Advertisement

பார்த்துவிடு கொஞ்சம் – சரயு..

                             அத்தியாயம் – 1

“போதும்… எல்லாமே போதும்.. இங்கிருந்து கிளம்பிடு தன்யா…” என்று தன்யாவின் மனது பெரும் சப்தமிட்டுக்கொண்டு இருக்க,

அவளோ தனக்குள்ளே இப்படியொரு இத்தனை போராட்டம் நடக்கிறது என்பதனை எதுவுமே வெளிக்காட்டாது, அவளின் விம்மல் கேவல் எல்லாம் தொண்டை குழியிலேயே புதைத்து, கண்களில் இதோ இதோ இப்போதே நான் வருகிறேனே என்று வழிந்திட காத்திருக்கும் அந்த சூடான திரவத்தையும் இமைகளுக்குள்ளே அடக்கி அப்படியே அமர்ந்திருந்தாள்..

சிலை… சிலையென தான் அமர்ந்திருந்தாள்..

‘சிலையாகிடலாமோ…’ என்றுதான் அவளுக்கு அப்போது தோன்றியது..

எதுவும் பிடிக்கவில்லை.. யாரையும் பிடிக்கவில்லை.. யாரோடும் பேசவும் பிடிக்கவில்லை.. யாரையும் பார்க்கவும் பிடிக்கவில்லை.. எல்லாம் விட அந்த நொடி அவளையே அவளுக்குப் பிடிக்கவில்லை.

‘தன்யா…’ என்று யாரேனும் அவளை அழைத்தால் கூட எரிச்சலாய் வந்தது..

‘ஏன் கூப்பிடுறீங்க.. எதுக்கு கூப்பிடுறீங்க.. என்னை இப்படியே விடுங்களேன்..’ என்று கத்திட வேண்டும்போல் இருந்தது..

நிதம் நிதம் மனது போட்டு பிசைந்து கொண்டு இருந்தது.

அவளால் ஒருநிலையில் இருக்க முடியாது போகையில் அவள் தன்னை தானே எப்படி சமன் செய்வாள்.

‘நான் செய்தது சரியா???’

இந்த கேள்வி அவளை போட்டு பாடாய் படுத்தி எடுக்க, தன்யா தன் திடம் மொத்தத்தையும் தொலைத்துவிட்டு, தன் மனது எதை தேடுகிறது, தனக்கு எது வேண்டும் என்பதை கூட உணர்ந்துகொள்ள தெரியாது என்னென்னவோ ஆகிப்போனாள்..

ஆகமொத்தம் அவள், அவளாய் இல்லை. 

இப்படியொரு நிலை வரும் என்று அவளிடம் யாரேனும் சொல்லியிருந்தால் நம்பியிருப்பாளோ என்னவோ?? ஆனால் இப்போது…

நம்பித்தான் ஆகவேண்டும்.. வேறு வழியில்லை.. வழியே இல்லை.. இருந்ததை அவளே அடைத்துவிட்டாள்..

‘டம்…’ என்று.. ஒரே போடாய்… நீ எனக்கு வேண்டாம் என்று…

ஆனால்… ஆனால்… அடைத்ததன் வலி அவளின் இதயத்திலும் வந்து இதோ நின்றுவிட்டதே.. இனி என்ன செய்வது??? வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாமல் எல்லாம் எதுவும் உருளவில்லை.. நெஞ்சில் அப்படியே அடைத்து நின்றுவிட்டது..

எதுவுமே புரியவில்லை..

இரண்டு கால்களையும் மடக்கி, அதிலே முகம் வைத்து, கண்கள் சிவந்து, முகம் சிவந்து அப்படித்தான் அமர்ந்திருந்தாள்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாய்.. அதற்கும் மேலாக கூட இருக்கும்..

கத்தி அழ வேண்டும் போலிருந்தது.. முடியவில்லை..

எழுந்து அவனிடமே ஓடிவிட வேண்டும்போல் இருந்தது.. அதுவும் இனி முடியாது.. காரணம் இன்றிலிருந்து அவன் யாரோ. அப்படித்தான் தன்யா சொல்லிவிட்டு  வந்தாள் பார்த்திபனிடம்..

