Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 20

ஆகிற்று பத்து நாட்கள்..

பார்த்திபனுக்கு அவன் எதிர்பார்த்த லோன் பணம் வந்துவிட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னமே தன்யாவும், காஞ்சனாவும் நான் தருகிறேன் என்று போட்டியிட, பார்த்திபனுக்கு தயக்கமே மிஞ்சியது. சிறிது தாமதம் ஆனாலும் சரி, காத்திருந்தே செய்வோம் என்ற முடிவில் இருந்தான்.

“இல்ல வேணாம் சித்தி… வேணாம் தன்யா..” என,

“டேய் என் கைல கொஞ்சம் நகை இருக்கு தர்றேன்..” என்றார் ஈஸ்வரி..

“ம்மா.. வேண்டாம்.. இன்னும் ஒரு வாரத்துல லோன் வந்திடும்..” எனும்போதே,

“அது வரைக்கும்?? இங்க இருக்க சொன்னா சரியா வராதுன்னு சொல்லிட்ட.. பின்ன எங்க இருக்க போறீங்க நீங்க??” என்று காஞ்சனா கேட்க,

“சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் சொல்லிருக்கேன் சித்தி.. ஈவ்னிங் கீ வந்திடும்..” என்று பார்த்திபன் சொல்ல,

‘இவன் தான் எத்தனை யோசனை செய்திருக்கிறான்…’ என்று தோன்றியது அனைவர்க்கும்.   

“ஆனாலும் பார்த்தி.. சொல்றேன்னு தப்பா நினைக்காத… நீங்க இப்போ சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டே போங்க.. பட் என்கிட்டே பணம் இருக்கு நான் தர்றேன்.. புது வீட்டுக்கு கொடுத்திடு.. பேங்க்ல சும்மாதான் டா போட்டு வச்சிருக்கேன். லோன் வரவும் திருப்பிக் கொடு.. சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் தானே நமக்குள்ள..” என்று காஞ்சனா சொல்ல,

“இல்ல சித்தி இன்னும் ஒரு வாரம் தானே..” என்றான் மறுப்பாய்..

யார் சொல்லியும் பார்த்திபன் கேட்காது போக, ஈஸ்வரியோ “தன்யா நீ சொல்லேன்..” என, ‘நானா??!!’ என்றுதான் பார்த்தாள்.

அனைவருக்கும் முன்பே அவள் நான் பணம் தருகிறேன் என்றாள் தானே. ஆனால் அதையும் சரிவராது என்று வேண்டாம் சொல்லிவிட்டான் பார்த்திபன் இப்போது காஞ்சனா தான் தருகிறேன் என்றதற்கும் வேண்டாம் என்க, ஈஸ்வரி தன்யாவை சொல்ல,

“பார்த்தி…” என்றாள் மெதுவாய்.

தன்யாவிற்கு பார்த்திபனின் பெற்றோர்களிடம் முன்னப்போல் இப்போது சகஜமாய் பேசிட வரவில்லை. ஒரு பயம், ஒரு தயக்கம் இருக்க, ஈஸ்வரி கேட்பதற்கு மட்டும் பதில் சொன்னாள். சுந்தரம் இதனை கவனித்து

“என்னம்மா புதுசா இப்படி??” என, அனைவரின் முகத்திலும் சூழலை மீறி ஒரு புன்னகை அவ்வளவே..

எல்லோர் மனதிலும் வருத்தங்கள் இருந்தன, ஆனால் அதையும் விட இப்போது அடுத்ததாய் என்ன செய்வது என்கின்ற எண்ணமே முதலாய் இருக்க, வருத்தங்களை தள்ளி வைத்து, அனைவரும் பேசிக்கொண்டு இருக்க, பார்த்திபனோ திடமாய் மறுத்துவிட்டான் யாரின் பணமும் வேண்டாம் என்று.

“பத்து நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. என்ன எக்ஸ்ட்ரா செலவு ஆகும் அவ்வளோதானே சித்தி.. ப்ளீஸ்.. அப்படி லோன் வரலைன்னா நான் கண்டிப்பா உங்கக்கிட்ட வாங்கிக்கிறேன்..” என்றிட காஞ்சனாவிற்கு கொஞ்சம் வருத்தம் தான்.

