Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 18

முரளிக்கு தன் கண் முன்னே நடப்பது எல்லாம் நம்புவதா வேண்டாமா என்றிருந்தது. எங்கே ஏதேனும் குளறுபடி நடக்குமோ என்று ஒவ்வொரு நொடியும் அவன் கண் கொத்திப் பாம்பாய் கவனித்துக்கொண்டு இருக்க, பார்த்திபனும் சரி, லேகாவும் சரி வந்து இரண்டு நாட்கள் ஆகியும் எதுவுமே வாய் திறக்கவில்லை.

பொதுவான விஷயங்கள் பேசினர் அவ்வளவே..

எங்கே பார்த்திபன் தன்யாவை தேடி போவானோ என்று பார்க்க, அதுவும் இல்லை. தன்யா எப்போதும் போல, அலுவலகம் சென்று வர, பார்த்திபனோ அவனின் நண்பர்களைக் காண சென்றுவிட்டான்.

‘நடப்பதெல்லாம் நிஜம்தானா??!!’ என்று தான் இருந்தது முரளிக்கு..

அலைபேசியில் அத்தனை பேசிய லேகா, இப்போதோ எதையுமே கேட்காது பொழுதை கழிக்க, ஹேமாவிடம் தான் “என்னனு கேளு…” என்றான் முரளி.

“வந்ததுமே கேட்டேன்ங்க.. இப்போ எதுவும் பேசவேண்டாம் க்கா.. நான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யனும்னு சொல்லிட்டா…” என்று லேகா சொல்ல, முரளிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பார்த்திபன் தான் லேகாவிடம் சொல்லியிருந்தான் ‘போனதுமே எதுவும் ஆரம்பிக்க வேண்டாம் லேகா.. ஏன்னா முரளி எப்படியும் ஒரு ஐடியால இருப்பான் நம்ம போனதும் எப்படி என்ன செய்யனும்னு.. பட்.. அப்படி எதுவும் நடக்கக் கூடாது…’ என்று..

லேகாவோ அவன் சொன்னதை கேட்டு “நீ முரளி மாமாவா பக்கா வில்லன் ரேஞ்ச்ல பாக்குற பார்த்தி..” என,

“வில்லனோ இல்லையோ.. பட் அவன் எனக்கு நல்லதா எதுவும் பண்ணலை.. அவ்வளோதான்.. அவனுக்கு நல்லது எதுவோ அதை மட்டும் தான் செய்வான்.. அதுக்குமேல உன் விருப்பம் லேகா..” என்றுவிட்டான்.

லேகாவிற்கு அப்படியொன்றும் முரளி எதற்கும் முரண்டு செய்வான், குட்டையை குழப்பி பிரச்னைகளை உருவாக்குவான் என்ற எண்ணமில்லை.. என்ன அவளின் சொத்து சம்பந்தமான வேலைகள் எல்லாம் முடிய நாள் பிடிக்கும், அதற்குமேலே அக்கியோவுடனான திருமணம் பற்றி ஒரு முடிவிற்கு வரவும் நாளாகும் என்று நினைத்தாள்.

சரி பார்த்திபன் சொன்னதற்காக நன்கு நாள் அமைதியாய் இருப்போம் என்று இருக்க, ஹேமா திரும்பவும் வந்து கேட்டாள்.

“என்ன டி நீ.. என்னென்னவோ சொல்லிட்டு இப்போ ரிலாக்ஸ் வேணும்னு அமைதியா இருக்க.. உங்க மாமா என்னை பிடிச்சு கேட்கிறார்…” என,

“ஏன் மாமாக்கு என்ன??!!” என்றாள் சிறு யோசனையோடு லேகா.