‘நீ எனக்கு வேணாம் பார்த்தி…’ என்று சொல்லி, அவனை விலக்கி, தானும் விலகி  வந்தாலும் கூட, இதோ இதோ இப்போதும் கூட தன்யாவின் மனது பார்த்திபனிடமே தஞ்சமடைய தவிக்கிறது..

அது முடியாதெனும்போது… அவள் இப்படி இருந்திட மட்டும் தானே முடியும்…

அழுகையை அடக்கி அடக்கி தொண்டை குழி வலி எடுத்தது..

‘இதெல்லாம் உனக்குத் தேவையா.. அவன் கேட்டப்போவே பேசாம சரி சொல்லிருக்கலாமே..’ என்று புத்தி சொல்ல, கண்களிலில் மழுக்கென்று ஒரு சிறு நீர் உருண்டை..   

கேட்டான் தான்.. “ஜஸ்ட் எனக்கு ஒரு டூ மன்த்ஸ் டைம் கொடு தன்யா..” என்று..

அவன் கேட்கையில் அவனின் பார்வையில் அப்படியொரு யாசிப்பு இருந்தது அவளும் கண்டாள் தானே..

‘சரி சொல்லிடு..’ என்று அப்போது மனது சொல்ல,

அதனை இறுக்கிப் பிடித்தவள் “டூ மன்த்ஸ்?? இந்த டூ மன்த்ஸ்ல என்ன செய்ய போற பார்த்தி நீ??” என்றாள் கொஞ்சம் விட்டேத்தியாய்..

“என்னவோ செய்றேன்.. நான்தான் சொல்றேனே.. என் பேச்சுல நம்பிக்கை இல்லையா???” என்றவனுக்கு இப்போது சிறிது கோபமும் கூட..

‘என்னை நம்பாமல் இப்படி செய்கிறாளே..’ என்று..

“ஹ்ம்ம்.. நம்பிக்கை இல்லைன்னா நீ கால் பண்ணதும் இதோ இப்படி வந்து நிப்பேனா??” என்றாள் இவளும் முறைத்து.

“பின்ன ஏன் தன்யா இப்படி பேசுற நீ… நீ பண்றது கொஞ்சமாவது சரின்னு உனக்கு தோணுதா இல்லையா??? யோசி..” என்று பார்த்திபன் அவளின் தோள்களை பற்றி உலுக்க,

மனது இரண்டாய் பிரிந்து ஒன்றிருக்கு ஒன்று அதனுடனே போராட்டம் அவளுக்கு அப்போது.. பேசாது பார்த்திபன் சொல்வதற்கு சரி என்று விடுவோமா என்றும்.. இன்னொரு புறமோ ‘அப்படி மட்டும் பண்ணா அடுத்து பார்த்தி என்ன செய்வான்.. எல்லார் முன்னாடியும் அவன்தானே தலை குனியனும்..’ என்றும்..

அதிலும் முக்கியமாய் அவனின் அண்ணன் முன்பு…

அனைத்திற்குமே பார்த்திபனை மட்டம் தட்டும் முரளி..

என்னவோ இருவருக்கும் சிறு வயதில் இருந்தே ஆகாது.. வயது வித்தியாசம் இருவருக்கும் இடையில் பத்தாண்டுகள். ஒருவேளை இதுவும் ஒரு காரணமோ…?? இருக்கலாம்..

எப்போதுமே முரளியின் வாயில் இருந்து வருவது “நான் சொல்றதை கேளு பார்த்தி…” என்பது மட்டும்தான்..

இல்லையோ “அறிவிருக்கா உனக்கு..” என்றுதான் முதலில் முரளிக்கு வாயில் வரும்..

தன்யாவுமே எத்தனை முறை இதனை நேரில் பார்த்திருக்கிறாள்.. அவளுக்கும் ஆரம்பத்தில் இருந்து இதெல்லாம் பிடிக்காது தான். ஆனால் சொல்லும் உரிமை இல்லையே.. அவளின் உரிமை எல்லாம் பார்த்திபன் அளவில் தானே..

