Advertisement

நான் இனி நீ –  5

அனுராகா பேச்சு வாக்கில் தானும் டெல்லி வரும் எண்ணத்தில் இருப்பதாய் தீபனுக்கு உணர்த்திட, அடுத்து அவன் வேறெதுவும் சிந்திக்கவேயில்லை.. அவன் எப்போதும் இப்படியில்லை என்பது அவனுக்கேத் தெரியும். இருந்தும் கூட இவளின் விசயங்களில் தான் மிகவும் இறங்கிப்போகிறோமோ என்றுகூட தோன்றிவிட்டது.

காரணம் அவன் யாரிடமும் இறங்கிப் போய் பேசும் பழக்கமுடையவன் அல்ல. அவன் பழகிய பெண்களிடமும் கூட..

அப்படியிருக்க அனுராகா மட்டும் அப்படி என்ன ஸ்பெசல் என்றுதான் அவனுக்கு இப்போதும் ஒரு கேள்வி..

அக்கேள்வியின் பதிலும் தெரியவில்லை..

‘இதெல்லாம் தேவையா.. எப்பவும் பிரண்ட்ஸ் கூட்டிட்டு ட்ரிப் போவ.. இப்போவும் அதுபோல போயேன்…’ என்று அவனின் மனது எடுத்துக் கொடுக்க, அவனின் வேலைகள் என்னவென்று கணக்கிட்டவன், ஒரு சிறு சுற்றுலாவிற்கு முடிவே செய்துவிட்டான். நேரம் பார்த்து காத்திருந்தவனுக்கு, அந்நேரமே நழுவி வந்து அவன் கைகளில் புகுந்துகொள்ள, அவ்வளோதான் நேராய் தாராவிடம் சென்றவன்,

“ஆன்ட்டி.. ஜஸ்ட் எ மினி ட்ரிப் போகலாம்னு இருக்கோம்.. தேவ் வர்றதுனால நீரஜா ஆல்சோ கம்மிங்.. இன்னும் ரெண்டு பிரண்ட்ஸ் கூட வர்றாங்க.. நீங்க ரா.. ஐ மீன்.. அனுராகவை அனுப்பினா இன்னும் கூட நல்லாருக்கும்…”  என்று தீபன் நல்லவிதமாய் கேட்க,

அவர்களில் இப்படி நண்பர்கள் எல்லாம் குழுவாய் சேர்ந்து சுற்றுலா செல்வது வழக்கம்தான் என்பதனால், தாராவிற்கு தீபன் கேட்டதும் தவறாய் தெரியவில்லை. மகளின் முகம் காண, அவளோ தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தான் நின்றிருந்தாள்.

“அனு… உனக்கு ஓகே வா..” என்று தாரா கேட்க,

நீரஜாவோ “ஆன்ட்டி நோ சொல்லிடுங்க…” என்று வேண்டிக்கொண்டு இருந்தாள். மனதளவில் தான்.

“போகலாம் தான்.. பட் நீயும் அப்பாவும் தான் எனக்கு பின்னாடியே ஆள் அனுப்புவீங்களே..” என்று அனு சொல்ல,

“ஷ்..!! இப்போ ஏன் அதெல்லாம் பேசற..” என்று கடிந்தார் தாரா.

“ஓகே ஆன்ட்டி முடிவு பண்ணிட்டு சொல்லுங்க..” என்றுவிட்டு தீபன் சென்றிட, “என்ன அனு…” என்றார் தாராவும்..

“இப்போ என்னம்மா.. நான் போகணும் அவ்வளோதானே….” என்றவளிடம்,

“உனக்கு விருப்பமிருந்தா போ.. ஐ வோன்ட் போர்ஸ் யூ..” என்று தாராவும் சொல்ல, அப்போது தான் கவனித்தார் நீரஜா கொஞ்சம் தவிப்பாய் நிற்பதை..

