Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 13

திருமணத்தை ஒருநாள் கூத்து என்பர். ஆனால் காதலோ ஒவ்வொரு நாளும் ஒரு கூத்து செய்யும். காதலின் பிடியில் காதலிப்பவர்கள் கூத்தாடிகளே. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு பாவனைகள் காட்ட வைக்கும். மகிழ்ச்சி, அழுகை, கோபம் வருத்தம் ஏக்கம் தாபம் மோகம் என்று கலந்து கட்டி அடிக்கவைக்கும்..

அதில் பார்த்திபனும் தன்யாவும் மட்டும் விதிவிலக்கு அல்லவே.

இத்தனை நாள் இருவருக்கும் இடையில் இருந்த புரிதலின்மையும், பிணக்கும் இப்போது எங்கு போனது என்பது கூட தெரியவில்லை. ஒரே ஒரு அழைப்பு தான்.. அதனை சரி செய்துவிட்டதா என்று கேட்டால் இருவருக்கும் தெரியாது.

ஆனால் ‘கொஞ்ச நாள் தள்ளி இருப்போம்…’ என்று சொல்லிய தன்யாவோ பார்த்திபனின் இவ்வழைபில் சந்தோசமாகவே இருந்தாள்.

ஒருவேளை அவனாகவே தன்னிடம் வரவேண்டும் என்று எதிர்பார்த்தாளோ என்னவோ??

காதல், ஒருவரின் பின்னே சுற்ற வைக்கும்.. ஒருவரை பின்னே சுற்ற வைக்க நினைக்கும் தானே..

பார்த்திபனும் தேவையில்லாதது எல்லாம் எதுவும் பேசவில்லை..

“ஜஸ்ட் அமைதியா இந்த பிளேஸ் எல்லாம் பாரு தன்யா…” என,

அவளோ “உன்னைப் பாக்கணும்… உன் முகத்தை காட்டு…” என, கொஞ்சமே கொஞ்சம் அவனுள் ஒரு பிகு..

தன்யாவிற்கு போக்குக் காட்டினான் என்றுதான் சொல்ல வேண்டும். ‘நானா கூப்பிட்ட அப்புறம் முகத்தை காட்டுன்னு சொல்லுவாளாமா??’ என்று..

இது கூட இல்லையெனில் பின் என்ன சுவாரஸ்யம்..

ஆனாலும் பார்த்திபன் முகம் காட்டியபோது தன்யாவிற்குள் ஒரு இனிய அதிர்வு தான். பார்த்து பழகியவர்கள் தான் என்றாலும் கூட, இப்படி பார்க்க நேர்கையில் அது ஒருவித உணர்வு கொடுப்பது நிஜமே.. பார்த்திபனின் பார்வையும் சரி, தன்யாவின் பார்வையும் சரி ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள, இதழ்கள் இரண்டும் தற்காலிக மௌன விரதம் பூண்டது.

நிமிடங்கள் நகர, தன்யாவின் விரல்களோ அவன் முகம் தொடும் ஆசையில்,  மெதுவாய் தொடுதிரை தொட்டு ‘பார்த்தி…’ என்று முணுமுணுக்க,

“அடிப்பாவி என்னிக்காவது நேர்ல இப்படி பீல் பண்ணி என் பேர் சொல்லிருக்கியா??” என்றான் பார்த்திபன் புன்னகைத்து.

அவன் கேட்ட விதத்தில் தன்யாவிற்கும் புன்னகை விரிய “ஆமாமா பீல் பண்ணிட்டாலும், சரி தள்ளு, நான் சுத்தி பார்க்கணும்…” என,

“தோடா…. ஓய்… நான் என்ன உனக்கு கைட்டா…??!!!” என்றான் இவனும்…

“அதுக்கு தானே கால் பண்ண…” என்று இவள் நக்கலாய் கேட்க,

“போடி டி  போடி…” என்று சலிப்பாய் சொல்வது போல் அவன் கொஞ்சிக்கொள்ள, அவளுக்கோ இன்னமும் புன்னகை மலர்ந்து “போடா டேய் போடா…” என்று சொல்ல,

“உங்க ஸ்பேஸ்ல எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்க தன்யா மேடம்..” என்றான் இவனும்..