“நீ மட்டும் என் லைப்ல வரலைன்னா நான் என்னாகிருப்பேன் தெரியலை தன்யா…” என்று ஆழ்ந்து ஒலிக்கும் பார்த்திபனின் குரல் இப்போதும் அவளின் செவிகளில் கேட்டது..

கண்களை இறுக மூடிக்கொண்டாள்..

“நோ நோ… எதையும் நினைக்காத… தன்யா கிளம்பிடு.. இனிமே நீ இங்க இருக்காத.. நீயும் கிளம்பி போயிடு…” என்று நினைக்கையில், அவளின் விழிகள் தூரத்தில் தெரியும் வானை தான் கண்டது..

கரிய நிறமாய், அங்கொன்றும் இங்கொன்றும் நட்சத்திர மினுமினுப்பை கொண்டு, வானம் நிசப்தமாய் இருப்பது போலிருந்தது அவளுக்கு.. வானம் மட்டுமில்லை அவளை சுற்றியும் ஒருவித நிசப்தமே.. வெறுமை சூழ்ந்திருக்கும் நிசப்தம்..

அந்த இரவு நேரத்தில் மொட்டை மாடியில், எத்தனை நேரம் அமர்ந்திருப்பாள்??

யாராவது வந்து தன்னை திட்டினால் கூட நன்றாய் இருக்கும் போல் இருந்தது..

ஆனால் யார் வருவர்??

அப்பா, அம்மா இருவருக்கும் துபாயில் வேலை.. இவளுக்கு அங்கே ஒத்துவரவில்லை.. பள்ளி வரைக்கும் விடுதி வாசம்,  பின் கல்லூரி சேர்க்கையில், இங்க சொந்த வீட்டிலேயே இருக்கிறேன் என்றாள்..

“நீ மட்டும் என்ன செய்வ தன்யா??” என்று அப்பா அம்மா இருவருமே குரல் உயரத்த,

“அப்போ எனக்காக யாராவது இங்க இருங்க..” என்று இவளும் குரலை உயர்த்தினாள்.

“விளையாடுறியா நீ.. எங்க ரெண்டு பேர் ஜாப்ஸ் தெரிஞ்சும் இப்படி பேசுற.. தனியா வீட்ல எல்லாம் விட முடியாது.. ஹாஸ்ட்டல் இரு இல்லையா துபாய் வா..”

இதுவே அவர்களின் முடிவாய் இருந்தது.. பின்னே, பல லட்சங்களில் சம்பளம் இருவருக்கும்.. இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் அங்கே இருந்தால் கூட போதும் வாழ்நாள் முழுமைக்கும் ‘ஹாயாக..’ இருக்கலாம்.. அப்படியொரு வாய்ப்பு.. தன்யா அங்கே இருந்தாள் என்றாள் அவளுக்கும் அங்கேயே ஒரு வேலையை வாங்கிடலாம்..

ஆனால் அவளோ வரவே மாட்டேன் என்று பிடிவாதம்.. என்னவோ முதலில் போய் இருந்தாள். ஆனால் அது அவளுக்கு மனதிற்கும் பிடிக்கவில்லை.. உடலுக்கும் பிடிக்கவில்லை.. விளைவு விடுதி வாசம்.

இப்போதோ பேசாது அங்கேயே இருந்திருக்கலாமோ என்றுதான் நினைத்தாள் தன்யா..

கல்லூரிக்கென்று இதோ அவர்களின் வீட்டில் வந்து தங்க ஆரம்பிந்து ஐந்தாண்டுகள் ஆனது. நான்காண்டுகள் படிப்பு, அதன்பின் ஓராண்டாய் அவளுக்குக் கிடைத்த வேலை.. அவளுக்கு வீட்டினில் துணையாய், அவளின் அப்பாவின் தங்கை காஞ்சனா..

“அத்தை நிஜமாவா சொல்றீங்க..” என்று அவர் வந்து உடன் இருக்கிறேன் என்றதும் அப்படி சந்தோசித்தாள்..