இருந்தாலும் ஒன்றும் சொல்லாது “ம்ம் அங்க இருந்து திங்க்ஸ் எல்லாம் எடுக்கணும் தானே..” என, ஈஸ்வரிக்கு இதை கேட்டதும் அழுகை முட்டியது.

அவர் திருமணம் முடித்து இங்கே வாழ வந்த வீடு.. இப்போது அவரின் மகனே வெளியே போ என்றிட, நிச்சயம் அந்த பெற்றவர்களின் உணர்வை சொல்லி மாளாது. ஆனாலும் கூட மனது முரளி வந்து ‘ஒரு கோபத்துல சொல்லிட்டேன்… மன்னிச்சுக்கோங்க… நம்ம வீட்டுக்கே வாங்க..’ என்று சொல்ல மாட்டானா என்று எதிர்பார்த்தது.

சுந்தரத்திற்கும் மனது கனத்து போனது. பெண்கள் சட்டென்று அழுதுவிடுகின்றனர். ஆண்களால் அது முடிவதில்லை.. சுந்தரம் முகம் இறுகிப்போய் அமர்ந்திருக்க, அவரின் மனதுமே முரளியை எதிர்பார்த்தது.

“அப்பா… ப்ளீஸ் எதுவும் நினைக்காதீங்க.. நான் இருக்கேன் தானே…” என்றான் பார்த்திபன் ஆறுதலாய்.

அவருக்கு என்ன தோன்றியதோ, “உன்ன நாங்க ஜப்பான் போக சொல்லிருக்கக் கூடாது டா.. முரளி பேச்சை கேட்டு உன்னையும் ரொம்ப கஷ்டப் படுத்திட்டோம்..” என, பார்த்திபன் இப்போது தன்யாவின் முகம் பார்த்தான்.

‘இவர்களுக்கு எப்படி எல்லாம் தெரியும்…’ என்பதுபோல்..

ஏனெனில், முரளி தான் பார்த்திபனை தள்ளாத குறையாய் ஜப்பான் அனுப்பினான் என்று தெரியும், ஆனால் அதற்கு பின்னால் அவன் தன்யாவை வைத்து செய்த காரியங்கள் எல்லாம் இவர்களிடம் சொல்லவில்லை பார்த்திபன். மிகவும் நொந்து போவர் என்று சொல்லாது இருக்க, இப்போது அப்பா இப்படி சொலல்வும், தன்யாவை பார்க்க,

“அவளை ஏன் டா பாக்குற… நான் தான் என்ன நடந்ததுன்னு பிடிவாதமா கேட்டேன்…” என்றார் ஈஸ்வரி அழுகையினூடே..

“ம்ம்ச்…” என்ற ஒரு சலிப்போடு இப்போதும் கூட பார்த்திபன் தன்யாவை தான் முறைத்தான்.

“நான்.. நான் என்ன செய்ய முடியும்…” என்று அவள் சொல்ல,

“பார்த்தி, முழு விபரம் எங்களுக்கு தெரிஞ்சது கூட நல்லது தான்டா.. ஏன்னா நாளைக்கு வேறமாதிரி குளறுபடிகள் நடக்காது பாரு..” என்று சுந்தரம் சொல்ல, அப்போதே அமைதியானான் பார்த்திபன்.   

தன்யாவிற்கு மனது ஒருப்பக்கம் சந்தோசமாய் இருந்தாலும், மறுபுறம்   மிகவும் சங்கடமாய் தான் இருந்தது. பார்த்திபன் வெளியே சந்திக்கலாம் என்றுதான் சொன்னான். அவள் தான் எப்போதும் போல் மொட்டை மாடியில் பார்ப்போம் என்று.

இவர்கள் மட்டும் அன்று மாடியில் சந்திக்கவில்லை எனில், முரளியும் இவர்களை பார்த்திருக்கமாட்டான் தானே.. அவசர அவசரமாய் இப்போது இந்த களேபரங்கள் நடந்திருக்காது தானே.

