Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 15

தன்யாவிற்கு இன்னமும் நம்ப முடியவில்லை. காண்பதெல்லாம் கனவா என்றும் விளங்கவில்லை, கேட்டதெல்லாம் நிஜமா என்றும் புரியவில்லை. ஆகமொத்தம் தலைகால் புரியாத நிலை. மனதில் சந்தோஷ ஊற்று தான்.

பார்த்திபன் காஞ்சனாவிடம் தங்களின் திருமண விசயம் பற்றி பேசுவான் என்று அவள் நினைக்கவும் கூட இல்லை. அவளிடம் பேசப்போகிறேன் என்று சொல்லவுமில்லை. அடுத்த மாதம் பார்த்திபன் ஊருக்கு வருவது என்பது கூட தன்யாவிற்கு உறுதியாய் தெரியாத ஒன்று.

சொல்லியிருக்கிறானே தவிர நிச்சயமாய் வருகிறான் என்பது தெரியாது. அப்படியிருக்க,   அவன் முதல் வேலையாய் காஞ்சனாவிடம் பேசியது, முதலில் ஒரு அதிர்வை கொடுத்தாலும் பின் சந்தோசமாய் இருந்தது. பார்த்திபன் இங்கிருந்து ஜப்பான் சென்றபொழுது எல்லாமே முடிந்து போனது என்பதாய் தான் இருந்தது அவளுக்கு..

இனி அவ்வளோதான், பார்த்திபன் தன்னை வெறுத்திடுவான் என்றே எண்ணினாள். முரளி நினைத்ததை சாதித்துவிட்டான் என்றே துவண்டுபோனாள். ஆனால் பார்த்திபனோ இவளோடு சண்டையிட்டு சண்டையிட்டே காதலில் ஒவ்வொரு படியாய் முன்னேறிக்கொண்டு அல்லவா இருக்கிறான்.

அதை உணரவே தன்யாவிற்கு இத்தனை நாட்கள் ஆகிப்போனதோ என்னவோ..

‘நீ போன்னு சொன்னா நான் அப்படியே போயிடுவேனா…’

‘நீ வேணாம் சொன்னா நான் அப்படியே விட்டுடுவேனா…’

இதெல்லாம் அவன் சொன்னது தான்.. கோபமாய் சொன்ன வார்த்தைகள். இப்போதோ அல்வா போல் இனித்தது.

இவை அனைத்தும் தன்யாவின் மனதினுள்ளே உருண்டுகொண்டு இருக்க, காஞ்சனா முன்னே அமைதியாய் அமர்ந்திருந்தாள். எப்போதடா பார்த்திபனோடு பேசுவோம் என்றிருந்தது அவளுக்கு. ஆனால் கஞ்சனாவோ விட்டபாடில்லை.

“இவ்வளோ கதை நடந்திருக்கு ஒருவார்த்தை என்கிட்டே சொன்னியா நீ??” என்று அதட்டினாலும் அதில் அன்பு தான் தெரிந்தது அவளுக்கு.

“இல்லத்தை அது…”

“எது…. அதான் எல்லாம் பார்த்தியே சொல்லிட்டானே..”

“அத்தை ப்ளீஸ்.. சொல்ல கூடாதுன்னு எல்லாம் இல்லை..”

“ம்ம் அப்புறம்… முன்னாடியே சொல்லிருந்தா ரெண்டு வீட்லயும் பேசி அவனுக்கும் உனக்கும் கல்யாணம் முடிச்சே ரெண்டு பேரையும் ஜப்பான் அனுப்பிருக்கலாம்..” என,

‘ம்ம் அது அந்த முரளி அண்ணா இருக்க வரைக்கும் நடக்காது…’ என்று நினைத்துக்கொண்டாள் தன்யா..