“அவருக்கு என்னவா??? ஏன் அவர் கேட்க கூடாதா??” என்று ஹேமா ஆரம்பிக்க,

“ஷ்… அக்கா.. ப்ளீஸ்.. நீ இப்படி எல்லாம் பேசினா எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாது… கூல் டவுன்…” என்று ஹேமாவின் கைகளை பிடித்துக்கொள்ள,

“நீ என்ன சொன்னாலும் சரி லேகா.. அந்த ஜப்பான் காரனுக்கு எல்லாம் உன்னை கட்டிக்கொடுக்க முடியாது.. நானும் அவரும் உன்னை அப்படியே விட்டிடுவோம்னு நினைச்சியா நீ??? எனக்கு சொந்தம்னு இருக்கிறதே நீ ஒருத்தி தானே டி.. என்னை விட்டு நீ அங்கேயே செட்டில் ஆகப்போறேன்னு சொல்றது எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா??” என்று ஹேமா அழவே தொடங்க,

‘ஓ… காட்…’ என்று இருந்தது லேகாவிற்கு.

“என்ன லேகா அப்படி பாக்குற?? உனக்கு ஒரு வாழ்க்கை நாங்க அமைச்சு கொடுக்க மாட்டோமா???” என,

“எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கையை நான் அமைச்சுக்க கூடாதா??” என்றாள் லேகா பட்டென்று..

ஹேமாவை போல, அழவில்லை, அது இதென்று பேசவில்லை.. ஆனால் சரியாய் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் கேட்டாள். ஹெமாவினால் பதிலே சொல்ல முடியவில்லை..

‘ஆங்…!!!’ என்று லேகாவின் முகம் பார்க்க,

“என்னக்கா சொல்லு.. என் வாழ்க்கை மேல எனக்கு அக்கறை இருக்காதா?? ம்ம் ” என்று கேட்க,

“இல்ல டி.. அது… அங்க யாரோ எப்படியோ.. ஆனா.. உனக்குன்னு ஒரு சப்போர்ட் வேணாமா?? இதேது நாங்க பார்த்து வைக்கிறதுன்னா, நம்பிக்கையா இருக்கலாம்..” என்றாள் ஹேமாவும்..

ஹேமா பேச பேச ஒன்றுமட்டும் லேகாவிற்கு நன்கு புரிந்தது, இதெல்லாம் ஹேமாவாகப் பேசவில்லை என்று. ஏனெனில் அவளுக்குத் தெரியாதா அவளின் அக்கா பற்றி. ஹேமா அவளின் போக்கில் பேசினால் எப்படியான வார்த்தைகள் உபயோகிப்பாள் என்பது முதற்கொண்டு லேகாவிற்கு நன்கு தெரியும் . அப்படியிருக்க, தானே அமைதியாய் இருக்கையில் இப்போது ஹேமாவாய் வந்து பேசியது, நிச்சயம் முரளியின் வேலையாய் இருக்கும் என்று புரிந்தது.

‘பார்த்தி சொன்னது நிஜம் தான்…’ என்று எண்ணியவள்,

“ஏன் எனக்கு ஒண்ணுன்னா நீங்க அங்க வர மாட்டியா?? இல்லை நான் தான் அப்படியே உன்னை விட்டிட போறேனாக்கா??” என்று லேகா கேட்கவும், ஹேமா பதிலே சொல்லவில்லை.

என்ன சொல்லவென்று தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

“இல்ல லேகா அது…”

“அதுவுமில்ல எதுவுமில்ல… நீ தேவையில்லாம கன்பியூஸ் ஆகாத.. என்னோட வாழ்க்கை முன்ன எப்படியோ, ஆனா இனிமே இப்படிதான் இருக்கணும்னு எனக்குன்னு சில கனவுகள் இருக்கு.. ப்ளீஸ் க்கா.. அதுக்கு நீ தடையா இருந்திடாத, என்னால உன்னை மீறி எதுவும் செய்யவும் முடியாது. ஆனா அப்படி செய்யற சூழ்நிலையும் கொண்டு வந்திடாத..” என்று லேகா பேச, அவ்வளோதான் ஹேமாவின் மனது உருகிப்போனது.

