Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 12

முரளி எப்படி தன் செயல்களால் தன்யா மற்றும் பார்த்திபனின் உறக்கத்தை கெடுத்தானோ, இப்போது லேகாவின் ஒரே ஒரு அழைப்பு அவனின் உறக்கம் மட்டுமில்லை நாள் முழுதான அவனின் இயக்கம் முழுதையும் தன் வசப்படுத்திக்கொண்டது.

லேகா சொன்னதற்கு மறுப்பாகவும் அவனால் எதுவும் அப்போது சொல்ல முடியவில்லை. யோசிக்க நிறைய இருந்தது. சட்டென்று மறுக்கும் விசயமும் இது கிடையாது அல்லவா.. ஆக யோசித்து மறுக்கவேண்டும்.. அதுவும் அனைவரும் ஏற்கும் விதத்தில். அதற்கு முரளி இன்னும் காய்கள் நகர்த்திட வேண்டும்.

அதற்கு அவகாசம் கண்டிப்பாய் வேண்டும்..

ஆனால் அதற்குள் வேறேதேனும் புயல் வேறெங்கிலும் இருந்து கிளம்பினால்??

என்னவோ முரளிக்கு திடீரென்று ஆயிரம் குழப்பங்கள் வந்து அமர்ந்துகொண்டது. எதோ ஒன்று தனக்கு தெரியாது நடப்பதாய் அவனின் உள்ளுணர்வு சொல்ல,

‘ஒருவேளை இந்த பார்த்தி, தன்யா லேகா மூணு பெரும் ஒண்ணு சேர்ந்து எதுவும் ப்ளான் பண்றாங்களோ…’ என்று யோசித்தான்.

அவனுக்கு கொஞ்சம் கூட லேகாவிற்கு வேறொருவன், அதிலும் ஜப்பான் காரன் மீது விருப்பம் வரும் என்று நினைக்கத் தோன்றவில்லை. ஆக அவனின் எண்ணமெல்லாம் இவர்கள் மூவரும் சேர்ந்து எதோ செய்கின்றனர் என்று தோன்ற,

சில நொடிகள் மேலும் யோசித்தவன், பின் பார்த்திபனுக்கு அழைத்தான்.

பார்த்திபன் அங்கே சென்றபின் முரளியாக அழைப்பது இது தான் முதல்முறை. பார்த்திபனுக்கோ அழைப்பு முரளியிடம் இருந்து என்றதும், நெற்றி சுருங்க, எடுப்போமா என்று யோசித்தான்.

முரளியோ ‘டேய் போன் எடுக்காம உனக்கு என்ன வேலை…’ என்று கடிந்தபடி மீண்டும் பார்த்திபனுக்கு அழைக்க, இம்முறை பார்த்திபன் எடுத்தான்..

ஆனால் அண்ணன் தம்பிக்கள் என்ற ஒட்டல் இல்லை. எதோ யாரோ என்னவோ… ராங் நம்பர் அழைப்புகளிடம் கூட பேசுகையில் ஒருவித தணிவு இருக்குமோ என்னவோ பார்த்திபனோ “ஹலோ…” என்றதிலேயே அப்படியொரு கடுப்பு தான் தெரிந்தது.

ஆனால் முரளியோ “பார்த்தி…” என்றான் அன்பொழுக..

இப்படியொரு அழைப்பு….. இத்தனை ஆண்டுகளில் கிடையவே கிடையாது. முரளியின் இவ்வழைப்பில் பார்த்திபனுக்கு மனதினுள் பாச ஊற்றா ஊறிடும்.. அதுவும் நடவாத ஒன்று தானே.. கண்களை இடுக்கியவனின் புத்தியோ ‘பார்த்திபா பார்த்து பேசு…’ என்று எச்சரிக்கை செய்ய,

“சொல்லு.. என்ன திடீர்னு???” என்றான் பட்டென்று..