“ஹா ஹா நீ ரொம்ப பிடிவாதம் பிடிச்சவன் பார்த்தி…” என,

“பிடிவாதத்தை பிடிச்சு வைச்சு நான் என்ன செய்ய?? உன்னை பிடிச்சவன் நான் அவ்வளோதான்.. அது மட்டும் போதும் தன்யா…” என்றான் நிஜமாய் உணர்ந்து.

தன்யா எதிர்பார்த்தது இதைத்தானே.. பார்த்திபனுக்கு அவள் முக்கியமானவளாய் இருந்திட வேண்டும். அவளே பேசாதே என்றாலும் அவன் பேசிட வேண்டும். அவளை பேச வைக்கவேண்டும்.. அவளிடம் பிடிவாதம் செய்ய வேண்டும்.. இந்த அத்தனை வேண்டும்களும் இப்போது நடந்தேற, பேச்சு பேச்சு பேச்சுமாய் மட்டுமே நேரம் கழிய,

“ஹேய் பார்த்தி….!!!!” என்ற லேகாவின் அழைப்பு இருவரையும் சட்டென்று பேச்சை நிறுத்த வைத்தது..

லேகாவின் பார்வையில் பார்த்திபன் அவனின் அலைபேசியில் என்னவோ செய்து கொண்டு இருக்கிறான்.. ஒன்று புகைப்படமோ இல்லை வீடியோவோ, தன்யாவோடு பேசிக்கொண்டு இருப்பான் என்று அவள் நினைக்கவேயில்லை.

பார்த்திபன் தன்யா இருவரும் பேச்சை நிறுத்திட, பார்த்திபன் திரும்பிப் பார்க்க, “இங்க என்ன பண்ற பார்த்தி.. தனியா வந்து போட்டோஸ் எடுத்துட்டு இருக்கியா??” என்றவள், எதார்ச்சையாய் அவனின் அலைபேசி பார்க்க, அதிலோ தன்யாவின் முகம் தெரிய,

“ஓ…!!!! சாரி…” என்றாள் பட்டென்று விலகி..

தன்யாவிற்கோ ஒரு பக்கம் சிறிதாய் எரிச்சல் இருந்தாலும், முன்னிருந்தது போல் எவ்வித கசப்பான உணர்வும் இப்போது இல்லை..

அவளே “ஹாய் லேகா…” என்றுவிட, பார்த்திபனுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.

எங்கே இவள் மீண்டும் கோவித்துக் கொள்வாளோ என்றுதான் நினைத்தான்.. ஆனால் தன்யாவே பேச்சினை தொடங்கிட, “லேகா திஸ் இஸ் தன்யா…” என்று முறைப்படி அறிமுகப் படுத்த,

“ஹாய்…” என்றாள் அவளும் மலர்ந்த முகத்துடன்.

“எப்படி இருக்கீங்க லேகா?? ஹெல்த் இப்போ எப்படி இருக்கு??” என்று தன்யா கேட்க,

“அ… ஐம் பைன்..” என்ற லேகாவிற்கு, இவளுக்கு எல்லாம் தெரியுமோ என்ற கேள்வி..

‘பார்த்தி எதுவும் சொல்லிருப்பனோ??’ என்ற தயக்கத்தோடு லேகா பார்த்திபனை ஒரு திணறல் பார்வை பார்க்க, அவனோ சட்டென்று புரிந்து “புட் பாய்சன் தானே தன்யா… ரிக்கவர் ஆகியாச்சு…” என்றான் பொதுவாய் சொல்வது போல்..

ஆனால் நொடி நேர இந்த முக மாறுதல்கள் எல்லாம் தன்யாவின் கண்களுக்கு தப்பாமல் இருக்குமா என்ன??

லேகாவின் திணறல் பார்வையும், பார்த்திபனின் சமாளிப்பும்.. சற்றே தன்யாவிற்கு வித்தியாசமாய் பட, அந்த நேரத்தில் தன்யா வேறெதுவும் கேட்கவில்லை. லேகா முன்னே என்ன கேட்டிட முடியும்??

அதன் பின் பொதுவாய் ஒருசில பேச்சுக்கள், பின் லேகாவே “ஓகே பார்த்தி யூ கேரி ஆன்.. இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல எல்லாம் கிளம்பிடுவாங்க….” என்று தகவலும் சொல்லிவிட்டு நகர்ந்திட,

பார்த்திபனுக்கு அப்போது தான் முரளி பேசியது நினைவு வந்து, “அங்க எதுவும் நடக்குதா தன்யா ??” என்றான் தெரிந்துகொள்ளும் எண்ணத்தில்.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது, “அங்க என்ன நடந்தது பார்த்தி??” என்றாள் தன்யா பார்வையை கூர்மையாக்கி..

