Advertisement

                              நான் இனி நீ – 4

 

தாராவிற்கு பார்த்ததுமே தீபன் மீது ஒரு நல்லெண்ணம். பெரிய இடத்து பிள்ளை என்ற பந்தா சிறிதும் இல்லாது அவர் பாதம் தொட்டு அவன் வணங்க “நல்லாருப்பா…” என்று அவர் சொல்ல,

‘என்னடா இவன்??’ என்று பார்த்தனர் அவனின் நண்பர்கள்.

அனுராகாவோ ‘நீ யாராவேனா இரு..’ என்று என்ற எண்ணத்துடன் பார்வையை சுற்றிலும் ஓட்டிக்கொண்டு இருந்தாள்.

தேவ்வை ஓரிரு முறை பார்த்திருக்கிறாள் நீரஜா வீட்டினில். ஹாய் ஹலோ என்ற அறிமுகம் உண்டு. ஆனால் அவனுக்கு இப்படியொரு நண்பன் இருப்பான் என்று தெரியாது. தெரிந்தாலும் எனக்கொன்றும் இல்லை என்ற விதத்தில் தான் அவள் இருக்க, நீரஜா அனுராகாவை அறிமுகம் செய்து வைத்தும் கூட அனுராகா அப்படியொன்றும் ஒரு ஆர்வம் காட்டினாள் இல்லை.

‘பாரு… பாரு… என்னைப் பாரு…’ என்று தீபனின் மனது உறுப்போட, பேச்சு மட்டும் தாராவிடம் இருந்தது.

பொதுவான பேச்சுக்கள். அதற்குமேல் என்ன இருக்கிறது.

தாரா கூட “அனு…” என்று இருமுறை சொல்ல, ம்ம்ஹும்  கடைசிவரைக்கும் அனுராகா அவனைப் பார்க்கவில்லை. செல்போனில் என்னவோ பார்த்துக்கொண்டு இருந்தவள் “ம்மா..” என்றுமட்டும் மெதுவாய் சொல்ல,

“ஓகே டா…” என்று அவளிடம் சொன்ன தாரா, இவர்களிடம் இருந்து விடைப்பெற,

நீரஜா தேவ்விடம் “ஓகே பாங்க்சன்ல மீட் பண்ணலாம்..” என்றுவிட்டு நகர, இப்போதோ தீபனின் பார்வை அனுராகாவின் பின்னேயே தான் சென்றது.

‘என்ன திமிர்.. என்னைப் பார்க்காம போறா???’ என்று எண்ண,

‘நீ என்னைப் பார்த்துத்தான் ஆகணும்.. பார்க்க வைப்பேன்…’ என்று அவனின் மனது முடிவே செய்துவிட்டது.

இதுவரைக்கும் தீபன் தான் பெண்களை வேண்டாம் என்று ஒதுக்கிப் பழக்கம். அவனை ஒருத்தி கண்டுகொள்ளாது செல்வதா??!!!

இது அவனுக்கு எத்தனை பெரிய இழுக்கு.. பெயருக்கு ஒரு ‘ஹாய்..’ என்றிருந்தாள் கூட அவனுக்கு இப்படியான ஒரு உறுதி மனதில் பிறந்தே இருக்காதோ என்னவோ..

‘நான் ஆவலாய் பார்த்தவள், என்னை கண்டுகொள்ளாது போனாள், அது எனக்கான தோல்வி…’

இப்படித்தான் அவன் நினைத்தான்.. தீபன் சக்கரவர்த்திக்கு தோல்வியா??!!!

“நெவர்…!!” என்று உதடுகள் முணுமுணுக்க, மனதினில் திடீரென்று ஒரு யோசனை..

லோகேஸ்வரனுக்கு மனதினில் எப்படியும் அனுராகா டெல்லி போவாள் என்றே தோன்றியது. அவளை சுற்றி நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் கூட, போகவேண்டும் என்று முடிவு செய்து பொறுமையாய் இருப்பவளை எக்கட்டுப்பாடுகளும் நிறுத்தாது தானே.

ஆக, இனி அனுராகாவை சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை என்று அவருக்கு நன்கு புரிந்தது. ஆகையால் பிரஷாந்திற்கு வேறு சில முக்கிய வேலைகள் நியமித்து அவனை பெங்களூர் அனுப்பியிருந்தார்.

