Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 3

பார்த்திபனுக்கு வாழ்வே அழகாய் இருப்பதாக இருந்தது. அனைத்தும் வர்ணமயம்.. காண்பது எல்லாம் காதலாகவே தெரிந்தது. கவிதைகள் கூட அவனுக்குத் தோன்றியது அவனுக்கே ஆச்சர்யம்.

‘அட…’ என்று அவனே அவனை நினைத்துக்கொண்டான்.

தன்யா புதிதாய் தெரிந்தாள். அவள் பேசுவது, சிரிப்பது, நடப்பது என்று எல்லாமே அழகாய் தெரிந்தது அவனுக்கு. அவள் எது செய்தாலும் அது அவனுக்காக செய்வதாகவே இருந்தது.. ஒன்றுமில்லை, மொட்டை மாடியில் உடற்பயிற்சி என்ற பெயரில் சும்மா உலாத்திக்கொண்டு இருந்தான், தன்யா வழக்கம்போல் துணி காயப்போட வர, அது அவனுக்காக வந்ததாகவே இருந்தது பார்த்திபனுக்கு..

“ஓய்…” என்று இவன் வீட்டு  மாடியில் இருந்து தன்யாவை பார்த்து சப்தமிட, இவனைத் திரும்பிப்பார்த்தவள் லேசாய் புன்னகைத்துவிட்டு அவள் வேலையைப் பார்க்க,

‘என்னடா இது.. இவ்வளோதான் ரியாக்ஸனா??’ என்று பார்த்தான் பார்த்திபன்.

ஆனால் தன்யாவோ திரும்பவேயில்லை. வந்த வேலை என்னவோ அதை செய்துகொண்டு இருந்தாள். எப்போதும் அவனோடு நன்றாய் பேசுவாள்தான். தோழனைப் போன்ற பழக்கம். அக்கறை அன்பு எல்லாம் இருக்கிறது.. ஆனால் அதற்குமேல் பார்த்திக்கு வந்த உணர்வு போல் எல்லாம் எதுவுமில்லை என்பதால் அவள் எப்போதும் போலிருக்க,

பார்த்திபனுக்கோ ‘இவ கண்டுக்கவே மாட்டேங்கிறா??’ என்று மனது அடித்தது.

“ஹேய் தன்யா…” என்று சத்தமாய் அழைத்தான்..

அப்போதும் அவனைப் பார்த்தவள் “என்ன பார்த்தி…” என்று சாதாரணமாகவே கேட்க, அவளையே பார்த்தவன், அவன் எதிர்பார்த்த பிரதிபலிப்பு அவளிடம் தெரியவில்லை என்றதும் “ஒண்ணுமில்ல போ…” என்றுவிட்டான் பட்டென்று..

அதற்குமேல் அவளிடம் என்ன சொல்வது?? தெரியவில்லை..

‘ஏன்டா  தடிமாடு மாதிரி இருக்க.. லவ் பண்றேன்னு சொல்ல வேண்டியதுதானே..’ என்று அவனின் மனது கேட்க,

‘சொல்லிடலாம்.. ஆனா…???!!!’ யோசனையாகவே இருந்தது..

‘என்ன ஆனா??!!!’

“டக்குனு சொல்லிட கூடாது பார்த்தி.. கொஞ்சமாவது அவளை இம்ப்ரெஸ் பண்ணனும்.. ஜஸ்ட் என்னை பார்க்குற பார்வைல ஒரு ஸ்பார்க் ஆவது வரணும்.. வர வைக்கணும்.. அதுக்கப்புறம் சொல்லணும்… இந்த பார்த்தியோட பார்வை உன்மேல விழுந்து பல நாள் ஆச்சுனு…”  என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு பார்க்க, தன்யா சென்றேவிட்டிருந்தாள்..

‘கட்டம் கட்டு பார்த்தி… கரக்ட் பண்ணிடு பார்த்தி… தன்யா தான் உனக்கு.. உனக்குமட்டும் தான் தன்யா… சொதப்பி வச்சிடாத பார்த்தி..’ என்று ஓயாது அவனின் காதல் மனம் இவனுக்கு ஓதிக்கொண்டு இருக்க,

பார்த்திபன் தன்யாவுடனான நேரங்களை அவனே அமைத்துக்கொண்டான்.. யாருக்கும் தவறாய் தெரியாத வகையில்.. முக்கியமாய் முரளிக்கு..

