Advertisement

நான் இனி நீ – 7

சக்ரவர்த்தியின் பெர்சனல் எண்ணில் இருந்து அழைப்பு என்றதுமே தீபன் சக்ரவர்த்திக்கு நெற்றி சுருங்கியது. மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே அவர் இப்படி அழைப்பது.. இல்லையெனில் அவரின் பிஏ அல்லது மிதுன் இருவரில் யாரோ ஒருவர்தான் அழைப்பர்..

வீட்டு விஷயம் என்றால் உஷாதான் பேசுவார். பொதுவாய் அப்படியான பெரிய விஷயங்கள் என்பது நிறைய ஒன்றும் அங்கு இருக்காது. இருந்தாலும் மகனிடம் பேசவேண்டும் என்றால் அழைத்திடுவார். ஆகையால் இந்த இரவு நேரத்தில் அப்பாவிடம் இருந்து அழைப்பு என்றதுமே

வேகமாய் எடுத்தவன் “ஹலோ ப்பா..” என,

“என்னடா இவ்வளோ அவசரமா அப்பாங்குற??!! பயந்துட்டேன் பாரு..” என்று சிரித்தார் சக்ரவர்த்தி.

அவர் எப்போதுமே இப்படிதான். மத்திய மந்திரி என்பதெல்லாம் வீட்டிற்கு வெளியே. வீட்டினிலோ மிக மிக எளிமையான இனிமையான ஹாஸ்யமாய் பேசும் நபர்.

“இல்லப்பா.. என்னாச்சு?? என்ன இந்த டைம்ல…” என்றவனுக்கு ஒருவேளை அனுராகாவை தான் அழைத்து வந்திருப்பது தெரியுமோ?? என்ற எண்ணம்.

‘நோ வே.. சான்ஸ் இல்லை..’ என்று அவனுக்கு அவனேகூட சொல்லிக்கொண்டான்.

“எல்லாம் உங்கம்மா தான்..” என்றவர், “மிதுனுக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கா.. பேசு பேசுன்னு ஒரே நச்சரிப்பு.. இந்த நேரத்துலையா பொண்ணு கேப்பாங்க?? நீயே சொல்லு..” என,

“அதானே…” என்றான் ஒருவித ஆசுவாசமாய்.

“அதே தான் நீயே சொல்லு..” என்று உஷாவிடம் போனை கொடுத்தவர் “இந்தா பேசு..” என

“ம்மா…??!!” என்றான் கேள்வியாய்.

“எந்த ஊர்லடா இருக்க?? வீடு தங்குறதே இல்லை.. இல்லை நமக்கெல்லாம் எதுக்கு வீடுன்னு தெரியலை..” என்றார் உஷாவும் கொஞ்சம் கடுப்பாய்.

“ஹா ஹா… சரி சொல்லு யாரு உன்னோட மருமக??”

“நீ முதல்ல சொல்லு எங்க இருக்க நீ??”

“எங்கயோ இருக்கேன்.. இப்போ என்ன??” என்றவனுக்கு அப்படியே குரல் மாறிட,

“சரி போய் தொலை.. எங்கயும் இரு.. ஆனா எப்படிவேணா இருக்கலாம்னு இருக்கக் கூடாது…” என்றவர் “மிதுனுக்கு ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன்.. பேசுங்கன்னு சொன்னா பிஏ வரட்டும் அது இதுன்னு சொல்றார்..” என,

“யாரது.. எடுத்ததுமே நேரா பேச வேணாம்.. விசாரிக்கலாம்.. முதல்ல மிதுனுக்கு பிடிக்கணும்..” என்றான் இவனும்.

“எல்லாம் அவனும் சரி சொல்லியாச்சு.. விசாரிக்கவும் செஞ்சாச்சு.. பொண்ணு கூட நேர்ல பார்த்தாச்சு..”

“அட இதெல்லாம் எப்போ.. நானும் ஒருத்தன் இருக்கேன்..”

“ஆமாமா இருக்க இருக்க.. நீயும்தான் பார்த்த..” என, “நானா??!!!” என்றான் யோசனையாய்.

“ம்ம் அதான்டா AR க்ரூப்ஸ் இருக்குல அவங்க பொண்ணு..” என, “என்னது??!!!!” என்று கத்தியேவிட்டான் தீபன் சக்ரவர்த்தி..

