“எனக்குத்தான் சொன்னேன்..” என்றவள்,  கழுத்தினை திருப்பிக்கொள்ள “இப்போ என்னாச்சு இவளுக்கு…” என்றுதான் பார்த்தான்.

“தம்பி.. சைக்கிள் சூப்பரா இருந்துச்சுங்க..” என்றவர், நொடியில் வீட்டிற்கு அழைத்து அவரின் பிள்ளைகளுக்கும் சொல்லிவிட, அடுத்த கால் மணி நேரத்தில் அவரின் குடும்பமே வந்த இறங்கிவிட்டது..

“இதென்ன..” என்று அனுராகா பார்க்க, தீபனோ “நீதானே கூட்டிட்டு வந்த..” என்று பார்த்தான்.

அவரின் குடும்பமே வந்து அளவளாவி, “அண்ணி.. அன்னிக்கு நீங்க போல்டா பேசுனீங்க..” என்று அவரின் மகள் சொல்ல,

‘அண்ணியா..’ என்று பார்த்தாள்.

தீபன் அண்ணன் என்றாள், அனுராகா அண்ணி தானே..!!!

நொடியில் உறவுமுறைக்குள் கொண்டுவந்துவிட்டனர். பேச்சினோடே முட்டை தோசையும் டீயும் வந்துவிட, தீபன் அவர்களிடம் என்ன படிப்பு என்ன வேலை என்ன என்று விசாரித்துக்கொண்டு இருந்தான்.

என்னவோ அந்த சூழலும், இவர்களோடு பேசியதும் மனதிற்கு அப்படியொரு இதம் கொடுத்தது. அனுராகா அவனின் முகத்தினில் தெரியும் மாற்றத்தினைதான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

வெளியே அழைத்து வந்ததும் சரிதான் என்ற எண்ணம் அவளும் வலுப்பெற்றது.

தீபன் அவர்களோடு பேசுவதை அனுராகா ஒருவித ரசிப்போடு பார்த்துக்கொண்டு இருக்க,

“அண்ணி… நீங்கதான் அண்ணனுக்கு பக்கா ஜோடி..” என்று சொன்ன கடைக்காரரின் மகன் “ண்ணா.. கல்யாணத்துக்கு சொல்லுங்கண்ணா.. நாங்கெல்லாம் வந்து வேலை செய்றோம்..” என,

“டேய்… தம்பி.. நீ வேலை செய்றது உன் குடும்பத்துக்காக தான் இருக்கணும் முதல்ல..” என,

“ண்ணா.. செம அண்ணா..” என்று அவன் கை தட்ட, இப்படியே பேச்சு நீண்டது.

ஒருவழியாய் பேசி, உண்டு என்று மேலும் ஒரு மணி நேரம் கடந்துவிட “எவ்வளோ பெரிய ஆளுங்க.. இப்படி சிம்பிளா இருக்காங்க..” என்று அந்த கடைக்காரர் சொல்ல,

“இதுல பெரியவங்க சின்னவங்க எல்லாம் இல்லை.. உங்க குடும்பத்துக்கு நீங்கதான் பெரியவர்.. முக்கியமும் கூட..” என்றாள் அனுராகா.

உண்மையும் அதுதானே..

தீபன், ‘போலாமா..’ என்பது போல் பார்க்க “கிளம்பலாம் தீப்ஸ்..” என்றாள் அவளும்.

கிளம்புவதற்கு முன்னம் “நாளைக்கு வந்து என்னைப் பாருங்க…” என்றுவிட்டு போனான் தீபன் கடைக்காரரிடம்.

அவரின் முகத்தினில் அப்படியொரு பிரகாசம்..

பைக் பயணம் மீண்டும் தொடர “என்ன தீப்ஸ் செய்ய போற??” என்றாள் அனுராகா.

“என்னது…??!!” என,

“இல்லை அவரை வந்து பார்க்கச் சொன்னியே அதான்..”

