Advertisement

 பார்த்துவிடு கொஞ்சம் – 10

ஆகிற்று இன்றோடு ஒரு வாரம்..

பார்த்திபனும் தன்யாவும் பேசி..

லேகா வீடு வந்தும் கூட..

அவளை கவனித்துகொள்ளவென அக்கியோ ஒரு நர்ஸ் உடன் அனுப்ப, பார்த்திபனுக்கு அங்கே வேறு வேலையில்லை. மருத்துவமனையில் லேகா கண் விழிக்கவும், பார்த்திபன் ஒன்றுமே கேட்கவில்லை. மௌனமாய் இருந்தான். அக்கியோவும் அவளும் ஜப்பானிய மொழியில் பேச, அவனுக்கு எதுவும் விளங்கவில்லை.

எழுந்து வெளியே வந்து அமர்ந்துகொண்டான்..

இது நேரம் வரை எப்படியோ. ஆனால் அதற்குமேல் அவனால் அங்கே நிற்க கூட முடியவில்லை. லேகா மீது அப்படியொரு கோபம் வந்தது.

‘அந்த நாய் கம்பல் பண்ணி ட்ரக்ஸ் கொடுத்திருக்கான்.. கண்ணு முழிச்சதும் அவனை பொளீர்னு ஒண்ணு விடாம.. கை பிடிச்சி பேசிட்டு இருக்கா…’ என்று கண் மண் தெரியாத கோபம் அவனுக்கு..

லேகா பார்த்திபனையும் பார்த்து ஒரு கெஞ்சல் பார்வை கண்டாள் தான். ஆனால் அதெல்லாம் அவன் உணரும் விதத்தில் இல்லை..

‘ட்ரக்ஸ்…’ என்றதிலேயே அவனுக்கு அனைத்தும் நின்று போனது..

படித்தவன் தான்.. ஒரு பெண்ணை காதலிப்பவன் தான்.. அண்ணனின் அதிகாரம் பிடிக்காதவன் தான்.. ஆனாலும் அவனுக்கும் சில கோட்பாடுகள் எல்லாம் இருக்கும்.. எப்போதுமே.. பெண்களோ ஆண்களோ சில விசயங்களில் இப்படிதான் இருந்திட வேண்டும் என்பது அவனுக்கு எப்போதுமே உண்டு..

அன்று பார்ட்டியில் கூட தன் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாது தான் மதுபானம் எடுத்தானே தவிர அதன் பின் அவன் அப்பக்கம் கூட போகவில்லை.

ஆனால் இந்த அக்கியோ ….???

‘டேய் உனக்கு இருக்கு டா…’ என்று எண்ணிக்கொள்ள, சரியாய் அந்த அக்கியோவே வெளியே வந்து,

“லேகா இஸ் காலிங் யூ…” என,

‘நீ உள்ள வந்திடாத…’ என்று முனுமுனுத்தபடி போனான்.

லேகாவோ எழுந்து அமர்ந்திருந்தாள்.. பார்த்திபன் எதுவும் கேட்கவில்லை, அவளின் எதிரே அமர லேகாவோ “ஸா.. ஸாரி பார்த்தி..” என, ஒரு பார்வை பார்த்தான்.. அவ்வளவே..

அதற்கே லேகா தலைகுனிந்து போனாள்.

இதுநாள் வரைக்கும் இப்படியொரு நிலை என்பது அவளுக்கு எப்போதுமே வந்ததில்லை. வெளிநாட்டில் இருப்பவள். கணவன் இல்லை.. ஒற்றையாய் வசிப்பவள்.. இன்றோ இப்படியொரு நிலையில் வந்து படுத்திருக்க அவளின் மீது எப்படியான ஒரு எண்ணம் பார்த்திபனுக்கு வருமென்பது அவள் நன்கு அறிவாள்..

மௌனமாகவே மேலும் ஒரு ஐந்து நிமிடம் கழிய,

அக்கியோ உள்ளே வந்தான் ‘பேசிவிட்டீர்களா…??!!’ என்பது போலொரு பார்வை..

