Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 19

பார்த்திபன் அமைதியாகவே இருந்தான். அவனின் அப்பா பேசவே கூடாது என்று சொல்லியிருந்தார். ஆக நடப்பது அனைத்தையும் கவனித்தபடி பார்வையாளனாகத் தான் இருந்தான். அனைவரின் முன்னும் முரளி தன்னைத் தானே இவ்வளவு தாழ்த்திக் கொள்வான் என்று பார்த்திபன் நினைக்கவேயில்லை.

ஆனாலும் நடந்தேறியது..

முரளி தானாக அனைத்தும் நடத்திக்கொண்டு இருந்தான். அவன் தீட்டியிருந்த திட்டங்கள் எல்லாம் பார்த்திபன் தன்யாவின் காதலில் தவிடுபொடியாகிட, அதிலும் வீட்டினர் அனைவர்க்கும் இது தெரிந்திருக்கிறது என்பதும் தெரிய முரளி தன்னிலை மறந்துபோனான் என்றுதான் சொல்ல வேண்டும்..

அப்பாவின் வார்த்தைக்காக பார்த்திபன் அமைதியாய் இருந்தாலும் அவனின் மனது கொதித்தது. இந்த முரளி, அவனைப் பற்றி நன்கு அறிவான் தான்.

ஆனாலும் அப்பா அம்மாவிடம் கூட அவன் இப்படி நடந்துகொள்வான் என்பது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சுந்தரமோ, அவரின் அதிர்ச்சியையும் தாண்டி முரளியின் இந்த பேச்சுக்கள் அவருக்குக் கோபம் கொடுத்தது. இத்தனை நாள் இவ்வளவு விசயங்களை மனதில் வைத்தா இவன் அனைத்தும் செய்தான் என்ற கோபம். ஏமாற்றிவிட்டானே என்று தந்தையாய் ஆதங்கம்.. வருத்தம்.. எல்லாம்..

ஈஸ்வரிக்கோ தான் பெற்ற மகனுக்கு இப்படியும் கூட நினைக்கத் தெரியுமா என்று தான் இருந்தது.

இந்த வீட்டினை எழுதிக் கேட்கையில் கூட அவர் ஒன்றும் பெரிதாய் நினைக்கவில்லை. அவன் பட்ட கடனிற்காக, அதுவும் சுந்தரத்தின் வைத்திய செலவிற்காக என்று வாங்கிய கடன் என்பதால் எழுதிக்கொடுத்தனர். ஆனால் சிறிதும் எதிர்பார்க்கவில்லை இவர்களையும் சேர்த்து முரளி வெளியே போகச் சொல்வான் என்று.

முரளிக்கு தெரியாதே, அப்பா அம்மாவிற்கு பார்த்திபன் தன்யா காதல் பற்றி தெரியும் என்று. முதல் வேலையாக மறுநாள் அதனை அவர்களிடம் சொல்ல,

ஈஸ்வரியோ “அவன் எப்போவோ சொல்லிட்டான்டா…” என்றார் அசால்டாய்.

“என்னது?? என்னது எப்பவோ சொல்லிட்டானா??!!! இதையேன் நீங்க என்கிட்டே சொல்லலை..??” என்ற முரளிக்கு மேலும் கோபம் கூடியது.

“டேய்… இதுக்கேன் இவ்வளோ சத்தம் போடுற…” என்று ஈஸ்வரி கேட்க,

“சத்தம் போடாம?? நானும் தானே இந்த வீட்ல இருக்கேன், அப்போ என்கிட்டே ஒருவார்த்தை சொல்லலை யாரும்..” என்று அப்பாவினை பார்க்க,

அவரோ “சொல்லக் கூடாதுன்னு இல்லை முரளி.. தன்யா அப்பா அம்மா வரவும் உன்கிட்ட சொல்லிக்கலாம்னு இருந்தோம். பார்த்தியும் அதைதான் சொன்னான்.. எதுக்கு எல்லாருக்கும் டென்சன் அப்படின்னு..” என, இது இரண்டாவது அதிர்ச்சி முரளிக்கு.   

