Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 4

“ம்மா அப்படி எல்லாம் இல்லம்மா…” என்று சலிப்பாய் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள் தன்யா.

“பின்ன அத்தை சொல்றா.. நீ சரியா சாப்பிடுறது இல்லன்னு.. பார்த்தாலே தெரியுதே இப்படி லீனா இருக்க…” என்று தன்யாவின் அம்மா சுகந்தி கேட்க,

“ம்மா அதெல்லாம் இல்லம்மா…” என்றாள் பல்லைக் கடித்து.

“நீ இல்லன்னு சொன்னா.. எங்களுக்கு கண்ணு தெரியாதா…” என்று வீடியோ காலில் மேலே மேலே பேசிக்கொண்டு இருந்தார் சுகந்தி.

தன்யா அமைதியாய் இருக்க, “உனக்கு எதுவும் பிராப்ளமா தன்யா??” என்ற சுகந்தியின் குரல் அவளை திடுக்கிட வைத்தது..

‘எதுவும் தெரிந்திருக்குமோ…??’ என்ற திடுக்கிடல் பார்வை அவள் பார்க்க,

“என்ன தன்யா?? உன் முகமே சரியில்லை….” என்றார் சுகந்தியும்..

“நோ மாம்… ஐம் ஆல்ரைட்…” என்று தன்யா தன்னை திடப்படுத்திக்கொண்டு சொல்வதற்குள் அவளுள் ஒரு போர்களமே ஆகிப்போனது..

“ஆர் யூ சியூர்???”

“எஸ் மாம்…” என்றாள் அலைபேசி திரையில் நேருக்கு நேராய் அம்மாவை பார்த்து.

“ஹ்ம்ம் ஓகே தன்யா… ஹெல்த் பார்த்துக்கோ.. ரொம்ப வேலை வேலைன்னு இழுத்துக்காத..” என்றவர் பின் என்ன நினைத்தாரோ “இங்க கொஞ்ச நாள் வந்து இருக்கியா தன்யா??” என்றார்.

தன்யாவிற்கு, சுகந்தி இப்படி கேட்டதும் பட்டென்று சிரிப்பு வந்திட,

“என்ன தன்யா??!!!” என்றார் சுகந்தியும்..

“அப்போ கூட.. நீயும் அப்பாவும் இங்க வர்ற ஐடியால இல்லை அப்படிதானே…” என,

“ம்ம்ச் தன்யா.. யாருக்காக நாங்க இவ்வளோ மெனக்கேடுறோம்… உனக்கு ஒரு நல்ல லைப் செட்டில் பண்ணி கொடுக்கணும்னு தானே.. அது புரியாதா உனக்கு…??”

“நல்லா புரிஞ்சதும்மா…” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.. அதற்குமேல் அவளுக்கு சுகந்தியோடு பேச பிடிக்கவில்லை.

இது எப்போதும் நடப்பதும் கூட.. சுகந்தி இவளை ஒருமுறை அங்கே வா என்பார்.. இவளோ ஒருமுறையாவது இங்கே வரலாமே என்பாள்.. சுகந்தியோ உனக்காகத்தான் சம்பாதிக்கிறோம் என்பார்.. இருவருக்கும் முட்டும். பணம் பகட்டு நகை நட்டு எல்லாம் அளவுக்கு மீறி இருந்து யார் என்ன செய்ய முடியும். இப்போது அவர்கள் இங்கே வந்தால் கூட செழிப்பானதொரு வாழ்வு தான் இவர்களுக்கு.. அப்படியொன்றும் ஒன்றுமேயில்லாத நிலை எல்லாம் இல்லவே இல்லை.

இப்போது தன்யாவும் சம்பாதிக்கின்றாள்.. நல்ல வசதியான வாழ்வுதான்.. எல்லாம் தாண்டி அப்பா அம்மாவோடு இல்லை என்ற எண்ணம் அவ்வப்போது வந்துபோகும்.. எப்போதும் அதை பெரிதாய் நினைக்கமாட்டாள். நினைத்தால் அவளால் ஒருநிலையில் இருக்க முடியாது.. துபாய் பிடிக்கவில்லை,  நானாகத்தானே இங்கே இருக்க முடிவெடுத்தேன் என்று எண்ணிக்கொள்வாள்.

