Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 16

“என்ன தன்யா.. என்னம்மா விசயம்??” என்று அப்பா கேட்க,

“பேசணும்னு கால் பண்ணிட்டு என்ன தன்யா அமைதியா இருக்க??” என்று அம்மாவும் கேட்க,

“ம்ம் ஆமா ம்மா…” என்றவள், “ப்பா நெக்ஸ்ட் மன்த் இந்தியா வர்றீங்க தானே…” என்றாள் அவர்களின் முகத்தினையே பார்த்து.

“ஆமாடா தன்யா.. பட் டேட் இன்னும் பிக்ஸ் பண்ணலை.. ஏன் என்ன விஷயம்?? நீ இங்க வர்றியா?? ஒரு செஞ்சா இருக்கும்..” என்று கோபால் கேட்கவும்,

“இல்லைப்பா…” என்று வேகமாய் மறுத்தவள், “அது.. உங்க ரெண்டு பேர் கிட்டயும் நேர்ல தான் சொல்லனும்னு இருந்தேன்…” என்று இழுத்தவள், திரும்ப பேச்சினை பாதியில் நிறுத்த,

“தன்யா??? எதுவா இருந்தாலும் பிரான்க்கா சொல்லு…” என்று சுகந்தி கொஞ்சம் அழுத்தமாய் சொல்ல,

‘சொல்லத்தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன்…’ என்ற நிலை தான் தன்யாவிற்கு.

‘ஷப்பா..!!! இந்த பார்த்தி எல்லாம் எப்படி அத்தைக்கிட்ட  சொன்னானோ…’ என்று யோசித்தவள், ‘இதுக்கு அவனையும் வச்சிட்டு நேர்லயே சொல்லிருக்கலாமோ..’ என்றும் நினைக்க, அவளின் முகத்தில் அப்படியொரு உணர்வுக் கலவைகள்.

மகள் என்னவோ முக்கியமாய் பேசவேண்டும் என்று அழைத்திருக்கிறாள் என்பது அவர்களுக்குப் புரிந்து, இருவரும் தன்யாவின் முகத்தினையேப் பார்க்க, அவள் முகத்தினில் தெரியும் ஒவ்வொரு பாவனையும், அப்பா அம்மா இருவரையும் தங்களை ஒருவரை ஒருவர் பார்க்க வைத்தது.

“தன்யா ம்மா…” என்று கோபால் சொல்ல,

“காஞ்சனா எங்க?? போனை கொடு.. நான் பேசிக்கிறேன்…” என்று சுகந்தி சொல்லவும்,

தன்யா “ஐயோ ம்மா.. இல்லை நானே சொல்லிடுறேன்..” என்றவள்,  “அதும்மா.. அன்னிக்கு நீ… அத்தைக்கிட்ட…” என்று ஒவ்வொரு சொல்லுக்கும் இடைவெளி விட்டு பேச,

“தன்யா… நீ டென்சனா இருந்தா மார்னிங் கூட பேசலாம்..” என்றார் கோபால்..

‘என்னது இந்த டென்சன் நாளைக்கு வரைக்குமா… ஓ… நோ…’ என்று அவளுள்ளம் அலற, “இல்லப்பா… அன்னிக்கு அம்மா அத்தைக்கிட்ட அலையன்ஸ் பார்க்கிற விசயமா பேசினாங்க.. அதைப்பத்தி கேட்கத்தான்…” என்று ஆரம்பித்தவள்,

‘அய்யோ..!!!’ என்ற பாவனையோடு பேச்சை மீண்டும் நிறுத்த, பெற்றவர்கள் இருவரும் திரும்பவும் ஒருமுறை தங்கள் முகம் பார்த்துக்கொண்டனர்.

‘என்ன சொல்ல வருகிறாள்…’ என்று இருவரும் பார்க்க, “அது.. அதுப்பா.. ம்மா.. அதுவந்து.. இங்க எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்கு.. மூணு வருசமா லவ் பண்றோம்…” என்று தன்யா சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு வியர்த்தே விட்டது.

கோபாலும், சுகந்தியும் கொஞ்ச நேரம் பேச்சற்று இருக்க, அவர்கள் மௌனித்த அந்த சில நொடிகளில் தன்யாவிற்கு தான் மிகவும் தவிப்பாய் போய்விட்டது. கண்களில் நீர் கூட அரும்பிவிட,

“ம்மா….” என்றாள் சத்தமே வராது.

மகளின் உதடு மட்டுமே அசைவது, எங்கோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு, உனக்காகத்தான் சம்பாதிக்கிறோம் என்று சொல்லி, தொடுதிரையில் மட்டுமே மகளை உணர்ந்துகொண்டு இருக்கும் பெற்றவர்களுக்கு புரியாதா என்ன??

