Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 2

பார்த்திபன்.. ஜப்பான் வந்தும் கூட ஒரு வாரம் ஆகிப்போனது.. இதுவரைக்கும் அவனாய் வீட்டினர் யாருக்கும் பேசவில்லை. பேசும் எண்ணமே வரவில்லை. ஆனால் இவன் ஜப்பான் வந்து இறங்கியதுமே ஆளாளுக்கு அழைத்து பேசினார்..

அனைத்தும் லேகாவின் மூலமாய்..

ஒருவித கோபத்தில் தான் இங்கே வந்தான் பார்த்திபன்.. பிடித்து வரவில்லை.  இங்கே வந்தும் கூட வெளியே எங்கேயும் போகவில்லை. புது நாடு.. புது ஊர்.. புது வீடு.. அவனை சுற்றி எல்லாமே புதிது தான்.. ஆனால் எதுவுமே அவனின் கண்ணிலோ கருத்திலோ பதியவில்லை.. லேகா வீட்டில்தான் தங்கியிருக்கிறான். ஆனால் அதுவே அவனுக்கு முள் மீது நிற்பது போன்றுதான் இருந்தது.

வேலை.. இதோ இன்னும் இரண்டு நாளில் போய் சேரவேண்டும்.. அதுவும் லேகா தான் ஏற்பாடு செய்திருந்தாள். இவள் எத்தனை தான் செய்வாள் என்று இருந்தது. வந்ததுமே அவனுக்கு ஒரு அலைபேசியும் ஒரு சிம்கார்டும் கொடுத்துவிட்டாள். வேலை அவன் இங்கே வரும் முன்னமே ஏற்பாடாகி இருந்தது..

எல்லாமே லேகாதான் செய்திருந்தாள்..

அத்தனை ஏன் அவன் தங்கப்போகும் வீடு கூட அவளே பார்த்துவிட்டாள்.. இவன் வந்ததில் இருந்து வீட்டில் வெறுமெனே இருக்கிறான். இரண்டு முறை, அலுவலகம் சென்றுவந்தான். அவ்வளவே.. வேறெங்கும் போகும் எண்ணமேயில்லை..

மனது எல்லாம் தன்யாவிடமே நின்று போனது..

கடைசியில் இவளும் இப்படியா என்று?? 

“ஹே..!! பார்த்தி.. என்ன இப்படி இருக்க.. கம் கம்.. ஒரு வாக் போயிட்டு வரலாம்.. வெதர் நல்லாருக்கு..” என்று லேகா அழைக்க,

“சாரி லேகா.. நீ போயிட்டு வா..” என்றான் அவளின் முகமே பாராது.

என்னவோ இன்றுதான் வீட்டில் இருக்கிறாள். அதுவும் வாரக் கடைசி என்று.. ஒருவேளை தான் இருப்பதாலோ?? என்று நினைத்தான். அவனும் தான் பார்க்கிறானே.. காலையில் சென்றால் இரவு தான் வருகிறாள்.. அவளின் வேலையும் அப்படித்தான்.. வேற்று நாட்டில் வந்து, அதுவும் கணவனை இழந்து, வேலையில் இத்தனை பெரிய பதவியில் முன்னேற வேண்டும் என்றால் நிச்சயம் அவளின் கடின உழைப்பு ஒன்றே தான் காரணமாய் இருக்கவேண்டும் என்று அவனுக்குப் புரியாமல் இல்லை..

ஆனால்??

என்னவோ அவனிடம் நிறைய கேள்விகள் இருந்தன.. கேட்கவும் முடியாத கேள்விகள்..

“அட…” என்று இடுப்பில் கை வைத்து முறைப்பது போல் பாவனை செய்தவள், நிச்சயம் அழகியே.. அதுவும் இங்கே வந்து இன்னும் அழகியாகிப் போனாள்.