‘ஆகா..!!!!’ என்று பார்த்திபனுக்குள் எச்சரிக்கை மணி அடிக்க “என்னாச்சு??!!!” என்றான் தன்யாவிடம் ஒன்றும் புரியாதவன் போல.

“அதான் பார்த்தி நானும் கேட்கிறேன்..?? என்னாச்சு??? என்னவோ நடந்திருக்கு.. பட் நீ என்கிட்டே மறைக்கிற…” என,

“ஹேய் அதெல்லாம் இல்லை…” எனும்போதே, “ஜஸ்ட் ஸ்டாப் இட் பார்த்தி.. எனக்கு எல்லாமே புரியும்னு சொல்லலை.. பட்.. சிலது இ கேன் பைண்ட் அவுட்..” என்றாள் முகத்தில் அடித்தார் போல.

அவளுக்கு அப்படி பேசும் எண்ணமில்லை, ஆனால் பார்த்திபன் தன்னிடம் எதையாவது மறைத்து, முரளிக்கு அதுவே சாதகமாய் மாறிவிட்டால்?? அதனை வைத்தே முரளி என்னவும் செய்வானே..

ஆனால் பார்த்திபனோ “தன்யா உன்கிட்ட மறைக்க எனக்கு எதுவுமில்லை.. பட் இது என்னோட விசயமில்லை.. இன்னொருத்தரோட பெர்சனல்.. எனக்கே முழுசா தெரியாது.. லேகா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனப்புறம் தான் நான் அங்க போனேன்..” என்றவன்,

“முரளி அங்க எதுவும் செய்றானா தன்யா??” என,

இப்போது தன்யாவிற்கு தொக்கி வாரிப் போட்டது.

முரளி தன்னிடம் நடந்துகொண்ட முறை எல்லாம் பார்த்திபனுக்குத் தெரிந்துவிட்டதுவோ என்று. அதுமட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் பார்த்திபன் கிளம்பி வந்துகூட முரளியோடு மல்லுக்கட்டிடுவான்.

முரளிக்கு தெரியாமல் தான் எதுவும் செய்யவேண்டும்.. முரளியால் இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் தான் பார்த்திபனிடம் கூட உண்மையை சொல்லவேண்டும் என்ற நினைப்பில் தன்யா இருக்க, இப்போது பார்த்திபனின் கேள்வி அவளை திடுக்கிட வைத்தது..

“என்.. என்ன?? என்ன செய்றாங்க முரளிண்ணா??” என்றாள் பதற்றமாய்..

“ஹேய் கூல் கூல்… எனக்கு கால் பண்ணி ரொம்ப பாசமா பேசினான்.. அதான் அங்க எதுவும் வில்லங்கம் பண்றானோன்னு…” என,

“தெரியலையே…” என்றாள் தன்யாவும் தன்மையாகவே..

“ம்ம்ம் சித்திட்ட மெதுவா பேச்சு கொடு..” என்றவன், “உன் அப்பா அம்மா எப்போ வர்றாங்க??” என்று கேட்க,

“அ.. அடுத்த மாசம்.. ஏன் கேட்கிற??” என்றாள் யோசனையாய்..

“வர்றபோ சொல்லு.. அவங்கட்ட பேசணும்.. அதுக்கு முன்ன ஒருநாள் சித்திட்ட பேசணும்..” என்று அவன் சொல்லும்போதே

“என்ன பேச போற பார்த்தி??” என்றாள் வேகமாய்..

“ஹ்ம்ம் நான் குடும்பஸ்தன் ஆகுறது பத்தி…” என்றவன் “ஓகே பை… எப்போவாது தான் கால் பண்ணுவேன்.. உனக்கு தொல்லை கொடுக்கமாட்டேன்.. பட் உனக்கு தோணினா எப்போவேனா நீ கால் பண்ணலாம்..” என்று சொல்ல,

“நீ இருக்க பாத்தியா…” என்று இழுத்தவள் “பேசலாம்.. அப்பப்போ.. இல்லாட்டி சண்டை தான் வருது.. எனக்கு அது பிடிக்கல…” என்று சொல்லி இவளும் வைத்துவிட்டாள்..

