Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 14

முரளி செய்த மூளை சலவை, நன்கு வேலை செய்தது. ஹேமாவின் மூளையை வெளுத்துவிட செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பேசி பேசி கரைப்பது என்பது ஒருவகை என்றால், முரளி செய்தது பேசி பேசி வெளுப்பது.

இறுதியில் அவன் சொன்னது மட்டுமே சரி என்று நம்ப வைத்து, ஹேமாவை அதற்குமேல் சிந்திக்கவிடாது செய்தும் விட்டான்..

கணவன் பேச்சில் இருக்கும் நம்பிக்கை ஒருபக்கம் என்றால், தங்கையின் வாழ்வும் அவளின் பாதுகாப்பும் என்ற விஷயங்கள் தாண்டி ஹேமாவிற்கு வேறெதுவும் நினைக்கத் தோன்றவில்லை.

முதலில் இதெல்லாம் சரி வருமா?? வீட்டில் பெரியவர்கள் என்ன சொல்வார்கள், பார்த்திபன் என்ன சொல்வான், அதெல்லாம் தாண்டி லேகா, அவள் என்ன சொல்வாள், என்ற எண்ணங்கள் சிந்திச் சிதற, அனைத்தையும் கட்டிப்போட்டது முரளியின் வார்த்தைகள்..

‘ஜப்பான்ல செட்டில் ஆகப்போறேன் சொல்றா?? அப்போ நம்ம எல்லாம் வேணாமா??’

‘இப்போவும் அங்கேதான் இருக்கா.. ஆனா செட்டில் ஆகப்போறேன் அப்படின்னா என்ன அர்த்தம்??’

‘ப்ராபர்டி எல்லாம் சேல்ஸ் பண்ணிட்டு கேஷ் கொடுங்கன்னா என்ன அர்த்தம்??’

‘அப்போ.. முழுசா.. முழுசா நம்மளை வேணாம் சொல்றாளா??’

‘அட நம்மளை என்ன நம்மளை… உன்னை… நீ ஒருத்தி தானே அவளுக்கு சொந்தம்னு இருக்க?? அப்போ நீ வேணாமா ??’

‘என்ன ஹேமா இதெல்லாம்.. நினைக்கவே முடியலையே… அவளுக்கு என்ன வயசாச்சு.. நம்ம பார்த்தி வயசு இருக்குமா?? அட என்ன வயசானா என்ன?? சொந்தம்னு எல்லாம் இங்க இருக்கோம்.. அங்க செட்டில் ஆனா என்ன நினைக்கிறது??’

‘இதுல என்னவோ இருக்கு ஹேமா??’

‘நான் கேட்க முடியாது.. பட் நீ பேசலாம் தானே….?? பார்த்தி லேகா கல்யாணம் பத்தி எதுவும் பேசவேணாம்.. ஆனா லேகா ஏன் அங்க செட்டில் ஆகறான்னு மட்டும் கேளு..’

‘கல்யாணம் எல்லாம் அவங்க விருப்பம் தான்.. ஆனா பெரியவங்க நம்ம எதுக்கு இருக்கோம்… லேகா கடைசி வரைக்கும் பாதுகாப்பா, நம்ம எல்லாரோடவும் சொந்தமா இருக்கணும்னா அது பார்த்தியை கல்யாணம் பண்ணா மட்டும் தான் ஹேமா..’

‘பார்த்தியும் லேகாவும் இப்போ ஓரளவு நல்லா பழகியிருப்பாங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா தெரியும்.. முக்கியமா பார்த்தி பத்தி உனக்கு நல்லா தெரியும்..’

‘ப்ளீஸ் அப்படி திகைச்சுப் போய் பார்க்காத ஹேமா.. உன் முகத்தை இப்படி பார்க்க எனக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?? உனக்கு நான் இருக்கேன்.. நம்ம மொத்த குடும்பமும் இருக்கு… ஆனா லேகா… உன்னோட ரத்தம் இல்லையா??? உங்கப்பா லாஸ்ட் ஸ்டேஜ்ல இருக்கப்போ அவளோட பொறுப்பு நம்மகிட்ட தானே விட்டுட்டு போனார்.’