பார்த்திபனோ அப்போதும் அமைதியாகவே இருக்க லேகா தான் “பார்த்தி.. நா… நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..” என,

அக்கியோவோ அவளுக்கு முந்திக்கொண்டு “மிஸ்டேக் இஸ் மைன்…” என, பார்த்திபன் இருவரையும் ஒருசேர பார்த்தவன்,

“எப்போ டிஸ்சார்ஜ்…” என்றான் பொதுவாய்..

லேகாவும் அக்கியோவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள “எப்போ டிஸ்சார்ஜ்னு கேட்டேன்..” என்றான் இன்னும் அழுத்தமாய்..

“டுமாரோ…” என்றான் அக்கியோ.

“ம்ம் ஓகே..” என்ற பார்த்திபன், அவனின் போனை எடுத்து ஹேமாவிற்கு அழைத்து லேகாவிடம் கொடுக்க,

அப்போதுதான் லேகாவிற்கு புரிந்தது இவன் அவர்களை வேறு சமாளித்து இருக்கிறானோ என்று.. ஹேமாவோ லேகாவின் குரலைக் கேட்டதுமே அழத் துவங்க,

“அக்கா ப்ளீஸ்…” என்றாள் உள்ளே போன குரலில்..

லேகாவிற்குமே தான் செய்த செயல் எண்ணி கண்கள் கலங்கிப்போனது.. ஆனால் இது அவளுமே எதிர்பாராத ஒன்றுதான்.

“இங்க பாரு லேகா.. நீ.. நீ பேசாம கிளம்பி வா.. எல்லாம் இங்க இருக்கோம்.. அங்க என்ன வேலை உனக்கு.. இங்க என்ன இல்லை உனக்கு?? நீ வேலைக்கு போகணும்னு எந்த அவசியமும் இல்லை.. தனியா இருக்கனும்னும் இல்லை..” என்று ஹேமா சொல்ல,

லேகா பதில் சொல்லுமுன்னமே பார்த்திபன் போனை வாங்கியவன் “அண்ணி நாளைக்கு டிஸ்சார்ஜ செய்றாங்க.. எதுனாலும் வீட்டுக்கு போகவும் பேசிக்கோங்க.. இப்போ எதும் சொல்ல வேணாம்..” என்று சொல்ல, ஹேமா அதன் பின்னே தான் போனை வைத்தாள்.   

ஆனால் இதெல்லாம் முரளிக்கு போகாமல் இருக்குமா என்ன??

அப்படியே ஹேமா வழியாக முரளிக்கு விஷயம் போக, அவனுக்கு மனதினில் ஒரு திருப்தி தோன்றியதோ என்னவோ, “ம்ம் இப்போவாது பொறுப்பா இருக்கானே..” என,

ஈஸ்வரி வந்தவரோ “அதெல்லாம் அவன் எப்பவுமே பொறுப்பு தான் டா…” என்றார் சின்ன மகனை விட்டுக்கொடுக்காது.

சரியாய் இதே நேரத்தில் காஞ்சனாவும் அங்கேயே இருக்க, முரளியின் மனது வேறொரு கணக்குப் போட்டது. எப்படியும் காஞ்சனா இங்கே பேசுவது எல்லாம் தன்யாவோடு பகிர்வார் என்று தெரியும். ஆகையால் அவர் பகிரவேண்டும் என்பதற்காகவே அவரையும் பேச்சினில் இழுத்தான்.

“என்ன சித்தி.. நீங்க என்ன சொல்றீங்க பார்த்தி மாறிட்டானா என்ன??” என,

“இங்க இருந்து பார்த்தா என்ன முரளி நமக்கு தெரியும்.. ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் பார்த்தி எப்பவுமே நல்ல பையன் தான்..” என்றார் அவரும்..