“தன்யா…. அங்க என்ன யோசனை… எப்போடா இவ பேசி முடிப்பான்னு இருக்கா??” என்று காஞ்சனா கேட்க,

“அச்சோ அதெல்லாம் இல்லத்தை…” என்றவள், கொஞ்சம் பாவமாய் முகத்தை வைத்துக்கொள்ள,

“ம்ம் ஆனா எனக்குதான் கொஞ்சம் பயமா இருக்கு, அண்ணனும் அண்ணியும் வந்து இதான் நீ பொறுப்பா இருந்த லட்சணமான்னு என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்லுவேன்??” என, தன்யாவிற்கோ, இவர் சொல்வதும் சரிதானே என்று தோன்றியது..

“சா.. சாரி அத்தை…” என்று அவள் குரலே நிஜமான வருத்தம் காட்ட,

“ஹ்ம்ம் சாரி சொல்ற நேரமில்லை இது.. நீ சந்தோசமா இருக்கவேண்டிய நேரம்.. விஷயத்தை என்கிட்டே சொல்லியாச்சுல நான் பேசிக்கிறேன்…” என்றவர்,

“வேற எதுவும் சொல்லணுமா ??” என்று கேட்க,

“ம்ம்ஹும்..” என்று தலையை ஆட்டியவள், கொஞ்சம் தயக்கமாய் அவர் முகம் பார்த்தாள்..

“என்ன தன்யா சொல்லு…” என்று காஞ்சனாவும் சரியாய் யூகித்துக் கேட்க,

“இல்லத்தை… நீங்க சொல்றது சரிதான்.. இருந்தாலும், லவ் பண்றது நாங்க, அதை நாங்க தானே வீட்லயும் சொல்லணும்… பொறுப்பை உங்கக்கிட்ட கொடுத்துட்டு நாங்க சும்மா இருக்க முடியுமா??” என,

“ஹா ஹா அதெப்படி ரெண்டு பெரும் ஒரேமாதிரி பேசுறீங்க.. அவனும் இதையே தான் சொல்றான்.. நானே அப்பாக்கிட்ட சொல்றேன் சித்தி.. ஒரு சப்போர்ட் மட்டும் நீங்க செய்ங்கன்னு.. பட் எனக்கு எதுவும் இதுல பெருசா பிரச்சனை வரும் தோணலை தன்யா..” என்று அவரும் சொல்ல,

‘ம்ம்ம் முரளிண்ணா இருக்கிற வரைக்கும் பிரச்சனை மட்டும் தான் வரும்..’ என்று எண்ணியவள், அமைதியாகவே இருந்தாள்..

“இங்க பார் தன்யா… பார்த்தி அடுத்த மாசம் ஊருக்கு வர்றப்போ எல்லார்க்கிட்டயும் சொல்லிக்கட்டும்.. ஆனா, நான் விஷயம் தெரிஞ்ச அப்புறமும் சும்மா இருந்தா அது என் வயசுக்கு அழகில்ல பாரு.. வேணும்னா அண்ணா அண்ணி வந்தப்புறம் அவங்கட்ட பேசிக்கலாம்.. பட் பார்த்தி வீட்ல லேசாவாது சொல்லி வைக்கணும்…” எனவும், தன்யாவிற்கு திக்கென்று இருந்தது.

ஆனாலும் காஞ்சனாவிடம் என்ன சொல்ல முடியும், முரளி விஷயம் சொன்னால் முதலில் நம்பக்கூட மாட்டார்.. தேவையில்லாது குடும்பத்தில் குழப்பம் செய்வதாய் அல்லவா பேச்சு வரும். அப்படி இருக்க, பார்த்திபன் இல்லாத இந்த நேரத்தில் காஞ்சனா அங்கே இதைப் பற்றி பேசினால்??

இதை முரளி இலகுவில் விட்டுவிடுவானா??

நேராய் வந்து தன்யா முன்னே தான் நிற்பான்…

அதன்பின் அவன் என்ன குளறுபடிகள் செய்வானோ..

மனது ஒருவித படபடப்பாய் உணர, பார்த்திபனோடு பேசியே ஆகவேண்டும் போலிருந்தது. ஆனால் காஞ்சனா பேசிக்கொண்டு இருக்கையில் எழுந்து போக முடியாது இல்லையா?? 