முரளிக்கு மட்டும் என்ன, நெஞ்சம் முழுதும் வஞ்சம் மட்டுமே நிரம்பி வழிய, வார்த்தைகளோ தேனாய் இனித்தது.

“என்ன பார்த்தி.. இருந்திருந்து கால் பண்ணிருக்கேன்.. ஒருவார்த்தை எப்படி இருக்கன்னு கூட கேட்க மாட்டியா..” என,

“அதான் டபுட்டா இருக்கு…??” என்றான் பார்த்திபனும்.

பார்த்திபன் இனி முரளிக்கு தயை தாட்சன்யை எல்லாம் பார்ப்பதாய் இல்லை. அவன் ஒரு முடிவிற்கு வந்துவிட்டான். தன் சம்பாத்தியத்தில் ஒரு வீடு முதலில் சொந்தமாய் அங்கே சென்னையில் வாங்கிடவேண்டும். பின் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்துகொள்ள வேண்டும். தன் வீட்டிலும் தன்யா வீட்டிலும் பேசி திருமணம் முடித்துக்கொள்ள வேண்டும்..

இதெல்லாம் அடுத்து இந்தியா சென்றதும் செயல்படுத்த வேண்டும் என்று முடிவே செய்துவிட்டான்.

தன்யா என்ன சொன்னாலும் சரி.. எதுவானாலும் தன்னை கல்யாணம் செய்துகொண்டு அவள் விருப்பபடி இருக்கட்டும் என்ற முடிவு அவனது. போதும் சும்மா சும்மா இருவரும் சண்டையிட்டு.. போராடி.. அவனுக்கே அது அழுத்துப் போனது. ஆக அவனாகவே ஒரு முடிவிற்கு வந்துவிட, முரளியின் இந்த அழைப்பு அவனுக்கு உவப்பாய் இல்லை.

முரளியோ காரியம் ஆகவேண்டும்  என்று “ஏன் டா இப்படி பேசுற?? அப்படி என்ன உனக்கு கெடுதல் பண்ணிட்டேன் நான்.. ” என்றான் அப்படியொரு பாவனையில்.

“நீ நல்லது பண்ணியா?? கெடுதல் பண்ணியான்னு பட்டிமன்றம் வைக்க எல்லாம் என்னால முடியாதுண்ணா.. உனக்கும் எனக்கும் எப்பவுமே ஒத்து வராது.. அவ்வளோதான்…” என்று பேச்சை கத்தரிக்க முயல,

“டேய் பார்த்தி நான் சொல்றதை கேளேன் டா..” என்றான் இவனும் விடமாட்டேன் என்பதுபோல்..

“ம்ம்ச் உனக்கு என்ன வேணும் இப்போ??!!!”

“ஹ்ம்ம் இதை முன்னாடியே கேட்டிருந்தா என்னடா??” என்றவன் “லேகா எதுவும் இந்தியா வர்ற ப்ளான்ல இருக்காளா??” என்றான்.

‘இவன் எதுக்கு லேகா பத்தி என்கிட்டே கேட்கிறான்.. ஒருவேளை லேகா எதுவும் சொல்லிருப்பாளோ..’ என்று பார்த்திபன் அக்கியோ லேகா விசயம் யோசிக்க,

‘எது எப்படியா எதுவா இருந்தாலும் அவங்களே பேசிக்கட்டும்…’ என்றெண்ணி “அதை நீ லேகா கிட்ட தான் கேட்கணும்..” என்றான் தம்பிக்காரனும்.

‘ஓ..!!!!! இவன்கிட்ட எல்லாம் நான் நயந்து பேசவேண்டி இருக்கே….’ என்று முரளி தன் உணர்வுகளை அடக்க பெரும்பாடு பட,

“ஹலோ… இப்போ என்ன விசயம்னு சொல்றியா??? லஞ்ச் டைம் முடிய போகுது… நான் போய் சீட் ல இருக்கணும்…” என்று பார்த்திபன் பொரிய,

“ஓ..!!! ஓகே ஓகே.. ஒண்ணுமில்ல.. நான் நைட் கால் பண்றேன் பார்த்தி…” என்ற முரளி, “ஆ.. அங்க எல்லாம் உனக்கு செட்டாகிடுச்சா??” என்றான் வேகமாய்..