“அப்போ.. எல்லாருக்கும் தெரியும்.. ஆனா எனக்கு சொல்ல மனசு வரலை…” எனும்போதே,

“உனக்குத்  தெரியாம இங்க எதுவும் நடக்குமாண்ணா??” என்றபடி வந்தான் பார்த்திபன்.

அவ்வளோதான் அவனைக் கண்டதும் முரளிக்கு எங்கிருந்து அத்தனை கோபம் வந்ததோ, “டேய் டேய்… எல்லாம் உன்னால தான்டா…” என்று வேகமாய் அவனின் அருகே சென்றவன்,

“இனிமே ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்கக் கூடாது…” என்று அவனைத் தள்ளப் போக,

“முரளி…” என்று சப்தமிட்டபடி ஈஸ்வரி மகன்கள் இருவருக்கும் இடையில் வந்தார்.

இவர்களின் சத்தம் கேட்டு, மேலேயிருந்து ஹேமாவும் லேகாவும் வந்திட, முரளியோ அவனின் வேஷம் அவனாலேயே களைகிறது என்று அறியது “இங்க பாருங்க எல்லாம் நல்லா கேட்டுக்கோங்க, இந்த வீட்ல இருக்கணும்னா எல்லாரும் நான் சொல்றதை தான் கேட்கணும்..” என்று விரல் நீட்டி சொல்ல,

“ம்ம் அப்புறம்…” என்றான் பார்த்திபன் எகத்தாளமாய்.

பெற்றவர்கள் இருவருக்கும் முரளியின் இம்முகம் அதிர்ச்சி என்றால், ஹேமாவிற்கோ அதைவிட பேரதிர்ச்சி. லேகாவிற்கு என்ன நடந்திருக்கும் என்பது யூகிக்க முடிய,

“அக்கா நீ தான் மாமாக்கு எடுத்து சொல்லணும்…” என்று ஹேமாவின் காதில் சொல்ல, அவளோ இன்னமும் திகைப்பு தீராது தான் பார்த்தாள்.

“என்னடா அப்புறம்.. என்ன அப்புறம்… என் வீட்ல இருந்துட்டே, எனக்குத் தெரியாம எல்லாரும் கூட்டு களவாணித்தனம் செய்வீங்க.. நான் வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்கனுமா??” என்று முரளி கத்த,

“டேய் முரளி என்னடா.. ஏன்டா இப்படியெல்லாம் பேசுற…” என்றார் சுந்தரம்.

“வேறென்ன பேச.. இல்லை வேற என்ன பேச சொல்றீங்க.. ஆரம்பத்துல இருந்து உங்களுக்கு எல்லாம் செஞ்சு செஞ்சே நான் அழுத்துப் போயிட்டேன்…” என,

ஈஸ்வரியோ “முரளி…” என அதட்டினார்..

ஹேமாவிற்கோ அப்படியொரு அழுகை வந்தது. என்னவோ அனைத்தும் தவறாய் நடப்பது போலிருக்க, கணவனின் இந்த பேச்சுக்கள் அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.

“என்னங்க.. என்ன இதெல்லாம்??!!” என்று அவளும் கண்ணீரோடு கேட்க,

“ஓ.. நீயும் வந்தாச்சா?? எங்க உன் பாசமலர்..” என்று திரும்பியவன், “வாங்க மேடம்..” என்றான் லேகாவை பார்த்து ஒருவித வெறுப்போடு.

“என்ன மாமா ஏன் இவ்வளோ டென்சன்??” என்று லேகா சாதாரணம் போலவே கேட்க,

“ஏனா??!!! ஏன்னு தெரியாதா?? இல்லை ரெண்டு பெரும் அங்க இருந்தே திட்டம் போட்டுத்தான் இங்க வந்தீங்களா??” என,

“மாமா.. எங்களோட வாழ்க்கை எங்க விருப்பம்.. அதுல எந்த தப்பும் இல்லையே…” என்றாள் லேகா நிமிர்வாகவே.