முரளி ஏற்றி வைத்திருந்த அனைத்தும், லேகாவின் இந்த பேச்சினில் இறங்கிட,

“ச்சி லூசா லேகா நீ.. உன்னோட சந்தோசம் எனக்கு எவ்வளோ முக்கியம் தெரியுமா..” என்றாள் ஹேமாவும்..

“அப்புறமென்ன விடு.. நீயும் ரீலாக்ஸா இரு.. இப்போதைக்கு எதுவும் பேசாத.. மாமாக்கிட்ட கூட.. ஒரு டூ டேஸ் கழிச்சு நம்ம அப்பா வீட்டுக்கு போயிட்டு வரலாம்.. யாருமே இல்லைன்னாலும் அங்க போனா மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கும்…” என,

“ம்ம்ம் ஆனாலும் அவருக்கு நான் பதில் சொல்லணுமே லேகா…” என்றாள் ஹேமா..

“கேள்வி என்னை கேட்க சொல்லுக்கா, நான் பதில் சொல்லிக்கிறேன்..” என்றவள், “நீயும் கொஞ்சம் தெளிவா யோசிக்கப் பாரு..” என்று சொல்லி அனுப்பினாள்.

ஹேமாவிற்கு, லேகாவின் மீது மனம் உருகினாலும், இன்னமும் தெளிவற்ற நிலை தான். எங்கே லேகாவிற்கும் முரளிக்கும் இடையில் மன பிணக்கு எதுவும் வந்திடுமோ என்ற அச்சம் வேறு. ஆனாலும் கூட, ஏன் பிடிக்காத வாழ்விற்கு லேகாவை நாம் கட்டாயம் செய்ய வேண்டும், அவளின் வாழ்வு அவளின் விருப்பம், அந்த விருப்பத்தை எப்படி நிறைவேற்றவேண்டுமோ அப்படி செய்துகொடுக்க வேண்டியது பெரியவளாய் தன் கடமை என்பது எல்லாம் மனதில் இருந்தது.

ஆனாலும்………

முரளி என்ற ஒருவன் இருக்கும் வரைக்கும் யாரின் விருப்பமும் அத்தனை எளிதில் நடக்குமா என்ன??

ஹேமா திரும்ப வந்து கணவனிடம் பேசியதுமே “அறிவிருக்கா???” என்றுதான் கேட்டான் முரளி..

ஹேமாவிற்கு திக்கென்று தான் இருந்தது. திடீரென்ற முரளியின் கோபமும், அவன் முகத்தில் ஜொலித்த பாவனையும் அவளை திகைப்படைய வைக்க,

“ஏங்க???” என்றாள்..

“பின்ன லேகாக்கு என்ன தெரியும்?? இல்லை அவ சொல்றான்னு இங்க இருக்க எல்லாத்தையும் வித்து, பணம் ஆக்கி கொடுத்துட்டா, அவ லைப் செட்டில் ஆகிடுமா??” என்று முரளி கத்த,

“ஏங்க.. நான் இப்போ சொத்து விசயமே பேசலை.. அவ கல்யாண விசயம் தான் பேசுறேன்…” என,

‘உனக்கு இவ்வளோ தெளிவா யோசிக்கத் தெரியுமா??’ என்றுதான் பார்த்தான் முரளி.

அவனின் அந்த பார்வையே பயம் கொடுக்க, “உங்களுக்கு ஏங்க இவ்வளோ கோபம்??” என்றாள் தன்மையாக..

“பின்ன… இல்ல நான் என்ன முட்டாளா?? உங்கப்பா எல்லாத்தையும் பார்த்துக்கோன்னு என் பொறுப்பில கொடுத்துட்டு போயிட்டாரு.. அதை நான் சரியா செய்ய வேணாமா?? லேகா ஆயிர இருந்தாலும் சின்ன பொண்ணு.. இங்க பாரு நாளைக்கு நான் பார்த்தி லேகா விசயமா அப்பா அம்மாக்கிட்ட பேச போறேன்.. நீயும் லேகாவும் சொதப்பி வைக்காம இருந்தா சரி..” என்றவனை இம்முறை புரியாது பார்த்தாள் ஹேமா.