‘இவனுக்கு மூக்கு வேர்த்துச்சு.. அவ்வளோதான் எல்லாம் கெட்டுடும்..’ என்று முரளியை எண்ணியவன், அவன் இருக்கையில் மிக மிக கவனமாய் இருந்தான்..

ஆனால் முரளியோ “என்னடா எப்படியோ இருக்க?? முன்னமாதிரி இல்லையே??” என்று கேட்க,

“அப்படில்லாம் எதுவுமில்ல..” என்றான் தின்னக்கமாய்..

“ஒரு மார்க்கமாதான் இருக்க..” என,

ஹேமாவோ “அடடா.. விடுங்களேன்.. பார்த்தி என்ன இன்னும் சின்ன பையனா.. சும்மா சும்மா..” என்று கணவனை கடிந்துவிட்டு போனாள்..

‘ப்ப்பூ இவ்வளோதானா இவன்…’ என்று பார்த்திபன் நினைக்க, முரளி இன்னமும் தம்பியைதான் பார்த்து நின்றிருந்தான்.

இவர்களின் அம்மா ஈஸ்வரி கூட “டேய் என்னங்கடா தினம் தினம்…” என்று சடைத்துவிட்டு போனார்..

பார்த்திபன் எதையும் கண்டுகொள்ளாது இருப்பது போல் விட்டுவிட, முரளியும் கூட அடுத்து எதுவும் கேட்கவில்லை.. மேலும் பத்துநாள் வரைக்கும் இப்படியே செல்ல, முதல் முறையாய் தன்யாவிற்கு பார்த்திபன் தன்னிடம் பழகுவதில் எதுவோ வித்தியாசமாய் பட்டது..

பார்வையில் ஒரு ஆர்வம்.. பேச்சில் கொஞ்சம் உரிமை கூடுதலாய் தொனிப்பது போல் இருந்தது.. முன்னே எப்படி என்று இதுநாள் வரைக்கும் கவனித்ததில்லை.. ஆனால் இப்போது என்னவோ மனதில் திடீரென்று ஒரு எண்ணம்..

‘அப்படி இருக்குமா?? ஏன் இப்படி பண்றான்??’ என்று யோசித்தாள்..

ஹேமா அழைத்தாள் என்று தன்யா அங்கே சென்றிருக்க, பார்த்திபன் அப்போதுதான் வேலை முடிந்து வந்தவன், தன்யா இருக்கவும் “பிரிட்ஜ்ல ஜில்லுனு வாட்டர் இருக்கும் எடுத்து கொடு தன்யா..” என்றவன் அப்படியே அமர்ந்துவிட,

தன்யாவோ ‘நானா??!!!’ என்றுதான் பார்த்தாள்.

அவனின் அம்மா, அண்ணி எல்லாம் இருக்க, என்னிடம் சொல்கிறான் என்று இருந்தது..

யாருமில்லையெனில் சரி.. ஆனால் அவர்கள் எல்லாம் இருக்கையில்.. என்னிடம் ஏன் சொல்கிறான் என்று பார்க்க, “உன்னதான் தன்யா.. ஒரு தண்ணி கேட்டா கூட இப்படி யோசிப்பியா???” என்றான்..

“டேய் அவளை ஏன் அதட்டுர.. என்னை கேட்கவேண்டியது தானே..” என்று ஈஸ்வரி அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுக்க,

“உனக்கு இது கூட செய்ய முடியாதா???” என்றான் தன்யாவை பார்த்து.

அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. ஒருவேளை அவள்மட்டும் இருந்திருந்தால் நிச்சயம் அவன் சொன்னதை செய்திருப்பாள். அவன் சொன்னது சாதாரணமாக சொன்னதுபோலவும் அவளுக்கு படவில்லை. ஏனெனில் எப்போதுமே இப்படியில்லை..

மனதில் முதல் யோசனை விழுந்தது..

அவள் அமைதியாய் இருப்பது கண்டு “தண்ணி கேட்டா கூட இவ்வளோ யோசிப்பியா??” என்றான் திரும்ப ,

‘அடடா??!!!’ என்று இவள் பார்க்க, மனதோ ‘அப்படி இவன் வேற என்ன கேட்டுட்டான்…’ என்று யோசிக்க,  

ஹேமாவோ “என்ன தன்யா அப்போ நாளைக்கு போலாம் தானே..” என்றாள்..

சுத்தம் ஹேமா என்ன சொன்னால் என்று கூட தன்யாவிற்கு மறந்துபோனது.