மேலும் நேரம் செல்ல, காஞ்சனா பேசியது பாதிக்கு மேலே புத்தியில் ஏறவில்லை. மனதெல்லாம் பார்த்திபனிடம் தான் இருக்க, காஞ்சனா இறுதியில் கேட்ட “என்ன தன்யா நான் சொல்றது சரிதானே..” என்றது எதற்கென்றே விளங்காது,

“ம்ம் ஆமா அத்தை..” என்றாள் வேகாமாய்.

அதன்பின்னே தான் காஞ்சனாவின் முகம் மலர்ச்சியுற்றது.

“ம்ம் இப்போவாது நான் சொன்னதெல்லாம் புரிஞ்சதே.. நல்ல பொண்ணு.. போ போ வேலையை பார்.. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்..” என்றுவிட்டு அவர் செல்ல,

அவளுக்கோ ‘என்ன பாக்கா போறாங்க??!!!!’ என்று கேள்வி வேறு..

‘அத்தை எதுவும் கேட்டு நம்ம எதுவும் சொதப்பிட்டோமா???’ என்று தன்யா யோசிக்க, அவர் இறுதியாய் கேட்டது நினைவில் வர, “போச்சு டா…” என்று நெற்றியில் அடித்து அப்படியே அமர்ந்துகொண்டாள்..

“நான் தான் சொதப்பிட்டேன்.. இப்போ அத்தை அடுத்து என்ன செய்யப் போறாங்க…” என்று காஞ்சனா போன திக்கைப் பார்க்க, இவளுக்கு இருக்கும் அதே உணர்வுகள் தான் பார்த்திபனுக்கும் இருக்கும், அவனே அழைத்துவிட்டான்..

அவனது அழைப்பு என்றதுமே போனை எடுத்துக்கொண்டு அறைக்கு ஓடியவள், வேகமாய் ஆன் செய்ய, “ஓய் தனியா தூள்…” என்று ஆரவாரமாய் முகம் காட்டினான் பார்த்திபன்..

ஒருசில வினாடிகள் முன்னிருந்த டென்சன் எல்லாம் எதுவுமே இல்லாது, தன்யாவிற்கு அவனைப் பார்த்ததுமே முகத்தினில் எப்போதும் ஒட்டிக்கொள்ளும் புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள, இதயம் ஒரு இனிய உணர்வை உணர,

“ம்ம்…” என்றுமட்டும் சொல்லி சிரித்தாள்.

“என்ன டி ஒரு மார்க்கமா சிரிக்கிற??” என்று பார்த்திபன் வேண்டுமென்றே சீண்ட,

“ஆமாமா அங்க இருக்கவன பார்த்து அப்படியே ஒரு மார்க்கமா சிரிச்சிட்டாலும்…” என்று வேண்டுமென்றே சிலுப்பியவள், “பெரிய பெரிய வேலை எல்லாம் செஞ்சி வச்சிருக்க…” என்றாள் குறைபடும் சாக்கில் பெருமையாக..

“ம்ம்ம் பின்ன… அங்க வந்துட்டு எல்லாம் பார்க்கணும்னா ஒன்னும் முடியாது.. அதான் இப்போவே ஆரம்பிச்சாச்சு.. ஆமா அத்தை என்ன கேட்டாங்க??” என்று பார்த்திபன் கேட்டதும், தன்யா நடந்தவைகளை விளக்க, அவளுக்குத் தெரியவில்லை, உணர்ச்சி மிகுதியில் அனைத்தையும் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்று.

முரளியின் மேல் தனக்கிருக்கும் பயம் முதற்கொண்டு உளறிக்கொண்டு இருப்பது தன்யாவிற்கு உணரவில்லை. ஆனால் பார்த்திபன் கண்டுகொண்டான்.

அனைத்தையும் ஒப்புவித்து முடித்தவள் “நீயே சொல்லு பார்த்தி, இப்போ போய் அத்தை ஏதாவது பேசி, முரளிண்ணா பாட்டுக்கு ஏதாவது பண்ணிட்டா… ஏற்கனவே நம்ம பட்டது எல்லாம் போதும்…” எனும்போதே,

“முரளி என்ன பண்ணான் தன்யா??!!!” என்றான் பார்த்திபன் ஒருவித ஆழ்ந்த குரலில்.