ஆனால் இப்போதோ.. பார்த்தியோடானா இந்த பிரிவு அவளை நிறைய நிறைய போட்டுப்பார்த்தது.. சிறு விசயங்களுகுக் கூட அவளின் மனது ஏங்கத் தொடங்கியது. மனது பார்த்திபனை எத்தனை தேடியதோ அத்தனை பெற்றோரையும் தேடியது. ஆனால் இருவருமே அருகில் இல்லை.

பெற்றோர்கள் இவளை புரிந்துகொள்ளவில்லை. பார்த்திபனோடான புரிதலை இவளை முறித்துக்கொண்டாள்.  காஞ்சனா அன்பாய் இருப்பார்தான்.. அக்கறையாய் பேசுவார் எல்லாம் பார்த்து பார்த்து செய்வார் தான்.. ஆனால் அதில் எல்லாமே ‘என் பொறுப்புள உன்னை விட்டிருக்காங்க.. சரியா நான் எல்லாம் செய்யணும்..’ என்ற கவனம் நிறையவே இருக்கும்…

யார் இருந்தாலும், எப்படி பார்த்துக்கொண்டாலும், அது அப்பா அம்மா உடனிருப்பது போல் ஆகுமா என்ன??

இல்லைதானே..

பார்த்திபனோடு காதல் என்றானபின், தன்யாவிற்கு இவ்வுணர்வுகள் எல்லாம் மறந்தே போனது.. எனக்காக இவன் இருக்கிறான் என்ற எண்ணம் தலைத்தோங்க சந்தோசமாய் சுற்றிக்கொண்டு இருந்தாள் இந்த மூன்றாண்டுகளும்..  வாழ்வில் பொக்கிசமாய் பொதிந்த நாட்கள் அவை..

ஆனால் அந்த பொக்கிசத்திற்கு முற்றுபுள்ளி வைத்ததும் அவள்தானே.. போதும் என்று.. இனி வேண்டாம் என்று..    நினைக்க நினைக்க இப்போதோ தன்யாவிற்கு மனது இன்னமும் காந்தியது..

தன்னிலையை எண்ணி சில நேரம் அவளுக்கு சிரிப்பு கூட வந்தது.. எல்லாமே தானே ஏற்படுத்திக்கொண்டது தானே. ஆனால் இப்போது வலிக்கிறது என்றால்??

யார் என்ன சொல்ல முடியுமா…

அவள் மட்டுமே அவ்வலியை தாங்கிட வேண்டும்.. ஆகமொத்தம் தனக்கு யாருமே இல்லையென்ற நிலையில் அவள் மனம் நின்று போனது..

பார்த்திபன் ஜப்பான் போயும் கூட இதோ ஒரு மாதம் முடியப்போகிறது.. ஆனால் எதுவுமே மாறியதாய் இல்லை.. அங்கே சென்றவனோ ஒருமுறை கூட அழைக்கவேயில்லை.. அழைப்பானா என்று மனது எதிர்பார்க்க, அழைத்திடுவானோ என்றும் எண்ணியது..

பின்னே அவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் என்ன பதில் சொல்வது?? எந்த பதிலும் அவளிடம் இல்லாது இருக்கும்போது..

ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதிய எண்ணில் இருந்து அழைப்புகள் ஏதேனும் வந்தால், அது பார்த்திபனாய் இருக்குமோ என்ற ஆவலும், ஒரு நடுக்கமும் அவளும் உள்ளே ஓடுவது நிஜமே….

ஒருவித தவிப்பும் கூட..

அவனாய் இருக்கமாட்டானா என்றும்… அவனாய்  இருந்திடுவானோ என்றும்…

தன்யாவின் இத்தனை தவிப்பிற்கும் காரணமானவனோ ஜப்பானில் லேகாவோடு காரில் பயணித்துக்கொண்டு இருந்தான்.