பிரஷாந்திற்கு பெங்களூரில் எத்தனை நாட்கள் வேலை என்பது அவனுக்கே தெரியாது. ஏன் இந்த திடீர் இடமாற்றம் என்றும் தெரியாது. டெல்லி சென்றே முழுதாய் அங்கிருக்கும் பிரச்சனை புரிபடாத நிலையில், இப்படி உடனடியாக பெங்களூர் செல்லவேண்டும் என்று உத்திரவு வந்ததும்,

‘போங்கடா நீங்களும் உங்க வேலையும்..’ என்றுதான் எண்ணத் தோன்றியது.

ஆனால் லட்சங்களில் சம்பளம்.. அது அவனை தடுத்தது. மற்றொன்று அவனுக்கு முடிவுகள் எடுக்கும் சுந்ததிரம் நிறையவே இருந்தது. அதாவது இதெல்லாம் தான் உனக்கு, என் பெண்ணில்லை என்று செய்து காட்டி இருந்தார் லோகேஸ்வரன்.

எப்போது அனுராகா, அவனைப் பற்றிய சிந்தனை மறந்து இயல்பாய் இருக்கத் தொடங்குகிறாளோ அன்றே பிரஷாந்த் நிலையான ஒரு இடத்தில் அமர்வான். அதுவரைக்கும் இப்படித்தான்.

ஆனால் இதெல்லாம் அனுராகாவினால் என்றோ இல்லை அனுராகாவிற்காக என்றோ பிரஷாந்திற்கு தெரிந்தால் அவனின் இந்த பொறுமை நிதானம் எல்லாம் என்னாகும் என்று சொல்ல முடியுமோ என்னவோ??!!

அனுராகாவிற்கு எப்படியாவது டெல்லி செல்ல வேண்டும்.. எப்படி எப்படி என்று மனது யோசித்துக்கொண்டே இருந்தது. தாரா, நீரஜா, லோகேஸ்வரன் எல்லாம் அவளைத்தான் கவனித்தபடி இருந்தனர். ஆனால் இவர்கள் எல்லாம் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும் அது எனக்குத் தெரியவில்லை என்பதுபோல் வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தயாராகிக் கொண்டு இருந்தாள்.

இன்று ஒருநாள் தான்.. நாளை மீண்டும் சென்னைக்கு செல்லவேண்டும். வரமாட்டேன் என்று சொல்லிட முடியாது. ஆக இன்றே இங்கிருந்து கிளம்பினால் தான் ஆகிற்று.

“இந்த ஸ்டட் போட்டுக்கோ அனு..” என்று தாரா ஒரு பெரிய தோடினை கொடுக்க,

“ம்ம்ஹும்… இந்த டிசைனர் சேரிக்கு இதான் நல்லாருக்கும்..” என்று அவள் வேறு அணிய, நீரஜா “இதெல்லாம் எப்போ வாங்கின நீ..” என,

“எப்போவோ…” என்றவள் மீண்டும் தன் அலங்காரத்தில் குறியாய் இருந்தாள்.

லோகேஸ்வரனுக்கு அப்போது வேறு சிந்தனை. தாரா அதனைக் கவனித்தவர் என்னவென்று கேட்க, “மினிஸ்டர் சக்ரவர்த்திக்கிட்ட நெக்ஸ்ட் மன்த் ஒரு மீட்டிங் பிக்ஸ் பண்ணிருந்தேன்.. அவர் பிஏ  போன் பண்ணி இன்னிக்கே முடியுமா கேட்கிறார்..” என,

“அவங்களும் தானே இங்க ரிசப்ஷன் வருவாங்க??” என்றார் தாரா..

“எஸ்.. ஃபுல் பேமிலியும்.. அதான் யோசனை.. திடீர்னு இப்போ ஏன்னு..” என்று லோகேஸ்வரன் யோசிக்க,

“லோகேஷ்.. நீங்க பாருங்க.. அனுவை நான் பார்த்துக்கிறேன்…” என்று தாரா உறுதி சொல்லவும்தான் அவருக்கு சற்று நிம்மதியானது.

அனைவரும் கிளம்பி விழாவிற்கு செல்ல, தேவ லோகம் தான் அது என்பதுபோல் இருந்தது. தொழில்துறை அமைச்சரின் மகள் வரவேற்பு நிகழ்ச்சி அல்லவா, நாட்டின் அனைத்து பெரிய தலைகளும் தலைகாட்டி இருந்தனர். அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், பெரும் தொழிலதிபர்கள் என்று பெரும் செல்வந்தக்  கூட்டமே அங்குதான் இருந்தது.

