Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 21

லேகா இப்படி வக்கீல் வைத்து அவளின் காரியங்களை சாதிப்பாள் என்று முரளி எதிர்பார்க்கவில்லை. எத்தனை அழகாய் அனைத்தையும் நடத்தி, முரளியால் எதுவுமே செய்ய முடியாதபடி அவனை வெறும் ஆளாய் உட்கார வைத்து,  அதிலும் பொறுப்புகள் அனைத்தையும் சுந்தரம் கையில் கொடுத்தப் பாருங்கள் என்றுவேறு சொல்லி, முரளியை ஆட்டம் காண வைத்துவிட்டாள்.

முரளி பக்காவாக அனைத்து டாக்குமென்ட்டுகளும் தயார் செய்து வைத்திருந்தான், அதில் ஹேமாவின் அப்பா, இவனிடம் மட்டும் தான் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து இருப்பதாகவும், ஹேமாவின் பேரில் இருப்பது எல்லாம் அனுபவ பாத்தியம் மட்டும், அனைத்தும், ஹேமா முரளியின் பிள்ளைக்கு போய் சேரும் என்றும்,

லேகாவின் சொத்துக்கள் எல்லாம் ஒருவேளை லேகா மறுமணம் செய்து, அவளுக்கு குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில், அந்த குழந்தைகளுக்குத்  திருமணம் என்கிற நிலையில் மட்டுமே அந்த சொத்துக்கள் எல்லாம் லேகாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அப்படி அவள் திருமணம் செய்துகொள்ளாது வெளிநாட்டிலேயே இருக்கிறாள் என்றால், அவள் எப்போது இந்தியா வந்து தங்க முடிவு செய்கிறாளோ அதுவரைக்கும் அனைத்தையும் முரளியின் பொறுப்பில் விட்டிருப்பதாக ஒரு உயில் போல தயாரித்து வைத்திருந்தான்.

அதை வைத்து தான் முரளி இத்தனை ஆட்டமும் ஆடியது..

எப்படியும் இந்த உயில் படி அனைத்தும் நடக்கவேண்டுமெனில் இன்னமும் பல ஆண்டுகள் ஆகும் என்பது அவனின் கணக்கு. அதற்குள் முரளி எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டிவிடலாம்…

அப்பாவின் உயில் என்கையில் நிச்சயம் லேகாவும் ஹேமாவும் அதற்குக் கட்டுப்பட்டுத்தான் போவர். முன் எப்போதோ ஹேமாவின் தந்தை போட்டுக் கொடுத்திருந்த கையெழுத்து வைத்து, ஒரு போலி உயில் பக்காவாய் முரளி தயாரித்து வைத்திருக்க, லேகா சொத்து விசயம் எப்படியும் பேசுவாள் அப்போது இவ்விசயத்தை ஆரம்பிக்கலாம் என்று எண்ணியிருக்க,

அவளோ எடுத்ததுமே வக்கீல் வைத்து அனைத்தையும் பார்ப்பாள் என்று முரளி எண்ணவே இல்லை. ஹேமாவை மனதில் வைத்தாவது தன்னோடு லேகா கொஞ்சம் இணக்கமாய் போகத்தான் நினைப்பாள் என்று தவறாய் எண்ணிவிட்டான்.

ஆனால் லேகாவோ “மாமா… உங்களைப் பத்தி தெரியும்.. ஆனா இவ்வளோ கீழ இறங்குவீங்கன்னு நினைக்கவேயில்லை.. ஏற்கனவே அக்கா ரொம்ப மனசு விட்டு போயிட்டா.. இப்போ நீங்க ஃபேக் உயில் ரெடி பண்ணது தெரிஞ்சா அவ்வளோதான் என்ன டிசைட் பண்ணுவான்னு கூட தெரியாது…” என்று முகத்திற்கு நேராகவே கேட்க,

“என்னது??? போலி உயிலா..?? நானா..?? வாட் நான்சென்ஸ் லேகா… சீ எங்க வீட்ல ஆயிரம் பிரச்சனை இருக்கும்.. அதுக்கும் உன்னோட விசயத்துக்கும் ஏன் ரிலேட் பண்ற??” என்று முரளி குரலை உயர்த்த,

“ஷ்..!!! சத்தம் போட்டு பேசாதீங்க மாமா.. எனக்கும் சத்தம் போட தெரியும். உண்மையை இன்னும் சத்தமா கூட சொல்ல முடியும்.. பட் நான் பார்க்கிறது எல்லாம் ஹேமாவுக்காக.. புரிஞ்சதா??” என்றவளின் பார்வையில் அப்படியொரு சீற்றம்..