மூன்றாண்டுகள்…

இப்போது தான் சொல்கிறாள்..

அதுவும் திருமணம் என்ற பேச்சை எடுத்த பின்னே..

சுகந்தி பேசாமலே இருக்க, கோபால் தான் “யாரது…” என்றார்.

அப்பா பதில் கேள்வி கேட்டபின்னே தான் அவளுக்கு அப்பாடி என்றே இருந்தது. எங்கே எடுத்ததுமே திட்டி, மறுத்துவிடுவார்களோ என்று தான் அஞ்சிப்போனாள். நல்லவேளை அப்படி எதுவுமில்லாது என்ன ஏதென்று விசாரிக்கையில், தன்யாவிற்கும் ஒரு நிம்மதி பிறக்க, பார்த்திபன் பற்றிய விபரங்கள் எல்லாம் சொன்னாள்.

‘பார்த்திபன்…’ என்றதுமே, அப்பா அம்மா இருவருக்குமே முகத்தினில் ஒரு சிறு தளர்வு பிறந்ததோ என்னவோ.. ஆனால் தன்யாவிற்கு அப்படித்தான் தோன்றியது..

‘கடவுளே அப்பா அம்மா நோ சொல்லிட கூடாது…’ என்று வேண்டியபடியே இருவரையும் காண, சுகந்தி கோவமாய் அவளைப் பார்ப்பது கண்டு,

“ம்மா…” என,

“இதை சொல்ல உனக்கு இத்தனை நாளா டி?? ஆமா இதனால தான் நீ எப்படியோ பேசினியா அன்னிக்கு??” என்று சுகந்தி பாய,

“சுகா…” என்று மனைவியை பொறுமையாய் இருக்கச் சொன்னவர், “தன்யா… இது பார்த்திபன் வீட்டுக்குத் தெரியுமா??” என்று கேட்க,

“இல்லப்பா.. இன்னிக்குத் தான் பார்த்தி அத்தைக்கிட்ட சொன்னான்.. அத்தை உங்கக்கிட்ட பேசறேன் சொன்னாங்க. பட் நான்தான் நானே சொல்றேன்னு…” என்று இழுத்தாள்.

மகள் சொல்ல வருவது புரிந்து, இருவருக்குமே ஒரு சிறு மெச்சுதல் அவர்களின் பார்வையில்.

“ம்ம் இப்போ அந்த பையன் ஜப்பான்ல இருக்கிறதா அன்னிக்கு அத்தை சொன்னா…” என்று கோபால் சொல்ல,

“ஆமா ப்பா… அங்க தான் வேலை.. அடுத்த மாசம் இந்தியா வர்றான்…” என்று இவளும் மொழிய,

“ம்ம்… சரி நேர்ல பார்த்துக்கிறோம்.. அதுக்கு முன்ன எங்கக்கிட்ட ஒன்ஸ் பேச சொல்லு தன்யா..” என்று அவர் சொன்னதும், இவளுக்கு ஆச்சர்யத்தில் கண்கள் விரிய,

சுகந்தியோ “என்னங்க..??!!!” என்றார் திகைத்து.

கோபாலோ, இருவரையும் மாறி மாறி பார்த்தவர் “பேச தானே சொன்னேன்.. வேற எதுவும் சொல்லலையே.. நீ மட்டும் பேசுறதை வச்சு எங்கனால எந்த முடிவுக்கும் வர முடியாது…” என்றார் கொஞ்சம் கண்டிப்பாகவே..

“சியூர்ப்பா… கண்டிப்பா.. நா.. நான் பார்த்தியை உங்களுக்கு பேச சொல்றேன்..” என்று சொன்னவளுக்கு, அவளின் சந்தோசத்தை மறைக்கவே முடியவில்லை.

இமைகள் ஒருவித படபடப்பில் அடித்துக்கொள்ள, முகத்தில் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்ட, மகிழ்வும், ஒருவித பயமும் தன்யாவை ஒரு புது பரிமாணத்தில் காட்டியது. சுகந்திக்கு இதெல்லாம் புரியாதா என்ன??