‘பட் அவ கேட்கிறப்போ நான் எப்படி உன்னோடது எதையும் கொடுக்கமாட்டேன் சொல்ல முடியும்..’

என்று முரளி வித விதமாய்,  பேசி, இறுதியில் லேகாவிற்கு திருமணம் என்பது பார்த்திபனோடு நடந்தால் மட்டுமே அவள் பாதுகாப்பாகவும், அனைவரோடு உறவாகவும் இருப்பாள் என்பது போன்ற ஒரு பிம்பத்தை நன்கு பதிய செய்துவிட்டான்.

அதன் விளைவு, ஹேமாவோ “ஆமாங்க நீங்க சொல்றது தான் சரி… ஆனா இந்த லேகா ஏங்க இப்படி சொன்னா??!!” என்று கேட்க,

“அது நீதான் கேட்கணும் ஹேமா.. நான் கேட்க முடியுமா?? எப்படியும் இப்போ வேலை முடிஞ்சு வந்திருப்பா தானே.. நீயே பேசு.. இல்லையா அவளே உனக்கு கூப்பிடுவா..” என்று முரளி சொல்லி முடிக்கவில்லை, லேகாவே அழைத்துவிட்டாள் ஹேமாவிற்கு.

பார்த்திபன் தான் லேகாவிடம் சொல்லியிருந்தான், ‘எங்க அண்ணன் எப்போ என்ன செய்வான்னு தெரியாது.. இந்நேரம் அண்ணிக்கிட்ட ட்விஸ்ட் பண்ணிருந்தா என்ன செய்வ நீ?? முதல்ல அண்ணிட்ட நீ பேசு  லேகா..’ என்று.

லேகாவிற்கும் அதுவே சரியென பட அக்காவிற்கு அழைத்தும் விட்டாள். ஆனால் ஹேமாவை விட முரளி காத்திருந்தது இதற்கு தானே.

“நிதானமா, நான் சொன்னதை எல்லாம் மனசுல வச்சு பேசு ஹேமா..” என்றவன் நல்லவன் போல் தள்ளிச் சென்று அமர்ந்துகொண்டான். ஆனால் கவனம் முழுவதம் ஹேமா என்ன பேசப் போகிறாள் என்பதிலேயே இருந்தது.

முரளிக்குத் தெரியவில்லை, ஹேமாவை வேண்டுமானால் இப்படி பேசு அப்படி பேசு என்று சொல்லியிருக்கலாம். ஆனா  லேகாவை அவனால் என்ன செய்ய முடியும்?? ஒன்றும் செய்ய முடியாது இல்லையா.. ஹேமாவோ நொடிக்கொரு முறை முரளியின் முகம் காண்பதும் பின் பேசுவதுமாய் இருந்தாள்.

லேகாவோ “அக்கா நீ டென்சன் ஆக இதுல எதுவுமே இல்லை.. இப்போ எப்படி இருக்கேனோ அதுபோல தான்..” என,

“அதுக்கேன் நீ எல்லாத்தையும் சேல் பண்ணிட்டு பணமா கேட்கிற?? இப்போ இருக்கிறது போலத்தான் அப்படின்னா, இங்க இருக்கிற எல்லாமே அப்படியே இருக்கட்டும் தானே..” என்று ஹேமாவும் கேட்க,

“அச்சோ அக்கா நீ தப்பா புரிஞ்சுக்கிட்டயா இல்ல மாமா அப்படி சொல்லிருக்காரா தெரியலை..” என்றாள் லேகாவும் கொஞ்சம் தன்மையாகவே.

“லேகா!!!!!”

“அக்கா ப்ளீஸ்.. நானும் தப்பா சொல்லலை… ஆனா இதுல இவளோ டென்சன் ஆகவும் ஒண்ணுமில்லை..”

“என்ன லேகா ஒண்ணுமில்லை.. அப்போ உன்னைப் பத்தி நாங்க கவலைப் படக்கூடாதா?? உனக்கு என்ன ஏஜ் ஆகுது இப்போ… உன் லைப் பத்தி நாங்க யோசிக்கக்  கூடாதா??”

“தாராளமா.. எனக்கும் உன்னை விட்டா யார் இருக்கா க்கா??” என்று லேகா கேட்க, அப்படியே ஹேமாவிற்கு உருகிப்போனது மனது. கண்கள் வேறு லேசாய் கசிய,

“பின்ன ஏன் டி அப்படி சொன்ன??” என்றாள்.