“ஐ வில் தின்க் அண்ட் டிசைட்..” என்றுமட்டும் அனு சொல்லிவிட்டு நகர,

“என்ன நீரு…” என்று தாரா கேட்கும்போதே, லோகேஸ்வரன் தாராவிற்கு அழைத்தவர், “இங்க இண்டஸ்ட்ரியல்ஸ் மீட்ல என்னோட பிரண்ட்ஸ் வந்திருக்காங்க.. கிளம்பி நீயும் அனுவும் வந்தா நல்லாருக்கும்..” என,

“அனு அவ பிரண்ட்ஸ் கூட ட்ரிப் போறாளாம்..” என்றார் தாரா..

அவருக்குத் தெரிந்தே தான் இருந்தது. அனு நிச்சயம் கிளம்புவாள் என்று.. இல்லையெனில் தீபன் வந்து கேட்கும் வரைக்கும் எல்லாம் அவள் அமைதியாய் இருக்கும் ரகமல்லவே.

“யா… யார் கூட?? எங்க..” என்று லோகேஸ்வரன் கேட்க, தாராவும் விபரம் சொல்ல,

“ஓகே.. ஷி வில் என்ஜாய்..” என்றவர் “ஓகே நீ வர முடியுமா ??” என,

“எஸ்..” என்று  பேசி வைத்தவர் “ஓகே நீரு.. என்ஜாய் பண்ணுங்க.. அப்பபோ கால் பண்ணிடுங்க வீட்டுக்கு.. டேக் கேர்..” என்று தாராவும் நீரஜாவின் தோளில் தட்டிவிட்டுச் சென்றிட, அவளோ தலையில் அடித்துக்கொண்டாள்.   

எப்படியும் அனுராகா கிளம்பி வருவாள் என்பது உறுதியாகவும், தீபன் சக்ரவர்த்தி நாகாவையும் தர்மாவையும் தான் காணச் சென்றான்.. என்னவோ அந்த ஷர்மா விஷயம் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. அப்பா மற்றும் அண்ணனின் வார்த்தைகளுக்காக அந்த ஷர்மாவை வெளியே விட்டது தவறோ என்று புத்தி சொல்லிக்கொண்டே இருந்தது.

இந்த மாதிரி விசயங்களில் தீபன் சக்ரவர்த்தி அவனின் மனது சொல்வதை கேட்கவே மாட்டான்.. மனம் சில நேரம் மறந்திட சொல்லும், சில நேரம் மன்னித்திட சொல்லும், சில நேரம் இறக்கம்கொள்ள சொல்லும். இதெல்லாம் மட்டும் தீபன் செய்தான் எனில், அடுத்த நிமிடம் அவனின் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளும், தெரியாத எதிரிகளுமே கூட அவனை ஒன்றுமில்லாத ஆக்கிடுவர்..

ஆகையால் எங்கே செல்கிறோம் என்பதை கூட அவனளவில் தான் வைத்திருந்தான். புனீத், தேவ்விடம் கூட சொல்லவில்லை.. “ஆன் தி ஸ்பாட் பார்த்துக்கலாம் டா..” என்றுவிட்டான்..

“டேய் நாங்க வீட்டுக்கே போக வேண்டாமா??? உன்னோடவே சுத்திட்டு இருந்தா எப்படி டா..” என்று புனீத் கேட்க,

“சரி இப்போ கூட கிளம்பிக்கோ..” என்றுவிட்டு தீபன் செல்ல,

“ஹேய் ஹேய் போதும் போதும்.. நாளைக்கு ஒன் டே தான்.. அதுக்குமேல முடியாது.. நான் கிளம்பிடுவேன்..” என்று புனீத் சொல்ல, “அது உன்னோட இஷ்டம்..” என்றுவிட்டான் தீபன்..

எப்போதும் இப்படிதான் யாரையும் எதற்கும் கட்டாயம் செய்யவே மாட்டன்.. தொழில் வேறு, நண்பர்களோடு இருப்பது வேறல்லவா.. தேவ், நீரஜா வருவதனால் அவளைக்கொண்டு போய் அவர்களின் வீட்டினில் விட்டுத்தான் செல்வான். ஆக தீபனின் மனதில் தெளிவானதொரு திட்டம் உருவானது.      