இப்போது தன்யாவின் முகமும் சுருங்கிட, அனைவரையும் பார்த்தவனோ “இப்படி எல்லாரும் முகத்தை தூக்கினா நான் என்ன செய்வேன்.. எனக்கு கவலையே இல்லையா என்ன?? ம்மா நீ வா.. வந்து என்னனென்ன எடுக்கணும் சொல்லு.. சித்தி நீங்களும் வாங்க.. நான் வண்டிக்கு சொல்லிடறேன்…” என்று பார்த்திபன் அனைவரையும் துரிதப்படுத்த, அடுத்து அடுத்து மளமளவென வேலைகள் நடந்து, இதோ பத்து நாட்கள் கண் மூடி திறப்பதற்குள் ஓடி, ‘ஈஸ்வரி இல்லதின்..’ புதுமனை புகுவிழா.

அனைவரும் இருந்தனர் முரளி தவிர…

லேகாவோடு சேர்ந்து ஹேமாவும் வந்திருந்தாள். ஹேமாவிற்கு தயக்கமாகவும் இருந்தது. ஆனால் பார்த்திபன் சொல்லியிருந்தான் “நீங்கதான் வந்து பால் காய்ச்சனும் அண்ணி..” என்று,

ஈஸ்வரியும் “நீ தான் வந்து முன்ன நிக்கணும்…” என்று சொல்லியிருக்க, சொந்த பந்தங்கள் என்று வேறு யாருக்கும் அழைக்கவில்லை.

ஹேமாவிற்கு கணவன் மீது கோபம், வருத்தம் எல்லாம் இருந்தாலும் அவள் மனதில் இவன் இப்படியா என்ற ஏமாற்றமே அதிகம் இருக்க, அவனிடம் பேசுவதை அப்படியே நிறுத்திவிட்டாள். ஒரே வீட்டினில் இருந்தாலும் இப்போது அவனிடம் பேசுவதில்லை. அவளின் அப்பா இருந்திருந்தாலும் நிச்சயம் ஹேமாவும் கூட வெளியே கிளம்பியிருப்பாளோ என்னவோ.

ஆனால் இப்போது பிள்ளையை தூக்கிக்கொண்டு எங்கே செல்வது. இவளின் சொத்துக்கள் எல்லாமே முரளியின் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது. மாதம் ஒரு தொகை இவளுக்கென்று வங்கி கணக்கில் ஏறுவது போல் அவளின் அப்பா முன்னே செய்து வைத்திருந்தது மட்டுமே இப்போது அவளின் நம்பிக்கையாய் இருந்தது.

லேகா கூட “அக்கா.. நான் ஊருக்கு போற வரைக்கும் நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல கூட இருக்கலாமா??” என்று கேட்க,

“வேணாம் லேகா… நீ வந்த விசயங்கள் எல்லாம் பார்க்கணுமே.. இப்போ சொல்றேன்.. உன்னோட கல்யாணம் உன்னோட விருப்பம் தான். அதுக்கு நான் என்ன செய்யணுமோ சொல்லு செய்றேன்.. வேற யார் முடிவும் தேவையில்லை..” என்று முரளியின் காது படவே சொன்னது, முரளிக்கு பேரதிர்ச்சி.

ஆண்டு பழகியவனுக்கு, தான் ஆழ ராஜ்ஜியம் இல்லையெனில் அவனின் மன நிலை எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது முரளிக்கு இப்போது.

அனைவரையும் அவன் ஒதுக்கி பணம் மட்டுமே பெற நினைத்தான்.. ஆனால் இப்போதோ அவனை அனைவரும் ஒதுக்கிவிட்டு அவரவர் வேலையில் இருப்பது ஒருவகையில் மன அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது.

அதிலும் ஹேமாவோ இங்கே புது வீட்டிற்கு கிளம்புகையில் போய்விட்டு வருகிறேன் என்று கூட சொல்லவில்லை.

தன்யா, தன்யாவின் பெற்றோர், காஞ்சனா, லேகா, பின் பார்த்திபனின் நண்பர்கள் இருவர் அவ்வளவே அங்கே புது வீட்டு புகுமனைக்கு.. ஆனால் அழகாய் அம்சமாய், அனைத்தும் முடிய, தன்யா தான் தன் அப்பா அம்மாவின் முகத்தினை ஒவ்வொரு முறையும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

இன்னமும் அவர்கள் தங்களின் முடிவினை சொல்லியிருக்கவில்லை. அவர்கள் வந்தபோது, பார்த்திபன் குடும்பத்தினர் எல்லாம் சர்வீஸ் அப்பார்ட்மென்ட் சென்றுவிட, காஞ்சனா மறுநாள் தான் நடந்தவைகளை சொன்னார் கோபாலிடமும் சுகந்தியிடமும்.