“செட்டாகிடுச்சான்னா?? எதை கேட்கிற? இல்ல என்ன கேட்கிற??”

“அதில்லடா.. உனக்கு அங்க புட்.. க்ளைமேட்.. ” என்று முரளி இழுக்க,

“அதை கேட்க உனக்கு இத்தனை மாசம்…” என்றவன், “ஓகே பை…” என்று வைத்துவிட,

“ச்சேய்…. எனக்கப்புறம் பொறந்தவன் நாய்… இப்படி பேசுறான்…” என்று அவனின் அலைபேசியை தூக்கி எரிந்தது தான் மிச்சம்..

முரளிக்கு அவன் எதிர்பார்த்த எதுவும் பார்த்திபனின் பேச்சில் கிடைத்ததாய் இல்லை. அவன் எப்போதும், இயல்பாய் ஒரு கடுப்பில் ஒரு வெறுப்பில் பேசுவது போலிருக்க,. சட்டென்று அவனின் மனது,

‘கொஞ்சம் கூட ஒரு சோகம் இல்லையே.. அப்.. அப்போ.. தன்யாவும் இவனும்…’ என்று மனது வேகமாய் ஒரு கணக்கு போட, அடுத்த அழைப்பு தன்யாவிற்கு தான்.

‘எஸ்.. அப்படித்தான் இருக்கணும்.. இல்லைன்னா இவன் இவ்வளோ தெனாவெட்டா பேசமாட்டேன்.. டேய் இருக்குடா உனக்கு.. மொத்தமா உங்க மூணு பேருக்கும் சேர்த்தே வைக்கிறேன்.. கூட்டு சேர்ந்து கூட்டு களவாணித் தனமா பண்றீங்க…’ என்று பொரிந்துத் தள்ளியவன், நேராய் வீடு சென்றான்..

வீட்டில் அப்பா அம்மா உறங்கிக்கொண்டு இருக்க, மகளும் பள்ளிக்கூடம் சென்றிருக்க, ஹேமா மட்டுமே  இருந்தாள்.

சட்டென்று முரளிக்கு மனதினில் ஒரு திட்டம் உருவாக, ஹேமாவிடம் வந்தவன் “லேகா உனக்கு எதுவும் போன் பண்ணாளா??” என்றான்.

அவளோ, “இல்லையேங்க… நேத்து உங்கக்கிட்ட என்ன பேசினா?? நீங்களும் எதுவும் சொல்லலையே..” என்று கேட்க,

“ம்ம்ச்.. அவ அங்கேயே செட்டில் ஆகப் போறாளாம்..” என்றான் மொட்டையாய்..

“எது.. என்னது??!!!” என்று ஹேமாவின் முகத்தினில் அதிர்ச்சி பாவனை தெரிய, அவளோ கணவனின் பேச்சை நம்பி இமைக்காது பார்த்து நின்றாள்.

“ம்ம் ஆமா ஹேமா… நம்ம எல்லாம் வேணாம் போல.. அதான்.. அங்கேயே இருந்திட போறேன்… இங்க இருக்கிறது எல்லாம் வித்துட்டு பணமா கொடுங்க அப்படின்னு சொல்றா…” என, மேலும் ஹேமாவின் மனது அதிர்ச்சி உற்றது..

“என்னங்க சொல்றீங்க??!!!” என்றவள் அப்படியே பொத்தென்று அமர,

“ம்ம் அதான் உனக்கு எதுவும் சொன்னாளான்னு …” என்று முரளி யோசனையாய் மனைவியின் முகம் காண, ஹேமாவின் தலையோ இல்லையென்று மட்டுமே ஆடியது.

“எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஹேமா…” என்று முரளி வருந்தி சொல்வது போல் சொல்ல, ஹேமாவிடம் பதிலே இல்லை.

“ஹே… ஹேமா….”

“ம்ம்…” என்றவளுக்கு கண்கள் கலங்கி, “நா.. நான் எங்கப்பாக்கு சத்தியம் பண்ணி கொடுத்திருந்தேன். லேகாவை எப்போவும் தனியா விட்டுட மாட்டேன்னு.. ஆனா இப்போ அவளே இப்படி சொன்னா???” என்று கேட்க,

‘வா.. வா டி வா.. நீ இது சொல்லனும்னு தானே நான் இவ்வளோ பேசினதே…’ என்று முரளியின் மனது எக்களிக்க,

அவனின் முகமோ கருணையே உருவாய் மாறி “இப்போ கூட நம்ம எதுவும் செய்யலை.. அவளா தான் சொல்றா.. ம்ம்ம் அவளுக்கு ஒரு நல்லது பண்ணி வச்சிடலாம்னு நினைக்கிற நேரத்துல…” என்று சொல்லிக்கொண்டு வந்தவன்,

“ஹேமா… நான் ஒண்ணு சொல்லட்டுமா.. பேசாம பார்த்திக்கும் லேகாக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டா எல்லாருக்குமே நல்லது இல்லையா??!!!” என,

“என்னங்க சொல்றீங்க??!!!!” என்று ஹேமா இரண்டாவது அதிர்ச்சிக்கு ஆளானாள்.

“நீ நல்லா யோசிச்சு பாரேன் ஹேமா.. இது தான் நல்ல வழி.. லேகாவோடு பொறுப்பு எப்பவுமே நமக்கு இருக்கு.. பார்த்திக்கும் எப்படினாலும் நம்ம யாரையோ கல்யாணம் பண்ணி வைக்கணும்.. அதுவே நம்ம லேகான்னா.. அவங்க ரெண்டு பேரும் எந்த நாட்ல இருந்தாலும் சொந்தம் விட்டு போகாது இல்லையா??” என,

ஹேமாவோ இன்னும் அதிர்ச்சி விலகாது தான் அவனின் முகம் பார்த்தாள்.

“நீ நிதானமா யோசி.. அடுத்து லேகா பேசினா நீயே என்னன்னு கேளு.. நான் பேசினா கூட எதுவும் சொல்லமாட்டா.. நீதான் அவளுக்கு இப்போ அம்மா  ஸ்தானத்துல இருக்க…” என்று மெது மெதுவாய் ஹேமாவை லேகாவிடம் பேச வைக்கும் நோக்கில் அவளை தயார் செய்துகொண்டு இருந்தான் முரளி.

பார்த்திபனோ முரளி அழைத்து பேசிய பின்னே, பெரும் யோசனைக்கு ஆளானான் என்றுதான் சொல்ல வேண்டும். வேலை ஓடவில்லை. ஆனாலும் தன் மனதை இழுத்துப் பிடித்து வேலையில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தான்.

என்னதான் முண்டி அடித்து ஓடும் மனதினை இழுத்து இழுத்து பிடித்தாலும் அது திமிறிக்கொண்டு தானே ஓடும். அதுதானே மனதின் இயல்பும் கூட. பார்த்திபனுக்கும் இப்போது அதே நிலைதான். கை அதுபாட்டில் தன் வேலையை செய்ய, மனதோ முரளி பேசியதையே நினைத்துக்கொண்டு இருந்தது.

‘லேகா என்ன சொல்லிருப்பா??!!!’

‘விஷயம் இல்லாம இவன் கால் செய்ய மாட்டானே..??’

‘லேகா கிட்டயே கேட்டிடலாமா??’

‘முரளி நைட் கால் பண்ணா என்ன சொல்றது??!!!’

என்று பார்த்திபன் மனதினுள் பலவேறு கேள்விகள் ஓடிக்கொண்டு இருக்க, லேகாவே அவனின் முன் வந்து நின்றாள். ஆனால் அதை அவன்தான் கவனிக்கவில்லை.