“தப்பில்லைம்மா.. தப்பேயில்லை.. ஆனா உங்களை ஆளாக்கி விட மட்டும் நான் வேணுமில்லை.. உங்க வாழ்க்கைன்னு வரும்போது உங்க முடிவு தான் பெருசு..” என,

“மாமா… நாங்க அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம்..??” என்றாள் லேகாவும் பட்டென்று.

முரளியோ லேகாவின் இப்பேச்சிற்கு பதில் சொல்லாது, ஹேமாவை முறைக்க,

“லேகா நீ எதுவும் பேசாத..” என்ற பார்த்திபன் “அண்ணியை ஏன் முறைக்கிற?? சரி யாரும் எதுவும் சொல்லலை அப்படின்னு இவ்வளோ குதிக்கிறயே, நிஜமாவே நானும் தன்யாவும் லவ் பண்றது உனக்கு இப்போதான் தெரியுமா???” என்று, முரளியை நேருக்கு நேராய்ப் பார்த்து கேட்க,

“டேய்.. என்ன?? என்னையே கேள்வி கேட்க வந்துட்டியா நீ??” என்று முரளி எகிற,

“ம்ம்ச் பதில் சொல்லுண்ணா..” என்றான் பார்த்திபன் பல்லைக் கடித்து.

இதற்குமேலும் பொறுமையாய் போவதில் அர்த்தமில்லை என்றுதான் ஆனது பார்த்திபனுக்கு. இரண்டில் ஒன்று பார்த்துவிடும் எண்ணம் வந்துவிட்டது. தன்யாவின் அப்பா அம்மா வந்து பேசி முடிக்கும் வரைக்கும் கொஞ்சம் பார்த்து கவனமாய் தான் இருந்திட வேண்டும் என்று இருந்தவனுக்கு முரளி ஆரம்பித்து வைப்பான் என்று தெரியாதே.

ஆக அவனின் கவனம் எல்லாம் போதும், இனிமேல் ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்று மனதில் தோன்றிவிட நேருக்கு நேராகவே முரளியிடம் கேட்டான். முரளியோ ஆம் என்று சொன்னால் எங்கே தன் குட்டு முழுதுமாய் வெளியே வந்துவிடும் என்றெண்ணி,

“ஏய் நான் என்ன பேசுறேன்.. நீ என்ன கேட்டிட்டு இருக்க…??” என்றவன்.

“திரும்பவும் சொல்றேன்.. நான் சொல்றதை கேட்கிறதுன்னா எல்லாம் இங்க இருக்கலாம்.. இல்லைன்னா…” எனும்போதே,

“இல்லைன்னா.. இல்லைன்னா என்ன செய்வ??” என்று பார்த்திபன் முறுக்கிக்கொண்டு முன்னே செல்லவும் தான் சுந்தரம் அவனை அமைதியாய் இருக்கும்படி வற்புறுத்தினார்.

“இல்லப்பா.. இன்னிக்கே எல்லாம் பேசிடலாம்..” என,

“டேய் பார்த்தி.. அப்பா சொல்றேன்ல கேளு… நாங்க பேசிக்கிறோம்… இப்போ என்ன அவனுக்கு நாங்க சொல்லலைன்னு தானே கோபம்.. நான் பேசிக்கிறேன்..” என்று சுந்தரம் சொன்னாலும் கூட பார்த்திபனுக்கு மனது அடங்கவில்லை.

ஆனாலும் அப்பாவின் வார்த்தைகளுக்காக சும்மா இருந்தான்.. முரளியும் பார்த்திபனும் ஒருத்தரை ஒருத்தர் முறைத்துக்கொள்ள,

“என்ன முரளி பேச்சு இது??” என்றார் சுந்தரம்.