“ம்ம்ம்… அது… அது… ம்ம் இதை உன்கிட்ட நேர்ல சொல்லணும் நினைச்சேன் க்கா.. பட் நீ இவ்வளோ பீல் பண்றது பார்த்து எனக்கு கஷ்டமா இருக்கு..” என,

“என்ன?? என்னாச்சு?? எதுவும் பிரச்சனையா?? உனக்கு உடம்பு முடியாம போச்சே அதுல எதுவும் ஆகிடுச்சா?? என்ன லேகா? எதுவா இருந்தாலும் சொல்லேன்…” என்றாள் ஹேமா பதற்றமாய்..

முரளி ஹேமாவையே கவனித்துக்கொண்டு இருந்தவன், அவள் திடீரென பதற்றமாய் பேசவும், தன்னப்போல் கண்கள் சுறுங்க, எழுந்து போனான் அவளிடம்.  ஹேமாவோ முரளி அருகே வந்ததுமே அவனின் கைகளைப் பற்றிக்கொண்டு,

“லேகா பேசு..” என,

லேகாவிற்கு இத்தனை நேரம் பேச்சு வந்தது போல், இப்போது அத்தனை எளிதாய் வரவில்லை.. அக்கியோ பற்றி நேரில் சென்று தான் சொல்லவேண்டும் என்றிருந்தாள். போனில் சொன்னால் அது எத்தனை தூரம் சரியாய் இவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் தெரியவில்லை..

ஆனால் இப்போது சொல்லும் நிலை தான். வேறு வழியில்லை.. லேகாவிற்கு இப்போது சொல்வது சரியா தவறா இதெல்லாம் தெரியவில்லை.. ஆனால் சொல்லிவிட தோன்றியது. அக்கியோவிடம் கூட இதனைப் பற்றி அவள் பேசவில்லை. அவன் வீட்டினில் சம்மதம் என்று சொன்னதுமே, முதலில் லேகா வீட்டில் பேசிட சொன்னான் தான்.

ஆனால் இவள்தான் நேரம் பார்த்து நேராய் தான் சென்று பேசவேண்டும் என்றுவிட்டாள். ஒன்று முன்னமே பார்த்திபனிடம் சொல்லியிருக்கவேண்டும். சொல்லியிருந்தால் இந்த குழப்பங்கள் எல்லாம் வந்திருக்காது..

இப்போதும் கூட எப்படி சொல்வது என்ற ஒத்திகை சிறிதும் இன்று ஆரம்பித்துவிட்டாள். இதன் விளைவு எப்படி இருக்குமோ தெரியவில்லை.. இதுவே மனதில் ஓட,

ஹேமாவோ “லேகா… லேகா…” என்று அழைத்துக்கொண்டு இருந்தாள்.

“ஹா… சாரிக்கா….” என்றவள்,

“அது…. எனக்கு இங்க ஒருத்தரை பிடிச்சிருக்கு க்கா.. அவங்க பேமிலி கூட ஓகே சொல்லிட்டாங்க..” என,

“என்னது??!!!!!!” என்று ஹேமா அதிர்ந்தே போனாள்..

சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று.. எங்கே இன்னொரு வாழ்விற்கு லேகாவை சம்மதிக்க வைக்க மிகவும் சிரமப்பட வேண்டுமோ என்று எண்ணியிருந்த வேளையில், அவளே இப்படி சொல்லவும், அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அது அப்படியே ஹேமாவின் முகத்தினில் தெரிய, முரளியின் மனதோ மேலும் மேலும் குழம்பியது.

‘என்ன சொல்லிட்டு இருக்கா இந்த லேகா??!!!’ என்று பார்வை எல்லாம் ஹேமா மீது இருக்க,

ஹேமாவோ திரும்பவும் “என்ன லேகா சொல்ற நீ??!!!” என்றாள் அதிர்ச்சி நீங்காது..

“ம்ம்.. எஸ் க்கா.. ஆக்சுவலா இதை நான் நேர்ல தான் சொல்லிருக்கணும்.. பட் எல்லாமே கன்பியூஸ் ஆகிடுச்சு..” என,

“யா… யாரது??!!” என்றாள் ஹேமா.

