Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – 11

‘எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும் பார்த்தி…..’

தன்யாவின் இவ்வரிகள் பார்த்திபனை கொல்லாமல் கொன்றது எனலாம். ‘என்னாச்சு இவளுக்கு…’ என்ற எண்ணமே அவனை ஓரிரு நாளாய் படுத்த, ‘சரி எதுனா டென்சன்ல இருப்பாளா இருக்கும்…’ என நினைப்பு அடுத்து ஒரு நான்கு நாட்கள் அவனை அமைதியாய் இருக்க வைக்க, அதற்குமேல் அவனால் அவளோடு  பேசாது இருக்க முடியவில்லை..

‘என்னதான் நினைச்சிட்டு இருக்கா…’ என்ற கோபமே வர,

“தன்யா இப்போ என்னதான் முடிவா சொல்ற நீ…” என்றான் கோபமாகவே.

தன்யாவிற்கோ பார்த்திபனின் கோபமே தெரிய, “நான் தான் சொன்னேனே பார்த்தி..” என்றாள் ஒருவித மரத்துப் போன குரலில்.

இந்த இடைப்பட்ட நாளில் பார்த்திபன் பேசாது, அழைக்காது இருக்க, அதுவே அவளுக்கொரு தவிப்பாய் இருந்தது.

‘அப்போ.. அவ்வளோதானா.. நான் அப்படி சொன்னா.. இவனும் உடனே சரின்னு இருந்துடுவானா??!!! ஏன் எதுக்குன்னு கேட்கமாட்டானா..??’ என்ற உறுத்தல் அவளைப் போட்டு நிம்மதியிழக்கச் செய்ய,

பார்த்திபனின் அழைப்பு என்றதுமே பட்டென்று எடுத்துவிட்டாள்.

ஆனால் அவனோ கோபமாய் பேச, ‘இவ்வளோதானா??!!!’ என்றாகிப்போனது.

“சொன்னியா???!!! என்ன சொன்ன… அங்க இருக்கேன்னு சொன்னவனை போ போ ன்னு சொன்ன.. இங்க வந்து உன்னை சமாதானம் செய்யவே இத்தனை நாளாச்சு.. ஒருத்தன் அவ்வளோ தூரத்துல இருந்து பேசுறானேன்னு கொஞ்சமாவது உனக்கு இறக்கம் இருக்கா டி…” என,

தன்யா அமைதியாகவே இருந்தாள்.

“பேசு தன்யா.. ஒவ்வொரு டைமும் ஏன் என்னை கோபமாவே பேச வைக்கிற??!!” என்றவன்,

“நீயே இப்படி பண்ணா எப்படி???!!” என்றான் கிட்டத்தட்ட இறங்கிப்போன குரலில்.

அவனுக்கு இன்னமுமே கூட புரியவில்லை என்பது தன்யாவிற்கு நன்கு புரிந்தது.

“பேசு டி…” என்று பார்த்திபன் அங்கே பல்லைக் கடிக்க,

“அப்.. அப்போ.. நீ பண்ற எதுவும் உனக்குப் புரியலையா பார்த்தி??!!” என்றாள் நிறுத்தி நிதானமாய்..

“ஏன் நான் என்ன பண்ணேன்..???”

“யோசிச்சு பாரு பார்த்தி…” என்றவள் அமைதியாகவே இருக்க, பார்த்திபனும் இரண்டொரு நொடி அமைதியாகவே இருந்தவன்,

“ம்ம்ச் எனக்கு அவ்வளோ தான் யோசிக்கத் தெரியலை…” என்றான், எதுவுமே யோசிக்காது.

அவனுக்கு தன்யா அவனோடு பேசமாட்டேன் என்கிறாள் என்பதிலேயே வேறெதுவும் நினைக்க முடியவில்லை. சில விஷயங்கள் பெண்கள் கூர்மையாக நுண்ணியமாய் நினைப்பது போல் ஆண்கள் யோசிப்பது இல்லையோ என்னவோ.