“இல்லையா பின்ன.. நான் சொல்றதை கேட்டு நடந்ததுனால தான் இப்போ எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்குறான்.. அவனை அவன் இஷ்டத்துக்கு விட்டிருந்தா தறுதலையா இருந்திருப்பான்..” என,

“முரளி போதும்டா சும்மா சும்மா அவனையே சொல்லிட்டு…” என்று சுந்தரமும் அதிசயமாய் முரளியை கடிய,

முரளியின் கண்கள் சட்டென்று கூர்மையுற்று ‘என்னடா இது எல்லாம் அவனுக்கு சப்போர்ட்டா பேசுறாங்க…’ என்று சிந்திக்க,

ஹேமாவோ “என்னங்க… நம்ம போய் ஒன்ஸ் லேகாவ பார்த்தியை பார்த்துட்டு வரலாமா???!!” என்றாள்.

காஞ்சனாவோ அனைத்தையும் பார்வையாளராய் மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்க, முரளியின் மனது வேகமாய் சிந்திக்கத் தொடங்கியது. ஜப்பானில் நடந்துகொண்டு இருக்கும் விஷயம் எதுவும் அவனுக்குத் தெரியாது. அனைவரும் அறிந்தது மட்டுமே.. லேகாவிற்கு உடல்நிலை சரியில்லை பார்த்திபன் அவளோடு இருந்து கவனித்துக்கொள்கிறான். அவ்வளவே..

ஆனால் முரளியோ இவ்விசயத்தை கெட்டியாய் பிடித்து அடுத்த படிக்குப் போகவேண்டும் என்று முடிவே செய்துவிட்டான்.

வாய்புகள் வரும்வரைக்கும் எல்லாம் காத்திருக்க முடியாது.. பார்த்திபன் அங்கிருக்கும் போதே, தன்யாவை முற்றிலுமாய் விலக்கிட வேண்டும்.. பின் லேகாவோடு பார்த்திபன் திருமணம் என்பது கண்டிப்பாய் எப்பாடியாகினும் நடத்தி வைத்திடலாம்.. அந்த உறுதி முரளிக்கு இருந்தது.

லேகா இதற்கு சம்மதிப்பாளா??

பார்த்திபன் இதற்கு சம்மதிப்பானா??

இதெல்லாம் சந்தேகம் இருந்தாலும் கூட, தன்யாவை வைத்து பார்த்திபனை வலிக்க அடித்துவிட்டால், பின்பு அவனை தன் இஷ்டத்திற்கு வளைத்துவிடலாம் என்பது முரளியின் கணக்கு..

ஆனால் லேகா??

அவளை நினைத்தால் தான் கொஞ்சம் சிரமமாய் இருந்தது. இரண்டாவது திருமணம் இந்த காலத்தில் அப்படியொன்றும் பெரிய விசயமில்லை.. அதுவும் அவள் வெளிநாட்டில் இருப்பவள்.. கொஞ்சம் எடுத்து சொல்லி பேசி ஹேமாவை விட்டு என்று எல்லாம் கணக்கு போட்டு ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பார்த்த முரளிக்கு விடையாய் கிடைத்தது,

பார்த்திபன் இங்கே வருவதற்கு முன்னே தன்யா இங்கிருக்க கூடாது..

அதாவது ஒன்று துபாய்க்கு அவளின் அப்பா அம்மாவோடு சென்றுவிட வேண்டும்.. இல்லையோ திருமணம் செய்துகொண்டு கணவனோடு சென்றுவிட வேண்டும்..

இதுமட்டும் நடந்துவிட்டால் போதும்.. பின் எல்லாமே முரளியின் இஷ்டபடி தான்..

பார்த்திபன் லேகா திருமணம் முடிந்தால், அவர்கள் எப்போதும் போல் ஜப்பான் செல்லட்டும், இங்கே லேகாவின் சொத்துக்களையும் சேர்த்து இவனே அனுபவிக்கலாம்.. கேட்கும் ஆளில்லை. அப்படியே லேகா வாய் திறந்தாலும் கூட பார்த்திபனின் ரோசத்தை சற்று தூண்டிவிட்டால் போதும்..