“என்ன சொல்ற லேகா??!!!!” என்றான் அப்போதும் ஒன்றும் தெரியாதவன் போல.

‘இவளுக்கு எப்படி தெரிந்தது??? யார் சொல்லியிருப்பார்கள்…??’ என்ற கேள்வி அவனுள் ஓடிக்கொண்டே இருந்தது.

“ஏன் உங்களுக்குத் தெரியாதா?? அதெப்படி மாமா… செய்றது எல்லாம் செஞ்சிட்டு இப்போ எதுவும் தெரியாதது போல கேட்கிறீங்க..??? நீங்க என்ன பண்ணீங்கன்னும் தெரியும்.. இனியும் என்ன செய்யப் போறீங்கன்னும் தெரியும்…” என்றவள்,

“இதோ நீங்க ரெடி பண்ணி வச்சிருக்க போலி உயிலோட  ஜெராக்ஸ் காப்பி.. ஒரிஜினல் நீங்களே என்கிட்டே கொடுத்துட்டா நல்லது..” என்று அவன் முன்னே தூக்கி எறிய,

“வாட் நான்சென்ஸ்….” என்று கத்தினான் முரளி..

“ஹா ஹா நீங்க பண்ண நான்சென்ஸ் தான்..” என்ற லேகா, “இங்க பாருங்க மாமா.. என்னை என் வழியில போக விடுங்க.. உங்களது நான் எதையும் கேட்கலை.. எனக்கு உரிமையானது மட்டும் தான் நான் கேட்டேன்.. நீங்க கொடுக்கமாட்டீங்கன்னு நல்லா தெரிஞ்சு போச்சு.. சோ நானே லீகலா என்ன செய்யனுமோ செஞ்சிட்டேன்..

இனியும், இது உங்கப்பா எழுதின உயில் அப்படி இப்படின்னு சொன்னீங்கன்னா, அக்காக்காக கூட பார்க்கமாட்டேன்.. போர்ஜெரி கேஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் தட்ஸ் ஆல்… ஒன்னு நீங்களா அந்த உயில் என்கிட்டே கொடுத்துட்டா நல்லது.. இல்லைன்னா ஐம் சாரி.. நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்லை..” என்றுவிட்டு சென்றுவிட்டாள்.

முரளிக்குத் தெரியும், நேராய் லேகா, வீட்டிற்குத்தான் செல்வாள் என்று.. ஆனால் இவளுக்கு யார் இந்த விஷயங்கள் எல்லாம் சொன்னது என்று தெரியவில்லை.. என்ன யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை.

அதிலும் பார்த்திபன் தான் இதனை கண்டறிந்தான் என்பது முரளி சிந்திக்கவும் அப்பார்பட்ட ஒன்று.

ஆம் பார்த்திபன் தான் லேகாவிடம் சொன்னான்.. அவனுக்கு முரளியின் இச்செயல் தெரிந்ததும் பெரிதும் அசிங்கமாய் போனது. அப்பா அம்மாவிற்கு தெரிந்தால் மிகவும் உடைந்து போய் விடுவார்கள்.

“ச்சே இவனெல்லாம் என்ன மனுஷன்…” என்றுதான் தோன்றியது.

‘நல்லவேளை அப்பா அம்மா தனியா வந்துட்டாங்க…’ என்று எண்ணியவனுக்கு ஹேமாவையும், குழந்தையையும் எண்ணி மனம் மிக வருத்தமாய் போக, இதனை லேகாவை கொண்டு மட்டுமே சரி செய்ய முடியும் என்று தோன்றியது.

ஹேமாவிடம் ‘முரளியை விட்டு நீங்க வேணும்னா அப்பா அம்மா கூட வந்து இருங்கண்ணி…’ என்று ஹேமாவை சொல்ல முடியாது.

முரளியிடம் இருப்பதும் தனியே வருவதும் ஹேமாவின் முடிவு.. ஆனால் அதற்காக இந்த போலி உயில் விஷயம் தெரிந்தும் அவனால் சும்மா இருக்க முடியாது அல்லவா???

லேகாவை அழைத்து பேசியது அவனே. முதலில் லேகாவால் நம்பிடவே முடியவில்லை.     