அதனை நாகாவிடமும் தர்மாவிடமும் சொல்லிவிட்டு,  “நாகா… நான் சொன்னது புரிஞ்சதா… எந்த சொதப்பலும் இருக்கவே கூடாது.. எல்லாமே பக்காவா இருக்கணும்..” என்று சொல்ல,

“எஸ்.. கண்டிப்பா எந்த பிராப்ளமும் வராது….” என்றான் நாகாவும்.

“அண்ட் தர்மா.. நான் அண்ணாக்கிட்ட பேசிட்டேன்… நீங்க ரெண்டு பேருமே நான் சொல்றப்போ வந்து என்னோட ஜாயின் ஆகிட்டா போதும்.. சோ மிதுன் என்ன சொல்றானோ அதை பண்ணுங்க.. எந்த ரீசனுக்காகவும் அந்த சேட் நம்ம மானிடரிங்ல இருக்கிறது வெளிய தெரியவே கூடாது.. முக்கியமா அப்பாக்கு..” என,

“கண்டிப்பா…” என்றான் தர்மாவும்..

“கண்டிப்பா ஷர்மா வெளிய போய் ஏதாவது செய்வான்… சும்மா இருக்கமாட்டான். அவன் எது செஞ்சாலும் இந்த டைம்ல அது எதுவுமே நடக்கக் கூடாது.. என்னோட சந்தேகம் சரின்னா, அந்த சேட் மேல தப்பிருக்கணும்.. இல்லன்னா ஷர்மா வேற யாருக்கோ விலை போயிருக்கனும்.. அப்பாவோட மீட்டிங் டேட்ஸ் எல்லாம் மாத்த சொல்லிருக்கேன்.. சோ யூ கைஸ் டேக் கேர் ஆன் எவ்ரி திங்…” என, நாகாவும் தர்மாவும் அவன் சொன்னதற்கு ஆமோதிப்பாய் தலை அசைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் இதெல்லாம் தேவைதானா என்று தான் தோன்றியது ஆனாலும் தேவை என்றுதான் தீபன் சொல்லிக்கொண்டான்.. என்னவோ ‘அனுராகா..’ என்பவளை சாதரணமாய் அவனால் கடந்து போக முடியவில்லை. அவள் இவனை அவளின்பால் இழுக்கின்றாளா, இல்லை தீபனாவே இழுபட்டு செல்கிறானா என்பதெல்லாம் ஒன்றும் விளங்கவில்லை.

ஆனாலும் ஏதோவொரு உணர்வு தோன்றுவது நிஜம்.. அதைமட்டும் தீபன் உறுதி செய்துகொண்டான். அதற்குமேல் இப்போது எதுவும் சிந்திக்கவும் வேண்டாம் என்றும் அவனே முடிவும் செய்துகொள்ள,

தேவ் அழைத்துவிட்டான் “கார் ரெடி…” என்று..

“ஓகே டா.. உன் கசின் தென் அனு எல்லாம் வந்தாச்சா??” என,

“ம்ம்ஹும்.. நானும் புனீத்தும் ரூம் வெக்கேட் பண்ணிட்டு இருக்கோம்.. நீயும் வந்தா பெட்டர்..” என, “இதோ…” என்றவன், அவர்களின் ரிசார்ட் சென்று பொருட்களை ஒதுங்கச் செய்து, அறையை காலி செய்துவிட்டு வர,

அப்போதும் கூட இந்த பெண்கள் இருவரும் வரக்காணோம்..

“தேவையில்லாத டென்சன்ஸ் எல்லாம் இழுத்து விட்டுக்கிறான்…” என்று புனீத் சொல்ல,

“நான் போய் கூட்டிட்டு வர்றேன்..” என்று தேவ் கிளம்பியவனை தடுத்துவிட்டு தீபனே சென்றான்..