“பின்ன நானும் தனியாதானே இருக்கேன்.. யார் இருக்கா.. நான் வர்றேன்..” என்று அவர் தனியாய் இருந்த பிளாட்டை காலி செய்துவிட்டு வந்து இவளோடு தங்க, பார்த்திபன் வேராரும் இல்லை,

காஞ்சனாவின் பெரிய மைத்துனர் மகன். அதாவது அவரின் இறந்துபோன கணவரின் அண்ணன் மகன்.. காஞ்சனாவின் கணவர் இறந்து பல வருடங்கள் ஆகிட, தன்யாவின் அப்பாவும் அம்மாவும் தங்களோடு வர அழைத்தனர் தான்.. காஞ்சனாவும் அவர்களோடு துபாய் சென்று இருந்தார் தான். ஆனால் அவருக்கும் தன்யா போலவே அங்கே ஒட்டவில்லை.

இங்கே ஒரு வேலையை தேடிக்கொண்டு தனியாய் இருந்துகொண்டார்..

இத்தனைக்கும் பார்த்திபனின் அப்பா அம்மா கூட தங்களோடு வந்து இருக்கும்படி அழைத்தனர் தான்..

“அது சரியா வராது.. அப்பப்போ நான் வந்து போயிக்கிறேன்..” என்றுவிட்டார் காஞ்சனா..

ஆனால் இப்போது அவரே வந்து இருக்கிறேன் என்றதும் தன்யாவிற்கு சந்தோசம் தாங்கவில்லை..

இவர்கள் இங்கே குடிவர, இந்த வீட்டிற்கு அப்படியே அடுத்த வீடுதான் பார்த்திபனின் வீடு.. இவர்கள் வருவது தெரிந்ததும் “நாங்க கூப்பிட்டப்போ எல்லாம் வரலை சித்தி…” என்று குறைபட்டான் பார்த்திபன்..

“அதுக்கென்னடா இப்போ வந்தாச்சுல..” என்று காஞ்சனா சொல்ல, கண் மூடி திறப்பதற்குள் ஐந்தாண்டுகள் ஓடிவிட்டது..

அதிலும் கடைசி மூன்றாண்டுகள் காதலாகி.. கசிந்துருகி.. பின் கண்ணீர் சிந்தி.. இதோ இதோ காதலும் முற்றுபெற்று முடிந்தே போனது..

அவனும் இல்லை..

சென்றுவிட்டான்.. விமானம் ஏறி…

‘மாட்டேன் மாட்டேன்..’ என்றவனை வம்படியாய் இவளே தான் செல்ல வைத்தாள்..

“ப்ளீஸ் தன்யா.. நான் சொல்றதையும் கேளேன்..” என்று இதோ இதே மொட்டை மாடியில் நின்றுதான் கத்தினான் பார்த்திபன்..

நரம்பு புடைக்க, கோபமும் ஒருபுறம் காதல் ஒருபுறமாய் அவனின் அந்த கத்தல் இன்னமும் இவளின் கண்முன்னே வந்து போனது..

‘பார்த்தி….’ என்று உதடுகள் அவனின் பெயரை உச்சரிக்க, இதழ்கள் நடுங்கத் தொடங்கின..

‘முட்டாள்… முட்டாள்… பண்ணது அத்தனையும் நீ.. இப்போ உக்காந்து அழுது என்ன செய்ய…’ என்று அவளுக்கு தன் மீதே கோபம் எழ, மெதுவாய் திரும்பி பார்த்திபனின் வீட்டினை பார்த்தாள்..

இருட்டாய் இருந்தது. யாருமில்லை.. எல்லாரும் ஏர்போர்ட் சென்றிருந்தனர்.. காஞ்சனா கூட சென்றிருந்தார்..

“நீ வர்றியா??!!!” என்று கேட்டதற்கு வேகமாய் இல்லை என்று தலையை ஆட்டி மறுத்துவிட்டாள்..

ஆனால் போகவேண்டும் போல் ஆசையாகவும் இருந்தது.