“என்னடா??!!!”

“இல்.. இல்லம்மா நீ சொன்னது சரியா கேட்கலை..” என்றவனுள் அப்படி இருக்கவே கூடாது என்ற எண்ணம்.

“அட கோவால பார்த்தோமே, லோகேஸ்வரன் தாரா அவங்களோட பொண்ணு அனுராகா.. நல்ல பொண்ணுல்ல.. எனக்கு ரொம்ப பிடிச்சது..” என்று உஷா சொல்லிக்கொண்டு இருக்க, தீபன் சக்ரவர்த்திக்கு கண்கள் தெறிப்பது போல் விரிந்தது. 

‘அவளா??!!! அண்ணனுக்கா… நோ…’

‘நோ நோ நோ….’

‘யாரோ ஒருத்தனை பார்க்க என்னோட கிளம்பி வந்து, என்னோடவே சேலஞ் பண்ண ஒருத்தி எனக்கு அண்ணியா.. நோ வே..’

‘அதுவும் ராகா… மிதுனுக்கு ம்ம்ஹும்… திஸ் வோன்ட் ஹேப்பேன்….’

அதற்குள் அவனின் மனது ஒரு முடிவிற்கு வர, “இது நடக்காதும்மா…” என்றான் பட்டென்று..

“ஏன்.. ஏன் நடக்காது… ஏன்டா இப்படி சொல்ற??” என்று உஷா படபடக்க,

“நடக்காது அவ்வளோதான்.. இந்த பேச்சு இனி வேணாம்.. மிதுனுக்கு வேற இடம் பாருங்க.. இல்லையா நானே பாக்குறேன்.. பட்.. இது.. ராகா.. ஐ மீன் அனுராகா மிதுனுக்கு இல்லை.. அவனுக்கு செட்டாக மாட்டா.. புரிஞ்சதா??? சோ நீங்க யாரும் இதைப் பத்தி ஒருவார்த்தைப் பேசக்கூடாது ரைட்…” என,

“டேய் நான் உன் அம்மாடா.. என்னவோ உன்னோட பாடி கார்ட்ஸ்க்கு ஆர்டர் போடறது போல பேசுற நீ..” என்று உஷா அதட்ட,

“நான் சொன்னதுக்கு சரின்னு சொல்லு..” என்றான் பிடிவாதமாய்..

“தீபன்..!!!!”

“ம்மா… இதான் என்னோட முடிவு..” என்று போனை வைத்துவிட்டான்..

அவனின் மனது கொதித்துப் போனது. முதல் முறையாய் அவன் மனதில் சலனம் ஏற்படுத்திய ஒருத்தி. இவனையே கருவியாய் கொண்டு யாரோ ஒருவனை காண கிளம்பி வந்து இருப்பது தெரிந்தே அவளை சிறை செய்யும் வேகம் இவனுள்..

இதெல்லாம் இருக்க, அவளே அவனுக்கு அண்ணியாகுவதா??

அண்ணன் மனைவி என்ற ஸ்தானத்தில் அவளைக் காண முடியுமா??!!

‘இது எதுவுமே நடக்கக் கூடாது..’ என்று அவன் சிந்திக்க, ‘இவளை இங்கிருந்து வெளியே அனுப்பினா தானே யாருக்கும் கல்யாணம் பேசுவாங்க??’ என்ற எண்ணம் வரவும்,

‘ராகா நீ இங்கதான் இருக்கப் போற.. எப்போவரைன்னு எனக்கே தெரியாது…’ என்று அவனின் உதடுகள் உச்சரிக்க,  அடுத்து தர்மாவிற்கு அழைத்தவன் “நான் சொல்ற ஆள் பத்தி புல் டீடெய்ல்ஸ் வேணும்.. அவன் இப்போ எங்க இருக்கான்.. என்ன செய்றான் வரைக்கும்..” என்றவன் பிரஷாந்த் பெயரை சொல்ல,

“ஓகே.. நாளைக்கு காலைல சொல்றேன்..” என்று தர்மா வைத்துவிட, அடுத்து சக்ரவர்த்தியின் பிஏவிற்கு அழைத்தான்.