அங்கேயோ அறைக்கு வெளியே பெட்டியோடு நின்றாலும் கூட,  நீரஜாவோ “அனு.. இதெல்லாம் சரியா வராது.. நீ பண்றது தப்பு..” என,

“என்ன தப்பு பண்ணிட்டேன்..” என்றாள் பட்டென்று.

“என்ன பண்ணல?? நீ பண்றது உனக்கே சரின்னு தெரியுதா??” என்று நீரஜாவும் கேட்க,

“நான் தப்பாவும் எதுவும் பண்ணலை நீரு..” என்றாள் அனு உறுதியாக..

“அப்போ.. இது என்ன.. நீ ஏன் டெல்லி கிளம்பின.. அங்கிள் ஆன்ட்டிக்கு உண்மை தெரிஞ்சா என்ன நினைப்பாங்க…”

“என்னவோ நினைச்சிட்டு போகட்டும்.. தே க்னோ மீ வெரிவெல்..” என்றாள் அனுவும் இதோடு இந்த பேச்சை நிறுத்து என்று..

“பிரஷாந்த் தான் வேண்டாம் சொல்லிட்டு போயிட்டானே அனு.. திரும்ப அவனை நீ தேடித் போறது சரியா இல்லை..”

“சரி.. தப்பு எல்லாம் யோசிக்கிற மைன்ட் செட்ல நான் இல்லை நீரு.. ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ரட் மீ… எனக்கு மனசு போட்டு உறுத்திட்டே இருக்கு.. சி நான் ஒன்னும் ஓடிப்போகப் போறதில்லை.. அங்க போய் அந்த பிரஷாந்த் கூடவே இருந்திடவும் போறதில்லை…” என்று அனு கோபத்தில் சற்று சத்தமாகவே பேசிட,

இவர்களை அழைக்க வந்த தீபனின் செவிகளில் அனுராகா கடைசியாய் சொன்னது மட்டும் தெளிவாய் விழுந்து வைத்தது.

‘பிரஷாந்த்….’

இந்த பெயர் மட்டுமே அவன் மனதில் நிற்க, அனு அதற்காகத்தான் டெல்லி கிளம்பியிருக்கிறாள் என்பதெல்லாம் அவன் யூகிக்கவில்லை. ஒருவேளை முதலில் இருந்து கேட்டிருந்தால் தீபனின் மனநிலையே வேறாக இருந்திருக்கும் இப்போது.. ஆனால் அனுராகா கடைசியாய் பேசியது மட்டும் கேட்டவன்,

“யார் அவன்…??!!” என்றுமட்டும் நினைக்க,

அவள் சொன்ன வார்த்தைகளும் மனதினில் ஓடத் தொடங்கியது..

‘அங்க போய் பிரஷாந்த் கூடவே இருந்திடவும் போறதில்லை….’

“அப்போ…” என்று யோசித்தபடி நின்று நிதானித்தவன் “நீ யாரா வேணா இருந்திட்டு போ.. என்னோட வர்றப்போ, ராகாவோட சிந்தனைல கூட நீ இருக்கக் கூடாது பிரஷாந்த்.. இனிமே எந்தவொரு சூழ்நிலையும் உங்களை சந்திக்கவே விடாது… அதிலும் நான்… இந்த தீபன்… விடவே மாட்டேன்..” என்று சொல்லிக்கொண்டவன்,

“ஹே..!! ஹாய்…” என்றபடி அப்போது தான் வருபவன் போல அங்கே செல்ல, பெண்கள் இருவரின் பேச்சும் நின்று இவனைப் பார்த்து ஒரு சிநேகப் புன்னகை வீச,

“ரெடியா.. கிளம்பலாமா??!!” என்றான்.

“யா.. ரெடி..” என்று அனு சொல்ல, தீபனின் பார்வை ஒருவித ஆராய்ச்சியோடு அவளின் முகத்தில் படிந்து மீள, நீரஜா “போலாம்..” என்றுசொல்லி முன்னே நடந்தாள்..      

இதெல்லாம் இங்கே ஒருபுறம் நடந்தேறிக்கொண்டு இருக்க, உஷா வீட்டிற்கு போனதில் இருந்து ஆரம்பித்துவிட்டார்.. “மிதுனுக்கு சீக்கிரம் ஒரு நல்லது பண்ணிடனும்..” என்று.

கோவாவிலும் அவர்களுக்கு ஒரு கெஸ்ட் ஹவ்ஸ் இருக்க, அங்கே தான் தங்கியிருந்தனர். இன்ன விஷயம் என்று சொல்லாது மிதுன் தான் “இங்க டூ டேஸ் ஸ்டே பண்ணிட்டு போகலாம்..” என்று சொல்லியிருந்தான்.

சக்ரவர்த்தியோ “அடடா இதென்ன இவ்வளோ வேகம் திடீர்னு.. மூணு மாசத்துல எலக்சன் வருது.. எதுவா இருந்தாலும் அதெல்லாம் முடியட்டும்.. புரிஞ்சதா.. இப்போ கல்யாணம் வச்சா அதையும் அரசியல் நோக்கோட தான் செஞ்சோம் சொல்வாங்க..” என,

“அது என்ன நோக்கா இருந்தாலும் பரவாயில்லை.. என்னோட நோக்கமெல்லாம் என் பையனுக்கு இந்த வருசமே கல்யாணம் வைக்கணும்.. சின்னவன் அதெல்லாம் செய்வானான்னு தெரியாது.. ஏன்னா அவனுக்கு இந்த கல்யாணம் அது இதெல்லாம் செட்டாகுமா தெரியலை..” என்று உஷாவும் சொல்ல,

அப்பா அம்மா இருவரும் பேசுவது கண்டு சிரித்துக்கொண்டு இருந்தான் மிதுன் சக்ரவர்த்தி. இதை மட்டும் தீபன் கேட்டிருக்க வேண்டும்.. அவ்வளோதான்.. அம்மாவோடு மல்லுக்கு நின்றிருப்பான் என்றுதான் தோன்றியது. ஏனெனில் தீபனின் நிஜமான முகம் மிதுன் அறிவான்..

“என்னடா சிரிக்கிற??!!” என்று உஷா கேட்க,

“ம்ம் இதை மட்டும் தீபன் கேட்கணும்.. அவ்வளோதான்.. எனக்குதான் முதல்ல கல்யாணம் செய்யனும்னு பிடிவாதம் பண்ணப் போறான்..” என்று சொல்லி மிதுன் இன்னமும் சிரிக்க,

“நடந்தா சந்தோசம் தான்.. ஆனா அவன் எங்க உருப்படியா ஒரு பொண்ணோட பழகுறான்.. கேட்டா யாருமே எனக்கு செட்டாகலைம்மான்னு சொல்றான் டா… அவன் பீகேவியர்க்கு அரேஞ்ச்ட் மேரேஜ் எல்லாம் செட்டாகாது..” என்று உஷா சரியாய் கணித்துச் சொன்னார் சின்ன மகனின் குணத்தை..

“நீங்க நினைக்கிறது போல எல்லாம் இல்லை..” என்று மிதுன் சொல்ல,

“அவனுக்கு அடுத்து கல்யாணம் பேசிக்கலாம்.. நீ என்ன சொல்ற??” என்று அவன் விஷயம் கேட்க,

“என்னவோ பார்த்து நல்லாதா பண்ணுங்க…” என்று பிடி கொடுக்காது கிளம்பிவிட்டான் மிதுனும்..

“ம்ம்ம் நல்ல அப்பா.. நல்லா புள்ளைங்க..” என்ற உஷாவிற்கு, அனுராகாவை மிதுனுக்கு பேசினால் என்ன என்றே தோன்றிக்கொண்டு இருந்தது.

ஆளாளுக்கு ஒன்று நினைக்க, யார் நினைப்பது நடக்கும் என்று யார் அறிவார்??