“ஹே தன்யா நீயும் வாயேன்..” என்று காரில் ஏறுகையில் முரளியின் மனைவி ஹேமா அழைக்கையில்,

“ஒரு கார்ல எத்தனை பேர்??” என்று முரளி சொன்னதும் இவளின் காதில் விழுந்தது தான்..

பார்த்திபனோ இவளின் முகத்தினையே பார்க்கவில்லை.. அவனுக்கு அப்படியொரு கோபம் இருந்தது.. அவள் என்றில்லை வீட்டினர் அத்தனை பேரின் மீதும் கோபம்.. முக்கியமாய் முரளி மீது அதைவிட மிக மிக முக்கியமாய் தன்யா மீது..

 “தன்யா.. லாஸ்ட்டா உனக்கு ஒரு சான்ஸ்.. நல்லா யோசிச்சு சொல்லு..” என,

“நான் நல்லா யோசிச்சாச்சு பார்த்தி.. உங்க வீட்ல என்ன சொல்றாங்களோ அதை கேளு.. அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது…” என்றாள் எங்கோ பார்வையை வைத்து..   

‘நீ கூடவா இப்படி??’ என்று அவளை கேட்காமல் கேட்ட அவனின் கண்களை இவள் சந்திக்க மறுத்தாளே..

“வீட்ல சொல்றது எல்லாம் இருக்கட்டும்.. நீ முதல்ல என்னைப் பார்த்து பேசு.. நிஜமா உன் மனசுலயும் இப்படிதான் இருக்கா?? அப்போ.. அப்போ என்னை இத்தனை நாள் என்னன்னு டி நினைச்ச.. பார்த்தி பார்த்தின்னு பேசுறப்போ எல்லாம் நல்லா குளு குளுன்னு இருந்ததா???” என்று அவன் வெறுப்பாய் கேட்கையில், காதுகளை பொத்திக்கொண்டாள்..

“இதுக்கு மேல ஒருவார்த்தை பேசாத பார்த்தி…” என்று..

“ஏன்..?? ஏன்?? பேசுவேன்.. அப்படித்தான் பேசுவேன்.. போன மாசம் கூட சொன்னியே நீ இல்லாம என்னால இருக்க முடியாது பார்த்தின்னு.. இப்போ எப்படி மேடம் இருப்பீங் ???” என்று அவனின் நக்கல் பார்வை அவளை கொல்லாமல் கொல்ல,

“ஷ்…!!! பார்த்தி.. ப்ளீஸ்… இந்த பேச்செல்லாம் நமக்குள்ளே வேண்டவே வேணாம்.. ப்ளீஸ்…” என்று சொல்லி தன்யா அவளை கடந்து போக நினைக்க,

அவளை பிடித்து இழுத்தவன், சுவரில் சாய்த்து வைத்து,

“அவ்வளோ சீக்கிரம் நீ என்னை தாண்டி போயிடுவியா??” என்றான், தன் உடல் மொத்தமும் அவளின் மீது சாய்த்து..

“ம்ம்ச் என்ன பார்த்தி இதெல்லாம்.. ஏன் இப்படி பீகேவ் பண்ற?? முதல்ல தள்ளு.. யாராவது பார்த்தா என்னாகும்..” என்று தன்யா அவனைத் தள்ள

“எனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை.. யார் பார்த்தாலும் சொல்லுவேன்.. இவளும் நானும் லவ் பண்ணோம்.. இப்போ வேணாம் சொல்றா.. என்னை போ சொல்றான்னு..” என்று கத்தினான்..

“அய்யோ..!!! ஏன் இவ்வளோ சத்தம் போடுற பார்த்தி…” என்று தன்யா அதட்ட,

“அப்படித்தான் டி போடுவேன்.. அப்படித்தான் கத்துவேன்.. எல்லாரும் என்ன நினைச்சீங்க.. ஹா..” என்று அவன் இன்னமும் கத்த,

“ம்ம்ச் இப்போ என்னதான் செய்யணும் சொல்ற நீ…” என்று அவள் அவனுக்கும் மேலே கத்தினாள்.