“ஹேய் பார்த்தி…” என்று அவனின் தோள் தொட, “ஹா..” என்று விழித்தவன், எதிரே நின்றவளை என்னவென்று பார்க்க,

“என்ன எந்த உலகத்துல இருக்க நீ??” என்றாள் லேகா..

லேகா என்னவோ அவனோடு எப்போதும் போல் தான் பேசுகிறாள். ஆனால் பார்த்திபன் தான் முன்னே போல் அதிகம் எதுவும் வைத்துக்கொள்வதில்லை. லேகாவும் இதனை அறிவாள். ஆனால் அவனை வேறெதுவும் பேசி வற்புறுத்தவில்லை.

இப்போது லேகாவே தேடி வந்து பேச, பார்த்திபனுக்கு பார்வை கேள்வியாய் தான் மாறியது.

“என்ன பாக்குற.. எல்லாம் கிளம்பிட்டாங்க.. நீ இன்னும் சிஸ்டம் கூட ஆப் பண்ணல..” என, அப்போது தான் சுற்றிலும் பார்த்தான்.

ஏற்கனவே அங்கே இருந்த பாதி பேர் கிளம்பியிருந்தனர், மீதிபேர் கிளம்பிக்கொண்டு இருந்தனர். அவனின் டீம் ஆட்களோ, கும்பலாய் சற்று தள்ளி நின்று இவனைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

“ம்ம் கிளம்பு…” என்று லேகா சொல்ல,

“என்னாச்சு???!!” என்றான் பார்த்திபன் ஒன்றும் விளங்காது..

“என்னாச்சா??!! ஆமா மார்னிங் மெயில் வந்தது தானே.. ஆபிஸ் ஸ்டாப்ஸ் எல்லாம் கொபுஷி மங்கோலியா ப்லாசம் பார்க்க போறோம்னு…” என்று லேகா சொல்ல, அப்போது தான் அவனுக்கு அதுவே நினைவில் வந்து தொலைத்தது..

“ஓ.. ஆமா..” என்றவன், அவனின் வேலைகளை முடித்து, கணினியை அமர்த்திவிட்டு, அவனின் பையை எடுத்துக்கொண்டு கிளம்ப, அப்போது தான் அவன் டீம் ஆட்கள் நகர்ந்து சென்றனர்.

“நீ எப்படி பார்த்தி உன் டீம் கூட ஜாயின் பண்றயா?? இல்லை…” என்று லேகா கேட்க,

‘ஏன் அக்கியோ வர்ரானா??!!’ என்று கேட்க தோன்றிய வாயை அடக்கியவன், “எஸ் லேகா..” என்றான், அவன் டீம் ஆட்களைப் பார்த்து நில் என்று சைகை செய்தபடி.

அவனின் செய்கையை பார்த்த லேகாவோ, பார்த்திபன் முகத்தினையே பார்த்தவள், “ஹ்ம்ம்.. ஓகே.. நான் மானேஜிங் டீம்மோட வர்றேன்.. அங்க வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்…” என்றவள் சென்றுவிட்டாள்.

பார்த்திபனுக்கு இதெல்லாம் வித்தியாசமாய் இருந்தது. வழக்கமான பாணியில் இல்லாது இந்த ஜப்பானியர்கள் வேலை வாங்கும் நேர்த்தியும் வேறாக இருக்க, இப்போது என்னவென்றால், அங்கே பிரசித்தி பெற்ற, கொபுஷி மங்கோலிய மரங்களில் பூக்கள் மலர்ந்திருக்கின்றது என, அனைவரையும் அழைத்துக்கொண்டு புகைப்படங்கள் எடுக்கச் செல்கிறார்கள்.

வேலை முடியும் நேரம் தான். ஆனாலும் கூட இது கொஞ்சம் வித்தியாசமாய் தான் இருந்தது.