இருந்தாலும் கூட, மகள் காதல் என்று சொன்னதில் ஒரு கோபம் இருக்கத்தான் செய்தது. யாரோ எவனோ என்று பேர் ஊர் தெரியாதவனை சொல்லாமல், அந்த மட்டும் பார்த்திபன் என்றாளே என்ற ஒரு நிம்மதியாகவும் இருந்தது. ஆனாலும் கோபால் போல, உடனே அடுத்தது என்று அடுத்த கட்டம் போக முடியவில்லை. முகத்தை உர்ரென்று வைத்தே இருந்தார்,  கோபாலோ விஷயம் பேசியாச்சு  என்ற விதத்தில்

“சரி நீங்க பேசுங்க..” என்றுவிட்டு சென்றுவிட,

“ம்மா.. கோபமா ம்மா??” என்றாள் தன்யா…

….

“ம்மா பேசு ம்மா…”

…..

“ம்மா ப்ளீஸ் ம்மா…” என்று தன்யா கெஞ்ச,

“என்ன டி பேச சொல்ற.. என்னவோ சொல்லிட்ட.. இருந்தாலும் ஒருமாதிரி இருக்கு..” என்று அம்மாவாய் வருந்த,

“பார்த்தி நல்லவன் ம்மா.. என்னை நல்லா பார்த்துப்பான்..” என்றான் உலகத்தில் காதல் வயப்பட்ட பெண்கள் சொல்லும் வழக்கமான வசனம் ஒன்றை.

“ம்ம்ம் பார்த்திபனை உனக்கு முன்னாடி இருந்து எனக்குத் தெரியும்.. நாங்க இங்க இருந்தாலும் அங்க யார் யார் எப்படின்னும் எங்களுக்குத் தெரியும்.. அப்பாக்கிட்ட பேச சொல்லு.. மத்தது நேர்ல வந்து பார்த்துக்கலாம்..” என்றார் அப்போதும் கறாராகவே.

“ம்ம் சரிம்மா…” என்றவளுக்கு, இந்த மட்டும் எதுவும் ‘முடியாது..’ என்று சொல்லாது, பார்க்கலாம் என்றதே பெரும் நிம்மதி கொடுக்க, மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தவளுக்கு, குதிக்க வேண்டும் போலதான் இருந்தது.

என்னவோ பாதி கிணறு தாண்டிய நிலை. பார்த்திபன் வீட்டினில் மட்டும் சரியென்று சொல்லிவிட்டாள் போதும். முரளியாவது முட்டு சந்தாவது… யாராலும் ஒன்றும் சொல்ல முடியாதே.

‘ஹாப்பாடி….’ என்று சந்தோஷ பெரு மூச்சு விட்டவள், அனைத்தையும் பார்த்திபனுக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்.  அவனோடு பேச வேண்டும் போலதான் இருந்தது. ஆனால் நேரம் நள்ளிரவு என்பதால் பார்த்திபன் உறங்கியிருந்தால் என்ன செய்வது என்ற யோசனை தான்.

புரண்டு புரண்டு படுத்தாலும், தன்யாவிற்கு உறக்கம் வரவில்லை. பார்த்திபனோ, காஞ்சனாவோடு பேசிய நிம்மதியிலும், அடுத்து தன் வீட்டில் சொல்லப் போகும் முடிவினிலும் நன்கு உறங்கியிருந்தான்.

இவர்களின் கதை ஒருபுறம் இருக்க, லேகாவும், அக்கியோவோடு கலந்து பேசி ஒரு முடிவினில் தான் இருந்தாள். ஹேமாவும் முரளியும் சம்மதம் என்று சொன்னால், அனைவரின் முன்னிலையில் இங்கே ஜப்பானில் வைத்தே திருமணம் என்பது..

இல்லையோ, அக்கியோ வீட்டினரின் முன்னிலையில் அவர்களின் திருமணம் என்ற முடிவில் இருந்தனர்.

லேகாவிற்கு மனதில் பட்டுக் கொண்டே இருந்தது, இந்தியா சென்றாலும் கூட, அங்கேயும் எதாவது பிரச்சனை தான் கிளம்பும் என்று. நிச்சயம் முரளி அத்தனை எளிதில் இதற்கு சம்மதிக்க மாட்டன் என்றும். ஹேமாவிடம் சொன்னதை பார்த்திபனிடம் சொல்லும்போதே, முதலில் பார்த்திபன் திட்டினான் தான்.

“ஏன் லேகா இப்போவே சொன்ன.. ஊருக்கு கிளம்பிட்டு அந்த டைம்ல கூட சொல்லிருக்கலாம் தானே.. இப்போ முரளி அண்ணிய நல்லா ட்விஸ்ட் பண்ணிருப்பான்..” என்று..

அதுவே மனதில் ஓடியது..

உண்மையும் அதானே..