வந்திருந்தவர்களில் நிறைய பேரை தீபன் சக்ரவர்த்திக்கு தெரிந்திருக்க, மரியாதை நிமித்தமாய் அனைவரோடும்  ஒரு தலையசைப்போடு பேசிக்கொண்டு இருந்தான். ஆனால் அவனின் மொத்த பார்வையும் கொஞ்சம் தள்ளி, நீரஜா தேவ்வோடு நின்றிருந்த அனுராகா மீதே இருந்தது.

அடர் வயலட் நிற டிசைனர் புடவையில், தன் மொத்த கேசத்தையும் ஒருபுறமாய் தவழவிட்டு, மறுபுறம் பெரிதாய் தங்க நிறத்தில் கிளிப் கொண்டு அடக்கியிருந்தவள், ஒப்பனை செய்திருக்கிறாளா இல்லையா என்றே பார்ப்போருக்கு சந்தேகமாய் தான் இருக்கும்.

திரையில் காணும் எத்தனையோ நாயகிகள் அங்கே கண் முன் இருக்க, தீபனின் கண்களுக்கு அவர்கள் யாருமே ஜொலிக்கவில்லை.  அனுராகாவைத் தவிர. தான் ஏன் இப்படிப் பார்க்கிறோம் என்று தெரியவில்லை..

இப்போதும் அவனின் மனது அதையே தான் ஜபித்தது “என்னை பார்.. என்னை பார்…” என்று..

சரியாய் அதே நேரம் அவனின் தோள்களில் கை விழ, யாரென்று திரும்பாமலே கண்டுகொண்டான் “மிதுன்….” என்று..

“ஹேய் ப்ரோ….” என்று சற்று சத்தமாய், தீபன் சொல்ல,

“என்னடா… நாங்க எல்லாம் வந்து எவ்வளோ நேரம்.. நீ யாரையோ பார்த்துட்டு இருக்க…” என்று மிதுன் சொல்ல,

“நோ நோ தேவ் அவன் கசினோட பேசிட்டு இருக்கான்.. சோ வெய்டிங்…” என்று காட்டவும் “ஓகே வா அப்பா கூப்பிடுறார்..” என்றதும் தீபனும் அவனோடு கிளம்பிப் போனான்.

அவனுக்குத் தெரியும் அங்கே அப்பா அம்மா மட்டும் இருக்க மாட்டார்கள் என்று.. அவன் எண்ணியது போலவே அங்கே லோகேஸ்வரன், தாரா இருவரும் கூட இருக்க, சின்னதாய் ஒரு சிரிப்பு அவனுள்.. நடந்து வரும் போதே மிதுனிடம்,

“அந்த சேட் கிட்ட பேச சொன்னேனே..” என,

“இங்க வச்சு எதுவும் வேணாம் தீப்ஸ்.. பார்ஸ்ட் நீ வீட்டுக்கு வா..” என்ற மிதுனை ஒரு பார்வை கண்டவன், தாராவைப் பார்த்து “ஹாய் ஆன்ட்டி..” என, லோகேஸ்வரன் கேள்வியாய் பார்த்தார்.

“நீரஜா கசினோட பிரண்ட்.. ஷாப்பிங் போனப்போ பார்த்தோம்..” என,

உஷாவோ “நீரஜா யாரு..”என்றார்.

அவருக்கு அவரின் வேலை. முக்கியமாய் உஷா இங்கே வந்ததே மிதுன் சக்ரவர்த்திக்கு பெண் பார்க்கத்தான். எப்படியும் வரும் மருமகள் பெரிய இடத்தில் இருந்துதான் வருவாள். அப்படியான பெண்ணை இப்படியான இடங்களில் தான் சட்டென்று கண்டுகொள்ள முடியும். அதன்பொருட்டே அவர் இங்கே வந்தது.

“என் பொண்ணோட பிரண்ட்..” என்று தாராவும் சொல்ல, “ஓ..!! உங்க பொண்ணும் வந்திருக்காளா??!!” என்றார் உஷா, கொஞ்சம் ஆவலாய்..

தீபனுக்குப் புரியவில்லை. அம்மா என்ன இத்தனை ஆர்வம் காட்டுகிறார் என்று. அப்போதே புரிந்திருந்தால் சற்று சுதாரித்து இருப்பானோ என்னவோ. இலகுவாய் எடுத்துக்கொண்டவன், அவனின் அப்பாவிடமும் லோகேஸ்வரனிடமும் தன் அண்ணனோடு நின்று பேசிக்கொண்டு இருக்க,  தாரா அனுராகாவை அழைத்து வந்துவிட்டார்.