“அதான் பார்த்தி….” என்று அவளும் ஒருவேகத்தில் ஆரம்பித்தவள், அப்படியே காற்று போன பலூனாய் சப்பென்று முகம் வைத்து, தான் செய்த மடத்தனம் புரிந்து

“பார்த்தி….” என்று மெதுவாய் இழுக்க,

“ம்ம் சொல்லுங்க மேடம்… இவ்வளோ உளறியாச்சு… மிச்சத்தையும் உளறிடு…” என்றான் சாதாரணம் போலவே..

‘சரியான லூசு டி தன்யா நீ.. எதை செய்யக்கூடாதுன்னு நினைச்சிட்டு அதையே செஞ்சி வச்சிருக்க.. இடியட்.. இப்போ கேட்ச் பண்ணிட்டான்.. சொல்லாம இருக்கவும் முடியாது…’ என்று தனக்கு தானே முணுமுணுத்துக்கொண்டு ஒரு அட்டப் பார்வை பார்த்தாள் பார்த்திபனை.

அவனோ நீ சொல்லியே ஆகவேண்டும் என்று பார்க்க, “ஒன்னும் இல்லையே பார்த்தி…” என்றாள் இலகு போலவே..

“பொய் சொல்ற மூஞ்சிய பாரு…” என்று அவன் சொல்லு,

“பார்த்துட்டு தானே இருக்க.. ஆமா அத்தைக்கிட்ட சொல்ல போறேன்னு என்கிட்டே சொல்லவேயில்லை..” என்று பேச்சை தன்யா மாற்ற,

“ம்ம்ச் தன்யா…” என்றான் தலை சரித்து, ஒரு வித அழுத்தத்துடன்.

தன்யாவிற்கு புரிந்துபோனது, இனி பார்த்திபனிடம் எதையும் மறைக்க முடியாது என்று. தான் சொல்லாது போனால், அவன் முரளியிடமே கூட கேட்டாலும் கேட்பான். அப்படித்தான் சொல்லியது அவன் பார்வையும்.

“அது வந்து பார்த்தி….” என்று தன்யா இழுக்க,

“வந்து உன்ன பார்த்துக்கிறேன்…” என்றவன் “இப்போ முரளி விஷயம் சொல்லு..” என,

“இப்போ எதுக்கு அதெல்லாம்.. அதான் நீயும் நானும் இப்போ எல்லாம் ஓகே ஆகியாச்சே..” என்று அப்போதும் பேச்சை இழுத்தாள்..

“ஓகே ஆகியாச்சா?? ஓஹோ…” என்று எதுவோ சொல்ல வந்தவன்,

பின் நிதானித்து “தன்யா… நான் உன்கூட சண்டை போட கால் பண்ணலை.. நீயே என்கிட்டே எதுவும் ஷேர் பண்ணாம இருந்தா, நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா, நான் அதை ஹேண்டில் செய்யணும் இல்லையா.. அது ஏன் உனக்கு புரியலை..” என்று பொறுமையாகவே எடுத்து சொல்ல, அவன் சொல்வது எல்லாம் சரி என்பதாய் தான் இருந்தது அவளுக்கு.

ஆனாலும் இவன் முரளியிடம் எதுவும் கேட்டு பிரச்சனை செய்து, அனைத்தும் சுக்கு நூறாகிவிட்டால்??

மனது என்னவோ இதற்குமட்டும் துணிவு கொள்ளவே மாட்டேன் என்றது.

“தன்யா..!!!!” என்ற பார்த்திபனின் குரலில் திகைத்து விழித்தவள்,

“அப்.. அப்போ எனக்கு நீ ஒரு ப்ராமிஸ் செய்யணும்…” என்று கேட்க,

“இவ்வளோதான் என்மேல உனக்கு நம்பிக்கையா??” என்றான் அவனும்..

என்னவோ அவனுக்கு பெரிதாய் இருப்பதாய் தோன்றியது. எதையும் தெரிந்து கொள்ளாது அடுத்த மாதம் வந்து எதையும் செய்துவிட முடியாது. வருவதற்குள் ஏதேனும் ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டு வந்தால் தான் ஆகிற்று. ஆனால் இவளோ வாயே திறக்கமாட்டேன் என்கிறாளே என்று கடுப்பாகவும் கூட இருந்தது.