“என்ன அப்படி பாக்குற??”

“அவளுக்குத்தான் விருப்பம் வேறன்னு தெரிஞ்சும் நம்ம இப்படி பண்றது சரியா???” என்று ஹேமா பேசிக்கொண்டு கேட்கையிலேயே, முரளியின் முகம் முழுதும் மாறி விட்டது.

கண்களை இடுக்கி, கைகளை கட்டி ஹேமாவை ஒரு பார்வை பார்த்தவன், “என்ன, கொஞ்ச நேரம் தங்கச்சிக்கிட்ட பேசிட்டு வரவும், நான் சொன்னது எல்லாம் மறந்திடுச்சா??” என்றவன்,

“இங்க பார் ஹேமா.. நான் சொல்றதை கேட்டா எல்லாருக்கும் நல்லது.. இல்லைன்னா அவ்வளோதான்.. லேகா வாழ்க்கை முன்னாடி என்னாச்சு.. இப்போ இருக்க பணத்தையும் மொத்தமா அங்க போய் கொடுத்து, எவனையோ கல்யாணம் பண்ணி, ஏமாத்தி நடுத்தெருவில நிறுத்திட்டா அப்போ என்ன செய்வ?? ” என, ஹேமாவினுள் பயம் துளிர்விட்டது.

ஒருவரை நம் சொல் பேச்சு கேட்க வைக்கவேண்டுமெனில் அவரின் ஆசையை தூண்டி விடலாம் இல்லையோ பயத்தை தூண்டி விடலாம்.

முரளியின் ஆசை இங்கே ஹேமாவின் பயத்தை தூண்டிவிட,

“இல்லங்க.. அது…” என்று அவள் சொல்கையில், போதும் என்பதுபோல் கைகளை உயர்த்தியவன்,

“நீ நினைச்சா முடியும்… லேகாக்கு அவளோட சொத்து கிளியர் பண்ணி கொடுக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. பட்… நல்லா கேட்டுக்கோ.. அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறது நம்ம பொறுப்பு.. புரிஞ்சதா..” என, ஹேமா அமைதியாகவே இருந்தாள்

ஒருவேளை முரளி சொல்வது போல, லேகாவின் அனைத்து பணத்தினையும் பிடுங்கிக்கொண்டு அந்த அக்கியோ அவளை நடுத்தெருவில் விட்டுவிட்டால்??

‘ஐயோ….’ என்று உதடுகள் உச்சரிக்க, மேற்கொண்டு எதையும் ஹேமாவால் நினைத்துக்கூட பார்த்திட முடியவில்லை.

முரளியோ ஹேமாவின் முகத்தினையே பார்த்தவன், அவன் எதிர்பார்த்த பயமும் குழப்பமும் அதில் தெரிய, ஒரு திருப்தியோடு “சரி நீ டென்சன் இல்லாம தூங்கு.. நான் கொஞ்ச நேரம் மாடியில நடந்திட்டு வர்றேன்..” என்று மொட்டை மாடி சென்றான்.

அவனுக்கும் நிறைய யோசிக்கவேண்டி இருந்தது. நாளைக்கு நிச்சயம் அவன் பார்த்திபன் லேகா திருமணம் விஷயம் அவனின் வீட்டினில் பேசும் முடிவினில் தான் இருந்தான். இன்னமும் இரண்டு நாட்களில் தன்யாவின் பெற்றோர்கள் வேறு வருகிறார்கள். அவர்கள் வரும் முன்னே, இங்கே லேகா பார்த்திபன் விஷயம் ஓரளவு தெளிவு பெற்றுவிட்டால் பின்னே தேவையில்லாத குழப்பங்கள் இருக்காது என்று எண்ணினான்.

