட கூடாதுன்னு நான் நினைச்சா..” என்று இழுத்தவன்,

“ப்பா.. இந்த வீடு திருப்புறது என்னோட பொறுப்பு.. ஆனா இந்த வீட்டை எனக்கு எழுதி கொடுக்க முடியுமா?? அப்படின்னா சொல்லுங்க நான் லோன் எடுத்தோ இல்லை எப்படியோ திருப்பிடறேன்..” என, அடுத்த இரண்டு நாட்களும் வீட்டில் அப்படியொரு சண்டை பார்த்திபன்..

“அப்போ நான் இந்த வீட்ல பொறக்கலையா?? அதென்னடா நீயா கடன் வாங்கனும்னு வாங்குவ.. இப்போ எனக்கு கொடுங்க நானே அடைச்சிக்கிறேன்னு சொல்லுவ.. ” என்று பார்த்திபன் முரளியிடம் எகிற, பெற்றவர்கள் இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் முரளி தானே இப்போது எல்லாம் பார்ப்பது.. ஆகையால் அவனையும் மீறி எதுவும் செய்ய முடியாத நிலை..

முரளியோ மிக மிக கூலாக “இங்க பாரு பார்த்தி… ஒண்ணு குடும்ப பொறுப்ப நீ எதுக்கோ, நான் கடனுக்கு வட்டி கட்டியோ இல்லை லோன் போட்டோ எதுவோ செய்றேன்.. ஒரே நேரத்துல ரெண்டையும் என்னால சுமக்க முடியாது..” என்றான்.

உண்மையும் அதுதான்.. இதில் முரளிக்கு பெண் வேறு பார்த்துகொண்டு இருந்தனர். ஏற்கனவே மிக மிக தாமதம் தான்.. ஜாதகத்தில் தோஷம் அது இதென்று இருக்க, முப்பத்தியிரண்டு வயதிற்கு மேல்தான் செய்யவேண்டும் என்றுவிட்டனர்.. ஆக இப்போதுதான் பார்க்கவே ஆரம்பிக்க, அந்த நேரத்தில் அவன் சொல்வதும் சரியாய் தான் இருந்தது ஈஸ்வரிக்கு..

“ஏங்க அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை அமையுறப்போ அவன் கடன் கட்டுவானா இல்லை கல்யாணம்  பொண்டாட்டி குழந்தைன்னு வாழ நினைப்பானா??” என்று ஆரம்பிக்க, அங்கே தொட்டு இங்கே தொட்டு, இந்த வீடு முரளிக்கு என்றானது..

பார்த்திபனுக்கு இதில் உடன்பாடே இல்லைதான். அவனிடம் மட்டும் ஒரு வேலை இருந்தால், நிச்சயம் இதெல்லாம் நடந்தேயிருக்காது.. மனதில் அந்த நேரத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை வேறு..

‘ச்சே என்னால் எதுவும் முடியவில்லையே..’ என்று..

பெற்றோர்கள் சமாதானம் செய்ய, பார்த்திபன் ஒன்றும் சொன்னானில்லை.. சூழலும் அப்படியே இருந்தது..

“டேய் அவன் உன் அண்ணன்டா.. உன்ன விட்டுடுவானா??” என்று ஈஸ்வரி சமாதானம் செய்தார்.

ஆனால் முரளி பற்றி பார்த்திபன் நன்கு அறிவானே,

“அவன் உங்களை விட்டுடாம இருந்தா சரி.. ஏனா ரொம்ப நம்புறீங்க..” என்றவன் அடுத்து மும்முரமாய் வேலை தேடியும் எதுவும் அவனுக்கு சரியாய் ஒட்டவில்லை..

இதற்கு நடுவில், முரளிக்கும் ஹேமாவிற்கும் திருமணம் முடிந்தது.. வீடும் அவனின் பெயரில் வந்துவிட, ஹேமாவோ நிறைய சொத்துக்களோடு தான் வந்தாள்.. திருமணத்திற்கு ஏகப்பட்ட செலவுகள் வேறு செய்தான் முரளி..

‘இவனுக்கு இவ்வளோ பணம் ஏது??’ என்று அனைவரும் நினைத்தாலும் கேள்வி கேட்க முடியாத நிலை..

அந்த நிலையினால் தான் முரளி, பார்த்திபனிடம் தான் சொல்வதை கேட்கவில்லை என்றால் வீட்டை விட்டு போ என்றது..