“எல்லாத்தையும் நான் சால்வ் பண்றேன்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு தன்யா.. நீயே என்னை புரிஞ்சுக்காட்டி… அப்.. அப்புறம் நான் என்ன செய்ய…” என்று அவளின் கன்னம் பற்றி பார்த்திபன் கேட்கையில், தன்யாவிற்கு உள்ளம் உருகித்தான் போனது..

இதயம் தடக் தடக் என்று அடிக்க, அப்படியே தன் கன்னம் பற்றியிருக்கும் அவனின் கைகளை இறுக பற்றிக்கொண்டு , அப்படியே அவனை இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருக்க, மெதுவாய் அவளின் கரமும் அவனின் கரத்தினோடு  கோர்த்துக்கொண்டது தான்..

அவளின் ஸ்பரிசம் உணரவுமே பார்த்திபன் முகத்தில் ஒரு பெருமித புன்னகை..

‘இவள் எப்போதும் என்னைவிட்டு போய்விட மாட்டாள்..’ என்று..

அது அவனின் கண்களிலும் தெரிய,

“தன்யா….” என்று ஆழ்ந்து அழைத்தவன், அப்படியே அவளின் நெற்றியில் இதழ் பதிக்க, இப்படியே இருந்திடத்தான் தோன்றியது தன்யாவிற்கு..

மனது அப்படியே பார்த்தியோடே லயிதிட ஆசைப்பட,

“அவனை நம்புறியா நீ… கேவலம்… இருந்த வேலையையும் விட்டு வந்து நிக்கிறான்.. அறிவில்லையா தன்யா உனக்கு.. ஹீ இஸ் அ வேஸ்ட் பெல்லோ….. எதுக்கும் லாயக்கு பட மாட்டான்..” என்ற முரளியின் வார்த்தைகள் அவள் மனதினில் அமிலமாய் மீண்டும் ஒலித்தது..

சட்டென்று அறுந்தது அந்த நொடி.. அந்த நெருக்கம்….. அவளின் அந்த உருக்கம் எல்லாமே..

“இது வேண்டாம் பார்த்தி….” என்று அவனின் நெஞ்சில் கை வைத்து அவனை பின்னே தள்ளினாள் மெதுவாய்

சொன்னதும் மெதுவாய் தான்.. அழுத்தமாய் திருத்தமாய் சொல்ல அவளுக்கு தைரியம் வரவில்லை. ஆனாலும் சொல்லித்தானே ஆகவேண்டும்… தன்யாவின் நெருக்கத்தில், அனைத்தையும் மறந்து நின்றிருந்தவன்,

மீண்டும் அவள் சொன்னதையே சொல்ல “ம்ம்ச் என்ன தன்யா…” என்றான் எரிச்சலாய்..

ஆனாலும் அவன் விலகினான் இல்லை.. விலக மனமேயில்லை.. எப்படி முடியும்?? பார்த்திபனால் தன்யாவை விட்டு தள்ளி நிற்க முடியுமா?? அவள் வேண்டாம் என்றாலும் அவனால் அதற்கு சம்மதிக்க முடியுமா??

ம்ம்ஹும் வாய்ப்பே இல்லை..

யார் என்ன சொன்னாலும், வீட்டில் என்ன நடந்தாலும்.. தன்யாவே அவனை வேண்டாம் என்றாலும் கூட அவனுக்கு தன்யா வேண்டும்..

அவள் மட்டுமே அவனை வாழச் செய்பவள்..

அவள் மட்டுமே அவனை உயிர்ப்புடன் வைத்திருப்பவள்..

அவள் மட்டுமே அவன்..

“ம்ம்ஹும் தன்யா.. நோ.. நீயே சொன்னாலும் நான் உன்ன விட்டு போகவே மாட்டேன்..” என்றபடி பார்த்திபன் மீண்டும் அவளை அணைக்க முயற்சிக்க,

“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா பார்த்தி..” என்றாள் எரிச்சலாய், ஒருவித மட்டம் தட்டும் குரலில்.

அதாவது முரளி எப்படி பார்த்திபனிடம் பேசுவானோ அதே குரலில்.. எப்போதுமே இவ்விதமான குரல் பார்த்திபனுக்குப் பிடிக்காது.. அறவே ஆகாது..