“நீ தான் யோசிக்கவேயில்லையே…” என்று தன்யா சொல்ல,

“ஏய் என்ன டி?? ஸ்பேஸ் வேணும்னா என்ன அர்த்தம் தன்யா எனக்கு புரியலை?? எதுல இருந்து உனக்கு ஸ்பேஸ் வேணும்… நான் ஒன்னும் உன்னை ஒட்டி உரசிட்டு.. கட்டி பிடிச்சிட்டு இருக்கலையே…” என்று பார்த்திபன் கேட்க, தன்யாவிற்கு பட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.

அவளின் சிரிப்பு சத்தம் பார்த்திபனுக்குக் கேட்க,

“தன்யா…??!!!!” என்றான் அவளின் பெயரை கடித்துத் துப்பி.

“ம்ம் சொல்லு பார்த்தி…” என்றவள் திரும்ப இயல்பில் பேச,

“ஏன் டி என்னைப் படுத்துற…. நீ சொன்ன ஒரு வார்த்தைக்கு தான் நான் இங்க வந்தேன்…”எனும்போதே,

“பட் அங்க போனதுமே நான் உனக்கு ரெண்டாம் பட்சம் ஆகிட்டேன் அப்படிதானே பார்த்தி..” என்றாள் ஒரு வலி நிறைந்த குரலில்.

“ஹேய்… லூசு அப்படியெல்லாம் இல்லை…” என்று பார்த்திபன் சொல்ல,

“நிஜம் அதான் பார்த்தி…. நீ யோசி.. உனக்கே புரியும்…” என்றாள் மிக மிக மெதுவாய்.

அந்த குரல், தன் வலியை மறைக்கும் குரல்.. மன்றாடவோ மல்லுக்கட்டவோ அவளுக்கு இனி அவளுக்குத் தேம்பில்லையோ என்னவோ, இனி எதுவாகினும் அவனே செய்யட்டும் என்ற நினைப்பிற்கு வந்துவிட்டாள். ஆனால் அவனோ எதுவாகினும் அவளே சொல்லவேண்டும் என்று நினைக்க,

“தன்யா ப்ளீஸ்.. அது இதுன்னு எதுவும் சொல்லாத.. எனக்கிருக்க ஒரே ஒரு நிம்மதி நீ மட்டும் தான் உன்கூட பேசுறது மட்டும் தான்..” என்றான் அவன் மறைக்க எதுவுமே இல்லை எனும்விதமாய்.

தன்யாவிற்கு பார்த்திபன் கூறிய இச்சொற்கள் எல்லாம் எப்படியொரு மகிழ்வை கொடுக்கும் என்பது யார் சொல்லியும் தெரியவேண்டாம். ஆனால் இதெல்லாம் அவன், அவளை நோகடிக்கும் முன்னம் சொல்லியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும். அழவும் வைத்துவிட்டு பின் ஆறுதலும் சொன்னால் அது என்ன கதை??

யார் தான் ஏற்பர்??

ஒருமுறை எனில் பரவாயில்லை.. எப்போதுமே அப்படியெனில்..??

“இதையே நானும் சொல்லலாம் தானே பார்த்தி.. நீ என்கிட்டே எக்ஸ்பெக்ட் பண்றதுபோல தானே எனக்கும் உன்கிட்ட இருக்கும்…” என்று தன்யா சொல்ல,

“நா… நான் என்ன செஞ்சிட்டேன்… இப்போகூட நானா கால் பண்ணி தான் பேசு பேசுன்னு சொல்லிட்டு இருக்கேன்..” என்றான் அவனும்.

“ஹ்ம்ம்… அதாவது உனக்கு பேசணும்னு தோணுறப்போ…. நான் பேசணும்.. பட் நான் ஏதாவது இம்பார்டன்ட்டா பேச கூப்பிட்டா நீ போன் சுவிட்ச் ஆப் பண்ணுவ?? அப்படிதானே.. இப்போ வரைக்கும் கூட அது தப்புனு உனக்கு தோணலை இல்லையா???” என,

அப்போது தான் அவனுக்கு நடு மண்டையில் கொட்டியது போல் பட்டென்று புரிந்தது.

“ஷ்..!!! அ.. அது…” என்று இழுத்தவனுக்கு இங்கே நடந்த எதுவுமே அவளுக்கு தான் சொல்லாமல் தன்னிலை புரியாது என்பது மிக நன்றாகவே புரிந்தாலும், அவன் எப்படி லேகா பற்றி சொல்ல முடியுமா.