‘வா வா.. இதுக்குதானே வெய்ட் பண்ணேன்.. இப்போ நீ என்னைப் பார்த்து தானே ஆகணும்..’ என்று தீபன் எண்ணி முடிப்பதற்குள், அனுராகாவிடம் இருந்து ஒரு சிநேகப் பார்வையும், புன்சிரிப்பும் அவன்பால் வர,

“என்னடா இது??!!!!” என்றுதான் அவனின் கண்கள் விரிந்தது.

உஷாவிற்கு மனதினுள் நிமிடத்தில் ஒரு கணக்கு பிறந்துவிட்டது. வந்திருக்கும் இத்தனை பெண்களில் அனுராகாவின் இந்த அமைதி அவருக்குப் பிடித்துவிட, அவளிடம் நிறைய பேசியபடி இருந்தார். அவளும் கூட மரியாதைக்காக அவரோடு பேச,

‘பார்த்துடணும்னு நினைச்சா.. இப்போ சிரிக்கிறா…’ என்று தீபன் யோசிக்க, லோகேஸ்வரன் சக்ரவர்த்தியிடம் தொழில் விஷயம் பேசிக்கொண்டு இருந்தார்.

மிதுன் எங்கே என்று தீபன் பார்க்க, அவனோ வேறு யாரோ சிலரோடு பேசியபடி இருக்க, இப்போது தான் அவனுக்கு அவனின் நண்பர்கள் நியாபகமே வந்தது. நிச்சயம் அவர்களுக்குத் தெரிந்தவர்களும் இங்கே வந்திருப்பர் என்றெண்ணியவன், அங்கேயே நிற்கவும் முடியாது, கிளம்பவும் முடியாது இருக்க, புனீத் அவனை அழைத்துவிட்டான்.      

வரவேற்பு நிகழ்ச்சி ஒருபுறம் நடந்துகொண்டு இருக்க, மறுபுறம் விருந்தும் நடந்துகொண்டு இருக்க, இன்னொருபுறம் வெளியே கார்டன் எரியாவில், கைகளை கோப்பையோடும், இல்லையோ ஜோடியோடும் பலர் நடனமாடிக்கொண்டு இருக்க, தீபனும் அவனின் நண்பர்களும் இன்னும் சிலரோடு சற்று தள்ளி அமர்ந்து, பழரசங்கள் சுவைத்துக்கொண்டு இருக்க, அமர்ந்திருக்கும் அனைவரையும் அழைத்து நடனமாட சொல்லி, டிஜே அழைக்க, ஒருசிலர் எழுந்து சென்றனர், ஒருசிலர் மறுத்துவிட்டனர்.

அனுராகாவும் நீரஜாவும் அப்போது அங்கே வர, தேவ் “நீரு..” என்றழைக்க,

‘அங்க போகலாமா??!!’ என்பாதுபோல் நீரஜா அனுவைப் பார்க்க, “ம்ம்…” என்ற தலையசைப்போடு இருவரும் அவர்களை நோக்கி செல்ல, என்னவோ இவர்களுக்குள் ஒரு நட்பு உருவாகி இருந்தது. புனீத் தேவ் நீரஜா நன்றாகவே பேச, அனுராகா அதனை கவனித்துக்கொண்டு இருந்தாள்.

இடையிடையில் அனுராகா அவளின் அலைபேசியை பார்த்துகொண்டு இருந்தவள் “ஒரு போன் பேசிட்டு வர்றேன் நீரு..” என்றுவிட்டு போக, நீரஜாவோ ‘யாரோட…’ என்று கேட்கவும் முடியாது பார்த்து வைத்தாள்.

போன் பேசிவிட்டு வருகிறேன் என்று போனவள், இன்னும் வராது போக,   அனுராகா என்ன செய்கிறாள் என்று காண, தீபன் பார்வையை திருப்ப, அவளோடு யாரோ ஒருவன் பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

அவனின் உடல்மொழி வைத்துப் பார்த்தால் ‘என்னோட ஆட வா…’ என்று அழைப்பது போலிருக்க,  ‘அவனோடு சென்று ஆடப்போகிறாளோ…’ என்று பார்த்தவனுக்கு ஒருவித கசப்பு உணர முடிய வேகமாய் எழுந்து அங்கே போனான்.