“அப்பாவோட அப்பாயின்மென்ட்ஸ் என்ன??” என்றவன், அது தெரியவும்,

“ம்ம் எது எப்படி இருந்தாலும் அப்பாவோ அம்மாவோ AR க்ரூப்ஸ் MDயோட பேசவே கூடாது. மீட் அரேஞ் பண்ண சொன்னா பாசிபிலிட்டீஸ் இல்லைன்னு சொல்லிடுங்க.. எதுவா இருந்தாலும் எலக்சன் முடியட்டும்.. ஓகே..” என,

இப்படியெல்லாம் தீபன் சக்ரவர்த்தி சொன்னதில்லை என்றாலும் கூட இவர்கள் சொல்வதை ஏன் என்று கேட்காமல் செய்வது தானே வேலையில் இருப்பவர்களின் வேலை..

தீபன் சக்ரவர்த்தி சொன்ன வேலைகள் எல்லாம் அவனின் சொல்படி ஒவ்வொன்றாய் நடக்கத் தொடங்க, உஷாவோ அப்படியொரு சண்டை கணவரிடம்.

“இவன் என்ன இப்படி பண்றான்?? இதெல்லாம் ரொம்ப தப்பு.. நீங்க சின்னவனுக்கு ரொம்ப இடம் கொடுத்து வச்சிட்டீங்க..” என,

“அவன் வேணாம் சொன்னா ஒரு காரணம் இருக்கும்தானே உஷா..” என்றார் சக்ரவர்த்தி.

“இருக்கலாம்.. ஆனா அவன் பேசின விதம் சரியேயில்லைங்க.. என்னவோ அவன்கிட்ட வேலை செய்றவங்கக்கிட்ட பேசுறது போல பேசுறான்..”

“சரி சரி.. இப்போ வேணாம் விடு. அவன் எதோ டென்சன்ல இருப்பான் போல.. நாளைக்கு பேசலாம்.. நீ இதெல்லாம் மிதுன்கிட்ட சொல்லாத உஷா..” என்றவரை முறைத்த உஷா,

“யாருமே இந்த வீட்ல சரியில்லை.. ஆனா நானும் இதை இப்படியே விடப்போறதில்லை..” என்றுவிட்டு போனார்.

தான் சம்பந்தப் படாமலே இத்தனை விஷயங்கள் தன்னை சுற்றி நடக்க,   அது எதுவும் தெரியாமல் அனுராகாவோ அவள் இருந்த குடிலில் இங்கும் அங்கும் மாறி மாறி நடந்துகொண்டு இருந்தாள்.

ஆம் குடில் தான். அளவாய் ஒருவர் மட்டுமே தங்குமளவு இருந்தது அந்த குடில். உடன் ஒரு குளியல் அறையும். வித்தியாசமாய் புதுவிதமாய் இருந்தது.    வெளியே பார்க்க குடில் போன்றதொரு அமைப்புதான் இருந்தது. உள்ளே சகல வசதியும் இருந்தது. கட்டில் மெத்தை, டிவி என்று.. ஆனால் காற்றாடி மட்டுமே. ஏசி எல்லாம் இல்லை.. சுற்றி சுற்றி ஜன்னல் இருக்க, ஜிலு ஜிலு என்று காற்று வந்துகொண்டு இருந்தது.

உறக்கம் வரும்போலவும் தெரியவில்லை.. இங்கிருந்து எங்கே செல்வது எப்படிச் செல்வது?? என்ற சிந்தனை தான் அனுராகாவிற்கு.

முதலில் இது என்ன இடம் என்றும் தெரியவில்லை.

அது தெரிந்தால் தான் இங்கிருந்து எப்படி வெளியே போவது என்று யோசிக்க முடியும். அதுவே தெரியவில்லை என்கையில் அவள் என்ன செய்வாள். எத்தனை நேரம் இப்படி நடந்துகொண்டே இருக்க முடியும்?? ம்ம்ஹும் இதற்குமேல் முடியாது எனத் தெரிய, கதவைத் திறக்க கை வைக்கும்போதே, வெளிப்பக்கம் இருந்து கதவு திறந்து தீபன் உள்ளே வந்தான்..

அவனைப் பார்த்ததுமே ஒரு எரிச்சல் வர “கதவு தட்டிட்டு வரணும்னு கூட தெரியாதா??” என்று கேட்கவேண்டும் போல் இருந்தாலும் இவனோடு எனக்கென்ன பேச்சு என்றுதான் இருந்தாள்.