லேகாவை தன் கட்டுப்பாட்டில் வைக்க, முரளிக்கு இப்போது கையில் இருக்கும் துருப்புச் சீட்டு ஹேமா மட்டுமே.. அவளை முன்னிட்டே லேகாவை வளைக்க வேண்டும்.. சாதரணமாய் இருந்திருந்தால், லேகா பார்த்திபன் திருமணம் என்பது கொஞ்சம் சிரமப்பட்டு நடத்தியிருக்கலாம்..

ஆனால் இப்போது இந்த லேகா வேறு காதல் என்றதும் முரளிக்கு முழி பிதுங்கி தான் போனது..

‘ச்சே…. இந்த தன்யாவ தள்ளி வைக்க நம்ம படாத பாடு பட்டா இப்போ ஒரு ஜப்பான் காரன் வந்து நிக்கிறேன்.. இடியட்ஸ் இதுங்களை எல்லாம் யாரு லவ் பண்ணுனு சொன்னது…’ என்று பல்லைக் கடித்தபடி மொட்டை மாடியில் நடந்துகொண்டு இருந்தான்..

உறக்கம் சுத்தமாய் போனது..

இவனின் உறக்கம் பறித்தவர்களோ, தங்களின் எதிர்காலம் குறித்த திட்டத்தில், அடுத்த கட்டம் செல்லப் போகும் சந்தோஷத்தில் உறங்கிக்கொண்டு இருக்க, முரளிக்கு லேகாவும் பார்த்திபனும் இந்தியா வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் வகுக்க வேண்டிய கட்டாயம்..

‘ஹேமா பத்தி பிரச்சனை இல்லை.. அப்பா அம்மாவை முன்னாடியே பேசி சரி பண்ணி வைக்கணும்… முக்கியமா அதுக்குள்ள இந்த தன்யாவை எப்படியாது எங்கயாது போக வைக்கணும்.. ம்ம்ம்ம் எங்க போக வைக்கிறது…’ என்று யோசிக்க,

முரளியின் மனது மேலும் ஒரு வில்லத்தனம் யோசித்து…

‘கண்டிப்பா பார்த்திபன் லேகா வர்றப்போ தன்யா இங்க இருக்கக் கூடாது…. இருக்கவே கூடாது.. ஒன் டைம் ரெண்டு பெரும் நேர்ல பார்த்துட்டா பின்ன எல்லாமே சொதப்பல் ஆகிடும்… சரியா பார்த்திபன் இங்க வர்ற நேரம் தன்யா இருக்கக் கூடாது.. குறைஞ்ச பச்சம் லேகா பார்த்தி நிச்சயம் நடக்குற வரைக்கும்…’ என்று எண்ணியவன், அதற்கு என்ன செய்வது என்றும் யோசித்து மனதினில் ஒரு முடிவிற்கு வந்துவிட்டான்..

ஆளாளுக்கு ஒரு கணக்கு போட்டு காய்களை நகர்த்த, விதி என்ன செய்யக் காத்திருக்கிறது என்று யாரும் அறியார்..

மறுநாள் விடியல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருந்தது. பார்த்திபன் கண் விழித்ததுமே தன்யாவின் மேசெஜினை பார்த்துவிட

‘அட தனியா தூள் நம்மளை விட காத்துல பறக்குறாளே…’ என்று குதூகலித்தான்.

‘மாமனார் கிட்ட பேசணுமா.. பேசிடுவோம்….’ என்று அவனுக்கு அவனே சொல்லியபடி, நேரம் பார்க்காது தன்யாவிற்கு அழைத்தான்..

ஜப்பானில் விடிந்தது என்றால், இந்தியாவிலும் விடிந்திடுமா என்ன??

நல்ல உறக்கத்தில் இருந்தவள், காதருகே கேட்ட அழைப்பு மணியில் எரிச்சலுடனே “ஹலோ…” என,

“ஓய் மை டியர் தனியா தூள்….” என்ற பார்த்திபனின் அழைப்பு, பட்டென்று எழுந்து அமர வைத்தது.

“பார்த்தி…..!!!!!”

“என்னா பேபி இன்னுமா தூங்குற…” என்று உற்சாகமாய் அவன் கேட்க,

“டேய் நீ டைம் பார்த்தே கால் பண்ண மாட்டியா???” என்றாள், உறக்கம் கலைந்த கடுப்பில்..

“என்னது??? டேயா???? புருஷர் டி புருஷர்… அப்படி எல்லாம் சொல்ல கூடாது.. புருஷன்னு சொன்னா கூட மரியாதை கம்மி தெரியுமா…” என்றான் ஆரவாரமாய்.