கேட்டதும் இருவருக்கும் முகம் விழுந்து போனது..

மகளின் முகத்தினை இருவரும் பார்க்க “இப்படியெல்லாம் நடக்கும்னு அவங்களும் நினைக்கலை….” என்றாள் தன்யா.

“ம்ம் இவ்வளோ பிரச்னைக்கு நடுவில கண்டிப்பா நாங்க உன்னை அங்க கொடுக்கனுமா??” என்று சுகந்தி கேட்க,

“அம்மா..!!!” என்றாள் தன்யா கொஞ்சம் கண்டிக்கும் நோக்கில்..

காஞ்சனாவோ “தன்யா… நான் பேசிக்கிறேன்..” என,

“இல்ல அத்தை அது…” என்று தன்யா இழுக்க,

கோபால் “யாரும் எதுவும் பேச வேணாம்… காஞ்சனா, அவங்களை எங்க போயி பார்க்கிறது?? இல்லை இங்க வருவாங்களா??” என்று தங்கையிடம் கேட்க,

“அவங்களே வர்றேன் சொல்லியிருக்காங்கண்ணா…” என்றவர், ஈஸ்வரிக்கு அழைத்து விஷயம் சொல்ல,

அன்றைய தினம் மாலையே, பார்த்திபன் தன் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு இங்கே வர, பக்கத்து வீட்டில் இருந்து அனைவரையும் ஹேமா தான் பாவமாய் பார்த்துகொண்டு இருந்தாள்.

இவர்களுக்கும் சங்கடமாய் தான் இருந்தது, ஆனால் என்ன செய்ய, திரும்ப திரும்ப முரளியிடம் பஞ்சாயத்து பேசுவது நல்லதா, இல்லை பார்த்திபனுக்கு ஒரு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பது சிறந்ததா என்று யோசிக்க, இரண்டாவதே முக்கியமாய் பட்டது.

ஏற்கனவே அறிமுகமானவர்கள், பழகியவர்கள், சொந்தங்கள் என்றாலும், திருமண பேச்சு எடுக்கையில், அதுவும் இப்படியொரு சூழ்நிலையில் அனைவருக்குமே ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது.

சுந்தரம் தான் “புது வீடு அடுத்த வாரம் பாய் காய்ச்சுறோம் கண்டிப்பா நீங்க எல்லாம் வந்திடனும்..” என்று அழைப்போடு ஆரம்பிக்க,

“ரொம்ப சந்தோசம் மாமா… ஆனா இவங்க விஷயம்..” என்றார் கோபால், பார்த்திபனையும் தன்யாவையும் காட்டி..

“இவ்வளோ தூரம் வந்தாச்சு.. இதுக்குமேல நம்ம முடியாதுன்னு எல்லாம் சொல்ல முடியாதுங்களே…” என்று ஈஸ்வரி சொல்ல,

“நீங்க சொல்றது சரிதாங்கண்ணி.. ஆனா பொண்ணு கொடுக்கிறப்போ நாங்க எல்லாமே யோசிக்கத் தானே வேணும்…” என்று சுகந்தி பேச, பார்த்திபனும் தன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

பார்த்திபன் “நான் கொஞ்சம் பேசட்டுமா??” என்று பொதுவாய் அனைவரையும் பார்த்து கேட்டான்.

ஆம், பார்த்திபனும், தன்யாவும் சேர்ந்து இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்ற முடிவினில் இருந்தனர். அதை வீட்டு பெரியவர்களிடம் முறைப்படி சொல்வது தானே நல்லது. அனைவருக்கும் இது சங்கடமாய் தான் இருக்கும் ஆனாலும் சொல்லித்தானே ஆகவேண்டும்..  

பார்த்திபன் இப்படிக் கேட்டதுமே, தன்யா “இல்லை நானே சொல்றேன்…” என,

காஞ்சனா “ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் சொல்லுங்க..” என்றார் என்ன சொல்லப் போகிறார்களோ என்ற யோசனையில்..

“அது.. இப்போதைக்கு எங்களுக்கு கல்யாணம் வேண்டாம்னு முடிவு…” என்று தன்யா சொல்லும்போதே,  “என்ன விளையாடுறீங்களா??” என்று சுகந்தி மகளை கோபமாய் கத்தியேவிட்டார்.

“ம்மா ப்ளீஸ்…” என்று தன்யா சொல்ல, 

சுந்தரமோ “என்ன பார்த்தி இதெல்லாம்…” என,

“மாமா.. இது பார்த்தியோட முடிவில்லை.. என்னோட முடிவு…” என்றாள் தன்யா அழுத்தம் திருத்தமாய்..

இவளுக்கு இத்தனை அழுத்தமாய் பேசவும் தெரியுமா என்றுதான் இருந்தது அனைவர்க்கும் எங்கே. பார்த்திபன் கூட சொன்னான் தான் “வீட்ல பெரியவங்க சங்கடபடுவாங்க தன்யா..” என்று

ஆனால் தன்யாவோ “இல்ல பார்த்தி.. நான் உனக்கு பர்டன் கொடுக்க விரும்பலை… இப்போ இதெல்லாம் அன் எக்ஸ்பக்டட்டா  நடந்திடுச்சு… நான் அஸ்யூரன்ஸ் போட்டிருக்கேன்னு நீ யாருக்கும் சொல்லவே சொல்லாத.. அது நமக்குள்ள இருக்கட்டும்.. இப்போ மேரேஜ்னா கண்டிப்பா அதுக்கும் நிறைய செலவு ஆகும்…”

“அதுக்காக நம்ம விஷயத்தை அப்படியே விட சொல்றியா?? நீ சைன் பண்ணிருக்க விஷயம் அட்லீஸ்ட் உங்க அப்பா அம்மாக்கு தெரியனும் தன்யா..” என,

“சைன் பண்றப்போ சொல்லிருந்தா பரவாயில்லை.. பட் நான் சொல்லலை.. இப்போ சொன்னா அது சரியா இருக்காது.. சோ.. எல்லாமே ஸ்மூத்தா முடியட்டும்.. தென் பார்த்துப்போம்..” என்றாள் தன்யாவும் உறுதியாய்.

“இல்ல தன்யா… இதுக்குமேலயும் லேட் பண்றது சரியில்லை.. கொஞ்சம் கேப் கிடைச்சா கூட முரளி திரும்ப எதுவும் செய்வான்.. சோ வேண்டாம்..” என்று பார்த்திபன் திண்ணமாய் மறுக்க,

“நானும் தான் சொல்றேன் பார்த்தி.. இப்போ வேண்டாம்… நான் சைன் பண்ணது உனக்கும் எனக்கும் இருக்கிற விசயமா மட்டும் இருக்கட்டும்… இல்லையா ஊருக்கே சொல்லனும்னா சொல்லிக்கோ…” என்று தன்யா கொஞ்சம் கோபமாய் சொல்வது போல் சொல்ல,

பார்த்திபனோ ‘என்ன நீ??!!’ என்றுதான் பார்த்தான்.

“வீடு எல்லாம் செட் ஆகட்டும்.. அல்ரடி முரளி அண்ணா பண்ணது, மாமா அத்தைக்கு மனசுக்குள்ள கஷ்டமா இருக்கும்.. இப்போ நீயும் நானும் கல்யாணம் பண்ணி ஜப்பான் போயிட்டா, இங்க அவங்களுக்கு யாரு இருக்கா??  உன் லோன் தீரட்டும்.. தென் நீ இந்தியால செட்டில் ஆகுறது போல வா.. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்று சொல்ல, தன்யா சொல்லும் காரணங்கள் எல்லாம் சரிதான் என்றாலும், பார்த்திபனுக்கு இதற்கு சம்மதிக்க மனம் வரவில்லை.

“அதுக்கெல்லாம் நியர்லி ஒன் இயர் ஆகும் தன்யா..” என்றான்..

அவளோ “சோ.. வாட்..??!!” என்றாள் சாதரணமாய்.

அவனுக்காக தன்யா நிறைய கஷ்டங்கள் மன ரீதியாக தாங்கியிருக்கிறாள். ஏன் அவனே கஷ்டங்கள் கொடுத்திருக்கிறான் தான். இதற்கு மேலும் அவளை காக்க வைத்துவிட்டு, அதுவும் இப்போது அடிபட்ட புலியென முரளி இருக்கையில், திரும்பவும் தன்யாவை இங்கே விட்டு செல்ல அவனுக்கு மனதில்லை.