உன்னோடு நான் பேச வேண்டியதே இல்லை, உன்னோடு இருந்தாலும் சரி, அல்ல இது உன் இடமாக இருந்தாலும் சரி. இதுவே அவளின் எண்ணமாக இருக்க,  அவளைப் பார்த்தவன் முகத்தினில் ஒரு நக்கல் சிரிப்பு.

இப்படியொரு சூழலில் வேறொரு பெண் என்றால் கலங்கி நின்றிருப்பாள். அல்லது தான் செய்தது தவறு என்று சொல்லி மன்னிப்பேனும் கேட்டு, என்னை விட்டுவிடு என்று சொல்லியிருப்பாள். ஆனால் எதுவுமே இல்லாது, வந்து குளித்து உடைமாற்றி, அதுவும் உடைக்கு ஏற்றபடி கையில் கழுத்தில் அணிந்து என்று அனுராகா நிற்க,

‘செம தில்லு தான் இவளுக்கு..’ என்று எண்ணினான்.

“சோ…. ஹவ் இஸ் திஸ் பிளேஸ்…” என்று தீபன் கேட்க, அவளோ அவனைப் பார்த்தவள் “வெரி பேட்னு சொன்னா என்ன செய்வ நீ??” என்றாள் திமிராகவே.

“ஹா ஹா.. சொல்லேன்.. சொல்லித்தான் பாரேன்..” என்றபடி அவளை ஒருமுறை சுற்றி வந்தவன்  “நீ இங்க இருக்கிற நாள் கூடிட்டே போகும்…” என்று அவளின் தொனியிலேயே அவனும் சொல்ல,

“நான் இங்கிருந்து போயிடுவேன்..” என்றாள் உறுதியாக..

“ம்ம் முடிஞ்சா போயிக்கோ.. அதானே கேம்.. பட் ஒன் திங்.. அப்படி நீ போகலை.. போக முடியலை அப்படின்னா..” என்றவன் பேச்சை பாதியிலேயே நிறுத்த,

“என்னால முடியும்…” என்று அனுராகாவும் சொல்ல,

“ம்ம் ம்ம்.. உன்னப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு ராகா…” என்றவனின் குரலில் என்ன இருந்ததோ, ஆனால் அவனின் அழைப்பு அவளுக்கு பெரும் ஆச்சர்யம் கொடுத்தது.

அவளின் அந்த ஆச்சர்யம் நொடியில் அவளின் கண்களில் வெளிப்பட, முகத்தினில் அதைக் காட்டாது அனுராகா நிமிர்வாகவே நிற்க, தீபன் கண்டுகொள்ள மாட்டானா என்ன??

“ம்ம்… வெல்டன்.. வெல்….. டன்… ” என்று கைகளைத் தட்டியபடி, “எவ்வளோ தைரியம் உனக்கு என்னை சீட் பண்றளவு.. ஹா??!!!” என்றான் சீற்றலாய்.

“வாட்??!!! நான் சீட் பண்ணேனா?? வாட் எ ஜோக்..” என்றவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அனுராகா சிரித்துவிட, “ராகா…!!!!” என்றான் அடிக்குரலில்..

“ம்ம்… டெல் மீ நான் என்ன சீட் பண்ணனே?? சொல்லு.. உன்னை என்ன சீட் பண்ணேன்..” என்று பதிலுக்கு எகிற,

“யாரோ ஒருத்தனைப் பார்க்கப் போக, நீ என்னை யூஸ் பண்ணிக்கிட்ட…” எனும்போதே அவனுக்கு முகம் கறுத்தது.

இந்த ட்ரிப் எப்படி எப்படியோ இருக்கவேண்டும் என்று தீபன் நினைத்திருக்க, அது இப்படியாகும் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை. உண்மையை சொல்லி அனுராகா அவனிடம் உதவி என்று கேட்டிருந்தால் கூட அவன் செய்திருப்பானோ என்னவோ??

ஆனால் நட்பாய் பழகுவது போல் பழகி, அனைத்தயும் இயல்பாய் நடப்பது போல நடத்தி, அவனோடு கிளம்பியும் வந்து, தீபன் சக்ரவர்த்தியை அனுராகா ஏமாற்றியதாகவே அவன் உணர்ந்தான்.