“எ.. என்னக்கா..??” என்று திரும்ப கேட்க,

“நாளைக்கு ஈவ்னிங் என் பிரன்ட் ரிசப்சன் சொன்னேன்ல… அவர் வேலை இருக்கு சொல்லிட்டார்.. அத்தை மாமா இன்னொரு விசேசம் போறாங்க.. எனக்கு தனியா பேபி வச்சிட்டு போக எப்படியோ இருக்கு…” என,

“சண்டே தானே க்கா போலாம்..” என்றாள் மெதுவாய்..

பார்த்திபன் இவர்களின் பேச்சினை கேட்டபடி மனதினுள் ஒரு கணக்கைப் போட்டவன் “எந்த ஏரியா அண்ணி..????” என்றான்..

ஹேமாவும் சொல்ல “ஓ.. நாளைக்கு அந்த சைட் எனக்கு ஒரு வொர்க் இருக்கு நான் டிராப் பண்ணிடறேன்..” என்று அவனாகவே சொல்ல,

“ரொம்ப நல்லது பார்த்தி..” என்றவள், “தேங்க்ஸ் தன்யா…” என,

“இட்ஸ் ஓகே க்கா..” என்றவளும் வீட்டிற்கு வந்துவிட்டாள்..

மறுநாள் ஒரு டிசைனர் சுடிதாரில் கிளம்பியவளை, காஞ்சனா வம்படி செய்து “சேலை கட்டு அழகா…” என்று பிடிவாதம் பிடித்து சேலை கட்ட வைத்தார்..

அழகான பிங்க் நிற டிசைனர் புடவை.. தன்யாவை மேலும் அழகாய் காட்டியது. எப்போதாவது தான் சேலை கட்டுவது என்பதால், தன்யாவிற்கே தன்னைப் பார்க்கையில் கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது.. நடந்து வேறு பார்த்துக்கொண்டாள்..

“அடிக்கடி சேலை கட்டிக்கணும்…” என்ற எண்ணனும் கூட,

“ஹ்ம்ம் இப்போ எப்படி இருக்கு… சுத்தி போடணும்..” என்று காஞ்சனா சொல்ல,  வெளியே ஹார்ன் சத்தம் கேட்கவும், “ஓகே அத்தை நான் கிளம்புறேன்..” என்று கிளம்பிவிட்டாள்..

பார்த்திபன் முன்னே ஓட்டுனர் இருக்கையில் இருக்க, ஹேமா அவளின் குழந்தையை வைத்து பின்னிருக்கையில் அமர்ந்திருந்தாள். தன்யா வீட்டினுள் இருந்து நடந்து வரும்போதே பார்த்திபனின் இதயம் தலைக்குப்புற கவிழ்ந்து போனது..

“வாவ்…!!!!!” என்று இதழ்கள் குவிக்க, மெய் மறந்து அமர்ந்திருந்தான்..

தன்யாவின் பார்வை கூட அவனிடம் தான் இருந்தது.. ‘என்ன இப்படி பாக்குறான்..’ என்று..

ஏனோ அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை..

“லூசு…” என்று லஜ்ஜையாய் கடிந்துகொண்டவள், பின்னே அமர போக, “நீ முன்னாடி உக்காந்துக்கோ தன்யா..” என்றாள் ஹேமா..

“ஏன் ஏன் க்கா..?? இங்கயே உக்கந்துக்கிறேனே…”

“வேணாம்.. அப்புறம் பாப்பா உன் ட்ரெஸ கசக்கி விட்டுடுவா.. முன்னாடி உக்காந்துக்கோ..” என,

பார்த்திபனோ எதுவும் சொல்லாது முன் பக்க கதவை உள்ளிருந்த படியே திறந்துவிட, அவனோடு பைக்கில் உட்கார்ந்து வரும்போதெல்லாம் தோன்றாத ஏதோ ஒன்று இப்போது தோன்றி தன்யாவிற்கு இம்சை கொடுத்தது..

காரில் மெல்லியதாய் ஒரு பாடல்.. அதை கவனிக்க கூட இல்லை தன்யா.. ஹேமா தான் “என்ன பார்த்தி ஒரே பாட்டு திரும்ப திரும்ப ஓடுது..” என்று கேட்க,

அதன்பின்னே தான் கவனித்தாள்..

‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு

கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு

கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…’

“ரிப்பீட் மோட்ல இருக்கு போலண்ணி…” என்றவனின் கண்கள் தன்யாவை நோக்க, ஏசி காரில் அவளுக்கு குப்பென்று வியர்க்கத் தொடங்கியது..

‘என்னாச்சு இவனுக்கு..??’ என்று அவளின் மனம் ஒவ்வொரு நொடியும் அடித்துக்கொள்ள, பார்த்தியோடு அவளால் இயல்பாய் முன்னைப்போல் பேசிடவே முடியவில்லை..

ரிசப்சன் முடிந்து வந்தபிறகும் கூட இதே நிலை..

அவளால் நிம்மதியாய் உறங்க முடியவில்லை..

இதழ்கள் அவளையும் அறியாது அந்த பாடலையே முணுமுணுக்க “ச்சே..” என்று தனக்கு தானே எரிச்சல் பட்டுக்கொண்டாள்.. திரும்ப திரும்ப பார்த்தியின் அந்த பார்வையே அவள் மனதில் தோன்ற, “ஓ..!!! மை காட்…” என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்..

‘இந்த பார்த்திக்கு என்னாச்சு??’ என்று நினைக்க ஆரம்பித்தவள் ‘கடவுளே எனக்கு என்னாச்சு..??’ என்று நினைக்கத் தொடங்க, கடவுள் பத்தி அந்த நேரத்தில் பதில் சொல்வாரா என்ன??

உறக்கம் வராது தவிக்க, கொஞ்ச நேரம் நடப்போம் என்று மாடிக்குப் போக, அங்கே பார்த்திபனும் அவர்கள் வீட்டு மாடியில் நடந்துகொண்டு இருந்தான். அவனைப் பார்த்ததுமே திக்கென்று ஆனது.

‘இவனா??!!!’ என்று..

இப்படியே திரும்பிடலாம் என்று எண்ணுகையில் “ஹேய் தன்யா…” என்ற அவனின் அழைப்பு நிற்க வைத்தது.

இரண்டு மாடிக்கும் ஓரடி தான் தூரம்.. எளிதாய் இங்கே அங்கே தாண்டலாம்.. இவன் தாண்டி வந்திருந்தான்.. அவள் திரும்புவதற்குள் தன்யாவின் அருகில் வந்தவன்,

“நீ வருவன்னு எனக்குத் தெரியும் தன்யா..” என்று மெதுவாய் மென்மையாய் சொல்ல, அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தவளின் விழிகளில் ஒரு திடுக்கிடல்..

என்னவோ இதயம் படபடவென துடிக்க “பா.. பார்த்தி….” என்றாள் எழும்பாத குரலில்..

“எஸ்… பார்த்தி தான்…” என்றவன் “இன்னும் கூட உனக்கு புரியலையா தன்யா??” என்று கேட்க,

“எ… என்ன பார்த்தி???” என்றாள் அப்போதும் ஒருவித அச்சத்தோடு..

“உனக்கு என்னைப் புரியலையா??!!!”

ஒவ்வொரு வார்த்தைக்கும் பார்த்திபன் அழுத்தம் கொடுக்க, அவனின் பார்வையோ அவளுக்கு உடலில் ஒருவித நடுக்கம் கொடுத்தது.

“சொல்லு தன்யா…” என்றவனோ இன்னமும் அவளை நெருங்கி நின்றிட, “என்ன புரிஞ்சுக்கணும்..??” என்று திக்கி திணற, அவனின் கண்களோ இவளின் கண்களில் தான் நிலைத்தது..

இவன் என்ன மந்திரம் தெரிந்தவனா?? மாயாவியா?? ஒருபார்வையில் அவளை நிற்க வைத்துவிட்டானே…

“தன்யா…” என்ற அவனின் குரல் அவளின் உயிர் வரை செல்ல, “உனக்கு இன்னிக்குதான் தூக்கம் போச்சு.. பட்.. உன்னால என் தூக்கம் போய் ரொம்ப நாளாச்சு..” என்றான் ஒருவித அடிக்குரலில்..

“என்ன சொல்ற பார்த்தி…” என்றவளுக்கு அவன் சொல்ல வருவது புரிவதாய் இருந்தது..

கல்லூரி படிக்கும் மங்கை அவள்.. புரியாதா என்ன?? ஆனாலும் பார்த்தியா இப்படி என்ற அதிர்வு.. அதுவும் தானா இப்படி நிக்கிறோம் என்ற திடுக்கிடல்.. எல்லாம் சேர்ந்து அவளை நடுங்கச் செய்தது.. இதுநாள் வரைக்கும் ஒரு தோழமையோடு பழகியவன்..