“ஏன் இப்போ நான் என்ன பேசிட்டேன்…??” என்றான் இப்போதும் அவன் செய்வது தவறு என்று ஏற்றுக்கொள்ளாது.

“என்ன பேசலை நீ.. நானும் இவ்வளோ நேரம் பொறுமையா போனேன்.. ஆனா நீ ரொம்ப பேசிட்ட முரளி.. உனக்கு இந்த வீடு எழுதிக் கொடுத்தோம் தான்.. அதுக்காக நாங்க யாரும் அடிமை இல்லை உனக்கு.. என்னோட பென்சன் வருது.. இப்போ பார்த்தியும் சம்பாதிக்கிறான்.. யாரும் உன் கை எதிர்பார்த்து இல்லை புரியுதா..” என,

“ஓஹோ…. அப்போ ஏன் எல்லாம் இங்க இருக்கீங்க?? கிளம்புங்க.. என் தயவு தேவையில்லை தானே.. பின்ன எதுக்கு எல்லாம் இங்க இருக்கணும்…” என்றவனுக்கு மனதினில் ஒரு எண்ணம், இப்படி இவர்களை வெளியே போ என்றால், ரோசப்பட்டு கிளம்பி, அவசரத்திற்கு தன்யாவின் வீடு தான் இப்போது செல்ல முடியும்.

தன்யாவின் பெற்றோர்கள் வருகையில், அதுவும் பார்த்திபன் தன்யா திருமணம் விஷயம் பேசும் இந்நேரத்தில் இவர்கள் இருக்க இடமில்லாது அங்கே போய் தங்க நேர்ந்தால், கண்டிப்பாய் அனைவர்க்கும் அது உவப்பாய் இருக்காது.

நிச்சயம் தன்யாவின் அப்பாவும் அம்மாவும் உறுதியாய் ஒரு முடிவிற்கு வர தயங்குவர். அவர்கள் தயங்கும் பச்சத்தில், கிடைக்கும் சந்தர்பத்தில் முரளி மீண்டும் குட்டையை குழப்பி அனைவரையும் திரும்பவும் தன் பிடிக்குள் கொண்டு வந்திடலாம் என்றுதான் இப்போது வரைக்கும் நினைத்து வைத்திருக்கிறான்.

இதெல்லாம் இப்போது இப்படியிருக்க, அவனுக்கு லேகா விஷயம் தான் மண்டை குடைச்சல் கொடுப்பதாய் இருக்க, எல்லாம் சேர்த்து இப்போது வெடித்துக்கொண்டு இருந்தான்.

“போதும் நிறுத்துடா.. இப்போ என்ன, நாங்க எல்லாம் கிளம்பிடனும்.. இது உன் வீடு அப்படிதானே.. கிளம்பிடுறோம்.. ஊர் உலகத்துல எல்லாம் சொந்த வீட்லையா இருக்காங்க?? எங்களுக்கும் ஒரு இடம் இருக்கும்ல… நாங்க பாத்துக்கிறோம்…” என்றார் ஈஸ்வரி வெடுக்கென்று..

ஹேமாவோ, எங்கே அனைவரும் கிளம்பிடுவரோ என்று பயந்து “அத்தை அவர்தான் சொல்றார்னா, நீங்களும் இப்படி பேசலாமா??” என்று பயந்து அவரின் கை பிடிக்க,

“இல்ல ஹேமா.. இவன் இப்படி பேசுவான்னு கொஞ்சம் கூட நாங்க நினைக்கலை.. அப்பா அம்மா தம்பின்னு நினைக்காம இவன் இப்படி நடந்தா, நாங்க அழுது புலம்பி இவன் காலுக்கு விழுவோம்னு நினைச்சானா??” என்று கத்தியவர்,

“பார்த்தும்மா நாளைக்கு உன்னையும் இப்படி ஏதாவது செஞ்சிட போறான்…” என்றவருக்கு இறுதியில் கண்கள் கலங்கிப் போனது..