ஏமாற்றம் இதுவரை அவன் காணாத ஒன்று.

அதுவும், அவன் ஆவலாய் கண்ட ஒருத்தியிடம் இருந்து..

அனுராகாவிற்கோ ஏன் இவன் இப்படி இதனை இவ்வளவு பெரிது படுத்துகிறான் என்று இருந்தது. நண்பர்களோடு சேர்ந்து சுற்றுலா கிளம்பியது சரிதான்.. அதன்பின் அவள் யாரைப் பார்க்க போனால் இவனுக்கு என்ன வந்தது.??

இவன் யார் என்னை கேள்வி கேட்பதற்கு??

இந்த வேகம் தான் அவளுள்.

அதை கேட்கவும் செய்தாள்.

“நீ யார் எனக்கு?? என்னை கண்ட்ரோல் பண்ண, கேள்வி கேட்க.. இதுக்கெல்லாம் என்ன ரைட்ஸ் இருக்கு உனக்கு?? ம்ம் சொல்லு சொல்லு.. நானா சொன்னேனா உன்னோட வர்றேன்னு.. சொல்லு.. நான் சொன்னேனா??? அப்படியே ட்ரிப் முடிச்சிட்டு நான் யாரைப் பார்க்க போனா உனக்கு என்ன??” என்று கேட்டவள்,

“எங்கப்பா நோ சொன்னதுக்கே நான் இவ்வளோ தூரம் வந்திருக்கேன்.. நீ யாரோ..  நீ நோ சொல்லி நான் கேட்பேன்னு கனவுல கூட நினைச்சுப் பார்த்திடாத ஓகே..” என,

“ஹேய்… ஸ்டாப் இட்…” என்று கத்தியே விட்டான்..

‘என்னப் பார்த்து யார் நீன்னு கேட்கிறா??!!’ என்று மேலும் அவனுள் கோபம்..

அவளோ உன் கத்தல் எல்லாம் என்னை ஒன்றுமே செய்யாது என்பதுபோல் குடிலை விட்டு வெளியே வரப் பார்க்க,

“நில்லு ராகா..” என்று அவளின் கைகள் பற்றியவன், “நல்லா கேட்டுக்கோ நீ என்னை எதிர்த்து பேச பேச இங்கிருந்து உன்னால போகவே முடியாது.. யார் நீன்னு கேட்டல்ல.. நான் யார்னு காட்டுறேன்…” என்றவன் அவளின் கரங்களை இறுகப் பற்ற,

அவளோ அவனின் முகத்தையே ஆழப் பார்த்தவள், மற்றொரு கரத்தினால் அங்கே பழத் தட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து, அவன் பிடித்திருந்த இடத்திற்கு அருகே அறுக்கப் போக,

“ஏய் என்ன பண்ற நீ??!!” என்று பதறி கையை விட்டான் தீபன் சக்ரவர்த்தி.  

“உனக்கு இந்த கை தானே வேணும்.. தோ.. அந்த கத்தி வச்சு நானே கட் பண்ணித்தறேன்…” என்றவளைப் பார்த்து,

‘அம்மாடி..!!!’ என்று அவனின் விழிகள் விரிய பார்த்து நின்றான்.

“என்னப் தீபன்… இதான் நான்.. நான் இப்படிதான்..  வலிக்குது விடு அப்படின்னு கெஞ்சுவேன்னு மட்டும் கனவுல கூட நினைக்காத..” என்றவள் குடில் விட்டு வெளியே வர, தீபன் அப்படியே தான் நின்றான்..

‘கொஞ்ச நேரத்துல என்ன பண்ணப் பார்த்தா இவ??!!’

ஒன்றுமே விளங்கவில்லை.. ஒருவேளை தான் நினைத்தது போல் இல்லையோ என்று தோன்றியது.

‘அனுராகா…’ இதுவரை அவன் பார்த்த பழகிய பெண்கள் போல் அல்ல.. கையைப் பிடித்துத் திறுகினால் கொஞ்சம் பயப்படுவாள் என்று பார்க்க, அவள் கையை வெட்டித் தருகிறேன் வைத்துக்கொள் என்கிறாள்.