பெரிய மகனுக்கு முடிக்கவேண்டும் என்று நினைப்பவள், சின்ன மகனோடு காரில் பிரயாணம் செய்துகொண்டு இருக்க,

“நாளைக்கு ஒரு ஸ்மால் வொர்க் இருக்கு பங்களூர்ல.. அது முடியவும் அங்கிருந்து அப்படியே டெல்லி பிளைட்ல போயிடலாம்..” என்று தீபன் சொல்லியிருக்க,

அனுராகா சரி என்றுமட்டும் தான் சொன்னாள்.

அவளுக்குத் தேவை அவள் டெல்லி செல்ல வேண்டும்.. அது எப்படி சென்றாலும் தான் என்ன. நீரஜாவோ ‘நாளைக்கு எப்படியாவது அங்கிருந்து சென்னை கிளம்பிடனும்..’ என்று எண்ணிக்கொண்டு வர, அந்த இரவு நேர கார் பிரயாணம் அருமையாகத் தான் இருந்தது.

முன்னிருக்கையில், தீபனும் அனுவும் இருக்க, பின்னே நீரஜா தேவ், புனீத்தோடு இன்னும் இருவர், அவர்கள் திருமணம் ஆனவர்களாய் இருக்க, பேச்சு சிரிப்பு கேலி என்று ஒரே ஆரவாரமாய் தான் இருந்தது.

ஆனால் அந்த அரவாரத்திற்கு எல்லாம் சிறிதும் சம்பந்தம் இல்லாது அனுராகா அமைதியா வர தீபனின் பார்வை அவ்வப்போது அவளைத் தொட்டுச் சென்றது.

அவளின் முகமே சொன்னது என்னவோ சிந்தனை என்று.. இல்லை அவளின் சுபாவமே அப்படித்தானோ என்று நினைத்தான்.. இல்லை என்றே தோன்றியது. அனுராகாவின் மனதினில் என்னவோ இருக்கிறது. சில நேரங்களில் சிந்தனையாய் இருப்பவள், மற்ற நேரங்களில் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறாள் என்று எண்ணியவன்,

“டைம் என்ன ??” என்று கேட்பது போல் கேட்க,

அவளும் இயல்பாய் மணிக்கட்டினை திருப்பி நேரம் பார்க்க, அப்போது தான் கவனித்தான் தீபன், அவளின் கைகளே ஆகாங்கே சிறு சிறு கீறல் விழுந்த தழும்புகள் இருப்பதை..

ஒன்று போலும் இல்லை, பெரிதாகவும் இல்லை.. சின்ன சின்னதாய் இருந்தது.. அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. அதைப் பார்த்ததுமே அவனின் புத்தி கணக்கிட்டு விட்டது என்னவோ இருக்கிறது என்று.. இவளை கண்காணிக்க ஆள் போடும் அளவு என்றால், நிச்சயம் இதில் என்னவோ இருக்கிறது என்ற முடிவிற்கே வந்துவிட்டான்..

நேரம் என்ன என்பதை அனுராகா சொன்னவள், ஜன்னல் பக்கம் பார்வையை திருப்ப, யாரும் தங்களை பின் தொடர்ந்து வருகிறார்களா என்றும் அவ்வப்போது பார்த்துக்கொண்டான் தீபன் சக்ரவர்த்தி.

இதுவரைக்கும் சந்தேகப்படும் படி எதுவும் இல்லை. இனியும் இருக்கக் கூடாது என்று எண்ணும் நேரம் “டேய் நெக்ஸ்ட் வர்ற மோட்டால்ல ஸ்டாப் பண்ணு..” என்று புனீத் சொல்ல,

“ம்ம்…” என்றவன் அடுத்த ஐந்த நிமிடத்தில் வந்த ஒரு மோட்டாலின் முன் காரினை நிறுத்த, அனைவரும் இறங்கி உண்ணச் சென்றனர்..