ஆனால் இன்று…???

அதற்குமேல் அவளால் நினைக்க முடியவில்லை.. ஆனால் பார்த்திபனோ விடுவதாய் இல்லை.. இன்றே அனைத்தையும் சொல்லிவிடும் வேகம்.. என்னவோ அவளோடு அந்த ரிசப்சன் சென்றுவந்ததில் இருந்து மனது போட்டு அழுத்தத் தொடங்கியது..

‘சொல்லிடு பார்த்தி..’ என்று..

பார்த்திபன் எதுவோ சொல்ல வாய் திறக்க “ப்ளீஸ் பார்த்தி… எதுவும் சொல்லாத.. நான் கீழ போறேன்.. யாரும் பார்த்தா தப்பு..” என்று அவள் விலக,

“சோ.. நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா தன்யா??” என்றான் அவளின் கைகளை பிடித்து..

“ம்ம்ச் பார்த்தி…..” என்றவள், “நீ எதுவும் சொல்லாத… நான் எதையும் கேட்கறதா இல்லை..” என்று கைகளை உறுவியவள், கீழே செல்லப் போக,

“நோ..என்னை பேச விடு தன்யா ப்ளீஸ்.. இதுக்குமேல என்னால முடியாது..” என்று திரும்பவும் அவளை எட்டிப்பிடித்திருந்தான் பார்த்திபன்..

இந்த நினைப்பு எல்லாம் அவன் கண் முன்னே காட்சிகளாய் விரிய, ஒருப்பக்கம் சுகமாகவும் இருந்தது சுமையாகவும் இருந்தது..

தாங்க இயலா சுமை.. தாங்க தாங்க ஒருவித சுகம் கொடுக்கும் சுமையது…

பார்த்திபன் கண்களை இறுக மூடி, அமர்ந்திருந்தான்.. கண்கள் திறந்தால் தானே இது ஜப்பான் என்றும், தான் வெகு தூரம் தன்யாவை தாண்டி வந்துவிட்டோம் என்றும் தெரியும்.. ஆனால் அது எதுவும் அவனுக்குத் தெரிய விருப்பமில்லை.. இப்படியே பழைய எண்ணங்களிலேயே மூல்கிடத் துடித்தது அவனின் உள்ளம்..

“தன்யா… தன்யா…” என்று அவன் மனம் அரட்டிக்கொண்டு இருக்க,

“பார்த்தி… வாட் இஸ் திஸ்…” என்ற லேகாவின் குரல் பட்டென்று இமைகளை திறக்க வைத்தது..

“டோர் நாக் பண்ணிட்டு வரக்கூடாதா லேகா..” என்றான் கடுப்பாய்..

அவனின் தனிமையும், தவிப்பும் களைந்து போன கடுப்பு…

“எவ்வளோ நேரம் தட்றது..” என்றவள் அவனின் முகத்தினை ஒருமுறை பார்த்து “என்னாச்சுன்னு கேட்க மாட்டேன்.. பட் சம்திங் இஸ் ஈட்டிங் யூ.. நீயா வெளிய வந்தாதான் நல்லது.. புது ஜாப்.. புது இடம்.. எல்லாமே புதுசு.. சோ நீயும் கொஞ்சம் புதுசா மாறன்..” என்றாள் நட்பாய்..

அவளின் இயல்பே இதுதான்..

அக்கறையாய் பேசுவாள்.. ஆனால் அதில் இருக்கும் எல்லை கொடு தெளிவாய் தெரியும்..

நாளை விடிந்தால் வேலைக்கு சேர வேண்டும்.. அதற்கு அவன் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும்.. அது முடியுமா??

தெரியாது..

“பார்த்தி.. திஸ் இஸ் நாட் குட்…” என்றவள், “கம்.. வெளிய வா.. உனக்கு பார்த்த வீட்ல திங்க்ஸ் செட் பண்ணலாம்..” என்று அழைத்தாள்..

இது இவளுக்குத் தேவையே இல்லாதது.. ஆனாலும் என்னவோ என் பொறுப்பு என்று எல்லாம் செய்தாள்.. இவனுக்கென்று தனி வீடு இவனே கேட்டதுதான்.. அதுவும் இங்கே வந்ததுமே..