வெயில் காலத்தின் ஆரம்ப நாட்களில் பூக்கத் தொடங்கும் கொபுஷி மங்கோலிய மரங்கள் பார்க்க அப்படியே பனியை கொட்டி வைத்ததுப் போலிருக்கும்.. இந்த காலகட்டத்தில், அம்மரங்களை காணவும், வித விதமாய் புகைப்படங்கள் எடுக்கவும் சுற்றுலா பயணிகள் குவிவர்..

இப்போது இவர்களின் அலுவலகத்தில் இருந்தே அழைத்து செல்ல, பார்த்திபன் அவனின் குழுவினரோடு சேர்ந்துகொண்டான். ஒரு அரைமணி நேர பயணம்.. அதன் பின் அங்கே அம்மரங்கள் சூழ்ந்திருக்கும் பகுதிக்கு அனைவரும் சென்றுவிட, அவ்வளவுதான் ஆளாளுக்கு குழுவாகவோ இல்லை தனியாகவோ நின்று புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கிவிட, பார்த்திபனோ மற்றவர்களைப் போல் செய்யாது கொஞ்சம் நடந்து அந்த இடத்தினை சுற்றி பார்த்தான்.

மெல்லிய நறுமணம் சூழ்ந்திருக்க, அந்த மாலை பொழுதில் அந்த சூழலே ரம்யமாய் இருந்தது. நிறைய காதலர்கள் வேறு வந்திருந்தனர்.

கட்டிக்கொண்டு, ஓட்டிக்கொண்டு, கைகள் கோர்த்துக்கொண்டு அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் பார்த்திபனுக்கு காண காண தன்யாவின் நினைவை அதிகப்படுத்தியது.

தன்யா மட்டும் இங்கிருந்தால் என்ற நினைவிற்கு அவன் மனம் போக, ‘இல்லைன்னா என்ன?? கூப்பிடு அவளை…’ என்று அதே மனம் அவனுக்கு ஆணையிட,

‘ஒன்னும் வேணாம்…’ என்று முறுக்கிக்கொண்டான்.

ஆனாலும் மனது ஆசையுற்றது.. என்னவோ தன்யா மீது அப்போது எந்தவித கோபமும் இல்லை. அவள் சொன்னதுபோல் மனது அமைதியாகியிருப்பது போலிருந்தது.

இதென்னா நூடில்ஸா?? சட்டென்று தயாராகுவது போல், மனது இரண்டே நொடியில் அமைதியாகி விட?? யார் கண்டது.. ஒருவேளை சூழல் மாறினால் மனதும் மாறுமோ என்னவோ??

பார்த்திபன் இதழில் ஒரு மென் புன்னகை வந்து அமர்ந்துகொள்ள, மீண்டும் அங்கே சுற்றி வந்தான்.. அவனின் மனதோ தன்யாவை சுற்றி சுற்றி வர, நேரம் பார்த்தான், அவள் வீட்டிற்கு வந்திருப்பாளா என்று தெரியாது, ஆனாலும் அழைக்கத் தோன்ற,

‘திட்டுவாளோ??!!!’ என்று யோசித்தான்.

மான ரோசம் பார்த்தால் பல காதல்கள் மடிந்திருக்குமே…

‘திட்டினாலும் பரவாயில்லை.. ஒன் டைம்னு சொல்லி எக்ஸ்கியூஸ் கேட்டுப்போம்..’ என்றெண்ணியவன், தன்யாவிற்கு அழைக்க, அவனின் நல்ல நேரம் தன்யா வீட்டில் தான் இருந்தாள்.

மதியமே வந்திருந்தாள்..