சுந்தரமோ “ஈஸ்வரி விடு.. பார்த்துக்கலாம்..” என்றவர், பார்த்திபனைக் காண

“ப்பா எதுக்கும் கவலை வேண்டாம்.. ஒரு மூணு நாள்ல புது வீடு அரேஞ் பண்ணிடலாம்…” என,

முரளியோ “ஹா ஹா.. அது வரைக்கும் எங்க இருப்பீங்களாம்???” என்றான் சிரிப்போடு.

அவனின் சிரிப்பில் தெரிந்த வன்மமும் குரோதமும் மேலும் மேலும் அவனின் நிலையை கீழிறக்க, இப்போது ஈஸ்வரியோ சத்தம் போட்டே அழத் தொடங்கிவிட்டார். என்ன இருந்தாலும் அம்மா ஆகிற்றே.. மகனின் இந்த நடத்தை அவரை கண்ணீர் விட செய்தது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, லேகாவிற்கு முரளியின் இவ்வகையான பேச்சு பெரும் அதிர்ச்சி.. சொந்த குடும்பத்தினரையே இப்படி நடத்துபவன், அடுத்து என்னை என்ன செய்வான்?? என்ற கேள்வி அவளுள் பிறக்க, மனதினுள் சட்டென்ற ஒரு எச்சரிக்கை உணர்வு. அவளின் அடுத்த செயல்கள் எதுவும், ஹேமாவை பாதிக்கவும் கூடாது.

நிதானமாய் நடப்பதை பார்த்திருந்தாலும், மனதினுள் அவள் செய்ய வேண்டியது என்னவென்று யோசித்துவிட்டாள்..

ஈஸ்வரி அழுதுகொண்டு இருக்க, ஹேமாவோ முரளியிடம் கெஞ்சிக்கொண்டு இருக்க, பார்த்திபனும் சுந்தரமும் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்க, லேகா அவளின் எண்ணத்தில் இருக்க, காஞ்சனா எப்போதும் வருவது போல் வந்தவர், இவர்கள் அனைவரும் இருந்த நிலை கண்டு குழம்பித்தான் போனார்.

“அக்கா என்னாச்சு??” என்று ஈஸ்வரியிடம்,

“வாங்க சித்தி.. உங்களுக்காவது எதுவும் தெரியுமா?? இல்லை, தெரிஞ்சும் அமைதியா இருக்கீங்களா??” என்று முரளி, காஞ்சனாவையும் விட்டு வைக்காமல் கேட்க,

“என்ன முரளி என்ன கேட்கிற??” என்றார் புரியாது.

“ஓ..!! அப்போ உங்களுக்குத் தெரியாதா..??” என்றவன் “என்னப்பா தம்பி.. தன்யா அப்பா அம்மா வரைக்கும் தெரிஞ்ச விஷயம் சித்திக்குத் தெரியாதா??” என்று பார்த்திபனைக் காண,

“முரளி…” என்ற காஞ்சனாவோ “உன்கிட்ட யாரும் சொல்லலைன்னு தான் கோபமா??” என,

“அப்போ உங்களுக்கும் தெரியும் அப்படிதானே…” என்றான் சீற்றமாய்.

“இதுல இவ்வளோ கோபப் பட என்ன இருக்கு முரளி. பசங்க அவங்களோட விஷயத்தை பெரியவங்கக் கிட்ட தானே சொல்ல முடியும்??” என்ற காஞ்சனா,

“என்னக்கா இதுக்கா அழறீங்க??” என்று ஈஸ்வரியிடம் கேட்க, அவரோ மீண்டும் சத்தமாய் அழுதபடி அனைத்தையும் ஒப்பிக்க, ஆடித்தான் போனார் காஞ்சனா.