சும்மாவே தன்யா மனதில் அது இதென்று எண்ணிக்கொண்டு குழம்புகிறாள், இதில் இந்த லேகா அக்கியோ பற்றி அதுவும் இப்போது சொன்னால், நிச்சயம் அது இன்னமும் தேவையில்லாதவைகளை கிளப்பும். நேரில் சொல்வது வேறு. அதுவும் இப்போது போனில் சொல்லி, அதை அவள் எப்படி எடுத்துக்கொள்வாளோ என்றும் இருந்தது.

வீட்டினருக்கு தெரிந்தது போலே, லேகாவிற்கு முடியவில்லை என்றே இருக்கட்டும் என்றெண்ணியவன்  

“அப்போ சூழ்நிலை அப்படி தன்யா… உனக்கே இப்போ எல்லாம் தெரிஞ்சிருக்கும் தானே.. லே… லேகாக்கு முடியலை..” என, பார்த்திபனின் குரலில் தன்யா என்ன புரிந்துகொண்டாளோ

“நீ… நீ என்கிட்ட எதுவும் மறைக்கிறையா பார்த்தி….??” என்றாள்..

பார்த்திபனுக்கு திக்கென்று தான் இருந்தது..

சரியாய் சொல்கிறாள்.. ஒருபக்கம் தன்னை இத்தனை புரிந்து இருக்கிறாள் என்ற பெருமையும் கூட. ஆனால் இந்த மண்ணாங்கட்டி எல்லாம் புரிந்து என்ன செய்ய??

“நா… நான் என்ன மறைக்கபோறேன்….” என்றான் திக்கி திணறி..

“ம்ம் என்னவோ தோணிச்சு பார்த்தி… கொஞ்ச நாள் ரெண்டுபேரும் சைலெண்ட்டா இருப்போமே…” என,

“இல்ல தன்யா.. அப்போ சூழ்நிலை…” என்று அவன் சொல்லும்போதே,      

“அது நீ சொல்லி எனக்கு தெரிஞ்சிருந்தா நானும் எதுவுமே நினைக்கப் போறதில்லை.. பட் எனக்கு இப்போ தோணுது பார்த்தி.. கொஞ்சம் நம்ம சைலன்ட்டா விலகி நிக்கலாம்னு.. உன் வேலை நீ பாரு.. என்னோடது நான் பாக்குறேன்.. நமக்குள்ள லவ் இருக்குதானே.. சரியான டைம் வர்றபோ வீட்ல சொல்லுவோம்.. அதுவரைக்கும் இந்த சண்டை அது இதெல்லாம் வேணாம்..” என்றாள் இதுமட்டுமே அவளின் முடிவு என்பதாய்.

பார்த்திபனோ ‘இவளென்ன என்ன சொன்னாலும் இதையே சொல்கிறாள்..’ என்றெண்ணியவன்,

“சரி அப்புறம்…” என,

“வேற எதுவுமில்லை பார்த்தி.. எனக்கு சண்டை போட்டு, அழுது, என்னை நானே வீக் பண்ணிட்டு இதெல்லாம் சுத்தமா பிடிக்கலை.. அது இன்னும் இன்னும் உன்னையும் என்னையும் ஹர்ட் பண்ணி தள்ளி போக வைக்கும்.. அதுக்கு இந்த ஸ்பேஸ் எவ்வளவோ பெட்டெர்…” என,

“ம்ம் அப்புறம்…” என்றான் உணர்வுகள் அற்ற குரலில்..

“வேற ஒண்ணுமில்ல பார்த்தி.. நீயும் அமைதியா இரு.. நானும் இருக்கேன்… நடக்குறது நடக்கட்டும்.. நிதானமா யோசி  புரியும்…” என்றவள் இதற்குமேல் நான் பேசவும் போவதில்லை எனும்விதமாய் வைத்துவிட்டாள்.

அவளுக்கு அவளின் மன அமைதி தேவை.. அனைத்தையும் விட ஒரு மனிதனுக்கு தன் மன அமைதி மிக மிக முக்கியம்.. அந்த அமைதி இல்லையெனில் எதுவும் செய்ய முடியாது.. எதுவும் யோசிக்க முடியாது..

காதலுக்காக போராடலாம்.. காதலோடு போராட முடியுமா என்ன??

அது மேலும் மேலும் வலி மட்டும் தானே கொடுக்கும்..

அந்த நிலையில் தன்யா இருக்க, பார்த்திபனோ இப்போதும் கூட அவள் சொல்வதை கேட்டுத்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்க, நாட்கள் மெதுவாகவே நகர்வதாய் இருந்தது.

நாட்கள் வாரங்களாக, லேகா மீண்டும் வழக்கம் போல அலுவலகம் செல்லத் தொடங்க, பார்த்திபனின் ஒதுக்கம் அவளுக்கு புரியாமல் இல்லை..

அவனும் இதுவரைக்கும் எக்கேள்வியும் கேட்கவில்லை.. அதுவே ஒரு உறுத்தல் கொடுக்க,

“சோ… நீ என்னை தப்பா நினைக்கிற அப்படிதானே பார்த்தி…” என்றாள் அவனை நேருக்கு நேராய் பார்த்து..

இப்படியொரு நேர் பார்வை கண்டு பேசுபவள் தவறு செய்வாளா??!!

அப்படியே தவறேதும் செய்திருந்தால் இப்படி நேராய் ஒருவரை பார்த்து பேச முடியுமா??

பார்த்திபனுக்குள் இவ்வெண்ணம் தான்.. மெல்லியதாய் நகைத்தவன் “நான் ஏன் உன்னை தப்பா நினைக்கணும்…??” என்றான்..

“இல்ல பார்த்தி.. நீ முன்ன மாதிரி இல்லை..”

“நான் தனி மனுஷன் தானே லேகா.. எனக்கும் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும்..” என்றான் ஒருவித விரக்தியில்..

அவனுக்கே தெரியவில்லை.. தான் ஏன் இப்படி ஆகிப்போனோம் என்று.. எதுவும் பிடிக்கவில்லை… பார்த்திபன் என்பவன் மிக மிக சந்தோசமான உற்சாகமான ஒருவன்.. அவனின் அண்ணனின் பேச்சுக்கள் மட்டுமே அவனுக்கு முட்கள்.. அதையே அவன் பெரிதாய் நினைக்கவில்லை..

ஆனால் இப்போதோ.. என்னவோ அவனின் வாழ்வை அவனை வாழவிடாது அவனை ஏதோ ஒன்று இறுக்கிப் பிடிப்பதாய் தோன்ற, தன்னைப்போல் ஒரு விரக்தி வந்து ஒட்டிக்கொண்டது.

லேகாவோ தன் பிரச்சனையால் தான் பார்த்திபன் இப்படி இருக்கிறானோ என்று “ஏன் பார்த்தி… விடோ ன்னா லவ் பண்ண கூடாதா???” என்று கேட்க,

அவனே இத்தனை நாளில் யூகித்து தானே இருந்தான். அதனால் அதிர்ச்சி எல்லாம் ஆகாது “இது உன்னோட வாழ்க்கை.. நீ முடிவு செய்யணும்.. உன்னை தப்பா நினைக்கலை.. ஆனா தப்பா எதுவும் நடந்திடாம இருந்தா சரி…” என்றுமட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.

இதற்குமேல் அவனுக்கு எவ்வித விளக்கமும் தேவையாய் இருக்கவில்லை அவளிடம்…

ஏனோ அதெல்லாம் கேட்கவும் பிடிக்கவில்லை…

ஆனால் லேகாவின் பார்வையோ ‘இனியும் கால தாமதம் கூடாது…’ என்ற செய்தியை சொல்ல, நொடியும் தாமதிக்காது முரளிக்கு அழைத்துவிட்டாள்.

முரளியோ நல்ல உறக்கத்தில் இருக்க, திடீரென்று அந்த இரவு நேரத்தில் அதுவும் லேகாவின் அழைப்பு என்றதும் ஒருவித பதற்றத்தோடு தான் எடுத்தான்..

“ஹ… ஹலோ  லேகா.. என்னம்மா என்னாச்சு?!?!!” எனும்போதே, ஹேமாவும் எழுந்து அமர்ந்துவிட,

“ஒன்னும் இல்லை மாமா.. நல்லாருக்கேன்.. அக்கா, குட்டி மா எல்லாம் எப்படி இருக்காங்க…” என,

“உஷ்…!!! இதுக்கு தான் இந்நேரம் போன் பண்ணயா??!!!” என்றான் எரிச்சலாய்.

“ஒரு முக்கியமான விஷயம் மாமா அதான் டக்குனு கால் பண்ணிட்டேன்…” என்றவள், “ஓகே நான் நாளைக்கு கூட பேசுறேன்…” என,

“ஹேய் இரு இரு… என்னனு சொல்லு…” என்றான் முரளியும்..

அவன் மனதிலோ ‘என்ன சொல்லப் போகிறாளோ…’ என்று இருக்க,

“அது மாமா… என்னோட நேம் ல இருக்க ப்ராபெர்டீஸ் எல்லாம் நீங்க தானே பார்த்துட்டு இருக்கீங்க…” என, முரளிக்கு சட்டென்று ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து ஒட்டிக்கொண்டது..

“ஆமா…” என்றவன் ஹேமாவின் முகம் பார்க்க,

அவளோ இந்த நேரத்தில் என்ன பேச்சு எனும்விதமாய் மட்டும் தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். அதிலும் சட்டென்று முரளி முகம் மாறிட ‘என்னங்க??!!’ என்று சைகையில் கேட்க,

‘பொறு…’ என்று அவனும் சொன்னவன், லேகாவின் பதிலுக்காய் காத்திருந்தான்.

“அது மாமா… எல்லாத்தையும் முடிஞ்சா சேல் பண்ணிட்டு எனக்கு லிக்விட் கேஷ் கொடுத்திட முடியுமா?? உங்களுக்கு பவர் இருக்குதானே.. ஆர் வேற எதுவும் நான் வந்து லீகலா செய்யனுமா??” என்று அவள் பாட்டில் பேச, இங்கே முரளியின் அடிப்படை கனவே தகர்வதாய் ஆனது. 

சிறிது நேரம் அவனுக்கு என்ன சொல்வது என்பதுகூட புரியாது, அமைதியாகவே இருந்தான்.

“ஹ.. ஹலோ மாமா…” என்று லேகா அழைக்க,

“ஹா.!!! சொல்லு லேகா…” என்றான் சுதாரித்து..

“இல்லை எனக்கு இதுல எதுவும் தெரியலை.. சோ நான் எதுவும் அங்க வரணுமா?? இந்த ப்ராசஸ் எல்லாம் முடிக்க??” என்று கேட்க,

“இப்போ இதுக்கெல்லாம் என்ன அவசரம் லேகா??” என்றான் முரளியும்..

“அது மாமா.. அவசரமில்லை.. எப்படியும் இப்போ ஆரம்பிச்சா இட் டேக் சம் மன்த்ஸ்ல.. அதான்…”

“நான் அதை சொல்லலை லேகா… இந்த ப்ராசஸ்க்கு என்ன அவசியம்னு கேட்டேன்?? இப்போ என்ன திடீர்னு…” என்றவனுக்கு கட்டுக்கடங்காத கோபம்.

“நான் ஜப்பான்லயே செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன் மாமா…”

லேகாவின் இந்த சொற்கள் ஒவ்வொன்றும் முரளியினுள் அமிலம் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது.. அவன் வருடக்கணக்காய் ஒன்றை நினைத்து, அதற்கான முயற்சிகள் பல செய்து, இன்று ஒவ்வொன்றாய் காய் நகர்த்தி, தன் உடன் பிறந்த தம்பியின் வாழ்வையே கேள்வி குறியாக்கி அங்கே அனுப்பிவைத்தால், இவளென்ன அழைத்து இப்படி சொல்கிறாள்??

“ஹ.. ஹலோ மாமா… ஓகே.. சாரி இந்த டைம்ல கால் பண்ணிட்டேன்… மார்னிங் பேசுறேன்…” என்று லேகா வைத்திட,

முரளிக்கு இனி உறக்கம் என்ற ஒன்று வருமா என்ன??

ஒருபக்கம் தன்யா விசயத்தில் தான் நினைத்தது நடக்க, இன்னொரு பக்கம் லேகா விசயத்தில் அவன் எதிர்பார்க்காத ஒன்று நடந்திடுமோ என்று முதல் முறையாய் அவனுள் ஒரு கேள்வி எழுந்தது.                      

      

 

  

 

Advertisement