பார்த்திபனும் கிளம்பிட்டான் தான்.. ஆனால் அப்பாவும் அம்மாவும் மன்றாடுகையில் அவனால் என்ன செய்ய முடியும்..

“டேய் பார்த்தி என்னடா…” என்று ஈஸ்வரி கண்ணீர் வடிக்க,

“ம்மா அவனுக்கு ஜப்பான்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன்.. போக சொல்லு.. ஒரே வருசத்துல வீடு வாசல்னு செட்டில் ஆகலாம்.. அதைவிட்டு இந்த வீடு விட்டு போனா நடு தெருவுல தான் நிக்கணும்..” என்று முரளி சொல்ல,

சுந்தரமோ “பார்த்தி ஏன்டா  வீட்ல இப்படி கலாட்ட பண்ற..”  என்று சொல்ல, பார்த்திபனுக்கு அப்படியே முட்டிக்கொள்வோம் என்று வந்தது..

அனைத்திற்கும் மேலாய் ஈஸ்வரி “நீ மட்டும் வீட்ட விட்டு போன, நான் எதாவது செஞ்சுப்பேன்..” என்றுசொல்ல, அவ்வளோதான் அனைத்தும் அத்தோடு முடிந்தது..

பார்த்திபனின் ஒரேயொரு நம்பிக்கை தன்யா தான்..

அவளும் “உன் வீட்ல சொல்றதை கேளு..” என, நொந்து போனான்..

காதல் அப்படியே இருந்தது.. ஆனால் கசப்புகளும் அப்படியே தான் இருந்தது.. ஆனாலும் கூட அவனால் யார் தன்யாவை பற்றி பேசினாலும் பொறுத்திட முடிவதில்லை.. பிரிவின் காரணம் எதுவாக இருந்தாலும் அது அவர்களுக்கு மட்டுமேயானது..

அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவதை அவன் அனுமதியான்..

மனது பழையதை எல்லாம் அசைபோட்டு திரும்பி நிகழ்காலம் வர, லேகா அங்கில்லை.. கிளம்பியிருந்தாள்.. நாளை விடிந்தால் திரும்ப வழக்கமான வேலை என்று நாட்கள் கழியும்.. இரண்டு நாட்கள் முன்னே முழு போதையில் தன்யாவோடு பேசியது..

அதன் பின் ஒன்றுமில்லை.. அன்று என்ன பேசினான் என்பதுகூட அவனுக்கு இப்போது நினைவில் இல்லை.. இப்போதோ அவன் மிக மிக தெளிவாய் இருக்க, தன்யாவோடு பேசவேண்டும் போலிருந்தது..

‘குடிசிருந்தாலும் அவளோட பேசணும் தோணுது தெளிவாருந்தாலும் அவளோட பேசணும் தோணுது..’ என்று எண்ணியவன், அழைப்பு விடுத்தான்..

கால நேரமெல்லாம் பார்ப்பதேயில்லை..

வழக்கம் போல் தன்யா போனை எடுக்காது போக, திரும்ப அழைத்தான். அவளுக்கோ அழைப்பது இவனென்று தெரியவும், முதலில் பட்டென்று ஒரு சந்தோசம் முளைத்தாலும், அடுத்த நொடி திடுக்கேன்றும் ஆனது.

காரணம் அவளும் காஞ்சனாவும் இப்போது பார்த்திபனின் குடும்பத்தினரோடு தான் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

முரளியும் அங்கேதான் இருந்தான்..

அவனில்லை என்றிருந்தால் கூட தன்யா எடுத்து பேசியிருப்பாள். ஆனால் இந்த முரளியின் பார்வையில் எதுவும் தப்பாதே..

“என்ன தன்யா.. எடுத்து பேசேன்.. யார் போன்ல.. கால் வரவும் இவ்வளோ டென்சன் ஆகுது உன் பேஸ்..” என்றான் இலகுபோல்..

அவ்வளோதான்.. அடுத்து எல்லாருமே யார் யார் என்று கேட்க “இல்ல.. ஆபிஸ் கால்.. அதான்..” என்றாள் வேகமாய் சமாளித்து..