மெழுகு சிலை தான் லேகா…

என்னவோ அவளைப் பார்க்க பார்த்திபனுக்கு பாவமாய் இருந்தது. எதற்காக இவள் இங்கே இருக்கிறாள்?? யாருக்காக நேரம் காலம் பாராது உழைக்கிறாள்.. எதுவும் தெரியாது..

‘அடேய் உன் நிலைமையே ஒப்பன் செய்யாத டோல் கேட் மாதிரி இருக்கு.. இதுல இவளை நினைச்சு பரிதாபமா…??’ என்று அவனின் மனம் அவனைப் போட்டு குட்ட,

“பார்த்தி.. என்ன ட்ரீம்ஸா..” என்றுவந்து அவனின் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள் லேகா.

முன்னெல்லாம் இவள் இப்படி தொட்டு பேசுவது கிடையாது.. ஆனால் ஏர்போர்டில் பார்த்ததுமே வந்து இவனை அணைத்துக்கொள்ள பார்த்திபனுக்குத் தான் என்னவோ போலானது.. சொல்லப் போனாள் நெளிந்தான் கொஞ்சம்..

மனதோ ‘இதை மட்டும் தன்யா பார்க்கணும்..’ என்றெண்ண,

“அவளுக்கு இருக்கு…!!!” என்று கறுவிக்கொண்டது அவனுள்ளம்..

பார்த்திபன், தன் சிந்தனையின் பயணங்களில் அலைபட்டு கொண்டு இருக்க, “வா பார்த்தி.. எப்போ பார் என்ன யோசனை..” என்று கை பிடித்து இழுத்தாள் லேகா..  

“ஷ்..!! விடு லேகா.. நீ போ நான் வரலை…” என்றவன் திரும்பவும், முகம் திருப்பிக்கொள்ள,

“சரியானா போரிங் பெல்லோ நீ..” என்றவள், இரவு நேர நடை கிளம்பிட, இவன் வந்து பால்கனியில் நின்று பார்த்தான்..

அவள் சொன்னதுபோல சீதோசனம் நன்றாய் இருந்தது.. இரவு நேர நடை என்பது இன்னும் அழகாய் தான் இருந்திருக்கும். அதுவும் அங்கே தெருக்கள் எல்லாம் சுத்தமாய் இருக்க, ஆட்களின் நடமாட்டம் கூட அத்தனை இல்லை.. சொல்லப்போனால் இந்தியா போல் இல்லை..

ஜில்லென்று இருக்க, நிச்சயம் இப்படியொரு ஜில்லிப்பில் நடை என்பது நன்றாக இருக்கும் என்று தோன்றியது..  அதிலும் தன்யாவோடு என்றால் சொல்லவே வேண்டியதில்லை..

‘தன்யா….’ அவனின் கருமீசைக்குள் மெல்லியதாய் அவளின் பெயர் உச்சரிக்க, திகு திகுவென அவனின் உள்ளம் எரிந்தது..

எத்தனை தூரம் கடந்து வந்தாலும், அவளின் நினைவும், அவனை சுத்தும் அவளின் வாசமும் மட்டும் போகவேயில்லை.. சுவாசிக்கும் நேரமெல்லாம் அவளின் வாசம் உள் போவது அவனால் இப்போதும் நன்றாகவே உணர முடிந்தது.

“பார்த்தி பார்த்தி…” என்று சுற்றி வருவாள்..

அவளது சுபாவமே அப்படித்தான்… எப்படியான மனநிலையில் இருந்தாலும் நொடியில் பார்த்தியின் எண்ணங்களை தன் வசமாக்கி மாற்றிடுவாள்.. இப்போதும் கூட அதுதானே நேர்ந்தது.. அவன் மனதில் இருந்த திடத்தை மொத்தமாய் அழித்து அனுப்பிவிட்டாள்..

அவனை உயிர்ப்போடு வைத்திருந்தவள், இன்று அனைத்தையும் பிடுங்கி, பார்த்தி எனும் ஜடத்தை மட்டும் ஜப்பான் அனுப்பிவிட்டாள்.. காதலும், அதன் விலகலும் இத்தனை பெரிய வலி கொடுக்குமா??