“எப்படி பார்த்தி.. எப்படி??? ஹவ் இஸ் திஸ் பாசிபில்…??” என்று லேகா நம்பாது கேட்க,

“எனக்கும் நம்ப முடியலைதான்.. புது வீடு டாக்குமென்ட் செக் பண்றது விசயமா லாயர் ஒருத்தரை பார்க்க போயிருந்தேன் லேகா. டாக்குமென்ட் ரீட் பண்ணி, எதுவும் வில்லங்கம் இருக்கா அப்படின்னு சொல்லவே அந்த மனுஷன் முப்பதாயிரம் கேட்டார்.. அப்போதான் அவரோட ஜூனியர் சொன்னான், உங்க ப்ரதர் இவ்வளோ பே பண்றாரு.. நீங்க என்ன சார் யோசிக்கிறீங்கன்னு..    அங்கதான் இந்த விசயம் தெரிஞ்சது..” என,

“எப்…எப்படி பார்த்தி??!!!” என்றாள் லேகா வியப்பாய்.

“ஹ்ம்ம் உயில் ரெடி பண்ணதே அந்த லாயர்தானாம்… ரெண்டு லட்சம் கொடுத்திருக்கான் முரளி.. எனக்கு கேட்டதும் என்ன செய்றதுன்னு தெரியலை… அந்த உயில் வச்சு இவன் என்னென்ன செஞ்சிருக்கான்னும் தெரியலை  லேகா…” என,

“ஓ!!! காட்…” என்று தலையில் கை வைத்தவள்,

“இப்.. இப்போ அந்த உயில் யார்கிட்ட இருக்கு பார்த்தி.. அட்லீஸ்ட் ஜெராக்ஸ் கிடைக்குமா???” என்றாள் கொஞ்சம் பதற்றமாய்.

“உயில் கண்டிப்பா முரளிக்கிட்ட தான் இருக்கும். பட் அதோட நகல் அந்த லாயர்க்கிட்ட இருக்கும். அந்த ஜூனியரை பிடிச்சா எல்லாம் நடக்கும்..” என்று பார்த்திபன் அடுத்தடுத்து சொல்ல, அந்த ஜூனியர் வக்கீலை பிடித்து அந்த போலி உயிலின் ஜெராக்ஸ் காப்பி வாங்கவே இரண்டு நாட்கள் ஆகிப்போனது.

அதற்குள், பார்த்திபன், அவனின் புது வீட்டு வேலைகளையும், லேகாவிற்கு உதவியாக, வேறொரு வக்கீலையும், அவளின் அப்பாவின் நண்பரும் இவர்களின் குடும்ப வக்கீலையும் வைத்து, என்ன செய்வது என்று விசாரிக்கவும் செய்து வைத்திருக்க, லேகாவிற்கு அனைத்தையும் பார்த்து தலை சுற்றியது..

அவளுக்கு ஹேமாவின் நிலை எண்ணி மனதிற்கு பயமாகவும் இருந்தது. எதை நம்பி முரளியிடம் அவளையும் பிள்ளையும் விட்டு செல்ல முடியும்??

“எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை பார்த்தி.. பேசாம எல்லாத்தையும் வச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு அக்காவையும், பாப்பாவையும் ஜப்பான் கூட்டிட்டு போயிடலாமா??” என்றவளைப் பார்க்க பாவமாய் இருந்தது பார்த்திபனுக்கு..

தன்னுடன் பிறந்தவன் இத்தனை தாழ்ந்த செயல்களை செய்வான் என்றும், அதுவும் பணத்திற்காக செய்வான் என்பதை நினைத்தால் வேதனை ஒருபுறமும் மறுபுறம் கோபமும் கூட வந்தது. பெண்களையும், பெற்றவர்களையும் ஏமாற்றி இவன் என்ன சாதிக்கப் போகிறான்??

தன்யா கேட்டது போல் ‘ஹேமா அக்காக்கும், லேகாக்கும் நீ என்ன செய்ய போற பார்த்தி??’ இதுவே தான் பார்த்திபனின் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

‘என்ன செய்யப் போகிறேன்.. நான்..??’ இதுவே மனதில் ஒலித்துக்கொண்டு இருக்க, இதை அப்படியே சும்மா விடவும் முடியாது.