அவனின் உடையிலும் உருவ அமைப்பிலும் கூட நிறைய நிறைய மாற்றங்கள் இருந்தது. அங்கிருந்து இங்கு வந்த பார்த்திபன் இல்லை இவன். நிறைய மாறியிருந்தான்.. இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த இளைஞன் ஒருவன் வெளிநாடு போனான் என்றால் அவனில் எப்படியான மாற்றங்கள் வருமோ அதற்கு பார்த்திபனும் தப்பவில்லை.. சொல்லப்போனால் லேகா மாற்றியிருந்தாள்..

‘உனக்கு எப்படி தோணுதோ அப்படி பண்ணு பார்த்தி…’ என்று சொல்லி சொல்லியே அவனை ஒருவழி படுத்தியிருந்தாள்…

இப்போது கூட காரினை அவள் செலுத்த, பார்த்திபன் அமைதியாய் வெளியே பார்வையை பதித்திருந்தான்.. இன்றைய பார்ட்டிக்கு வர அவனுக்கு அப்படியொன்றும் இஷ்டமில்லை. ஆனால் லேகா வற்புறுத்தினாள். இந்த ஒரு மாதத்தில் இருவருக்கும் இடையில் நல்லதொரு நட்பு இருந்தது..

பொதுவான பேச்சுக்கள் போய், இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் அவர்களின் வாழ்வு, இதெல்லாம் பேச ஆரம்பிக்க, சிறிதொரு நாளிலேயே லேகா சொன்னது இது தான்,

“பரவால்ல பார்த்தி நீ முரளி மாமா போல இல்லை….” என்றதுதான்..

இது ஒன்றே போதாதா.. பார்த்திபனுக்கு லேகாவின் மீது இன்னும் அபிப்ராயம் கூட.. பதில் எதுவும் சொல்லவில்லை என்றாலும் மெல்லமாய் சிரித்துக்கொண்டான்.

வேறு வேறு வீடு… வீடு மட்டுமே தான் வேறு.. ஆனால் இருவரும் சேர்ந்து நேரம் கழிப்பது என்னவோ நாளில் முக்கால்வாசி ஒன்றாய் தான். பார்த்திபனுக்கு இப்போதும் கூட லேகாவை நிறைய புரியவில்லை தான். ஆனால் கேட்கவும் தோன்றவில்லை. அவள் எப்படி இருக்கிறாளோ அப்படியே பாவித்துக்கொண்டான்.

இப்போது கூட “வா பார்ட்டிக்கு போகலாம்…” என்று லேகா அழைக்க,

“ஐம் நாட் இன்ட்ரெஸ்டட் லேகா..” என்றான் இவனும்..

“பரவாயில்ல சும்மா வா..” என்று கொஞ்சம் கட்டாயப் படுத்த, ‘இது என்ன புது பழக்கம்..’ என்று பார்த்தான் பார்த்திபன்..

“என்ன பாக்குற.. இன்னிக்கு பார்டி ரொம்ப இம்பார்ட்டன்.. அதான் நீயும் வான்னு சொல்றேன்..”

“அப்படி என்ன ரொம்ம்ம்ம்ப இம்பார்டன்ட்..??” என்று கேட்டவனைப் பார்த்தவள்,

“ஹா ஹா தன்யாவை பார்ட்டிக்கு வர வைச்சு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் நினைச்சேன்… ம்ம்ச் போ…” என்று லேகா சோகமாய் சொல்வது போல் சொல்ல,

“லேகா…” என்று பல்லைக் கடித்தான் பார்த்திபன்..

“ஓகே ஓகே கூல் கூல்…”

“எத்தனை டைம் சொல்லிருக்கேன்.. நீ தன்யா பத்தி பேசாதன்னு.. இது நீ பிரான்க் பண்ற விஷயமில்லை…” என்று பார்த்திபன் விரல் நீட்டி மிரட்டவும் செய்தான்..

இவனே தான் தன்யா பற்றி லேகாவிடம் சொன்னது. அதிலிருந்து அவ்வப்போது கிண்டல் கேலியாய் ஏதாவது சொல்வாள் தான். சில நேரம் விட்டுவிடுவான்.. பல நேரம் இப்படிதான்.. என்னவோ தன்யா விசயத்தை எப்போதுமே கூட பார்த்திபனால் விளையாட்டாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

“ஓகே ஓகே.. சாரி.. இனிமே பேசமாட்டேன்.. உன் ஆளு பத்தி..” என்று லேகா சொல்லும்போதே அவனின் பார்வை இன்னும் கோபமாய் மாற,

“ஓ.. உன் ஆளு இல்லையோ.. உன்னதான் வேணாம் சொல்லிட்டாளோ..” என்றபடி அட்டப்பார்வை பார்த்தாள் லேகா.. பார்த்திபனோ அங்கே இல்லவே இல்லை..