கண்டிப்பாய் கொடுக்கும்..

உள்ளே நுழைவது டக்கென்று நடந்திடும்.. மாயம் தேவையில்லை மந்திரம் தேவையில்லை.. எவ்வித ஜி பூம்பா வேலைகள் தேவையில்லை.. பிடனியில் யாரேனும் கை கொடுத்து தள்ளுவது போல், காதல் ஒருநொடியில் வந்துவிடுகிறது.. ஆனால் அதில் இருந்து விலக நேர்ந்தால்??

அது அத்தனை சீக்கிரம் முடியாது இல்லையா..

விலகினாலும் அதன் தடயங்கள் இருக்குமே.. நாமே அதன் தடயமாய் இருக்கும்போது எங்கே எப்படி அதை மறப்பது??     

கையில் பால்கனி க்ரில்லை இறுகப் பற்ற அடுத்த நொடி ‘தன்யா….’ என்று பல்லைக் கடித்தான். எத்தனை நேரம் அப்படியே நின்றானோ தெரியாது. திரும்ப வந்து லேகா அவனை அழைக்கும் வரை அப்படியேதான் இருந்தான்..

“ஏய் பார்த்தி.. வாட் இஸ் திஸ்..??!!!!” என்று அவள் கைகளை ஆட்டி கேட்க,

“ம்ம்ச் இவ வேற..” என்றுதான் எண்ணத் தோன்றியது..

லேகாவை பார்த்து இவ்வுலகில் இப்படி நினைப்பவன் இவன் ஒருவனாய் தான் இருந்திட முடியும். நிச்சயமாய் அவளின் அழகு அவனை ஆகர்ஷிக்கவில்லை. அதுவே அவளுக்கு பெரும் வியப்பாய் இருந்தது..

லேகா, முரளியின் மனைவி ஹேமாவின் தங்கை.. கிட்டத்தட்ட அவள் ஜப்பான் வந்து ஐந்தாண்டுகள் மேலானது. அவளின் திருமணம் முடிந்து இங்கே வந்தாள். ஆனால் அடுத்த வருடத்திலேயே ஒரு விபத்தில் கணவனை இழக்க, யார் என்ன சொல்லியும் கூட அவள் இந்தியா வரவில்லை.

அங்கேயே இருந்துவிட்டாள்.. அப்பாவின் மறைவிற்கு மட்டும் கடந்த வருடம் வந்துவிட்டு போனாள் அவ்வளவே..

ஹேமாவும் முரளியும் “இங்க நாங்க எல்லாம் இல்லையா?? ஏன் நீ தனியா இருக்கணும் அதுவும் வேற நாட்டுல…” என்று கேட்க,

“எனக்கு அங்க செட்டாகிடுச்சு.. இங்க வந்தும் நான் தனியா தானே இருக்கணும்..” என்று அப்படியே பேச்சை முடித்துவிட்டாள்..

ஆனால் இங்கே ஹேமாவிற்கும், லேகாவிற்கும் ஏகப்பட்ட சொத்துக்கள்.. இப்போது எல்லாமே முரளியின் கண்காணிப்பில்..  ஒரு வார்தைக்கேனும் “இதெல்லாம் யார் பார்க்கிறது.. நீயும் இங்க இருந்தா நல்லாருக்கும்..” என்று முரளி சொல்ல,

“எனக்கு தோணும்போது கண்டிப்பா வந்திடுவேன் மாமா.. ஆனா இப்போ இல்லை.. இதெல்லாம் முடிஞ்சா நீங்க பாருங்க.. இல்ல எல்லாத்தையும் சேல் பண்ணிட்டு அக்காக்கும் எனக்கும் பாதி பாதின்னு எடுத்துக்கிறோம்..”

அதையும் இலகுவாகவே சொல்லி முடித்துவிட்டாள்..