பார்த்திபனுக்கு மனது இப்போதுதான் நிம்மதியாய் இருந்தது. தன்யாவிற்கும் கூட, இனி முரளி என்ன செய்தாலும் சரி, அது தங்களை பாதிக்காது என்ற உறுதி இருவருக்கும் வந்திட, இருவரின் முகத்திலும் ஒரு புன்னகை.

இருந்தாலும் தன்யாவின் மனதினில் ‘அப்படி என்ன நடந்திருக்கும் அங்க??’ என்ற கேள்வியும்,

பார்த்திபனின் மனதினில் ‘இந்த முரளி ஏன் அப்படி பேசினான்??’ என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை..

இரண்டிற்கும் காரணமான லேகாவோ, பார்த்திபனிடம் சில விஷயங்கள் பேசிட முடிவெடுத்திருந்தாள்.

பார்த்திபன், மற்றவர்களோடு இணைந்துகொள்ள, லேகா வந்தவளோ “தேங்க்ஸ் பார்த்தி..” என்றாள் வேறெதுவும் சொல்லாது.

“எதுக்கு லேகா??” என்று இவன் கேட்க,

“நீ.. நீ தன்யாக்கிட்ட கூட எதுவும் சொல்லலையா??” என்றாள் ஆச்சர்யமாய்.

“எனக்கே எதுவும் சரியா தெரியாதப்போ நான் என்ன சொல்ல முடியும்.. அப்படியே தெரிஞ்சாலும் கூட இது உன்னோட பெர்சனல் லேகா.. நான் பேச முடியாது.. பேசவும் கூடாது..” என்றவன்,

“ஓகே.. வீட்ல வந்து பேசிக்கலாம்.. நான் என் டீம் மேட்ஸ் கூட வர்றேன்..” என,

“இ.. இல்ல பார்த்தி.. நம்ம சேர்ந்தே போலாம்.. கார்ல வா.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றாள் லேகாவும்.                       

“என்ன சொல்ல போற லேகா?? எனக்கு எதுவும் தெரிஞ்சிக்கணும்னு எல்லாம் இல்லை” என,

“நீ என்னோட வா பார்த்தி…. எனக்கு உன்னோட ஹெல்ப் கண்டிப்பா தேவை…” என்று  அழைக்க, அதற்குமேல் அவனால் மறுக்க முடியவில்லை.

லேகாவோடு காரில் எரிய பின்னும் கூட பார்த்திபனுக்கு எதுவும் கேட்கும் எண்ணமில்லை. ஆனால் முரளி தன்னோடு பேசியதற்கும், லேகா இப்போது பேசப்போவதற்கும் ஒன்றோடு ஒன்று தொடர்புண்டு என்று மட்டும் அவனின் மனம் சொல்லியது.

ஒரு சில நிமிடங்கள் கழித்தே லேகா ஆரம்பித்தாள் “முரளி மாமா எதுவும் உன்கிட்ட பேசினாங்களா??” என்று..

‘இவளுக்கு எப்படி தெரியும்??!!’ என்று தோன்றினாலும் “ஏன் லேகா??” என்றான்.

“சொல்லு பார்த்தி பேசினாங்களா??”

“ம்ம்… பேசினான்.. பட் அவன் பேசினதுல எனக்கு பாதி புரியலை.. திடீர்னு கால் பண்ணி பாசமா பேசினான்.. அதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு..” என,

லேகாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

“என்ன லேகா??!!”

“இல்ல.. கூடப்பிறந்த அண்ணன்.. நீ தம்பி.. ஆனா இப்படி இருக்கீங்க..”

“வேற என்ன செய்ய சொல்ற நீ..” என்று எதுவோ சொல்ல வந்தவன், “நீ என்னவோ பேசணும் சொன்னியே..” என்றான்.

“ஹ்ம்ம்.. நான் இங்கயே செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன் பார்த்தி..” என,

“ஓ..!! இப்பவும் அப்படிதானே..” என்றான் பார்த்திபன்..

“ம்ம்ஹும்… இது வேற… நானும் அக்கியோவும் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம்.. அக்கியோ வீட்ல ஓகே சொல்லிட்டாங்க…” என, பார்த்திபனுக்கு இதெல்லாம் ஆச்சர்யமாய் இருந்தது.

“நிஜமாவா??!!” என்று நம்ப மாட்டாமல் கேட்டேவிட்டான்..