அதன் ஆரம்ப கட்டமாய் ஏற்கனவே பார்த்திபன் முன் ஈஸ்வரியிடம் சொல்வது போல் “ம்ம் சித்தியோட அண்ணா அண்ணி எல்லாம் துபாய்ல இருந்து வர்றாங்க போல..” என்று ஆரம்பித்தபடி பார்த்திபனை காண, அவனோ முகத்தினில் எதுவும் காட்டாது அமர்ந்திருந்தான்.

“ஆமாடா காஞ்சனா சொன்னா.. தன்யாவுக்கு வரன் விசயமா வர்றாங்க போல..” என்ற ஈஸ்வரியை, பார்த்திபன் பார்க்க, முரளியும் இதனைத் தான் பார்த்தான்.

“என்ன பார்த்தி… உனக்கும் பொண்ணு பார்த்திடலாமா.. ஜப்பான்ல வேலைன்னு ஆகிடுச்சு.. அங்கேயே இருக்கிறது போல பொண்ணு பார்ப்போமா…” என்று ஏற்கனவே ஆரம்பித்து இருந்தான்.

இப்போதோ, முடிவே செய்துவிட்டான் நாளைக்கு வீட்டினில் பேசிட வேண்டும் என்று.

இதை பற்றியே யோசித்துக்கொண்டே முரளி நடந்துகொண்டு இருக்க, பக்கத்து வீடு, அதாவது தன்யா வீட்டு மொட்டை மாடியில் யாரோ இருப்பது போலிருந்தது.

இருட்டாய் இருந்தாலும், கண்களை கூர்மையாக்கி, அங்கே அவர்களின் மாடியின் சுவர் அருகே போய் நின்று பார்த்தவனுக்கு சட்டென்று ஒரு பேரதிர்ச்சி.

எதிர்பார்க்கவே இல்லாத ஒன்று..

அனைத்தும் சரியாய் இருக்கிறது என்ற மிதப்பில் இருக்கையில், எதுவுமே சரியில்லை இதெல்லாம் உன்னுடைய முட்டாள்தனம் என்று சொல்லாமல் சொல்லும் விதமாய் கண் முன்னே இருக்கும் காட்சி..

பார்த்திபனும், தன்யாவும்… அருகருகே கைகளை கோர்த்துக்கொண்டு சாய்ந்து அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் பேசியது சரியாய் கேட்கவில்லை.. ஆனால் அவர்கள் அமர்ந்திருந்த விதம், எங்களுக்குள் பிரிவேயில்லை என்பதை அப்பட்டமாய் பறை சாற்றியது..

இன்னமும் கூட முரளியால் தான் காண்பதை நம்பிட முடியவில்லை..

அவனின் மனதோ ‘இல்லவே இல்லை…’ என்று அலறியது.

அவனின் அடிப்படை திட்டமே ஆட்டம் கண்டுக்கொண்டு இருப்பது கண் முன்னே தெரிந்தது. முரளி நின்றிருப்பது நிச்சயம் பார்த்திபனுக்கும் தன்யாவிற்கும் தெரிய வாய்ப்பில்லை. அவன் நிற்பதோ இருட்டினில். இவர்களின் பக்கம் மெல்லிய வெளிச்சம் இருந்தது.

கால்களை நீட்டி, தோள் தொட அமர்ந்து, இத்தனை நாட்களின் பிரிவிற்கும் சேர்த்து பேசிக்கொண்டு இருக்கையில், கண் முன்னே யார் வந்து நின்றாலும் கூட அது தெரியாது தானே..

முரளிக்கு ரத்தம் கொதித்தது..