“ஹ்ம்ம் நகர்ந்துட்டானா.. சரியான பிடிவாதம்…” என்று சத்தமாய் சொல்லிக்கொண்டே அவனிருக்கும் இடம் வந்தவள்,

“நான் எதுவுமே இனிமே பேசமாட்டேன்.. ஓகே வா..” என்றாள் முன்னே நின்று..

“இது நீ இந்த கொஞ்ச நாள்ல ஐநூறு தடவைக்கு மேல சொல்லிட்ட…”

“ஓஹோ.. கவுன்டிங் வேறயா…” என்று பார்த்தவள் “சரி இதை விடு.. பார்ட்டிக்கு வா…” என,

“நான் தான் சொல்லிட்டேனே லேகா…” என்றான் எரிச்சலாய்..

“நீ சொன்னதை நான் அக்ஸப்ட் பண்ணலை பார்த்தி.. இன்னிக்கு பார்ட்டி கொஞ்சம் இல்லை ரொம்பவே ஸ்பெசல் சோ நீ வா…”

“அப்படி என்ன ஸ்பெஷல்…??”

“ஹ்ம்ம் இதை முன்னாடியே கேட்டிருக்கணும்…” என்றவள், “நம்ம கம்பனி CEO ஓட பெர்சனல் பிஎ அக்கியோ வர்றான்.. அதான் ஸ்பெஷல்…” என்றாள் பாவனையாய்..

ஆனால் பார்த்திபனோ யார் வந்தால் எனக்கென்ன, எவன் வந்தால் எனக்கென்ன என்ற ரீதியில் “சோ வாட் லேகா???” என,

“சோ…. வாட்டா?!!!!” என்றாள் இவள் முறைத்து..

“லீவ் இட் லேகா.. நீ போறதுன்னா போ.. பட் டோன்ட் கம்பல் மீ.. எனக்கு இந்த பார்ட்டீஸ் எல்லாம் பிடிக்காது..”

“நமக்கு பிடிக்குதோ இல்லையோ சில காண்டாக்ட்ஸ் நமக்கு கிடைக்கிறது நல்லது பார்த்தி.. நினைச்சது எல்லாம் நடக்கிறது இல்லை.. பட் நடக்குறத மனசில நினைச்சு ஏத்துக்கணும்.. இன்னிக்கு அக்கியோ பார்ட்டிக்கு வர்றது நம்ம லக்..

அவனைப் பிடிக்கிறது அவ்வளோ கஷ்டம்.. ஆனா இப்போ பார்ட்டில நம்ம அவனோட ஈசியா பேசலாம்..” என்று லேகா சொல்ல,

“அவனோட நான் பேசி என்னாகப் போகுது…” என்றார் அசட்டையாய்..

லேகாவோ ‘அடப்பாவி…’ என்று பார்க்க,  

“நீ போயிட்டு வா..” என்றான் திரும்ப..

“சரி உனக்கு இஷ்டமில்லான்னா விடு…” என்றவள், சிறிது நேரம் கழித்து தயாராகி அவனின் வீடு வந்தால் திரும்ப.

‘இப்போ என்ன??’ என்று பார்க்க, “சோ நீ நிஜமா வரலை…” என்றாள்..  

“எஸ்….”

“ஹ்ம்ம் இதேது முரளி மாமாவா இருந்திருந்தா எனக்கு முன்னாடி கிளம்பிருப்பாங்க.. காஸ்.. அவங்களுக்கு தெரியும்.. எது எது எப்போ யூஸ் பண்ணிக்கணும்னு..” என்று சரியாய் அவனின் ஈகோவில் தட்டினாள் லேகா.