“நீதானே சொன்ன, அவர் பேமிலிக்கு அவர்தான் பெரிய ஆள்.. முக்கியமும் கூடன்னு.. அதான்.. அவர் இன்னும் கொஞ்சம் நல்லா சம்பாரிச்சா இன்னும் அவங்க பேமிலி நல்லா இருக்குமே..” என்று தீபனும் சொல்ல,

“ஆகா..!! நீ இவ்வளோ நல்லவனா??!!” என்றவள், அப்படியொரு சிரிப்பு சிரிக்க,

“ஏய் போ டி..” என்று சலுகையாய் சொல்லிக்கொண்டான்.

பைக் புனீத் வீட்டினை நோக்கிப் போக, “இப்போ ஓகே வா..” என்றான் தீபன்.

“இதை நான் கேட்கணும்..” என்றவள் “பைக் ஸ்டாப் பண்ணு.. உன்னோட கொஞ்சம் பேசணும்..” என,

“ஹேய்.. இவ்வளோ நேரம் என்ன பண்ண நீ..” என்றான்.

“நம்ம பேசலையே.. சோ இப்போ பண்ணு..” என, நள்ளிரவில் அவன் எங்கே பைக்கினை நிறுத்தி, எங்கே அமர்ந்து இவளோடு பேச என்று பார்க்க,

“தோ.. அங்க ஒரு ரவுண்டானா இருக்கே அங்க ஸ்டாப் பண்ணு தீப்ஸ்..” என்றாள்,

“அங்கயா.. ஓய்.. அது நடு ரோடு…” என்றான் அவனும்.

“இந்த ரோட் மார்னிங் வரைக்கும் இப்படி சைலெண்டா தான் இருக்கும்.. ஜஸ்ட் எஞ்சாய் திஸ் மொமன்ட் தீப்ஸ்.. திங் திஸ்.. ஆளே இல்லாத ரோடு.. ரோட் சைட் லேம்ப்ஸ்… அமைதியான இந்த ரவுண்டானா… நீயும் நானும்.. எப்படி இருக்கு…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னமே அவன் அங்கே வண்டியை நிறுத்தியிருக்க,

“தட்ஸ் குட்…” என்றவளும் இறங்கிவிட, “ம்ம் சொல்லு…” என்றான் உடனே.    

“அட.. இருப்பா தம்பி.. ஸ்பாட்டுக்கு வந்தா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணனும்..” என்றவள், அங்கே அந்த ரவுண்டானாவில் இடம் பார்த்து அமர, தீபன் அவளைப் பார்த்த பார்வையில்,

“வா.. வா.. இப்படி வந்து உட்கார்..” என்று அவளிடம் கை காட்ட, அவனும் அமர்ந்துகொள்ள, ஒரு இரண்டு நொடி அமைதிக்குப் பிறகு

“சோ.. தீப்ஸ்.. இப்போ உனக்கு ஓகே வா..” என்றாள் ஒருவித ஆழ்ந்த குரலில்.

“ம்ம் என்ன ராகா??!!”

“இப்போ உனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிருக்கா..??” என,

“ம்ம் யா பெட்டர்.. பட் நான் நினைக்கல.. என்னவோ சம்திங் உள்ளுக்குள்ள..” என்று தன் நெஞ்சினை தடவ,

“ம்ம்… பட் உனக்கான சொலியூசனும் உன்கிட்ட தானே இருக்கும். அதை தேடு தீப்ஸ்.. அதைவிட்டு நீ உன்னை நீயே டம்ப் பண்றது எனக்கு கஷ்டமா இருக்கு..” என்று வருந்தி சொல்ல,

“ஹேய்.. ராகா..!!” என்று அவளின் கரம் பற்றிக்கொண்டான்.

“எனக்கு சொல்லத் தெரியலை.. மிதுன்காக உன்னை வொர்ரி பண்ணக்கூடாதுன்னு சொல்ல முடியாது. பட்.. அது வொர்த்தான்னு பாரு..” என்றவள்,

“நீ இதே மைன்ட் செட்ல இருந்தா கண்டிப்பா நம்மளோட மேரேஜ் லைப் நல்லா இருக்காது தீப்ஸ்..” என்றாள் பட்டென்று..

“ஏய்..!!” என்றவனுக்கு சட்டென்று கோபம் வந்துவிட, “என்ன பேச்சு இது..” என்றான்.

பதில் சொல்லாதவள், அவனின் முகம் பார்க்க “என்ன இதெல்லாம் ..” என்றான் அப்போதும் கோபமாய்.

“இதுதான் ட்ரூ… பேச்சுக்கு சொல்லவுமே உனக்கு கோபம் வருது. பட் நீ நார்மலா இல்லைன்னா தென் நம்ம லைப் எப்படி நல்லா இருக்கும்..” என, அமைதியாகிப் போனான்.

“யோசி தீப்ஸ்… உனக்காக ஆன்சர் கண்டிப்பா உனக்குள்ள தான் இருக்கும்.. இந்த கில்டி எல்லாம் உனக்கு தேவையே இல்லை. இருந்தாலும், எது பண்ணா இதுல இருந்து எல்லாம் நீ வெளி வர முடியும்னு உனக்கு தோணுதோ அதை யோசி…” என்று பொறுமையாக எடுத்துச் சொல்ல,

“ம்ம்…. ம்ம்..” என்று தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டான்..

அவன் முகம் யோசனையைக் காட்ட “இப்படியே இங்கயே உட்காந்து யோசிக்கப் போறியா நீ..” என்றாள் மெதுவாய் புன்னகை செய்து.

“நீ இருக்க பாரேன்..” என்று அவள் தலையில் தட்டியவன் “வா..” என்று சொல்லி மீண்டும் புனீத் வீடு செல்ல, அங்கே பார்ட்டி முடிந்திருந்தது.

நீரஜா ஏற்கனவே வீடு சென்றிருக்க, தீபன் “என் கார் இருக்கட்டும்.. நான் ராகாவ டிராப் பண்ணிட்டு வீட்டுக்கு போயிக்கிறேன்..” என்று அவர்களும் கிளம்பிவிட்டனர்.

அனுராகாவிற்கு நம்பிக்கை இருந்தது. கண்டிப்பாய் தீபன் யோசித்து ஒரு நல்ல முடிவில் வந்து நிற்பான் என்று. ஆக மறுநாள் அவள் வழக்கம் போல அவளின் வேலைகளைப் பார்க்க, தீபனின் வீட்டினில் சக்ரவர்த்தி வந்திருந்தார்.

உஷா கூட “என்ன திடீர்னு..” என்று கேட்க,

“அது சரி.. அப்போ நான் வரக்கூடாதா..” என்று சக்ரவர்த்தி கேட்க, தீபன் வெளியே செல்ல கிளம்பி வந்தவன்

“ப்பா.. என்ன திடீர்னு..” என்று அவனும் கேட்க,

“டேய் என்னடா இது..” என்றார் அவர் அம்மா மகன் இருவரையும் காட்டி.

“ஹா ஹா.. சரி சரி.. விசயம் இல்லாம இப்படி காலங்கார்த்தால வந்து இறங்க மாட்டீங்களே..” என்று உஷா சொல்லவும்,

“மதியம் ஆச்சு..” என்றார் சக்ரவர்த்தி.

அம்மாவும் அப்பாவும் வெகு நாளைக்குப் பிறகு ஒரு இலகுவான பேச்சுக்கள் பேச, சிறிது நேரம் இருந்தவன் “ஓகே.. நான் கிளம்புறேன்..” என்று கிளம்ப,

“இரு தீபன்..” என்றவர் “உனக்கு ஒரு போஸ்டிங் கொடுக்கணும்னு கட்சி மேலிடம் சொல்றாங்க.. நீ பொதுக்கூட்டம் அரேஞ் பண்ணப்போவே  இந்த பேச்சு இருந்ததுடா.. நான் தான் எலெக்சன் எல்லாம் முடியட்டும்னு சொன்னேன்.. இப்போ உன்னோட சைக்கிள் பேரணி எல்லாம் பார்த்து எப்படி இப்படின்னு அசந்து தான் போயிட்டாங்க..” என, தீபன் அமைதியாகவே இருந்தான்.

“சொல்லு தீபன்.. உனக்கு என்ன வேணும் சொல்லு.. அன்னிக்கே நீயும் சொன்னாதானே.. என்ன கேட்டாலும் கொடுக்கணும்னு.. இப்போ சொல்லு.. என்ன வேணும்..” என்று தீபனின் இரு தோள்களையும் பிடித்து சக்ரவர்த்தி பெருமையாய் கேட்க,

அவனோ மிக மிக தன்மையாய்.. மிக மிக அமைதியாய் “எனக்கு எதுவும் வேண்டாம் ப்பா..” என்றான்.

அவன் சொன்னதை புரிந்துகொள்ளவே சக்ரவர்த்திக்கு சில நொடிகள் பிடிக்க, “தீபன்…” என்று அவன் முதுகில் கை வைத்தார் உஷா.

“ம்ம் ம்மா…” என்றவன் “இது என்னோட முடிவுப்பா.. அன்னிக்கே உங்கட்ட சொல்லனும்னு நினைச்சேன்.. பட் முடியலை..” என்றவன் மாடியைப் பார்க்க,

“என்னடா…” என்றார் சக்ரவர்த்தி.

“எனக்கு பதவி.. அது இது எல்லாம் எதுவும் வேண்டாம் ப்பா…” என,

“பின்ன??” என்றார்.

“இப்போ எப்படி இருக்கேனோ அப்படியே இருக்கேன்.. உங்களுக்கு பின்னாடி.. நீங்க இருக்க வரைக்கும்..” என,

“டேய் என்னடா…” என்றார் உஷா.

“இல்லம்மா இது மட்டும் தான் எனக்கு மனசு அமைதி கொடுக்கும்… இது மிதுன்க்காக மட்டும் நான் சொல்லலை.. அனுராகாக்காகவும்  தான்.. என்னோட நல்லதுக்காகன்னு நினைச்சு, எல்லார் முன்னாடியும் அவளே அவளோட கௌரவம் குறைச்சா.. யார் என்ன சொன்னாலும், எத்தனை பேர் எத்தனை பேசியிருப்பாங்க…” என, அவன் குரல் கமறியது.

“தீபன்…” என்று அப்பாவும் அம்மாவும் அதிர்ந்து பார்க்க,

“எஸ்.. இந்த பதவிக்காகத்தான் என் அண்ணன் என்னை இல்லாம செய்யனும்னு நினைச்சான்.. அவன் என் முன்னாடி வந்து நிக்கட்டும்.. எதிர்க்கட்டும்.. சண்டை போடட்டும்.. அப்போ நான் முடிவு பண்ணுவேன்.. எனக்கு இதெல்லாம் வேணுமான்னு.. எல்லாம் தாண்டி இனியொரு முறை, அம்மாவையோ அனுராகாவையோ நான் யார் கேள்விக்கும் பதில் சொல்ல வைக்கிற நிலைக்கு கொண்டு வர இஷ்டம் இல்லை..” என்று பேசி முடிக்க,  அங்கே அப்படியொரு மௌனம்..

சக்ரவர்த்திக்கும் சரி, உஷாவிற்கும் சரி என்ன பதில் சொல்வது என்றே விளங்கவில்லை. தீபன் இப்படியொரு முடிவு செய்வான் என்று அவர்கள் எண்ணவே இல்லை.

“என் மனசு இதுல மட்டும் தான் அமைதியடையும் ப்பா…” என்று அவன் சொல்லவும்,

“இப்போ இந்த நிமிஷம் உன்னை நினைச்சு எனக்கு மனசு எவ்வளோ பெருமையா இருக்குன்னு எனக்குத்தான் டா தெரியும்..” என்று சக்ரவர்த்தி அவனை அணைத்துக்கொள்ள, உஷாவிற்குமே அவனது இந்த முடிவில் சந்தோசம் தான்.

அவன் வாழ்வு இனிமையாய் இருக்கும்  என்று.

தீபன் சக்ரவர்த்தி – என்றுமே சக்ரவர்த்தியின் திருமகன்…!!