இப்படியான பார்ட்டிக்களில் இதெல்லாம் சகஜம் தான் என்றாலும், புதிது புதிதாய் நட்பு வட்டம் அமையும் தான் என்றாலும் கூட, தீபன் சக்ரவர்த்திக்கு அந்த நொடி வேறெதுவும் நினைவில் இல்லை.    

‘எங்கே போகிறான்..’ என்று நண்பர்கள் காண,

“ஹாய்…” என்றவன் அனுவைப் பார்க்க, அவளோ ‘ஹப்பாடி…’ என்று பார்த்தாள்.

‘என்னாச்சு??!!’ என்று பார்வையாலே கேட்க, அவளும் அங்கே நின்ற புதியவனை கண் காட்ட,

தீபனோ “கம்மான் லெட்ஸ் டான்ஸ்..” என்று யோசிக்காது அவளின் கை பற்றி, நடனமாடும் இடத்திற்கு அழைத்து சென்றுவிட்டான்.

“நோ…” என்று அனுராகா மறுத்தாலும்,

“அவன் போற வரைக்கும்..” என்று தீபன் சொல்ல, அனு அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை..

இதுவே அவர்களுக்குள் நடக்கும் முதல் பேச்சுவார்த்தை இது.. மறுத்திடுவாளோ என்று அவனும், மறுக்கமுடியவில்லையே என்று அவளும் எண்ணிய தருணம்.. யாரோ ஒருவனோடு ஆடுவதற்கு இது பரவாயில்லை என்று மனது சொல்ல,

‘இவனும் கூட உனக்கு யாரோ ஒருவனே…’ என்று புத்தி சொன்னது அனுராகாவிற்கு..  

தீபனுக்கு இதெல்லாம் அவனையும் மீறி நடக்கும் செயல்தான். அவளோடு இன்னொருவன் நிற்கிறான் என்று சென்றவன், அவளை தன்னோடு சேர்த்து ஆட வைப்பான் என்று அவனும்கூட நினைக்கவில்லை.  

இசைக்கு ஏற்ப, இருவரும் கை கோர்த்து ஆட, தீபனின் ஒரு கரம் அவளின் கரத்தினைப் பற்றியிருக்க, மற்றொரு கரம் அவளின் இடையினை சுற்றியிருந்தது. அனுராகா ஒரு கரத்தினை தீபனின் கரத்தோடு இணைத்திருக்க, மற்றொரு கரம் அவனின் தோள் மீதிருக்க, இசைக்கும் இசைக்கேற்ப இருவரும் தங்களை அசைத்துக்கொண்டு இருந்தனர் என்றுதான் சொல்லவேண்டும்..

நிச்சயமாய் அது நடனமல்ல.. மாறாக அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ  நிகழ்ந்தேறிக்கொண்டு இருந்தது.         

கண்ணிலே கண்ணில்லே மதுச்சாரல்..

வந்ததே முதல் காதல்…

ஒரு ஐந்து நிமிட நடனம்.. அவ்வளவே… அதற்குமே அனுராகா சுதாரித்து “இட்ஸ் இனஃப்…” என்றிட,

“யா..!!!” என்று பெருந்தன்மையாய் சொல்வது போல் தீபனும் ஆடுவதை நிறுத்த, மீண்டும் இருவரும் தங்கள் குழுவில் இணைந்துகொள்ள,

நீரஜா இப்போது கேட்டேவிட்டாள் “யார் கால்??!!” என்று..

“ம்ம் டெல்லிக்கு பிளைட் டிக்கட் கன்பார்ம் பண்ணேன்..” என்று அனுவும் சொல்ல, “வேணாம் அனு…” என்று நீரஜா சொல்லும்போதே தாரா அழைத்துவிட்டார் கிளம்பம் என்று..

தீபன் கிளம்புகையில் தன்னோடு பேசுவாளோ என்று பார்க்க, அனு அதெல்லாம் எதுவும் செய்யவில்லை. கிளம்பிவிட்டாள். அவனுக்குத் தெரியவில்லை அவளின் சிந்தனை எல்லாம் இங்கில்லை என்று.

லோகேஸ்வரனுக்கு அவரின் பிஸ்னஸ் ஆட்களோடு பார்ட்டி என்று இருந்துகொள்ள, அனு தாராவோடும் நீரஜவோடும் கிளம்பி ரிசார்ட் வந்திட, சாதாரணம் போலவே இருந்தாள்.