ஆனால் முரளிக்கு எதையும் விற்கும் எண்ணமில்லை.. இதை வைத்தே பலது பெருக்கலாமே.. பொன் முட்டையிடும் வாத்துக்கள் அல்லவா.. ஆகையால் வெகு சிரமப்பட்டு அனைத்தையும் பார்ப்பது போல் அவன் தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அதுவும் சமீபமாய் மனதினில் இப்போது வேறொரு எண்ணம் முரளிக்கு.

அதுவும் பார்த்திபனால் ஏற்பட்டதே..

பார்த்திபன் படிப்பு முடித்ததுமே, வேலை எல்லாம் கிடைக்கவில்லை. கொஞ்சம் அலைந்தான் தான்.. பின் ஒரு நாள் அவனின் அப்பா அழைத்து “டேய் இந்த கம்பனிக்கு இண்டர்வியு போட்டிருக்கான் போயித்தான் பாரேன்..” என்று சும்மா சொல்வது போல் சொல்ல,

‘இவர் என்ன சொல்லிட போகிறார்..’ என்று வேண்டா வெறுப்பாகவே, எந்த கம்பனி என்று பார்க்க, “வாவ்…!!!” என்றுதான் அவனின் கண்களை விரிந்தது..

“என்னடா.. இந்த கம்பனிக்குள்ள போயிட்டா போதும்.. அடுத்து உன் லைப் பத்தி கவலையே இல்ல..” என்று திரும்ப அப்பா ஏற்றிவிட,

“கண்டிப்பா.. கண்டிப்பா ப்பா.. நீங்கவேணா பாருங்களேன்… கண்டிப்பா நான் செலக்ட் ஆகிடுவேன்..” என்று ஆர்ப்பரித்தவன், சொன்னது போலவே தேர்வும் ஆகிவிட்டான்..

பார்த்திபனை அடுத்து கையில் பிடிக்க முடியவில்லை..

வேலை உறுதியானதுமே அவனின் அண்ணன் முகம்தான் அவனுக்கு நினைவு வந்தது. அண்ணன் என்ற பாசம் இருக்கிறது. ஆனால் முரளியின் வார்த்தைகள் கொடுக்கும் வடுக்கள் அப்படியே ரணமாகவேத்தானே இருக்கிறது..

மறக்க நினைத்தாலும் மறக்க முடியவில்லை..

அத்தனை ஏன் அன்று காலையில் கூட “டேய் டேய் ரொம்ப கான்பிடென்ட்டா போகாத.. வேலை கிடைச்சா வீட்டுக்கு வா.. இல்லையோ அப்படியே எங்காவது போயிடு..” என்றான் ‘உனக்கெல்லாம் எங்க கிடைக்கப் போகிறது..’ என்பதுபோல்..

‘வந்து பாத்துக்கிறேன் டா..’ என்று பார்த்திபனும் முறைத்துவிட்டே போக, அவனுக்கு வேலை கிடைத்ததும் முரளியின் எண்ணமே..

‘டேய் டேய்.. இனி நீ பேசுவ… வாய் கூட திறக்க முடியாது..’ என்று சொல்லிக்கொண்டவன் வாழ்வு அடுத்து மூன்றாடுகளும் இனிமையாய் போனது..

போதாத குறைக்கு காதல் வேறு வந்துவிட்டது..

கேட்கவும் வேண்டுமா??

‘பார்த்திபனின் ராஜ்ஜியத்தில் உய்ய லாலா…’ என்று பாடாத குறைதான்..

அதிலும் பார்த்திபன் – தன்யா காதல் கொண்ட தருணமோ அத்தனை அழகு..  ஓரு அதிகாலை நேரத்தில் தான் பார்த்திபன் மனதில் தன்யா தன் வாழ்வில் வந்தால் நன்றாய் இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

காஞ்சனா வந்து “பார்த்தி.. தன்யா ஐவி போயிட்டு வர்றாடா.. காலங்காத்தால நாலு மணிக்குதான் வர்றாளாம்.. போய் நீ கூட்டிட்டு வர்றியா??” என்று கேட்க,

“சித்தி அது நடு ஜாமம்..” என்றன் இவன்..