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன் “லேகா நான் சொல்றதை நல்லா கேளு.. துவண்டு போயி, இமோசனால் டிசிசன் எடுக்கிற நேரமில்லை இது.. கிளியரா எல்லாம் செய்யனும்…. நீ நேரா போய் முரளிக்கிட்டயே பேசு..” என,

“நானா??!!!” என்றாள் யோசனையாய்..

“எஸ் நீ தான் பேச முடியும்.. நமக்கு இருக்கிற ஒரே பெனிபிட்.. அண்ணியை வச்சு மட்டும் தான் அவனை கார்னர் பண்ண முடியும்..”

“நோ  பார்த்தி.. அக்கா இதை தாங்கிக்க மாட்டா…”

“எஸ் ஐ க்னோ.. பட்.. அண்ணி பேர் சொல்லி முரளியை கார்னர் செய்யலாம்.. இதுல நான் நேரடியா தலையிட்டா முரளி இன்னும் ஓவரா செய்வான். இதேது நீ பேசினா, அதுவும் அண்ணிக்கிட்ட சொல்லிடுவேன், இல்லை அண்ணியையும் பாப்பாவையும் கூட்டிட்டு போயிடுவேன்.. கேஸ் போடுவேன் இப்படி ஏதாவது சொல்லு.. கண்டிப்பா அவன் கொஞ்சம் யோசிப்பான்.. அந்த நேரத்துல அந்த உயில் வாங்கி நம்ம என்ன செய்யணுமோ செஞ்சிக்கலாம்…” என்று யோசனை சொல்லி அனுப்பியது பார்த்திபனே..

ஆனால் முரளியோ யார் சொல்லியிருப்பார்கள் என்றே சிந்தித்துக்கொண்டு இருக்க, அடுத்து என்ன செய்வது என்ற யோசனையே அவனிடம் இல்லை..

வீட்டிற்கு போகவே ஒருமாதிரி இருந்தது. ஏற்கனவே ஹேமா பேசுவதில்லை.. பிள்ளையையும் அவனிடம் விடுவதில்லை.. இதில் இப்போது லேகா வேறு இப்படி சொல்லிவிட்டு செல்ல, முரளியின் மனதில் முதல் முறையாய் ஒரு பயம் வந்து மெல்ல அமர்ந்தது..

அந்த உயில் ஏற்பாடு செய்துகொடுத்த வக்கீலிடம் பேசினான்.

அவரோ ‘விஷயம் வெளிய தெரியாம இருக்கிற வரைக்கும்தான் சேஃப் முரளி.. தெரிஞ்சிட்டா பிரச்சனை தான்.. பெட்டர் நீங்களே அந்த உயிலை டிஸ்போஸ் பண்ணிடுங்க.. எந்த பிராப்ளமும் வராதுன்னு தானே சொன்னீங்க.. இப்போ இப்படி சொல்றீங்க.. நான் என்கிட்டே இருக்க எவிடன்ஸ் எல்லாம் இப்போவே டிஸ்போஸ் பண்ணிடுறேன்…’ என்று கை விரித்தார்..

‘இப்போ என்ன பண்றது???!!!’ என்று அவன் அப்படியே அமர்ந்திருக்க, லேகாவிடம் இருந்து அழைப்பு வந்தது..

முதலில் எடுக்கவில்லை.. லேகாவும் விடுவதாயில்லை.. திரும்ப திரும்ப அழைத்தாள். முரளி தாங்க முடியாது “ம்ம்ச் என்னதான் வேணும் உனக்கு??” என்று கடுப்பாய் கேட்க,

“ஒன்னும் வேண்டாம்.. அந்த உயில் வீட்ல தானே இருக்கு.. எங்க இருக்கு.. நீங்களே வந்து எடுத்து கொடுக்குறீங்களா?? இல்லை அக்காக்கிட்ட சொல்லி தேடவா??” என,

“ஹேய்.. அதெல்லாம் வேண்டாம்…” என்றான் பதற்றமாய்..

‘முரளியை யோசிக்க விடக்கூடாது லேகா…’ என்று பார்த்திபன் சொன்னது மிக சரியாய் இருந்தது அவளுக்கு..

“என்ன வேண்டாம் மாமா…??” என்று நக்கலாய் கேட்க,

“அப்படி ஒரு உயிலே என்கிட்டே இல்லை..” என்று திரும்ப சாதித்தான்..