“எஸ்.. நான் முரளி இல்லை.. சோ வரலை போதுமா…” என்று பார்த்திபன் கத்த,

“அதான் நீ இப்படி இருக்க…” என்றாள் எள்ளலாய்..

“லேகா…!!!!!”

“நீ என்ன கத்தினாலும் உண்மை தான் பார்த்தி.. லைப்ல சான்சஸ் கிடைக்கிறப்போ அதை சரியா கேட்ச் பண்ணிக்கணும்.. அதைவிட்டு நான் இப்படியேதான் இருப்பேன்னு இருந்தா, நீ நினைக்கிற எதுவுமே நடக்காது.. என்னவோ பண்ணு.. இதெல்லாம் பார்த்து தான் தன்யா…” என்று அவள் சொல்லும்போதே,

“போதும்.. இப்போ என்ன .. நான் பார்ட்டிக்கு வரணும்.. அதானே..” என்றவன், அறைக்குள் சென்று தயாராகி வந்தான்..

“கொஞ்சம் சிரியேன்…” என்றபடி தான் அழைத்துக்கொண்டு கிளம்பினாள், ஆனால் காரில் எறியவனோ அமைதியாகவே வர,

“பார்த்தி….” என்றாள் லேகா..

“ம்ம்…” என்றவன் திரும்பிப் பார்க்க,

“சாரி… உன்னை கிளப்புறதுக்காக தான் அப்படி சொன்னேன்..” என்றவளின் கவனம் எல்லாம் சாலையில் இருந்தது.

“ம்ம்ம் லீவ் இட்…” என்றவனின் மனதோ தன்யாவிடம் இருந்தது..

அவள் என்ன செய்கிறாளோ….?? எப்படி இருக்கிறாளோ?? இதே எண்ணம்.. இன்றைய தினம் காலையில் இருந்து மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.. எப்போதும் இருக்கும்.. இன்று அதிகமாய் இருந்தது.

அவளிடம் பேசவேண்டும் போல்… பார்த்தி என்ற அவளின் அழைப்பை கேட்கவேண்டும் போல்.. மெதுவாய் அவளின் கன்னம் தொட்டு வருடவேண்டும் போல்.. அதையும் விட மெதுவாய் அவளின் இதழில் கடிய வேண்டும் போல்…

இன்னும் எத்தனை எத்தனையோ….

அவனை போட்டு இம்சிக்கத் தொடங்கியது..

சொல்லப்போனால் இந்த இம்சையில் இருந்து மீட்டுக்கொள்ளவே பார்த்திபன் பார்ட்டிக்கு கிளம்பினான்..

ஆனால் எது எப்படியிருந்தாலும், நாம் எங்கே போனாலும்.. சுற்றி என்ன நடந்தாலும்… நம் மனம் என்பது நம்மோடு தானே இருக்கிறது.. அது தன் இருப்பை விடாது காட்டிக்கொண்டு இருக்க, பார்த்திபனுக்கு லேகாவிடம் பேசும் பேச்சு குறைந்து போனது.

ஒருவழியாய் பார்ட்டி நடக்கும் இடமும் வந்துவிட, அதன் பின் சிறிது நேரம் பார்த்திபன் தன் நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு வந்திருந்தவர்களோடு பேசும் கட்டாயம்.. வம்படியாக ஒரு புன்னகை செய்து அனைவரோடும் பேசிக்கொண்டு இருந்தான்..

முக்கால்வாசி இவனின் அலுவலகத்தில் இருப்பவர்கள் தான். சிலரி நன்கு பரிட்சியம் உண்டு. சிலரை பார்த்ததோடு சரி.. யார் என்னவென்று எல்லாம் தெரியாது. லேகாவை பார்த்தான்.. அவளோ அனைவரோடும் கலந்து கட்டி பேசிக்கொண்டு வந்துகொண்டு இருந்தால்..

அனைத்து இடத்திலும் அவளையே சார்ந்து இருக்ககூடாது என்று எண்ணியவன் அவனின் டீம் ஆட்களோடு நின்றுகொண்டான்..  அதன்பின் பேச்சு ஒருபுறம்… உணவு ஒருபுறம்… பின்னே பின்னே.. பார்ட்டி என்ற சொல்லுக்கு ஏற்ப மதுபானம் ஒருபுறம்..