ஆக இதற்குத்தான் முரளிக்குத் தெரியவேண்டாம் என்று பார்த்திபனும் தன்யாவும் சொன்னார்களா என்று தோன்றியது. முரளியா இப்படி என்ற அதிர்வும் கூட.. நொடியில் அங்கிருக்கும் சூழல் புரிந்துகொள்ள, முரளியிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை காஞ்சனா.

பார்த்திபனிடம் தான் கேட்டார் “அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க பார்த்தி??” என்று.

“என்ன செய்வான்.. இவங்களை கூட்டிட்டு ஒண்ணு ஹோட்டல்ல ரூம் போடுவான்.. இல்லையா இருக்கவே இருக்கே வருங்கால மாமனார் வீடு.. அங்க வருவான்.. அதானே செய்ய முடியும்..” என்ற முரளியை எள்ளலாய் தான் பார்த்தான் பார்த்திபன்.

“பார்த்திபா… நான் தானே கேள்வி கேட்டேன்.. நாளைக்கு நைட் அண்ணாவும் அண்ணியும் வந்திடுவாங்க.. இந்த பிரச்சனை பத்தி நீ எதுவும் நினைக்காத.. நான் பேசிக்கிறேன்.. பட் வீடு விஷயம் நீ எதுவும் ப்ளான் பண்ணிருக்கியா?? இல்லைன்னா எல்லாம் அங்க வந்து ஸ்டே பண்ணுங்க.. ஒன்னும் பிரச்சனை இல்லை..” என்று திரும்ப காஞ்சனா கேட்க,

ஈஸ்வரி கூட தன் சின்ன மகன் முகத்தினை ஆர்வமாய் தான் பார்த்தார் எதுவும் ஏற்பாடு செய்திருப்பானோ என்று.

முரளியோ இவனெல்லாம் என்ன செய்திருக்கப் போகிறான் என்று பார்க்க, பார்த்திபனோ “சித்தி.. நீங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு போங்க.. நான் ஒரு டூ ஹவர்ஸ்ல வர்றேன்…” என்று எழ,

“பார்த்தி….” என்றார் சுந்தரம்..

“ப்பா.. ப்ளீஸ்.. இப்போவாது என்மேல நம்பிக்கை வைங்க.. கண்டிப்பா நான் உங்களை விட்டுட மாட்டேன்.. மிஞ்சி போனா ஒரு ரெண்டு மணி நேரம் அங்க சித்தி கூட இருங்கப்பா…” என்றவன்,

“ம்மா.. நீயும்தான் அழுகையை நிறுத்து…” என, ஹேமாவோ “பார்த்தி.. நீயும் ஏன் இப்படி பண்ற??” என்று மேலும் அழுகையை கூட்டினாள்.

அவளால் அந்த சூழலில் அழ மட்டுமே முடிந்தது. யாரும் அவள் பேசுவதை கேட்பதாய் இல்லை. கேட்கவேண்டும் என்ற எண்ணம்கூட இல்லை. அனைவரும் சென்றுவிட்டால், அதை நினைக்கக் கூட முடியவில்லை ஹேமாவினால்.

“அண்ணி.. உங்களுக்கு எப்பவும் நாங்க இருக்கோம்..” என்றவன், “ம்மா அப்பா.. சித்தி கூட போங்க…” என்றவன்,

“நீ இல்லைன்னாலும் எங்கனால வாழ முடியும்..” என்று முரளியிடமும் சொல்லிவிட்டு, அப்பாவையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு தன்யா வீட்டினில் விட்டுவிட்டு, இவன் கிளம்பிட, அடுத்தது என்னவென்று அனைவரின் மனதிலும் இருந்தது,

அதிலும் முரளியின் மனதில் மிக அதிகமாய் இருந்தது.