“இல்ல தன்யா.. என்னால இதை உனக்கு செய்யவே முடியாது… நானே உன்னை நிறைய ஹர்ட் பண்ணிருக்கேன்…”

“இப்போ நீ இதை செய்யலைன்னா இன்னமும் நான் ஹர்ட் ஆகுவேன் பரவாயில்லையா.. நம்ம அவ்வளோ செல்பிஷ் இல்ல பார்த்தி.. கொஞ்சம் யோசிச்சு பாரு.. ஹேமா அக்கா.. லேகா இவங்களுக்கு என்ன செய்ய போற நீ??” என, பார்த்திபன் நிதானித்தான்.

“என்ன சொல்ற நீ???”

“இப்போ நம்மனால தானே எல்லாருக்கு நடுவிலயும் பிரச்சனை.. இரு இரு பார்த்தி.. முரளி அண்ணா  பண்ணது தான் எல்லாம்.. பட்.. நம்ம லவ்னால தானே இதெல்லாம் வெளிய வந்தது.. சோ கண்டிப்பா எல்லாமே ஸ்மூத் ஆகட்டும் பார்த்தி.. அதான் நல்லதும் கூட.. இதோ வந்தான்.. அவனுக்கு என்னன்னு அவன் கல்யாணம் முடிச்சிட்டு போயிட்டான்னு உன்னை யாரும் சொல்லிட கூடாது…” என்று தன்யா எடுத்து சொல்ல, பார்த்திபன் சரி என்று சொல்வதற்கு வெகு என்றம் ஆனது.

ஆனால் இன்று பெரியவர்கள் முன்னிலும் கூட தன்யா பொறுப்பை தனதாக்கிக் கொள்ள, இருவரின் அப்பா அம்மாவிற்கும் என்ன சொல்லவது என்று தெரியவில்லை. சில சூழ்நிலைகளை சின்னவர்கள் அழகாய் கையாண்டு விடுகிறார்கள், அந்த பெருந்தன்மை சில நேரங்களில் வீட்டு பெரியவர்களுக்கு இருக்கிறதா என்றால் கொஞ்சம் யோசனையே..

பார்த்திபனோ, தன்யாவின் பெற்றோர்களுக்கு இதில் இஷ்டமில்லை என்று அறிந்து “இது எங்களோட முடிவு.. பட்.. நீங்க என்ன சொல்றீங்களோ அதை நாங்க கேட்டுப்போம்…” என,

கோபால் “கொஞ்சம் டைம் கொடுங்க..” என்று சொல்ல, காஞ்சனவோ “இதேது என் பையனுக்கு கேட்டா யோசிப்பீங்களா? பார்த்தியும் என் மகன் தான்…” என,

“நாங்க முடியாதுன்னு சொல்றதுக்காக யோசிக்கலை.. நல்ல முடிவு சொல்றதுக்கும் முன்ன சில விசயங்கள் தெளிவு பண்ணிக்கிறதுல தப்பில்லையே…” என்றார் சுகந்தி.

சுகந்திக்கு இதில் அத்தனை விருப்பமில்லை. கொஞ்சம் பெரிய இடமாய் பார்த்து தன்யாவிற்கு திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசை அவருக்கு.. ஆனால் அவளின் ஆசை தெரிந்த பின்னே, மறுக்கவும் முடியவில்லை. இதில் இவ்வளவு பிரச்னைகள் வேறு இருக்க, உடனடியாய், நெருக்கடியான நிலையில் சரியென்றும் சொல்ல முடியவில்லை. அதற்காக அப்படியே போகட்டும் என்ற விட முடியாத நிலை.

தன்யாவும் நிறைய நிறைய வீட்டினில் பேசினாள் தான். காஞ்சனாவும் பார்த்திபன் பற்றி எடுத்து சொன்னார் தான். காத்திருப்பதில் தவறில்லை. இருந்தாலும் ஒருவருடம் என்பது அதிகமாய் பட்டது தன்யாவை பெற்றவர்களுக்கு..

புது வீட்டு விசேசத்திற்கு கூட, சுகந்தி “நீ கண்டிப்பா வரணுமா??” என்றுதான் கேட்டார் மகளிடம்.