நீரஜாதான் நொடிக்கொரு முறை அவளைப் பார்த்தபடி இருக்க, “ஹா ஹா டோன்ட் வொர்ரி.. அப்படியெல்லாம் உன்னை மாட்டி விட்டிட மாட்டேன்..” என்று சிரித்தவள், தாரா என்ன செய்கிறார் என்று பார்க்க, அவரோ உறங்கப் போவது தெரிந்தது.

நீரஜாவோ “இங்க வச்சு நீ எதுவும் செய்யாத அனு.. கண்டிப்பா சென்னை போகவும் நானே உனக்கு ஹெல்ப் பண்றேன்…” என்று சொல்ல,

“அதை அப்போ பார்ப்போம்…” என்றவள், எழுந்து வெளியே வந்து வழக்கம் போல் நீச்சல் குளத்தில் கால் தொங்கப்போட்டு அமர,  பக்கத்து ரிசார்ட் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டு இருந்தான்.

இரண்டு நீச்சல் குளத்துக்கும் நடைப்பாதை பொதுவாய் இருக்க, தீபன் இவளைப் பார்த்தவன் “ஹாய்…” என்று சத்தமாய் சொல்ல, அவளோ கைகளை மட்டும் ஆட்டினாள்.

தீபனுக்கு என்ன தோன்றியதோ, எழுந்து வந்தவன், அவளைப் பார்த்துக்கொண்டே அவள் அமர்ந்திருந்த நீச்சல் குளத்தில் குதிக்க,

“ஹேய்… வாட் ஆர் யூ டூயிங்…” என்றபடி அனு தன் மீது தெறித்த நீரினை கைகளால் துடைக்க, அவனோ பதிலே சொல்லாது நீந்த, அனுராகா பார்த்தவள், எழுந்துப் போக கிளம்ப,

“உன்னைப் பார்த்துட்டு தானே வந்தேன்…” என்றான் வெளிப்படையாகவே..   

அவன் என்ன அர்த்தத்தில் சொன்னானோ, ஆனால் அவள் அதை தவறாகவே நினைக்கவில்லை. நினைக்கவும் தோன்றவில்லையோ என்னவோ..

“ஷ்…!!! நம்மளை இங்க ரெண்டு பேர் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க..” என்று பார்வையை சுழல விட்டபாடி அனுராகா சொல்ல,

“யா.. தெரியும்…” என்றான் தீபனும்..

‘தெரியுமா??!!!’ என்று அதிர்ந்து அனுராகா பார்க்க, “பட் பார்க்கிறது என்னாளுங்கதான்..” என்றான் வெகு கூலாக..

“வாட்??!!!!” என்று அனு மீண்டும் அதிர,

“ஹேய்… கூல் கூல்… அவங்க என்னைத்தான் வாட்ச் பண்றாங்க?? ஜஸ்ட் பார் எ சேஃப்டி பர்பஸ்…”என்று உண்மை போலவே தீபன் சொல்ல,

“நோ நோ.. அவங்க வாட்ச் பண்றது என்னைத்தான்..” என்ற அனுராகா மீண்டும் பார்வையை ஓடவிட்டாள்.

‘சோ… இந்த டாப்பிக் விட மாட்டாளோ…’ என்றுதான் இருந்தது தீபன் சக்ரவர்த்திக்கு.

“நோ…” என்று தீபன் அழுத்தம் திருத்தமாய் சொல்ல, அனுவிற்கு என்ன தோன்றியதோ, “ஓகே.. வாட் எவர்…” என்று தோளைக் குலுக்கியவள்,

“சோ.. வாட்ஸ்ஸப்…??” என்று கேட்க,

“தென்…. ம்ம்.. டுமாரோ நைட் டெல்லி போறேன்…” என்று தீபன் சொல்ல,

‘இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்…’ என்பது போல் பார்த்தாள் அனுராகா. ஏனெனில் தேவ் ஏற்கனவே ‘நாளைக்கு டெல்லி போறோம்..’ என்று பேச்சு வாக்கில் சொல்ல, நீரஜா அதனை கவனிக்கவில்லை ஆனால் அனுராகா கவனித்து இருந்தாள்.  

 

காதலில் வரமே சாபம்..

சாபமே வரம்..

நீ வரமெனில் நானுனக்கு சாபம்..

நான் வரமெனில் நீயெனக்கு சாபம்..      

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement