அத்தியாயம் – 5
ராதிகாவிற்கு எப்போதடா நிரஞ்சனன் வருவான் என்றிருந்தது. அவனோடு பேச ஆயிரம் இருந்தது அவளுக்கு. அவளைப் பார்த்த சுந்தரி கூட , “என்ன ராதிம்மா??” என்றார் வந்த சிரிப்பை விழுங்கி..
“இல்லத்தை நேரமாச்சா அதான்…” என்றவளுக்கும் லேசாய் அசடு வழிய,
“ம்ம் ம்ம் அண்ணி… ஒரு போன் போட்டு கூப்பிடுறது…” என்றாள் நித்யாவும் கிண்டலாய்.
“ம்ம்ம் பண்ணிட்டேன்.. ஆனா எடுக்கலை…” என்று முகத்தை சுருக்க,
“வந்திடுவான் ராதிகாம்மா…” என்றார் குணசேகரும்.
“சரிங்க மாமா….” என்றவள் அப்போதும் வரவேற்பு கூடத்திற்கும் வாசலுக்குமாய் அலைய, வீட்டினர் ஒவ்வொருவரும் மெல்ல மெல்ல உறங்கச் சென்றிருந்தனர்.
இவள் இன்னும் நடப்பது கண்டு, சுந்தரியோ “வந்துடுவான்.. நீ போய் தூங்கு..” என்றுவிட்டு செல்ல, அவளுக்கோ போக மனமில்லை..
‘சரி…’ என்றவள், அப்படியே ஹாலில் அமர்ந்திருந்தாள்..
நேரம் தான் சென்றுகொண்டு இருந்ததே தவிர இன்னும் அவன் வருவதாய் காணோம். திரும்ப ஒருமுறை அழைத்துப் பார்க்க, எடுப்பதாகவும் இல்லை. திருமணமாகி இத்தனை நாட்களில் ராதிகா நிரஞ்சனனை இத்தனை தேடியிருக்கிறாளா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் வீட்டினருக்குக் கூட அது எளிதாய் கண்டுகொள்ள முடிந்தது.
தான் வேலைக்கு செல்வது பற்றி அவனிடம் பேசியபிறகு, அதன் பின் அவனிடம் அதைப்பற்றி பேசவுமில்லை, அவனும் அதைப்பற்றி கேட்கவுமில்லை. கேட்பானோ என்ற ஆவல் எட்டிப்பார்த்தது தான். ஆனால் அவன் வீட்டிற்கு வருவதே இரவு வெகு நேரம் கழித்துத்தான் என்பதால் ராதிகாவும் அவனை வேறெதுவும் சொல்லி தொந்திரவு செய்யவில்லை.
ஆனால் இன்று??
அதுவும் அவளுக்கு வேலை என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்ட இன்று.. கணவனிடம் சொல்லாமல் அதனைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா என்ன?? ஒவ்வொரு நொடியும் அவளின் சந்தோசத்தை கணவனிடம் பகிர்ந்துகொள்ள அத்தனை பரபரத்தது அவளுள்ளம்.
‘அவர்க்கிட்ட பேசிட்டு, அத்தை மாமாக்கிட்டவும் பேசிடனும்…’ என்று கழுத்தில் இருந்த சங்கிலியை சுவை பார்த்துகொண்டு இருந்தவளுக்கு, நிரஞ்சனின் கார் சத்தம் கேட்க, வேகமாய் எழுந்து வெளியே சென்றாள்.
ஓடினாள் என்றுதான் சொல்லுதல் வேண்டும். அதற்குள் அவனும் உள்ளே வந்துகொண்டு இருக்க, அவனைப் பார்த்து அப்படியே நின்றவளிடம்,
“தூங்கலையா நீ?? ஏன் இப்படி அறக்க பறக்க வந்து நிக்கிற ராதிகா..” என்றபடி உள்ளே செல்ல,
“அது உங்கக்கிட்ட பேசணும் அதான்..” என்றவளும் பின்னோடு சென்றாள்.
“ம்ம் என்ன விஷயம்??” என்றவனோ கேட்டபடி அப்படியே குளியலறை செல்ல, இவளோ அறையிலேயே நின்றாள் அவன் வரும்வரைக்கும்.
பத்து நிமிடங்கள் கழித்து அவன் வெளிவர, “என்னங்க எனக்கு வே…” என்று ஆரம்பிக்கவில்லை,
“சாப்பிட எடுத்து வை ராதிகா.. செம டயர்டா இருக்கு…” என்று சொல்லவும், காற்று போன பலூனாய் ராதிகாவின் முகம் சுருங்கினாலும்,
‘ச்சே பசி போல…’ என்று அப்போதும் தனக்குள்ளே செல்லிக்கொண்டு, வேகமாய் அவனுக்கு உண்ண எடுத்து வைக்கப் போனாள்.
நிரஞ்சனனுக்கோ அவனுக்கிருந்த அலுப்பில், ராதிகா அவளோடு பேச காத்திருந்தாள் என்பதே மறந்துபோனது என்றுதான் சொல்லவேண்டும். வேண்டுமென்றே அவன் அதனை மறக்க நினைக்கவில்லை, அவன் சிந்தனைகளில் அவனின் அலுவலக பணியே இருக்க, ராதிகா சொன்ன விஷயம் காற்றோடு போனது.
நிரஞ்சனனுக்கு தட்டில் எடுத்து வைத்தபடியே “என்னங்க…” என,
“ம்ம்…” என்றபடி அவனும் உண்ண,
“எனக்கு.. வேலை கிடைச்சிடுச்சு…” என்று சந்தோசமாக அவன் முகம் பார்க்க,
“ஓ..!! அப்படியா?? சந்தோசம்…” என்றவன் அதற்குமேல் வேறெதுவும் காட்டிக்கொள்ளவில்லை..
‘எங்கே வேலை??’
‘என்ன வேலை??’
‘என்ன சம்பளம்??’
‘எப்போ போகணும்??’
இதெல்லாம் அவன் கேட்பானா என்று அவள் பார்த்திருக்க, அவனோ உண்ணுவது மட்டும்தான் என் கடமை என்றிருக்க, பொறுத்து பொறுத்துப் பார்த்தவள், அவளே இந்த கேள்விகளுக்கான பதில்களை எல்லாம் சொல்ல,
“ம்ம்…” என்பது மட்டுமே அவனின் பதிலாய் இருந்தது..
ராதிகாவிற்கோ தொண்டை அடைத்தது. கண்ணில் நீர் துளி வழிய காத்திருக்க, இதழ்கள் அழுகையை அடக்கி துடித்துக்கொண்டு இருக்கவும், சத்தமே இல்லாது அவள் நின்றிருந்தாள்.
இத்தனை நேரம் பேசிக்கொண்டு இருந்தவள் அமைதியாக இருக்கிறாளே என்று நிரஞ்சனன் உணர்ந்தானோ தெரியவில்லை, ஒரு கை உணவில் இருக்க, மறு கை அவனின் அலைபேசியில் என்னவோ பார்த்துகொண்டு இருந்தது. ராதிகாவிற்கோ அதனைப் பார்க்க பார்க்க அந்த அலைபேசியை பிடுங்கி தூர எறியவேண்டும் போல இருக்க, மிக மிக சிரமம்பட்டே தன் உணர்வுகளை அடக்கி நின்றாள்.
உண்டு முடித்து, நிரஞ்சனன் எழுந்து செல்ல, அமைதியாகவே ராதிகா அனைத்தையும் ஒழுங்கு படுத்திவிட்டு அறைக்கு வர, “ம்ம் ராதிகா அப்பா அம்மாக்கிட்ட சொல்லிட்டியா…” என்று கேட்டான் தீவிரமாய்.
அவனையே பார்த்துகொண்டு இருந்தவள் “இன்னுமில்ல…” என்று விட்டேத்தியாய் சொல்ல,
“ஏன்?? உன்னை சொல்லணும் சொன்னேன் இல்லையா…” என்றான் வேகமாய்.
“சொல்லணும்….” என்றவள் வந்து படுக்க, “ராதிகா… நான் பேசிட்டு இருக்கேன்…” என்றான் லேசாய் கோபம் தெறிக்க.
“இவ்வளோ நேரம் நான்கூட தான் பேசிட்டு இருந்தேன்…” என்றவள், தான் அழுவது அவனுக்குத் தெரியக்கூடாது என்று முகம் திருப்பிக்கொண்டாள்..
ஒருநொடி நிரஞ்சனன் நின்று அவளைப் பார்த்தவன், என்ன நினைத்தானோ “ஷ்….. சாரி.. சாரிடா.. எனக்கு கொஞ்சம் வேலை டென்சன் ஜாஸ்தி.. அதான்..” என்றபடி அவளின் அருகே வந்தமர,
“ம்ம் பரவால்ல..” என்றவள், அவளின் உணர்வுகள் எதையுமே வெளிக் காட்டிக்கொள்ளவில்லை.
“சாரி ராதிகா…”
“இருக்கட்டுங்க.. நான் ஒன்னும் நினைக்கல…”
“இல்லம்மா அது ஒன் இயர் தான் ஆகுது இல்லையா.. இப்போ கொஞ்சம் கஷ்டப் பட்டுட்டா பின்னாடி நல்லாருக்கலாம்…”
“ம்ம் ஆமா…”
“நீ நாளைக்கு அப்பா அம்மாக்கிட்ட சொல்லிடு என்ன?? அத்தை மாமா என்ன சொன்னாங்க??” என்று அதிசயத்திலும் அதிசயமாய் அவன் பேச்சை வளர்க்க,
“நான் இன்னும் யார்கிட்டயும் சொல்லல..” என்றவளின் பதிலில், கேள்வியாய் பார்த்தான்.
“முதல்ல உங்கக்கிட்ட சொல்லணும்னு இருந்தேன்…” என்றவள் பார்வையை மட்டும் அவன் முகத்தினில் வைக்க, அவனுக்கோ ஐயோ என்றிருந்தது.
“ரியலி சாரி…” என்றவன் அவளின் கரங்களைப் பிடித்துக்கொள்ள, “பரவால்லங்க…” என்றவள் மெதுவாய் சிரிக்க முயன்றாள்.
ஆனாலும் அது அவளுக்கு முழுதாய் முடியவில்லை. இருபத்தி மூன்று வயது ராதிகாவிற்கு கணவனிடம் பல பல எதிர்பார்ப்புகள் இருக்க, அதெல்லாம் ஒவ்வொன்றாய் இல்லையென்று ஆகும்போது அவளால் தன்னை சமாளித்து சிரிக்க முடியவில்லை.
நிரஞ்சனனோ அவளின் ‘பரவால்லங்க…’ என்றதிலேயே அவள் சரியாகிவிட்டாள் என்று தோன்ற, “சரி தூங்கு…” என்றவன், அவளின் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு, அவனும் படுத்துவிட, அன்றைய இரவும் அவளுக்கு உறங்கா இரவுதான்..
மறுநாள் என்னவோ நிரஞ்சனன் எப்போதும் கிளம்பும் நேரத்தில் கிளம்பாது, வீட்டில் இருக்க, ராதிகாவிற்கே கொஞ்சம் ஆச்சர்யம் தான். சுந்தரியோ அதனைக் கேட்டேவிட்டார்.
“மதியம் போனா போதும்மா…” என்றவன் ரிலாக்ஸாக அமர,
அந்நேரம் பார்த்து ராதிகாவின் பெற்றோர்கள் அங்கே வர, அவளுக்கோ அப்பா அம்மாவை பார்க்கவும் சந்தோஷ ஊற்றுதான்.
“ம்மா அப்பா..” என்றவள் அவர்களிடம் வர, குணசேகரும் எழுந்து வந்திட அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
ராதிகாவிற்கு இதுதான் சரியான நேரமாய் தோன்றியது, தான் வேலைக்கு போகப் போகும் விஷயத்தை பற்றி சொல்ல. இருவரின் பெற்றோர்களுமே ஒன்றாய் இருக்க, சந்தோசமாகவே அதனை சொல்லவும் செய்தாள். அவள் சொன்னதை கேட்டபின்னோ ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு வித உணர்வு..
குனசேகாரனோ மகனின் முகம் பார்க்க, அவனோ சாதாரணமாகவே அமர்ந்திருந்தான். சுந்தரியோ “இப்போ வேலைக்கு என்ன அவசியம் ராதிகா??” என,
“இல்லத்தை வீட்ல போர் அடிக்குது…” என்றாள் மறைக்காது..
ராணியோ மகளை எச்சரிக்கை செய்வது போல் பார்க்க, குணசேகரனோ “என்னம்மா சொல்ற வீட்ல போர் அடிக்குதா??” என்றார் நம்பாமல்.
“அது மாமா.. நான் படிச்சிட்டு…” என்று அவள் சொல்லும்போதே,
“நம்ம வீட்டு பொண்ணுங்க இதுவரைக்கும் வேலைக்குன்னு போற அவசியம் வந்ததேயில்லை ராதிகாம்மா…” என்றிருந்தார் அவரின் விருப்பமின்மையை குரலில் காட்டி.
சுந்தரியின் முகத்திலும் அதுவே தெரிய, ராதிகாவோ “இல்ல மாமா அது…” எனும்போதே,
மணிவண்ணன் “ராதிகா…” என்று அதட்ட, இதற்குமேல் யாரும் சம்மதிப்பார்களா என்ன??
“ராதிகா… பெரியவங்க என்ன சொல்றாங்களோ அதை கேளு…” என்றார் ராணி.
மகளின் விருப்பமென்ன, அவள் மனதில் இருப்பதென்ன, அவள் ஏன் வேலைக்கு செல்லவேண்டும் என்று சொல்கிறாள்?? அதெல்லாம் யாருமே எதுவுமே கேட்கவில்லை. தேவைக்கு அவள் வேலைக்கு செல்லவேண்டும் என்று எண்ணவில்லை.
அவளின் படிப்பு.. அவளின் திறமை இதனை அடிப்படையாய் கொண்டே வேலைக்குச் செல்ல எண்ண, வீட்டினரோ இதை முற்றிலும் வேறுவிதமாய் பார்த்தனர்.
ஒருவார்த்தை கேட்டிருக்கலாம் அவளிடம். அதைவிட்டு வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்று பேச, ராதிகாவோ தன் கணவன் முகம் பார்த்தாள்.
அவனோ அனைவர் பேசுவதையும் பார்த்துக்கொண்டு இருக்க, ராதிகாவிற்கு மிக மிக மனது வேதனைப் பட்டுப் போனது. அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள், யாரிடமும் எதுவும் சொல்லாது அறைக்குள் வந்துவிட, அவனுக்கு அது மட்டுமே கண்ணில் பட்டது.
அவள் பாட்டிற்கு சென்றதை பார்த்த பெரியவர்களோ என்னதிது என்று அவனைப் பார்க்க, அவனோ அனைவரையும் சங்கடமாய் ஒருபார்வை பார்த்துவிட்டு அறைக்குள் வந்தான், “என்ன ராதிகா இதெல்லாம்…” என்று கேட்டுக்கொண்டே.
“என்னது???”
“இப்படிதான் எழுந்து வருவியா நீ??” என்று அதட்ட,
“இதுக்கு மட்டும் தான் உங்களுக்கு கண்ணு தெரியுமா??” என்றாள் பதிலுக்கு.
இத்தனை நாள் ராதிகா இப்படி பேசியதில்லை என்பதால், அவனுக்கு அது வித்தியாசமாய் பட, அவளை புரியாது ஒரு பார்வை பார்த்தவன் “வர வர நீ சரியில்ல ராதிகா..” என்றான் ஒரு குற்றம் சொல்லும் பாவனையில்..
அவ்வளவுதான் அவளுக்கு வந்ததே கோபம்??
“என்ன என்ன சரியில்ல?? என்ன சரியில்ல…” என்றவள் எழுந்து அவனருகே வர,
“ம்ம்ச் என்ன இதெல்லாம் புதுசா பண்ணிட்டிருக்க நீ?? இத்தனை நாள் இப்படியா இருந்த??” என்றான் அவனும் பதிலுக்கு..
“ஆமா இத்தனை நாள் எனக்குன்னு நான் ஆசைப்பட்டு எதுவும் கேட்கலை.. ஆனா இப்போ கேட்கிறேன் அதை கூட நீங்க யாரும் ஒத்துக்க மாட்டீங்க இல்ல…” என, ராதிகாவிற்கு என்ன கோபம் என்பது அவனுக்கு அப்போது தான் புரிந்தது.
“ஷ்…!!!!” என்று நெற்றியை தேய்த்தவன்,
“இதுக்குதான் முன்னாடியே உன்னை சொல்லுன்னு சொன்னேன்..” என்றான் என்னவோபோல்.
“சொல்லணும்னு தான் இருந்தேன். ஆனா வேலை கிடைச்ச பின்னாடி சொன்னா சந்தோசமா இருக்குமேன்னு சொல்லலை..”
“சரி விடு.. இப்போ என்ன?? நீ வேலைக்கு போயேதான் ஆகணுமா?? உனக்கு ஸ்பென்ட் பண்ண மன்த்லி எவ்வளோ வேணும் சொல்லு நான் தர்றேன்…” என்று நிரஞ்சனன் வேறுகோணத்தில் பேச, அவளோ அவனைப் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது..
“என்ன ராதிகா???”
“உங்க அமௌன்ட் நீங்களே வச்சிக்கோங்க.. வந்து எனக்காக பேசுங்க போதும்…”
ராதிகாவிற்கு மனதை கசக்கிப் பிழிவதாய் ஓர் உணர்வு. பெற்றவர்கள் முதல் கட்டியவன் வரைக்கும் யாருமே தனக்காக பேசவில்லை என்ற கோபம். அப்போ இவ்வளவுதானா என்ற உணர்வு எல்லாமே சேர்ந்து அவளுள் ஒரு உணர்வு கலவை வெடித்துக்கொண்டு இருக்க,
“பெரியவங்க எல்லாம் வேணாம் சொல்றப்போ, நான் மட்டும் என்ன பேச??” என்று நிரஞ்சனன் கேட்க, ராதிகாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“இங்க பாரு சும்மா எல்லாத்துக்கும் கண்ணுல தண்ணி வைக்காத.. வெளிய வா…” என்றவன், அவனின் அலைபேசி சிணுங்கவும், நகர்ந்துவிட, அவளுக்கோ கையறு நிலைதான்.
உதவுவான், உடன் நிற்பான் என்று நிரஞ்சனனைப் பார்க்க, அவனோ அவனின் வேலையை பார்க்க எழுந்துசெல்ல, அவளுக்கு அத்தனை கோபம் வந்தது இப்போது. தன்னை, தன் உணர்வுகளை, தான் சொல்ல வந்ததை என்று எதையுமே புரிந்துகொள்ளாதவர்களின் பேச்சை ஏன் கேட்கவேண்டும் என்ற வேகம் எழ, வெளியே வந்தவளோ,
“என்.. எனக்கு வேலைக்கு போகணும்னு ரொம்ப ஆசையா இருக்கு… தேவைக்காக போகணும் சொல்லலை.. மனசுல ஒரு ஆசை.. படிச்சிட்டு சும்மா இருக்கணுமான்னு கேள்வி?? அதான்.. நல்ல வேலையும் கிடைச்சிருக்கு..” என்றாள் இறுகிய முகத்துடன்.
முடிந்தது விசயம் என்று அனைவரும் மற்ற மற்ற விஷயங்கள் பேசிக்கொண்டு இருக்க, ராதிகா இப்படி சொல்லியதும் ‘இதென்ன பிடிவாதம்??’ என்று பார்த்தனர்.
“ராதிகா என்ன இதெல்லாம்..?” என்று ராணி அனைவரின் முன்னும் அதட்ட,
“ஏம்மா வேலைக்கு போனா என்ன தப்பு??” என்றாள் பதிலுக்கு..
என்னவோ ராதிகாவிற்கு அன்றைய தினம் வீம்பும் பிடிவாதமும் அதிகமாகவே இருந்தது. யார் என்ன சொன்னாலும் இதில் நாம் பின்வாங்கக்கூடாது என்று எண்ணம் வலுப்பெற்றுக்கொண்டே வந்தது. இனி யாரையும் தனக்காக பேசவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது, நாமே தான் நமக்காக பேசவேண்டும் என்ற உறுதி பிறந்திருந்தது.
குணசேகரனோ “என் முடிவை நான் சொல்லிட்டேன் இதுக்கு மேல உன் விருப்பம் ராதிகாம்மா…” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட, ராணியோ மகளை முறைத்தார்.
சுந்தரியோ யாருக்கு சொல்வது என்று பார்த்திருக்க, மணிவண்ணனோ “ராதிகா கொஞ்சம் பொறுமையா போலாமேடா…” என,
“என்னோட நியாயமான ஆசையை நான் யார்கிட்ட போய் சொல்றது??” என்று அப்போதும் அவள் விடாது கேட்க,
ராணியோ “என்ன டி ஆசை?? பெரிய ஆசை?? நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு.. அதுல நல்லபடியா வாழ்றது விட்டுட்டு அப்படியென்ன பிடிவாதம் உனக்கு??” என்று சத்தம் போட, சுந்தரியோ தன் கணவரை சமாதானம் செய்ய கிளம்பினார்.
“ம்மா இப்பவும் சொல்றேன், நான் வேலைக்கு போறேன் சொல்றதுக்கும் என்னோட வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லப்போனா இதுல அவருக்குக் கூட மாற்று கருத்து இல்லை.. ஆனா..” எனும்போதே,
“என்ன டி ஆனா ஆவன்னான்னு.. குடும்பம்னா ஆயிரம் இருக்கும்.. எல்லாத்தையும் அனுசரிச்சிட்டு தான் போகணும்.. பெரியவங்க வேணாம் சொன்னா விடேன்…” என்றார் ஒரேதாய் ராணி.
“ராணி…” என்று மணிவண்ணன் அவரிடம் பேச முனைய,
“நான் வேலைக்குப் போய்த்தான் ஆவேன்.. என்னோட மனசை யாரும் புரிஞ்சுக்கலைன்னா நான் மட்டும் ஏன் யார் சொல்றதையும் கேட்கணும்…” என்று ராதிகா அடிக்குரலில் சீர,
“ராதிகா…!!!!” என்று அதட்டி அழைத்தபடி வந்தான் நிரஞ்சனன்.
அவன் முகத்தினில் அப்படியொரு கோபம். இத்தனை நாள் யாருமே பார்த்திடாத கோபம். அவன் அதட்டியத்தில் சுந்தரி திரும்ப வெளியே வந்திட, கண்ணீர் ததும்பி, சிவந்த விழிகளோடு கணவனை முறைத்து நின்றிருந்தாள் ராதிகா..
வீட்டினர் இத்தனை பேரின் முன்னும் சண்டையிட அவனுக்குப் பிடிக்கவில்லை. சரி, தப்பு எது என்று யோசிக்கும் நிலையில் அவனில்லை. அவனைப் பொருத்தமட்டில் வீட்டினில் எந்த கலகமும் இருக்கக் கூடாது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போகவேண்டும்.
அதுவும் தன் மனைவி, இந்த வீட்டின் ஒரே மருமகள், அனைவரையும் அரவணைத்து விட்டுக்கொடுத்து அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கவேண்டும் என்று அவன் எண்ணியிருக்க, அவளோ இந்த விசயத்தில் இத்தனை பிடிவாதம் செய்வது அவனுக்குத் துளியும் பிடிக்கவில்லை. ஆக அனைத்தும் சேர்ந்து ராதிகாவை அடக்கும் எண்ணம் மட்டுமே அவனுக்குத் தலை தூக்கியது.
அப்பா என்ன நினைப்பார்??
அம்மா என்ன நினைப்பார்??
இதெல்லாம் தான் அவன் மனதில் இருந்ததே தவிர ராதிகா என்ன நினைக்கிறாள் என்பதை புரிந்துகொள்ள தவறினான்.
ராதிகாவின் இத்தனை மன உணர்வுகளும் அவளைப் பிரிந்த பின்னே தான் எப்போவாது சுந்தரி பழையது பற்றி பேசும்போது தான், அவள் இப்படி எண்ணினாளோ?? என்னைத் தேடினாளோ?? என்றெல்லாம் மனதில் போட்டு உறுத்தியது நிரஞ்சனனுக்கு.
அதே உறுத்தல் இப்போதும் எழுந்தது..