பார்த்திபனுக்கு இப்பழக்கம் இல்லை..

லேகாவிற்கும் தெரியும்.. ஆக, மெதுவாய் வந்து சொல்லிவிட்டு போனாள்.. “ஜஸ்ட் கைல ஒரு கிளாஸ் மட்டும் வச்சிக்கோ.. ட்ரின்க் பண்றது, பண்ணாதது உன்னோட இஷ்டம்..” என்று..

‘இது வேறையா..’ என்று எண்ணியவன், சர்வர் கொண்டு வந்ததில் ஒன்றை எடுத்துக்கொள்ள, எத்தனை நேரம் தான் அதனை கையில் சும்மாவே வைத்திருப்பான்..

இதனை கவனித்த அவனின் டீம் பெண்ணொருத்தி “ஹேய் பார்த்தி யூ டோன்ட் ட்ரின்க்…” என்று கேட்க,

அவனால் ஆம் என்றும் சொல்ல முடியவில்லை இல்லை என்றும் சொல்ல முடியவில்லை..

‘என்னடா சொல்ல…’ என்று பார்த்தவன் “எஸ் ஐ டூ.. பட் திஸ் ஒன் இஸ் டிப்ரன்ட்..” என்று அவன் கையில் இருந்ததை காட்ட,

“ஓ…!! திஸ் இஸ் ஜாப்னீஸ் பேமஸ் லிக்கர்.. சில்ட் நிஹோன்சு கால்ட் ரெய்சு…” என்றாள் அப்பெண்ணும்..

‘என்ன கர்மமோ…’ என்றெண்ணியவன் பெயருக்காகவேணும் அதை வாயில் வைக்கவேண்டிய நிலை..

லேகாவை தான் அப்போதும் பார்த்தான். அவளோ, அவனைவிட கையில் பெரியதாய் வைத்திருந்தாள். ‘விளங்கிடும்…’ என்று நினைக்க ‘அது அவளோட இஷ்டம்…’ என்றது மனது..

‘சரிதான்…’ என்று தன் கையில் இருந்ததை பருகியவனுக்கு முதலில் குமட்டியது.. பின் என்னவோ அடுத்து அடுத்து சிப் சிப்பாய் உள்ளே போக போக, அவன் எடுத்த குவளைகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போனது.. திரும்ப தன்யாவின் நினைவுகள் மேலே எழுந்து வந்தது..

அங்கே பார்ட்டியில் இருக்கும் பெண்கள் எல்லாம் தன்யா போலவே தோன்ற, பார்த்திபன் திணறித்தான் போனான்..

‘டேய் பார்த்தி… நீ அடி வாங்காம போக மாட்ட போலவே…’ என்று தோன்ற, ‘நான் ஸ்டெடியா தான் இருக்கேனோ..’ என்று எண்ணியவன், கொஞ்சம் நிமிர்ந்து நிற்க முயன்றான்..

அவனால் முடிந்தது..

‘எஸ் ஐம் ஸ்டெடி…’ என்று இன்னமும் நிமிரும்போதே “ஹேய் பார்த்தி வா.. அக்கியோ வந்துட்டான்.. இன்ட்ரோ பண்றேன்..” என்று லேகா வந்தாள்..

“ம்ம்ச்.. அவனை பார்த்து எனக்கு ஒண்ணுமில்ல..” என,

“அய்யோ திரும்ப ஆரம்பிக்காதே பார்த்தி வா..” என்று அவனின் கைகளை பிடித்தவள், நேராய் அவனை அந்த அக்கியோ முன்னே போய் நிறுத்த, அந்த புதியவனோ சிநேகமாய் பார்த்தாலும், அவன் பார்வையில் ஒரு மிடுக்கு தெரிந்தது..

“திஸ் இஸ் பார்த்தி…” என்று ஜப்பானிய மொழியில் லேகா சொல்லியவள்,

“பார்த்தி திஸ் இஸ் அக்கியோ…” என்று இவனுக்கும் சொல்ல, அக்கியோ    பதிலுக்கு இவனைப் பார்த்தவன் “ஹாய்…” கை குலுக்கினான்..