“டேய் ரொம்ப பண்ணாம போயிட்டு வா.. அந்த நேரத்துல என்னால எழுந்து போக முடியுமா? இல்லை நீயும் கூடவா ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்..” என,

“வேணாம் வேணாம்.. நானே போயிட்டு வர்றேன்..” என்றவன் மறுநாள் சரியாய் கிளம்பி தன்யாவை அழைக்கப் போக, தன்யா வந்து சேரவோ ஐந்து மணிக்கு மேலாகியிருந்தது..

பேருந்து விட்டிறங்கியதும், சற்று தள்ளி பார்த்திபன் நிற்பதைப் பார்த்தவள் “ஹேய் பார்த்தி…!!!!” என்று இங்கிருந்தே கைகளை அசைக்க,

“லூசு.. ரோட்ல நின்னுட்டு எப்படி கத்துறா பாரு..” என்றுதான் நினைக்கத் தோன்றியது..

ஆனாலும் கூட, இவனைக் கண்டதும், முகம் மலர்ந்து, சுற்றம் கூட நினைக்காது, மகிழ்ச்சியாய் ஆரவாரம் செய்பவளைப் பார்க்க பார்த்திபனுக்கு கொஞ்சம் சந்தோசமாகக் கூட இருந்தது. இதுவரை யாரும் இப்படி செய்ததில்லை..

தன்னைப் பார்த்து ஒருவர் சந்தோஷிப்பது, அவனுக்கு அத்தனை சந்தோசம் கொடுத்தது..

அவளையே பார்த்தபடி பைக்கில் சாய்ந்து இவன் நிற்க, அவளோ ‘தடிமாடு.. பேக் தூக்கிட்டு வர்றேன்.. வந்து வாங்குறானா பாரேன்…’ என்று முணுமுணுத்தபடியே வந்து அவனின் பைக் மீது நொங்கேன்று அவளின் பையை வைக்க,

“ஓய் பார்த்து…” என்றான் பார்த்திபன்..

“பார்த்துட்டு தானே இருக்க, வந்து பேக் வாங்கினா என்ன??” என்றவள் உரிமையாய் சலிக்க,

“ஆகா.. மேடம் அப்படியே வேர்ல்ட் டூர் போயிட்டு வர்றாங்க.. போவியா..” என்றான் இவனும் பதிலுக்கு..

“இவளோ சலிப்பா ஏன் வந்த??!!” என்றவள் முறைக்க, “ரொம்ப பண்ணாம வா.. சித்தி சொன்னாங்கன்னு தான் வந்தேன்..” என்றவன் பைக்கை கிளப்ப,

“எனக்கு பசிக்குது..” என்று நின்றாள்..

“ஹா??!!! என்னாது??!!” என்று பார்த்திபன் பார்க்க,

“ரொம்ப பசிக்குது பார்த்தி…” என்றாள் திரும்ப..

கண்களை இடுக்கி, சற்று கூர்மையாய் அவளின் முகம் பார்த்தான்.. கொஞ்சம் களைப்பாக தெரிந்தது. நிஜமாகவே பசிதான் போல.. ஆனால் பொழுதுகூட இன்னமும் விடியவில்லை.. பத்தே நிமிடத்தில் வீட்டிற்கு போய்விடலாம்.. ஆனால் பசிக்கிறது என்பவளிடம் அதை மறுத்து என்ன சொல்ல முடியும்?

“ம்ம்..ஏறு.. போறப்போ ஏதாவது  டீ கடை இருக்கா பாக்கலாம்..” என்றபடி வண்டியை கிளப்ப,

“கண்டிப்பா இருக்கும்.. இல்லைன்ன பசில உன்ன பிச்சு தின்னுடுவேன்..” என்று அவளும் சொல்ல,

‘என்னடா இது.. இப்படி பேசுறா..’ என்று பக்கவாட்டு கண்ணாடி வழியே அவளைப் பார்க்க, அவளோ நான் மனதில் எதுவும் வைத்துகொள்ளவில்லை என்பதுபோல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தாள்..