சுந்தரம் அமைதியாய் இருக்க, ஈஸ்வரிதான் காஞ்சனாவிடம் புலம்பித் தள்ளிக்கொண்டு இருந்தார். மனது ஆறவேயில்லை. சுந்தரத்திடம் ஓரளவு விஷயம் சொல்லித்தான் பார்த்திபன் சென்றிருந்தான். போகும் காரியம் வெற்றியென்றால் சொல்கிறேன் பின் அம்மாவிடம் சொல்லுங்கள் என்றும் சொல்லியிருக்க, பார்த்திபன் முதலில் போனது நேராய் தன்யாவைப் பார்க்கத்தான்.

அவளுக்கோ இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.

“உன் ஆபிஸ் கேண்டீன்ல இருக்கேன் வா..” என்றுமட்டும் சொன்னவனைப் பார்த்து “ஹேய் பார்த்தி….” என்று சந்தோசமாய் சொல்லியபடி வந்தமர்ந்தவளை பார்த்திபன் ஒரு வேதனைப் பார்வை தான் பார்த்தான்..

அவனின் பார்வையிலேயே உணர்ந்தவள் “என்னாச்சுப் பார்த்தி??” என, இவனும் நடந்தவைகளை சொல்ல,

“கடவுளே…” என்று நெற்றியில் கை வைத்தவள் “இங்க பாரு ஒன்னும் பிரச்சனை இல்லை.. அதான் நம்ம வீடு இருக்குல்ல.. எல்லாரும் அங்கவே இருக்கலாம்.. இதில என்ன வந்தது..” என்றாள்.

“இல்ல தன்யா அது சரி வராது…”

“ஏன்??”

“ம்ம்ஹும்… சரியா வராது.. அதுவும் இப்போ நம்ம கல்யாண விஷயம் பேசுற டைம்ல அங்க வந்து ஸ்டே பண்றது சரி வராது…” என, அவன் சொல்லும் சொல்லில் இருக்கும் எதார்த்தம் அவளுக்குப் புரிந்து,

“நெக்ஸ்ட் ஏற்பாடு செய்றது வரைக்குமாவது எல்லாம் அங்க இருக்கலாமே..” என்றாள் அவனின் கைகளை ஆதரவாய் பற்றி..

“ம்ம் ஒரு வீட்டுக்கு அட்வான்ஸ் அங்கிருக்கப்போவே கொடுத்திட்டேன் தன்யா…” என்று பார்த்திபன் சொல்லி முடிக்குமுன்

“என்னது??!!!!” என்று கண்கள் விரித்தாள்.

“ம்ம்…” என்று பார்த்திபன் தலையை மேலும் கீழும் ஆட்டிட,

“ஏன்டா.. ஏன்டா என்கிட்டே சொல்லலை… நீ.. பிராடு.. போ…” என்று தன்யா இருக்கும் இடம் உணர்ந்து, அவனின் தோள்களில் பட் பட் என்று அடிக்க,

“ஷ்…தன்யா…” என்று அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டவன் “போ சொல்லாத…” என, ‘அய்யா சாமி தெரியாம சொல்லிட்டேன்..’ என்பது போல் பார்த்து வைத்தாள் தன்யா..

“நான் என்ன பேச வந்தா.. நீ என் மைன்ட் செட்டே மாத்திடுற தனியா தூள்..” என்றவனைப் பார்த்து லேசாய் சிரித்தவள்,

“சரி சொல்லு நான் என்ன செய்யணும்??” என்றாள்.

“பிரண்ட் வீடுதான்.. அட்வான்ஸ் அங்கயிருந்தே பே பண்ணிட்டேன்.. நாலு மாசம் டைம் கேட்டிருந்தேன் மீத அமௌன்ட் செட்டில் பண்ண, இங்க பேங்க் லோன் அப்பளை பண்ணிருக்கேன் தன்யா….” என,

“இவ்வளோ பண்ணிருக்கியா நீ??” என்றாள் அதிசயமாய்.