“ம்மா… நான் வராம.. ஏன்ம்மா இப்படி பண்ற??” என்று சண்டை போட்டு தான் தன்யா வந்திருந்தாள்.

இங்கே வந்தும் அவர்கள் முகத்தினைப் பார்க்க “ஏன் டி இப்படி பாக்குற.. என்னவோ நாங்க தப்பு பண்ற மாதிரி இருக்கு..” என்றார் சுகந்தி..

“நான் சும்மாதான் பார்த்தேன்…” என,

“சும்மா.. நீ… எனக்குத் தெரியாதா என்ன?? ஆனாலும் பேசி முடிச்சிட்டு அப்புறம் ஒன் இயர் எல்லாம் ரொம்ப லேட் தன்யா..” என்று சுகந்தி இப்போதும் சொல்ல,

“ம்மா நானும் பார்த்தியும் சந்தோசமா வாழனும்.. அவ்வளோதான்.. இப்போ அவனுக்கு கொஞ்சம் சூழ்நிலை சரியில்லை.. அப்படியிருக்கப்போ நம்மளும் அவனை படுத்த வேண்டாமே…” என்றாள் பாவமாய்.

பார்த்திபன் வந்தவர்களை கவனித்துக்கொண்டு இருந்தாலும், அவனின் பார்வை எல்லாம் தன்யாவிடம் தான் இருந்தது.

‘இவக்கிட்ட எத்தனை சொன்னாலும் திருந்த மாட்டா.. ஆர்கியு பண்ணாத சொன்னா கேட்கறாளா??’ என்றுதான் பார்த்தான்.

அவனும் சொல்லிக்கொண்டே தான் இருந்தான் “அவங்க முடிவு சொல்றப்போ சொல்லட்டும் தன்யா நீ எதுவும் போர்ஸ் பண்ணாத..” என்று.

ஆனால் தன்யா விடுவாளா என்ன??

சுகந்தி அந்தப்பக்கம் போகவும் “எவ்வளோ சொன்னாலும் கேட்க மாட்டியா நீ??” என்றபடி வந்து அருகில் நின்றான்..

“நீ உன்னோட சைட் எல்லாம் செமையா ப்ளான் பண்ணி பண்ணிட்ட.. பட் நான் எதுவுமே செய்யலை..” என்று உதடு பிதுக்கினாள் தன்யா..

“லூசு…” என்று அவளைப் பார்த்து பார்த்திபன் முணுமுணுக்க,

“தள்ளி போ.. எல்லார் முன்னாடியும் வந்து நின்னு என்ன பேச்சு.. போ…” என்று விரட்ட.

‘போ சொல்றியா நீ…’ என்று அதற்கும் ஒரு முறைப்பு அவனிடம்..

இவர்களின் விஷயம் இப்படியிருக்க, லேகாவும் ஹேமாவும் வந்து சுந்தரம் ஈஸ்வரியிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.

“மாமா எனக்கு நீங்கதான் இந்த ஹெல்ப் செய்யணும்.. எனக்கு ப்ராபர்டியோ, பணமோ எதுவும் அர்ஜன்ட் இல்லை. பட் இனியும் அது முரளி மாமா மேனேஜ்மென்ட்ல இருக்கிறது எனக்கு பிடிக்கலை.. லாயர்கிட்ட பேசிட்டேன்… சோ உங்களுக்கு பவர் எழுதி கொடுக்கிறேன்.. நீங்க இன்சார்ஜ் எடுத்து எப்போ முடியுமோ அப்போ சேல்ஸ் பண்ணிடுங்க.. இல்லையா இப்போ இருக்கிறது போலவே இன்கம் மட்டும் எனக்கு வர்றது போல செஞ்சு கொடுங்க..” என்று லேகா சொல்ல, சுந்தரமும் ஈஸ்வரியும் மலைத்துப் போய் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்..  

“மாமா… யார்காக இல்லைன்னாலும் எனக்காக நீங்க இந்த உதவி லேகாக்கு செய்யணும்…” என்று ஹேமா சொல்ல,

“அவன் என்ன சொல்வானோ…” என்றார் ஈஸ்வரி..

உண்மையும் அதானே.. லேகாவின் இந்த ஏற்பாடு முரளிக்கு தெரியாது.. தெரிந்தால் என்ன சொல்வானோ??!!

      

                  

                                

         

 

     

  

    

Advertisement