“ஓஹோ… இட்ஸ் ஓகே.. நான் அக்காக்கிட்ட சொல்லிக்கிறேன்..” என்றவள்

“அக்கா…” என்று சத்தமாய் அழைக்க, ஹேமா “என்ன லேகா…” என்று கேட்டபடி வருவது இவனுக்கு நன்றாய் கேட்டது..

“ஏய் லேகா வேணாம்.. சொன்னா கேளு…” என்று முரளி கத்த,

“என்ன மாமா.. வர்றீங்களா??? வாங்க வாங்க..” என்று சிரித்தபடி லேகா அலைபேசியை வைக்க, ஹேமா புரியாது பார்த்தாள்..

“என்ன பாக்குற க்கா… உன்கிட்ட ஒண்ணு சொல்லட்டுமா.. பாப்பாக்கு இன்னும் டென் டேஸ் தானே ஸ்கூல் இருக்கும்.. நீயும் அவளும் என்னோட அங்க வாங்களேன்.. உனக்கும் ஒரு செஞ்சா இருக்கும்..” என,

ஹேமா முதலில் யோசிக்க, “ப்ளீஸ் க்கா… நீ சரின்னு சொல்லிட்ட, ஆனா யாருமே இல்லாம கல்யாணம் பண்ணிக்க முடியுமா.. பார்த்தி இருக்கான் தான்.. பட் நீ இருந்தா எனக்கும் இன்னமும் ஸ்பெசல்…” என, கண்கள் கலங்கிப்போனது ஹேமாவிற்கு..

“ம்ம் சரி லேகா.. பார்த்துக்கலாம்..” என்றுமட்டும் சொல்ல, முரளி வீட்டிற்கு வரவும், அப்படியே இறுக்கிக்கொண்டாள்.

முரளியோ ஹேமாவை பார்க்க, அவளோ இப்படி ஒருவன் இருப்பதே தெரியாதவள் போலிருக்க, லேகாவோ “குட்டி மா.. நம்ம லீவுக்கு ஊருக்கு போக போறோம்.. பிளைட்ல போக போறோம்…” என்று முரளியின் மகளிடம் சொல்லிக்கொண்டு இருக்க, இதை கேட்டதும் முரளிக்கு திக்கென்று இருந்தது..

“ஏய் என்ன சொல்ற நீ???” என்று லேகாவிடம் மெதுவாய் தான் கேட்டான்.. ஹேமாவின் காதில் விழாதவாரு..

“நான் சொன்னதை செய்யலைன்னா.. இப்போ நான் சொன்னதும் நடக்கும், சொல்லாததும் நடக்கும் மாமா…” என்றவள், எழுந்து உள்ளே சென்றுவிட, அந்த வீட்டினில் தான் மட்டும் தனியாய் நிற்பது போலிருந்தது.

மேலும் இரண்டு நாட்கள் கடந்திருக்க, முரளி அந்த உயில் விசயம் பற்றி எதும் பேசுவதாய் இல்லை.. தோல்வியை ஒத்துக்கொள்ள மனதில்லை.. இன்னும் வேறு யோசிக்கத் துவங்கியிருந்தான். லேகாவின் பொறுமையும் நீர்த்துக்கொண்டே வந்தது. பார்த்திபனிடம் கேட்டாள்

“என்ன செய்யட்டும்..” என்று,

“வேற வழி இல்ல லேகா அண்ணிக்கிட்ட சொல்லித்தான் ஆகணும். முரளி நெக்ஸ்ட் ஸ்டேப் யோசிக்கிறான் போல…” என, லேகாவிற்கு பயம் வேறு ஒருபக்கம் ஹேமா என்ன செய்வாளோ என்று..

ஆனாலும் முரளி வாய் திறப்பதாய் இல்லை.. இவர்களுக்கு வேறு வழியும் இல்லை.. சொல்லித்தான் ஆக வேண்டும். மனதை தேற்றிக்கொண்டு தான் லேகா சொன்னாள் ஹேமாவிடம் இவ்விசயத்தை.. அனைத்தையும் கேட்ட ஹேமாவோ, பதறவில்லை, கோபிக்கவில்லை, அழவில்லை.. எதுவும் செய்யவில்லை அமைதியாய் இருக்க,

“அக்கா…” என்றாள் ஆச்சர்யமாய்..