வந்து இரண்டு நாட்களில் இவன் அலைந்ததன் காரணம் இது தானா என்று இப்போது விளங்கியது தன்யாவிற்கு.

“ம்ம்.. லோன்க்கு என்னோட சாலரி சார்ட் கொடுத்திருக்கேன்.. பட்..” என்றவன் லேசாய் தயங்க,

“என்ன பார்த்தி.. எதுவா இருந்தாலும் சொல்லு.. நான் எதுவும் செய்யனுமா??” என்றவள் சட்டென்று யூகித்து “அமௌன்ட் எதுவும் வேணுமா??” என்றாள்..

“ம்ம்ஹும்…” என்று தலையை அசைத்தவன், “யாராவது அஸ்யூரன்ஸ் சைன் போட்டா ஒன் வீக்ல அரேஞ் பண்ணிடலாம் சொன்னார் மேனேஜர்.. நான்தான் வேணாம் சொன்னேன்.. பட் இப்போ அது அவசியமா படுத்து தன்யா..” என்றவனுக்கு மேலே கேட்கவே தயக்கமாய் இருந்தது.

ஆனால் தன்யாவோ “என்ன இப்போ.. நான் சைன் பண்றேன் அவ்வளோதான். வேணும்னா என்னோட பே ஸ்லிப் கொடுத்துக்கலாம்.. அப்படியே இல்லையா நான் அமௌன்ட் தர்றேன்.. இவ்வளோ சாய்ஸ் இருக்கு பார்த்தி.. இப்போ நீதான் செலக்ட் பண்ணனும்..” என்று வெகு வெகு இயல்பு போல் சொல்ல,

பார்த்திபனோ இன்னும் இறுக்கமாய் தன்யாவின் கரங்களைப் பற்றிக்கொண்டான். அடுத்தநொடி “மவனே தேங்க்ஸ் சொன்ன, அவ்வளோ தான்..” என்றவள்,

“ம்ம்ச் கையை விடேன் டா.. விரல் நீட்டி கூட மிரட்ட முடியலை..” என்றாள் புன்னகையான ஒரு சலிப்போடு..

பார்த்திபனோ நன்றி கலந்த ஒரு புன்னகையோடு அவளின் கரத்தினை விட “ம்ம் இதை கேட்க இவ்வளோ தயக்கமா உனக்கு…” என,

“அப்படியில்லை.. நான் ப்ளான் பண்ணிருந்தேன்.. பட்.. முரளி திடீர்னு இப்படி செய்வான்னுஎதிர்பார்க்கலை..” என்றவன், “இப்போ உன்னால பேங்க் வர முடியுமா??” என,

“கண்டிப்பா.. நாளைக்கு இருந்து லீவ் சொல்லிருக்கேன்.. இப்போ இன்னிக்கு இருந்துன்னு சொல்லிட்டு ஓடி வந்திடுறேன்…” என்றவள், லீவ் சொல்லப் போக, பார்த்திபன் யார் யாருடன் அடுத்து பேச வேண்டுமோ பேசி வைத்தான்.

அங்கே லேகாவும் அவளின் அப்பாவின் நண்பரும் அவர்களின் குடும்ப வக்கீலுமான ஒருவரிடம் கலந்தாலோசித்துக்கொண்டு இருந்தாள்..

“நோ அங்கிள்.. நான் நெக்ஸ்ட் மன்த் தான் போறேன்.. அதுக்குள்ள எல்லாம் டேக் ஓவர் செய்ய முடியுமா?? ஏன்னா இது கேட்டு கிடைக்கிறது போல இல்லை..” என்று சொல்லிக்கொண்டு இருக்க, ஹேமா இன்னமும் அழுதபடி தான் இருந்தாள்.

அவளுக்கு தனியாய் நிற்பது போல் ஓர் உணர்வு..

முரளியோ அடுத்து யார் என்ன செய்யப் போகிறார்கள் என்ற யோசனையில் இருந்தான்.  

   

 

               

      

Advertisement