“ஹ்ம்ம் வீக்கென்ட்ல கூட டைம் ஸ்லாட் போட்டா எப்படி.. நான்தான் லீவ் போடுன்னு சொன்னேன் இவளை.. இப்போ இப்படி விடாம கூப்பிட்டா என்ன அர்த்தம்..” என்ற காஞ்சனா,

“எடுத்து என்னனு கேளு..” என, வேகமாய் அவளின் போனை எடுத்துக்கொண்டு கொஞ்சம் தள்ளிப் போனாள்..

அதற்குள்ளே பார்த்திபன் பொறுமை இழந்து திரும்ப அழைக்க “ஹ.. ஹலோ..” என்றாள் வேகமாய்..

“ஏய் எங்கடி போன.. போன் எடுக்க இவ்வளோ நேரமா??” என்று பார்த்திபன் கத்த,

“உன்னை யார் கால் பண்ண சொன்னா??!!” என்றாள் இவளும் கடுப்போடு..

அவளின் பதற்றம் அவளுக்கு.. அவனுக்கென்ன அங்கே கேள்வி கேட்க யாருமில்லை.. ஆனால் இங்கே அப்படியில்லையே..

“யார் சொல்லணும்.. நான் அப்படித்தான் செய்வேன்.. நீ எடுத்து பேசத்தான் செய்யணும். இனிமே டெய்லி கூப்பிடுவேன்.. நீ என்கூட பேசுற..” என,

“ஒரு ஹால்ப் ஹவர் கழிச்சு கால் பண்றியா…” என்றாள் தன்யா மெதுவாய்..

‘இப்போ எதுக்கு திடீர்னு ஹஸ்கி வாய்ஸ்ல பேசுறா..’ என்று யோசித்தவன், “என்ன எங்க வீட்ல இருக்கியா??!!” என்றான் கண்டறிந்து..

“ம்ம் ஆமா…”

“அங்க எதுக்கு டி போன.. நானே இல்லை..”

“ம்ம்ச் பேபிக்கு க்ளே ப்ராஜெக்ட்.. ஹேமாக்கா என்னை செய்ய சொல்லி கூப்பிட்டாங்க..” என,

“ஓ..!! உன் மண்டைக்குள்ள இருக்கிறதை எடுத்து என்ன ப்ராஜெக்ட் செய்ய போற??” என்றான் நக்கலாய்..

“ம்ம்ச் பார்த்தி.. நான் அப்புறம் பேசுறேன்..” என்றாள் முகத்தில் ஒன்றும் காட்டாது..

முரளியின் பார்வை எல்லாம் இவள் மீதுதான் இருந்தது. அவன் பார்க்கும் பார்வையே கண்டுகொண்டானோ என்று இருக்க,

“என்ன என் அண்ணன்காரன் இருக்கானா??” என்றான் பார்த்திபன்..

“ம்ம் ஆமா..”

“சரி நீ போன் வை..” என்றவன் அடுத்து ஒரு ஐந்து நிமிடத்தில் ஈஸ்வரிக்கு அழைத்தான்.

இந்த ஒரு மாதத்தில் அவனாய் அழைக்கும் அழைப்பு இது.. அதாவது யாரும் எதுவும் சொல்லாது, வாட்ஸ் அப்பிலோ, இல்லை வேறு செயலிகள் மூலமோ இவர்கள் யாரும் அழைப்பு விடுக்காது அவனே அழைத்தது இதுதான் முதல் முறை..

ஈஸ்வரியோ “டேய் பார்த்தி..” என்று சந்தோசிக்க,

“என்னம்மா இப்போ ஹேப்பியா???” என்றான் இவனும் சந்தோசமாய்..

முரளியின் பார்வையில் ஒரு சிறு கூர்மை, பின் அப்படியே ஒரு யோசனை, எல்லாம் தன்யா கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.. அவனோ எதுவுமே தெரியாதது போல் தம்பியின் அழைப்பு என்ற பாவனையில் முகத்தினில் சிரிப்பை உதிர்க்க,

‘உலக நடிப்புடா சாமி..’ என்றுதான் சொல்லவேண்டும் போலிருந்தது அவளுக்கு..

அப்பா அம்மா, ஹேமா, என்று அனைவரும் பேச, முரளியின் எட்டு வயது மகளும் அவளின் சிதப்பவோடு பேச, “டேய் நீயும் பேசு டா..” என்று முரளியிடம் போனை கொடுத்தார் ஈஸ்வரி..