“ஹ்ம்ம் அப்பா அம்மா, கூட பிறந்த தம்பி இவங்களையே தூக்கி போட்டாச்சு.. நம்ம எல்லாம் என்ன பெருசு லேகா??” என்று வெறுமையாய் சொன்னவள்,

“நான் இத்தனை நாள் பேசாம அமைதியா இருக்கேன்னு நினைச்சியா?? ம்ம்ஹும்.. இவரோட ஒவ்வொரு அசைவையும் கவனிச்சிட்டு தான் இருக்கேன்.. இம்பார்டன்ட் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இவர் எங்க வைப்பார்ன்னு ஒரு கெஸ் இருக்கு..” என, லேகாவிற்கு ஹேமாவை எண்ணி பாவமாய் இருந்தது.

அவளின் வாழ்வு இப்படி அடியோடு மாறிப்போனது கண்டு.. இப்போதும் கூட தோன்றியது, ‘பேசாமல் அனைத்தையும் நீயே வைத்துகொள்..’ என்று சொல்லிவிடலாமா என்று..

ஆனால் முரளி அடுத்து என்ன வேண்டுமானாலும் செய்வானே..

“லேகா.. வா போலாம்…” என்று ஹேமா அழைக்க,

“என்னக்கா?? எங்க??” என,

“வா… நம்ம பீச் ஹவுஸ் போலாம்.. நான் நினைச்சது சரின்னா அந்த உயில் அங்கதான் இருக்கணும்..”  என்று அழைத்து செல்ல, ஹேமா எண்ணியது சரியே..

அங்கே பழைய பொருட்கள் போட்டு வைத்திருக்கும் அறையில் ஒரு பெட்டியில் வைத்திருந்தான் முரளி.. சினிமாக்களில் வரும் வில்லன் எல்லாம் என்ன? அவர்கள் ஒரு வகை என்றால் இவன் இந்த முரளி ஒரு வகை அவ்வளவே..

ஹேமாவிற்கு அந்த உயிலைப் பார்த்து மனம் மேலும் கடினப் பட்டுப் போக,  சிறிது நேரம் அப்படியே இருந்தவள், “லேகா இனி நான் பார்த்துக்கிறேன்.. நீ லாயர் கிட்ட பேசிடு” என்றுவிட்டாள்.

“என்ன செய்ய போறக்கா??” என்று லேகா கேட்டதற்கும் ஹேமா பதில் சொல்லவில்லை..

ஆனால், அன்றைய தினம் மாலை முரளி வீட்டிற்கு வந்ததுமே, ஹேமா செய்தது, அவன் கண் முன்னாடியே அந்த உயிலை எரித்தது தான்..

“ஏய் ஏய் என்ன செய்ற நீ???” என்று முரளி பதற, அவனையும் ஒரு எரிக்கும் பார்வை அவ்வளவே முரளி இரண்டடி பின்னால் தள்ளி நிற்க, லேகா கூட ஹேமாவின் பார்வையில் கொஞ்சம் தள்ளிதான் நின்றாள்.

எட்டி நின்றுவிடு இல்லையெனில் உன்னையும் எரித்து விடுவேன் என்பதுபோல் தான் ஹேமா பார்த்துவிட்டு போனாள்.

முரளிக்கு அனைத்து வழிகளும் அடைபட்டு போனதாய் இருந்தது.. யாருக்கும் தெரியாது என்று செய்தவைகள் எல்லாம் இப்போது ஒவ்வொன்றாய் வெளிவர, அவனே எதிர்பார்க்காத ஒரு விஷயம், ஹேமா தன் பொருட்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு, பிள்ளையையும் தூக்கிக்கொண்டு லேகாவோடு சென்று ஈஸ்வரி சுந்தரமோடு இருந்துகொண்டாள்..

ஒருவனுக்கு, தன் குடும்பத்தினரின் முன்னேயே தாழ்ந்து போவதும், தன் குடும்பத்தினராலேயே தனிமை படுத்தப்பட்டு ஒதுக்கி வைப்பதுமான தண்டனையை விட கொடுமை வேறெதுவுமில்லை..

‘பணம் தானே வேணும்.. மனுசங்க வேணாம் தானே.. தனியே இருந்துகொள்…’ இதுவே ஹேமாவின் முடிவாய் இருந்தது..

முரளி என்பவனுக்கு இப்படியானதொரு தண்டனை மட்டுமே ஆகச் சிறந்ததாய் இருக்கும்..

       

                         

                 

 

Advertisement