“இங்கதான்.. அக்கியோ…” என்று மேலும் லேகா அக்கியோ பற்றிய விபரங்களை சொல்ல, ‘ஜப்பான்காரனா…’ என்று ஹேமாவின் மனது அலறியது.

நம்ப முடியவில்லை என்பது ஒருபுறம் இருக்க, ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதும் ஒருபுறம் இருந்தது. மேலும் மேலும் அதிர்ச்சி. இதெப்படி சாத்தியம் என்ற கேள்வி.. அனைத்தையும் விட, இவளால் எப்படி இப்படி செய்ய முடிந்தது என்ற யோசனையும்..

ஹேமாவிற்கு அதற்குமேல் எதுவும் பேச தோன்றவில்லை. முழுதாய் மழுங்கிய நிலை. முரளி வெளுத்த வேலை எல்லாம் இப்போது லேகாவால் துடைத்தெரியப்பட, அப்படியே அமர்ந்திருந்தாள்.

“அக்கா…..”என்று லேகா அழைத்துப் பார்க்க, அவளோ அப்படியே இருந்தாள்.

அசைவின்றி ஹேமா அமர்ந்திருப்பது கண்டு முரளியின் மனதில் நிச்சயமாய் ஒன்று தோன்றிவிட்டது. தான் நினைத்ததை விட விஷயம் என்னவோ பெரியதாய் இருக்கிறது என்று. ஆனால் அப்படி என்ன பெரிய விசயமாய் இருந்தாலும் அது இவனைத் தாண்டி நடக்காது என்ற இறுமாப்பும் இருந்தது..

‘ஹேமா…’ என்று முரளி அவளை உசுப்ப,

“ஆ..!!!” என்று திகைத்தவள், பின் அலைபேசியில் கவனம் செலுத்தி “ஹ.. ஹலோ..” என,

“அக்கா… என்னாச்சு??” என்றாள் லேகா.

“ஒண்ணுமில்ல…. நீ எப்போ இங்க வர்ற??” என்ற ஹேமாவின் குரலில் என்ன மாதிரியான உணர்வு இருக்கிறது என்று லேகாவிற்கு நன்கு புரிந்தது.

இதனை ஜீரணிக்க சிறிது நாள் ஆகும். ஆனால் சரியாய் போகும், கண்டிப்பாய் அக்கியோவை திருமணம் செய்ய ஹேமா சம்மதிப்பாள் என்ற நம்பிக்கை லேகாவிற்குள் இருந்தது. அவளுக்கு முரளியின் சம்மதம் எல்லாம் வேண்டியதில்லை ஆனால் ஹேமாவின் சம்மதம் நிச்சயமாய் வேண்டும்.

“ம்ம்.. அடுத்த மாசம் டிக்கட் போடணும்க்கா.. பார்த்தியும் வர்றேன் சொல்லிருக்கான்..” என,

“பா.. பார்த்தி…” என்று மீண்டும் திகைத்த ஹேமா, “அ.. அவனுக்குத் தெரியுமா??!!” என்றாள்.

“ம்ம்… தெரியும்.. நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கப்போ.. அதுகூட முழுசா தெரியாது.. அவனுக்கும் என்மேல வருத்தம் கோவம் எல்லாம் இருக்கு..”

“ம்ம்… எனக்கு ஒண்ணுமே புரியலை லேகா…” என்றவள் “இதை உன்கிட்ட எதிர்பார்க்கலை..” என்றுமட்டும் சொல்லி வைத்துவிட்டாள்.

லேகாவிற்கு சொல்லிவிட்டோம் என்ற நிம்மதி இருக்க, அடுத்து என்னாகுமோ என்ற சிறு அச்சமும் இருந்தது. என்னவோ அவளது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது இது எல்லாம் அத்தனை சீக்கிரம் முடியாது என்று. இத்தனை நாள் இருந்த தெளிவு திடீரென்று காணாது போக, மனது குழம்பித் தவிக்கத் தொடங்கியது.

காரணம் ஏதென்று தெரியவில்லை..