இயல்பாய் அவளின் கரம் இரண்டும் அவனின் இரு பக்க தோள் மீது இருக்க, பார்வையோ வேடிக்கைப் பார்த்துகொண்டு இருக்க, பார்த்திபனுக்குத் தான் என்னவோ அந்த நொடி அவனின் பார்வையை திருப்ப முடியாது போனது.

காதல் ரசவாதம்… எந்நேரத்திலும் நிகழலாம் இல்லையா..

அதிகாலையோ அந்தி மாலையோ.. தேவதைகள் வந்து கிட்டார் வாசிக்க காலம் நேரம் தேவையா என்ன??

‘டேய் பார்த்தி…’ என்று குப்பிட் வந்து அம்பு விட, பட்டென்று அவனின் இதய மொட்டு அவிழ்ந்து மலர, சட்டென்று பைக்கோ ஒரு கல்லில் மோதி, பின் ப்ரேக் போட்டான் பார்த்திபன்..

“என்னாச்சு பார்த்தி….!!!” என்று திடுக்கிட்டு தன்யா கேட்க,

“எ.. எ… ன்ன??” என்று கேட்டவனுக்கு வார்த்தையே வரவில்லை..

ஒருவித படபடப்பு.. ஹார்மோன்கள் எல்லாம் ஹார்மோனியம் வாசிப்பதுபோல் இருக்க, இரத்த ஓட்டம் அவனுள் தாறுமாறாய் இருப்பது நன்கு உணர முடிந்தது.. உடல் சூடாக, நாவெல்லாம் வரண்டது..

“ஹேய் பார்த்தி…” என்று தன்யா சத்தமாய் அழைக்க,

“ம்ம்ச் என்ன தன்யா??!!!” என்றான் வேகமாய்..

“என்னாச்சு?? ஏன் பைக் நிறுத்திட்ட??” என்று அவள் கேட்டபின் தான் அவன் வண்டியை நிறுத்தியதே புரிந்தது..

“ஷ்..!!!” என்று தலையில் தட்டிக்கொண்டான்..

தன்யாவோ அவனை விசித்திரமாய் பார்க்க, அவளின் பசி கூட அவளுக்கு மறந்து,

“என்னாச்சு பார்த்தி??” என்றாள் கொஞ்சம் அக்கறையாய்..

“ஓ.. ஒண்ணுமில்ல..” என்றவன் திரும்ப வண்டியை கிளம்ப,

“ம்ம்ச் இரு பார்த்தி..” என்று பின்னிருந்து அவளின் குரல் வர, அவனுக்கோ வேகமாய் வீட்டிற்கு சென்று, அவனின் அறைக்குள் நுழைந்து கதவுகளை இறுக சாத்திக்கொள்ள வேண்டும் போல் இருந்தது..

அதாவது அவனுக்காக ஒரு தனிமை அப்போது தேவைப்பட, அவனின் மனதும் சரி, அவனின் உடலும் சரி அவன் சொல்வதை கேட்பதாய் இல்லை..

மீண்டும் பைக் நின்றுவிட, “என்னாச்சு பார்த்தி.. வீட்ல எதுவும் பிரச்சனையா??” என்று கேட்டபடி இறங்கி இவனின் முன்னே வந்து நின்றாள் தன்யா..

அவள் சாதரணமாய் கேட்கிறாளா ?? இல்லை எப்படியோ ஆனால் அவள் குரலில் இருந்த அக்கறை அவனை அசைத்தது.. அவன் வீட்டில் இதுநாள் வரைக்கும் யார் குரலிலும் அவன் உணர்ந்திடாத ஒரு அக்கறை.. ஒரு கத கதப்பு தன்யாவிடம் உணர,  பார்வை எல்லாம் அவள் மீதே நிலைத்துப் போனது.