“முரளி மாமா அப்படி எதுவும் சொல்லலையே..” என்று லேகா சொல்ல,

“முடிஞ்சா ரெடி பண்ணி கொடு லேகா.. இல்லையா நானே பார்த்துக்கிறேன்..” என்றான் ஒருவித பிடிவாதத்தில்..

‘என்ன பார்ப்ப?? உனக்கு இங்க என்ன தெரியும்??’ என்று தோன்றிய கேள்வியை தூக்கிப் போட்டான்..

“ம்ம்..” என்று தலையை ஆட்டி அவனைப் பார்த்தவள் “ஆக்சுவலி நானே சொல்லனும்னு இருந்தேன்.. பட் எப்படின்னு யோசிச்சிட்டே இருந்தேன்..” என்றவள், அடுத்த நான்கே நாட்களில் அவனுக்கொரு தனி வீடு, இதே அப்பார்மென்ட்டில் ஏற்பாடு செய்துவிட்டாள்.

நாளை அலுவலகம் என்ற நிலையில், அவன் இன்றாவது அங்கே சென்று ஓரளவு எல்லாம் பார்க்கவேண்டும் தானே.. அவனே கிளம்ப என்னினான்தான்.. ஆனால் அதற்குள் பழையது எல்லாம் வந்துவிட, தன்னை மறந்தே அமர்ந்து போனான்.. இப்போது லேகா வந்து அழைக்க

“நானே பார்த்துப்பேன் லேகா…” என்று இவன் பெட்டியை இழுக்க,

“ஷ்… எல்லாமே அங்க இருக்கு.. ஜஸ்ட் உன்னோட திங்க்ஸ் நீ என்ன எப்படி வைக்கனுமோ வச்சிக்கோ.. பட்.. இது இந்தியா போல இல்ல.. இங்க பார்மாலிட்டீஸ் வேற இல்லையா.. சோ வா..” என, அவனுக்கு அவளோடு செல்வது தவிர வேறு வழியில்லை..

ஹவுஸ் ஓனரிடம் சென்று பேசி, சாவி வாங்கி, அவனுக்கான வீட்டிற்குள் நுழைய, கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களுமே இருந்தது.. அவன் ஒருவனுக்கு இத்தனை தேவையா இருந்து பார்த்தான். பேசாது வேறு யாரோடேனும் அறையை பகிர்ந்துகொண்டு இருப்பது போல் இருந்தால் கூட தேவலாம் போல் என்று நினைத்தான்..

அவன் பார்த்து சரி சொன்னது தான்.. ஆனால் இப்போது என்னவோ இப்படி ஒரு நினைப்பு..

“உனக்கு ஒருத்தனுக்கு இந்த வீடு வேணுமான்னு யோசிக்கிறயா பார்த்தி??” என்று லேகா சரியாய் கேட்டுவிட,

“அ.. அதெல்லாம் இல்லையே..” என்றான் வேகமாய்..

“ஹாஹா… உன் பேஸ் பார்த்தாலே தெரியுது..” என்றவள் அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை எதை எதை எப்படி புழங்க வேண்டும் என்று சொல்ல, கொஞ்சம் கவனமெடுத்தே கேட்டுக்கொண்டான்..

“இந்த பேக்ல கூக்கிங் தேவையான பேசிக் திங்க்ஸ் இருக்கு பார்த்தி.. ஜஸ்ட் எனக்கு தோணினது மட்டும் வாங்கினேன்.. அண்ட் இந்த பாக்ஸ்ல எக் நூடில்ஸ் வச்சிருக்கேன்.. இப்போ சாப்பிட்டுக்கோ.. நாளைக்கு ஒருநாள் நானே மார்னிங் அண்ட் நூன் சாப்பிட கொடுத்திடுறேன்.. அதுக்குமேல நீதான் பார்த்துக்கணும்.. பட் எங்க போகனும்னாலும் சொல்லு கூட்டிட்டு போறேன்.. எல்லாமே உனக்கு பழகுற வரைக்கும்தான்..

நாளைக்கு உன்னோட லைப்ல ஒரு புது டே… சோ எதுவும் நினைக்காம பிரெஷா ஸ்டார்ட் பண்ணு பார்த்தி..” என்றவள் லேசாய் சிரிக்க,

‘எவ்வளோ அழகா எல்லாத்தையும் புரிஞ்சு.. எல்லாத்தையும் பண்றா..’ என்றுதான் நினைத்தான் பார்த்திபன்..       

           

      

 

          

 

Advertisement