“தன்யா… இப்போ பேசறியா இல்லையா நீ?? நீ எதுவும் சொல்லலைன்னா நான் முரளி கிட்ட கேட்டுக்கிறேன்..” என்றுவிட,

“ஐயோ வேணாம் வேணாம்..” என்றவள், கொஞ்சம் தயக்கமாகவே தான் எல்லாவற்றையும் சொன்னாள்.

பார்த்திபனுக்கு மனதினில் ஏற்கனவே இப்படியொரு யூகம் இருந்ததுதான். முதலில் இல்லை.. இப்போது லேகா விஷயம் தெரிந்தபின்னே, முரளி இவனோடு பேசிய பின்னே, பார்த்திபனும் நிறைய நிறைய யோசித்து வைத்திருந்தான். அப்போது தான் சில விஷயங்கள் அவனுக்கு மனதில் சுருக்கென்று பட்டது.

அதில் இதுவும் ஒன்று..

அப்படியும் இருக்குமோ  என்ற எண்ணம், இப்போது அப்படியே தான் என்று ஊர்ஜிதமானது.

தன்யா முழுதையும் சொல்லி முடித்து “பார்த்தி ப்ளீஸ்.. இப்போ நீ எதுவும் முரளி அண்ணாட்ட கேட்க கூடாது..” என்று கெஞ்சலாய் பார்க்க,

அவன் பார்த்த பார்வையோ ‘இவ்வளோ தானா??’ என்று கேட்டது.

“பார்த்தி… ப்ளீஸ் டா…” என்று அவள் திரும்ப சொல்ல,

“இப்போ நான் என்ன பண்ணிடுவேன்னு நினைக்கிற..??” என்றான் வேறெதுவும் சொல்லாது..

“எனக்குத் தெரியலை.. நீ அங்க போயிட்ட, என்னால என்னை சுத்தி நடக்கிற எதையும் கெஸ் பண்ணக்கூட முடியலை…” என்றவள் உடையத் தொடங்கிவிட்டாள் என்பது பார்த்திபனுக்குப் புரிந்தது.

இத்தனை நாட்களாய் மனதில் அழுத்திக்கொண்டு இருந்தது இன்று வெளியே வரவும், தன்யாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவளுக்கு இதெல்லாம் யாரிடம் தான் சொல்லிட முடியும்..

கண்களில் நீர் நிறைய, பார்த்திபனைத் தான் பார்த்துகொண்டு இருந்தாள்.

‘அவன் சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி…’ என்று திட்டமாட்டானா என்று தோன்றியது..

உண்மையும் தானே, அந்த முரளி நூறு கதைகள் சொன்னால், இவளுக்கு எங்கே போனது புத்தி. கொஞ்சம் சமயோசிதமாய் சிந்தித்து இருந்தால்?? இதெல்லாம் இப்போது நடந்திருக்காது இல்லையா..

“ம்ம்ம் என்னை திட்டிடு பார்த்தி…” என்றாள் உதடு பிதுக்கி..

அவனுக்கோ மனதில் அதே எண்ணம் தான், அவன் சொன்னானாம் இவளும் சென்சாளாம் என்று, ஆனால் அவளின் கண்களில் நீரைப் பார்த்ததும் பார்த்திபனுக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. உடன் பிறந்தவனைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியுமே..

இவளுக்கு என்ன சொல்ல என்று யோசிக்கும் நேரத்தில் அவள் திட்டு என, அவனுக்கு பட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தும் விட்டான்.

‘ஏன் சிரிக்கிறான்…’ என்று தன்யா பார்க்க,

“லூசு…” என்றான் சிரிப்பினூடே..

“ம்ம்ச்.. ஒன்னு சிரி இல்லை திட்டு.. ரெண்டையும் பண்ணாத..”

“ஹா ஹா…. சத்தியமா திட்ட தோணலை மை டியர் தனியா தூள்..”