பார்த்தியோடு பேசலாமா என்று அவனைக் காணப் போகப்பார்த்தாள், ஆனால் என்னவோ மனது அதற்கும் இடம் தரவில்லை, பின் அக்கியோவை அழைத்து நடந்தவைகளை சொல்ல,

“டோன்ட் கன்பியூஸ் யுவர்செல்ப் லேகா…” என்றான் ஆறுதலாய்.

ஆனாலும் கூட அவனின் ஆறுதல் என்பது லேகாவிற்கு அப்போது போதுமானதாய் இல்லை. இந்தியாவிற்கு சென்று உடனே பேசி முடிக்கும் விசயமும் அல்ல என்று அவளால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஏனெனில் அக்கியோ அவன் வீட்டில் சம்மதம் வாங்கவே எத்தனை பாடுபட்டான் என்பது இவள் அறிவாள்.

அவனின் அம்மா சம்மதிக்கவேயில்லை.

இந்தியப் பெண், அதிலும் ஏற்கனவே திருமணம் ஆனவள்.. லேகா எத்தனை அழகானவள், அறிவானவள், குணமுள்ளவளாக இருந்தாலும் கூட, முன்னே சொன்ன காரணங்கள் தான் முதன்மையாய் நின்றன அக்கியோவின் அம்மா மறுப்பு சொல்ல,

‘ஸ்டேட்டஸ் என்னாவது??!!!’

லேகாவிற்குக் கூட ஒருநிலையில் இவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்ற என்று தோன்றிவிட, கடவுள் சித்தமாய் இவள் மருத்துவமனையில் இருக்கையில் தான் வந்து பார்த்து, சம்மதம் சொல்லிவிட்டு போனார்.

அக்கியோவும் அவனால் முடிந்த அளவு அவளுக்கு ஆறுதலாய் பேச, லேகாவிற்கு அப்போது அமைதியாய் இருப்பது தவிர வேறு வழியில்லை.

ஆனால் முரளியோ அனைத்தையும் கேட்டு அமைதியை இழந்து தவித்துக்கொண்டு இருந்தான். அவன் நினைத்து வைத்து, திட்டம் தீட்டியிருந்த அனைத்துமே ஒன்றுமில்லாது போகும் செய்தியல்லவா இது.

‘பார்த்திபன் லேகா திருமணம்..’

அவனின் வெகு நாளைய திட்டம்.. இதன் மூலம் சத்தமேயில்லாமல் அவனுக்கு நிறைய லாபம் இருக்கும். லேகாவின் சொத்துக்கள் எப்போதும் போல் இவனின் கையில் இருக்கும். ஹேமாவோ கேள்வியே கேட்கப் போவதில்லை. பார்த்திபன் அவனை எளிதாய் சமாளித்துவிடலாம்..

பின் என்ன அவனே ராஜா.. அவனே மந்திரி..

இத்தனை நாள் தன்யாவை எப்படி சமாளிப்பது என்பதே சிந்தனையாய் இருந்தவன், இப்போது லேகாவின் சிந்தனையின் தன்னை ஆழ்த்தினான்..

“அவ சொல்றான்னா.. நீ இப்படிதான் ஷாக் ஆகுறதா??” என்று ஹேமாவிடம் கேட்க,

“வேற என்னங்க செய்றது.. கேட்டதும் எனக்கு எதுவுமே யோசிக்க முடியலை..” என்றாள் பாவமாய்..

“அதுக்காக.. யாரோ என்னவோ?? அவன் பேருகூட வாய்ல நுழையல?? இதெல்லாம் செல்லுபடியாகுமா?? கல்யாணம் பண்ணிட்டு இவளை துரத்தி விட்டா அங்க போய் நம்ம யாரை கேட்க முடியும்?? உங்கப்பாக்கு நான் சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன், லேகா வாழ்க்கை என் பொறுப்புன்னு.. முடியவே முடியாது ஹேமா.. இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்..” என்றவன்,

எதையோ வெகு தீவிரமாய் யோசித்து “ அடுத்த மாசம் லேகா பார்த்தி வர்றாங்க தானே.. வரட்டும்.. அவங்க கல்யாணத்தை நான் முடிக்கிறேன்..” என்றான் முடிவாய்.

                           

        

   

      

      

 

        

       

Advertisement