அதிலும் அவனுக்கு பார்த்திபனை விட, தன்யாவின் மீது தான் அதிக கோபம். கடைசியில் ஒன்றுமே அறியாதவள் போல் நாடகம் ஆடிவிட்டாள் என்று. அவனின் ஒட்டு மொத்த திட்டங்களையும் தன்யா தவிடுபொடியாக்கி விட்டாள் என்று..

‘ஏ… தன்யா.. சரி சரின்னு சொல்லி சொல்லியே ஏமாத்திட்டல.. அதுவும் என்னை.. இருக்கு டி உனக்கு..  முழுசா பிரிக்கிறேன்.. உன்னையும் இவனையும்… எல்லாம் கூட்டு களவாணித் தனம் பண்ணி என்னை முட்டாள் ஆக்கப் பார்த்தீங்களா?? முடியாது.. அதுவும் என்கிட்டே உங்களோட எதுவுமே பலிக்காது…’ என்று முறைத்துக்கொண்டு நின்றவன், வேகமாய் கீழே போனான்..

இதெல்லாம் அறியாத இவர்கள் இருவரும் தங்களின் காதல் உலகில் சஞ்சரித்துக்கொண்டு இருந்தனர்..

தன்யா பார்த்திபனின் கைகளை பிடித்துகொண்டு இருக்க “நோ நோ.. டோன்ட் டச்.. நீங்க ஸ்பேஸ்ல இருக்கணும் சொல்லிருக்கீங்க தன்யா மேடம்..” என்று அவளின் தோள் மீது கை போட்டபடி வம்பிழுத்தான்..

“ஓ…!! அப்போ இதுக்கு பேரு என்ன??” என்று தன்யா கேட்க,

“நான் தள்ளி இருப்பேன்னு சொல்லவேயில்லையே.. நீ தான் சொன்ன..” என்றவன் இன்னமும் நெருங்க,

“ஷ்…!! பார்த்தி…” என்று தன்யா நெளிய,

“இப்போ என்னத்துக்கு பாம்பு டான்ஸ் ஆடுற..” என்றவனோ அவளின் இடையோடு இழுத்து இறுக்கிப் பிடிக்க,

“பார்த்தி…” என்று தன்யா சிணுங்க,

“எங்க இப்போ சொல்லு.. போ அப்படின்னு…” என்றான் அவளின் கண்களைப் பார்த்து.

“இதை நீ எப்போ விடுவ பார்த்தி, வந்ததுல இருந்து இதையே தான் கேட்கிற…” என்று தன்யா சலித்தாலும், அவளின் குரலில் வருத்தம் தெரிய,

“ஏன்னா, எப்பவுமே நான் உன்னை விட்டிட மாட்டேன்.. அதான்.. இன்னும் கூட எனக்கு கோபம் அடங்கல டி…” என்றவன்,

“முரளி சொன்னான்னு நீ என்னை போ சொல்லிட்டல…” என,

“அச்சோ.. ப்ளீஸ்.. நீ என்னையும் புரிஞ்சுக்கோ பார்த்தி, எனக்கு அப்போ உன்னோட நல்லது மட்டும் தான் முக்கியமா இருந்தது.. அதனால..” எனும்போதே,

“நீ இல்லாத நல்லது எனக்கு நல்லதா இருக்குமா?? சொல்லு..” என்றான் பார்த்திபன்..

அவனின் ஒவ்வொரு கேள்வியிலும், கோபத்திலும் கூட, அவளின் மீதான காதலே தெரிய, தன்யாவிற்கு மனம் நிறைந்து தான் போனது, அழுந்த அவனின் கன்னத்தில் முத்தமிட்டவள், “இனிமே நான் எதுவுமே சொல்லமாட்டேன் போதுமா??” என்றாள்..

ஆனால் அவனோ “ஆமா இப்போ என்ன பண்ண கிஸ் பண்ணியா???” என்றபடி வேகமாய் கன்னம் துடைக்க,

“ஹெலோ என்ன??!!!” என்று ஒரு கடுப்பில் தான் பார்த்தாள் தன்யா..