“பின்ன…”

“எனக்கு தோணுறதை எல்லாம் போன் ல சொல்லி என்ன செய்ய???” என்று சலிப்பாய் சொல்வது போல் சொன்னவன்,

“ஓகே எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு தன்யா..” என,

“இங்க பாரு பார்த்தி இப்பவும் சொல்றேன்.. நீ..” என்று அவள் வேகமாய் பேச,

“ஏய் போதும் டி.. சும்மா அதையே சொல்லிட்டு.. இப்போ நான் எதுவும் அவன்கிட்ட கேட்கலை போதுமா…” என்றான் இவனும் வேகமாய்..

“பின்ன எதுக்கு முக்கியமான வேலைன்னு சொன்ன??” என்று திரும்பவும் அவள் கேள்வியில் இருக்க,

தலையில் அடித்துக்கொண்டவன் “மனுஷன் ரெஸ்ட் ரூம் போகமாட்டானா டி…” என,

அவன் சொன்ன தினுசில் இவளுக்கு சிரிப்பு குபீரென்று தான் வந்தது.. சிரித்தபடியே “போய் தொலை…”  போனை வைத்தாள்.

மனது ஒருவித நிம்மதியும், சந்தோசமும் உணர, முகத்தினில் அந்த சிரிப்பு அப்படியே இருந்தது. இனி எல்லாமே நல்லதே நடக்கும் என்ற நினைப்பு தன்யாவிற்குள் ஆழமாய் பதிய, அடுத்த அடுத்த நிகழ்வுகள் என்னதாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை.. நாமே ஏன் அப்பா அம்மாவிடம் இதைப் பற்றி பேசக்கூடாது என்று.

இவளே சொல்லிவிட்டாள், நிச்சயம் அவர்கள் அடுத்து காஞ்சனாவிடம் இதனை கேட்பார்கள். எப்படியும் காஞ்சனாவும் இவர்களுக்கு சாதகமாய் தான் பேசுவார். அப்படியிருக்க, பெரியவர்கள் பார்த்து முடிவு செய்யும் போது, முரளியால் என்ன செய்திட முடியும்??

எதுவும் முடியாதே…

மேலும் மேலும் தன்யாவிற்குள் உற்சாகம் தான்.. காதலிப்பதை பெற்றவர்களிடம் சொல்ல உற்சாகமாய் கிளம்பியவள் இவளாய்த் தான் இருப்பாள்.

மனதில் சிறிதளவு பயமோ, தயக்கமோ எதுவுமே இல்லை. திட்டினாலும் சரி.. இல்லை எதுவென்றாலும் சரி, நான் என் மனதில் இருப்பதை சொல்லியே ஆகுவேன் என்ற முடிவிற்கு வந்து, அவளின் அம்மாவிற்கும் அழைத்துவிட்டாள்.

சுகந்தியோ மகள் என்ன இந்த நேர்த்தில் அழைத்திருக்கிறாள் என்று பார்த்து “என்னாச்சு தன்யா??!!” என்றார் கொஞ்சம் பதறியே..

“ம்மா… நத்திங்… பேசலாம்னு தான் கூப்பிட்டேன்…” என,

“இந்த டைம்ல கால் பண்ணிருக்க?? அங்க எதுவும் பிரச்சனை எல்லாம் இல்லையே..” என்றார் இன்னமும் பதற்றம் அடங்காது..

“ம்மா அதெல்லாம் இல்லைம்மா..” என்றவள்,

“அப்பா எங்கே…” என,

“அவர் என்னவோ பைல் பார்த்திட்டு இருக்கார்…” என்று சுகந்தி சொல்லியபடி “என்னங்க தன்யா கூப்பிடுறா..” என்று அவரையும் அழைக்க, தன்யாவின் இதயம் திடுக் திடுக் என்று அடிக்கத் தொடங்கியது..

உற்சாகமாய் அழைத்தவள், இப்போது இருவரிடமும் என்ன சொல்லி ஆரம்பிக்க என்று மனதை உருட்டிக்கொண்டு இருந்தாள்..                              

     

 

 

  

Advertisement