“பார்த்தி….!!!!” என்று தன்யா கொஞ்சம் அழுத்தமாய் அவனை அழைக்க,

“ம்ம்..” என்றான் வேறெதுவும் சொல்லாது..

“ம்ம்மா ??!!!! என்னாச்சுன்னு கேட்டிட்டு இருக்கேன்.. ஏன் எப்படியோ இருக்க?? முரளிண்ணா எதுவும் சொன்னாங்களா??” என்றாள் திரும்பவும்.

‘கடவுளே…!! ஏன் சோதிக்கிற?? எனக்கு பேய் பிடிக்க வச்சிடாத…’ என்று பார்த்திபனின் மனது வேண்ட,

“டேய் பார்த்தி..!!!” என்றாள் பட்டென்று..

“என்னது டேயா??!!!! ஓய்…” என்று அவனும் வேகமாய் சத்தம் கூட்ட,

“எனக்கு பசி கூட போயிடுச்சு போ.. வீட்டுக்கு போலாம்.. உன்கிட்ட போய் கேட்டேன் பாரு..” என்று அவனை கடிந்தபடியே திரும்ப அவன் பின்னால் தொற்றிக்கொள்ள, பார்த்திபனின் இதழில் மெல்லியதாய் ஒரு புன்னகை..

பேய் பிடித்தேவிட்டது… காதல் பேய்…

“இந்த சைட் ஒரு டீ கடை இருக்கும்.. செமையா இருக்கும்..” என்று வண்டியை கிளப்பியவன், அடுத்த இருபது நிமிடம் வரைக்கும் ஒரு டீ கடையையும் தன்யாவின் கண்ணில் காட்டவில்லை..

இதற்கு வழியில் இரண்டு கடைகள் திறந்து தான் இருந்தது..

“இதுவா??!! இதுவா??!!” என்று அவள் கேட்டதற்கும் கூட,

“ச்சே ச்சே.. இதில்லை.. வேற கடை..” என்று தெரு தெருவாய் சுற்றிக்கொண்டு இருந்தான்…

‘ஆரம்பமே இப்படி சுத்தல்ல போகுதே…’ என்று அவனுக்குத் தோன்றினாலும் அதை இப்போது நினைக்கையில், தலை சுற்றுவது போலிருந்தது..

அனைத்தும் நன்றாய் தானே போனது.. திடீரென்று ஏன் இத்தனை மாற்றங்கள்.. ஏமாற்றங்கள்?? ஒருவேளை வாழ்வு என்பது, நாம் நினைத்தே பார்க்காத விஷயங்கள் எல்லாம் நடக்கையில் தான் சுவாரஸ்யமாய் இருக்கும் என்பதால் தான் இப்படி எல்லாம் நடக்கிறதோ??

‘எனக்கு சுய்யமும் வேணாம் சுவாரஸ்யமும் வேணாம்…..’ என்று எரிச்சலாய் அவனின் மனது சொல்ல, என்ன முயன்றும் அவனின் எண்ணங்கள் தன்யாவிடம் இருந்து மீள முடியாமல் தவித்தது.

கண்ணீர் ஒன்றுமட்டும் தான் வரவில்லை.. ஆனால் அதற்கு மாறாக அவனுள் அப்படியொரு அழுத்தம்..

இருந்த வேலையை அவனே விடும் நிலை.. காதலியோ ஏன் இப்படி செய்கிறாள் என்றே புரியாத நிலை.. வீட்டினரோ சொல்லவேண்டியதே இல்லை…

முரளி அனைவருக்கும் மேலாய்.. அவன்தான் சொன்னான் ஜப்பான் போ என்று.. இவனிடம் சொல்லாமலேயே லேகாவிடம் அனைத்தும் பேசிவிட்டு சொன்னான்.. முடியவே முடியாது என்றுதான் பார்த்திபன் இருந்தான் ..

அனைத்தும் அவளால்..

தன்யாவால்…   

  

     

 

        

      

 

Advertisement