இப்படியான பயணங்களில் ஸ்டார் ஹோட்டலில் தான் உண்ணவேண்டும் என்றெல்லாம் யாரும் எதிர்பார்ப்பது இல்லை.. வழியில் என்ன கிடைக்கிறதோ அதுவே. ஆனால் அனுராகா தான்,

‘இங்கேயா ??!!’ என்று பார்க்க, “அடுத்து டூ ஹவர்ஸ்க்கு வெறும் ரோட் மட்டும்தான் இருக்கும்..” என்றான் புனீத்.

அனு தயங்கியதன் காரணம் அந்த மோட்டலின் தோற்றம்.. முழுக்க முழுக்க கிடுகு கொண்டுதான் வேய்ந்திருந்தார்கள்.. திறந்தவெளியில் இருக்கையில் போட்டிருந்து, பார்க்கவே கொஞ்சம் வித்தியாசமாய் தன் இருந்தது.. நின்று அதனையே நோட்டம் விட்டபடி இருக்க,  

“இங்க டேஸ்ட் நல்லாத்தான் இருக்கும்..” என்று தீபன் சொல்ல,

அனுவிற்கு இப்படியான இடங்களில் உண்டு பழக்கம் இல்லை என்பதால் கொஞ்சம் தயங்கியபடியே தான் சென்றாள்.

ஆனால் தீபன் சொன்னது போல் உணவின் ருசி நன்றாகவே இருக்க, அளவாய் உண்டவள் “போதும்..” என்றுவிட்டு கொஞ்சம் தள்ளி வந்து நின்றுகொண்டாள்..

கூட்டம் நிறைய இல்லை. ஒரு சிலர் தான் உண்டுகொண்டு இருந்தனர்.. ஆனால் சுற்றி பூச்செடிகள் இருக்க, அதனருகே வந்து நின்றவளுக்கு என்னவோ மனது இவர்களோடு ஒட்ட மறுத்தது.. பிரஷாந்தை காண வேண்டும் என்பதற்காக இப்படி யாரோடு வேண்டுமானாலும் கிளம்பி வந்திடலாமா??  என்று அவளுக்கு அவளே கேட்டுக்கொள்ள,

“நீ தப்பு பண்ற அனு…” என்று அவளின் இதழ்கள் முணுமுணுக்க,

நீரஜா வந்து “ரெஸ்ட் ரூம் போயிட்டு வரலாம்..” என்றழைக்க, மௌனமகாவே அவளோடு சென்றாள் அனுராகா,

அனு அமைதியாய் வருவது கண்டவள் “என்னாச்சு??!” என்று விசாரிக்க,

“ம்ம் நம்ம ஊருக்கே போயிடலாமா??” என்று கேட்டவளை புரியாது பார்த்தாள் நீரஜா..

“எஸ்.. எனக்கு ஒருமாதிரி அன்கம்பார்டபிலா இருக்கு நீரு.. கிளம்புற வரைக்கும் தோணலை.. பட்.. இது என்னவோ தப்பா இருக்கு.. அப்பா அம்மாகிட்ட சண்டை போட்டு தென் பிரஷாந்த மீட் பண்றது வேற இது வேற இல்லையா…” என,

“ஹப்பா…!!! இப்போவாது புரிஞ்சதே.. நாளைக்கு பெங்களூர்ல இருந்து அப்படியே சென்னை கிளம்பிடலாம்..” என்று நீருவும் சொல்ல,

“சரி நீ போயிட்டு வா.. நான் இங்க நிக்கிறேன்..  என்று அனு சொல்ல, நீரஜாவும் ரெஸ்ட் ரூமினுள் சென்று, சிறிது நேரம் கழித்து வந்தவள், அங்கே அனுவை காணோம் என்றதும் ஒருநொடி திக்கென்று தான் ஆனது..

ஆனாலும் முன்னே அவர்களோடு இருக்கிறாளோ என்று அங்கே போக, அங்கே அனுராகாவை தவிர மற்ற அனைவரும் இருந்தனர்.   

            

   

 

             

                          

        

Advertisement