“என்னாது புருஷரா???!!! டேய் மறுபடியும் குடிச்சியா…??” என்றவள் திரும்ப படுத்துக்கொள்ள,

“நோ நோ… நான் ஏன் குடிக்கணும்.. எனக்கென்ன லவ் பெய்லியரா?? இல்ல என் ஆளு என்னை வேணாம் சொன்னாளா?? இல்ல நான் எதுக்கு குடிக்கனும்னு கேட்கிறேன்…” என்று பார்த்திபன் கேட்க,

“சரிதான்… நீ பிரெஷ்ஷா இருக்கா… என் தூக்கம் போச்சு…” என்றவளுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு இப்படிப் பேசுவது ஆனந்தமாய் இருந்தது.

“ஆமா டி நான் பிரெஷ் பீஸ் தான்… பின்ன ஜப்பான் காரியோட டேட்டிங் போயிட்டு வந்தா பேசுறேன்…” என,

“டேய்… வேணாம்.. சரி நீ எப்போ எங்க அப்பாட்ட பேசுற??” என்று விசயத்திற்கு வந்தாள்..

“பேசிடுவோம்.. நல்ல நேரம் பார்த்து.. ஆமா என்ன தனியா பாக்கெட் கட் பண்றது போல  இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட??” என்றான் ஆச்சர்யமாய்..

“அத்தைக்கிட்ட சொல்லியாச்சு.. எப்டியும் அவங்க சொல்லி நம்ம பேசுறதுக்கு.. இதுவே பெட்டர் தோணிச்சு.. டக்குனு பேசிட்டேன்.. அவ்வளோதான்..”

“ம்ம்ம்ம்….. சும்மா சொல்லக்கூடாது தனியா தூள்.. நெடியா தான் இருக்க…” என்றுசொல்ல,

“ஹா??!!!! என்னாது??!!!!” என்றாள் அவன் சொன்னது புரியாது..

“ஷப்பா.. கொஞ்சம் ப்ரைட்டா தான் இருக்கன்னு சொன்னேன் டி..” என்றவன் “தேங்க்ஸ் தன்யா…” என்றான் உணர்ந்து..

“ச்சி போ லூசு…” என்று இவள் சொல்ல,

“ஓய்.. இதுக்கு நீ வெக்கப்பட கூடாது டி..” என்று இவன் வம்பிழுக்க,

“வெக்கமா??!!!” என்றாள் தன்யா கொஞ்சம் சத்தமாய்..

“ஆமாமா.. நீ இப்போ வெக்கம் தானே பட்ட..”

“அய்யே… போ.. போய் சமைச்சு சாப்புட்டு கிளம்பு.. நான் கொஞ்சம் தூங்கனும்…” என்றவள் சலிக்க,

“பார்த்தியா….. இப்போ எல்லாமே ஓகே ஆகவும் அப்படியே சலிச்சுக்கிற…. இல்லன்னா பார்த்தி பேசமாட்டானா??? பார்த்தியை பார்க்க மாட்டோமா??ன்னு ஏங்கிட்டு இருந்த…” என்றான் ராகம் பாடி.

அவனுக்கு போனை வைக்கவே மனதில்லை.

இப்படியே பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது.. மேலே மேலே மேலே பேசிக்கொண்டே இருந்தான். தன்யா வீட்டில் பேசவேண்டும் என்றதே அவனுக்கு ஒரு தெம்பு கொடுத்திருந்தது.. இனி அப்பா அம்மா மட்டும் தான்.. அவர்களும் சரி சொல்லிவிட்டால்??

நினைத்தாலே இனித்தது பார்த்திபனுக்கு…

“நினைச்சுப் பார்க்கவே சந்தோசமா இருக்கு டி..” என்றான் ஆத்மார்த்தமாய்..

“ம்ம்.. எல்லாமே ஜூ மந்திர காளி போட்டது போல மாறுது பார்த்தி.. இப்படியே எல்லாமே நல்லதே நடக்கணும்…” என்று தன்யாவும் சொல்ல,

“கண்டிப்பா நல்லதே நடக்கும் தன்யா.. இந்தியா வர்றபோ எல்லாமே பைனலைஸ் ஆகும்…” என்றவன்

“ஓகே நீ தூங்கு.. நான் போய் ரெடி ஆகுறேன்.. லீவ் ப்ராசஸ் எல்லாம் நிறைய இருக்கு இங்க..” என்றுவிட்டு பேசி முடித்தான்..

முரளி ஒரு திட்டம் வகுக்க, லேகா – அக்கியோ அவர்கள் ஒரு முடிவில் இருக்க, பார்த்தி – தன்யா தங்களின் படிகளை ஒவ்வொன்றாய் கடக்க, அடுத்தது என்ன ??   

                              

   

                                      

 

          

      

          

Advertisement