அவனின் மனது உறுதியாய் சொன்னது ‘உன்னை மீறி இவள் சென்றிடுவாள்..’ என்று. அப்படியே பார்த்துக்கொண்டே தான் நின்றான்.

நீரஜா அவளின் வீட்டிற்கு சென்றிருக்க, தாரா அழைத்துவிட்டார்.

“என்னாச்சு நீரு.. எங்க இருக்கீங்க இப்போ?? அனு எங்க?? போன் எடுக்கலை அவ..” என்று.

நீரஜாவிற்கு அவசரப் பட்டு எடுத்துவிட்டோமோ என்று இருக்க “அது.. அதுவந்து ஆன்ட்டி.. அனு.. அனு போன் தண்ணில விழுந்திடுச்சு..” என்றாள் திக்கித் திணறி.

“ஓ!!! புதுசு கூட வாங்கவேண்டியது தானே… சரி அனுக்கிட்ட போன் கொடு..” என,

“அது.. நான்.. ஆன்ட்டி.. அ.. அனு குளிச்சிட்டு இருக்கா.. வரவும் பேச சொல்லவா??” என,

“ம்ம் ஓகே..” என்ற தாராவிற்கு மனது என்னவோ சரியில்லை என்று சொன்னது.

நீரஜாவின் குரலில் இருந்த பதற்றம், அவளின் பேச்சில் இருந்த தடுமாற்றம், எல்லாம் தாராவிற்கு நல்லதாய் படவில்லை. லோகேஸ்வரனிடம் சொன்னால்

“நீ ஏன் இப்படி கால் பண்ணி அவங்களை டிஸ்டர்ப் பண்ற??” என்றுதான் கேட்பார்.

சாதாரண நாட்கள் என்றால் பரவாயில்லை.. இப்போதோ அனு எப்போது எப்போது என்று சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தாள் அல்லவா..

‘ஒருவேள அந்த பிரஷாந்த் பார்க்க கிளம்பிட்டாளோ..’ என்று தோன்ற, அவருக்கு சட்டென்று மனதினில் தீபன் நியாபகம் தான் வந்தது.

மனதினில் யோசனை ஓட, உஷாவின் எண்ணை வேகமாய் அழுத்தினார் தாரா. அங்கே உஷாவோ தன் சின்ன மகன் பேசிய பேச்சில் ஒருபக்கம் கோபமாகவும், இன்னொருபுறம் ஏன் இப்படி இவன் பேசுகிறான் என்று புரியாமலும் இருக்க அவருக்கு தாராவின் எண்ணில் இருந்து அழைப்பு வர, ஆச்சர்யமாய் போனது.

“ஹாய் தாரா…” என்றார் அதே ஆச்சர்யத்தோடு..

“ஹ.. ஹாய் mrs. சக்ரவர்த்தி..” என்ற தாரா “சாரி இந்த டைம்ல கால் பண்ணிருக்க கூடாது..” என,

“நோ நோ.. ஆக்சுவலி நானே உங்களுக்கு பேசணும்னு இருந்தேன்..” என்று உஷாவும் சொல்ல,

“இஸ் இட்… என்ன சொல்லுங்க..” என்றார் தாராவும்..

“இப்போ நீங்கதானே கால் பண்ணிருக்கீங்க.. சோ நீங்கதான் பர்ஸ்ட்..” என்று உஷா சொல்ல,

“அது.. உங்க சின்ன பையன்.. தீபன் நம்பர் வேணுமே..”  என, “ஏன் என்னாச்சு??” என்றார் வேகமாய் உஷா..

தீபன் தன்னிடம் பேசியதற்கும், இப்போது தாரா அழைத்து பேசுவதற்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோ என்று எண்ணினார்.

“நோ டென்சன் mrs. சக்ரவர்த்தி.. அனு, அவளோட ப்ரண்ட்.. தீபன் அண்ட் பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ட்ரிப் போயிருக்காங்க.. அனு போன் நாட் ரீச்சபிள்.. ம்ம் அப்புறம் நீரஜா போனுக்கும் லைன் போகலை.. அதான்…” என்று தாரா சொல்ல சொல்ல, அங்கே உஷாவிற்கு கோபம் ஏறியது.                  

 

 

 

                                      

             

Advertisement