“என்ன என்ன?? போ டி.. என்னவோ போன்லயே சமாதானம் பண்ணதுனால சும்மா விடுறேன்.. நீ மட்டும் என்கிட்டே பேசிருக்கல அவ்வளோதான்..” என்றான் இப்போதும் கூட மனதின் ஆற்றாமை தீராது..

“அதான் எல்லாமே சரியாகிடுச்சே.. அப்பா அம்மா வரவும் ரெண்டு பேமிலியும் பேசட்டும் முடிவு பண்ணட்டும்.. இந்த டைம்ல நமக்குள்ள சண்டை வேண்டாம்..” என்று அவன் கன்னம் தொட்டு சொல்ல,

“சும்மா சும்மா இப்போ எதுக்கு டி கன்னத்த தொடுற??” என்றான்..

“ம்ம்.. என்னவோ ஜப்பானுக்கு போய் கொஞ்சம் பல பலன்னு ஆகிருக்க போல தெரிஞ்சது அதான்…” என்று தன்யா மீண்டும் அவனின் கன்னம் வருட,

“ம்ம் வர்றபோ ஆபர்ல ஒரு பேசியல் பண்ணேன்.. அதுவும் அழகா ஒரு ஜப்பான்காரி கையாள…” என, தன்யாவோ விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“ஹேய் என்ன சிரிப்பு…??”

“நீ ஆபர் இல்லைனா எதும் செய்ய மாட்டியா??” என்றவள் மேலும் சிரிக்க, அவனுக்குப் புரியவில்லை.

“புரியலையா??!!” என்றவள், “அன்னிக்கு அப்படித்தான் ட்ரின்க் பண்ணிட்டு ஜப்பான்காரி டேட்டிங் கூப்பிடுறா ஆபர்லன்னு சொன்ன.. இப்போ பேசியல்.. சரியான கஞ்சூஸ் நீ பார்த்தி..” என்று சொல்லி கிண்டலடிக்க, அசடு வழிந்தான் பார்த்திபன்.

“ஹா ஹா வழியுது…” என்றவள், “சரி சரி அப்படி கூப்பிடு…” என,

“எப்படி??!!” என்றான் தெரியாதவன் போல..

“ம்ம்ச் அதான் எப்பவும் கூப்பிடுவியே அப்படி கூப்பிடு.. இங்க வந்ததுல இருந்து நீ அப்படி சொல்லவேயில்லை..” என்று தன்யா உதடு பிதுக்க,

“ம்ம்… எப்படி கூப்பிடுவேன்…ம்ம்ம்…” என்று யோசிப்பது போல் பாவனை செய்தவன் ஓரப்பார்வை பார்க்க,

“ரொம்ப பண்ணாத.. தனியா தூள்னு கூப்பிடு…” என்றாள் உரிமையாய்..

“அதெல்லாம் நீ தனியா இருக்கப்போ கூப்பிடனும்.. இப்போதான் என்னோட இருக்கியே மாட்டேன் போ..” என,

“ப்ளீஸ் ப்ளீஸ் கூப்பிடு பார்த்தி….” என்று தன்யா கெஞ்ச, “ மாட்டேன் மாட்டேன்…” என்றவன்

“ஹ்ம்ம் வேணும்னா கரம் மசாலான்னு சொல்லலாம்.. ஸ்பைசி ஆடட்.. தனியா நீ.. ஸ்பைசி நான்..” என்று புது விளக்கம் சொல்ல,

அவனை ‘ங்கே…’ என்று பார்த்தவள் “நீ என்ன பிரியாணியா செய்யப் போற??” என,

“ஆமாம் டி தனியா தூள்.. இது லவ் பிரியாணி…” என்றுசொல்லி அவளை இறுக அணைக்க, தன்யாவிற்குள் காதல் மணம்…             

                                               

                            

 

 

   

Advertisement