ஆனால் வேறு வழியில்லாது அதையே, அதுபோலவே தானும் பேசவேண்டிய நிலை தன்யாவிற்கு..

“தன்யா…” என்று பார்த்திபன் அதிர்ந்து பார்க்க,

“தன்யா தான்… எத்தனை தடவை சொல்றது… அறிவில்ல உனக்கு.. சும்மா என் பின்னாடியே வந்தா உனக்கு எல்லாம் கிடைச்சிடுமா என்ன?? போ.. போய் உருப்படுற வழிய பாரு..”  என்றபடி தன்யா கையை உதறி தள்ளி நிற்க,

அவனோ மௌனமாய் நின்றான்..

“என்ன பாக்குற பார்த்தி.. இப்படி பார்த்துட்டா?? போதுமா?? கொஞ்சம் ப்ராக்டிகலா தின்க் பண்ணு.. வீட்ல சொல்றது உன்னோட நல்லதுக்கு தான்..” என,

“ஓ..!! அப்போ நான் கேட்கிறதுக்கு ஆன்சர் பண்ணு..” என்றான் அவளையே பார்த்து..

‘என்ன கேட்க போறானோ??!!’ என்று தோன்ற, “என்ன??” என்றாள் அலட்சியமாய்..

“இந்த முடிவு… அதாவது.. உன்னோட… இந்த எதுவுமே வேணாம்னு சொல்ற முடிவு?? எதுவரைக்கும்… அதை மட்டும் கிளியர் பண்ணு..” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுக்க,

அவளின் மனது அப்படியொரு வேதனை கண்டது..

‘பார்த்தி மட்டும் ஜப்பான் போனான்.. அவனுக்கு அப்படியொரு பியூச்சர் இருக்கு.. அவனோ லைப் எப்படி செட்டில் ஆகும் தெரியுமா? அதெல்லாம் எங்க உனக்கு தெரியப் போகுது.. துபாய்ல அழகா என்ஜாய் பண்றது விட்டு இங்க உக்காந்து மாச சம்பளம் வாங்கி குப்பை கொட்ற.. உன்னோட சேர்ந்து என் தம்பியும் குப்பை கொட்டனும்னு நினைக்கிற…’ என்று முரளி பொறுமையாக சொன்னாலும், அவன் குரலில் முகத்தில் தெரிந்த ஏளனம் அவளுக்கு இப்போது அப்படியொரு கோபம் கொடுத்தது..

ஆனால் அதை அப்போதும் சரி இப்போதும் சரி எதுவும் அவளால் காட்டிக்கொள்ள முடியாதே..

“ஏன் உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா??”

“ஆமா புரியாது.. ஏன் திரும்ப சொல்ல உனக்கு அவ்வளோ கஷ்டமா இருக்கா??” என்றான் அவளை போலவே..

“வேணாம்னா வேணாம்னு தான் அர்த்தம்.. அது இப்போதைக்கா இல்ல எப்பவுமேவா அதெல்லாம் சொல்லி எதுவும் ஆகப்போறதில்லை.. ஆனா நமக்குள்ள இருக்க எதுவும் இனி வேணாம்.. நீ உன் லைப் பார்த்துட்டு, உன் வீட்ல சொல்றதை கேட்டிட்டு போ..” என,

இமைகளை சுறுக்கி அவளையே பார்த்து நின்றவன், “போ போன்னு சொல்றீங்க தானே எல்லாம்.. போறேன்.. போய் தொலையுறேன்.. ஆனா கண்டிப்பா இங்க திரும்ப வரமாட்டேன்..” என்றுவிட்டு போய்விட்டான்..

இதுதான் அவன் இறுதியாய் சொன்ன வார்த்தைகள்… இதோ இன்று கிளம்பியும் விட்டான்.. ஆனால் இவள்தான் கிடந்தது தவிக்கிறாள்..

காதலில் சில நேரம் அர்த்தங்களும், அனர்த்தங்களும் ஒரே ரூபத்திலேயே இருக்கும்..!!

                             

   

     

Advertisement