நல்ல தலைவலி, அதற்குமேல் முடியவில்லை என்று வீட்டிற்கு வந்துவிட, நல்ல உறக்கம் முடித்து, அப்போது தான் எழுந்தும் அமர்ந்திருந்தாள். உடம்பை முறுக்கி சோம்பல் முறித்துக்கொண்டு இருக்க, தன்யாவின் அலைபேசி சத்தம் அவளை திரும்பிப் பார்க்க வைக்க, 

பார்த்தவளுக்கோ இதழ்கள் ‘பார்த்தி…’ என்ற அழைப்போடு, கண்களோ வட்டமாய் விரிய, மனது ஒருவித இனிமையான திடுக்கிடலுக்கு ஆளானது.

ஆனாலும் வீம்பாய் ‘நான் என்ன சொல்லிருந்தேன்.. இவன் என்ன செய்றான்…’ என்று பார்க்க, அழைப்பு நின்று திரும்ப அழைப்பு வர,

‘எவ்வளோ சொன்னாலும் கேட்கவே மாட்டான்.. பிடிவாதம் பிடிச்சவன்..’ என்ற சலிப்போடு அவனை திட்டவே அழைப்பினை ஏற்றவள் “ஹலோ..” எனும் முன்னமே,

“வீட்ல இருக்கியா??” என்ற கேள்வி தான் வந்தது..

எடுத்ததுமே இதென்ன கேள்வி, என்று பார்த்தவள் “ம்ம்..” என,

“ஓகே ரூம்ல இரு.. விடியோ கால் பண்றேன்..” என்று வைத்துவிட்டான்.

தன்யாவிற்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. இவனோடு பேசவே கூடாது என்று நினைத்திருக்க, இப்போதென்ன வீடியோ கால் ?? என்று தோன்ற, தன்னைப்போல் எழுந்து வேகமாய் கண்ணாடி முன்னே போனவள், வேகமாய் கேசத்தை, உடையை எல்லாம் சரி செய்து கொண்டிருக்க, பார்த்திபன் அழைத்துவிட்டான்..

அப்போதும் கூட ‘இவன் இருக்கானே…’ என்ற விதத்தில் தான் அழைப்பினை ஏற்றவள், திரையைக் காண, அங்கேயே பார்த்திபன் தெரியவில்லை, வெள்ளை வெள்ளையாய் பூக்கள் கொண்ட மரங்களே தெரிய, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.  

“ஹலோ… பார்த்தி…” என,

“மேடம் தனியா தூள்.. நீங்க ஸ்பேஸ் மெயின்டைன் பண்ணுங்க.. சோ என் பேஸ் காட்ட மாட்டேன்.. ஜஸ்ட் வீடியோ மட்டும் பாருங்க…” என்று பார்த்திபன் சொல்ல,  தன்யாவிற்கு அவன் சொன்னது கேட்டு சிரிப்பு வந்துவிட்டது.

‘செய்றதெல்லாம் செஞ்சிட்டு இதென்ன…’ என்று முணுமுணுக்க, பார்த்திபனோ அங்கே இருப்பதை விளக்க, தன்யாவின் கண்களோ திரையில் அவன் வரமாட்டானா என்று தான் ஏங்கிப் பார்த்தது.

“என்னவோ தெரியல.. இங்க வந்ததும் உன் கூட பேசணும் போல இருந்தது.. பட்.. நீங்கதான் ஸ்பேஸ்ல இருக்கீங்களா…… ஆனாலும்….” என்று அவன் இழுக்க,

“சரியான பிடிவாதம் பிடிச்சவன்டா நீ…” என்றவள் “உன் மூஞ்சிய காட்டித் தொலை…” என்றாள் சிரமம்பட்டே சிரிப்பை அடக்கி.

“வேணாம் வேணாம்… நீங்க இந்த ஜப்பான் காரவங்கள பாருங்க…” என்ற பார்த்திபன் குரலில்,

“ஹேய் ரொம்ப பண்ணாம…” என்று தன்யா சொல்லும் போதே, சட்டென்று பிரன்ட் கேமெரா ஆன் செய்து “என்ன டி ரொம்ப பண்ணிட்டேன்..” என்றபடி பார்த்திபனின் முகம் தோன்றியது.

              

         

          

                         

                        

 

Advertisement