“ம்ம்.. அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல அதனால தான் அக்கியோ அம்மா பார்க்க வந்தாங்க பார்த்தி..” என்றவள்,

“அ.. அக்கியோ.. தப்பான ஆள் எல்லாம் இல்லை பார்த்தி..” என்றாள் வேகமாய்.

“நான் எதுவுமே சொல்லலையே…” என்றான் அவனும் அதுபோலவே..

“பட் நீ தப்பா தானே நினைச்ச??”

“ட்ரக்ஸ் கம்பல் பண்ணி கொடுக்கிறது நல்ல விசயமா லேகா??” என்றவனுக்கு இப்போதும் அந்த பழைய கோபம் எட்டிப்பார்க்க,

“ம்ம் அதோட எப்பெக்ட் அக்கியோக்கே தெரியாது பார்த்தி.. ஜஸ்ட் வைன் போல தான்னு சொன்னாங்க…” என்று லேகா சமாளிக்க,

“என்ன கன்றாவியா வேணா இருக்கட்டும்.. உனக்கு ஏதாவது ஆகிருந்தா?? அப்போ என்ன பண்ணிருப்பான் அந்த நல்லவன்..??” என்றான் கோபமாய்..

“ம்ம்ம்..” என்று லேகா மௌனமாய் இருக்க,

“ம்ம்ச்.. இதுக்குதான் நான் எதுவும் பேசலை இத்தனை நாள்..” என்று பார்த்திபன் சொல்ல,

“நான் முரளி மாமாட்ட பேசிட்டேன் பார்த்தி.. இங்கதான் செட்டில் ஆகப்போறேன் சொல்லிட்டேன்.. அங்க இருக்க ப்ராபெர்டி எல்லாம் கேஷ் பண்ணி கொடுக்க சொல்லிருக்கேன்..” என்றாள் ஒருவித அமைதியுடனே.

ஆனால் இதனை கேட்ட பார்த்திபனின் அமைதி மொத்தமாய் தொலைந்துவிட்டது.

“போச்சு டா…” என்று தலையில் தட்டிக்கொண்டவன்,

“ஏன் லேகா உனக்கு கொஞ்சம் கூட யோசிக்கவே தெரியாதா??” என்றான் எரிச்சலை கட்டுப்படுத்த முடியாது..

“ஏன்?? ஏன் பார்த்தி…”

“நல்லா கேட்ட ஏன்னு… கண்டிப்பா முரளி இதை செய்ய மாட்டான்..”

“ஏன்???”

“ஏன்னு கேட்டா?? நான் ஒண்ணு சொல்றேன்.. வீட்டுக்கு போனதும் நீ ஹேமா அண்ணிக்கு கால் பண்ணி பேசு.. உனக்கே தெரியும் வித்தியாசம்..” என்றவன்,

தன்யாவிற்கு ஒரு மேசெஜ் வேறு தட்டினான் “காஞ்சனா சித்தியிடம் கேள்..” என்று..

தன்யாவோ அதனைப் பார்த்தவள் “என்னத்தை கேளு கேளுன்னு சொல்றான்..” என்று யோசிப்பது போல் நெற்றி சுருக்கியவள், பின் காஞ்சனாவிடம் பேச, அவரின் பதில்கள் எதிலுமே முரளி என்ற பெயர் கூட இல்லை.

ஆனால் பார்த்திபனுக்கு உறுதியாய் தெரிந்தது நிச்சயம் இந்த முரளி என்னவோ பெரியதாய் செய்யப் போகிறான் என்று..

“நீ இந்தியா வர்றேன் சொன்னியா??” என்று லேகாவிடம் கேட்க,

“ம்ம்.. இந்த அரேஞ்மென்ஸ் எல்லாம் செய்யணும் இல்லையா.. அக்காக்கிட்ட பேசணும் தானே.. சோ நெக்ஸ்ட் மன்த் இல்லை அதுக்கு அடுத்த மன்த் போகலாம்னு ஒரு எண்ணம்..” என்றாள்..

“ஓ..!!!!” என்று யோசித்தவன், “நீ எப்போ போனாலும் சரி.. கூட நானும் வருவேன்.. நீதான் லீவ் எல்லாம் ரெடி பண்ணிக் கொடுக்கணும்..” என்றான் தீர்மானமாய்.   

    

      

 

      

              

     

 

Advertisement