அவ்வளவே முடிந்தது.. இதுதான் லேகா சொன்ன அறிமுகப் படலம்.. இதற்குமேல் உன்னோடு பேச எதுவுமில்லை என்பதுபோல் அந்த அக்கியோவின் பார்வை லேகாவிடம் திரும்பியது..

‘என்ன இவ்வளோதானா??’ என்று பார்த்திபன் பார்க்க, அவளோ ஜப்பானிய மொழியில் கதைத்துக்கொண்டு இருந்தவள்,

“அவன் ஹாய் சொன்னதே பெருசு…” என்றாள் மெதுவாய் இவனிடம்..

‘தோடா…!!!’ என்று பார்த்திபன் பார்க்க,

“எஸ்.. இவனுக்கு ரொம்ப வேல்யு.. சோ பேஸ்ல எதுவும் காட்டிக்காத.. இங்க நிக்க பிடிக்கலையா மெதுவா நகண்டிடு.. உன்னோட எரிச்சல் அப்படியே தெரியுது..” என்றாள் லேகா சரியாய் யூகித்து..

‘இவ என்னடா என்னை அப்படியே கண்டுபிடிக்கிறா..’ என்றெண்ணியவன் “ஓகே… யூ கேரி ஆன்..” என்றுவிட்டு சற்று தள்ளியிருந்த ஒரு வட்ட மேஜையின் அருகே அமர்ந்துகொண்டான்..

கையில் மீண்டும் குவளை…

மனதில் மீண்டும் தன்யா…

இத்தனை நாள் பிடிவாதமாய் அவளோடு பேசக்கூடாது என்றிருந்தவன், இன்று தன்னுடைய கட்டுப்பாடுகள் எல்லாம் மீறி தானே அழைத்தான்..

நள்ளிரவு நேரம்.. அலைபேசி சத்தத்தில் தன்யா திடுக்கிட்டு தான் விழித்தாள்.. நேராம் பார்த்தாள் அது மணி இரண்டு என்று காட்டியது.. சிறிது நேரம் முன்னர் தன் உறங்கினாள்..

‘இப்போ யாரு..’ என்று எடுத்துப் பார்க்க, புதிய எண்ணாய் இருக்கவும் ‘பார்த்தியோ…’ என்று நொடியில் மனதில் ஒரு வெளிச்சக் கீற்று..

வேகமாய் அழைப்பை எடுத்தவள் “பா… பார்த்தி….” என்று தவிப்போடும் ஆவலோடும் சொல்ல,

பார்த்திபன் அப்படியே கண்களை இறுக மூடிக்கொண்டான்.. அழைத்தவனுக்கு அந்த நொடி பேசும் எண்ணம் இல்லை..

“ஹ.. ஹலோ  பார்த்தி.. பார்த்தி நீ தான..” என்று தன்யாவின் குரலில் அவளின் உணர்வுகள் அப்படியே பிரதிபலிக்க, அதை அவளின் ஒவ்வொரு சொல்லும் கேட்க கேட்க, பார்த்திபன் உடலுக்கும் ரெய்சு இன்னும் இன்னும் பாயத் தொடங்கியது..

“பார்த்தி… பார்த்தி ப்ளீஸ் பேசேன்.. எனக்கு நல்லா தெரியும் நீ.. நீ தானே.. எப்.. எப்படி இருக்க பார்த்தி நீ..” என்று தன்யா கேட்க,

‘நால்லா தவி.. இன்னும் நல்லா தவிச்சு அழு டி.. என்னை இப்படி தவிக்க விடுறல்ல…’ என்றெண்ணியவன் ‘ஐயோ அழறாளே…’ என்று அவனின் மனதும் கூட தவித்தது..

“பார்த்தி… பேசு பார்த்தி…” என்று தன்யா இறைஞ்ச…

“ஹ்ம்ம்…. இங்க என்கிட்டே ஒருத்தி இருக்கா.. ஜப்பான்காரி.. பார்த்தி பார்த்தின்னு பேசறா.. பார்த்து பார்த்து சிரிக்கிறா…” என்றான் வேண்டுமென்றே…

  

       

                          

    

    

  

 

        

   

Advertisement