முரளி வாங்கியவன் “என்னடா எப்படி இருக்க??” என்று நல்லவிதமாகவே பேச, யாருக்கும் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.. அடுத்து போன் காஞ்சனாவின் கைக்கு வர,

அவரோ பேசிவிட்டு “இதோ தன்யா இருக்கா பேசுறியா??” என்றார் மறவாது..

‘இதுக்கு தானே சித்தி காத்திருக்கேன்..’ என்றெண்ணியவன் “கொடுங்க சித்தி..” என, தன்யாவின் பார்வையோ நொடிப்பொழுதில் முரளியை தொட்டு மீள,

“ஹ.. ஹலோ..” என்றாள் கொஞ்சம் திணறி..

“என்ன டி தனியா தூளு… இனியாவது ஒழுங்கா என்கிட்டே பேசுவியா??” என்று பார்த்திபனின் குரலில் உச்ச பட்ச சந்தோசம் தெறிக்க, அது தன் முகதினிலும் தெரிந்துவிடாத வண்ணம் காட்டிக்கொள்ள பெரும்பாடு பட்டுப்போனால் தன்யா..

“ம்ம்.. ந.. நல்லாருக்கேன்..” என்று சம்பந்தமே இல்லாது பதில் சொல்ல,

“ஏய் நான் என்ன சொல்றேன்..” என்று கடிந்தவன் “ஓ.. ஆக்டிங்கா…” என்று இழுத்து,

“சரி சரி.. சீக்கிரம் ஒரு கிஸ் கொடு..” என,

“அ..!! என்னது…” என்றாள் அதிர்ந்து..

அவளையும் அறியாது கொஞ்சம் சத்தம் கூடிவிட, ஈஸ்வரியோ “என்னாச்சாம்??!!!” என்றார் மகனுக்கு என்னவோ என்று..

“இல்லத்தை.. அங்க சைடுல யார் கூடவோ பேசுறான்..” என்று தன்யா சமாளிக்க,

“சைடுல இல்லடி.. என் சைட்டு கூட பேசுறேன்..” என்றான் வம்பு வளர்த்து..

“ஓ.. ஓகே பார்த்தி.. வைச்சுடுறேன்…” என்று வேகமாய் அழைப்பை துண்டித்துவிட்டாள்..

அதற்குமேல் தன்யாவால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. அவன் வேண்டுமென்றே வம்பு வேறு செய்கிறான் எனவும் வைத்துவிட, பார்த்திபனுக்கோ உற்சாகமாய் இருந்தது..

‘பாரு.. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருமாதிரி உனக்கு லவ் டார்ச்சர் பண்ணல நான் பார்த்திபன் இல்ல டி.. போ போ சொன்னல.. இனி பாரு எப்போடா வருவன்னு கேட்க வைக்கிறேன்..’ என்று எண்ணிக்கொண்டான்..

முரளியோ இவள் பேசி முடிக்கும் வரைக்கும் காத்திருந்துவிட்டு “சித்தி.. தன்யாக்கும் நெருக்கி இருபத்தியஞ்சு ஆகுதே.. ஏன் இன்னும் வரன் பார்க்கல..” என்று ஆரம்பிக்க,

“அடப்பாவி…” என்றுதான் பார்த்தாள் தன்யா..

முன்னெல்லாம் முரளியோடும் இயல்பாய் தான் பழகுவாள்.. ஆனால் அவனின் இயல்பு அறிந்த பின்னே ஒரு ஒதுக்கம்.. பிறகு, பார்த்திபனை அவன் நடத்தும் விதத்தில் அவன் மீது நல்லெண்ணமே இல்லை.. அதன் பின் இப்போதோ சுத்தம் கேட்கவேண்டியதே இல்லை..

ஒரு மரியாதைக்காக வாய் மூடி இருக்கிறாள் அவ்வளவே..

ஆனால் அவளின் திருமண பேச்சை முரளி எடுக்க, நிஜமாகவே அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.. அது அவளின் முகத்திலேயே தெரிய, ஹேமாவோ  “ஹே.. தன்யா அவர் சும்மா கேட்டுட்டார்.. தப்பா நினைச்சுக்காத..” என,

‘அச்சோ..’ என்று பார்த்து வைத்தாள்..

காஞ்சனாவோ “பார்க்கணும் முரளி…” என, தன்யாவிற்கு புரிந்தது நிச்சயம் இவ்விசயம் அவளின் அப்பா அம்மாவிற்கும் போகும் என்று..

                         

                   

   

                           

 

             

 

Advertisement