இப்படியெல்லாம் முரளி நினைக்க, ஹேமாவோ ‘நாம் ஜப்பான் போகலாம்..’ என,

காஞ்சனா அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவர், “போயிட்டு வாங்களேன் எல்லாம்.. எங்கயுமே போறதில்லை..” என்றார்..

ஆனால் முரளியோ “இல்ல சித்தி.. கொஞ்ச நாள் போகட்டும்.. பார்த்திபன் இப்போதான் அங்க செட்டாகிருக்கான்.. அவனுக்கு அடுத்து கல்யாணம்னு ஒண்ணு இருக்கு.. அவனை குடும்பமா வச்சிட்டோம்னா அடுத்து நாங்களும் போறது வர்றது ஈசி.. இப்போ லேகா, பார்த்தி தனி தனியா இருக்காங்க.. இப்போ போய் அங்க போனா கஷ்டம்..” என,

ஈஸ்வரியோ “ஏன் ஹேமா பேசாம லேகாவை இங்கவே வர சொல்லிடேன்.. அவளுக்கென்ன அப்படியா வயசாகுது.. ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுடலாம்..” என,

ஹேமாவிற்கு இதெல்லாம் நடந்தால் சந்தோசமாக இருக்கும் என்றே தோன்றியது..

“எனக்கு மட்டும் ஆசையில்லையா அத்தை..” என்றவள் கணவன் முகம் பார்க்க,

“இப்போ கூட சொல்லு, லேகாக்கு மாப்பிள்ளை பாக்குறேன்…” என்றான் முரளி.

“கண்டிப்பாங்க… ஆனா அதுக்கு முன்ன லேகாக்கிட்ட ஒரு வார்த்தை பேசிடறேன்..” என,

“இப்போ வேணா… அவ நல்லாகட்டும் அப்போ பேசலாம்.. பார்த்திக்கும் கல்யாண வயசு தானே.. அவனுக்கும் பொண்ணு பாக்கணும்…” என்ற முரளி,

“ஏன் சித்தி தன்யாக்கு வரன் பாக்கலையா??” என்று அடுத்த தூண்டில் போட்டான்..

“அடுத்த மாசம் எங்க அண்ணா அண்ணி வர்றாங்க முரளி.. வந்து தான் இங்க தரகர் கிட்ட பேசணும்.. அவளுக்கு வொர்க் ப்ரெஷர் ஜாஸ்தி போல.. எப்படியோ இருக்கா.. பார்த்துட்டு கொஞ்ச நாள் அவளும் நானும் துபாய் கூட போகலாம்னு இருக்கேன்..” என,

‘அட அட அட..!!! இதல்லவோ நான் எதிர்பார்த்தது…’ என்று எக்களித்தான் முரளி..

இவர்களின் பேச்சு இப்படியே செல்ல, காஞ்சனா வீட்டிற்கு வந்து அப்படியே அத்தனையையும் தன்யாவிடம் ஒப்புவித்தார்..

“பசங்களுக்கு கல்யாண பேச்சு எடுத்தாலே தன்னப்போல ஒரு சந்தோசமும் ஒரு டென்சனும் வந்திடுது…” என,

தன்யாவோ எவ்வித பாவனையையும் காட்டினாள் இல்லை. அவளுக்கு நன்கு தெரியும் முரளி எதை நினைத்து இப்படி சொல்லியிருப்பான் என்று. இன்னும் கொஞ்ச நாளிலேயே ‘லேகாக்கும் பார்த்திக்கும் பேசினா என்ன??’ என்றவொரு கேள்வியை எழுப்புவான்..

பின் அதுதான் சரியான முடிவென்பதுபோல் வீட்டினில் அனைவரையும் சம்மதிக்கவைப்பான்.. பின் எல்லாம் அவனிஷ்டம் போல் நடக்கும்..

இது தானே அவனின் திட்டமும்..

நினைத்தாலே தன்யாவிற்கு நெஞ்சம் எரிந்தது.. ஆனால் முன்போல இப்போது முரளியின் மீதோ இல்லை பார்த்திபனின் மீதோ கூட எவ்வித கோபமும் வரவில்லை. அழுகை வரவில்லை.. வருத்தமில்லை..

ஒரு வெற்று நிலை..

எவ்வித உணர்வும் இல்லாத ஒரு வெற்று நிலை..

காரணம் அவளே அறியாள்..

பார்த்திபனின் செய்கைகள் எல்லாம் அவளுக்குப் பிடிக்காது போனாலும் கூட, லேகா விசயத்தில் நிச்சயம் முரளி நினைப்பது நடக்காது என்பதில் தன்யா உறுதியாய் இருந்தாலும் கூட, தன்னை இரண்டாம் பட்சமாய் பார்த்திபன் நினைக்கிறானோ என்பதில் தான் அவளின் சகலமும் அடிபட்டு போனது..

‘போடா.. உனக்கே அப்படினா.. நான் மட்டும் குறைச்சலா??!!’ என்ற எண்ணம் வந்துவிட்டது..

அதன் பொருட்டு இனி தானாக எதுவும் செய்யப் போவதுமில்லை அவனோடு பேசிடப் போவதுமில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டாள்.

‘நான் வேண்டுமெனில் இனி அவனே வரட்டும்….’

இதுவே தன்யாவின் நிலையாய் இருக்க, அவளாக பார்த்திபனோடு பேசும் முயற்சிகள் எல்லாம் எடுக்கவேயில்லை. பார்த்திபனும் மறுநாள் லேகாவை வீட்டில் அழைத்து வந்துவிட, உடன் அக்கியோவும் இன்னொரு நர்ஸும், பின் மற்ற வேலைக்கு என்று ஒரு ஹெல்பரும் உடன் வர,

பார்த்திபன் அவனின் வீடு சென்றுவிட்டான். என்னவோ அந்த அக்கியோ இருக்கையில் அவனால் லேகாவிடம் எதுவும் கேட்கவும் முடியவில்லை. லேகாவும் கூட அமைதியாகவே இருக்க, சென்றுவிட்டான்.

நர்ஸ் லேகாவோடு இருக்க, பார்த்திபன் அவனின் வீட்டிற்கு வந்துவிட போட்டது எல்லாம் போட்டபடி அப்படியே இருப்பது தெரிந்தது. மனதில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் அவனை தின்று விடாத வன்னம் இருக்க, முதலில் தன்னை தானே எதிலாவது மூழ்கடிக்கும் எண்ணம் வர. வீட்டில் அனைத்தையும் தூசி தட்டி ஒதுங்க வைக்க என்று வேலைகள் செய்துகொண்டு இருந்தான்.

ஒரு அரைமணி நேரம் கடந்திருக்கும், அனைத்து வேலைகளும் முடிய, ‘அப்பாடி…!!!’ என்று பார்த்திபன் அமர்ந்தவன், அவனின் அலைபேசியை எடுத்து பொறுமையாய் வந்திருந்த போன் கால்கள், மெசேஜ்கள் என்று ஒவ்வொன்றாய் பார்க்க,

பின் மண்டையில் சுத்தியல் கொண்டு அடித்தது போல் தன்யாவின் நியாபகம் வந்தது..

‘அச்சோ.. அன்னிக்கு என்னவோ சொன்னாளே…’ என்று எண்ணியபடி வேகமாய் அவளுக்குத் தான் அழைத்தான்.

தன்யாவின் பார்த்திபனிடம் இருந்து வரும் அழைப்பினை கண்டாள் தான். ஆனால் எடுத்து பேசிடும் எண்ணம் வரவில்லை. என்னவோ இப்போதைக்கு அவனோடு பேசாது இருந்தாலே, தான் நிம்மதியாய் இருப்போம் என்று தோன்ற, எடுக்காமல் அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தாள்.

‘தன்யா பிக் அப் தி கால்…’ என்று முனங்கியபடி, திரும்ப திரும்ப பார்த்திபன் அழைக்க, அடுத்து போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாள் தன்யா..

பார்த்திபனுக்கு இப்போது தான் உரைத்தது. தான் செய்த காரியத்தின் வீரியம்..

‘ஓ…!!!! நான் ஒரு டென்சன்ல பேசிட்டேன்.. முட்டாள் டா பார்த்தி நீ…’ என்றவன் எத்தனை முறை அழைத்துப் பார்த்தாலும் தன்யாவாக சுவிட்ச் ஆன் செய்யாது அவளின் அலைபேசி சும்மா தானே கிடக்கும்.

பார்த்திபனுக்கு தான் செய்தது எண்ணி எண்ணி இப்போது அவன் மீதே கோவம் வர, அப்படியே வெகு நேரம் அமர்ந்திருந்தான்.

காஞ்சனாவிற்கு அழைத்து பேசுவோமா என்று எண்ணியவன் நேரம் பார்க்க அது முடியாது என்றே தோன்றியது.

நாளை திரும்ப வேலைக்கு செல்ல வேண்டும். லீவ் எல்லாம் சேர்த்து நிறைய வேலைகள் அவனுக்கு இருக்கும்.. இதற்கிடையில் லேகா நிச்சயம் ஏதாவது பேசுவாள். அவளை அப்படியே விடவும் முடியாது.

லேகாவை தினமும் சென்று பார்த்திபன் பார்த்துவந்தான் தான். அவளாக எதுவும் பேச விளைந்தால் “ஸ்ட்ரைன் பண்ணாத லேகா…” என்று பேச்சினை முடித்திடுவான்.

கொஞ்சம் கொஞ்சம் அவளின் உடல் நிலையும் தேற, வீட்டினில் இருந்தே லேகா அவளின் வேலைகளை செய்ய ஆரம்பித்து இருந்தாள். அக்கியோ தினம் ஒருமுறை வந்து பார்க்க, பார்த்திபனுக்கு இப்போது தன்யாவின் நினைவு வந்து மிக மிக படுத்தி எடுத்தது..

லேகா.. அக்கியோ.. வேலை.. முரளி… இதெல்லாம் மீறி தன்யாவை அவன் சமாதானம் செய்திடவேண்டும்..

அதற்கு அவள் பேசவேண்டுமே..

அடுத்து வந்த நாட்கள் மொத்தமாய், அதாவது ஒரு வாரமாகவே தன்யா அவனோடு பேசவில்லை. அவனின் அழைப்புகள், அவனின் மெசேஜ்கள் எதற்கும் அவள் அசையவேயில்லை..

‘பார்த்தி மட்டும் இல்லைன்னா பாவம் லேகா என்ன பண்ணிருப்பாளோ…’

‘பார்த்தி தான் பார்த்துக்கிட்டானாம்…’

‘பார்த்தி ஜப்பான் போனது கூட ஒருவிதத்துல நல்லது…’

இப்படியான பேச்சுக்கள் எல்லாம் அவளின் காதில் விழ. விழ, இன்னும் இன்னும் தன்யாவின் மனது இறுகியது.

ஆனால் பார்த்திபனின் பொறுமை தான் நமக்குத் தெரிந்த விஷயம் தானே.. ஒருவாரம் அவன் பொறுமையாய் இருந்ததே பெரிய விஷயம்.. அதற்குமேல் பொறுக்காதவன், காஞ்சனாவிற்கு அழைத்து பேசினான்..

முதலில் சாதாரணமாய் பேசியவன் பின் இலகுவாய் கேட்பதுபோல் “என்ன சித்தி தன்யா எப்படி இருக்கா??” என,

“அவளா பார்த்தி.. என்னவோ பிள்ளைக்கு நேரம் சரியில்ல போல.. எப்படியோ இருக்கா.. கேட்டாலும் ஒன்னும் சொல்றதில்லை.. வேலைக்கு போயிட்டு வந்தா ரூம்ல அடைஞ்சிக்கிறா…” என,

பார்த்திபனின் மனது உறுகித்தான் போனது..

“ஓ…!!! அப்படியா எங்க கொடுங்க பேசலாம்..” என்று சாதாரணம் போல் சொல்ல,

“இரு கொடுக்கிறேன்…” என்று காஞ்சனாவும் தன்யாவை அழைத்து “இந்தா பார்த்தி பேசுறான்..” என, சட்டென்று அவளுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை.

காஞ்சனா முன் மறுக்க முடியாது.. மௌனமாய் அலைபேசியை வாங்கியவள் இரண்டு முறை “ஹலோ… ஹலோ…” என்றுவிட்டு,

“கட் ஆகிடுச்சு சித்தி..” என்றுசொல்லி அவளே அழைப்பை துண்டித்து போனை காஞ்சனாவிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

அவள் சொன்னது எல்லாம் பார்த்திபன் கேட்டுக்கொண்டு தான் இருந்தான் “ஹேய் பேசு டி…” என்று அவன் சொன்னதும் அவளுக்குக் கேட்டது தான்..

ஆனால் அவள் என்ன பேசுவாள்???

ஒன்றுமே அவளுக்குத் தெரியவில்லை..

எப்படி இருக்கிறாய்?? என்று கேட்கக் கூட அவளுக்கு முடியவில்லை. அவனிடம் பேசினால் எங்கே தான் ஒன்ருமேயில்லாது ஆகிடுவோமோ என்ற பயம் கூட தன்யாவிற்கு வந்துவிட்டது.

பார்த்திபனோ விடாது அவளின் அலைபேசிக்கு இப்போது அழைக்க, இவன் விடாது அழைப்பான் என்றெண்ணி “ம்ம்ச் என்ன வேணும்…” என்றாள் கடுப்பாகவே..

“என்ன வேணும்.. நீ பேசணும்…”

“ஏன் பேசணும்…???”

“இதென்ன கேள்வி தன்யா…” என,

“எனக்கு பேச எதுவுமில்ல பார்த்தி.. பட்.. உனக்கு அங்க நிறைய வேலை இருக்குமில்லையா.. போய் அதைப் பாரு..” என்றாள் பட்டென்று..

“ஹேய்…!!! லூசு….” என்று பார்த்திபன் எதுவோ சொல்லவர,

“ஜஸ்ட் ஸ்டாப் இட் பார்த்தி… போதும்.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. பட் ஐ நீட் எ ஸ்பேஸ்…” என்று தன்யா இறுகிய குரலில் சொல்ல, பார்த்திபனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

‘என்ன ஸ்பேஸ்..??’ என்று யோசிக்க அதையே கேட்கவும் செய்தான்..

“ஏன் உனக்கு புரியலையா???!!”

“இல்லை சொல்லு…” என்றவனின் குரலிலும் மாறுபாடு..

“நீ உன் வேலை பாரு.. நான் என் வேலைப் பாக்குறேன்.. அவ்வளோதான்..”

“ஓ… அப்புறம்??!!!”

“அவ்வளோதான் பார்த்தி…” என்றவளுக்கு அவளையும் அறியாது கண்கள் கலங்க,

‘நோ தன்யா இனி நீ அழவே கூடாது..’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள் “லுக் பார்த்தி.. உனக்கு புரியும் நினைக்கிறேன்.. சோ இனிமே கால் பண்ணாத.. டோன்ட் டிஸ்டர்ப் மீ..” என்றவள் வைத்துவிட்டாள்..

ஆனால் அவனுக்கு நிஜமாகவே புரியவில்லை. இத்தனை நாள் கழித்து பேசுகிறோம் இவள் ஏன் இப்படி பேசுகிறாள் என்றே குழம்பிக்கொண்டு இருந்தான்.

குழப்பங்கள் ஆயிரம் வந்தாலும், தெளிவுகள் நம்மிடம் தானே இருக்கின்றன??!!

தனக்குள் தேடி தெளிவுருவானா பார்த்திபன்??   

                          

      

    

      

     

                   

         

 

   

        

 

Advertisement